கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 162 
 
 


(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம் – 1

புத்தம் புது சாண்ரோவை வாசலில் நிறுத்திவிட்டு பாரதி பூங்காவில் நுழைந்து அங்கும் இங்கும் கண்களைச் சுழலவிட்டான் வசந்த்.

வயது 27. ஆறடிக்கும் கொஞ்சம் அடக்கமான உயரம். சுமாரான நிறம். பெரிய பணக்காரர்களுக்கே உரிய பளபளப்பு. கண்களில் சின்னதாய்க் காந்தம். யாரையும் சுண்டி இழுக்கும் முகம். நல்ல கதாநாயகன் தோற்றம்.

தூரத்தில் பச்சைப்பசும் தரையில் பன்னீர்ப் பூக்கள் சிந்திக்கிடக்கும் மரத்தடியில் கையில் புத்தகத்தை விரித்துக் கொண்டு தனியே அமர்ந்திருந்தாள் அவள்.

வசந்திற்கு அவளைக் கண்டதும் இளமைத் துடிப்பு, உள்ளத்தில் உற்சாகத் துள்ளல்.

‘‘ஹாய் ! இந்து..! ‘‘ – அழைத்து அருகில் சென்று அமர்ந்தான்.

அவள் பேசவில்லை.

‘‘மன்னிச்சுக்கோ. நேரமாகிடுச்சு ‘‘- தான் தாமதமாக வந்ததிற்கு வருத்தம் தெரிவித்தான்.

‘‘தினைக்கும் இதே பொய் மாத்திச் சொல்லுங்கோ ‘‘- இந்து கோபப் பட்டவளாய்ப் புத்தகத்தைப் கீழே வைத்தாள்.

‘‘நேரமாகிடுச்சு மன்னிச்சுக்கோ.‘‘

‘‘இந்த ஜோக்கடிக்கிற வேலையெல்லாம் வேணாம். தினம் நான் கல்லூரி விட்டதும் நேரா இங்கே வர்றேன். ஆறுமணிக்கு மேல வீட்டுக்குப் போறேன். ஒரு நாள் ரெண்டு நாள் கல்லூரியில ஸ்பெஷல் கிளாஸ் நேரமாகிடுச்சு அப்புடி இப்புடின்னு பொய் சொல்லலாம். தினைக்கும் சொன்னா கேட்கிறவங்க காதுல பூஇல்லே சந்தேகம் வரும். ஒரு நாளைக்காவது நேரத்தோட வந்து அஞ்சு மணிக்கு வீட்டுக்குப் போனேன்னா கல்லூரி விட்டு பொண்ணு ஒழுங்கா வீட்டுக்கு வர்றான்னு நெனைப்பாங்க. நீங்க தினம் இப்புடி லேட்டா வந்தா கண்டிப்பா நம்ப சந்திப்புக்கு முழுக்குப் போட வேண்டியதுதான். வழியில பார்த்து ஹலோ ஹலோ சொல்லிட்டுப் போகவேண்டியதுதான்” – அவள் பாட்டுக்குப் பொரிந்தாள்.

‘‘அதான் மன்னிப்புக் கேட்டுட்டேன்ல்லே…!” வசந்த் தழைந்தான்.

‘‘பொல்லாத மன்னிப்பு. நான் இங்கே தனியா காத்திருக்கிறதுல எவ்வளவு கஷ்டம் இருக்கு தெரியுமா. போற வர்ற காலிப்பசங்கல்லாம் பட்சி ஒண்ணு தனியா காத்திருக்குங்குறான். நாம கம்பெனி குடுப்போம்டா, நான் குடுக்கிறேன்டான்னு அவனவன் போட்டிப் போடுறான், பந்தயம் வைக்கிறான். எனக்கு நாக்கை பிடுங்கிக்கிட்டு சாகலாம் போலிருக்கு. சந்திப்பும் வேணாம் மண்ணும் வேணாம் எழுந்து ஓடலாம் தோணுது. ‘‘- சொல்லும்போதே அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

‘‘சரி விடு. நாளையிலேர்ந்து உனக்கு முன்னாடி நான் வந்து காத்திருக்கேன்.‘‘ சமாதானப்படுத்தினான்.

‘‘இன்னைக்குத்தான் கடைசி. நாளையிலேர்ந்து நீங்க ஒரு நிமிசம் தாமதமா வந்தாலும் இந்து இங்கே இருக்கமாட்டாள் வீட்டுக்குப் போயிடுவாள்.” – எச்சரித்தாள்.

வசந்த் எழுந்து ‘‘அம்மை உத்தரவுக்கு அடியேன் அடிமை!” – மகாராணிக்கு மரியாதை செய்வது மாதிரி வணக்கம் செய்தான்.

இந்துவிற்குச் சிரிப்பு வரவில்லை. உம்மென்றிருந்தாள்.

‘‘ஏய்! கொஞ்சம் சிரியேன்!” குனிந்து பார்த்தான்.

சிரித்தாள்.

‘‘சினிமாவுக்குப் போகலாமா?‘‘

‘‘நான் வரலைப்பா‘‘

‘‘ஏன்?‘‘

‘‘ஆம்பளைத் திருட்டுப்புத்தி எனக்கு தெரியும். இருட்டுல கை என்கிட்ட வரும். என்னென்னமோ செய்யும்‘‘.

‘‘முன் அனுபவமா?‘‘

‘‘செருப்படி!!” – முறைத்தாள்.

‘‘சாரிம்மா தாயே தப்பாக் கேட்டுட்டேன். எரிச்சுடாதே. ஆட்சேபணை இல்லேன்னா நல்ல ஓட்டலுக்குப் போய் ஒரு கப் காபி சாப்பிடலாமா?”

‘‘ஒன்னும் வேணாம். வந்தோமா பார்த்தோமா ஒரு அடி எட்டி உட்கார்ந்து பேசினோமான்னு போகனும். இடையில இந்த திருட்டுப் புத்தியெல்லாம் வேணாம். தாலி கட்டினபிறகு எல்லாம்.‘‘

“ரொம்ப உஷார் பார்ட்டியா இருக்கியே!” – அமர்ந்தான்.

‘‘பெண் உஷாரா இல்லேன்னா ஆம்பளை மேஞ்சிடுவீங்க‘‘

‘‘அப்புடி போடு.!! தலையெழுத்து….! அவனவன் காதலிக்கிறான். ஜாலியா கைகோர்த்துக்கிட்டு சினிமா, பீச், ஓட்டல் போறான். ஏன்…. டேட்டிங்கூட போறாங்க. அனுபவிக்கிறாங்க. நான் வெறுமனே உட்கார்ந்து பேசிட்டுப்போக வேண்டியதா இருக்கு. போதாதுக்கு லேட்டா வந்தா பாட்டு வேற. நிர்மல்-விமல் ஏற்றுமதி இறக்குமதி கம்பெனி எம்.டிக்கு இதெல்லாம் தேவையா?” – புலம்பினான்.

‘‘வசந்த்! நீங்க பணக்காரர். எப்படி வேணும்ன்னாலும் இருக்கலாம். ஆனா நான் அப்படி இல்லே. அண்ணன் சம்பாத்தியத்துல…‘‘

‘‘போதும் போதும் புராணம்…! படிக்கிறேன், சாப்பிடுறேன் சொல்லவேணாம். கேட்டு கேட்டு காது மரத்துப் போச்சு. இதுக்காகவாவது பேசாம இரு.” – என்ற வசந்த் சட்டென்று அவள் மடியில் படுத்தான்.

இந்து இதை எதிர்பார்க்கவே இல்லை.

‘‘ஏய்ய்..என்ன இது….? எழுந்திரி..! எழுந்திரி…!” – பதறி அவன் தலையைப் பிடித்து தூக்கினாள்.

“மாட்டேன்!” முரண்டினான்.

“யாராவது பார்த்துடப் போறாங்க” – மூச்சைப் பிடித்துக் கொண்டு தூக்கினாள்.

“பார்த்தா பார்த்துட்டுப் போறாங்க” – அவன் அசையவில்லை. அசைக்க முடியவில்லை.

“வசந்த் தப்பித் தவறி என் அண்ணன் இந்தப் பக்கம் வந்தார்ன்னா தொலைஞ்சோம்”

“மச்சான்தானே வரட்டும்.”

“ஏய்..! என்ன உளர்றே?”

“உன் அண்ணன் எனக்கு மச்சான்தானே!”

“இன்னும் தாலிகட்டலை.”

“கட்டினாத்தான் மனைவியா மனசுல ஏத்தியாச்சு.”

“ஏத்தினது போதும் தயவுசெய்து இப்போ எழுந்திரிங்க” அக்கம் பக்கம் பார்த்து தவித்தாள்.

“நான் எழுந்திரிக்கனும்ன்னா ஒரு கண்டிசன்!”

“என்ன?”

“நாளைக்கு என்கூட நீ சினிமாவுக்கு வரணும்!”

“அதான் நடக்காது!” – இந்து சடக்கென்று நகர்ந்து உட்கார்ந்தாள். வசந்த் தலை மெத்தென்று புல் தரையில் விழுந்தது. எழவில்லை.

இந்துவிற்கு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்த திருப்தி.

“இப்படி ஏடாகூடமா நடந்தீங்கன்னா… இனி நான் வரலை. மேல உங்க காத்து, கை படாம இருந்தாத்தான் வருவேன்!”

“ஏன் இந்து! உனக்கு நாம சுண்டல் திங்கனும், ஊட்டி விடனும், கை கோர்த்துக்கிட்டு, நடக்கனும் ஜாலியா இருக்கனும்ல்லாம் ஆசை இல்லியா?” எழுந்து அமர்ந்து பாவமாக பார்த்தான்.

“மனசுல நிறைய இருக்கு. ஆனா இப்போ ஊசி இடம் கொடுத்தா நூல் நுழைஞ்சிடும். கலியாணத்துக்கப்புறம் ஊட்டி விடுறதென்ன இங்கேயே உங்க மேல படுப்பேன்.”

“மேல படுத்து..?”

“ம்ம் ..சொல்ல மாட்டேன் செய்வேன்.”

வசந்ததிற்கு போதை ஏறியது .

“கலியாணம் வரைக்கும் காக்க வைக்கிறீயே!” ஏக்கமாக பார்த்தான்.

“சார்! சுண்டல்?” – பையன் எவர்சில்வர் தூக்குடன் எதிரே நின்றான்.

“வேணாம்ப்பா!”

அவன் நகர்ந்தான்.

“நம்ப கலியாணம் எப்போ?” – இந்து கேட்டாள்.

“உன் படிப்பு முடியட்டும்.”

“அம்மா! மல்லிப்பூ.” வயதான பெண்மணி பூக்கூடையுடன் அவர்கள் அருகில் நின்றான்.

“வேணாம்மா.”

அவளும் நகர்ந்தாள்.

“ஏன் இந்து. பூகூட வாங்கி வைச்சுக்கக்கூடாதா?”

“கூடாது. சாயந்தர நேரத்துல வாடாத பூ ஏதுன்னு அண்ணிக்குச் சந்தேகம் வரலாம். அப்புறம்.. நீங்க பூ வாங்கிக் குடுக்கிறதைச் சாக்கா வைச்சு என்கிட்ட ஏதாவது லஞ்சம் எதிர்பார்க்கலாம்.”

‘படா கில்லாடி!‘ வசந்திற்குள் விழுந்தது.

“இந்து! நம்ப காதலை நீ உங்க வீட்டுல சொன்னியா?”

“சொல்லலை. உங்க கையில தாலி தயார்ன்னா சொல்வேன். வீடு சம்மதிக்கலைன்னா முரண்டு பிடிப்பேன். முன்னாடி தெரிஞ்சுதுன்னா பிரச்சனை. கல்லூரிக்குப் போறியா, காதலிக்க போறியான்னு கேள்வி வரும். படிப்புதான் முக்கியம்ன்னு அழுத்திச் சொல்லி வந்த சுதந்திரத்துக்கே கட்டுப்பாடு வரும். பந்து எறியும்போதுதான் பேட்டைத் தூக்கனும்.”

“….”

“வசந்த்..! நீங்க தயாராய் இருந்தாத்தான் தடைகளையெல்லாம் உடைக்கலாம். தடை… நம்ம சேர்றதுக்கு இடைஞ்சல், பெத்தவங்களுக்கு வருத்தம், பொறந்த வீட்டுல கஷ்டம்ன்ன்னா நாம பிரியவும் தயங்கக்கூடாது. என்னைப் பொறுத்தவரைக்கும் காதல் இப்படித்தான். எதையும் தாங்கனும்!”

“நாம பிரிஞ்சுடுவோம்ங்குறீயா?”

“ஏழை என்னைக்கும் உறுதியா இருப்பாங்க. பணக்காரங்க பேச்சுதான் மாறும். அது அவுங்களைச் சொல்லிக் குத்தம் கெடையாது. பணம், சொத்து கைநழுவிப் போயிடுமேங்குற பயம். விட்டுப் பிரிய மனசு வர்றதில்லே.”

‘ரொம்ப சரியாக சொல்கிறாளே!‘வசந்த் மனதில் இதுவும் அழுத்தமாக விழுந்தது.

“சார்! முறுக்கு!” இப்போது ஒரு பையன் இடையூறு செய்தான்.

வசந்த் ‘அப்பால போ‘ என்பது போல சைகை செய்தான். அவன் அகன்றான்.

“கஞ்சப் பிசினாறி!” அவன் முணுமுணுத்தது காதில் விழுந்தது,

“பார்! உன்னால எனக்கு கெட்டபேர்.” வசந்த் ஆதங்கப்பட்டான்.

“பரவாயில்லே!” – இந்து எழுந்தாள்.

“அவ்வளவுதானா இன்னைய சந்திப்பு?” – ஆதங்கங்ப்பட்டு அவனும் எழுந்தான்.

“ஆமாம்!” சொன்ன இந்து கொஞ்சம்கூட நிற்கவில்லை. நடந்தாள்.

வசந்த் அவள் பின்புற வளைவு, நெளிவுகளைப் பெருமூச்சு விட்டு பார்த்தப்படி மெல்ல நடந்து காருக்கு வந்தான். அவன் காரில் கை கட்டி ஒய்யாரமாய் சாய்ந்து நிற்கும் ஆளைப் பார்த்ததும் துணுக்குற்றான்.

அத்தியாயம் – 2

ராமு இவன் நண்பன். ஆத்மார்த்த பால்ய சினேகிதன். அது மட்டுமல்லாமல் வசந்த் ரகசியங்களையெல்லாம் சரியாய் அறிந்தவன்.

“ஏய்! எப்போ வந்தே?” – வசந்த் தன் துணுக்குறலை மறைத்துக் கொண்டு திகைப்பாய் நண்பனை நெருங்கினான்.

“நான் வந்து ரொம்ப நேரமாச்சு. குட்டி யாரு?”

“கார்ல ஏறு சொல்றேன்”. வசந்த் அவசரமாக அவனையும் ஏற்றி தானும் ஏறினான்.

கார் பிரதான சாலைக்கு வந்தது.

“சொல்றா?”

“பேர் இந்து. பி.எஸ்சி கணிதம். இது மூணாம் ஆண்டு. ஒரு அண்ணன், அண்ணி. அவனுக்கு ரெண்டு குழந்தைங்க. ஆம்பளைப் புள்ள அஞ்சாவது படிக்கிறான். அடுத்தது பெண். மூணாம் வகுப்பு படிக்கிறாள். அண்ணன்காரனுக்கு அம்பத்தூர் கம்பெனி ஒன்னுல வேலை. மாசம் இருபதாயிரம் சம்பளம். பிடித்தமெல்லாம் போக மாசம் பதினைந்து வாங்குவான். அவன் வருமானத்துலதான் இவ படிக்கிறா. குடும்ப வண்டி ஓடுது, சொந்தமாய் ஒரு வீடு இருக்கிறதா சொன்னா.” – நிறுத்தினான்.

“எப்புடி புடிச்சே?”

“ஆள் பார்க்க அம்சமா இருக்கான்னு ரொம்ப கஷ்டப்பட்டு புடிச்சேன். ஆள்தான் அழகு சொத்து சொத்தை. நமக்கு அது முக்கியமில்லே.”

“எத்தினி நாளாய் இந்த நாடகம் நடக்குது?”

“கிட்டதட்ட ஒன்றரை மாசம்.”

“கதை முடிஞ்சுதா?”

“முயற்சிப் பண்றேன் முடியலை.” – வசந்த் உதட்டைப் பிதுக்கினான்.

“ஆச்சரியமா இருக்கு?!”

“பார்ட்டி ரொம்ப உஷாரா இருக்கா. சினிமா ஓட்டல் கூட்டிப்போய் ஆளைச் சுதியேத்தி கவுக்கலாம்ன்னு பார்க்கிறேன் பிடிகுடுக்க மாட்டேன்கிறா. கலியாணத்துக்கு அப்புறம்தான்னு ஒரேயடியாக் கண்டிக்கிறா.”

“மறுபடியும் ஆச்சரியமா இருக்கு?” – இப்போது ராமு அவனைப் பார்த்து அகலமாக கண்களை விரித்தான்.

“நிசம்தான். உனக்கு தெரியாத விசயமில்லே. மூணு பொண்ணுங்களைத் தூக்கி வந்து பலாத்காரம் செய்ஞ்சு ஆசையைத் தீர்த்தாச்சு. சினிமா பாணியில குட்டிங்களை ஓடஓட விரட்டி கற்பழிச்சும் ஆசையைத் தீர்த்தாச்சு. இவளையாவது பொண்ணைப் பொண்ணாத் தொட்டு ஆசையைத் தீர்க்கலாம்ன்னு பார்க்கிறேன். என் ஆவலைத் தள்ளிப் போட்டு ஆசையைத் தூண்டறாளேத் தவிர அணைக்க மாட்டேங்குறா.”

“வசந்த் ! ஒரு சந்தேகம்?”

“கேளு?”

“நீ பொறுக்கி எடுக்கிறவளெல்லாம் ஏன் பணக்காரியா இல்லே?”

“பணக்காரிங்கல்லாம் கற்பைப் பத்திக் கவலைப் படுறதே இல்லே. எல்லாம் காசை வைச்சு மறைச்சுடலாம்ன்னு அலட்சியம். மேலும் வயித்துல வராம இருக்க ஏகப்பட்ட வழிகளிருக்கு. அதனால அவளுங்ககிட்ட கற்பு இருக்கிறதாங்கிறது சந்தேகம். ஏழை நடுத்தர வர்க்கம் அப்படி இல்லே. இவுங்களுக்குக் கற்பு தெய்வம். மான அவமானத்துக்கு பயந்துகிட்டு நெறியாய் இருப்பாங்க”

“அதாவது?”

“எனக்கு கன்னி கழியாதவள் தேவை.”

“இவளை எப்போ முடிக்கிறதா திட்டம்?”

“இன்னும் ஒரு மாசத்துக்குள்ள முடிக்கணும்”

“முடிக்கலைன்னா?”

“நம்ப வழக்கமான பாணி. மயிலே மயிலேன்னா இறகு போடாதுன்னா பிய்ச்சிட வேண்டியதுதான்.”

“ஜாக்கிரதை! இவ தற்கொலை, இது அதுன்னு போய் உன்னைச் சந்தியில வைச்சுடப் போறாள்?! காரணம் ஏற்கனவே மூணு பேர் கலக்கி இருக்காங்க.”

“அதையெல்லாம் காசு குடுத்து முடிச்சாச்சு. ஏழைங்களாய்ப் பிடிக்கிறதுக்குக் காரணமே இந்த வசதிக்காகத்தான். இதையும் அப்படி முடிச்சுடலாம். ஆனா அப்படி முடிக்கக்கூடாதுங்குறது என் ஆசை.”

“நீ அவளைக் காதலிக்கிறீயா?”

“இல்லே…!”

“அவ உன்னைக் காதலிக்கிறாளா.. ?”

“அப்படியுமிருக்கலாம்”

“புரியலை?!”

“திருமணத்துக்குத் தடங்கல், இடக்கு முடக்குன்னா பிரியவும் தயங்க மாட்டேன்னு சொல்றா”

“உஷார் பார்ட்டிதான். அதான் பிடிகுடுக்கலை.” – ராமு தன் அபிப்ராயத்தைச் சொன்னான்.

“இதுக்காகத்தான் நான் இவளைச் சீக்கிரம் முடிக்கனும்ன்னு ஆசைப்படுறேன்.”

“பிரச்சனையில மாட்டிக்காதே!”

“பணத்தால எல்லாத்தையும் மூடிடலாம். அப்புறம் பிரச்சனைங்குறது நமக்கு சவால். கவலையில்லே. தில், திறமையைக் காட்டலாம். சுவாரஸ்யமாக இருக்கும். அப்புறம் நீ எப்படி இங்கே. திடீர்ன்னு திக் விஜயம்?”

“நான் உங்களுக்குப் பின்னால செடி மறைவுல இருந்தேன்.”

“நிசமா?”

“கையில பட்சி வைச்சிருந்தேன்.”

“உண்மையா?!”

“ஆமாம்”

“எவ அவ?‘‘

“சத்தியமா உனக்கு அது ஒத்து வராத கேஸ்”

“பணக்காரியா?”

“விதவை!”

“கட்டிவிட்டு வெளிநாட்டுல இருக்கிறவன் மனைவி, விதவை, விவாகரத்தானவள், அது இதுன்னு உன் ஆசையெல்லாம் ஏன் செகண்ட் ஹேண்டிலேயே போகுது ராமு?” – வசந்த் தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“முதல் காரணம் உன்னை மாதிரி நான் இல்ல. அடுத்து இதெல்லாம் சுலபமா மாட்டும். ரிஸ்க் கெடையாது. பிடிச்சுப் போச்சுன்னா பார்ட்டிகிட்டேயிருந்து கொஞ்சம் காசும் பார்க்கலாம்.”

“அவ எங்கே?”

“கொஞ்சம் பேசி அனுப்பிட்டேன். நீ புது பார்ட்டி வைச்சிருந்ததினாலதான் உனக்காக காத்திருந்தேன்.”

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *