சிற்பியின் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 38 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாண்டியன் விமலாதித்யன், கிருஷ்ணாபுரத் தைத் தமிழ் நாட்டின் சிற்பக் களஞ்சியமாக ஆக்க நினைத்தான். கைதேர்ந்த தமிழ் நாட்டுச் சிற்பிகள் யாவரும் கிருஷ்ணாபுரத்திற்கு வர வழைக்கப்பட்டனர். தான் காண நினைத்த கோவில் நிர்மாணத்தைப் பாண்டியன் சவிஸ்தார மாக எடுத்துச் சொன்னான். சிற்பிகள் தங்கள் தங்கள் தனித் திறமையைக் காட்ட முனைந்து நின்றனர். 

அக்காலத்தில் மாதவன்தான் தமிழ் நாட் டின் சிற்ப மணியாகத் திகழ்ந்தான். கோவிலின் உள் பிரகாரச் சிலைகளைச் செதுக்க மாதவனே நியமிக்கப்பட்டான். மா தவனுடைய கை உளி எத்தகைய நுணுக்க பாவத்தையும் கல்லில் செதுக்கிக் காட்டும் வல்லமையுடையது. உயி ரற்ற கற்களுக்கு உயிரும் உணர்ச்சியும் கொடுப் பான் மாதவன். சிற்பக் கலையே அவனது வாழ்க்கையின் லக்ஷியம்.மாதவனுடைய அபார் மான கற்பனா சக்தி, அவனுடைய லக்ஷியப் பாதைக்கு ஒரு தீபமாக விளங்கியது. கிருஷ்ணா புரம் கோவிலில் தன் முழுத் திறமையையும் காட்டி அழியாத சிற்பங்களை ஸ்தாபிக்க எண்ணி னான் மாதவன். அரசன் கட்டளைப்படி கோவில் உள் பிரகார வாசலின் இருபுறங்களிலும் வரிசை யாக அமைக்கவேண்டிய சிலைகளை ஒவ்வொன் றாகச் செதுக்கி வந்தான். ஒவ்வொரு சிலையும் முடிந்தவுடன் பாண்டியன் பொன் முடிப்புகளை மாதவனுக்குப் பரிசளித்து வந்தான். தன் லக்ஷியம் உருவாகி வருவதைக் கண்டு அரசனது மனம் ஆனந்தக்கடலில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தது. மாதவனுடைய சிற்பத் திற மையைக் கண்டு அரசன் அடிக்கடி பிரமித்து நின்றான். சிவப்பு ரேகை ஓடியிருந்த சாதாரணக் கல்லில் ஒரு காட்டு வேடனின் காதல் நாடகத் தையே சித்தரித்து விட்ட மாதவனது கற்பனைத் திறமையைப் பற்றி அரசன் குறிப்பிட்டபோது “மாதவா, நீ கற்களுக்கு அமரத்துவம் அளிக் கும் ஒரு கவி. இதற்குமேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை” என்றெல்லாம் அவனைப் புகழ்ந்தான். அர்ஜுனன் சிலையில் செதுக்கி யிருந்த நரம்புகளின் முறுக்கையும் கனல் கக்கும் விழிகளையும் கண்ட விமலாதித்யன் கல்லாகச் சமைந்து நின்றான். தலைகளை மாலையாக அணிந்து நின்ற வீரபத்திரன் சிலையின் முகத்தில் ஊழிக் காலத்துக் கோரச் சிரிப்பின் பாவம் அப்படியே பதிந்திருந்தது. 

கோவில் உள் நடைக்குப் பக்கத்திலுள்ள தூண்களில், பழந்தமிழர்கள் மானிட அழகின் லக்ஷியமாகக் கண்ட, மன்மதனையும், ரதியையும் சிருஷ்டிக்க எண்ணினான் சிற்பி. சில நாளில், உருவற்ற மன்மதனுக்கு மாதவன் உருக் காடுத்து விட்டான். அங்க லக்ஷணங்கள் யாவும் பரிபூரணமாகப் பெற்றுக் கரும்பு வில்லைத் தாங்கி நின்ற ஒரு சுந்தர புருஷனை, யாரோ முனிவர் கல்லாகச் சபித்து விட்டது போலி ருந்தது மாதவன் அமைத்திருந்த மன்மதன் சிலை. 

மன்மதனுக்கு எதிர்ப்புறத்தில், ரதியை சிருஷ்டிக்க வேண்டும். மாதவனின் கற்பனா சக்தி, பெண்மைக்குரிய பல அழகுகளை ஆராய்ந்து ஒன்று படுத்திக்கொண்டே இருந்தது. மன் மதன் சிலை முடிந்து இரண்டு மாதமாகியும், ரதியின் பரிபூர்ண உருவம் அவன் மனதில் பதிவு பெறவில்லை. அவன் அமைக்க நினைத்த ரதியின் உருவத்திற்கெல்லாம், ஏதோ குறைபாடு இருப்ப தாக அவனுடைய சிற்பத் திறமை குறை கூறிக் கொண்டிருந்தது. ரதியின் பரிபூரண சௌந்தர் யத்தைக் கற்பனை பண்ணுவதற்காக ஏகாந்த மான இடங்களை நாடிச் சென்றான் மாதவன். 


மனதை மயக்கும் மாலை வேளை. அரண்மனை உத்தியான வனத்தில் பக்ஷி ஜாலங்கள் அன்று தங்களுக்கேற்பட்ட இன்பகரமான அனுபவங் களையெல்லாம் இனிய ஒலிகளின் மூலம் தெரி வித்துக் கொண்டிருந்தன. தூய தவசிகளின் உள்ளம் போன்று நிர்மலமாக இருந்த தடாகத் தில் சில அல்லிப் புஷ்பங்கள், மதியைக் காண் பதற்காக அங்குமிங்கும் ஆடி அசைந்து கொண் டிருந்தன. சூரியன் மலைவாய்க்குள் விழப் போவ தைக் காண வேண்டாமென்றோ என்னவோ தாமரைக் கன்னி தன் அழகிய முகத்தை மூடிக் கொண்டாள். இவ்விதமான இயற்கைத் தேவி யின் திருலீலைகளை மாதவன் கவனிக்கவே இல்லை. எட்டாப் பொருளை எட்டிப் பிடிக்க முயலும் துறவியைப் போல ஒரு பாரிஜாத மரத்தின் கீழ் வெகுநேரமாகச் சிந்தனையில் மூழ்கியிருந்தான். 

“சிற்பியே, உன்னுடைய கற்பனைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை நீ மறந்துவிட்டாய்! உனது கற்பனைத் திறமைக்கு அப்பாற் பட்ட தைக்காண ஏன் வீண் முயற்சி செய்கிறாய்? இ பொழுது உன் மனதில் உருக்கொண்டுள்ள ரதியின் கற்பனையே உலக மக்களைத் திகைக்கச் செய்யும்…….எழுந்திரு. வீணாக மனதைக் குழப்பிக்கொள்ளாதே!” என்று மாதவனுடைய கற்பனைத் திறமை அவனுக்கு ஒரு முடிவைக் காட்டிவிட்டது. 

தயங்கிய மனதுடன் எழுந்து நின்றான் மாதவன். எழுந்தவுடன் திடீரென்று ஞானோ தயம் ஆனவன் போல தடாகத்தை கோக்கினான். அப்பொழுது அவனது கண்களில் புதியதோர் பிரகாசம் காணப்பட்டது. தடாகத்தின் அருகில் அரசகுமாரி கனகவல்லி தன் தோழிகளுடன் நின்றுகொண்டிருந்தாள். துக்கத் தடாகத்தில் தவித்துக்கொண்டிருந்த தாமரைக்கன்னி, கனக வல்லியின் கைகளில் அமர்ந்து ஆறுதல் பெற்றுக் கொண்டிருந்தாள். 

மாதவனுடைய கலைக்கண்கள் கனகவல்லி யின் அழகைப் பரிபூரணமாகக் காணத்துடித்தன. திறந்த விழிகளை மூடாமல் தடாகத்தை நோக்கி நடந்தான் சிற்பி. 

தன்னை நோக்கி வரும் ளைஞன் தான் கோவிலில் அற்புதமான சிலைகளை வடித்தெடுத்த சிற்பி என்பதைக் கனகவல்லி தன் தோழிகள் மூலம் அறிந்துகொண்டாள். மாதவன் அருகில் வந்ததும், கனகவல்லி அவனை நமஸ்கரித்தாள். சிற்பியின் கண்கள், புன்னகையோடு கூடிய அரச குமாரியை, விழுங்கி விடுவது போலப் பார்த்தன. அடுத்த வினாடியில் மாதவன் சுய உணர்வை அடைந்தான். அரச குமாரியின் எதிரே, தான் அவ்வாறு நின்றுகொண்டிருப்பது, உலக ஆசாரத்திற்கு ஏற்றதல்ல என்று அவனுக்குத் தோன்றியது. உடனே அவளிடம் விடை பெற்றுக்கொண்டு கோவிலை நோக்கி நடந்தான். லக்ஷிய ரதியை மூடிக்கொண்டிருந்த கல் தூள்களை அவனுடைய கை உளி வெகு விரைவாகச் செதுக்கித் தள்ளியது. 

இரண்டே நாளில் ரதியின் உருவம் பூரண மாக அமைந்துவிட்டது. விமலாதித்யன் ரதியின் சிலையைப் பார்வையிட வந்தான். மூடுபல்லக்கில் வந்திறங்கிய கனகவல்லி மறைவான ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தாள். 

புதிய சிலையைப் பார்த்த அரசன் கண்கள் சட்டென்று கனகவல்லியின் பக்கம் திரும்பின. உடனே அவனது மனதில் பெரும் புயல் எழுந்து மோதியது. “சிற்பி, இது ரதியின் சிலையா?” என்றான் அரசன். அரசனுடைய கேள்வி மாதவனுக்கு ஒரு புதிராக இருந்தது. “ஆமாம் அரசே” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுத் தலைவணங்கினான் மாதவன். அங்கிருந்த யாவரும் ரதியின் அழகைக் கண்டு ரசித்துக்கொண்டிருந் தார்கள். அரசனுடைய மனதில் மட்டிலும், எதிர்காலத்தில், பாண்டிய குலத்திற்கே இழிவு தரும் ஒரு கற்பனைக்காட்சி தோன்றி வருத்திக் கொண்டிருந்தது.ரதியின் சிலையைப்பற்றி வேறு ஒன்றுமே பேசாமல் அரசன் அரண்மனைக்குத் திரும்பிவிட்டான். 

அற்புதமான ரதியைக் கல்லில் வடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் சிற்பியின் மனம் திளைத்துக்கொண்டிருந்தது. அரசனுடைய கேள் வியைப்பற்றியும் கோபப் பார்வையைப்பற்றி யும் மாதவன் அதிகமாகக் கவலைப்படவில்லை. “கலைஞனுடைய கற்பனைக்கும் எட்டாத ஒரு அழகைப் பிரமதேவன் கனகவல்லிக்கு அளித் திருக்கிறான். அந்த அழகை உலகில் அழியாச் சிலையாக வார்த்துவிட்டோம். அரசன் இதைப் பெரிதும் பாராட்டுவான்” என்றே சிற்பி எதிர் பார்த்திருந்தான். விமலாதித்யன் மனதில் எழுந்த குமுறல்களை மாதவன் உணர்ந்துகொள்ளவே இல்லை. கோவில் சுற்றுப்புறங்களில் நிர்மாணிக்க வேண்டிய சிலைகளைப் பற்றிக் கற்பனை செய்து கொண்டே சிற்பி தன் வீட்டுக்குச் சென்று விட்டான். 

மறுநாட்காலை. மாதவன் அரண்மனை உத்தியான வனத்தின் பக்கமாகச் சென்றுகொண்டிருந்தான். 

“சிற்பி!” 

மாதவன் பின்புறம் திரும்பினான்.உத்தியான வனத்தினுள் அரச குமாரி பூக்கொய்து கொண்டிருந்தாள். 

“அம்மா, நமஸ்காரம். நீங்கள் தானே கூப்பிட்டீர்கள்?” 

“ஆமாம். தாங்கள் வார்த்திருக்கும் சிலைகளில் ஒன்று மட்டும் சரியாக அமையவில்லை. அதைக் கூறுவதற்காகவே நான் தங்களை அழைத்தேன். மன்னிக்க வேண்டும்!” 

“குறை பாட்டைத் தைரியமாக எடுத்துக் கூறும் தங்களுடைய கலை அறிவை மெச்சுகிறேன். தாங்கள் குறிப்பிடும் சிலை எதுவென்று நான் அறியலாமோ?” 

“ரதிக்கேற்ற மன்மதனைத் தாங்கள் சிருஷ்டிக்கவில்லை. இந்த ஒரே குறைபாடுதான் தாங்கள் அமைத்துள்ள சிலைகளில் நான் கண்டேன் ” 

“என் கற்பனை ஓட்டம் அதற்குமேல் போக வில்லை!” 

“ஆண்மையின் பரிபூரண அழகை ஆண் அறிய முடியாது தான்.” 

“உண்மை! அரசகுமாரி, தாங்கள் ஒரு சிறந்த ரசிகை. தங்கள் அபிப்பிராயப்படி மன்மதன் சிலை எவ்வாறு இருக்கவேண்டுமென்று தெரிவிப்பீர்களா?” 

“தாங்கள் ஒரு நிலைக்கண்ணாடியின் முன் நிற்கும்போது, மன்மதன் உருவத்தைப் பார்த்திருக்கலாமே!…..” 

மாதவனுடைய கலைக்கண்கள் காதல் கண்களாக மாறின. ராஜகுமாரிக்கு அவன் ஒன்றுமே பதில் சொல்லவில்லை. அவளுடைய முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த மோகனப் புன்னகை ஒன்றையே உற்று நோக்கிக் கொண்டு நின்றான். உலகத்தையே மயக்கும் அந்தப் புன்னகையின் அர்த்த பாவத்தை மாதவன் ஒரே வினாடியில் உணர்ந்து கொண்டான். கனகவல்லியிடம் ஏதோ கூற முயன்றான். ஆனால் பேச முடிய வில்லை. இதே சமயத்தில் கனகவல்லியின் தோழிகள் அவளைத் தேடிக்கொண்டு வந்தார்கள். அரசகுமாரி மாதவனிடம் விடை பெற்றுக்கொண்டு போய்விட்டாள். 

மாதவன் வீட்டை நோக்கித் திரும்பினான். அவனுடைய மனதில் புதுப்புது உணர்ச்சிகள் திடீரென்று தாக்க ஆரம்பித்தன. கலை மயமாகத் தோன்றிய உலகம் இப்பொழுது காதல் மயமாகவே காக்ஷியளித்தது. நிலைக் கண்ணாடி யின் முன் நின்று தன் அழகையே திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்ந்தான். 

இரண்டொரு நாளில் கோவில் தூணில் இருந்த பழைய மன்மதன் மறைந்து விட்டான். அதற்குப் பதிலாகத் தன்னுடைய உருவத்தையே அந்த இடத்தில் செதுக்கிக் கனகவல்லியின் ஆவலைப் பூர்த்தி செய்தான் மாதவன். ராஜகுமாரியின் காதலை அழியாச் சிற்பமாக ஸ்தா பித்து விட்டோம் என்ற ஒரு ஆனந்தத்தைத் தவிர வேறு ஒன்றும் சிற்பியின் மனதில் இடம் பெறவில்லை. தேன் உண்ட வண்டைப் போல உல்லாசமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். 


ஒரு நாள் இரவு. எதிர்பாராதபடி விமலா தித்யன் மாறு வேஷத்தோடு மாதவனுடைய வீட்டினுள் நுழைந்தான். வந்தது அரசன் என்று அறிந்ததும் சிற்பி தகுந்த மரியாதைக ளோடு அவனை வரவேற்றான். அரசன், மாத வன் அளித்த உபசாரங்கள் ஒன்றையும் ஏற்றுக் கொள்ளாமல், பரபரப்போடு நின்று கொண்டிருந்தான். அவனது கண்கள் கோபத்தால்  ஜொலித்தன. 

“மாதவா, பாண்டிய குலத்தை உலகம் உள்ளளவும் இழிவு படுத்துவதுதான் உனது லக்ஷியமா?” 

“அரசே, மன்னிக்க வேண்டும்! என்னு டைய லக்ஷியம் அதுவல்ல!” 

“மன்மதன் சிலையை உன் உருவமாகவும் ரதியின் சிலையைக் கனகவல்லியின் உருவமாகவும் செதுக்கியதன் நோக்கமென்ன?” 

“தற்போதையப் பாண்டிய நாட்டின் பெண்மை அழகையும், அவர்களது பரிசுத்தமான காதலையும் உலகம் உள்ளளவும் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு காட்சியாகவே இவைகளைச் சிருஷ்டித்தேன்.”
 
“என்ன சொன்னாய்? காதல்! பாண்டிய குலப் பெண்கள் அரச குலத்தினரைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொண்டதில்லை என்பது உனக்குத் தெரியாதா?” 

”அரசே, மன்னிக்க வேண்டும். காதலுக்கு, குலம், இனம் ஆகிய வேற்றுமை கிடையாதே!” 

“மாதவா, பிதற்றாதே! என் மானம் போகிறது. வேறு யாரேனும் இத்தகைய குற்றம் செய்திருந்தால், இந்த வாள்தான் அவர்களுக்குப் பதில் சொல்லும்! கலா தெய்வம்தான் இப்பொழுது உன்னைக் காத்து நிற்கிறதென்பதை உணர்ந்துகொள்.” 

“மன்னவா, என்மீது கோபிக்க வேண்டாம்! இனித் தங்கள் ஆக்ஞைப்படியே நடக்கச் சித்தமாயிருக்கிறேன்.” 

“அந்தச் சிலைகள் இரண்டையும் அங்கிருந்து அகற்றிவிட வேண்டும்.” 

“அரசே, அது முடியாத காரியம்! கோவில் முகட்டின் பாரம் முழுவதும், அந்தச் சிலைகளோடுள்ள தூண்களின் மீது தான் அழுத்திக் கொண்டிருக்கிறது.” 

“சிற்பி, என் குலப் பெருமை இத்துடன் அழிவதற்கு வழிதேடி விட்டாய்! பாண்டியனுக்குக் கலைப் பெருமையைக் கொடுத்துக் குலப் பெருமையை ஒழித்து விட்டாய்!” 

“அரசே, உங்கள் குற்றச்சாட்டு விபரீதமாகவே இருக்கிறது. ரதியின் சிலையை இவ்வளவு அற்புதமாகவும் திருப்திகரமாகவும் முடிப்பதற்குக் கனகவல்லியின் அழகிய உருவம்தான் எனக்கு உற்ற சமயத்தில் கைகொடுத்து உதவியது. மன்மதன் சிலையை என் உருவாக அமைத்ததற்கு நான் பொறுப்பாளி அல்ல! அது கனகவல்லியின் வேண்டுகோள்.” 

“அவளுடைய வேண்டுகோளா? அவளுக்குத் தகுந்த தண்டனை நான் விதிக்கிறேன்!” 

“அந்தத் தண்டனையை நானே ஏற்றுக் கொள்கிறேன். விருப்பம்தான் அவளுடையது. அதை நிறைவேற்றியது நான்தான். ஆகையால் நானே தண்டனைக் குரியவன்.” 

“மாதவா, நீ இனிமேல் அரச குமாரியைப் பற்றிப் பேசவோ, சிந்திக்கவோ கூடாது. சிலைகளைச் செதுக்குவதே உனது தொழில்!” என்று கூறி விட்டு அரசன் அங்கிருந்து மாறு வேஷத்தில் மறைந்து விட்டான். அன்று முதல் நாலைந்து நாட்களாக மாதவன் தன் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. பின்பு கடமை அவனைக் கோவிலுக்கு இழுத்துச் சென்றது. 

கோவிலின் உள் பிரகாரத்தில், தேவ கன்னிகைகளின் நடன பாவங்களைக் கற்களில் சித்திரிக்க வேண்டுமென்று முன்னமே திட்டம் போடப் பட்டிருந்தது. 

அதன்படியே பல்வேறு நாட்டிய முத்திரைகளுடன், ரம்பை, திலோத்தமை, மேனகை, ஊர்வசி ஆகிய தேவ மாதர்களைச் செதுக்கினான் மாதவன். பிரகாரத்தின் பாதியளவிற்குச் சிற்ப வேலைகள் முடிந்தவுடன், அரசன் அவைகளைப் பார்வையிட வந்தான். தேவமாதர்களின் சிலைகளைக் கண்டவுடன், அரசனுடைய முகம் சிவந்தது. புருவங்கள் நெற்றிக் கேறின ; மீசை துடித்தது; கண்கள் அனலைக் கக்குவது போல விழித்தன. அருகில் நின்ற மாதவனைக் கரகரவென்று இழுத்துக்கொண்டு ஒரு தனியிடத்திற்குச் சென்றான். 

மிகுந்த கோபத்துடன், “ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை எல்லோருமே கனகவல்லியின் உருவத்தோடு தானிருக்கிறார்களா?” என்று கேட்டான். 

“அரசே, மன்னிக்கவேண்டும். நான் எவ்வளவுதான் முயன்றாலும் கனகவல்லியின் உருவத்தைத் தவிர வேறு உருவத்தை என்னால் செதுக்க முடியவில்லை. வேறு உருவம் என் மனதில் பதிய மறுக்கிறது. மனதில் பதிந்ததைத் தான் என் உளி செதுக்குகிறது.” 

“மாதவா, யாரிடம் நீ வார்த்தையாடுகிறாய் என்பதை மறந்து விட்டாய்! மனமாம்! உருவமாம்! நன்றாயிருக்கிறது.உன் மனதைத் திருப்ப நான் வழி காட்டுகிறேன்.” 

“அந்த வழியை நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன், அரசே!” 

“இது முதல் நீ செதுக்கும் சிலைகளில் கனகவல்லியின் சாயல் சிறிதேனும் காணப்பட்டால், உன் தலை இவ்வாளுக்கு இரையாகும். இதுவே நான் காட்டும் வழி!” 

“அப்படியானால், கனகவல்லியின் உருவத்தை என் மனதிலிருந்து அகற்றுவதற்குப் போதிய அவகாசம் கொடுங்கள். அதன் பின்பு சிற்பங்களைச் செதுக்க ஆரம்பிக்கிறேன்.” 

“மாதவா, முழு மனதுடன் முயற்சித்தால், எத்தகைய ஆசையையும் மனதிலிருந்து அகற்றி விடலாம்! அதற்குவேண்டிய மனோவலிமையைக் கடவுள் உனக்கு அளிப்பார்.” 

மாதவன் அரசனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அதன் பின்பு ஆறுமாத காலமாக மாதவனை யாருமே பார்க்கவில்லை. மாதவனைக் காண வேண்டுமென்று அரசன் துடித்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்டு பிடிப்பதற்காக அரசன் பல ஒற்றர்களை அனுப்பி வைத்தான். சென்ற ஒற்றர்களின் முயற்சி எல்லாம் வீணாயிற்று. கிருஷ்ணாபுரத்தைச் சிலா பொக்கிஷமாக ஆக்க நினைத்த விமலாதித்யனது மனக் கோட்டை முற்றும் உருப் பெறாமல் நின்றது. உள் பிரகாரச் சிற்பங்கள் முடியாத தால், வெளிப் பிரகாரச் சிற்ப வேலைகளும் அப்படியப்படியே நிறுத்தப்பட்டன. அரசனது உள்ளம், கலாதேவனது அம்சம் பெற்ற மாதவனையே நினைத்து நினைத்துப் புண்பட்டுக் கொண்டிருந்தது. 

திடீரென்று மாதவன் ஆதிச்சநல்லூர்ப் பரும்பிலுள்ள குகை ஒன்றில் இருப்பதாக ஒரு ஒற்றன் அரசனிடம் வந்து கூறினான். ஒற்றன் கூறிய செய்தி விமலாதித்யனுடைய காதுகளுக்கு அமிர்த கானமாகவே இருந்தது. தன் குமாரி கனகவல்லியுடன் மாதவனைக் காண்பதற்காகப் புறப்பட்டு விட்டான் அரசன். மூவரும் ஆவலோடு குகைக்குள் நுழைந்தனர். மாதவன் அங்கு காணப்படவில்லை. ஆனால் அவர்கள், மாதவனுடைய சுதந்தரக் கைகள் செதுக்கிய கனகவல்லியின் சிலைகளைக் குகைச் சுவர் முழுவதிலும் கண்டார்கள். அந்தச் சிலைகள்,தன்னைக் கண்டு நகைப்பது போலிருந்தது அரசனுக்கு. குகை உடனே மூடப்பட்டது. 

சிற்பியின் இன்பக் கனவையும், அரசனுடைய பாழ்பட்ட லட்சியச் சின்னங்களையும் கிருஷ்ணாபுரம் கோவில் உலகத்திற்கு இன்னும் பறையடித்துத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. 

– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.

– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.

சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *