கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2025
பார்வையிட்டோர்: 1,651 
 
 

(1949ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

5. முதல் நாள்

அதிகாலை. சுந்தரவடிவேலுவின் பங்களா. இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. குழந்தைகளின் அறை. குஞ்சுவுடைய தாயாரின் பெரிய படம் ஒன்று தொங்குகிறது. 

அறையின் ஒரு புறத்தில் குஞ்சுவின் படுக்கை. மற்றொரு புறத்தில் ராஜா…தூங்குகிறான். 

குஞ்சு மெதுவாக எழுந்திருக்கிறாள். தத்தித் தடுக்கி, போர்வையைத் தள்ளிவிட்டுக் கீழே இறங்கி நின்று தானே சிறு பாவாடையை எடுத்துக் கட்டிக்கொண்டு. சட்டையைப் போட்டுக்கொள்ள முயன்று முடியாமல், கீழே போட்டு விடுகிறாள். 

தாயார் படத்தின் முன் நின்று, “அம்மா அப்பாக் காப்பாத்து, ராசாக் காப்பாத்து, என்னைக் காப்பாத்து” என்று விழுந்து கும்பிடுகிறாள். காரியம் முடிந்த மாதிரி, மூலையில் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருந்த எஞ்சினிடம் போகிறாள். ஏதோ ஞாபகம் வந்தவள்போல, படத்திடம் திரும்பிவந்து, ‘சித்தியைக் காப்பாத்து’ என்று படத்திற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ரயில் வண்டி சகிதம் சட்டை யையும் தூக்கிக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு மாடிப் படிகள் வழியாகப் பங்களாவின் பின்புறம் நோக்கிப் போகிறாள். 

வேலைக்காரன் குழாயைத் திறந்து எஜமானுக்குக் குளிக்கத் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கிறான். சன்னலில் வைத்திருக்கும் பல்பொடியை எடுத்துக்கொண்டு போய்த் தானே பல்த் தேய்க்க ஆரம்பிக்கிறாள். எல்லாம் ரொம்ப அவசரமாக நடக்கிறது.வாய் கொப்பளித்தாச்சு. பாவாடையைக் கொண்டு முகத்தைத் துடைத்துக்கொண்டு உள்ளே போக யத்தனிக்கிறாள். 

அப்பொழுது ஸ்நான அறையில் தகப்பனார் துண்டைக் கட்டிக்கொண்டு தலையில் ஒரு சொம்பு ஜலத்தை ஊற்றுவதைப் பார்த்து விடுகிறாள். 

அக்குளில் இருக்கும் சட்டை எறியப்படுகிறது. இடுப்புப் பாவாடையும் கீழே விழுகிறது. எஞ்சின் சகிதம் தகப்பனார் காலடியில் போய் நின்றுகொண்டு, அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அவர் தனது தலை வழியாக குளிர்ந்த ஊற்றுவது இவளையும் நனைக்கிறது. ஜலமாகையால் உடல் வெடவெடக்கிறது. ‘சளுக்கு சளுக்’ என்று சிரித்துக்கொண்டு, “எனக்கும் அப்பா!” என்கிறாள். 

முகத்திலிருந்த சோப் நுரையால் கண்ணை மூடியிருந்த சுந்தரவடிவேலு முகத்தைக் கழுவிக்கொண்டு, குனிந்து பார்த்து, “நீ எங்கடி வந்தே, பச்செத் தண்ணிலே குளிக்கப்படாது” என்கிறார். 

“நான்தான் குளிச்சாச்சே; சோப்போடு” என்று கையை நீட்டுகிறது குழந்தை. 

அவர் உட்கார்ந்துகொண்டு குழந்தையைக் குளிப்பாட்டுகிறார். குழந்தை எஞ்சினுக்குக் குளிப்பாட்டி அதற்கு சோப் போடுகிறது. 

“இதோ பார் குஞ்சு எஞ்சின் எங்கேயாவது சோப் போட்டுக் குளிக்குமோ?” என்கிறார். 

”குளிக்குமே…” என்கிறது குழந்தை. 

“எங்கே பார்த்தே…!” 

“இதோ” என்று தன்வசம் உள்ள எஞ்சினைக் காட்டுகிறது. 

அவர் சிரித்துக்கொண்டு அவளைக் குளிப்பாட்டி உலர்ந்த துண்டால் துடைத்துத் தூக்கிக்கொண்டு வருகிறார். 

என்ஜின் குழந்தையின் கையில் இருக்கிறது. அதன் நனைந்த கயிறு சுந்தரவடிவேலுவின் முதுகில் நனைக் கிறது. “அது என்னடி பின்னாலே?” என்கிறார். 

குழந்தை, கப்பியில்லாக் கிணற்றில் தாம்புக் கயிற்றுடன் குடத்தைக் குனிந்து கையால் வலித்து இழுப்பது போலத் தூக்கிக்கொண்டு “கயிறு அப்பா!” என்கிறது. 

அவர் குழந்தையை அறைக்குள் எடுத்துக்கொண்டு  போய் சலவை செய்த சட்டை பாவாடை எல்லாம் அணிவித்து, தலையைச் சீவிவிட்டு, முகத்திற்குப் பவுடர் போட்டு விடுகிறார். 

“இனிமே நீ யாருகிட்ட போய்ச் சட்டை போடச் சொல்லணும் தெரியுமா – சித்தி கிட்டெ!” என்று சொல்லிக் கொண்டு அவள் கன்னத்தைத் தட்டுகிறார். 

“மாட்டேன்!” 

“பின்ன என்ன செய்வே?” 

“நானே போட்டுக்குவேன்.” 

“நான் போட்டுவிடட்டுமா?” 

”வாண்டாம்.” 

அச்சமயம் பார்த்து மரகதம் காப்பி பலகாரங்களுடன் உள்ளே வருகிறாள். “நீங்கள் இன்னும் உடுத்தி முடியலியா?’ என்று சிரித்துக்கொண்டு சொல்லுகிறாள். 

சுந்தரவடிவேலு அவசர அவசரமாக ஷர்ட்டை அணிந்து கொண்டு தலையை வாரிக் கொள்ளுகிறார். அவ்வளவு அவசரம் -ஈரத்துணிகள் யாவும் கீழே எறியப் படுகின்றன. 

குழந்தை பொறுக்க ஆரம்பிக்கிறது. அதன் முகம் ‘ஊம்’ என்றிருக்கிறது. 

அதைக்கண்ட மரகதம், “என்ன புத்திசாலி” என்று கொண்டு குழந்தையை ஒரு கையில் எடுத்த வண்ணம் மறு கையால் ஈரத்துணிகளை எடுத்துக் கொண்டு, “குஞ்சு, நாம ரெண்டுபேரும் சாப்பிடுவோமாம்!’ என்கிறாள். 

குழந்தை பேசாமலிருக்கிறது. 

மரகதம் குழந்தையை எடுத்துக் கொண்டு சமையல் கட்டுப் பக்கமாகப் போகிறாள். 

சமையல் கட்டில் ராஜா தயிரிட்டுப் பிசைந்த பழைய சாதத்தை வைத்துக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறான். 

இதைக் கண்டதும் குழந்தை, “ஐயோ, தோச்சை திங்கலே!” என்கிறது. 

குஞ்சுவைத் தன்முன் உட்கார வைத்துக்கொண்டு, “கண்ணு! ஒரே ஒரு உருண்டை பழையது சாப்பிடு. அப் புறம் காப்பி தரேன்…நல்லாத் தயிரு போட்டுப் பிசைந் திருக்கிறேன் பாரு!” என்று எடுக்கிறாள். 

“நாங்கள் பழையது தின்கிற சாதியில்லே!’ என்கிறது குழந்தை. 

மரகதம் திடுக்கிடுகிறாள்; பிறகு சிரித்துக்கொண்டு, எவ்வளவோ செல்லமாக மல்லுக்கட்டியும் ‘தூ! தூ!’ என்று துப்பி இரைத்து விடுகிறது. 

குழந்தையின் வாயைத் துடைத்துவிட்டு பாட்டிலில் காப்பியை ஊற்றிக் கொடுக்கிறாள். குழந்தை பாட்டிலை வாங்கிக் கொண்டு உட்கார்ந்து கூடச் சாப்பிடாமல் வெளியே புறப்பட்டு விடுகிறது. 

இந்த ரகளையில் ராஜா சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு ஓட்டம் பிடிக்கிறான். அனுைக்குத் தோசை கூட வேண்டாம் என்றாகி விட்டது. 

இந்தக் கூத்தைக் கண்டு திடுக்கிடுகிறாள் மரகதம்; ஆனால் சாவதானமாகத் தனக்குப் பழையதை வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறாள். குழந்தையின் அட்டகாசம் அவள் மன நிம்மதியைப் போக்கி விட்டதால் சாப்பாடு செல்ல மாட்டேன் என்கிறது. 

சமையல்காரனை அழைக்கக் கூடாது என்று விட்டுத் தானே வேலைகளை ஆரம்பிக்கிறாள்… 

வேலைக்காரியைக் கூப்பிட்டு அரங்கில் இருந்த குத்து விளக்கைத் தேய்த்துக் கழுவி நடு ஹாலில் வைக்கும்படி உத்திரவிடுகிறாள். தினசரி சாயங்காலம் விளக்கு பூஜை நடத்துவதற்குத் தயாராக இருக்கி றது. 

சுந்தரவடிவேலு சாயங்காலம் கலாசாலையிலிருந்து திரும்பி வருகிறார் இன்று சற்று நேரமாகிவிட்டது. பொழுது மங்கும் சமயம் அவருடைய கார் பங்களா கேட்டில் திரும்பியது தான் தாமதம்… 

குழந்தைகள் இரண்டும் மோட்டார் வண்டியிலேயே போய் விழுந்து விடுவது போல் படிகளிலிறங்கி “அப்பா! அப்பா!’ எனக் குதூகலித்துக் கொண்டு ஓடி வருகின்றன. 

ராஜா கையில் ஒரு சின்ன Foot ball. குஞ்சுவின் என்ஜின் தரையில் மல்லாக்காக இழுபடுகிறது… 

அவர் வண்டியிலிருந்து இறங்கி நின்றதுதான் தாமதம். ஆளுக்கொரு காலைப் பிடித்துக் கொண்டு மரமேறுகின்றனர். குஞ்சுவை வாரி எடுத்துத் தோள்மேல் சாத்திக் கொண்டு, ராஜாவைக் கையில் பிடித்துக் கொண்டபடி வீட்டுக்குள் போகிறார். 

நடு ஹாலைத் தாண்டித் தான் வசிக்கும் அறைக்குள் செல்லுகிறார். அங்குள்ள அலமாரியைத் திறந்து, குஞ்சு வின் கை ஒன்றுக்கு ஒவ்வொரு பிஸ்கோத்துக் கொடுக் கிறார். பையன் “அப்பா, அப்பா’ எனப் பையையே திறந்து நீட்டுகிறான். 

“ரொம்ப நேரமாச்சு, ராத்திரிச் சாப்பிட வேண்டாமா” என்று கொண்டு அவனுக்கும் அதைப் போலவே இரண்டு மட்டும் கொடுக்கிறார். பிஸ்கட் சாப்பிடும் குஞ்சு வைப் பார்த்து “ஏண்டி, கண்ணு காப்பி சாப்பிட்டாச்சா, எனக்கு ரொம்பப் பசிக்கிறதம்மா. ஒரே ஒரு துண்டு எனக்குக் கொடுக்கிறியா’ எனக் கெஞ்சுகிறார். குழந்தை கையிலிருப்பதை ரொம்பச் சிரமப்பட்டு ஒடித்து ஒரு பொடியை மட்டும் (அதுதான் அதன் பலத்தில் விண்டது) தகப்பனார் வாயில் வைக்கிறது. “அப்பா, இவ்வளவு போதும். வயிறு ரொம்பிப் போச்சு” என்று குழந்தையை முத்தமிட்டுக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து வீட்டுக்குப் பின்புறம் நுழைகிறார்.. 

