1
ஒருவர் தனக்கு நேர்ந்ததை அல்லது தான் உணர்ந்ததை சகமனிதரிடம் விவரிக்கத் தொடங்கிய ஆதிகணத்திலேயே கதை பிறந்துவிட்டது. சகமனிதரோடு பகிர்ந்து கொண்டேயாக வேண்டும் என்னுமளவுக்கு மனதை நெம்பித் தள்ளுகிற ஒரு வாழ்வனுபவம், அதை வெளிப்படுத்தத் தோதான மொழி, உணர்ந்ததை உணர்ந்தவாறே விவரித்துவிடும் ஆற்றல்கொண்ட சொற்களின் தெரிவு- அதனோடு இ¬சைமை கொண்ட உடல்மொழி, கதையை கேட்பதற்கானவர்கள் ஆகிய முன்தேவைகள் மிகத் தொடக்கத்திலேயே கதை என்பதற்கு அடிப்படையாக அமைந்துவிட்டிருந்தன. எனவே ஒரு கதை வெட்டவெளியில் எவருக்காகவுமல்லாமல் உருவாவதற்கான அவசியம் ஏதுமில்லை. ( கதையை தனக்காகவே எழுதிக் கொள்வதாக சொல்லிக் கொள்வோரை இவ்விடத்தில் மறந்துவிடவும்)
தமக்கும் இயற்கைக்குமான தொடர்பையும் தொடர்பின்மையையும் விளங்கிக் கொள்ள இயற்கையின் ஒருபகுதியாகிய மனிதகுலம் மேற்கொண்ட இடையறாத எத்தனத்திலிருந்தே கதை பிறந்தது. இயற்கையின் பிரம்மாண்டம், அதன் வினோதங்கள், யூகத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், பேரழிவுகள், மர்மங்கள், தம்மைச் சுற்றிலும் நடந்துவரும் மாற்றங்கள் போன்றவற்றிற்கான காரணங்களைக் கண்டறிய முடியாத ஆதிமக்கள், அவற்றிற்கான காரணங்களை புனைவுகளாக கட்டமைத்தனர். இந்தப் பேரண்டத்தில் தன் இடம் எது? தான் யார்? பிறக்கும் முன் எங்கிருந்தோம்? இறப்புக்குப் பின் என்னவாகிறோம்? ஏன் இறப்பு வருகிறது? என்பன உள்ளிட்ட தம்மைப்பற்றிய விசாரங்களுக்கும்கூட அவர்கள் கதைகளையே பதிலாக முன்வைத்தனர். வாழ்வியற் சடங்குகள் எல்லாமே கதைகளாகத்தான் அவர்களது வம்சங்களுக்கு கைமாற்றித் தரப்பட்டன. இவையெல்லாம் உலகம் முழுவதுமிருந்த மக்கள் சமூகத்தின் பொதுப்பண்பாக இருந்திருக்கிறது.
புராணங்களும் இதிகாசங்களும் அவற்றின் தெய்வீக மகிமைக்காக அல்லாமல் அவற்றில் பொதிந்திருந்த கதைகளுக்காகவே – கதைகளாகவே மக்களால் நினைவிற் கொள்ளப்பட்டன. ( மக்களின் கூட்டுமனதில் கதைகளாக பதிந்திருந்த இந்த புராணங்களையும் இதிகாசங்களையும் வரலாற்று உண்மைகளெனத் திரிப்பதற்கு மதவெறியர்கள் தொடர்ந்து உருவாக்கிவரும் கட்டுக்கதைகள் இதில் சேர்த்தியில்லை). ஒரு பெரும் பிரளயத்தில் உலகமே அழிந்து மீண்டும் உருவாவது, அவதாரங்கள் தோன்றி அற்புதங்களை நிகழ்த்துவது, கடல்மேல் நடந்துவருவது/ கடல் இருகூறாய்ப் பிரிந்து வழிவிடுவது – போன்ற எண்ணிறந்த கதைகள் உலகத்தின் எல்லா மதங்களிலும்- மொழிகளிலும்- நாகரீகங்களிலும் உள்ளூர்த்தன்மையோடு உலவி வருகின்றன. உயிர் என்றால் என்ன என்கிற கேள்வி எழுப்பிய குடைச்சலால், அதை ஏழுமலைகளுக்கும் ஏழு கடல்களுக்கும் அப்பால் ஒன்றுபோலிருக்கும் ஒன்பது கிளிகளில் ஒன்றுக்குள் ஒளிந்திருப்பது என்று கற்பனை செய்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப வசதிகளற்ற அக்காலங்களில் இப்படியான கதைகள் கண்டம்விட்டு கண்டம் பரவிப் பல்கியது எவ்வாறு என்ற கேள்வியை பின்தொடர்ந்தால், மக்கள் தொடர்ச்சியாக தங்கள் கதைகளுடனேயே இடம் பெயர்ந்து அலைந்து திரிந்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கே வரமுடிகிறது. ஏற்கனவே தாங்கள் அறிந்திருந்த கதைகளுக்குள் புதிய வாழிடங்களின் அனுபவங்களையும் இணைத்து, ஒரே கதையின் பலவகைப் பிரதிகளை அவர்கள் உலகம் முழுக்க பரவவிட்டிருக்கிறார்கள். அந்த ஆதிமக்கள் படைத்து உலவவிட்ட தெய்வத்துக்கும் பேய்க்கும் நிகரான கதாபாத்திரமொன்றை இன்றுவரையிலும் நம்மால் படைக்கவே முடியவேயில்லை.
2
அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகவும், சமூகத்தில் எழுத்தறிவு பெற்ற ஒரு அடுக்கினர் உருவானதை முன்னிட்டும் ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செய்திப்பத்திரிகைகள் வெளியாகத் தொடங்கின. கதைகளின் மீது பெருவிருப்பமும் படிப்பதற்கான ஓய்வுநேரமும் வாங்குவதற்கான வசதியும் கொண்டுள்ள மக்களை தமது வாசகர்களாக ஈர்ப்பதற்கான வியாபார உத்தியாக சிலபக்கங்களை கதைகளுக்கு ஒதுக்க முன்வந்தன இப்பத்திரிகைகள். ஆனால் புழக்கத்திலிருந்த கதைகளோ பல இரவுகள் கடந்தும் சொல்லிச் சொல்கிற வகையில் மடங்கியும் சுருண்டும் நீண்டு செல்லும் தன்மை கொண்டதாயிருந்தன. எனவே அவற்றை பத்திரிகையின் குறைந்த பக்கங்களுக்குள் அடக்க முடியவில்லை. மட்டுமல்ல, அனைவருக்கும் தெரிந்தவையாய் இருக்கும் இக்கதைகள் சொல்லப்படும் விதத்தினாலேயே சுவையேறி காலந்தாண்டி நிற்கின்றன என்பதால் அவற்றை அச்சில் அதே ஈர்ப்புடன் வெளியிடுவது பெரும்சவாலாகவும் இருந்தது. ஆகக்கடைசியில், குறைந்தளவிலான பக்கங்களுக்குள் அடங்கிவிடுகிற புதிய கதைகளைத் தேடிய பத்திரிகைகளின் வியாபாரத் தேவையே ‘சிறுகதை’ என்ற வடிவத்தை கண்டடைந்தது. சிறுகதையின் தோற்றம் வியாபாரம்தான். உண்மையில் அது சிறிய கதை என்றே தொடக்கநிலையில் குறிப்பிடப்பட்டது. காலப்போக்கில் இவ்வகை கதைகளில் வெளிப்பட்ட பொதுத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு அதற்கான வரையறைகள் உருவானபோது சிறுகதை என்று மாற்றமடைந்தது.
சிறுகதை என்றதுமே அது இதுவரை கதையென்று சொல்லப்பட்டதிலிருந்து வேறுபட்ட ஒன்று என்பது விளங்கிவிடுகிறது. அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்து எட்கர் ஆலன்போ தொடங்கி இன்றுவரை ஏராளமானோர் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள். அரைமணி நேரம் முதல் அதிகபட்சம் இரண்டுமணி நேரத்திற்குள்ளாக ஒரேமூச்சில் வாசித்து முடித்துவிடக்கூடிய, குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, குறிப்பிட்ட ஒரு காலஎல்லைக்குள் நின்று, குறிப்பிட்டதொரு மையப்பொருளை விவரித்து எதிர்பாராதவகையில் முடியும் இறுக்கமான வடிவமே சிறுகதை என்பதுதான் இவர்கள் எல்லோரும் வரையறுத்த இலக்கணத்தின் சாரம். ஆனாலும் இலக்கணத்தை துல்லியப்படுத்த முடியாத போதாமையை உணர்கிறவர்கள் வால்டர் ஸ்காட், செகாவ், மாப்பசான் போன்றவர்களின் கதைகளை வாசித்து முடிக்கிறபோது கிடைக்கிற உணர்வுதான் சிறுகதையின் எல்லை என்று பூடகமாகவும் சொல்லத்தொடங்கினர். அதாவது சிறுகதை, வடிவத்தில் தங்கியிருக்கிறதா அல்லது அந்த வடிவத்திற்குள் பொருந்தி இயங்கும் உள்ளடக்கத்தில் தங்கியிருக்கிறதா என்பது இன்றுவரையும் அறுதியிடப்படாத விசயமாகவே நீடிக்கிறது.
மையப்பாத்திரம், எதிர் கதாபாத்திரம், காலத்தையும் சூழலையும் உள்ளடக்கிய கதைக்களம், எதைப்பற்றிய கதை என்ற முடிச்சு, அந்த முடிச்சை அவிழ்க்கும் இறுதிவரிக்கு வாசகரை கவனம்கூட்டி இழுத்துப்போகும் வேகம், இவற்றுடன் ஒருமை கொள்ளும் விதத்திலான காட்சிகளும் விவரிப்புகளும், மனவோட்டத்தின் அடுக்குகளும் மடிப்புகளும், கதையின் சாரத்தை விண்டுரைக்கும் பொருத்தமான தலைப்பு என்று எல்லாவகையிலும் தனித்துவமான கூறுகளைக் கொண்டு சமகாலத்தின் வாழ்வியலை நேரடித் தன்மையுடனும் எளிமையாகவும் முன்வைப்பதாயிருந்தன சிறுகதைகள். சமூகத்தின் அரசியல் பொருளாதார பண்பாட்டுதளங்களில் செல்வாக்கு செலுத்தும் கருத்துக்கள்- அதனடியான நிகழ்வுப் போக்குகள் தனிமனிதன் மீது செலுத்தும் தாக்கம் அல்லது அவற்றை தனிமனிதன் எதிர்கொள்ளும்போது ஏற்படும் உளவியல் சிக்கல்கள் என்று சிறுகதை தனக்கான செயற்தளங்களைக் கண்டடைந்தது. இயற்கைக்கும் தமக்குமான தொடர்பையும் தொடர்பின்மையையும் இயற்கையின் ஒருபகுதியாக இருந்து அறிவது தொடக்ககால சொல்கதைகளுக்கு அடிப்படையாக இருந்த நிலை சிறுகதைக்கு வரும்போது சமூகத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையேயான தொடர்பையும் தொடர்பின்மையையும் மனிதக்கண் கொண்டு அறிவதாக மாறுகிறது.
சிறுகதையானது சில குறிப்பிட்ட முன்னிபந்தனைகளை அதன் பிறப்பிலேயே கோரியது. அதாவது, யார் வேண்டுமானாலும் கதை சொல்லலாம் / கதை கேட்கலாம் என்று சொல்கதை மரபிலிருந்த ஜனநாயகத்தன்மையை அது எடுத்தயெடுப்பிலேயே ஒழித்துக்கட்டியது. எழுதுகிறவர் வாசகர் என்ற இருதரப்பாருக்குமே கல்வியறிவு அவசியம் என்றாக்கியது. கல்வியறிவு ஜனநாயகப்படுத்தப்படாத சமூகங்களில் சிறுகதையும் ஒரு குறிப்பிட்ட சிறுங்குழுவுக்கானதாகத்தானே இருக்கமுடியும் என்று அது கவலைப்படவில்லை. அது மிகத் தீர்மானகரமாக, பெரும்பான்மை மக்களை ஒதுக்கிவைத்துவிட்டு படித்தவர்களுக்கு மட்டுமேயோன வடிவமென்று சார்புநிலை எடுத்து தன்னை அறிவித்துக்கொண்டது.
சொல்கதை மரபில் கதை சொல்வதும் கேட்பதும் ஒரு குழுச் செயல்பாடாகவே இன்றளவும் தொடர்கையில் சிறுகதையோ தனித்த வாசிப்பைக் கோரியது. வாய்மொழி மரபில் கதைசொல்லியும் கேட்பாளிகளும் ஒரேபுள்ளியில் இணைக்கப்பட்டவர்கள். கதையை வளர்த்துச் செல்வதற்காகவும், கதை சொல்லும் நிகழ்வை உயிர்ப்புடன் மாற்றுவதற்காகவும், ‘உம்’ கொட்டும் கேட்பாளிகள், கதைசொல்லிக்கு நிகரான அலைவரிசையில் பங்கேற்கின்றனர். ஆனால் சிறுகதையின் வாசகர் யாரென்று எழுத்தாளர் அறிந்தாரில்லை. முற்றும்முடிவான பிரதியாக வெளியாகும் தன் கதை புரியுமோ புரியாதோ என்ற பதற்றத்தின் அழுத்தம் ஆழ்மனதை வழிநடத்தும்போது, எழுத்தாளர் தான் எழுதவந்ததை விடுத்து முகம் தெரியாத அந்த வாசகர் ஏற்றுக்கொள்ளும் சாத்தியங்களுள்ள ஒரு கதையை எழுதி முடிக்கவே விரும்புகிறார். அதாவது ஊடகத்திற்கு அடுத்தபடியாக அல்லது இணையாக எழுத்தாளரை கட்டுப்படுத்துகிறவராக வாசகர் உருவெடுக்கிறார். சிறுகதையின் சாத்தியங்களை மதிப்பீடு செய்யும் அதிகாரம் வாசகரிடம் விடப்படுகிறது. பரந்த சமூகத்தின் நிகழ்வுகளிலிருந்து எழுதுவதற்குரியதை தெரிவு செய்யும் அரசியல் எழுத்தாளருக்கு இருக்கிறதென்றால், எழுதப்பட்டதை கதையாக ஏற்பதற்கும் நிராகரிப்பதற்குமான அரசியல் வாசகருக்குள்ளது.
மறுதலையாகவும் இவ்விசயத்தில் வாசகர் சார்பாக பேச வேண்டியிருக்கிறது. வாய்மொழி மரபில் சொல்லப்படும் கதைகள் எக்காலத்தில் உருவாகியிருந்த போதிலும் அவை சொல்லப்படும்போது சமகாலப் பிரச்னைகளும் அவற்றுக்குள் உள்வாங்கப்பட்டன. கேட்பவர்களுக்கு கதை புரியாதபோது புரியும் வகையில் வேறுமாதிரியாக சொல்லிப் பார்க்கும் சாத்தியத்தையும் கொண்டிருந்தன. புரிய வைப்பதற்கான உதாரணங்கள், மொழிரீதியான விவரிப்புகள் வழியாக அந்தக் கதைகள் சமகாலத்தன்மை கொண்டவையாகவும் உள்ளுர்மயப்பட்டதாகவும் மாறுவது சாத்தியமாயிருந்தது. இதன் காரணமாகவே ஒரே கதை வெவ்வேறு வகையில் சொல்லப்படும் பன்முகப் பிரதியாக மாறும் தன்மையை இயல்பிலேயே கொண்டிருக்கிறது. கதையின் ஓட்டத்தை குறுக்கீடு செய்யவும் கேள்வியெழுப்பவும் வாய்மொழி மரபில் கேட்பாளிகளுக்கு உரிமையிருக்கிறது. ஆனால் எழுதப்பட்ட சிறுகதைகள் அதன் இறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே வாசகரை அடைவதால் அவை எவ்வித குறுக்கீட்டுக்கும் திருத்தத்திற்கும் இடம் கொடாத இறுகிய வடிவத்தைக் கொண்டிருக்கிறது. எழுதப்பட்ட சிறுகதையின் மீது கருத்து சொல்ல மட்டுமே வாய்ப்புள்ளவராயிருக்கிறார் நமது நவீன வாசகர்.
தொனியும் ஏற்றஇறக்கமும் அங்க அசைவுகளும் மௌனங்களும் இடைவெளிகளும் கதையின் பிரிக்கமுடியாத பகுதியாகி குரல்மொழியும் உடல்மொழியும் இணந்து ஒரு நிகழ்த்துக்கலையாக தொழிற்படும் வாய்மொழிக் கதைகள் காலங்காலமாக பெரும்பாலும் குழந்தைகளுக்காகவே சொல்லப்பட்டு வந்தன. அதாவது குழந்தைகளுக்கு புரியும் வகையிலும் அவர்களை ஈர்க்கும் வகையிலும் குழந்தைமை ததும்பும் அவர்களது அகவுலத்தைச் சிதைக்காமல் ஊடுருவிப் படிகிற நெருக்கத்துடனும் சொல்லப்பட்டன. ஆனால் இந்த நிலைக்கு விரோதமாக சிறுகதைகள் அனைத்தும் வயதுவந்தோர் படிப்பவையாக முன்னிறுத்தப் பெற்றன. எனவே கதைகளின் தலையாய பங்குதாரர்களும் காலத்திற்கு காலம் கதைகளை பதியனிட்டு வளர்த்தவர்களுமாகிய குழந்தைகளுக்குப் பிடித்தமான வகையில் சொல்லப்பட்டு வந்த கதைகளில் பொதிந்திருந்த அற்புதங்களும் வினோதங்களும் மாயாஜால தந்திரங்களும் போக்கடிக்கப்பட்டு, அறிவின்வயப்பட்ட – தர்க்கங்களால் விரித்து வைக்கப்படுகிற- வயதுவந்தோருக்கான- மொழியின் விளையாட்டாக உருவெடுத்த சிறுகதையில் சமூகம் அதுகாறும் வளர்த்தெடுத்து வைத்திருந்த கதையம்சங்கள் காணாமல் போனதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
புத்தம்புதிதாய் காட்டிக்கொள்ளும் முனைப்பில் சிறுகதைகள் ‘இன்றைப் பற்றியும், இன்றைய யதார்த்தம் பற்றியும்’ மட்டுமே பேசிக்கொண்டிருக்க, வாசகருக்கோ நேற்றும் நாளையும் தேவைப்பட்டன. நேற்று என்ன நடந்தது என்பதை தர்க்கத்தின் துணையோடு விளக்குவதற்கு வரலாறு முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, வரலாற்றின் விடுபடல்களையும், அதன் இருண்ட பக்கங்களில் மறைக்கப்பட்டவற்றையும், நிகழ்ந்துவிட்ட சம்பவங்களை கற்பனையாகவேனும் குறுக்கீடு செய்து மாற்றியமைக்கிற எளிய மக்களின் விருப்பார்வங்களையும் வாய்மொழி மரபு புனைவாக வைத்திருந்தது. இந்த நேற்றின் புனைவுகளுக்குள் இடம்பெற்ற அசாத்தியங்கள், அமானுஷ்யங்கள் எல்லாமே நாளை நடந்துவிடக்கூடியவைதான் என்று நம்பகம் கொள்ளுமளவுக்கு புனைவுக்குள் அவை பொருந்தி வந்தன. இவ்விரண்டு கால எல்லைகளுக்கிடையிலும் ஊடாடி நிற்கும் கதை இன்றின்மீதான விமர்சனமாகவும் அமைந்தது.
சொல்முறை, மொழி, காலத்தின் விஸ்தீரனம், கதைப்பரப்பு, நிலவியல், அதீத கற்பனை, சாகசங்கள் என்று வாய்மொழிக் கதைகளில் புனைவின் கட்டற்ற சாத்தியங்களைக் கண்டு பரவசமடைந்திருந்த சமூகமனத்திற்கும் சிறுகதைக்கான வாசக மனத்திற்குமிடையே நிலவிய இடைவெளியை நிறைக்க சிறுகதையின் தூயவடிவம் சிதைக்கப்பட்டது. வாய்மொழிக் கதைகளின் சாத்தியங்களும் நுணுக்கங்களும் உத்திகளும் மொழியும் உள்ளிறக்கப்பட்டு சிறுகதை பலவகைமைக் கொண்ட வடிவமாக மாற்றப்பட்டது. தாங்களே பட்டறையில் வைத்து உருக்கிப் பிசைந்து உருவாக்கியதுபோல இன்று பலரும் பீற்றிக்கொள்கிற அ-நேர்க்கோட்டுக் கதைகள், மாய எதார்த்தக்கதைகள், வட்டார வழக்குக் கதைகள் என்பவையெல்லாம் நாம் தொலைத்துக்கட்டிவிட்டு வந்த வாய்மொழிக் கதைகளில் இருந்து திருடப்பட்டவைதான் என்றறிவோம் மானிடரே.
சொல்வது கேட்பது என்ற உயிர்ப்புத்தன்மை கொண்ட வாய்மொழி மரபின் நேரடி ஊடாட்டத்திற்கு பதிலாக எழுதுகிறவருக்கும் வாசிப்பவருக்குமிடையே பத்திரிகை என்ற ஊடகம் செயல்பட்டாக வேண்டியிருந்தது. காதிருந்தால் கேட்டுக் கொள்ளலாம் என்றிருந்த நிலைமாறி காசிருந்தால் மட்டுமே வாங்கிப் படிக்கமுடியும் என்று கதையை ஒரு சரக்காகவும் மாற்றி சிறுமைப்படுத்திய பெருமை இந்த ஊடகங்களையேச் சாரும். இந்த ஊடகங்கள் மூலதனத்தோடு தொடர்புடையவை. மூலதனம் அதற்கேயுரிய தனித்த அரசியல் கரிசனங்களைக் கொண்டது. ஆகவே ஒரு கதையின் பிரசுரத்தகுதி மூலதனத்தாலேயே தீர்மானிக்கப்படுவதாக மாறியது. அதாவது மூலதனத்தின் மனங்கோணாதபடி எழுதப்படுகிற கதைகளே வாசகரை வந்தடையும் சாமர்த்தியம் கொண்டவையாக மாற்றப்பட்டன. ஆகவே, சிறுகதை எழுத்தாளர் (அவர் தன்னை எவ்வளவு சுதந்திரமானவராக அறிவித்துக் கொண்டிருந்த போதும்) பத்திரிகைகள் ஒதுக்குகிற பக்கங்களுக்குள் தனது கதையை மட்டுமல்லாது தன்னையும் சுருக்கி வைத்துக்கொள்ளவேண்டிய மறைமுக நெருக்கடிக்கு ஆளாக வேண்டியிருந்தது. சந்தை உருவான பிறகு சரக்கு தேவைப்படுவது இயல்புதானே? இப்படியாக எழுதப்பட்ட சிறுகதை ஒன்றை ‘சாடர்டே ஈவினிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை 1920ம் வருடம் 3400 பவுண்டு சன்மானம் கொடுத்து கொள்முதல் செய்து வெளியிட்டது.
எழுத்தறிவு பெற்றவர்களால் எழுத்தறிவு பெற்றவர்களுக்காகவே எழுதப்படுகிற இந்த சிறுகதைகளை ஒரு சமூகத்தின் முழுமையான கண்ணாடியாகவோ இன்னும் சற்றே மேலேறிப்போய் உயர்வுநவிற்சியாக ஆன்மாகவோ நிறுவ முயற்சிப்பது அராஜகம்தான். நவீனக்கல்வியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நேரச்சுருக்கமும் சேர்ந்து உருவாக்கிய சிறுகதை என்ற வடிவத்தை கைக்கொண்ட சின்னஞ்சிறிய குழு, பரந்த சமூகத்தில் காலங்காலமாக தழைத்துநிற்கும் கதை வடிவங்களை புறந்தள்ளியும், அதன் உயிர்ப்பான அம்சங்களை உள்ளிழுத்து மறைத்துக்கொண்டும் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தது. அதுவரையான கதைகள் அனைத்தையும் நாட்டுப்புறத்தார் கதை என்ற தலைப்பின்கீழ் ஒதுக்கிவிட்ட சிறுகதையாளர்கள், உண்மையில் தம் கதைகளை நகர்ப்புறத்தார் கதை என்றோ படித்தவர்களுக்கான கதை என்றோ நேர்மையாக அழைத்துக்கொள்ளாமல், தாங்கள் எழுதுவதே ஒட்டுமொத்த சமூகத்தின் கதை என்று நிறுவிமுடித்தனர். எழுத்தறிவின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் இந்த நிகழ்ச்சிப்போக்கினால் பாரம்பர்ய கதைகள் பாமரர்களின் கதையாக குறுக்கம் பெறுவது தவிர்க்கமுடியாததாகியது. ஒவ்வொரு வீட்டிலுமிருக்கும் கதைசொல்லிகளையும் ஊமையாக்கிவிட்டு ஊருக்கொரு எழுத்தாளரை உருவாக்கும் இந்த சிறுகதை வடிவத்தால், எழுத்தாளர்கள் சமூகத்தில் ஒரு தனித்தப்பிரிவாகினர். காலந்தோறும் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தவர்கள் மக்களோடு மக்களாய் கரைந்திருக்க, எழுத்தாளர்களோ தங்களை சாமான்யர்களை விடவும் ஒருபடி மேலானவர்கள் என்று கற்பிதம் கொள்வதற்கான கோணல் இங்கேதான் தொடங்கியது.
3
கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மாணவப்பருவம் தொட்டே ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் முடிந்தவர். சட்டென்று பரவலான வாசகப்பரப்பை அடைவதற்கும் பிரபலமாவதற்கும் பெருந்தொகையை ராயல்டியாக ஈட்டுவதற்கும் ஆங்கிலம் ஒரு வழியாக இருக்கும் நிலையில் அவர் தன் மக்களின் கதையை தம்மினத்தின் கிக்கியூ மொழியிலேயே எழுதத் தொடங்கினார். தன்நாட்டை அடிமைப்படுத்தியிருந்த காலனியவாதிகளின் மொழியான ஆங்கிலத்தை நிராகரித்த அவரின் முடிவு நமக்கு தெரிவிக்கும் செய்திதான் என்ன? ஆதிக்கவாதிகள் அவர்களது மொழியையும் ஒரு அடக்குமுறைக் கருவியாக பயன்படுத்தும்போது ஒடுக்கப்பட்டவர்கள் அதை நிராகரிப்பது வெறுமனே முகத்தைத் திருப்பிக் கொள்வதல்ல. அது ஒரு எதிர்ப்பு நடவடிக்கை. மட்டுமல்ல, தன் சொந்த மொழியை எதிரியின் முகத்துக்கு நேரே ஒரு ஆயுதத்தைப்போல தூக்கிப் பிடிப்பதுமாகும். தன் சொந்த மக்கள் படிப்பதற்கான கதையை அவர்களது மொழியிலேயே எழுதுவது என்பது மிகுந்த அரசியல்பூர்வமான நடவடிக்கையுமாகும். அவரே முன்மொழிந்தது போல் காலனிய ஓர்மையிலிருந்து விடுபடுவது என்றால், அதன் ஒவ்வொரு முனையையும் எதிர்ப்பது அல்லது காலனியம் முன்வைத்த அறங்கள் மதிப்பீடுகள் எல்லாவற்றுக்கும் எதிர்த்திசையில் செல்வதன்றி வேறில்லை.
இந்தியாவும்தான் முன்னூறாண்டுகாலம் காலனியாதிக்கத்தின் கீழிருந்தது. அந்த காலனியாதிக்கம் அறிமுகப்படுத்திய கல்வியின் தொடர்பில் இந்தியாவுக்கு வந்து சேர்ந்த ஒரு இறக்குமதிச் சரக்காக சிறுகதை வடிவத்தை யாரும் பார்த்தார்களா என்று தெரியவில்லை. காலனியாட்சி கொண்டுவந்து சேர்த்த பலதையும் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டதுபோலவே ‘கலைச்செல்வங்கள் யாவற்றையும் கொணர்ந்திங்கு சேர்க்கும்’ பேரார்வத்தில் சிறுகதையும் இயல்பாக உள்வாங்கப்பட்டிருக்கலாம். அல்லது மேலைச்சரக்கென்றால் ஒசத்தி என்கிற மனோபாவமும்கூட தொழிற்பட்டிருக்கலாம். எனவே காலனியாதிக்கம் தந்த கல்வியை கற்பதற்கு எவ்வித சமூகத்தடையுமின்றி வாய்ப்பு பெற்றிருந்த சாதிகளிலிருந்து உருவான படித்தப் பிரிவினர், மேற்கத்திய சிறுகதைகளை முன்மாதிரியாகக் கொண்டு தமது வாழ்வனுபவங்களை கதைகளாக எழுதிப் பார்க்க துணிந்திருக்கக் கூடும். தமிழிலும் இப்படியாகத்தான் சிறுகதை வந்து சேர்ந்திருக்க முடியும் என்பதற்கு அதன் தொடக்ககால எழுத்தாளர்களின் சமூகப் பின்புலமே சாட்சியமாயிருக்கிறது.
எது எப்படியாயிருப்பினும் சிறுகதை என்ற வடிவம் உலகளவில் செல்வாக்குள்ள ஒரு வடிவமாக தன்னை நிறுவிக் கொண்டுள்ளது. ஆனால் அது இன்னும் படித்தவர்களுக்கேயானது என்ற நிலையிலிருந்து கீழிறங்கி வரவில்லை, வரவும் முடியாது. எனில், நாம் திரும்பத்திரும்ப படித்தவர்களுக்கான கதைகளையேதான் எழுதிக் கொண்டிருக்கப் போகிறோமா? கல்வியறிவு பெற்றவர்களிலும் இலக்கிய ஆர்வம் கொண்டுள்ளவர்கள் எவ்வளவு பேர்? அவர்களிலும் கதைகளுக்கான வாசகர்கள் எத்தனை சதமானவர்கள்? இந்த சொற்ப அளவிலானவர்களை பொருட்படுத்தி எழுதப்படுகிறவைகளைப் பற்றிய கரிசனம்தான் நம்மிடம் மிஞ்சியிருக்கிறதா? எழுத்திலிருக்கும் அறிவே அறிவு என்கிற மேற்கத்திய, இந்திய உயர்சாதிய நம்பிக்கைகளுடன் வெகுவாக ஒத்துப்போகிறதா சிறுகதை மீதான நமது ஈர்ப்பு?
பரந்த வெகுமக்களுக்கான கதைகள் எங்கே? அவற்றை உருவாக்கும் முயற்சிகள்தான் என்ன? புத்தகங்களை பரவலாக்குவது, வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்துவது, புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதைகளை எளிமைப்படுத்தி தெருக்கள்தோறும் வாசித்துக் காட்டுவது போன்ற நடவடிக்கைகள் மீண்டும் எழுத்தறிவின் அதிகாரத்தையே நிறுவியது என்று சொல்லலாம்தானே? \
தமிழ்ச் சிறுகதைகளின் கருப்பொருள்கள் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்திருக்கிறது. அது குளத்தங்கரை அரசமரத்தையே இன்னும் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. அது கிராமப்புறங்களை நோக்கியும் அடித்தள மக்களை மையப்படுத்தியும் நகர்ந்திருக்கிறது. பெண்களை, ஒடுக்கப்பட்ட சாதியினரை, சிறுபான்மைச் சமூகங்களை, விளிம்புநிலையினரை கதைமாந்தர்களாகக் கொள்ளவும் அது தயங்கியதில்லை. ஆனால் அவையெல்லாமே மீண்டும் மீண்டும் எழுத்தறிவு பெற்றவர்களில் உள்ள வாசகர்களின் அறிதல் எல்லையை ஆழமும் விரிவும் கொண்டதாக ஆக்கியுள்ளதேயன்றி வேறென்ன நிகழ்த்தியிருக்கிறது என்ற கேள்வியை எப்போது எழுப்பப் போகிறோம்?
சாதிய, பாலினத்தடைகளைத் தாண்டி ஒடுக்கப்பட்ட சாதியினரும், பெண்களும், அரவாணிகளும், இதர விளிம்புநிலையினரும்கூட தத்தமது வாழ்வை எழுதவந்துவிட்ட நிலையில், சிறுகதை வடிவத்தை குறை சொல்ல என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம். இதே சமூக அடுக்கிலிருந்து எழுத்தறிவு பெற்ற புதிய உள்ளடுக்கினர், இதே உள்ளடுக்கினருக்காகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே உண்மை. எனில் சிறுகதை என்கிற வடிவத்தை தொலைத்து தலைமுழுகிவிடலாமா? தேவையில்லை. எழுத்தறிவு பெற்றவர்களில் இலக்கிய ஆர்வமுள்ள ஒரு சிறு குழுவுக்கான வடிவமாக அது இருந்துவிட்டுப் போகட்டும். நாம் இங்கே விவாதிக்க வேண்டியது, காலனியாதிக்கம் கொண்டுவந்து சேர்த்த- வடிவத்தை கைக்கொள்வதற்காக, கதை சொல்லும் நமது நெடிய மரபையும், விதவிதமான கதைவடிவங்களையும் கைவிட்டுவிட வேண்டுமா என்பதுதான். அப்படி யாரும் அறிவித்துவிடவில்லை என்றாலும் உண்மையில் அதுதான் நடந்திருக்கிறது. அச்சில் ஏறியவை மட்டுமே கதைகள் என்ற கற்பிதத்திற்கு நாம் இரையாகியிருக்கிறோம்.
சிறுகதையை ஒரு கூடுதல் வடிவமாக உட்செறித்துக் கொண்டு, நமது பாரம்பரிய சொல்கதை மரபை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. கேட்பாளிகளின் வயது, பாலினம், சொல்லப்படும் இடம், காலம் போன்றவற்றை கணக்கிலெடுத்து அததற்குரிய கதைகளைக் கொண்டிருந்த அந்த மரபு இன்னும் நம் மக்களிடம் தங்கியிருக்கிறது. பாரம்பரியக் கதை மரபு என்றதும் ‘ஒரே ஒரு ஊர்ல’ என்று தொடங்குகின்ற கதைகளை ஊரெங்கும் சொல்லித் திரிய வேண்டும்போல என்று அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. எழுத்து வடிவத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிற கதைசொல்லியை உயிர்ப்பித்து அவர்கள் வாழ்க்கை குறித்து புனைந்துவைத்திருக்கும் கதைகளை கேட்பதற்கு நம் காதுகளை திறந்துவைக்க வேண்டும் என்பதும், அந்த மக்களிடம் சொல்வதற்கான கதைகளைப் புனைவதற்கு நமது இலக்கியவுள்ளம் இயங்கவேண்டும் என்பதுமே இதற்கு பொருள். மரபை மீட்பதென்ற பெயரில் பழமைக்குள் போய் பதுங்கிக் கொள்வதற்கும், வேர்களைத் தேடி மண்ணுக்கடியில் பாய்வதற்குமுள்ள வேறுபாட்டை உணரத்தொடங்குகிற எவருக்கும் இது சாத்தியமே.
(2009 செப் 19-21வரை தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில இலக்கிய முகாமின் விவாதத்திற்கு.)
நன்றி: https://aadhavanvisai.blogspot.com/2013/01/blog-post_25.html
– ஜனவரி 25, 2013.