சிநேகிதனே!.. சிநேகிதனே!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 281 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம் – 5

ராமுவிற்குப் பொறுக்க முடியவில்லை.

நேராக வசந்தைத் தேடிக்கொண்டு சென்றான்.

அலுவலத்தில் உள்ள தனி அறையில் அவன் கணணியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

நண்பனைக் கண்டதும், ‘‘வா ‘‘ வரவேற்றான்.

“இந்து புருஷனைக் கொன்னாச்சு. அடுத்து?” – ராமு கேட்டு அவன் எதிரிலமர்ந்தான்.

“நான்… நான்… கொன்னேனா?” வசந்த் கணணியிலிருந்து விலகி துணுக்குற்றான்.

“பின்னே தானாய் போய் அவன் லாரியில விழுந்தானா?” – ராமு நேரடியாகவே தாக்கினான்.

“எனக்கும் அந்த விபத்துக்கும் சம்பந்தமில்லே இல்லே.”

“பொய்!”

“நிசம்!”

“என்கிட்ட சும்மா பீலாவிடாதே வசந்த். நீ யாரு, எப்படிப்பட்டவன்னு எனக்கு தெரியும். லாரி டிரைவர் சாமிக்கண்ணுகிட்ட நீ பேசி முன்பணம் கொடுத்ததெல்லாம் எனக்கு தெரியும்.”

“எ…எங்கே எப்புடி?” வசந்த் கேட்கும்போதே வேர்த்தது.

“நேரம் காலம் சரியா சொல்லனும்ன்னா இந்து திருமணத்துக்கு முதல் நாள். அவ கலியாணத்துக்குக்கூட நீ உன் காரை ஓட்டிப் போகலை. சாமிக்கண்ணுதான் சாரதியாய் வந்தான். காரணம் திருமணத்துல நீ அவனுக்கு ஆள் காட்டி விட்டே. அதுமட்டுமல்லே வசந்த்! அவன் அன்னையிலேர்ந்து இந்து புருசனைக் கண்கொத்தி பாம்பாய் பின் தொடர்ந்தான். அவன் போற இடத்துக்கெல்லாம் இவனும் போனான். எல்லாம் நான் கவனிச்சேன்”

வசந்திற்குள் திகில் புகுந்தது. நண்பனைப் பார்க்கவே பயமாக இருந்தது.

“மாலா, கலா, மீனா வரிசையில வெங்கடேஷ் நாலாவது. கலா, மீனா, மாலால்லாம் உன் கற்பழிப்புல களங்கப் பட்டு தற்கொலை செய்ஞ்சுக்கிட்டாங்க. வெங்கடேஷ் காரியமும் விபத்துன்னு முடிவாச்சு. இன்னும் எத்தனைப் பேரைக் கொல்லப்போறே, இறக்க காரணமா இருக்கப் போறே வசந்த்?”

‘எத்தனை தெரிந்து வைத்திருக்கிறான்?!’ – வசந்த் வியர்வையில் தொப்பரையாய் நனைந்தான்.

“பாவம் மேல பாவம் தப்பு வசந்த். அவைகள் திருப்பித் தாக்கும்போது உன்னால ஒன்னும் பண்ண முடியாது. வெங்கடேசைக் கொன்னதுக்கான காரணத்தை நான் சொல்றேன். இந்து புருசன்ங்கிறதுனால அவன் உனக்கு எதிரி, வில்லன் கொன்னுட்டே. இந்த துபாய்க்குப் பறந்து போய்ட்டாள்ன்னா கைக்கு கிடைக்கமாட்டாள் என்கிற ஆத்திரம் போட்டுத் தள்ளிட்டே. அது மட்டுமா..? உனக்கு முன்னாடி அவன் இந்து அனுபவித்த கோபம் வேற. இல்லியா..?” – எல்லாம் தெரிந்தவன் போல் கேட்டு பார்த்தான்.

வசந்த் ஆடவில்லை, அசையவில்லை.

ராமுவிற்கு அவனைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது.

“உன் ரகசியமெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கிற என்னை கொல்லக்கூட உனக்கு தோணும். ஆனா கொல்ல முடியாது. அதுதான் நான்!”

“….”

“இந்து வாழ்க்கையைக் குலைச்சாச்சு. அடுத்து அவளை எப்படி நெருங்கிறதா திட்டம்?”

“…”

“நீ எதை சொல்லியும் மழுப்ப வேணாம். உன் மனசுல உள்ளதைத் தைரியமா என்கிட்ட சொல்லு. மனம்விட்டுப் பேசு. இல்லேன்னா உன் மனசுல இருக்கிறதை நான் சொல்றேன்” வசந்த் வாயைத் திறந்தான்.

“இந்து துபாய் போகலைன்னாலும் வெங்கடேஷ் உசுரோட இருந்தா நான் நெனைச்சதைச் சாதிக்க முடியாது ராமு. புருசன் தெம்பு தைரியம், அவன் சம்பாதிச்சு அனுப்புற பணம் காசுனால இந்து வளைய மாட்டா, வளைக்க முடியாது. இப்போ அவ ஆணி வேர் வெட்டின மரம்.. திருமணமானதுனால பொறந்த இடத்துல ஒட்டினாலும் ஒட்ட முடியாது. புகுந்த வீட்டிலேயும் புருசனில்லாதனால அங்கேயும் ஒட்ட முடியாது. இனி அவ சொந்த கால்ல நின்னாதான் வாழ்க்கை. இந்த காரணத்துக்காகவும் வெங்கடேஷை நான் போட்டுத் தள்ளினேன் ராமு.” – சொன்னான்.

‘அம்மாடி! உள்ளுக்குள் எத்தனை திட்டம்?‘ – கேட்ட இவனுக்கு மலைப்பாய் இருந்தது.

“உனக்கு இந்துவைப் பத்தியே சதா சிந்தனையா வசந்த்?” – ராமு அவனைத் திருப்பிக் கேட்டான்.

“நான் நெனைச்சப்படி அவளை அடையனும். அதன்பிறகுதான் மறப்பு!’’

“எச்சல் பட்டதினால உனக்கு அவள் மேல வெறுப்பு வரலையா வசந்த்..?”

“இல்ல. தொழில் முறையில எனக்கு ஒரு தொழிலதிபர் பழக்கம். அவருக்கு இப்போ வயசு அம்பது. நாங்க வயசு மறந்து செக்ஸ் பேசுவோம். அவருக்குப் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தன்னோட படிக்கிற ஒருத்தி மேல ஆசை. ஆனா அவகிட்ட சொல்ல பயம். இவர் இப்படி தடுமாறிக்கிட்டு இருக்கும் போது அதே பள்ளிக்கூடத்துல பதினொன்னாவது படிக்கிறவன் அவளைக் காதலிச்சு கணக்கை முடிச்சுட்டான். இவருக்கு மனசு தவிச்சாலும் ஆசை அடங்கலை. இவர் முடிக்கலாம்ன்னு முயற்சி செய்யிறப்போ அவளை வாத்தியார் கொத்திக்கிட்டு போய்ட்டார். அடுத்து அவள் வேலைக்குப் போன பிறகும் எத்தனையோ பேர்கிட்ட பழக்கம் பேர் சுத்தமா கெட்டுப்போச்சு. மறுபடி எவனுக்கோ வாழ்க்கைப்பட்டாளாம் மூணு புள்ளை பெத்தாளாம். அவளுக்கு அம்பது வயசிலேயும் அழகு கொறையல. இவருக்கும் ஆசை தணியலை. சமீபத்துல இவளும் அவரும் தனியா சந்திச்சிருக்காங்க. இவர் தன் மனசுல உள்ளதைச் சொல்லியிருக்கார். அவளும் சம்மதிக்க இப்போ அவருக்கு நிம்மதி. இதை ஏன் சொல்றேன்னா குறி வைக்கிற ஆசை எத்தனைக் காலமானாலும் அவ எப்படி ஆனாலும் அழியாது ராமு” – நிறுத்தினான்.

“ஆக இந்துதான் உன் இலக்கா?”

“ஆமாம்”

“இந்துகிட்ட அப்புடி என்ன இருக்கு வசந்த்?”

“பெண்களிடம் என்ன இல்லே ராமு..?! சொர்க்கம் அவர்கள். இதுவரைக்கும் நடந்த உலகப்போர்கள்ல முக்கால்வாசி பெண் சம்பந்தப்பட்டதுதான். ஏன் முழுசும் வைச்சுக்கலாம். எல்லா போருக்கும் பின்னாலேயும் ஒரு பெண் நிச்சயமிருப்பாள். பெண்களால நிறைய சாம்ராஜ்யங்கள் அழிஞ்சிருக்கு. ஆண் பெண்ணுக்கு அபிஷேகம் பண்ணிணிருக்கான் சொத்து இழந்திருக்கான். ஏன்…. நாடு, முடி அனைத்தையும் இழந்திருக்கான்”

“ஏன் பையித்தியமும் பிடிச்சிருக்கான்” – ராமு வெறுப்பாய்ச் சொன்னான்.

“ஆமாம். பெண்ணால அதுவும் நடந்திருக்கு. அதனால பெண்ணுங்ககிட்ட என்ன இருக்குன்னு கேட்காதே. இருட்டுல எல்லா பெண்ணும் ஒண்ணுன்னு சொல்றவன் முட்டாள். அப்படி ஒண்ணுன்னா எவனும் ஒருத்தியைத் தவிர வேறொருத்தியைத் தேடிப் போக மாட்டான். ஒவ்வொன்னும் ஒரு ரகம்.”

“உனக்கு முத்திடுச்சு!”

“முத்தட்டும். அதுதான் எனக்கு வேணும். முத்தலைன்னா வெங்கடேசை நான் ஏன் கொல்றேன்..? அவன் எனக்கு இடைஞ்சல்.”

சத்தம் போடாமல் எதிரில் வந்து நின்ற ஆளைப் பார்த்ததும் இருவருமே திடுக்கிட்டார்கள்.

“வா சாமிக்கண்ணு!” வசந்த்தான் சுதாரித்து வரவேற்றான்.

“கும்பிடுறேன் எசமான்!” – அவன் வணங்கினான்.

“என்ன விசயம் வந்தே?”

“வெளியில கௌம்பி நாளாச்சுங்க”

“என்ன வேணும்?”

“கொ…கொஞ்சம் ப..ணம்….‘‘- தலையைச் சொரிந்தான்.

“எவ்வளவு?”

“குடுக்கிறதைக் குடுங்க”

“இருபதாயிரம் போதுமா?”

“இப்போதைக்குப் போதும்.”

“மறுபடியும் வருவீயா?”

“அ…. அது சூழ்நிலையைப் பொறுத்தது..”

“இந்தா!” மேசையைத் திறந்து புது இருநூறு ரூபாய் கட்டைத் தூக்கிப் போட்டான்.

சாமிக்கண்ணு நாய் போல கவ்வி பிடித்துக் கொண்டான்.

“ஒண்ணும் பிரச்சனை இல்லியே?”

“இல்ல எசமான்.”

“எப்படி சொல்றே?”

“இதுவரைக்கும் போலீஸ்காரங்களுக்கு யார் வண்டி அடிச்சுதுன்னு தெரியாது எசமான்.”

“போலீஸையெல்லாம் சாதாரணமா எடைபோட்டுடாதே. அவுங்க கில்லாடிங்க. தூங்குறா மாதிரி தான் தெரிவாங்க. ஒரு நாளைக்குக் குபீர்ன்னு பாய்ஞ்சு சரியா புடிச்சுடுவாங்க.”

“அதையும் நான் கவனிச்சுக்கிட்டுதானிருக்கேன் எசமான்.”

“லாரி ஓடுதா?”

“அது பாட்டுக்க அது வேலையைச் செய்ஞ்சிக்கிட்டிருக்கு.”

“யார் ஓட்டுறா?”

“நான்தான் தமிழ்நாட்டுல ஓட்டுறதில்லே. ஆந்திரம், கர்நாடகம், கேரளான்னு ரவுண்டு அடிக்கிறேன்”

“போலீஸ் மேல அவ்வளவு பயமா?”