“அப்பா வந்ததும் காப்பி சாப்பிடலாம் என்று அம்மா சொன்னாங்க” என்று கொண்டே அசை போடுகிறான் ராஜா. 

உள்ளே இரண்டாவது கட்டில் மரகதம் குத்து விளக்கின் முன் விழுந்து நமஸ்கரித்துக் கண்ணை மூடியபடி ஏதோ மானஸீகமாகப் பிரார்த்தனை செய்வதைப் பார்க் கிறார். மறுபடியும் விழுந்து நமஸ்கரித்து, விளக்கைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு திருநீற்றை நெற்றி யில் அணிந்து கொண்ட பின் திரும்பிப் பார்க்கிறாள். 

பூஜையை எதிர்பாராததினால் அதில் ஒரு ஆச்சரியமும் பிரமிப்பும் பரவசமும் கொண்ட சுந்தரவடிவேலு குழந்தை களுடன் நடையண்டையில் நின்றுகொண்டிருக்கிறார். 

மரகதம் சிரித்துக்கொண்டு “நீங்கள் வந்தது எனக்குத் தெரியும்’ என்று நெருங்கி வந்து, குழந்தை குஞ்சுவின் நெற்றியில் விபூதியை இட்டு, அதன் வாயில் பூஜைக்கு நிவேதனமாக வைத்த திராட்சைப் பழம் ஒன்றைப் போடு கிறாள். திருநீற்றுப் பொடி கண்ணில் விழுவதால் கண்ணை மூடித் திறந்துகொண்டு நிற்கிறாள் குஞ்சு; வாய் அசை போடுகிறது. 

”ரொம்ப நேரமாச்சே, காப்பி எடுத்துக்கொண்டு வாரேன்; நீங்க இன்னம் என்ன இந்த வேசத்தைக் களை யாமே நிக்கிறளே” என்கிறாள் மரகதம். 

“நாங்க வெளியே உட்கார்ந்திருக்கோம்; நீ அங்கே கொண்டு வந்து விடேன்” என்று கொண்டே குழந்தைகளுடன் வெளியே வாசல் பக்கம் வருகிறார். 

வேலைக்காரனிடம் நாற்காலிகளை எடுத்துப் போடச் சொல்லிவிட்டுக் குழந்தைகளுடன் பந்து விளையாடுகிறார். 

ஏகக் கூச்சலும் இரைச்சலும் போட்டுக்கொண்டு பந்தை அடிப்பதில் ஏமாறுகிறது குஞ்சு. ராஜா பந்தை உதைக்கிறான். இடைமறிக்க, குஞ்சு ஓடுகிறது. 

மரகதம் காப்பி பலகாரவகைகளை எடுத்துக்கொண்டு வந்து மேஜை மீது வைக்கிறாள். 

“ஆட்டம் குளோஸ், play over! காப்பி சாப்பிட வாருங்கோ” என்று கோஷித்துக் கொண்டு குழந்தைகளும் தகப்பனாரும் நாற்காலிகளுக்கு ஓடி வருகின்றனர். குஞ்சு முக்கி முயன்று ஒரு நாற்காலியில் ஏறி உட்கார்ந்து கொள்ளுகிறது. அவளுக்கும் மரகதத்திற்குமிடையே ராஜா உட்காருகிறான். 

சுந்தரவடிவேலு முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு, “இவ்வளவு மணி நேரத்திற்கப்புறம் இத்தினி பக்ஷணம்…! ராத்திரி சாப்பிடக்கீப்பிட வேண்டாமா? எனக்கு வெறும் காப்பி போதும்!” 

”கொஞ்சம் நேரம் கழித்துப் பசிக்கிறப்ப சாப்பிடுகிறது; எட்டு மணிக்குத்தான் சாப்பிடனும் என்று சாஸ்திரத்திலே எழுதியா வச்சிருக்கு!’ என்கிறாள் மரகதம். 

“நமக்காகக் குழந்தைகள் முழித்துக் கொண்டிருக் குமா?” என்று குழந்தைகளுக்குப் பலகாரங்களில் ஓரொரு துண்டு கொடுத்துவிட்டுக் காப்பியைக் கொடுக்கிறார். தம் ளரில் பாதி முகம் மறைய நாற்காலியில் நின்று கொண்டு காப்பியைக் குடிக்கிறது குஞ்சு. தம்ளரில் குடிப்பதால் சட்டையில் வழிகிறது. “அவளுக்குப் பாட்டிலில் கொடுக்கக் கூடாது?” என்கிறார் சுந்தரவடிவேலு. 

பையன் அவர் பக்கமாக வந்து காதோடு காதாக, ”எனக்குப் பழையது வாண்டாம் அப்பா, அம்மாகிட்டச் சொல்லு” என்கிறான். 

அவர் சிரித்துக்கொண்டு, “என்ன மரகதம், குழந்தை களுக்குப் பழையதா குடுத்தே! பிடிக்கலேன்னா விட்டுடு!”” என்கிறார். 

“காலம்பரத் தயிரும் பழையதும் சாப்பிட்டாத் தானே உடம்புக்கு பெலன்” என்கிறாள் மரகதம். 

“பலத்துக்கு வேண்டுமானால் டானிக்கிருக்கிறது…… வேண்டாம் என்றால் விட்டுடு-சரி, நாளாண்ணைக்கு ஒரு இடத்துக்குப் போகணும்; சாயங்காலக் காப்பிக்குக் கூட வரமாட்டேன். இப்போ உள்ளே போனதும் ஒரு கடுதாசிக் கட்டு எடுத்துத் தரேன்; அதெ ஞாபகமா நான் போரப்ப என் கைப் பையிலே வச்சுப்புடு… எனக்கு இப்பொகிப்போ மறதி ஜாஸ்தியாகுது…” என்கிறார். 

“ஆகட்டும்” என்கிறாள் மரகதம். 

நன்றாக இருட்டி விடுகிறது. 

“அப்பா, அப்பா! ஒரு கதை சொல்லு” என்கிறான் ராஜா…… 

“என்ன கதை வேணும்? குஞ்சு நீ சொல்லு!” 

”குருவிக் கதை” என்கிறது குழந்தை. 

“ஒரே ஒரு மரத்திலே சின்னக்குருவி இருந்துதாம். கூண்டிலே உக்காந்துக் கிட்டு எட்டி எட்டிப் பாத்துதாம். எட்டி எட்டி…… பாத்துதாம்” என இரு குழந்தைகளும் கோஷிக்கின்றன. 

“திடீலுன்னு மழையும் காத்துமா அடிச்சுது, இடி இடிச்சுது; பளிச்சு பளிச்சுன்னு மின்னிச்சு; பெரிய காத்தும் மழையுமா அடிச்சுது. அந்தச் சின்னக குரிவிக்குஞ்சு நனஞ்சே போச்சு. குரிவிக் கூண்டிலே இருந்து எட்டி எட்டிப் பார்த்துதாம்…அப்பொ ஒரு கொரங்கு நனைஞ்சிக் கிட்டு உக்காந்திருந்துதாம்.” 

“கொரங்கு யார் மாதிரிடா இருந்துது.’ 

“ராசா மாதிரி” என்கிறது குஞ்சு. குஞ்சு மாதிரி என்று கத்துகிறான் ராஜா. 

“அப்புறம் குருவிக் குஞ்சு “அண்ணே அண்ணே! “நீ ஏன் கூண்டு கட்டிக்கப்படாது?” என்று கேட்டுதாம். குரங்கு ஒரே பாச்சல்லே வந்து கூண்டெப்பிச்சே எறிஞ்சு போட்டுதாம்…குரிவியும் குரங்கும் மழைலெயும் காத்துலெ யும் நனைஞ்சுகிட்டே உட்கார்ந்திருந்துதாம்!” 

மரகதம் தனிமையாக விடப்பட்டவள் போல ஏதோ யோசனையிலாழ்ந்திருக்கிறாள்… 

“கதை காட்டிலே, எலிமோட்டிலே, நீயும் நானும் வீட்டிலே…” 

“பொசலடிச்சதாம்…” என மறுபடியும் ஆரம்பிக்கிறது குழந்தை… 

6. புயல் வந்த விதம்

திடீர் என்று காற்றும் மழையும் கவிந்து அடிக் கிறது. கோடைப் புயல் மின்னலும் இடியும் கிடுகிடு பாய்கின்றன. 

மத்யானம்; சுமார் மூன்று மூன்றரை மணி. இருந் தாலும் புயல் மழைக் கடுமையால் வீட்டுக்குள் வெளிச்சக் குறைவு. 

குழந்தைகள் மாடியில் உள்ள தம் அறையில் விளை யாடிக் கொண்டிருக்கின்றன. ஆளுக்கொரு சாக் (Chalk) கட்டி எடுத்துக் கொண்டு படம் போட்டு விளையாடு கின்றன. 

குஞ்சு கையில் உள்ள சாக்குக் கட்டியைக் கரும் பலகையில் மாவு அரைக்கிறது போல இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு வாய் ‘ஹோ! ஹோ!’ என்று சப்திக்க மேலும் கீழுமாகத் தேய்த்துக் கண்ட மேனியில் அழுத்தி அழுத்திக் கோணல் மாணலாகக் கோடு கிழித்துக் கொண்டிருக்கிறாள். மற்றொரு ஓரத்தில் நின்று கொண்டு கரும்பலகையில் ‘பொம்மை’ போட்டுக் கொண்டிருக்கிறான் ராஜா. 

”ஐயே! என்னடி இப்படிச் சாக்குக் கட்டியைப் போட்டுத் தேய்க்கரே?” என்கிறான் ராஜா. 

”படம் போடுரேண்டா!” என்று விட்டு மறுபடியும் மும்முரமாகத் தேய்க்கிறாள். 

“என்ன படமாம்?” 

“மளெப் படம், மளெபெயிதுபாரு அந்தப்படம்!” என்று விட்டுக் கரும்பலகையில் விட்டுச் சிறிது பின்னுக்கு எட்டி நின்று தன் திறமையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மறு படியும் வேலையில் ஈடுபடப் போகிறாள். 

“ஏடி நாம் போட்ட படத்தை பார்த்தியா- அப்பாவும் அம்மாவும்!’ என்றான் ராஜா. 

“அம்மா இப்படித்தான் இருக்காங்களாக்கும்”- மேலே தாயின் படத்தைப் பார்த்துக்கொண்டு, “நீ இப்பிடியாம்மா இருக்கே!” என்கிறது குழந்தை. 

“நம்ம அம்மா இல்லடி-இந்த அம்மா…” என்று விளக்குகிறான் ராஜா. 

“ஏ ராசா! ராசா!” என்று கூப்பிட்டுக்கொண்டு உள்ளே நுழைகிறாள் மரகதம். 

“என்னாம்மா!” 

“பால்காரன் வரக்காணோம். நம்ம வேலைக்காரனும் போக்களிஞ்சு போனான்.நீ போய் அவனைக் கொஞ்சம் சத்தம் காட்டி விட்டு வரமாட்டியா,-அப்பா வார நேர மாச்சு; காப்பி போட வேண்டாம். கொடையை எடுத்துக் கிட்டுப்போ, -பைய, பதனமா போயிட்டுவரணும்!” 

“ஆகட்டும் அம்மா!” என்று கொண்டு புறப்படுகிறான். 

இருவரும் கீழே இறங்கி வருகிறார்கள். மரகதம் வாசல் வரை வந்து குடையை விரித்து அவன் கையில் கொடுத்து விட்டு உள்ளே போகிறாள். 

இரண்டு கைகளாலும் நெஞ்சுடன் சேர்த்து அமுக்கிப் பிடித்துக்கொண்டு சிறுவன் தள்ளாடித் தள்ளாடி நடக் கிறான். எதிரே வருவதையும் கவனிக்கமுடியவில்லை. குடை மழைக்குப் பாதுகாப்பாக இருப்பதற்குப் பதிலாக காற்றின் வேகத்தால் அவனுடைய சக்தியை முழுவதும் உறிஞ்சி விடும் பேயாக மாறிவிடுகிறது. 

தள்ளாடித் தள்ளாடி நடக்கிறான். உடல் முழுவதும் நனைந்து தலையும் ஈரம் சொட்டிக் கண்களை மறைக்கிறது. 

இந்த நிலையில்…! 

ரஸ்தாவில் கவனிக்காமல் குடையைத் தாழ்த்திப்பிடித் துக்கொண்டு, இவன், சாதுவாக நின்ற பசுவை அணுகி விடுகிறான். பசு வெறித்துக் கொள்ளுகிறது. வாலை முறுக்கி உயர்த்திக்கொண்டு இவனை விரட்டுகிறது. முதலில் பையனுக்கு மோதலின் காரணம் தெரிய வில்லை. பிறகு மாடு தென்படுகிறது. பயத்தில் கிறீச்சிட்டுக்கொண்டு ஸ்தம்பித்து நிற்கிறான். பயம் அவனை உந்த மூளை குழம்பித் தெதிகெட்டு ஓடுகிறான். பொத்தென்று விழுந்தவன் குடைப்பிடியை விடாமல் எழுந்திருக்கிறான். 

தெருவில் நின்ற யாரோ ஒருவர் “குடையைப் போட்டு விடு’ என்று கத்தி எச்சரிக்கிறார். உதவிக்கு வரவில்லை. குடையைப் போட்டு விட்டு ஓடுகிறான். விழுந்ததில் ஊமையடி இருந்தும். பயமே வேகத்தைக் கொடுக்கிறது… ஓடுகிறான். 

மாடு குடையை மிதித்து நசுக்கி ஒடித்து மோந்து பார்த்து விட்டுச் சாந்தமாக நிற்கிறது. 

பையன் ஓடுகிறான். 

வீட்டில் வாசல் படியில் பாலுக்காகக் காத்து நிற்கும் மரகதத்திற்கு இவனது பயனற்ற வரவு கடுகடுப்பையும் சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது. கணவனுக்குக் காப்பி தயார் செய்ய வேண்டும் என்ற பிரமாதத்தில் குடையைத் தொலைத்து விட்டு வந்தது பெருங் குற்றமாகப்படுகிறது. பால்காரனிடம் சொல்லிப் பாலை வாங்கிக் கொண்டுதான் வீட்டுக்குள் வரலாம் என்று விடுகிறாள். 

பையனுக்கு மாட்டுப் பயம். தொழுவுக்கே போகமாட் டேன் என்கிறான். இருவரும் நடு ஹாலில் நின்று தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

அப்பொழுது வாசலில் திருதிருவேன்று கார் வந்து நிற் கிறது. ரௌத்திராகாரமாக சுந்தரவடிவேலு வீட்டுக்குள் நுழைகிறார். 

”ஒருவேலை சொன்னா அதைச் செய்ய இந்த வீட்டில் ஆள் இல்லை” என்று இரைந்துகொண்டு தன் அறைக்குள் சென்று ஏதோ தஸ்தாவேஜ்களை எடுத்துக்கொண்டு திரும்பவும் விரைந்து வருகிறார். 

“இங்கே பாருங்க உங்க மகனே, புதுக் கொடையைத் தொலச்சுப்புட்டு வந்து நிற்கிற நெலையை! நீங்களும் செல்லம் குடுத்துச் செல்லம் குடுத்து…’” 

தகப்பனார் சப்தத்தைக் கேட்டுகொண்டு மச்சிலிருந்து ஓடிவந்த குஞ்சு, ரௌத்திராகாரமான இரைச்சலைக் கேட்டு வெருகிப் போய்ப் படிக்கட்டிலேயே நின்று விடுகிறது. 

“ஏ கொரங்கே, முந்தாநாளே உனக்கு அந்தக் கடுதாசிக் கட்டே எடுத்துவை என்று சொன்னது மண்டெலெ உறைக்கலையாக்கும்’” என்று மரகதம் கன்னத்தில் ஒரு அறை கொடுக்கிறார். 

பையன் சமயம் தெரியாமல், “நான் போடலே அப்பா, மாடு வந்து……” என்று ஆரம்பிப்பதைக் கண்டு தன்னை மீறிய மிருகத்தனத்துடன் அவன் நெஞ்சில் பூட்ஸ் சாலால் உதைத்துவிட்டு, கதவைப் படால் என்று சாற்றிக் கொண்டு, “எல்லாக் குரங்குகளையும் ஒரெயடியாத் தொலைச்சு முழுகினாத்தான் க்ஷேமம்” என்று இரைந்த படி ஓடுகிறார். 

கார் புறப்படும் சப்தம். 

பட்ட அறையில் பிரமித்துப்போன மரகதம் உள் கதவைப் படாரென்று சாத்திக் கொண்டு வீட்டுக்குள் சென்று விடுகிறாள்… 

உதைவிழப் போவதைக் கண்டதும் “அம்மா கிட்டச் சொல்றேன்’ என்று முணுமுணுத்துக்கொண்டு மச்சுக்கு ஓடுகிறது குழந்தை. 

மாட்டின் முட்டலுடன் இந்த உதையும் வர்மத்தில் விழுந்துவிட அழுகவும் முடியாமல் துடிக்கிறான் ராஜா. உள்வாக்கில் என்ன அடியோடு…? அது பலவீனமான குழந்தை. சுருண்டு சுருண்டு முணங்குகிறான்… அழுகை வரவில்லை…! 

முனகல் மட்டும் கேட்கிறது. 

உள்ளே எங்கிருந்தோ தேம்பல். 

மற்றப்படி நிசப்தம். 

குஞ்சு மறுபடியும் கீழே வருகிறாள்…… 

அண்ணனிடம் வந்து மெதுவாகக் குனிந்து பார்க்கிறாள்… 

“பத்துக்கோ, – வா” என்று அழைக்கிறாள்… 

அவன் எழுந்து நிற்க முடியாமல் ஊர்ந்து ஊர்ந்து வெகு கஷ்டத்தின் பேரில் மச்சை அடைகிறான். குழந்தை தன் பலம் கொண்டமட்டும் மேலே இழுக்கிறது… 

இவ்வாறு மச்சை அடைகின்றன குழந்தைகள். 

ராஜா குஞ்சுவின் சின்னக் கட்டிலில் படுத்துக் கொள்ளு கிறான். குழந்தை தன் சிறு துணிகளை எடுத்துப் போர்த்திப் பார்க்கிறது. சரியாக மூடாததினால் சிரமப் பட்டுக்கொண்டு வருகிறது. 

அவனுக்குப் போர்த்துகிறது. 

கட்டிலுக்குப் பக்கத்தில் தன் சிறிய நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டு,- “வலிக்கி தாம்மா கண்ணு? தடவட்டா” எனப் போர்வைக்குமேல் அவன் கையைத் தடவுகிறது. நெஞ்சில் தட வக் கட்டிலின் மேல் ஏறுகிறது…… 

“நெஞ்சு வலிக்குடி; ….. அம்மாடி!” என்கிறான் ராஜா. 

குழந்தை மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவன் கையையும் காலையும் தடவுகிறது. 

ராஜா முனகிக் கொண்டு படுத்திருக்கிறான். மழை ஓய்ந்துவிட்டது. 

சந்திரன் உதயமாகிவிட்டது. 

அறையில் மற்றப்படி வெளிச்சமில்லை. 

“குஞ்சு, அப்பா வந்திட்டாங்களா?” என்கிறான் ராஜா. 

“இல்லியே” என இரு கைகளையும் விரிக்கிறது குழந்தை. 

”குஞ்சு, கொஞ்சம் தண்ணி கொண்டாரியா?” என்கிறான் மறுபடியும். 

“பாலு இருக்குது குடிக்கிறாயா?” மத்தியானம் தான் குடிக்காமல் மிச்சம் வைத்திருந்த பாலைப் பாட்டிலுடன் எடுத்துக்கொண்டு வந்து அவன் கையில் வைக்கிறது. அவன் குழந்தை மாதிரி பாட்டிலில் பாலைக் குடிக்கிறான்… 

கொஞ்சம் நேரம் கழித்து… 

“குஞ்சு அப்பா வந்திட்டாங்களா? எனக்கு எப்படி யெல்லாமோ வருதே?” என்கிறான் ராஜா. 

“இல்லியே!” என்று விட்டு, நான் “ரா ராரோ சொல் லட்டுமா தூங்கு!” என ”ஆராரோ ஆரிரரோ என்னப்பன் ரா ரா ரோ; ரா ரா ரோ!”எனத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறது. 

ராஜாவுக்கு அந்திம தசை அணுகி விட்டது…… “அம்மா, குஞ்சு” என்ற ஏக்கத்துடன் ஆவி பிரிகிறது… 

குழந்தை அவனை ஏறிட்டுப் பார்க்கிறது. அவன் செத்து விட்டான் என்பதை அறியாமல், “கண்ணே முளிச்சிருக்காதே, – தூங்கு” எனக் கட்டிலில் ஏறி அவன் கண்களை மூடுகிறது. ராஜாவின் தலை கொளக்கென்று சாய, “நல்லாப் படுத்துக்கடா” எனத் தலையை இழுத்து வைத்து விட்டு, 

‘ரா ரா ரோ! ரா ரி ர ரோ!” எனத் திருப்பி ஆராட்டுகிறது. 

சொல்லிச் சொல்லிக் குழந்தைக்கும் தூக்கம் வந்துவிடுகிறது. “ராராரோ” என்ற இழுப்புடன் அவன் கையில் தலைசாயத் தூங்குகிறது. 

வெகு நேரம் கழித்து… 

வெளியே கார் வந்து நிற்கும் சப்தம். 

சுந்தரவடிவேலு இறங்குகிறார். மனதில் புயலோய்ந்து விட்டது. ஆனால் மிருகத்தனமாக நடந்து கொண்டதின் சுமை விலகவில்லை. அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைகிறார். 

இருட்டிக் கிடக்கிறது. 

சுவிட்சைப் போடுகிறார். 

நிசப்தத்தைக் கண்டு கோட்டைக் கழற்றிக் கையிலேந்தியபடி மச்சுக்கு ஓடுகிறார். 

அங்கும் இருட்டு. மறுபடியும் சுவிட்சைப் போடுகிறார். பையன்மேல் சாய்ந்து தூங்கும் குழந்தையை எடுத்துத் தோளில் சாத்திக்கொண்டு பையனைத் தொடுகிறார். 

குழந்தை தூக்கக் கலக்கத்தில் கொட்டாவி விட்டுக் கண்களைப் புறக்கையால் துடைத்தபடி “ரா ரா ரோ” சொல்கிறது. 

சுந்தரவடிவேலு பையன் மேல் வைத்த கையைத் திடுக்கிட்டு எடுத்துவிட்டு “மரகதம்! மரகதம்!’ என அலறுகிறார். 

எதிர்பாராத துயரத்தால் நிராதரவாக்கப்பட்ட மனத்தின் பிளிறல்…! 

”என்ன என்ன!” என்று கீழிருந்து கவலையுடன் எதி ரொலிக்கும் மரகதத்தின் குரல்.. தடதடவென்று மாடிப் படியேறும் சப்தம். 

“இங்கே வா, ராசாவைப் பாரு! என்னமோ மாதிரி யாக் கெடக்கானே! மேலெல்லாம் குளிந்திருக்கே!’ எனப் பதறுகிறார். 

அவள் பையனைத் தொட்டுப் பார்த்துவிட்டு அடித்து விழுந்து அலறுகிறாள். 

சுந்தரவடிவேலு குழந்தையைத் தூக்கிக்கொண்டு கீழுள்ள டெலிபோனுக்கு ஓடுகிறார். 

குழந்தை “என்னப்பா?” எனக் கேட்கிறது. 

சுந்தரவடிவேலு தன்னையறியாமல் “ராசா செத்துப் போயிட்டாண்டா!” என்று விடுகிறார். 

“நம்ம அம்மா மாதிரியா செத்துப்போயிட்டான் அப்பா?” எனக் கவலையுடன் ஆனால் மரணம் என்பதில் அர்த்தம் புரியாமல் கேட்கிறது குழந்தை. 

“ஆமாண்டா! நம்ம அம்மா மாதிரி செத்துப் போயிட்டாண்டா” என எதிரொலித்து அலறுகிறார் சுந்தரவடி வேலு. 

சுந்தரவடிவேலு குழந்தையை இறக்கி விட்டுவிட்டு டெலிபோனில், எண்களைப் பதட்டத்துடன் திருப்புகிறார்… 

டாக்டரை விரைவாக வரும்படி அழைக்கிறார். 

உயரவிருந்து மரகதத்தின் பிலாக்கணம். அலைமேல் அலையாகச் சுருண்டு புடைத்து விம்முகிறது. அதனுடன் சங்கு சப்தமும் ஒலித்து ஓய்கிறது. 

ராஜாவின் அந்திமக் கிரியைகள் கழிந்து இரண்டு மூன்று நாட்கள் கழிந்தபின்… 

சுந்தரவடிவேலுக்கு எதிரில் உள்ள ரேடியோவிலிருந்து ராகம் வருகிறது. அவரது வாசிக்கும் அறைதான். அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். கையில் கர்மத் தொடர்பை விளக்கும் சித்தாந்தப் புத்தகம் – ஆங்கிலத்தில்! புஸ்தகத்தில் மனம் பதியவில்லை. 

திறந்த பக்கங்கள் கர்மத் தொடர்பின் ரகசியங்களை அவர் மனத்தில் பதிய வைக்கவில்லை. பக்கங்களிலிருந்து ராஜாதான் எட்டி எட்டிப் பார்க்கிறான். மனம் அவரையே குத்திக்கொண்டிருக்கிறது. 

நினைவு தேங்கிய கண்களுடன் ஒன்றிலும் பதியா பார்வையுடன் உட்கார்ந்திருக்கி றார். எப்பொழுதும் போல் அல்லாமல் தலை சிறிது குலைந்து கிடக்கிறது. ஷர்ட்டில் பட்டன்கள் துவாரம் மாறிப் போடப்பட்டிருக்கின்றன. 

குஞ்சு மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறது. அதன் கையில் என்ஜின்கள் படம் உள்ள பெரிய படப் புத்தகம்.., 

தகப்பனார் புத்தகத்தை விரித்துக்கொண்டு உட்கார்ந் திருப்பதைக் கண்டு, “நீ பாட்டுக்குப் படியப்பா, நான் பாட்டுக்குப் படிக்கிறேன்’ என்று தரையில் உட்கார்ந்து கொண்டு படங்களைப் புரட்ட ஆரம்பிக்கிறது… 

தகப்பனார் குழந்தை வந்ததைக் கவனிக்கவில்லை… குழந்தைக்குப் படத்தின் சுவாரஸ்யம்…ரயில் பிஸ்டன் மாதிரி கைகளை ஆட்டிக்கொண்டு “குச்-குச்-” என் கிறது… 

படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை திடீ ரென்று அப்பாவைப் பார்க்கிறது. அப்பா எப்பொழுதும் போலல்லாமல் வித்தியாசமாக இருப்பதைக் கண்டு கொள்ளுகிறது. 

“ஏம்ப்பா, என்னமோ மாதிரியா இருக்கே?” என்கிறது. 

குழந்தையிருப்பதை உணர்ந்த சுந்தரவடிவேலு, “இங்க வாடிகண்ணு, எப்பம்மா வந்தே!” என்றார். 

“அப்பவே வந்தேனே! ஏம்ப்பா ஒரு மாதிரியா இருக்கே! கிச்சுகிச்சு காட்டட்டா” என்று அவருக்குக் கூச்சம் காட்டிச் சிரிக்க வைக்க முயலுகிறது. முயற்சி பலிக்கவில்லை. குழந்தையின் தலையைக் கோதிக் கொடுத்து விட்டு, மடியில் தூக்கி வைத்துக்கொண்டு அதன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார். 

குழந்தை அவர் மனத்தைத் தேற்ற மறுபடியும் முயற்சிக்கிறது. 

“அப்பா, ஒரு கதை சொல்லட்டுமா? என்ன சொல்ல,… குருவிக் கதை சொல்லட்டா, காக்காக் சொல்லட்டா?” என்கிறது. 

அவர் சிரித்துக் கொண்டு “காக்காக் கதை சொல்லம்மா” என்கிறார். 

”ஒரே ஒரு ஊர்ல ஒரு வடை இருந்துதாம்…அந்த வடை ரொம்ப ரொம்ப நல்ல வடையாம்.. நல்ல ருசியா இருக்குமாம். 

“ஒரு காக்கா அதைத் தூக்கிக்கிட்டே பறந்து ஓடிப் போயிட்டுதாம். ஒரு மரத்துலே ஏறி உட்கார்ந்துகிட்டு தாம். 

“அப்பொ ஒரு நரி வந்துதாம்…நரி வந்து, ஏ! காக்கா, காக்கா நல்லா ஒரு பாட்டுப் பாடென்னு கேட்டுதாம்…காக்கா,கா-கா-கா-கா…” 

[இச்சமயத்தில் காக்கையாகவே தன்னைப் பாவித்துக் கொண்டிருக்கிறாள்]

“அப்புறம்…” என்கிறார். 

“அப்புறம் நரி வடையைத் தூக்கிக்கிட்டு ஓடியே போயிட்டுதாம்…ஓட்டம் ஓட்டம் அதே காட்லே எலி…” என்று ஆரம்பிக்கிறது குழந்தை… 

“அந்த நரிதாண்டா விதி; அந்த நரிதாண்டா விதி” எனச் சொல்லிக்கொண்டே குழந்தையை வெறிகொண்டவர் போல முகத்திலும் கன்னத்திலும் முத்தமிடுகிறார். குழந்தைக்குத் திணறுகிறது. 

இறுக இறுகக் கட்டியணைத்துக் கொள்கிறார். 

”குஞ்சம்மா, நீ பாலு சாப்பிட்டியா?” என்கிறார். 

“நான் அப்பவே சாப்பிட்டேனே, அம்மா குடுத்தாளே’ என்கிறது குழந்தை- மரகதத்தை முதல் முறையாக அம்மா என்று அழைக்கிறது. 

“நீ மடிலே படுத்துக்கோ!…நான் கொஞ்சம் படிக்கிறேன்…” எனப் புத்தகத்தில் மன உளைச்சலை மறக்க முயற்சிக்கிறார். 

குழந்தை சிறிது நேரத்தில் அயர்ந்து விடுகிறது. மரகதம் மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு வருகிறாள். 

அவள் தலை குனிந்து,மனம் நிலைகுலைந்து கிடப்பதைக் காட்டுகிறது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் கூசிக் காலடியில் வந்து உட்காருகிறாள். பேச வாயெழவில்லை. கைவிரல் நகத்தால் தரையைக் கீறிக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களிலிருந்து நீர்ச்சொட்டுத் தரையில் விழுந்து அவள் நகத்தையும் நனைக்கிறது. 

சுந்தரவடிவேலு, மெதுவாக அவள் தலையைத் தடவுகிறார். 

“குஞ்சு தூங்கிவிட்டாள், நாற்காலியில் படுக்கவைக்கிறேன்…” என்று எழுகிறார். 

“நானே படுக்க வைக்கிறேனே” எனக் குழந்தையை பாங்கிப் பக்கத்து சோபாவில் கிடத்தித் தட்டிக் கொடுத்து விட்டு மறுபடியும் வந்து உட்காருகிறாள். 

“எண்ணைக்குமே எனக்குக் கோபம் வராதே..ஏன் அப்படி வந்தது தெரியுமா…?” என ஒரு காய்ந்துபோன புன்சிரிப்புடன் கேட்கிறார். 

பதிலை எதிர்பார்க்காதவர் போல, “நேத்து வந்தானே அந்த டாக்டருக்குத் தான்…குஞ்சுவோட அம்மாவுக்கும் அவன் தான் பார்த்தான்… அப்பொ எங்கிட்டே அவ்வளவு ஜாஸ்தியாகக் கிடையாது… சினேகிதத்துக்காக எவ் வளவோ செஞ்சான்… இப்பொ ஒரு கஷ்டம் அவனுக்கு வந்தது…வேலையே போயிடும்…அதுக்காக நான் நம்மாலானதைச் செய்யத்தான் ஆசைப்பட்டேன்…அவனுக்கா கத்தான்…நீ மறந்து போனென்னதும் அதனாலே தான் அவ்வளவு கோபம் வந்தது…” என்று சொல்லி விட்டு,… சிறிது நேரம் கழித்து, “எல்லாம் விதி” என்கிறார். 

”விதியா, – எங்க குடும்பப் பாவம், – நாஞ்செய்த வெனெ…எங்கம்மா பாவத்தை என் தலையிலே வச்சிட்டுப் போயிட்டா…எங்கப்பாவுக்கு எங்கம்மா இரண்டாந் தார மில்லை. முதல் தாரத்துக்காரிக்கு ஒரு அண்ணா இருந்தான். அவனுக்குப் பதினாலு வயசு இருக்கும். வயத்து வலின்னு பளெயது சாப்பிடமாட்டான். பள்ளிக்கூடம் போக மாட்டேன்னான். அம்மெ போய் அப்பாகிட்டச் சொன்னா …அப்பாவுக்குக் கோவமா வந்திட்டுது. அவனைத் தூணொடே கெட்டி வச்சு உதைத்து அவுத்து விடாதே சோறு போடாதேன்னு…மத்தியானமா அவன் கத்துக்கத் துனு கத்தினான். அவுத்தே விடலே,-அவ்வளவுதான்; செத்தே போனான். தூண் வெடிச்சுப் போயிருந்த பொந் திலே ஒரு பாம்பு இருந்து கடிச்சுப்புட்டுது…சாயங்காலமா அவுத்து விடரப்ப பொணமாத்தான் இருந்தான்,-அந்தப் பாவந்தான்…” 

இவ்வாறு நிலைகுலைந்த இரு மனங்களும் காரணகாரி யத் தொடர்பு கண்டு பிடிக்க முயன்று கொண்டு… குழம்பின… 

வெளியிலே வழிப் போக்குப் பிச்சைக்காரன், ”உலகமே பைத்தியக்காரக் கும்பல், காரண காரியத் தொடர் பற்றகுழப்பம்” என்ற பொருள் கொண்டபாட்டை உச்சஸ்தாயியில் கர்ணகடூரமான குரலில் பாடுகிறான். 

(முற்றும்)

– முதல் வெளியீடு: காதம்பரி, ஏப்ரல்-மே 1949.

– சிற்றன்னை (குறுநாவல்), புதுமைப்பித்தன் படைப்புகள் (2ஆம் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை.

புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *