சுடுகாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2025
பார்வையிட்டோர்: 692 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை ஆறு மணி தொடக்கம் காலை ஆறு மணி வரை நாடெங்கிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும். சட்டத்தை மீறுவோர் மீது சுடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இலங்கை அரசின் ஆணித்தரமான கட்டளை! 

உச்சாடனம் செய்வது போல் வானொலிகள் அடிக்கடி கூறுகின்றன. 

இலங்கை பூராவும் இனக் கலவரம். 

இந்த மண்ணில் பிறந்தவர்கள் இந்த மண்ணிலேயே அகதிகளாக நிற்கின்ற ‘சிறப்பு’…. 

இந்த நாட்டின் ‘நாணயக் கயிற்றைப் பிடித்திருப்பவர்களின் ஆற்றலின் வெளிப்பாடுதான் இந்தச் சிறப்பு! 

நாட்டின் நிலையை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்துவதற்காக அரசு திடீரென்று ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து விட்டது. 

இரவு எட்டு மணியிருக்கும். 

கால்களை நீட்டி வாசல் கப்போடு சரிந்திருக்கின்றாள் சின்னம்மா அவளது கண்கள் கலங்கியிருக்கின்றன. அவளது பார்வை வீட்டின் முகட்டு வளையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் அரிக்கன் லாம்பின் மந்தமான சுடரில் படிந்திருக்கின்றது. 

எதையோ அவள் ஆழமாகச் சிந்திக்கின்றாள்… 

சின்னம்மாவின் மகன் குகதாசன், அவளக்கருகில் உள்ள திண்ணைக் குந்தில் அமர்ந்திருக்கிறான். 

தாயின் பரிதாபமான பரிதாபமான இந்தக் காட்சி குகதாஸனுக்கு புதியதல்ல, இலங்கையில் எந்தப் பகுதியில் இனகலவரம் நடந்தாலும் அதைக் கேள்விப்பட்டவுடன்… இப்படித்தான் தன்னை மறந்து சிந்திப்பாள்… அவளையறியாமலே கண்களில் கண்ணீர் முட்டி வழியும்….! 

முடிவில்…. 

குகதாஸனைக் கூப்பிடுவாள். 

‘குகன்… நீ என்ரை ஆசையை நிறைவேற்றுவியா… என்ரை தலையிலை அடிச்சுச் சத்தியம் பண்ணு…” இப்படிக் குகதாஸனிடம் சத்தியம் கேட்பாள். 

குகதாஸனும் சின்னம்மாவின் தலையில் அடிச்சுச் சத்தியம் பண்ணிக் கொடுப்பான். 

‘…அம்மா எண்டைக்கோ நடந்து முடிஞ்சு போன விஷயத்தை இப்படி ஒவ்வொரு நாளும் நினைச்சு அழுகிறியே இனி அதை மறந்து போக வேண்டியது தானே…” குகதாஸன் தாயைச் சாந்தப் படுத்துவதற்காக இப்படிக் கூறுகின்றான். 

சின்னம்மாவின் உறுப்புக்கள் உணர்வை இழந்த நிலையில் குகதாஸனின் பேச்சுக்கள் சின்னம்மாவின் செவிப்பறையில் மோதி வெறுமையாய் மறைகின்றன. 

குகதாஸன் 

இவனைக் குகன் என்று தான் அழைப்பார்கள். 

பொது நிறம், தடித்த உரோமம், அடர்ந்த உடற்கட்டு கட்டையான தோற்றம், வயது இருபத்தைந்துக்குள் தான் இருக்கும். தனக்குச் சரியென்று பட்டத்தைச் செய்கின்ற இயல்பு, கூர்மையான கண்கள்… ‘பெறுமதியான’ ஒரு வாலிபன் என்று ‘நாக்குப் புரளாமல் கூறிவிடலாம். 

இப்பகுதி வாலிபர் இயக்கத் தலைமைப் பதவியை இப்பகுதி மக்கள் வலிந்து இவனுக்கு வழங்கியுள்ளனர். 

“என்னம்மா…நான் கதைக்கிறன். நீ பேசாமல் இருக்கிறாய்…” குகன் திரும்பவும் கேட்கிறான். 

சின்னம்மாவின் உடல் உறுப்புகளின் உணர்வுகள் இப்போது தான் இலோசாகத் தொழிற்பட ஆரம்பிக்கின்றன. 

அரிக்கன் லாம்பின் சிறு சுடரை நோக்கியிருந்த அவள் தலையைத் தாழ்த்தி குகதாஸனைப் பார்க்கிறாள். அவனது முகத்தில் கேள்விக்குறி பிரதிபலிக்கின்றது. 

“அம்மா… இந்த உலகத்துப் பிரச்சனையை, இந்த உலகின் உணர்வோடை தான் யோசிக்க வேணும்… ஆனால் நீ… இந்த உலகத்துப் பிரச்சனையை, இந்த உலகத்தை மறந்து யோசிக்கிறாய்… அப்பிடி யோசிக்கிறதாலை எப்பவுமே முடிவு ஏற்படாது…” 

“குகன்… அண்டைக்கு என்ரை குடும்பத்துக்குக்கேற்பட்டதை நினைக்கிற நேரமெல்லாம்… என்ரை மூளையெல்லாம் கலங்கி இந்த உலகத்தின்ரை நினைப்பே இல்லாமல் போயிடும்…” 

அந்த குடிசை வீட்டின் செத்தையில் கட்டித் தொங் விடப்பட்டிருக்கும் ஐந்து புகைப்படங்கள். 

அந்தப் படங்களில் குகதாஸனின் பார்வை ஊர்ந்து வருகின்றது. 

“அம்மா…” உணர்ச்சி வசப்பட்ட குகன் தனது தலையில் அடித்துக் கத்துகிறான்… இரவின் அமைதியை குத்திக் குதறி… சங்காரம் செய்கிறது அவனது குரலின் துயரக் கூர்கள்….. 

தனது குடும்பத்திற்கேற்பட்ட பரிதாப முடிவு… 

இதற்குக் காரணம்… 

‘சகோதரங்கள் போல் பழகிய சிங்களக் கூட்டம்!… 

இனவெறி!…. 

குகனின் உடலிலுள்ள குருதியெல்லாம் உறைந்து கட்டியாகி.. 

குகதாஸன் எவ்வளவோ நிதானமானவன் தான் ஆனால், சில சந்தர்ப்பங்களில் தாயோடு சேர்ந்து சாதாரண மனித இயல்புக்கு அடிமையாகி விடுகின்றான். 

சில நிமிடங்களில் சரியான பாதைக்கு வந்து விடுவான். 

குகதாஸன் அறிவுப் பாதையில் உணர்வை வழி நடத்துகின்ற மனப்பக்குவமும், பலமும் மிக்கவன்… 

சில சந்தர்ப்பங்களில் பெற்ற தாயின் கண்ணீரை கண்டு இப்படியாகி விடுகின்றான். 

“…அம்மா…” சில நிமிடங்களுக்கு முன்பு கத்தியவன் இப்போது அமைதியாக அழைக்கிறான். 

“என்ன குகன்…” 

“நான் ஒண்டு சொல்லுறன் செய்யிறியா.” 

“என்ன” 

“நீ உன்ரை ஆசையை விட்டிடு…” 

என்றோ இதைக் கூறவேண்டும் என்ற நினைத்தவன் தாயின் மனம் புண்படும் என்பதற்காக கூறாமல் இருந்தான். ஆனால் தாயோ தனது எண்ணத்தை விடுவதாக இல்லை. இனிமேலும் அவளது ஆசையை வளர்க்காமல் இன்றோடு அதற்கொரு முற்றுப் புள்ளி வைத்து விட வேண்டுமென்ற முடிவோடு இப்படிக் கூறுகின்றான். 

குகனின் பேச்சைக் கேட்ட சின்னம்மா கலங்கி விட்டாள்! 

“என் குகன் சொல்லுறாய்” 

“நீ உன்ரை ஆசையை விட்டிடு…! 

“அப்ப இவ்வளவு காலமும் என்ரை தலையிலை அடிச்சுச் சத்தியம் பண்ணினது…” 

“…அது உனக்காக…” 

“குகன் என்னை ஏமாத்திப் போடாதை… நான் பாடையிலை போறதுக்கு முன்னம் எனக்குள்ள ஒரேயொரு ஆசையை நிறைவேற்றிப் போடு…” நடுங்குகின்ற இரு கைகளையும் இணைத்து… கும்பிட்டு யாசிக்கின்றாள்…. 

அவளது கண்கள் பனித்து முத்துப் போல் இரண்டு துளிகள் அவளது மூக்கருகில் வழிகிறது… 

மகாபாரதத்தில் குந்தி தான் பெற்ற மகனான கர்ணனிடமத் யாசித்தது போல்… 

மகாபாரதத்தில் கர்ணன் ‘நட்புக்கு கட்டுப்பட்டான். 

இங்கு குகன். 

‘போராட்டத் தர்மத்துக்கு’ கட்டுப்பட்டு நிற்கிறான். 

‘குகன்…என்ரை ஆசையை நிறைவேற்றிப் போடு” 

சின்னம்மா திரும்பத் திரும்பக் கேட்கின்றாள். 

”குகன்…என்ரை ஆசையை நிறைவேற்றிப் போடு”

சின்னம்மா திரும்பத் திரும்பக் கேட்கின்றாள். 

குகனால் பேச முடியவில்லை. 

இராமயணத்தில், கங்கைக் கரையில் இராமன் சந்தித்த குகனின் நேர்மையைப் போல்…. 

சின்னம்மாவின் பேச்சோடு அந்தக் குடிசையில் துயர் கலந்த ஒரு அமைதி படர்கின்றது. 

சின்னம்மாவின் ஆசை… 

…ஒரு சிங்களக் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்று தீயிலிட்டு… அவைகள் வெந்து வெடிப்பதைப் பார்க்க வேண்டும். 

இது தான் சின்னம்மாவின் ஆசை! 

துரியோதனன் சபையில் தனக்கு துயில் உரிந்த துச்சாதனனின் இரத்தத்தை தனது கூந்தலில் தடவிய பின்பே தனது கூந்தலை அள்ளி முடிப்பேனென்று திரௌபதை சபதம் செய்தது போல்… 

சின்னம்மாவும் இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தச் சபதத்தை செய்திருந்தாள். 

இரண்டு வருடங்களுக்கு முன்பு… 

இக்கிராமத்திலிருந்து பத்து மைல்களுக்கப்பாலுள்ள ‘புடவைக் கட்டு’ கிராமத்தில் சின்னம்மா குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். 

சின்னம்மா, சின்னம்மாவின் தகப்பன் முத்தையாவுக்கு கூட இப் புடவைக் கட்டுக் கிராமம் தான் பிறப்பிடம். 

சின்னம்மா கணவன் கிட்டிணன் கோபாலபுரக் கிராமத்தைச் சேர்ந்தவர். 

சின்னம்மாவுக்கு நான்கு பிள்ளைகள் மூத்தவன் குகதாஸன், அடுத்த மூன்றும் பெட்டைக் குஞ்சுகள். 

சின்னம்மா இயல்பில் மிகப் பயந்தவள். குஞ்சை மிதிக்கின்ற தாய்க் கோழியின் ‘நோவற்ற’ அந்த மிதிப்பை கண்டு கூட மனம் தாங்க மாட்டாதவள்….. 

அப்படிப் பட்டவளின் மென்மையான இதயத்தில்… பழுக்கக் காய்ச்சிய எழுதுகோலால் ஒரு துயர் காவியம் வரையப் பட்டிருக்கிறது. 

அந்தச் சம்பவத்தை பத்திரிகையில் செய்தி வடிவில் பார்த்தவர்களாலேயே மறந்து விட முடியாது. 

அந்தச் சம்பவம். 

அந்த நாள் 

இலங்கை பூராவும் இனக்கலவரம். 

நாடெங்கிலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

குகதாஸன் தகப்பனாரின் கிராமமான கோபாலபுரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சென்றவன். திரும்ப முடியாமல் நின்று விட்டான். ஏனையோர் அனைவரும் இருந்தனர். 

மழையில்லாமல் வயலில் பயிர்கள் கருகிச் சாவதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தனர். மண் பார்த்த மக்கள் வேற எதைப் பற்றிப் பேசுவார்கள்… 

அரசியல் ‘காண்டத்தில்’ தேர்தல் ‘படலம்’ வந்தால் மட்டும் புரிந்தோ, புரியாமலோ, ஏதோ சில அரசியல் கருத்துக்களை உச்சரிப்பார்கள்.. அதைவிட அரசியல் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. 

மண்…. 

மண்ணில் விளைகின்ற பயிர்… 

பயிருக்கான மழை… 

ஒரு சாண் வயிற்றோடு ஆயுள் ழுமுவதும் போராடுகிறவர் களின் பட்டியலில் இவர்களும் அங்கத்தவர்கள். 

இரவு பன்னிரெண்டு மணியிருக்கும். 

பயங்கர உறுமலோடு மிகப்பெரிய வாகனம் ஒன்று அவர்கள் வீட்டுப் படலையில் வந்து நின்றது. 

சகலரும விழித்துக் கொண்டனர். 

வயலுக்குத் தேவையான பசளைக்கு காசு கட்டியிருந்தனர். ‘பசளை’ தான் வந்திருக்கிறதெண்டு சகலரும் நம்பினார். 

“கிட்டிணன்…” யாரோ ஒருவரின் குரல், அந்தக் குரலுக்குரிய வரைக் சின்னம்மா இனங்கண்டு கொண்டாள். 

”உதார் பியசேனாவே…” சின்னம்மா கேட்டாள். 

பியசேனா இந்தக் கிராமத்தையே பிறப்பிடமாக கொண்டவன். சின்னம்மா குடும்பத்தோடு சகோதரம் போல் பழகியவன். 

சின்னம்மாவின் தகப்பன் முத்தையா அரிக்கன் லாம்பைத் தீண்டி கையிலெடுத்துக் கொண்டு படலையை நோக்கி வந்தான். 

அவனைப் பின்தொடர்ந்து, சின்னம்மாவின் புருஷன் கிட்டிணனும், கிட்டிணனைப் பின் தொடர்ந்து மூன்று பிள்ளைகளும் வந்தனர். 

அரிக்கன் லாம்பின் வெளிச்சத்தில் வந்தவர்களை நன்கு தெரிகின்றது. 

பண்டா…. 

பியசேனா… 

ரூபசிங்கா… 

மகிந்தபாலா…இவர்களோடு காக்கி உடுப்புப் போட்ட பலர்… இவர்களைத் தெரியவில்லை. 

இப்போது 

சின்னம்மாவின் மனதில் ஏதோவொரு சந்தேக மொட்டு இலேசாக கட்டவிழ்கின்றது. 

அவள் வீட்டு முற்றத்திலேயே நிற்கின்றாள். 

“அவன் தான் கிட்டிணன்” பியசேனா கிட்டிணனை இனங்காட்டுகிறான். 

‘காக்கிச் சட்டைகள் சிங்களத்தில் ஏதோ பேசுகின்றனர்… கிட்டிணன் அதைப் புரிந்து கொள்வதற்கு முன்னால்… 

பூமியை நோக்கியிருந்த துப்பாக்கி முனைகள் மண்பார்த்த அந்தக் கூலிகளின் மார்புகளை நோக்கின…. 

இயமன் கூட இனவெறி கொண்டவனோ என்னவோ அவன் கூட தன் ‘பாசக்கயிற்றை’ அவர்களிடம் கொடுத்து விட்டான்! 

கோர்வை வெடிகள் வெடிப்பதுபோல் துப்பாக்கிகள் வெடித்தன… மண் புழுக்களின் மார்புகள் இனவெறியரின் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக… மண்ணில் சரிந்தன…. 

சின்னம்மா திடுக்கிட்டாள்… பின்புறமாக ஓடினாள்… வயல் வெளியையும் கடந்து… காட்டுக்குள் வந்து விட்டாள். 

ஒரு மரத்தடியில் நின்ற அவள், அந்தக் களைப்பிலும், தான் வந்த திசையை ஆவலோடு பார்க்கிறாள். 

தனது குடும்பத்தவர்களும் தன்னைப் போல் ஓடி வந்திப்பார் களென்ற எண்ணம். 

அவர்களது உடலை விட்டு உயிர் போயிருக்கும் என்று அவளால் எண்ண முடியவில்லை. 

சில நிமிடங்கள் வரை எட்டி, எட்டிப் பார்த்தாள் ஏமாற்றந்தான்.. 

தகப்பன்… புருஷன்… பிள்ளைகள்… உதிரத்தை அடிநாதமாகக் கொண்ட உறவுகள்… தலை சுற்றி… நினைவிழந்து… அவள் விழுந்து விட்டாள்…! 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தின் பின் அவள் கண் திறந்தாள். 