“பயம் இருக்கத்தானேங்க செய்யும். ஆனாலும் நானும் போலீஸ் மேல ஒரு கண் வைச்சிருக்கேன்.”

“உஷாரா இரு போ” – வசந்த் விடை கொடுத்தான்.

அவன் நகர்ந்தான்.

சாமிக்கண்ணு தலை மறைந்ததும், “பதுங்குறவனுக்கு எத்தனை நாளைக்குப் பால் வார்க்க முடியும் வசந்த்?” – ராமு கேட்டான்.

“வார்க்கிறவரைக்கும் வார்ப்போம். முடியாதன்னைக்கு அடிப்போம்”

“ஒருத்திக்காக இவ்வளவு பிரயாசைப்படனுமா வசந்த்?”

“அதைப் பத்தி பேசாதே.”

“இந்துவை எப்புடி வழிக்கு கொண்டுவரப்போறே?”

“அது பரம ரகசியம்” – சொல்லி எழுந்தான்.

‘நான் கண்டுபிடிக்கிறேன்!‘ – ராமுவும் தன் மனசுக்குள் சொல்லி எழுந்தான்.

அத்தியாயம் – 6

நல்ல வசதியான பங்களா. ஆனால் உள்ளே எவர் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை.

இந்து இடிந்து போய் அமர்ந்திருந்தாள். சுவரில் மாலை போட்டு தொங்கிய வெங்கடேஷ் புகைப்படத்தையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

விபத்து அவள் கண்ணுக்குள்ளேயே இருந்தது. வெங்கடேஷ் லாரி சக்கரங்களில் மாட்டி கூழாகி ரத்தச் சேறாக சாலையில் கிடந்தது இன்னும் அவள் மனசைவிட்டு அகலவில்லை.

தணிகாசலத்திற்கும் கமாட்சிக்கும் மகன் போன துக்கத்தைவிட மருமகள் நிலையைப் பார்க்கத்தான் பாவமாக இருந்தது.

“என்னங்! நாலைஞ்சு நாளா இப்புடி சோறு தண்ணி இல்லாம கெடக்கிறாளே உசுரு என்னத்துக்கு ஆகும்.” – காமாட்சி கணவனிடம் சொல்லி கவலைப்பட்டாள்.

“இவளும் அந்த லாரிலேயே அடிபட்டு செத்திருந்தால் புருசனையும் பொண்டாட்டியையும் ஒரே பாடையில தூக்கிக் கொண்டுபோய் எரிச்சிட்டு ரெண்டும் போய்ட்டுங்கிற ஒரே கவலையில இருக்கலாம். அவன் போய் அவள் இருந்து உசுரை வாங்கறாளே!” – அங்கலாய்த்தாள்.

இன்றைக்கு அவளுக்கு ரொம்ப தாங்க முடியவில்லை.

“என்னங்க! எவ்வளவு வற்புருத்தியும் பச்சைத்தண்ணிகூட பல்லுல விடாம இருக்கா. இப்புடியே இருந்து நாளைக்கு உசுரை விட்டுட்டான்னா கூட பொறந்தவனுக்கு நாமதான் பதில் சொல்லனும். எனக்கு மனசுல ஒன்னு தோணுது.” – கணவனைப் பார்த்தாள்.

“என்ன?”

“பொறந்தவன்கிட்ட கொண்டு விட்டுடலாம்.”

“என்ன சொல்றே?”

“இந்து நம்ப வீட்டுல இன்னும் வேர் பிடிக்காத செடி. அவ இங்கே இருந்தாள்ன்னா புருசன் ஞாபகம்தான் வரும்.‘‘ தணிகாசலம் மனைவியைக் கூர்ந்து பார்த்தார்.

“திருமணம் ஆகி முழுசா ஒரு மாசம் ஆகலை. இதுல பத்து நாள் புருனோட வாழ்க்கை, அப்புறம் துக்கம். இன்னும் அவ நம்பளோட முழுசா பேசிப் பழகலை, ஒட்டலை. துக்கத்தை முழுசா கொட்டினாத்தாங்க இந்து பழைய மனுசியாவாள். பொறந்த வீட்டுக்குப் போனாத்தான் இது நடக்கும். அண்ணன் அண்ணிகிட்ட கொட்டி கலகலப்பாவாள்.” – காமாட்சி தன் மனதில் பட்டதைச் சொன்னாள்.

தணிகாசலத்திற்குப் பிடித்திருந்தது,

“இதுக்கு இந்து ஒத்துக்குவாளா?” – கேட்டார்.

“பொறந்த வீட்டுக்குப் போக எந்தப் பொண்ணும் விரும்புவாள். அதுவும் இப்படி பட்ட நேரத்துல சொல்லவே வேணாம்.”

“இந்துகிட்ட பேசிப் பார்க்கலாம் காமாட்சி.”

தணிகாசலத்திற்குப் பேசிப் பார்த்தால் இந்து ஒத்துக் கொள்வாளா தோன்றியது.

“அவ அண்ணன்கிட்ட பேசிப் பார்த்து இவகிட்ட பேசலாம்”- சொன்னார்.

“சரி கேளுங்க” – காமாட்சி தலையசைத்தாள்.

“அவன் ஒத்துப்பானா?”

“அதை அப்புறம் பார்ப்போம். எதிலும் நாம சந்தேகத்தோட அல்லாடக் கூடாது. தானே கேள்வி கேட்டு தானே பதில் தேடினா குழப்பம்தான் மிஞ்சும்.”

தணிகாசலம் போனைத் தொட்டார்.

“சரி வராது” – தானே சொல்லி திரும்பினார்.

“ஏன்?”

“இதையெல்லாம் நேரடியாப் பேசினாத்தான் சரி வரும்” – புறப்பட்டார்.


நல்ல வேளையாய் சந்திரசேகரனும், தமயந்தியும் வீட்டில் சேர்ந்தே இருந்தார்கள்.

இவரைப் பார்த்ததும், “வாங்க” – வரவேற்றார்கள்.

நாற்காலியில் அமர்ந்தார்.

“இந்து எப்படி இருக்கா?” – இவருக்குச் சிரமம் வைக்காமல் தமயந்தியே கேட்டு இவர் பேச வழி வகுத்தாள்.

“அதையேம்மா கேட்குறே. எழுந்து ஒரு வேலை செய்யிறதில்லே. என்னவோ உடன்கட்டை ஏறுறவ போல புருசன் படத்தையே எந்நேரமும் வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கா. துக்கம் பெரிசுதான். அதுக்காக யார் என்ன பண்ண முடியும். சோறு தண்ணி இல்லாம கெடக்கிறதைப் பார்க்க மனசு கஷ்டமா இருக்கு. இங்கே வந்தாலாவது மனசு தேறுமான்னு தோணுது. அதைப் பத்திப் பேசிப் போகலாம்ன்னுதான் வந்தேன்.” – தான் வந்த வேலையைச் சொன்னார்.

கணவனும் மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.

“ராணுவம், அயல்நாட்டுல வேலை பார்க்கிறவனுக்கும் பொண்ணு கொடுத்தால் பொண்ணு கலியாணமானதுக்கு அடையாளமா தாலியைச் சுமந்துக்கிட்டு பொறந்த வீட்டோட கெடப்பாள்ன்னு சொன்னது சரியா இருக்கு. உங்க வாய் முகூர்த்தம் இந்து இங்கே வந்து இருந்தாத்தான் சரி வருவாள்ன்னு என் மனசுக்குப் படுது. நாங்க பெண்ணைப் புடிச்சுத் தள்றதா நீங்க நெனைக்கக் கூடாது. இந்து அங்கேயே இருக்க எங்களுக்குச் சம்மதம். இப்போ வந்தவள் அதனால எங்ககிட்ட சரியான பேச்சுப் பழக்கம் இல்லே. இந்த நிலையையில நாங்களும் பிள்ளையைப் பறி குடுத்தவங்க. மனசை எங்ககிட்ட சொன்னா நாங்களும் சேர்ந்து துக்கப்படுவோம்ன்னு அவளுக்கு நெனப்பு. ஆகையினால தானே சுமக்கிறா. கஷ்டமா இருக்கு.” – நிறுத்தினார்.

“….”

“இந்து மனசு மாறினா மறு கலியாணம் கூட பண்ணலாம். எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லே. படிப்பையும் தொடரலாம். கல்லூரியில நாலு பேரோட பேசிப் பழகி படிப்புல புத்தியைச் செலுத்தினா சீக்கிரம் துக்கத்தை மறப்பாள்ன்னும் எனக்குத் தோணுது. கல்லூரியில சேர்க்கிறது பெரிய விசயமில்லே. எத்தனை நாள் விடுப்போ அத்தனை நாளைக்கு மருத்துவச் சான்றிதழ் எடுத்துக் கொடுத்தா போதும்.”

மகன் இறந்த துக்கத்தைவிட மருமகள் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கும் அவரை பார்க்கப் பெருமையாய் இருந்தது. சந்திரசேகரனும் தமயந்தியும் மதிப்பாய் அவரைப் பார்த்தார்கள்.

“இந்து மனசு பார்த்து முடிவெடுக்கலாம்” – சந்திரசேகரன் சொன்னான்.

“எனக்கும் அதுதான் சரியாப் படுது” – தமயந்தியும் கூறினாள்.

“செய்வோம்.” – தணிகாசலம் தலையசைத்தார்.

“நல்ல காரியத்தை இன்னைக்கே முடிப்போம். நான் சொல்லி நீங்க வந்ததா இருக்கக்கூடாது. நான் முன்னாடி போறேன். நீங்க பின்னாடி வாங்க‘‘ என்றவர், “கருமாதி கல்லெடுப்பு, பொண்ணுக்குப் பூ எடுக்கிறது பொட்டு எடுக்கிற சடங்கு, சம்பிரதாயமெல்லாம் வேணாம்.” என்றார்.

சந்திரசேகரனுக்கு இதில் உடன்பாடுதான் என்றாலும் மனைவியைப் பார்த்தான்.

“ஊர் உலகம் …” என்று அவள் இழுத்தாள்.

“அது கெடக்குதும்மா. நமக்கு எது நல்லதாப்படுதோ அது செய்வோம். எந்த பொண்ணு புருசன் வந்த பிறகுதான் பூ, பொட்டு வைச்சிக்கிட்டா. எல்லாம் நாமளா ஏற்படுத்திக்கிட்டது. விதவையை ஒதுக்கி வைச்ச காலம் போய் இன்னைக்கு மறுமணம் சர்வசாதாரணமா போயிட்டு. இதுமாதிரி ஒவ்வொன்னுத்தையும் நாமே மாத்த வேண்டியதுதான்” – என்றார்.

தமயந்திக்கு அவர் சொன்னது எல்லாமே பிடித்திருந்தது. ‘உலகில் இது மாதிரி நல்லவர்கள் இருந்தால் இந்த நாடு எப்போதோ திருந்தியிருக்கும்.!’ – நினைத்தாள்.

“தம்பி! எல்லாம் மனசுலேயே வைச்சுக்குங்க நான் போய் அரை மணி நேரம் கழிச்சு கௌம்புங்க. அப்போதான் நான் சொல்லி நீங்க புறப்பட்டதா இந்துவுக்குத் தெரியாது. இதை நான் ஏன் சொல்றேன்னா நாம பேசிக் கலந்து செய்யிறதா அவ நெனைக்கக்கூடாது. எல்லாருக்கும் இயல்பா தோணினதைச் செய்யுறாங்கன்னு நெனைக்கனும்.”- புறப்பட்டார்.

‘அவர் சொல்வதும் நியாயம்தான். வற்புறுத்தல் என்பது எல்லோருக்கும் பிடிக்காத ஒன்று. கூட்டு சதியென்றுகூட நினைக்கலாம்‘. – சந்திரசேகரன் மனதில் பட்டது.


கணவன், மனைவி புறப்பட்டுச் சென்றபோது தணிகாசலம் வீட்டில் எல்லாருமே இருந்தார்கள்.

அறையில் அடைந்து கிடந்த இந்துவைப் பார்க்க அண்ணன், அண்ணியான இவர்களுக்குத் துக்கமாக இருந்தது.

“நீ நம்ம வீட்டுக்கு வந்துறீயா இந்து?” தமயந்தி அவளை ஆதரவாக அணைத்துக் கேட்டாள்.

“உனக்கு நடந்து முடிஞ்சது கனவு. ஒதுக்கிடு. பழையபடி கல்லூரிக்குப் போ, படிப்பைத் தொடங்கு. எதிர்காலம் எங்கேயும் போகலை விரிஞ்சு கெடக்கு. கையிலேயே இருக்கு.” காமாட்சி ஆதரவாகப் பேசி வந்து அவர்கள் அருகில் அமர்ந்தாள்.

“உனக்கு நாங்க எந்த காரியமும் செய்யப் போறதில்லேம்மா. நீ இப்போ எப்படி இருக்கியோ…அப்படித்தான் இருப்பே. அதனால தைரியமா இரு.” – தணிகாசலம் வந்து அவர்களுக்குப் பக்கப் பலமாக அமர்ந்தார்.

“தாயி! நாங்க உன்னை புடிச்சுத் தள்ளலை. உன் விருப்பம் அங்கே இங்கே எங்கே வேணுமின்னாலும் இருக்கலாம். எங்களுக்கு வெங்கடேசைத் தவிர வேற புள்ளை கெடையாது. இந்த சொத்து பத்தெல்லாம் அவன் தேடினதுதான். நீ எங்கே இருந்தாலும் இதெல்லாம் உனக்குதான் இதுல எந்த மாத்தமும் கெடையாது.” – தணிகாசலம் காமாட்சியுடன் பேசிய தன் முடிவைச் சொன்னார்.

“உன் மனசுல இருக்கிறதைச் சொல்லு தாயி” – தமயந்தி பாசமாய் வருடினாள்.

“அண்ணியிடம் இந்து மனம்விட்டுப் பேசட்டும் நாமெல்லாம் கொஞ்சம் வெளியே இருப்போம்” – சொல்லி காமாட்சி இந்துவின் மனதைப் படம் பிடித்தவள் போல சொல்லி நகர்ந்தாள்.

அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு மற்ற மூவரும் வெளியே வந்தார்கள்.

“சொல்லும்மா உன் எதிர்காலம் என்ன?‘‘ தமயந்தி அவர்கள் நகர்ந்ததும் கேட்டாள்.

“நான் இங்கேயே இருக்கேன்.”

“ஏன்?”

“இத்தினி நாளா புள்ளையில்லாம கஷ்டப்பட்டாங்க. இனி இல்லாமையும் கஷ்டப்படுவாங்க. நான் அவுங்களுக்குத் துணையாய் இருக்கிறது தான் எனக்கு நல்லதாப் படுது அண்ணி!‘‘

வெளியிலிருந்து கேட்ட தணிகாசலத்திற்கும் காமாட்சிக்கும் மனம் நெகிழ்ந்தது.

“உன் படிப்பு?”

“படிக்கிறேன்.”

“நீ வந்து நம்ம வீட்ல தங்குறதுனால எங்களுக்கு ஒன்னும் சிரமமில்லே இந்து.”

“நான் அப்படி நெனைக்கலை அண்ணி. வயசானவங்களைத் தனியே விட்டுவரவும் விருப்பமில்லே. அது மட்டுமில்லே… இப்போ பிள்ளைப் போன துக்கத்துல இருக்காங்க. நான் விட்டுப்போனா…அவுங்க அதே நெனப்பாய் இருந்து உருகி உடைந்து போவாங்க. நான் இருந்தால்… என் வழியாய்ப் பிள்ளையைப் பார்க்க வாய்ப்பு இருக்கு. மருமகளை மகனாய் ஏத்துப்பாங்க. இருக்கிற காலம் வரையாவது துணையாய் இருக்கலாம்ன்னு என் மனசுக்குப் படுது”

“எப்படி வாழ்ந்தோம் என்று பறக்காமல் இப்படி ஒருத்தருக்கொருத்தர் துணையாய் இருப்பது எவ்வளவு ஆறுதலான விசயம்…!?”- காமாட்சிக்கு மருமகளை நினைக்க நெக்குருகியது.

உடன் உள்ளே வந்து, “எங்க மருமக எங்ககிட்டேயே இருக்கட்டும்..!” அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இந்துவை அணைத்தாள்.


“என்ன மாப்ளே! உன் பாச்சா ஒன்னும் பலிக்கலை போலிருக்கு?” – கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்து எதிரில் அமர்ந்த நண்பனைப் பார்த்து துணுக்குற்றான் வசந்த்.

“என்ன ராமு சொல்றே?” திகிலாய்ப் பார்த்தான்.

‘‘பட்சி உன் கையில சிக்காத அளவுக்குப் பறந்துடுச்சி போலிருக்கு?!”

“புரியலை?” – குழப்பமாகப் பார்த்தான்.

“அறுத்துப் போன இந்து அண்ணன் வீட்டுக்கு வந்துடுவா. மான அவமானம் மனமொடிஞ்சி போனவ கல்லூரிக்குப் போகமாட்டா, படிப்பைத் தொடரமாட்டா, ஏழ்மை வேலைதான் தேடனும். நம்ம கம்பெனியில ஒரு வேலை போட்டு குடுத்து வலைச்சிடலாம்ன்னு நெனைச்சே. பலிக்கலை!‘‘- நிறுத்தினான்.

“இதெல்லாம் உனக்கு எப்புடி தெரியும்?!‘‘- இவன் அவனை வியப்பாய்ப் பார்த்தான்.

“நான்தான் உன் மனசை துருவித் துருவி அலசிப் பார்த்த மனசாட்சி ஆச்சே மச்சி! நீ நெனைக்கிறதெல்லாம் எனக்கு தெரியும்.” – அமர்த்தலாக சொன்னான்.

வசந்த்திற்கு நண்பனைப் பார்க்க பயமா இருந்தது.

‘இவனென்ன நமக்கு சவாலாக இருக்கிறான்!’ தோன்றியது.

அவன் நக்கல் முகமும், பேச்சும் மனசை உறுத்தியது. ‘இவனை வீழ்த்த வேண்டும்!’ என்கிற எண்ணம் அவனுக்குள் அனிச்சை தோன்றியது.

“இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை. நான் நெனைச்சதை நடத்திக் காட்டுவேன்!” சொன்னான்.

“எப்படி?”

“நீதான் என் மனசாட்சியாச்சே புரிஞ்சுக்கோ” – எழுந்தான்.

“சரி அப்புறம் பார்க்கலாம்!‘‘ விடை கொடுப்பதற்கடையாளமாய் தலையசைத்தான்.

நண்பன் இப்படி தன்னிடம் அலட்சியமாய் நடந்து கொள்வானென்று ராமு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அடுத்து பேச வழியில்லாதவனாய் வெளியே வந்தான். வசந்த்தின் அடுத்த நடவடிக்கை என்ன…?

யோசித்தவனாய் நடந்தான்.

வசந்த் மூளையைக் கசக்கியபடி அறைக்குள் முன்னும் பின்னும் நடந்தான்.

‘தான் கஷ்டப்பட்டு அடையும் அளவிற்கு இந்து என்ன அவ்வளவு மதிப்பு, அழகா?’ – மனசுக்குள் யோசனை வந்தது. ‘முன் வைத்த காலை பின் வைத்தால்… ராமு முன் தனக்கு அவமானம்!’ நினைக்க எரிச்சலாய் இருந்தது. ‘அவன் முகத்தில் கரியைப் பூசவாவது தான் நினைத்ததை அடைந்து ஜெயித்துக் காட்டவேண்டும்!’ – என்கிற எண்ணம் வைராக்கியமாக உருவெடுத்தது.

அறையைவிட்டு வெளியே வந்து காரில் ஏறினான்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *