சில சிணுங்கல்கள், ஒரு ஈரானியப்பெண் மற்றும் நான்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,755
பனிக்காலம் ஆரம்பித்துவிட்டது என்பதை காது மடல்களில் உரசிய வாடைக்காற்று உணர்த்தியது. நேற்றைப்போலவே இன்றும் லின்ட்புலோம்ஸ்வேகன் போக பேருந்திற்காக 8.45 மணி வரை காத்திருக்க வேண்டும், ரயிலை விட்டு இறங்கி நேராக பயணியர் காத்திருப்பு அறைக்குப் போனபோது அங்கு ஏற்கனவே போன வாரம் எனக்கு அறிமுகமான ஈரானியப் பெண் உட்கார்ந்திருந்தாள்.கையில் புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தவள் என்னைப்பார்த்து சினேகமாகப் புன்னகைத்தாள். அவள் கையில் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்ததால், பேச்சை ஆரம்பிக்க எனக்குத் தயக்கமாக இருந்தது.
அவளிடம் இருந்து சில அடி இடைவெளிகள் விட்டு அமர்ந்துகொண்டு “அரைமணி நேரம் போகவேண்டுமே!!! “இந்த பெண் புத்தகத்தை கீழே வைத்துவிட்டு என்னுடன் பேசக்கூடாதா என யோசித்துக்கொண்டே, கைபேசியில் இருந்த கீர்த்தனாவின் பழைய குறுஞ்செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.
எங்களுக்குப்பின்னால் இருந்த பெஞ்சில் இருந்து அழுகை கலந்த சிணுங்கல்கள் வர,திரும்பிப்பார்க்கலாம் என நினைத்து வேண்டாம் என விட்டுவிட்டேன். ஒரு ஆணின் குரல் மட்டும் ஸ்விடீஷில் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க,மற்றொரு குரல் அழுகை விசும்பலுடன் இருந்தது. முன்னொருமுறை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில், கீர்த்தனாவின் அழுகையைக் கட்டுப்படுத்த சமாதானம் செய்த முயற்சிகள் ஏனோ நினைவுக்கு வந்தன. கீர்த்தனாவிற்கு முக்கின் நுனிமேல் கோபம் வரும். மன்னிப்புப் படலத்தை ஆரம்பித்தால், பனி போல உருகி ஒரு குழந்தையைப்போல மாறிவிடுவாள்.
பின்னால் இருந்து வரும் சிணுங்கல்களை அந்த ஈரானியப் பெண் கவனிக்கிறாளா எனப்பார்த்தேன்.ம்ஹூம் அவள் காதில் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தாள். நேரம் 8.45 யை நெருங்க வேறுசிலரும் வெளியே அடிக்கும் குளிரின் தாக்கத்தை தவிர்க்க காத்திருப்பு அறையினுள் வந்து உட்கார்ந்தார்கள். சிணுங்கல் சத்தம் போய் முத்தங்கள் பரிமாறிக்கொண்டன போல, யாரும் அவர்களை ஒரு பொருட்டாய் பார்க்கவே இல்லை.
கண்ணாடி சன்னல் வழியாக, பேருந்து வருவது தெரிய, ஈரானியப் பெண் எழுந்தாள். அவளுடன் நானும் எழுந்தேன். இந்த நாட்டில் இப்படி பொது இடத்தில் காதல் இயல்பானதென்றாலும், எனக்கு முதன்முறை என்பதாலும் ,ஒரு ஆர்வத்தில் அந்த அறையை விட்டு வெளியே வரும்முன் அவர்களைத் திரும்பிப் பார்த்தேன், அட அவர்கள் இருவரும் ஆண்கள்.
பின்குறிப்பு : பேருந்தில் அந்த ஈரானியப் பெண் என்னருகில் வந்தமர்ந்தாள்.
– அக்டோபர் 09, 2008