திரும்பவும் வீட்டெண்ணம் 

எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள், அவளால் நடக்கவும் முடியவில்லை. 

நடந்து கொண்டே தனது வீட்டுத் திசையை நோக்கினாள்… வீடு எரிந்து கொண்டிருப்பது நன்றாகத் தெரிகின்றது… நடக்க முடியாமல் நடந்த அவள் திரும்பவும் ஓடத் தொடங்கினாள்… வீட்டில்… 

எரிகின்ற வீட்டிற்குள்… 

தகப்பன்… புருஷன்… பிள்ளைகள் மூன்று… இவர்களோடு நாய்.. கோழிகள்… சகலதும் எரிந்து கொண்டிருந்தன!…. 

அவளால் என்ன செய்ய முடியும்…? திரும்பவும் ஓடத் தொடங்கினாள்… அங்கிருந்து புருஷனின் கிராமமான கோபாலபுரம் பத்து மைல்… ஓடுவாள்,மூச்சு வாங்கி ஓட முடியாத போது நடப்பாள் இப்படியே ஓட்டமும் நடையுமாக… விடிய ஏழு மணியளவில் கோபாலபுரத்திற்கு வந்து குகதாஸனை சந்தித்தாள். 

குகதாஸன் சட்டத்தைக் காப்போரின் உதவியுடன் அங்கு சென்றான்… 

…நெருப்புத் தணலில் வேகி, வெந்து வெடித்த மரவள்ளிக் கிழங்குகள் போல… அந்த மனித உடல்கள் வெந்து வெடித்து… குடலும் சதையுமாய் கிடந்தன!…? 

‘குளுக்கோஸ் ஏற்றப்பட்ட நோயாளி கண் விழிப்பது போல்’ சட்டம் கண் விழிந்தது. 

பிறகென்ன… விசாரணை விளக்கம்…? 

சட்டம் என்ற இருட்டறைக்குள் ‘காக்கிச் சட்டைகளின்’ வழமையான ‘கண்பொத்தி’ விளையாட்டு நடந்தது!…? 

சின்னம்மா தான் கண்டவற்றைக் கூறினாள்… முடிவு. 

கொலைகாரனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை… புலன் விசாரணை நடைபெறும்… என்ற முடிவை மிகவும் கஸ்டப்பட்டு வெள்ளைத் தாளில் எழுதி முடித்தனர். 

பார்க்கவே முடியாத அந்தப் பிணங்களிற்கு இன்னொரு சுடுகாடு தேவையில்லை என்ற முடிவில் அதே இடத்தில் கட்டைகளை அடுக்கி பிணங்களையும் அடுக்கி… குகன் தீ மூட்டினான்! 

ஒரு குடி நிலம், சுடுகாடாகியது! 

அன்று அந்தக் கிராமத்தை விட்டுப் புறப்பட்ட சின்னம்மாவும், குகதாஸனும் திரும்பவும் வரவேயில்லை! 

இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. 

சின்னம்மாவின் ஆசை…. 

…. நம்மை வஞ்சித்த ஒரு சிங்களக் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்று… வீட்டுக்கு தீ மூட்டி அந்தப் பிணங்களை அந்தத் தீயிலிட்டு… அவைகள் வெந்து வெடிப்பதைப் பார்க்க வேண்டும்… அதிலும் அடுப்புக்குள் மரவள்ளிக் கிழங்கைப் புரட்டி புரட்டிச் சுடுவது போல் தானே அந்தப் பிணங்களை புரட்ட புரட்டிச் சுடவேண்டும். 

…இதுவரையில் தலையில் அடித்து சத்தியம் செய்த குகன் இன்று மறுத்துவிட்டான். 

“சகோதரம் மாதிரிப் பழகிப் போட்டுத்தானே இந்தச் சிங்களவர் எங்கடை குடும்பத்தை எரிச்சவங்க.. இவர்களை கண்ட கண்ட இடங்களிலே வெட்டி விழுத்தினாலும் பாவமில்லையடா…” சின்னம்மாவின் வார்த்தைகள் துயரத்தில் மூழ்கி வருகின்றன. 

“…அம்மா உனக்கிருக்கிற பாசத் துடிப்பு எனக்கில்லாமல் இல்லை… எனக்குள்ளேயே நான் அழுது கொண்டிருக்கிறேன்… உன்னைப் போல பழி வாங்க வேணுமெண்ட எண்ணம் எனக்குமிருக்கு… அதைச் செய்ய முடியாமலில்லை… ஆனால் அது பிழையான முடிவு…” கண்ணுக்குள் முள்ளெடுக்கின்ற ஒரு டாக்டரின் அவதானத்தோடு குகதாஸன் கூறுகின்றான். 

“அதிலை என்னடா பிழையிருக்கு… நீதி நியாயம் இல்லாத வங்களிட்டை… நீதி, நியாயம் இல்லாமல் தானடா நடந்து கொள்ள வேணும்…”சின்னம்மாவின் இதயத்தில் ஜீரணிக்க முடியாத துயரச் சுமை! 

‘அம்மா… இது தனிப்பட்ட பிரச்சினையில்லை… இந்த நாட்டுப் பிரச்சினை…” 

“…எனக்கு உந்த விளக்கமெல்லாம் தேவையில்லை… என்ரை ஆசையை நீ நிறைவேற்றப் போறியா இல்லையா…” சின்னம்மா திரும்பவும் பிரச்சனையின் மையத்துக்கு வருகின்றாள். 

‘…அம்மா… உன்ரை ஆசை நியாயமற்றதாக இருக்கும்போது.. நான் அதை எப்பிடி நிறைவேற்றிறது…? ஒரு புறம் தாய்ப்பாசம் மறுபுறம் அரசியல் நீதி… இருதலைக் கொள்ளி போல் அவதிப்படுகின்றான் குகதாஸன். 

“அப்பிடி என்ன அநியாயத்தையடா கண்டிட்டாய்” 

“…எய்தவன் இருக்க அம்பை நோகலாமா…” 

”…நீ சொல்லுறதை விளக்கமாய்ச் சொல்லு…” 

“இதுக்கெல்லாம் காரணம் இந்த நாட்டின் ‘நாணயக் கயிற்றை பிடித்திருக்கிறார்களே” 

அவர்கள்தான் பொக்கிசங்களிலிருந்து ‘புத்தகங்கள்’ வரை அழிப்பித்ததும் இந்தச் சூத்திரதாரிகள்தான் வண்டிலை இழுக்கின்ற எங்களைப் போன்ற ‘மாடுகள்’ எங்கள் எதிரிகளல்ல வண்டிலின் ஆசனப் பலகையில் அமர்ந்து நாணயக் கயிற்றைப் பிடிப்பவர்கள்தான் தான் எங்கள் எதிரிகள்…” குகதாஸன் மிகவும் விரிவாகவும், சுருக்கமாகவும் கூறுகின்றான். 

சின்னம்மா, குகதாஸனின் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும். அவள் மெளனமாக இருக்கின்றாள். 

‘அம்மா… உன்ரை ஆசைப்படி நான் ஒரு சிங்களக் குடும்பத்தை அழிப்பதாக வைத்துக் கொள்… எங்கடை குடும்பத்திலை தற்செயலாக நீ தப்பியதை போல், அக்குடும்பத்திலையம் ஒரு தாய் தப்பி விட்டால்… உனக்கும், அந்தத் தாய்க்கும் வித்தியாசம் இருக்குமா…” 

சின்னம்மா தலையை நிமிர்த்தி குகனை பார்க்கிறாள்… அவளது கண்கள் அகல விரிந்து… இலேசாகப் பனிக்கின்றது… மனித உணர்வின் வெளிப்பாடு! 

“குகன் நீ சொன்னதை இன்னுமொருக்கா சொல்லு…” சின்னம்மா ஆவலோடு கேட்கின்றாள். 

“நாம் வெல்ல வேண்டியது நாணயக் கயிற்றை பிடித்திருப்பவர்களை…” 

சின்னம்மாவின் முகத்தில் பழிவாங்கும் உணர்வு சிறுகச் சிறுக மறைகின்றது. 

ஆனால் 

குடிநிலம் சுடுகாடாக்கப்பட்ட அந்தச் சம்பவத்தை அவளால் ஜீரணிக்க முடியுமா…?…. 

அவள் அழுகின்றாள். 

– சுடர், வைகாசி ஆனி 1982.

– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *