சிசுபால வதம் (மஹாபாரதம்)
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 17,576
பாகம் ஒன்று | பாகம் இரண்டு | பாகம் மூன்று
நாரதமுனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்து விடைபெற்று துவாரகா நகரில் இருந்து செல்லலானார். அதேசமயத்தில்இந்திரபிரஸ்தத்தில் இருந்து யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு வேறு ஒரு விண்ணப்பம் அனுப்பி வைத்தார். யுதிஷ்டிரர் விஷ்வகர்மா மயன் அமைத்தக் கொடுத்த இந்திரபிரஸ்த நகரை ஆட்சி செய்து வந்தார். விண்ணுலகில் உள்ள அவரது பிதா பாண்டு நாரதமுனிவர் மூலமாக தர்மராஜரை தன் தம்பிகளுடன் ராஜசூய யாகம் செய்தல் வேண்டும் என்ற செய்தி கூறி அனுப்பினார்.
ராஜசூயயாகம் அஷ்வமேதயாகம் போன்ற சிறப்புடையது. தந்தையின் ஆசையைப் பூர்த்தி செய்யும் விதமாக தர்மராஜர் ராஜசூயயாகம் செய்ய தீர்மானித்தார். யாகம் செய்யும் போது ஏதாவது தடைகள் வர வாய்ப்பு உள்ளது என்ற பயம் யுதிஷ்டிரருக்கு இருந்தது. யாகம் தடைகள் ஏதுமின்றி நடைபெற வேண்டும் என்று விரும்பினார். அதனால் ஸ்ரீகிருஷ்ணரை இந்திர பிரஸ்தம் வருமாறு வேண்டி அழைப்பு அனுப்பி இருந்தார்.
நாரதமுனிவர் வேண்டிய படி சிசுபாலவதம் புரிய எண்ணம் கொண்டிருந்த அதே நேரத்தில் யுதிஷ்டிரரும் தன் யாகத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுவித்ததால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சற்றுக் குழப்பமாக இருந்தது. ஒர்புறம் தேவகாரியம். தேவேந்திரன் சிசுபால வதம் செய்து இப்பூவுலகை ரக்ஷிக்கும் படி விண்ணப்பித்திருக்கிறார். மறுபுறம் பந்து காரியம். யுதிஷ்டிரரின் ராஜசூயயாகத்திற்கு வந்து அருள் புரிய வேண்டும் என்று கிருஷ்ணருக்கு அழைத்திருக்கிறார். எந்த கார்யத்தைச் செய்வது என்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு சந்தேகம் எழுந்தது . தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதன் பொருட்டு மந்திராலோசனை செய்யலாம் என்று ஸ்ரீகிருஷ்ணர் தீர்மானித்தார். அதனால் ஞானத்தில் சிறந்த உத்தவரிடமும், தன் சகோதரர் பலராமரிடமும் கலந்து ஆலோசிக்க முடிவு செய்தார். எனவே அவர்கள் மூவரும் சேர்ந்து மந்திராலோசனை செய்தனர்.
ஸ்ரீகிருஷ்ணர் அவர்களிடம் நாரதமுனிவர் கொண்டு வந்த தேவேந்திரனுடைய செய்தியைக் கூறினார். துஷ்டனாகிய சிசுபாலனின் வதம் நிச்சயமாக நடைபெற வேண்டும் என்ற நாரதமுனிவரின் அறிவிப்பைக் கூறினார். அதே நேரத்தில் யுதிஷ்டிரர் ராஜசூயயாகம் செய்ய இருப்பதையும் அழைப்பு அனுப்பியுள்ளது பற்றியும் கூறினார். யாகம் தடையின்றி நடக்க ஸ்ரீ கிருஷ்ண பகவானை யுதிஷ்டிரர்
இந்திரபிரஸ்தம் வந்து அருள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஒரே நேரத்தில் தேவ கார்யமும் பந்து கார்யமுமாக இரண்டு விதமான கார்யங்கள் உள்ளன. தர்மராஜரின் தம்பிகள் அனைவரும் தீரம் மிக்கவர்கள். பெருந்தோளுடைய வீரர்கள். பராக்கிரமம் உடையவர்கள். அதனால் நாம் அங்கு போகாவிடினும் தம்பிகளுடைய சகாயத்தினால் தர்மராஜரால் யாகத்தை நல்ல விதமாக செய்து முடிக்க இயலும்.
ஆனால் துர்குண சிசுபாலனின் துஷ்டதனம் பிரதி தினமும் வளர்ந்து பெருகி வருகிறது . சிசுபாலனும் மிக வலுவடைகிறான். பலவானாக இருக்கிறான்.
நீதிமான்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் வியாதியையும் விரோதியையும் நாம் அலட்சியம் செய்யலாகாது வளரவிடவும் கூடாது என்று. எனக்கும் இந்த அபிப்பிராயமே சிறந்தது, உகந்தது என்று தோன்றுகிறது.
என்றாலும் இதில் தகுந்தது எது? தகாதது எது? என்று நாம் தீர ஆலோசித்து அலசிப் பார்க்கலாம். நீங்கள் இருவரும் உங்களது அபிப்பிராயங்களையும் கூறுங்கள். அதன் பின் நாம் தெளிவான ஒரு முடிவை நிர்ணயிக்கலாம்” என்று கூறினார், ஸ்ரீ கிருஷ்ணர்.
இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணர், உத்தவர் மற்றும் பலராமருடைய மந்திராலோசனைக் கூட்டம் ஆரம்பித்தது.
இத்துடன் சிசுபாலவதம் இரண்டாவது பாகம் முடிவுறுகிறது.
மூன்றாவது பாகம் தொடரும்.