சிலை – ஒரு பக்க கதை
ஒரு சனிக்கிழமை அதிகாலை. தந்தையும், மகனும் சாலையோரம் நடந்துசென்று கொண்டிருந்தனர். சிறுவன் கேள்விகளாய் கேட்டு கொண்டே நடந்தான்.
“அப்பா.. ஏம்ப்பா காந்தி தாத்தா சிலைய நடுரோட்டுல வச்சிருக்காங்க”
“அவரு நம்ம இந்தியாவுக்கு வெள்ளைக்காரங்களோட போராடி சுதந்திரம் வாங்கி தந்தாரில்ல…நாட்டுக்கு நல்லது செஞ்சவர். அதனால அவருக்கு மரியாத செய்ய, மக்கள் மறக்காம இருக்கவும் சிலை வச்சிருக்காங்க”
“இல்லப்பா… எனக்கு பிடிக்கல”
“ஏண்டா கண்ணு?”
“பாவம்பா…அவரு சட்டை கூட போடல. ஆனா வெயில்ல நிக்கணும், மழையிலையும் நிக்கணும். பல நேரம் காக்கா குருவியெல்லாம் அவர் தலையில உட்கார்ந்து டூ பாத்ரூம் போயிடுது. நாட்டுக்கு நல்லது செஞ்சார்னு சொல்றீங்க. அப்புறம் எதுக்குப்பா இந்த தண்டனை!”
தந்தையிடம் பதில் இல்லை.