சிங்கத்தை வெற்றி கொண்ட கொசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 5,990 
 
 

காட்டில் படுத்திருந்த சிங்கத்திடம் போய் ஒரு கொசு பேசத் தொடங்கியது.

“என்னைவிட நீ பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா? அது மிகவும் தவறு.

“உன் வலிமை எப்படிப்பட்டது?. பற்களை நறநற என்று கடித்து, நகங்களால் பிராண்டுகிறாய், இது எப்படி இருக்கிறது என்றால், ஏழைப் பெண் தன் கணவனுடன் சண்டையிடுவதை போலத்தான் இருக்கிறது. சரி, வா, நாம் இருவரும் சண்டை போட்டுப் பார்ப்போம்” என்றது. உடனே இது ‘ங்கோய்’ என்று ரீங்காரம் செய்து கொண்டு சிங்கத்தின் மீது பறந்து, அதன் நாசியிலும், தாடையிலும் கடிக்கத் தொடங்கியது.

சிங்கம் கொசுவை விரட்ட, தன் நகங்களால் முகத்தைப் பிராண்டியும், தட்டியும் தோலைக் கிழித்துக் கொண்டதில், இரத்தம் வழிந்ததோடு, களைத்தும் போய் விட்டது.

வெற்றி முழக்கத்தோடு கொசு பறந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த கொசு ஒரு சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டது. சிலந்தி கொசுவின் இரத்தத்தை உறிஞ்சியது.

“வலிமை மிகுந்த சிங்கத்தையே வெற்றி கொண்டு, இப்போது ஓர் சிறிய சிலந்தி என்னை வதைத்துக் கொண்டிருக்கிறதே” என்று கொசு வருந்தியது.

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் தொகுப்பிலிருந்து (ஜூன் 1998).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *