சிவப்பு முக்கோணம்..!
தலைவிரிகோலமாய் அழுத்த கண்ணும் சிந்தையுமாய் ஆனந்தி வீடு மூலையில் சிலை மாதிரி அமர்ந்திருந்தாள்.
அவள் எதிரில் கூட நிற்க பிடிக்காதவனாய் சாரங்கன் இறுகிய முகத்தோடு வீட்டை விட்டு வெளியேறினான்.
அவனுக்குள் அம்மா சொன்னது காதில் எதிரொலித்தது.
“இதோ பார் சாரங்கா! ஆனந்தி செஞ்சது மகா தப்பு. புருஷனை விட்டு இன்னொருத்தனோட ஓடிப்போனது ஆம்பளைக்கு கொலை செய்யக்கூடிய அளவுக்கு குத்தம். ஆனா… செஞ்சது தவறுன்னு தெரிஞ்சி , ….வேற எந்தவித அசம்பாவித முடிவும் எடுக்காம வீடு திரும்பி இருக்காள்ன்னா…. அவளை மன்னிக்கிறதுதான் மனுச தர்மம்.
இழுத்துக்கிட்டு ஓடினவன் ஆசை தீர்ந்ததும் அனுப்பிட்டான். இவளும், மோகம் முப்பது நாள்ன்னு ஆசை தீர்ந்ததும் திரும்பிட்டாள் அப்படி இப்படி வாக்குவாதம் பண்றதுக்கு இடமிருக்கு. அதெல்லாம் இவளை ஏத்துக்காததுக்குக் காரணம். அது சரி இல்லே. திருந்தி திரும்பியவளை மன்னிக்கிறது நியாயம். இதுல அருவெறுப்புக்கோ அவமானத்துக்கோ வேலை இல்லே.”
நடந்தான்.
“ஆம்பள பத்துப் பொம்மனாட்டிகளோட பழக்கம் வச்சி, சிலசமயம் அவ காலடியிலேயேப் பழியாக கிடந்து வீடு திரும்புறான். மனைவி எத்துக்கிறாள். பொண்டாட்டி போய் திரும்பினா மட்டும் புருசன் ஏன் ஏத்துக்கக்கூடாது…? ஆம்பளை செய்ஞ்சாலும், பொம்பள செய்ஞ்சாலும் குத்தம் குத்தம்தான். பொண்ணா பொறந்தாலும் அவளுக்கும் அருவெறுப்பு, அவமானத்துக்கு இடமிருக்கு. அவளும் மனுச பிறவிதான். அவள் மன்னிச்சி ஏத்துக்கக் காரணம்..? பெரிய மனசு.! ஆம்பளைக்கும் அந்த பெரிய மனசு வரணும். தப்பு, தவறுகளை மன்னிக்கனும், மறக்கனும். பெண்ணுக்குப் பெண் அம்மா வக்காலத்து வாங்குறாலுன்னு நீ நினைக்கலாம். அது தப்பு. இது என் மனசுல பட்ட நியாயம். தொறந்து சொல்லிட்டேன்.”
“தப்பு நம்ம மேலேயும் இருக்கு சாரங்கா. ரொம்ப அன்னியோன்யம், உசுருக்கு உசுர் பழக்கமானாலும் அடுத்தவனை வீட்டு படுக்கை அறை வரை பழகவிடுறது தப்பு. அது மட்டுமில்லாம நாமும் நல்லவன், கெட்டவன் பார்த்துப் பழகணும். ஆளில்லா சமயம் பார்த்து வீடு தேடி வர்றான்னா… அவன் அயோக்கியன். ”
“பாவி ! பொம்மனாட்டிக்கிட்ட வந்து என்ன சொக்குப் பொடி போட்டானோ.. ?!…இவளும் புத்தி பிசகிட்டாள் . தயங்கித் தயங்கி வந்தவளை இதோ வீட்டுக்குள்ள கொண்டு வந்துட்டேன். மன்னிச்சுடு.”
‘என்ன செய்யலாம்…? ‘ சாரங்கன் யோசனையுடன் இன்னும் நடந்தான்.
அம்மா சொல்வது என்னதான் நியாயமென்றாலும் ஒருவனுடன் ஓடிப்போய்த் திரும்பியவளை மன்னிப்பதென்பது எவ்வளவு பெரிய மானக்கேடு!
அவளுடன் வாழ்வதெப்படி..?! – குழப்பத்துடன் நடந்தான்.
அதே குழப்பத்துடன் சிறிது நேரத்தில் வீடு திரும்பினான்.
“என்னப்பா முடிவு…”அம்மா அவன் தலையைக் கண்டதுமே எதிரில் வந்தாள் , கேட்டாள்.
‘ என்ன சொல்ல…?…. ‘ – சாரங்கன் மெளனமாக இருந்தான்.
தாய் கமலா மகனை ஏற இறங்க பார்த்தாள்.
“அவரை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க அத்தை. ஆறோ, குளமோ விழுந்து சாகிறேன்னு சொல்றா. பொண்ணு பாவம் சும்மா விடாதுடா..! “கமலா…தழைவாய்ச் சொல்லி மகன் அருகில் வந்தாள்.
‘ ரெண்டு பச்சை மழலைகளை ஈவு இரக்கமில்லாம விட்டுப் போனாளே. அது மட்டும் பாவமில்லையா..? ‘ – சாரங்கனுக்கு உதடு துடித்தது.
வாயைத் திறக்கவில்லை.
“உன் மௌனம் ரொம்ப பயமா இருக்கு சாரங்கா. உண்டு, இல்லேன்னு மனசுல பட்டதைச் சொன்னாத்தான் உன் உடம்புக்கும் உள்ளத்துக்கும் நல்லது. குழப்பம் ஆபத்து. இல்லே… இன்னொன்னு செய். சந்தேகப்பட்டு ராமன் சீதையைத் தீக்குளிக்க வச்சான். ஏன்..? சரி, தப்பு எதுவா இருந்தாலும் எல்லாம் தீயில் எரிந்து காணாமல் போயிடும் என்கிற நினைப்பு. அது மாதிரி இந்தத் தப்புக்கு உன் மனசுல பட்டது தீர்ப்பைச் சொல்லு. ? தண்டனைக் குடுத்து கழுவி ஏத்துக்கோ..”நிறுத்தினாள்.
சாரங்கன் பேசவே இல்லை.
கமலா விடவில்லை.
“சாரங்கா ! உனக்காக இல்லேன்னாலும் உன் புள்ளைங்களுக்காகவாவது ஏத்துக்கனும். அதுங்க பொட்டைப் புள்ளைங்கப்பா. பொண்ணுங்க தேவை அறிஞ்சி தாய்தான் சரியா வளர்ப்பாள். ஆனந்தி மேலேயும் உனக்கு பாசமிருக்கு. அதான்…நாங்க எவ்வளவு வற்புறுத்தியும் நீ அடுத்த திருமணத்துக்குச் சம்மதிக்காம திரிஞ்சே.
குழந்தைகளுக்குத் தாய் வேணாம். உனக்கு மனைவி வேணாம். ஆனா… ஒரு உசுர் வீணா மடியறதை நீ கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கனும்.மனசு உருகனும்.”
அம்மா குரலில் பரிவு, பச்சாதாபம் இவனை குழப்பியது. அம்மா படிக்காதவளாய் இருந்தும் எதிரி வாயடைக்கிற மாதிரி என்ன சாமார்த்தியமாகப் பேசுகிறாள்..?!!… ஆச்சரியப்பட்டான்.
தவறிவிட்ட ஒருத்தியை உதறித்தள்ளுவதோ, ஒதுக்கி வைப்பதோ, விவாகரத்து செய்வதோதான் நியாயமா..? திருந்தி திரும்பி வந்தவளை மன்னித்து, மறந்து ஏற்பது நியாயமில்லையா..? திருந்திய உள்ளத்துக்கு என்ன மதிப்பு மரியாதை..? – இன்னும் எழுந்திரிக்காமல் இருந்த இடம் விட்டு அசையாமல் இருக்கும் ஆனந்தியை அடிக்கண்ணால் பார்த்தான்.
ராமனை உதாரணம் காட்டி அம்மா சொன்னதை போல்.. என்ன தண்டனை கொடுத்து ஏற்பது..?
‘எனக்குத் தாரமில்லாமல் குழந்தைகளுக்குத் தாயாய் வீட்டோடு இரு ! ‘ – சரியா..?
எந்தவித உறவு, உரிமை இல்லாமல்ஒருத்தி எப்படி வெறுமனே வேலைக்காரியை இருக்க முடியும்…?
இருந்தாலும் இந்த தண்டனை எப்படி சரி….? மன்னிப்பு, மறத்தலுக்கு என்ன மரியாதை..? ‘ – நினத்தவனுக்குப் பளிச்சென்று வீட்டுக்கு எதிரே சுவரிலுள்ள உள்ள சிவப்பு முக்கோணம் கண்ணில் பட்டது.
மனசுக்குள் பளிச் மின்னல் !
‘இதுதான் சரி ! ‘ – எழுந்தான்.
‘ஆனந்தி ! உனக்கு ஆண் பிள்ளை மேல் ஆசை, கொள்ளைப் பிரியம். அது உனக்கு வேணாம். நமக்குக் கிடைக்காது ! ‘ என்று மனதில் நினைத்து…
“அம்மா ! ஆனந்தியை மன்னிக்கிறேன், தப்பை மறக்கிறேன். அவள் வீட்டோட இருக்கட்டும் ! “சொல்லி மருத்துவமனை நோக்கிச் சென்றான்.