கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 20, 2025
பார்வையிட்டோர்: 2,606 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இம்முறை ஏகத்துக்கு நல்ல வெளச்சல். சரியான நேரத்துக்கு தண்ணி விட்டவங்கள். வெளிக்காரர் எல்லாம் உரிய நாளுக்குள்ள விதெச்சி பயிர் ஏத்திப் போட்டாங்கள். பீஜீ லெவன்தான். சின்ன நெல்;லொறிக்காரண்ட நல்ல வெல போகும். வயல் முழுக்க நெல்லப் பரப்பி விட்டாப்போல நல்ல வௌச்சல். அஞ்சு வருஷத்துக்கு ஒரு மொற இப்படி வெளயுமென்டு எங்க வாப்பா சொல்ற…

வெதச்ச பருவத்துல குண்டுப் பள்ளங்கள்ல சில்லுத்தாரா முளையில் கிண்டிப் போட்டுது. அதுக்குப் புதுசா நாத்து வாங்கி நட்டது. மூத்த நாத்து என்டதால் மத்ததோட சராசரியா விளஞ்சிட்டுது. 

வெள்ளாம வெட்டவும் ஆள் ஒழுங்கு பண்ணியாச்சு. நேத்து அல்லிக் காட்டுக்காரர் வந்து அடியறுத்துப் போட்டுப் போட்டாங்கள். நாந்தான் சொன்னனான், நாள் பாத்து புதன் கெழம வெட்டுவம் என்டு. சாப்பாடுங் கொடுத்து ஏக்கருக்கு மூவாயிரம் கேட்டாங்கள். ஒரு வழியா இரண்டரைக்குச் சம்மதிச்சாங்கள். 

அல்லிக்காட்டுக்காரர்ல ஒரு வசதி பாருங்க. சொன்னமாதிரி வேல செய்வாங்க. ஒரு பறிகதிர் விடமாட்டாங்க. ஒரு நாள் வெட்டு. அடுத்த நாள் கட்டு. அஸருக்கு பாங்குச் சத்தங் கேட்க முந்தியே சூடு வெச்சு மேஞ்சி வெளிக்கிட்டுவாங்கள். அப்புறம் மானாவாரியா மழை கொட்டினாலும் சரி. ஒரு சொட்டுத்தண்ணி கூட சூட்டுக்குள்ள போகாது. 

ஆனா, இப்ப அவங்கட வரத்துக் கொஞ்சம் கொறச்சல். குழப்பத்துல சனங்கள் அங்கிங்க செதறிப் போட்டுது. இளசுகளெல்லாம் வெளிநாட்டுக்குப் போட்டுதுகள். வரக்குள்ள சண் கிளாசும் ட்ரவுசருமா வருதுகள். வந்தா இந்தக் கதிரறுப்பு வேலைகளை எட்டிப் பாக்கப் போதுகளா…? 

போன வாட்டி இப்படித்தான் ஒரு கூட்டம் வந்து அருவி வெட்டுனாங்க. மதியக் கறிக்கு சாவான் புடிச்சு வாறன் என்டு, அதுக்குள்ள ஒரு வெடல பொறப் பட்டுது. ஒரு ஓமல் நெறையச் சாவான். கூடவே இடது கையையும் உயர்த்திக் கொண்டு வந்தது. சுங்கான் கொட்டிப் போட்டுதென்டு…கொடிய விஷம் பாருங்க. சுங்கான் முள்ளடிச்சா வேதனையில தலையால பொறி பறக்கிற மாதிரி இருக்கும். அதுக்குப் பொறவு, நான் இந்த மடுவடிக்கு யாரையும் விடறதில்ல. அந்த வெடலப் பையன், பொறவு வெள்ளாமெ வெட்டுக்கும் வாறதில்ல. கை ஏலாமப் போச்சு….இப்ப கடை ஒண்டில நிக்கானாம். 

அப்பெல்லாம் எங்க வாப்பா சொல்லுவா; பனங்கழி, பச்சப்பெருமாள், சீனட்டி எண்டுதான் வெதக்கிற. எண்ணெ, பசளெ கெடையாது, ஏக்கருக்கு நாலு அவணம், அஞ்சு அவணம் என்டுதான் வெளயும் அது போதும்; செலவும் சுருக்கந்தானே; ஆனா சுத்தமான நெல்லு. இப்பமாதிரி எண்ணெய் விஷம் ஒன்டுங் கெடயாது. அவிச்சுப் போட்டு சோறாக்கினா ரெண்டு நாளைக்கிம் அப்படியே இருக்கும் பழுதாகாது. காலெயில, வேதத்தீவுத் தயிரையும் விட்டுப் பிணஞ்சி, கருப்பட்டி வெச்சுச் சாப்பிட்டா மதியம்வரை நிக்கும்…

என்ன சொல்ல வந்தனான்? 

சுங்கான் மீனெப்பத்தி வெட்டுக் காலத்தில் வாப்பா வலெயத் தூக்கிடுவாங்க. அரை இஞ்சிக்கண் வலை. பாக்கு வெட்டுற நேரத்துக்குள்ள ஒரு பறி நெறைய வீசிப் போடலாம். சுங்கான்தான்; கிளாத்தி தடியில பரண்போட்டு நெருப்புக் கருவாடாக் காய்ச்சி வெச்சிக்கொண்டா, வேறே கறியே வேணாம். ஒரு கருவாட்டெச் சுட்டு வெச்சா ஒரு குழல் புட்டை உருட்டிக் கொண்டு போகும். 

இந்த ரெண்டேக்கர் வயலும் வாப்பா தந்ததுதான். பூர்வீகச் சொத்து. கால் ஏக்கர்ல தப்பாம சீனட்டி வெதச்சிப் போடுவன். சாப்பாட்டுக்கு; எண்ணெய், பசளை காட்டுறதில்லை. அஞ்சு மூட்டைக்குக் குறையாம வெளஞ்சி போடும். ஆறு மாசத்துக்கு எனக்கும் பெண்சாதிக்கும் – ஒரே மகள்தான் அவக்கும் செல்லா வாத்தியாக் காணும். அடுத்த வெள்ளாம வெட்டும் வரைக்கும் வேற அரிசி தேவப்படாது. இப்ப மருமகன் வந்துவிட்டார். மகள் தான் தன்னோட படிச்சவன் என்டு கூட்டி வந்தா. நோஞ்சான் புள்ள; ஒரு அகப்பச் சோறு சாப்பிடாது. 

எனக்கு விருப்பமில்ல…. 

புள்ள அழுகுது; நான் மனசெக் கல்லாக்கிட்டன். எங்கட பரம்பரை யிலேயே இல்லாத வழக்கம். எங்க வாப்பா சொல்லுவாங்க; சொல்லுக் கேளாத புள்ளகளெ சுங்கான் கருவாட்டோட போட்டு தீ மிதிக்கணுமின்னு. நா அப்படி யெல்லாஞ்செய்யயில்ல; வீட்டுப்பக்கம் வரப்படாதென்டுட்டன். நிகாஹ் முடிக்க நான்தானே வலி காரன். நான் போகல்ல; என்ர தம்பிக்காரன் போனான். கலியாணம் முடிஞ்சுது. தம்பி வீட்டுலதான் கொஞ்ச நாள் குடி இருந்தாங்க. மருமகனுக்குத் தொழில் இல்ல; எப்பவும் புத்தகமும் கையுமா இருக்கிறது; பொழப்புக்கு வழி தெரியல. தம்பிட வீட்ல இருந்து எப்படிக் காலம் போகும்? தம்பியும் வசதியானவனா? இல்லியே …… 

மருமகன் வயல் வேலேக்குப் புறப்பட்டார். மாடடிப்பு, பெருமிதி, வெதெப்பு என்டு போய் வந்தார். பாதி நாள் வேலே செய்வார். மத்த நாள்ல உடல்நோ என்டு படுப்பாராம். என்ட பெண்டாட்டிதான் அறிஞ்சு வந்து சொல்லுவா…நான் ஒன்டுஞ் சொல்றதில்ல…. சும்மா கேட்டுக்குவன். 

ஒரு நாள் வாய்க்கால் துப்பரவு வேல என்டு போயிருக்கார்; ஆளுக்குப் புதுப்பழக்கம்; குண்டு மடுவ நிரப்ப கனத்த புட்டியை வெட்டிப் போட்டிருக்கார். கையெ விட்டு மண்ணெத் துலாவி பரப்பி இருக்கார். இவருக்குத் தெரியல்ல. அப்பாவி மனுஷன். சுங்கான் நல்லா அடிச்சுப் போட்டுது. உள்ளங்கையில ஏறுன முள்ளு புறங்கையால வெளில வந்துட்டுது. வலி தாங்கேலாம் அழுதிருக்கார். கை ஓடி வீங்கிப் போச்சு. நெருப்பாக் காச்சல். கண்ணெல்லாம் சிவந்து உயிர் உணத்தி இல்லாமக் கெடந்து தவிச்சிருக்கார். 

பெஞ்சாதி வந்து அழுது புரண்டா. புளியந்தீவு ஆசுபத்திரிக்குக் கொண்டு போனாத்தான் ஆளெ ஒரு மாதிரி சுகப்படுத்தி எடுக்கலாம் என்டு மூக்குச் சிந்தினா, இனசனமெல்லாம் என்னெ ஒரு மாதிரிப் பாத்துது. 

நான் அசையல்ல…. 

இத்தனைக்கும் மக ஒருவாட்டி வந்து ‘வாப்பா மன்னிச்சுக் கொள்ளுங்க…. அவசரப்படுத்தித் தாங்கோ என்டு கேக்க அவக்கு மனம் வரல்ல. எப்படி மனம் வரும், வாப்பாட மகளல்லவா….? 

பெஞ்சாதியும் என்ட தம்பியுமா புளியந்தீவுக்குக் கொண்டு போனாங்க. தாவளத்துப் பொணையலா ரெண்டு மாடு வச்சிருந்தன். கொம்பும் நெறமுமா ஒன்டையொன்டு பாத்தாப் போல. என்னெக் கேக்கல…. பெஞ்சாதியே வித்து காசாக்கி வெத்திலப் பொட்டிக்குள்ள வெச்சிட்டுப் போயிட்டா. நான் ஒன்டுஞ் சொல்லல்ல….. 

மூணு கெழமையாச்சி…அவங்க வரயில்ல. மாடு கட்டியிருந்த கொட்டி லையே பாத்துபெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தன். போன சிறுபோக அறுவடை யில மிஞ்சுன நெல்ல, தாவளத்துக் காரருக்கு அளந்து கொடுத்துப் போட்டு, வாங்கின பிஞ்சுக் காளைகள் அதுகள். இந்த மாரி வெள்ளாமைக்கு -ஆண்டவன் முகம் பாத்தா, ஒரு வண்டில் வாங்கிப் பாக்கலாம் என்டு ஆசையோடு இருந்தன். அதுக்குள்ள இந்த சுங்கான் மீன் பிரச்சினெ. மாடுஞ்சரி…. அவ வரட்டும்…. யாரெக் கேட்டு இந்த மாடுகள வித்தாயேன ஒரு பிடி பிடிக்கிறன். சொல்லுக் கேக்காத பிள்ளயள வெச்சிருக்கிறதெ விட, கனம்புட்டிய வெட்டி எறியறாப்போல, உறவெ வெட்டி எறிஞ்சிடணும். 

படலை கிறீச்சிட்டது.

அவதான்…. மனுசி. 

“ஒரு மாதிரியா வந்து சேந்துட்டேதாமுங்க. மகளே மச்சான்ட வீட்ல விட்டுட்டு வாறன். இந்த நாளெல சாப்பாட்டுக்கு என்ன செஞ்சீங்க….?” 

நான் ஒன்டுஞ் சொல்லயில்ல. சுருட்டு நுனியில தீயை மறச்சிக் கொண்டு, நிக்கும் சாம்பலெத் தட்டிவிட்டு கெணத்தடிப் பக்கம் போயிட்டன். 

அவக்குப் பொசுக்கென்டு கண்ணுல தண்ணி. 

நான் இதுக்கெல்லாம் கலங்க மாட்டன். இவ என்ட மாமாட மகள். வாப்பாட தங்கச்சி மகள். வாப்பா அடிக்கடி சொல்லுவாங்க…தன்ட உம்மாவெ உரிச்சி வெச்சுப் பொறந்த மாதிரி என்டு…. 

நாந்தனியா இருக்கேக்குள்ள யோசிச்சுப் பாக்குறது, என்ட உம்மாட உம்மா எப்படியொரு முகத்தோட இருந்திருப்பாங்க….? என்ட மகள்ர மகனுக்கு எப்படி ஒரு முகம் இரிக்கும்…..? என்னாட்டமே இருக்குமா…. ? அவக்குப் பொறக்குற புள்ளட முகம் எப்படி இரிக்கும்….. ? எங்கட பரம்பரைக்கே ஒரு முகம் இரிக்குமா? என்ட பேரப் புள்ளட புள்ளயிட முகத்தையும் ஒருதரம் பாத்துட்டு சாகணும் என்டு எனக்குள்ள ஒரு மெல்லிசா ஆசே. ஆனா நாங் கொடுத்து வெக்கல. எனக்குப் பொறவு பொறந்த என்ட தம்பிக்கும் ஒரு வாரிசு பொறக்கல. எனக்குப் பொறந்ததும் யாரையோ கலியாணம் செஞ்சிக்கிட்டு, சுங்கான் மீன் கடிக்கு வைத்தியம் செஞ்சிக்கிட்டு…. ச்சே…… 

மருமகனுக்கு மறுபடியும் வேலவெட்டி இல்ல. 

நம்மட மனுசி ஒரு நாள் பக்கத்துல உக்காந்துக்கிட்டு வெத்தல மடிச்சி தந்தா. 

“புளியந்தீவு ஆசுபத்திரிக்குப் போன, வைத்தியம் பாத்து திரும்பி வந்த, தாவளத்து மாடு ரெண்டு சரி. எவ்வளவுக்கு வித்தா, என்ன செஞ்சா? எவ்வளவு மிச்சம் என்டு நீங்களும் கேக்கல…நானும் சொல்லல…” 

எதுக்கோ அத்திவாரம் போடுவது புரிஞ்சு போச்சு… வாயில இருந்து வெத்திலய துப்பிப் போட்டு, முழத்துண்டால வாயெத் துடைச்சிக் கொண்டன். 

“தாயும் மகளுமா நாடகமாடினது போதும். இப்ப சொல்லவந்தத சொல்லு” 

அவளுக்குத் தொண்டை கட்டிக் கொண்டது, தொண்டைக்குள் கொழுக் கட்டை பொறுத்தவள் போல நசுங்கிய குரலில் சொன்னாள். 

“எல்லாஞ் செலவழிஞ்சது போக இப்ப என்ட கையில ஆயிரம் ரூபா இரிக்கி. நீங்க என்ன சொல்லுவீங்களோ தெரியாது….” 

கையில கெடச்ச மண்கட்டியெ எடுத்து மடாரெண்டு படலைக் எறிஞ்சன், படலையின் கீழ்ப் பலகைத் துண்டு பெயர்ந்து விழுந்தது…அவ்வளவு ஆத்திரம்…. 

“சொல்லித் தொலை” 

“மகள்ர கையில குடுப்பமா என்டு பாத்தன். மருமகனுக்கும் தொழிலில்ல…. அதோட….” 

“அதோட….? ” 

“மகள் மசக்கையா இருக்கிறா….மூணு மாசம்……” அவசரம் அவசரமா சொல்லிவிட்டு, நான் ஏதும் ஏசப்போறனோ என்ட பயத்தில அவ எழும்பிப் போயிட்டா. 

மக கர்ப்பிணியா….? இன்னம் ஏழு மாசத்துல எனக்கொரு பேரப்புள்ள பொறக்கப் போவுதா? முகம் எப்படி இரிக்கும்? எங்க வாப்பாவின் முகமா, அல்லது வாப்பாட உம்மாவெப் போலயா? உம்மாட வாப்பாவெப் போலயா…? என்ட தோள்ல கெடந்து, பிஞ்சு வெரல மூக்குக்குள்ள உட்டு கிச்சுக்கிச்சு மூட்டி…. 

எனக்கு மேலெல்லாம் சிலுக்குது. 

சரியா நடுச்சாமத்துல போய், தம்பியின் ஊட்டுக் கதவெத் தட்டி எழுப்பி. மகளையும் மருமகனையும் எழுப்பிக் கொண்டு ஊட்ட வந்து, படலெயத் தொறந் தப்போ… பெஞ்சாதி விக்கித்துப் போய் நிக்கிறா. 

“தம்பி நடந்ததெ மறந்திடுங்கோ…. என்னோட இனி ஊட்டோடேயே இருங்க. வேலெக்கெல்லாம் போகணும் என்டில்ல. வேலெ கெடைக்கிறப்ப பாப்பம். எங்கிட்ட என்ட வாப்பாட சொத்து ரெண்டேக்கர் வயல் இரிக்கி. நல்லா வெளயும். அதுவே நமக்குப் போதும். என்ட மருமவன் கூலி வேலெக்குப் போகவும் வேணாம். சுங்கான் குத்தவும் வேணாம்” 

என்ட பெஞ்சாதிக்கு நடக்குறதெல்லாம் கனாக்கண்ட மாதிரி……. பேதலிச்சுப் போயிட்டா. கொஞ்ச நேரந்தான். பொறவென்ன….? நடுச்சாமம் என்டும் பாக்காமெ நீத்துப் பொட்டியெ வெச்சுப் புட்டவிச்சு சொளவில பரப்பி விட்டா. அல்லிக்காட்டில இருந்து கொண்டு வந்த கொக்கிசான் கருவாடு கெடந்தது. அதெச் சுட்டு வெச்சா. மாங்காய் போட்டு ஒரு சொதி. அண்டைக்குத் தான் எங்கட ஊட்ல மொதல் கல்யாணச் சாப்பாடு நடந்தது. 

அதுக்குப் பொறவு என்னென்னவெல்லாமோ நடந்திரிச்சுப் பாருங்கோ. என்ட மகளே ஒரு புள்ள மாதிரித்தான்…. அவக்கும் ஒரு புள்ளையா……? அவ வவுத்த சரிச்சுச் சரிச்சு நடக்கைக்குள்ள எனக்குப் புதுமையா இரிக்கும். என்ட மனுசி சும்மா இருப்பாளா…? மாவடு, எண்ணெப்புட்டு புடி கொழுக்கட்டை, புளிப் பக்கோடா, முந்திரி அடை என்டெல்லாம் என்னென்னவோ செஞ்சி குடுப்பா. 

ஒன்பதாம் மாசம் அலியாரப் பணியாரம் சுட்டு குவிச்சா, ரெண்டு பணியரம் வெச்சு. அதோட ரெண்டு வெத்தல வெச்சி, மஞ்சள் சந்தனமெல்லாம் பூசி பச்சரிசி அரக்கொத்து வெச்சி, இனசனத்துக்கெல்லாம் குடுத்தா. வவுத்துச் சொம லேசாக் கழண்டிரணும் என்டு நேத்திக்கடனும் வெச்சா…

மருமகன் ஒண்ணுமே பேச்சில்ல. தடிச்ச கண்ணாடிக்குள்ளால எல்லாத்தையும் பாத்துக் கொண்டு, கனாக் கண்டு கொண்டிருந்தார். நாங்க, அவர்மனம் நோகாமப் பாத்துக்கிட்டம். 

ஒரு நாள் செக்கல் பட்ட நேரத்துல புள்ளக்கி வவுறு நோவு கண்டிச்சு. மருமகப்புள்ள என்ட முகத்தைப் பதறிப் போய்ப் பாத்தாரு. அவ ‘என்னங்க….?’ என்டு தவிச்சா. நான் சுணங்கல்ல, நாளெட்டுல மூத்த கண்ணாட ஊட்டெ போயிட்டன். எங்க உம்மாட வயசு. அவதான் இங்க எல்லாருக்கும் பெரசவம் பாக்குறது. பொறந்த புள்ளட மொகத்தைப் பாத்து யார் சாடெ என்டு சொல்லுவா. பொருத்தமா பேரும் வெச்சுக் கொடுப்பா. மசக்கெ என்டவுடனே அவளே, நாள் குறிச்சி, மருந்து தொவச்சி, வேர்த்தண்ணிக்கு சாமான் லிஸ்ட் சொல்லி….. நான் போன நேரம் அவ வெளிக்கிட்டே இருந்தா…ஓட்டமும் நடையுமா அவவ தூக்கி வராத கொறையா கொண்டாந்திட்டன். 

கொழந்தை பொறந்து ‘வீல்’ எண்டு கத்தியபோது எனக்கு உள்ளங் கால்லுல ஐஸ் கட்டிய வெச்ச மாதிரி சில்லிட்டது. அப்பவே புள்ளட முகத்தைப் பாக்க முடியுமா என்டு பாத்தன். மனுசி விடல்ல.பெண் புள்ளயாம். அவ்வளவுதான் சொன்னா. என்னால மனசெக்கட்டுப்படுத்த முடியல்ல. யார் முகமாட்டம் இருக்கும், எங்கட உம்மாட முகம்….? 

மூத்த கண்ணா வெளிய வந்தா. 

“எல்லாம் உன்ட உம்மம்மா போல… அழகெண்டா அழகுதான். வட்டமா முகம். செம்புக் கலர்ல முத்திரை நிறம்…. போய்ப் பாரு…. அதுக்குள்ள என்னெ உட்டுட்டு வா” 

எனக்கு மனசெல்லாம் பாலாச் சந்தோஷம். என்ட உம்மாட உம்மாவைப் போலவே பேத்தியா? நான் அவவக் கண்டதில்லை. பேத்தியெக் காணப் போறன். என்ட வம்ச முகத்தைக் காணப் போறன். 

மருமகன் சர்க்கரை வாங்கி வந்தார். பக்கத்துக்கெல்லாம் குடுத்தார். நாஞ்சாப்பிடல்ல. தம்பிட ஊட்ட வெசவெலம் சொல்லிப் போட்டு வந்தன். தம்பிக்கும் சேத்தல்லவா அவ பேத்தியாப் பொறந்திருக்கிறா. 

தம்பிக்கு ஏகச் சந்தோஷம். தன்ரை பட்டியில் இருந்த மூணு கன்றுக்கு பேத்திட குறியச் சுட்டுப்போட்டான். நாப்பதன்னிக்கு ரெண்டு கைக்கும் முறுக்குக் காப்பு பண்ணிப் போட்டான். நானும், சாப்பாட்டுக்கொண்டு வெச்சிருந்த சீனட்டி நெல்லில நாலு மூடயை வித்துப்போட்டு, காசை மருமகன்ட கையில திணிச்சன். அவர் மெல்லிசா சிங்கப்பூர்ச் செயினொன்டு வாங்கிப் போட்டார். 

மனுசி இதுக்குள்ள ஒரு சாக்கு நெல்லை அவிச்சுக் குத்தி, இல்லாததுக் கெல்லாம் வீடு வீடாக் குடுத்து அனுப்பினா. 

ஊடு சந்தோஷமாத்தான் இருந்தது. 

மூணு மாசம் முடிஞ்சி மூத்த கண்ணா வந்து புள்ளக்கி முடி இறக்கணும் என்டு சொல்லிக் கொண்டிருந்தப்பதான் எல்லாருக்கும் அது வௌங்கிச்சு. பேத்திட முகம் சந்தோஷமா இல்ல. கண்ணெ மூடி மூடி வெட்டிச்சு. வாயெல்லாம் எச்சிலா வழியத் தொடங்கிச்சு…. கைவெரலெ யெல்லாம் திறந்து மூடிச்சு….. புள்ள கொணங்கிச்சு, என்டாங்க. 

நான் பதறிப் போனன். என்னவிட என்ட மனுசி கிழிச்ச நாராத் துவண்டு போன மாதிரி படுத்த படுக்கையாயிட்டா. மூத்த கண்ணாதான் மருந்து மாய மெல்லாம் செஞ்சா. 

மருமகப் புள்ள பேதலிச்சுப் போனார். ஒருத்தரோடயும் பேச்சில்ல. கண்ணாடிய மட்டும் உயத்திப் பாத்து தலை குனிஞ்சதோட சரி. அடுத்த நாள் சுபஹூ நேரம் பேத்தி இறந்திட்டுது…

மக பிலாக்கணம் வெச்சு அழுதா. மனுசி மயக்கம் போட்டே விழுந்திட்டா. மருமகப் புள்ள வழிந்த கண்ணோட மூலெயில கெடந்த உரல்ல குந்திட்டாரு. ஊடே செத்திட்டுது… 

மூத்த கண்ணாதான் காரியமெல்லாம் பாத்து முடிச்சா. என்ட உம்மம்மாட முகம் சரியான தரிசனம் குடுக்காமெ மண்ணுக்குள்ள புதைஞ்சி போச்சி…யா அல்லாஹ்…. 

கொஞ்ச நாளா ஊடு தெசை மாறிப் போச்சு. ஆளோட ஆள் பேச்சில்ல. ஆகுமானதெண்டு சாப்பாடில்ல. மொகம் மாத்து செஞ்ச ஆக்கள் மாதிரி – வேத்து வேத்து ஆக்கள் மாதிரி…மகதான் அழுதழுது தீப்பா…. காலெ என்டில்ல…மாலெ என்டில்ல… கண்ணால தண்ணி வடிஞ்ச சீர்தான்… அவ அழுவுறப்ப, அந்தப் பிஞ்சுப் பேத்தியின் முகம் எனக்கு ஞாபகம் வரும்…. பேத்தியின் முகமா? உம்மம்மாவின் முகமா? ஒரு நாள் மகள் அழ, மனுசி அழ… துக்கம் தாளாம நான்… என்ன செய்றன் என்டு தெரியாம வாசல்ல நின்ட மாதுளம் மரத்தை வெட்டி வீழ்த்த… மருமகன் விசும்பிக் கொண்டு உள்ளே செல்ல… வாசலில் மூத்த கண்ணா! 

“என்னடா மன, உன்ட வேலெ? ஊர் உலகத்தில இது நடக்காததா….? எந்த ஊட்ல மௌத்து நடக்கல்ல….? சொல்லு பாப்பம். உன்ர வாப்பாட வாப்பாவும் இப்படித்தான். கோவக்காரர். மனசில ஆத்திரம் வந்தா என்ன செய்றன் என்றில்ல. அழிச்சி முடிச்சிடுவார். ஒரு சூட்டுப் பொலியையே நெருப்பு வெச்சவர் அவர். அவர் மாதிரிதான் நீயும் வந்திக்கா போல….. அதுகள் ஆறுதல் படுத்தறதெ விட்டுப்போட்டு…” 

என்னால் அழுவுறதைத் தவிர ஒண்டும் செய்ய முடியல்ல. 

எல்லாமே பழசாய்ப் போட்டுது. மகள் தேறிச் சாப்பிட நாலு மாதம் ஆயிட்டுது. மனுசிட முகம் இன்னமும் சோகப்பட்ட மாதிரி – விடியாமத்தான் இரிக்கி. மருமகப் புள்ளயும் பேதலிச்சு – மாரி மூசாப்பு மாதிரி முகமெல்லாம் இருண்டு போய் அவரெச் சரிக்கட்டி எடுக்கிறதுதான் பெரிய விஷயமாப் போச்சுது. 

பூர்வீகச் சொத்து ரெண்டு ஏக்கரையும் மாட்டிக்கிறது, கங்கலவு தண்ணி கட்டுறது, புல் புடுங்கிறது, எண்ணெய் அடிக்கிறது எண்டு நான் ஒரு மாதிரி தேறிட்டன். என்டாலும் என்ட பேத்திட முகத்தை நெஞ்சுக்குள் கொண்டு வந்து, அதில் உம்மம்மாட முகத்தை தேடுற பழக்கம் எனக்கு அப்பப்போ ஏற்பட்டுக்கிட்டே இருந்திச்சு. 

இந்த முறை வயல் வெதப்பு எல்லாம் முடிஞ்சு கங்கலவு தண்ணி கட்டி ஏகத்துக்கு சில்லிட்ட மாதிரி பயிரக் கண்டபோதுதான் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. வாழைக்குட்டிக் கணக்கா பருத்த அடித்தண்டோட வெள்ளாம குட்டி வெடிச்சு நிமிந்தப்போ நான் வயலோடேயே ஐக்கியப்பட்டுப் போனேன். இந்த முறை வயல் வெளஞ்சிட்டதெண்டால் தாவளத்திலிருந்து ஒரு பொனையல் நாம்பன் வாங்கி விடத்தான் வேணும்… கொஞ்சம் காசு பெரட்டி மகளெ கண்டி ஆசுபத்திரிக்குக் கூட்டிப் போய்க் காட்டணும். 

ஒரு நாள், வெளக்கு வெக்கிற நேரம். புள்ள காலடியில் குந்திட்டாள். தாய்க்காரி. அப்பதான் விழுந்து கெடந்த கமுகம்பாக்கெ, பாக்குவெட்டியில குடுத்து ரெண்டாப் பொளந்து கொண்டிருந்தா. 

“புள்ள, தம்பி எங்கம்மா?” 

“அவரெப்பத்தித்தான் வாப்பா உங்களோட கொஞ்சம் பேசணும்னு இரிக்கன். அவருக்கும் புள்ள மௌத்தாகின கவலெ. தொழிலுமில்ல. மனுஷன் பேதலிச்சுத் திரியறார். யாரோடயும் அவ்வளவாப் பேச்சில்ல. சாப்பாடுங் குறைவு வெளிநாட்டுக்குப் போப்பறன் என்டு சொல்றார்” 

“போயிட்டு வரச் சொல்லனம்மா” 

“அதான் வாப்பா, ஏஜென்சிக்காரன் எண்பதினாயிரம் கேக்கிறான். ஏயாப் போட்ல வேலயாம். பத்தாம் சம்பளம். காசு இருந்தா ஒரு மாசத்துல போகலாமென்கிறானாம்” 

“பணத்துக்கு என்னம்மா செய்யிறது….? நமக்கிட்ட இருக்கிறது எல்லாம் இந்த இரண்டு ஏக்கர் வயல் ஒண்ணுதான். அதெ முழுசா வித்தாக்கூட நாப்பது தான் தேறும். மிச்சக் காசுக்கு என்னம்மா செய்யிறது…? வேறெ ஏஜென்சியைப் பாக்கச் சொல்லம்மா” 

“பாக்கலாம்பா…. ஆனா….வேலெ கஷ்டம். கூலி வேலை. இவர் செய்யக் கூடிய ஆளா இல்ல. அதாலதான் இதே யோசிச்ச 

மகளுக்குக் கண் கலங்கத் தொடங்கிட்டுது. என்கிட்ட ஒரு பழக்கம், யாரும் பொம்பிளைகள் அழுதா, பாத்துக் கொண்டு இருக்க மாட்டன். நேரா போடியார்ட்ட போனன். மகன் வெளிநாட்டிலிருந்து ரீ.வீ., டெக்கோட வந்த சந்தோஷத்துல நல்ல குசால்ல இருந்தார். வெளிநாட்டுச் சுவிங்கம் எல்லாம் தந்தார். 

குருவித்தீவில இருந்து வந்த நெத்துத் தேங்காய் ஒரு பக்கம், தேத்தாத் துறையிலிருந்து பிடுங்கி வந்து அடையப் போட்டிருக்கிற கறுத்தக் கொழும்பான் மறு பக்கம். நெல்லும் அரிசியுமாய், இருந்த சனங்களும் இரைச்சல். முடிய போடியார் கேட்டார். 

“சொல்லு” 

“எண்பதினாயிரம் ரூவா ஏஜென்சிக்காரன் கேக்கிறான். வேறெ தொழிலும் ஒன்னும் தோதில்ல. அவரெ அனுப்பலாம் என்டு பாக்குறன்” 

“சொல்லி முடி” 

“நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி பணத்தெ புரட்ட வழி சொல்லணும்” 

“என்ன செய்யணும்?” 

“வயல் ரெண்டேக்கரையும் பிணை வெச்சிட்டு எண்பதினாயிரம் பணம் வேணும். ஒரு வருஷத்தில திருப்பிடறன்” 

“இங்க பார். நீ நல்ல நாணயஸ்தன். ஒரு நாளும் நீ மத்தவங்ககிட்ட கை நீட்டினதில்ல. நல்ல கமக்காரன். உனக்கு உதவி செய்யத்தான் வேணும். இப்ப என்ட மகன்ட வெளிநாட்டுக் காசு கொஞ்சம் இருக்கு. அவன் கொண்டு வந்த காசுக்கு ஏதாச்சும் நிரந்தரமா சொத்து வாங்குற யோசனையோட இரிக்கான். இந்த நேரம் பணம் இல்ல என்டு சொன்னாலும் அது பொய். அதுல எனக்கு விருப்பம் இல்ல. நான் சொல்றபடி செய்றியா?” 

“சொல்லுங்க” 

“வயல், பிணையெல்லாம் வேணாம். உன்னெ நான் நம்பறன். உனக்குத் தேவையான எண்பதினாயிரத்தையும் இப்ப தாறன். இந்தப் போகத்தில வெள்ளாமெ வெட்டி நாப்பது தந்திடு. மிச்ச நாப்பதும் மாசம் பத்து பத்தா தந்து முடிச்சிடு என்ன?” 

மனசுக்குள் கணக்குப் போட்டுப் பாத்தன். அவர் சொல்றது சரி மாதிரித்தான் பட்டுது. இந்த வெட்டுக்கு நாப்பதையும் அடுத்த வெட்டுக்குள்ள நாப்பதையும் கட்டிடலாம் போலத் தெரிஞ்சது. அதுக்குள்ள மருமகன் அனுப்பற பணத்தையும் மாறிக்கட்டி முடிச்சிடலாம் போலத் தெரிஞ்சது. 

“என்ன யோசிக்கிறே?” 

“ஒண்டுமில்ல அப்படியே செஞ்சிடலாம். நீங்க செய்யிற உதவிக்கு நான் நன்றி சொல்லணும்” 

அடுத்த நாளே பாஸ்போட் எடுக்கவென மருமகன் பஸ் ஏறி கொழும்புக்குப் போனார். 

புதன்கிழமை வெள்ளாம வெட்டுக்கு தோதா ஒரு கட்டு வெல்லங்கம்பு நார் வாங்கி ஓடையில ஊறப் போடுட்டு, குருவிக் காவலுக்கெண்டு வயலிலேயே தங்கிட்டன். ராவையில மூல வயலுக்கால கட்டக்காலனும் போட்டு அழிக்கிறது. இந்தக் கெழம பூரா வயலோடதான் காலம் கழியறது. 

புதன்கிழமை வெள்ளாம வெட்டினா, வியாழக்கிழமை கட்டு. வெள்ளிக் கிழமை ஜூம்ஆத் தொழுகைக்குப் பொறவு சூடு நிறுத்தினா ரெண்டு நாளையோட களத்து வேலெ எல்லாம் முடிஞ்சி கரப்பட்டிடலாம். 

மருமகப்புள்ள கொழும்புக்குப் போனார். எல்லாம் சரியாம்.இன்னொரு கெழமையால பிளைட்டாம். மெடிக்கலோ என்னமோன்டார். இந்த மொற காசும் கொண்டு போனவர். அவ்வளவு காசெக் கொண்டு போறவரெ சும்மா அனுப் பேலுமா? அதான் தம்பியையும் புடிச்சி அனுப்பினனான். 

மொழங்கால் உயரத்திக்கு ரெண்டு விரால் மீனெக் கோத்தெடுத்துக் 

கொண்டு வடிச்சல் சேனை வயல்க்காரர் வாரார். 

“எப்ப வெட்டு?” 

“புதன்கிழமை…இஞ்சபார் இந்த மொற எனக்கும் சேத்து வெத நெல்லுக்கு ‘ஏஐ’ட்ட சொல்லி வெச்சிடு” 

“பாப்பம். இந்த மொற புது நெல்லு வந்திருக்காம். அதான். நானும் வெதைக்க என்டிருக்கன். சூடடிச்சு நெல்ல என்ன செய்யிற யோசினை. லொறிக்கா ரணுக்குத்தானே?” 

“இல்ல. இந்தமொற போடியாருக்கு குடுக்கப் போறன். அவர்ட்ட வாங்குன கடன் கொஞ்சம் கெடக்கு” 

“என்ன எழுனூறு போடுவார். லொறிக்காரன் எண்ணூறு தருவான். கையில காசு. நான் லொறிக்காரனுக்குத்தான் ஒழுங்கு பண்ணியிருக்கன். உனக்கும் ஒழுங்கு பண்ணட்டா” 

“வேணாம்….. வாக்கு மாற ஏலாது” 

நீளக்கால் ஒன்றில் பனையான் மீனொன்றை கௌவிப் புடித்துக் கொண்டு, செங்கால் நாரையொன்று சடசடவென்று தலைக்கு மேலால் பறந்து போய் தூரத்து விளாத்தி மரத்தில் இருந்து மலங்க மலங்கப் பாக்குறது. 

சீனட்டி நெல்ல முதல்ல வெட்டி, புதுக் களத்தில முதல்ல சூடடிச்சு, பொலியெத் தூத்தி, வீட்ட அனுப்பிட்டன். சரியா அஞ்சு மூட, அடுத்த வெள்ளாம வெட்டு வரைக்கும் சாப்பாட்டுக்குக் காணும். 

மற்ற உப்பட்டி எல்லாம் ரெண்டு சூடு வெச்சது. மெசின் அடிக்கு, ரெண்டு மிதியாப் போட்டு அடிச்சாங்கள். இந்த மொற அவ்வளவாப் பதர் போகல்ல. தண்ணில நிண்டு வௌஞ்சது. நல்ல பொலி கண்டுச்சு. எல்லாம் நூத்திச் சொச்சம் உருப்படி. எண்பது மூடெ தேறும். சூடடி கூலி, மாட்டுவெசக்கட, மெஷின் கூலி, வட்டவிதான் கூலி என்டெல்லாம் போக, ஒரு அறுவது மூடெ தேறும்…… போடி யார்ர பாதிக்கடனெ அடைச்சுடலாம்…… 

களமொழிஞ்சி பொலியையும் ஏத்தி அனுப்பிட்டு கடைசி வண்டில்ல குட்டான். வேலையாள் கம்பு, அவதி மண்வெட்டி என்டு ஒவ்வொண்டாப் பாத்து வாரிப் போட்டுட்டு குண்டுமடுப் பள்ளத்துல கையெக் கழுவலாம் என்டு குந்தினனான். 

கலங்கல் தண்ணியில குழப்பம் இல்லாமப் படுத்திருந்த சுங்கான், திடீரென்டு திரும்பியடிக்க உசிர்போகும் வலியோடு மீன் முள் மணிக்கட்டு வரைக்கும் ஏறித் தொங்க…. 

நான் போட்ட அலறல்ல வண்டிக்காரன் ஓடிவர, அதுக்குள்ள மீன் கழட்டிக் கொண்டு கீழே விழ, புருபுருவென கை ஓடிப் பெருத்து வலிக்கத் தொடங்கிற்று, என்னையும் ஒரு சாமானைப்போல கட்டித் தூக்கிக் கொண்டு வண்டிக்காரன் வீட்ட கொண்டு வந்து போடும் வரைக்கும் எனக்கு ஒண்டுமே தெரியாது. 

முள்ளப் பிடுங்கி, அதுக்குள்ள இருந்த வழு எல்லாம் உறிஞ்சி எடுத்து, மூங்கில் தண்டெச் சீவி பூவெடுத்து, மஞ்சள் எல்லாம் வெச்சு பொரிச்சி வச்சு கட்டினதுல வீக்கம் வத்திப் போச்சு, ஆனா வலி, இந்தா உசிர் முடியப் போவது என்ட மாதிரி…… 

இதார்….? இந்த வேகத்துல படலெயத் தொறந்து கொண்டு… மருமகன்……. பின்னால தம்பி. மருமகன் மொகத்தைப் பொத்திக் கொண்டு உள்ள போனார். கதவெ மூடி தாப்பாப் போட்டுட்டு 

உள்ளே கேவுற சத்தம் வேற … 

“தம்பி என்னடா சேதி?” 

“நானா, என்னென்டு சொல்றது….? நானும் கவனமாத்தான் இருந்தன்….இடையில எப்படி நடந்திச்சோ தெரியாது….” 

“டேய்….. சரியாச் சொல்லு” 

“பாஸ்போட் தொலைஞ்சி போச்சி” 

“போகட்டும். அதுக்கா இப்படி?” 

“அதோட காசும்…” 

தம்பியும் கேவிக்கேவி அழுவுறான்…கொஞ்சமா நஞ்சமா? எண்பதினாயிரம். எத்தினெ வருஷம் செல்லும் உழைச்சி முடிக்க…? 

மகள் அழுற சத்தமும் கேக்குது…. நல்ல காலம் மனுசி இல்ல…அவவும் இதெ எப்படித் தாங்கிக்கப் போறா……? 

பழையபடி உழைக்கவும் ஏலுமா? இந்தக் கை இனி இடங் கொடுக்குமா? நெத்திக்கு மேல இருந்த கையெ எடுத்து தலைக்குக் கீழே வெச்சு அமத்தறன். நறுக்கெங்குது, இன்னமும் முள் இருக்கா….? முள் கையிலா, மனத்திலா….? 

பொட்டுப் பூச்சியொன்டு தலையெச் சுத்தி, இரும்புக் கம்பியால கூடு இலுக்கிற மாதிரி….. பொன்னி வண்டுகள், கண்களுக்குள்ள வந்து. பிசிர்கால்களால் விராண்டுகிற மாதிரி. 

மூணாம் நாள் போடியார். “எல்லாம் கேள்விப்பட்டனான். காலஞ் சரியில்ல…. கை சரியா இருந்தாலும் உழைச்சுப் போடலாம். கையெ நல்லாப் பாத்துக்கோ என்ன….நீ அனுப்பின நெல்லு நாப்பத்திரெண்டாயிரத்துக்கு இருந்திச்சு. பற்று வெச்சிட்டன். போனா முப்பத்தெட்டாயிரம். எனக்கும் கவலையாத்தான் இருக்கு…. மகன்ர காசெத்தான் மாறித் தந்தனான். உன்ட கஷ்ட காலம், காசும் களவு போச்சுது” 

எனக்கும் கண்ணெ இருட்டிக் கொண்டு வருகுது… 

“நான் சொல்றன் என்டு குறை நெனக்காதெ….. இனி மருமகன் வெளில போற ஏற்பாடும் சரி வராது. என்ன செய்றது….? எப்படியும் வாங்குன கடனுக்கு ஏற்பாடு பண்ணத்தானே வேணும்…மிச்சக் காசுக்கு வயலெ வெலையா எழுதிக்குவமா?” 

போடியார் முகம் மங்கலாத்தான் தெரியுது. 

“இல்ல போடியார், ஒரு வருஷம் பொறுத்துக்குங்க என்ட பூர்வீகச் சொத்து கைமாறப்படாது…அடுத்த போகத்துல எப்படியும் நான்……” அவதிப்பட்டு அவசர அவசரமாகச் சொல்ல நெனக்கிறன்….தொண்டைக்குள்ள தலைமுடிக் கத்தை யொன்டு சிக்குப்பட்டு திரண்ட மாதிரி வார்த்தை வராமெ…

“அப்ப நான் உறுதி எழுத மகனை அனுப்பறன்” 

போடியார் எழுந்து போறது கனவு மாதிரித் தெரியுது….

எனக்குத் தலை இருளுது…… தலையெத் தூக்க முடியல….பொன்னி வண்டும், பொட்டுப் பூச்சியும் மொகத்தையும் கண்ணெயும் விராண்டி, பிழியற் மாதிரி…… 

மனுசி, தாவளத்து மாடுகள் கட்டிக்கிடந்த வெற்று மாட்டுக் கொட்டில பாத்துப் பெருமூச்சி விடறா…. மகள், இன்னமும் மோட்டு வளையிலிருந்து அவிழ்க்காமல் நீண்டு கெடக்கும் தொட்டில் கவுறையே வெறிச்சுப் பாக்குறா……. வாசலிலே வெட்டுப் பட்டுக் கிடந்த மாதுளம் மரத்துக்குப் பக்கத்துல புதுசா வளரும் எருக்கலஞ்செடியெ மருமகன் எமை வெட்டாமப் பாக்குறாரு…. 

தலைக்குள்ள மின்வெட்டாம் பூச்சி பறக்குற மாதிரி ஒரு வெளிச்சம் எனக்கு. பூவெல்லாம் கொட்டிக் கெடக்க, மஞ்சள் வெளிலாகக் காட்சி பரவ, பெண்டுகள் குரவை இட அங்கே….. அங்கே…. என்ட உம்மம்மாட முகம் தெரியுது…

– துரைவி-தினகரன் இணைந்து நடத்திய தேசிய மட்டச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது (1998) 

– வரால் மீன்கள் (பரிசு பெற்ற சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, வானவில் வெளியீட்டகம், திருக்கோணமலை.

அமானுல்லா பெயர்: எம்.எஸ்.அமானுல்லா பிறப்பிடம்: மூதூர் பிறப்பு: மே 27 1962 படைப்பாற்றல்: இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஆளுர் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பிறப்பிடாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு கட்டுரையாளராவார். திறனாய்வு, நாட்டுப்புறவியல் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்க இவர் சென்னை புதுக்கல்லூரி நூலகராகவும், பல்வேறு அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். படைப்புகள்: சிறுகதைகள்: வரால்மீன்கள்இருதுளிக் கண்ணீர்கருவேலங்காடுகள் தாண்டி – என்பனஇவரது குறிப்பிடத்தக்க சில சிறுகதைகள். சிறுகதைத் தொகுப்பு: வரால்மீன்கள் -…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *