கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 16, 2025
பார்வையிட்டோர்: 221 
 
 

(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உதட்டைச் சுடுமளவுக்கு ஒட்ட உறிஞ்சிய சுருட்டை விட்டெறிந்து விட்டு எழுந்து நின்றான் வாட்சர் ஜேமி ஸிங்கோ. 

நினைவுகளையும் வேண்டும் போது அப்படி விட் டெறிந்துவிட முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்? 

இரவு நேரங்களில், ‘டியூட்டியி’லிருக்கும் பன்னிரண்டு மணித்தியாலங்களும், வேண்டாமென்றாலும் விரட்டியடிக்க முடியாத நினைவுகளை போட்டுக் குழப்பிக் கொண்டு விழித் திருப்பது அவனுக்குப் பழக்கமாகி போய்விட்ட ஒன்று. 

ஒரு தலைமுறைக்கும் மேலாக, தோட்டத்து மக்களிடையே வாழ்ந்து அவர்களின் ஏமாளித்தனமானதும், இலட்சியமற்றதுமான பிடிப்பற்ற வாழ்க்கை முறைக்காக இரக்கப்படுவதற்கும் அவன் பழகிப் போனான். 

அவர்களுடையதுதான் எத்தனை அவலமான வாழ்வு? அந்த வாழ்விலும் எத்தனை அர்த்தமற்ற சச்சரவுகள்? 

வேலைத்தளத்தில்தான் நியாயமற்ற சச்சரவுகளென் றால் வீடுகளிலும் பண்பாடற்ற சண்டைகள்; காரணமற்ற கூப்பாடுகள். 

இரண்டு மாதங்களுக்கும் மேலாகி விட்டதென்றாலும் இன்றுதான் நடந்ததைப் போல அவனது நினைவை முழுவ தாக ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறான் வீரமுத்து. 

வீரமுத்துவுக்கு வாய் துடுக்கு அதிகம். சரியோ, பிழையோ இரைந்து பேசியே பழக்கம். இயற்கையாகவே முரட்டுச் சுபாவமும், எடுத்தெறிந்து பேசுகிற இயல்பும் கொண்ட வம்சத்தில் பிறந்த ஜேமிஸிங்கோவுக்கே வீரமுத்து வின் போக்கு வெறுப்பைத் தந்ததென்றால், தொழிலாளர் கள் குனிந்து நிமிர்வதிலேயே குற்றம் காணுகிற தோட்ட நிர்வாகத்துக்கு அவனைப் பிடிக்கவா செய்யும்? 

தொழிலாளர்களுக்குள்ளாகவே அவனைப் பிடிக்காதவர்கள் இருந்தனர். 

இனி எந்த ஒரு குற்றம் சாட்டப்படுமானாலும் தோட் டத்தை விட்டுப்போக நேரிடும் என்று துரையிடமிருந்த எச்சரிக்கை வந்தபோது, அப்படி வகையாக அவனைப்பற்றி துரையிடம் புகார் செய்தது ஜேமிஸிங்கோதான் என்று யாரோ கூறியதைக்கேட்டு நம்பி ‘பூந்தகார பயலுக, வாழவா செய்வாங்க என்று வசைமாரி பொழிந்துகொண்டு வாச லுக்கே வந்துவிட்டான் வீரமுத்து. 

தனது மகள் மரகதத்துக்கு ஜேமிஸிங்கோவிடமிருக்கும் ஆசையைப்பற்றிய செய்தியை வீரமுத்து அறிவான். போதா தற்கு அவனுடைய வேலைக்கே எமனாக வந்தவன் ஜேமி ஸிங்கோதான். ஒரு காலத்தில் வீரமுத்து தான் பெக்டறி வாட்சர். இரவு முழுவதும் தொழிற்சாலையில் காவல்காத்து விட்டு, பகற்பொழுதில் அரைநாளாவது மலையில் புல்லு வெட்டுவதற்கு அவனுக்கு வசதியாயிருந்தது. அவன் பெய ரில் பத்து ஏக்கர் கொந்தரப்பிருந்தது. கைநிறைய காசு குதித்த நாட்கள் அவை. 

இவையெல்லாம் கூட்டு மொத்தமாய் வீரமுத்துவை வெறியாட்டம் போடவைத்தன. ஆனால், ஜேமிஸிங்கோ இதற்கெல்லாம் சளைத்தவனா? 

கை கோடரியைக் கையில் எடுத்துக்கொண்டு, அவனை அங்கேயே வெட்டி வீழ்த்தி விடுகிற கோபத்தோடு வந்த ஜேமிஸிங்கோவை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது சுற்றி நின்றவர்களுக்கு. 

வீரமுத்து வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது, ஜேமிஸ்ங்கோ வீட்டிலிருந்து தொழிற்சாலைக்கு வந்துவிடு வான். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது. இரண்டு பேருக் குமே நல்லதாய் போய்விட்டது. அல்லாவிட்டால், வீரமுத்து வின் மூர்க்கத்தனமான பேச்சுக்கும், ஜேமிஸிங்கோவின் மூரட்டுத்தனமான நடத்தைக்கும் தோட்டத்தில் எப்போதோ ஒரு கொலை விழுந்திருக்கும். 

தான் அப்படி நடந்து கொண்டிருக்க கூடாதென்ற சிந்தனை இந்த இரண்டு மாத காலமாக அவனில் வளர்ந்து வந்திருக்கிறது. 

மரகதம் அது குறித்து அவனிடம் பேசும்போது அழுது தீர்த்துவிட்டாள். அசம்பாவிதமாக ஏதும் நடந்து அப்பனை இழக்க நேர்ந்திருந்தால் அவள் கதி என்னாவது? அவளுக்கு வேறு யார் துணையிருக்கிறார்கள்? 

ஜேமிஸிங்கோ தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் வீரமுத்துவை எதிர்த்து அழித்துவிடுகிற அளவுக்கு ஆத்திரம் தனக்கேற்பட்டது நியாயமானது தானா? 

இரவும் பகலுமாக இந்த ஒரு கேள்விக்கான அர்த்த வலுவுள்ள பதிலைத்தேடி அலுத்துப்போய் விட்டான். இன்றும் அவனால் எந்தவிதமான முடிவுக்கும் வரமுடியவில்லை. 

இன்று மட்டுந்தானா? இரண்டுமாத காலமாக ஒவ் வொரு இரவும் உறங்காத விழிகளும், ஓயாத சிந்தனையுமாக அவன் போராடிக் கொண்டிருக்கிறான். 

வெளியே நகர்ப்புறத்திலிருந்து வருகிற பாதையின் தலைவாசலில் அமைந்திருப்பதுதான் பசுமலைத் தோட்டம். 

மக்களின் நினைவுகளில் காணக்கிடைக்காத பசுமையும் செழிப்பும், மலை நாட்டில் ஆறுகளாய், அருவிகளாய், பசுந் தளிர்களாய் உருவெடுத்திருக்கின்றன. 

தங்கள் வாழ்க்கையில் கிட்டாத அழகும் அமைதியும் தாங்கள் வாழுகிற நிலத்தில் உழைக்கிற தளத்தில், உறவாடு கிற ஆற்றோரங்களில் செறிந்து கிடக்கிற உண்மையை உணர்ந்துகொள்ள அந்த மக்களுக்குச் சக்தியில்லை. தங்க ளுக்கிருக்கும் சக்தியை அந்த மக்கள் உணர்ந்து கொள்ள வில்லை. ஓயாத உழைப்பு, அவர்களின் உணர்வையும், சக்தி யையும் உறங்கடித்து விட்டன. 

ஆங்காங்கே, தோட்டங்களில் நடக்கிற சில சம்பவங்கள்; துரைமார்களின் அட்டகாசமான நடத்தை, உத்தியோகத்தர் களின் காருண்யமற்ற செயல்கள் தொழிற்சங்கங்களின் அலங் காரமான கோரிக்கைகள் அந்த மக்களை இடையிடையே தட்டிவிடுவதைத் தவிர அதனால் ஏற்படுகிற சிறு சல சலப்பைத் தவிர – அந்த சமூகத்தின் இயக்கத்தைப் பறை சாற்ற வேறெதுவுமே இல்லை! 

பசுமலைத் தோட்ட தொழிற்சாலையின் இரவு நேர காவற்காரனாக பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் ஜேமிஸிங்கோ தன் நண்பர்களிடம் இப்படிச் சொல்லிய துண்டு. இன்னும் அந்த நிலைமை முற்றாக மாறிவிடவில்லை. 

அன்று அவனுக்கும் வீரமுத்துவுக்குமிடையே ஏற்பட விருந்த மோதல் இன்னும் சற்று நீடித்திருந்தால் என்ன ஆகி யிருக்கும்? 

ஜேமிஸிங்கோவின் உடம்பு ஒருகணம் அப்படியே ஆடி நின்றது. 

தன் வாழ்நாளில் இனி ஒருநாளும் அப்படி நடந்து கொள்வதே இல்லை. யாருக்காக இல்லாவிட்டாலும், தன் மரகதத்துக்காகவது; அவன் தீர்மானித்துவிட்டான்.. 

கடைத் தெருவுக்குப் போன தன் தகப்பன் வீடு திரும்ப நேரமாகும் என்பதை தெரிந்து கொண்டிருந்த மரகதம் ஓட்ட மும் நடையுமாக வீட்டுக்கு விரைந்து கொண்டிருந்தாள். ஜேமிஸிங்கோவை, தொழிற்சாலைக்குப் புறப்படுவதற்கு முன், வீட்டிலேயே சந்தித்து விடவேண்டுமென்ற அவ சரத்தில். 

புறப்பட்டுக் கொண்டிருந்த ஜேமிஸிங்கோவின் முகம் மரகதத்தைக் கண்டதும் மலர்ந்தது. 

‘என்ன மரகதம் இத்தனை விரைவாக ஓடி வருகிறாய்’ அவன் கேட்டான் ஆர்வம் மேலிட. 

‘புறப்பட்டு விட்டீர்களா? எங்கே போய்விட்டிருப்பீர்களோ என்று பயந்துதான் கொழுந்தை நிறுத்த கையோடு கூடை யைத் தூக்கிக்கொண்டு ஓட்டமாய் வந்துசேர்ந்தேன்.’ ஓடி வந்த வேகத்திலேயே. அவள் வாயிலிருந்து சொற்கள் உதிர்ந்து வந்தன. 

அதில்தான் எத்தனை படபடப்பு! அப்பப்பா… அவனே அதிர்ந்து போனான். ‘உண்மைதான் மரகதம். இன்னும் கொஞ்சம் பிந்தி வந்திருந்தா, நான் புறப்பட்டு போயே யிருப்பேன். 

‘ஸ்டோருக்கு போகத்தான் இன்னும் ஒரு மணி நேரத் துக்குமேலே இருக்குதே அதுக்குள்ளாகவே போகவேணுமா’ அவள் கேட்டாள். அவனோடு ஆசைதீர பேசவேண்டுமென்ற அக்கறை அவளுக்கு. அவனுக்கு மட்டும் அந்த ஆசை இல்லா மலா போய்விட்டது? ஆற்றங்கரை அமர்ந்து அந்தி வானில் செக்கர் வர்ணத்தில் அழகை இரசிக்கும் அவன் நினைவெல் லாம் அவளைச் சுற்றித்தானே? 

“மரகதம் நீ ஆற்றுப்பக்கம் போவதில்லையா” அவன் கேட்டான். 

“போகாமலென்ன, குளிப்பதற்கும் அங்குதானே போக வேண்டியிருக்கிறது.” 

“நானதைக் கேட்கவில்லை. அந்த ஆற்று நீருக்குள்ளாக- துள்ளி விழுகிற மீன்களை நீ பார்த்ததில்லையா என்று கேட்கிறேன்” என்றானவன். 

“பார்க்காமலென்ன, எத்தனைப் பெரிதாக வளர்ந்து விட்டிருக்கின்றன” அவள் வியப்போடு கேட்டாள். 

அவள் வியப்படைய நியாயமுண்டு. அத்தனைப் பெரிய தாக அவள் எங்கே மீனைப் பார்த்திருக்கிறாள்? இப்போது. தானே புதிதாக வந்த துரை மீன் வளர்க்க ஆரம்பித்த பிறகு தானே ஓடும் நீரில் துள்ளி விழும் மீன்களைப் பார்க்க அவ ளுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. 

அவன் ஆண்பிள்ளை. அதுவும் நகர்ப்புற பாடசாலை ஒன்றில் படித்தவன். இருந்தாலும், தனிமை மாறாது சல சலத்து ஓடுகிற ஆற்று நீரில், இருமருங்கும் எழும்பி நிற்கும் சிறுசிறு குன்றுகளுக்கூடாக தெளிந்தோடுகிற அந்த அமைதி யான இடத்தில், வண்ணக் குழம்பாய் வானம் பூத்துக்கிடக் கும் அந்திநேரத்தில் அந்த மீன்களைப் பார்த்துக் கொண் டிருப்பதில் அவனுக்கு அலாதி விருப்பம். 

பசுமலைத் தோட்டத்தை அளந்து பிரித்தாற்போல, அலைபடுத்தி ஓடுகிற ஆற்று நீரின் அழகை இரசித்த வெள் ளைக்காரத் துரைக்கு ஆதாயம் தேடும் ஆசை வந்தது. இங்கிலாந்தின் எங்கோ ஒரு மூலையில் பிறந்து இங்கே வந்து இத்தனைப் பெரிய தோட்டத்தின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ளத் தெரிந்த மனிதனுக்கு அப்படி ஓர் ஆசை பிறந்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? 

தன் பங்களாவைச் சுற்றி ‘அலவன்ஸில்’ கிடைக்கும் ஆட்களை போட்டு காய்கறிகளை உண்டாக்கி காசுதேடிக் கொள்ளும் அவருக்கு, ஒரு மைல் நீளத்துக்கு ஒரே சீராய் ஓடுகிற அந்த ஆற்று நீரில் ஆசை பிறந்துவிட்டது. ஆயிரக் கணக்கில் ‘ஸ்டவுட்’ வர்க்க மீன்குஞ்சுகளாக கொண்டுவந்து கொட்டி வைத்தார். மூன்றே மாதங்கள், மூன்று ராத்தல் பருமனுக்கு அவை பெருத்து விட்டன. செய்யவேண்டியது தான். இல்லாவிட்டால், தன் பிறந்த நாடான இங்கிலாந் துக்குச் செல்லும்போது என்னத்தை கட்டிக் கொண்டு செல்வது? 

நிலமாவது, நீராவது அவருக்கு வேண்டியது அக்கரை போகையில் ஆசைக்கதிகமான செல்வம். 

வெள்ளைக்காரத் துரை வேலை மினக்கெட்டு வளர்க் கும் மீன்கள் என்றோ ஒருநாள் அவருடைய தூண்டிலுக்கு இரையாகும் வரையில். இப்படி துள்ளிக்குதித்துக் கொண்டு தானிருக்கும். துள்ளிக் குதித்து தூண்டிலுக்கிரையாவதோடு அதன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. 

நீரில் வசிக்கிற அந்தப் பிராணிக்கும், மலை நிலத்தில் உழைத்து வாழும் இந்த மக்களுக்கும் என்ன வித்தியாசம்? அவன் நினைத்துப் பார்த்தான். 

இரை என்று நினைத்து இழுத்து விழுங்கிய வேகத்தை தூண்டில் முள் தொண்டையைக் கிழிக்கும் போதுதானே துடிதுடித்து அறிகிறது மீன். அறிந்து என்ன செய்ய-துடி துடித்துச் சாவதைத் தவிர. 

இந்த பரிதாபத்துக்குரிய மக்களின் நிலைமையும் அது தானா? மரமழித்து, நிலம் புதுக்கி, பயிர் வளர்ப்பது தான் வாழ்க்கையென்று எண்ணி இருந்துவிட்ட மூன்று தலைமுறை யினரின் மனோபாவம், இளைய சந்ததியினரை என்னமாய் பாதித்துவிட்டது. 

மீன் என்றும் மான் என்றும் பெண்களை வர்ணிக்கும் இலக்கியங்களை அவன் படித்திருக்கிறான். பெண்களை வர்ணிக்க இலக்கியத்தைப் படிக்கவேண்டுமென்ற கட்டாய மில்லை. ளமைத் துடிப்பின் யௌவனத் தோற்றம் இயல்பாகவே அந்த உணர்வைத் தூண்டிவிட்டு அழகு பார்க்க ஆரம்பிக்கிறது. 

தன் சிந்தனைக்கினியவளின் துள்ளலை அவன் நினைத்து மகிழ்ந்திருக்கிறான்; அவளின் கயல்விழியின் காந்தம் குறித்து களித்துச் சிரித்திருக்கிறான். என்றாலும், அவனையும் மீறிய அவன் நினைவால் பிறக்கிற பரவசத்தை யும் மீறிய,உணர்வு ஒன்று அவனைத் தீண்டும் சமயங்களே அதிகம். 

இந்த ஏழைத் தொழிலாளர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு திரிகிற தொழிற் சங்கங்கள் எத்தனை? அவர்களுக் காக பாடுபடுகின்ற அரசியல் இயக்கங்கள்தாம் எத்தனை? ஆனால், இன்னும் இந்த மக்கள் அரசியலில் புறக்கணிக்கப் பட்டவர்கள்தாம் – தொழில் பாதுகாப்பு இல்லாதவர்கள் தாம். 

ஓடும்மீன் ஓடி உறுமீன் வந்தாற்போல அந்த மக்களின் வாழ்க்கையை ஆட்டிப் படைத்த அத்தனைப் பிரச்சனைகளின தும் கூட்டு மொத்தமாய் வந்தது சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம். 

அந்த மக்களின் வாழ்க்கையையே திசை திருப்பி விட்டது அது. இந்தியாவுக்குச் செல்ல நினைத்து இத்தனை காலமாக ஏங்கித் தவித்த மக்களுக்கு அந்த ஒப்பந்தம் திருப்தி அளித்தது. 

ஆனால், நூற்றாண்டு காலமாக மண்தோய வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் வாழ்க்கையை அந்த ஒப்பந் தம் அர்த்தமற்றதாக்கி விட்டது. 

குறிப்பிட்ட ஒரு காலத்தில் அரசியல் தலைமையிலிருக் கும் இரு தலைவர்கள் கூடி கதைத்து முடித்து விடக்கூடியது தானா அந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்னை? 

ஜேமிஸிங்கோ ஆவேசப்பட்டுப் போனான். 

அனுதாபப்பட தெரிந்தவனை ஆத்திரமுள்ளவனாக்கி ஆவேசம் கொள்ளச் செய்யும் சக்தியாக விளங்கினாள் மரகதம். 

வெள்ளைக்காரத் துரைமார்களால் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்த கொண்டுவரப்பட்ட இந்திய தொழி லாளர்களின் உழைப்புத் திறனைக் கண்டு அவன் வியப்ப டைந்திருக்கிறான். அவனிடம் அவனது தந்தை அவர்க ளைப்பற்றி கதை கதையாகச் சொல்லியிருக்கிறார். 

ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றிய காலத்தில் கரை யோர பகுதிகளிலிருந்து உள்ளூருக்கு வந்து வாழ ஆரம்பித்த சிங்கள வம்சத்தில் வந்தவன் இந்த ஜேமிஸிங்கோ. 

ஆங்கிலேயர் வருகையால் இலங்கை சமுதாயத்தில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றத்தில் பரம்பரைத் தொழிலான மாட்டு வண்டிஓட்டுதலை மறந்துவிட்ட குடும்பங் களில் ஜேமிஸிங்கோவின் தந்தையின் குடும்பமும் ஒன்று. அவரும் தோட்டத் தொழிலாளியாக மாறிவிட்டிருந்தார். 

தோட்டத் தொழிலாளியாக வாழ்ந்தாலும் தன் மகனை நகர்ப்புற கல்லூரி ஒன்றில் சேர்ந்து படிக்கச் செய்தார் ஜேமிஸிங்கோவின் தந்தை. 

தந்தையின் திடீர் மரணம் ஜேமிஸிங்கோவின் கல்வியை இடையில் தடைசெய்தது. அவன் வாழ்க்கையைத் தடம்புரட் டியது. அவனும் தோட்டத்திலேயேவாழவேண்டிவனானான். அவனது கம்பீரமான உடற்கட்டும். கடூரமான குரலும் துரைக்குபிடித்துவிட்டது. தொழிற்சாலைக்கு ‘நைட்வாட்சர்’ ஆகிவிட்டார். 

பெரிய டீமேக்கர் பிச்சை மூர்த்தியிடம் அவருக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் அத்தனை காலமும் இரண்டு பேருக்கு கொடுத்த சம்பளத்தையும் அவன் ஒருத்தனுக்கே கொடுத்து அந்த வேலையில் அவனை அமர்த்தினார். அவனுக்கு முன்னதாக அந்த வேலையி லிருந்தவர்களில் வீரமுத்துவும் ஒருவன். 

அத்தனை பிரமாண்டமான தொழிற்சாலையில், கொட் டும் மழையிலும் அடர்ந்த இருளிலும் தன்னந் தனியனாக காவல்காத்துக் கொண்டிருக்கும் ஜேமிஸிங்கோ, தன் பணி யின் சிரமத்தை எண்ணிப் பார்ப்பதுண்டு. 

இலட்சணக்கணக்கான பெறுமதியுள்ள பொருட்கள் தன்னொருத்தன் பொறுப்பில் விடப்பட்டிருப்பதை நினைக் கையில், தன்மீது துரைக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையை அறிந்து அவன் வியப்பதுண்டு. 

அவனுக்கு வேலை கொடுத்த முதல்நாள் துரை அவனிடம் சொன்னார். *ஜேமிஸிங்கோ, உனக்குநான் இந்த வேலையை ஏன் கொடுக்கிறேன் தெரியுமா? உன்மேல் உள்ள நம்பிக்கையால் தமிழ் ஆட்களோடு சேர்ந்து நீ ஒண்ணும் மோசத்துக்குப் போகமாட்டேங்கிற நம்பிக்கையில். 

அந்த நம்பிக்கை வீண்போக விடமாட்டேன். அவன் தனக்குத்தானே தைரியம் கூறிக்கொண்டான். உண்மையில், அந்த தைரியத்தை அவனுக்கு கொடுத்து அவனது நம்பிக்கை யாய் வாழ்க்கைப் பிடிப்பாய் உயிர்த்துடிப்பாய் வாழ்ந்து கொண்டிருப்பவள் மரகதம்தான். 

இந்திய வம்சாவழியில் வந்தவள். இலங்கை மண்ணில் பிறந்தவள். அவளைப் போல எத்தனை ஆயிரம் உயிர்கள் இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்திருக்கின்றன! 

பிறந்து, தவழ்ந்து, ஓடி, ஆடி, உழைத்து அலுத்து ஓய்ந்துபோகும் வரை அவர்கள் அறிந்தவை -அரணாக எழும்பி நிற்கும் அந்த அழகு மலைகளைத்தாம். 

அவர்களை வலுக்கட்டாயமாக நாடுகடத்த முயற்சிக்கும் எந்த பிரயாசையும் தோற்றுபோகும். அவன் திடமாக நம்பினான். 

ஆனால்-மரகதம்? 

அவளது தந்தை இந்தியாவுக்குப் போகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். இத்தனைக்கும் எதிர் கொண் டழைக்க அங்கே அவனுக்கு யாருமில்லை. ஆனாலும் ஓர் ஆசை! 

நிறைவேறாத எந்த ஆசையும், ஆசையாக இருக்கும் வரையிலும் விளைவு தெரியாத காரணத்தால் இனிமையாகத் தானே இருக்கும் அவனுக்கும் அப்படிதான். அப்பன் விட்டு வந்த ஐந்து ஏக்கர் நிலத்தை அவரது அண்ணன் தம்பிகள் கவனித்து வருகிறார்கள். அந்த நிலம் தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் சோறுபோடும் என்று அவன் நம்பினான். அப்பன்விட்டு வந்ததும் அவனுக்குத் தெரியாது- சொல்ல கேள்வி. அங்கே வரட்சிபடர்ந்த இராமநாதபுர ஜில்லாவில் ஒரு மூலைக் கிராமத்தில் அந்த நிலத்தை நம்பி எலும்பும் தோலுமாகிவிட்ட உறவினர்களைப் பற்றி இவனுக்கு எங்கே தெரியபோகிறது? 

இருந்திருந்து அங்கிருந்து அஞ்சல் வரும். ஆனால், இந்த விபரத்தைத் தவிர வேறெல்லாம் எழுதப்பட்டிருக்கும். 

அவன் ஒருத்தன் மாத்திரந்தானா? பாட்டனார் கூறிய கதைகளால், பார்த்தே இராத பாரதத்தின் தென்கோடி யைப்பற்றிய பசுமையான நினைவுகள் நெஞ்சில் வரித்துக் கொண்டு, இந்தியாவுக்குப் போய்விட வேண்டும். அந்த மண்ணில்தான் தங்கள் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று, துடிக்கிற மனிதர்களுக்குக் கணக்கேது? 

அந்த மக்களின் உணர்ச்சி பூர்வமான ஆசை நியாய மானதுதானா? 

நியாயமோ – அநியாயமோ அவர்களினதும், அவர் களுடைய இளம் சந்ததியினரதும் வாழ்க்கையையே அந்த ஆசை ஆட்டுவித்து விட்டது. 

அவர்களது ஜீவாதார உரிமைகளைத் தட்டிக்கழிக்கவும், நாட்டின் விசுவாசமுள்ள பிரஜைகளல்ல அவர்கள் என்று அரசியல் கட்சிகள் கோஷம் போடவும் அந்த ஆசை வழிவகுத்து விட்டது. 

அவர்களது வாழ்வை நிர்ணயிக்கும் தொழில்முறை பாதுகாப்பற்றுப் போவதற்கும் அந்த பாதுகாப்பற்ற பலவீனத்தை தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்த தொழிற் சங்கங்கள் முனைந்ததற்கும் அந்த ஆசைதான் காரணமாகி விட்டது. 

அவ்வளவு ஏன்-?சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது வும் அந்த ஆசையினால் ஏற்பட்ட விளைவுதானே? 

மலைகள் பூதாகாரமாய் எழும்பி நின்றன. உழைத்து ஓய்ந்து உயிரிழந்த மக்களின் சமாதி மேடுகள் தாம் இப்படி மலைகளாக உயர்ந்து நிற்கின்றன என்று தன் நண்பர் களிடம் ஜேமிஸிங்கோ சொல்லியிருக்கிறான். 

இன்றைய அமாவாசை இருளில் அவனே அச்சொற் றொடரின் பொருத்தத்தை எண்ணி வியக்கத் தொடங்கினான். 

மலைகளின் அழகையும், வனப்பையும், கம்பீரத்தையும் அவனால் இரசிக்கத் தெரியாமலில்லை. அவைகளுடன் அதன் பயங்கரத்தையும் அவனால் உணரமுடிந்தது. அது உள்ளடக்கி வைத்திருக்கும் சோகக் கதைகளை அவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது. 

அந்த மலைகளைப்போல, ஒரு சமுதாயமேஉள்ளடங்கிப் போன ஆற்றலோடு உறங்கிக் கொண்டிருக்கிறது. 

வெளியில் காற்று சீறிக்சீறி வீசியது. சுற்றிலும் தேயிலை மலைகளில் நீண்டு வளர்ந்திருந்த சவுக்கு மரங்கள் வளைந்து வளைந்து பேயாட்டம் போட்டன. ஜேமிஸிங்கோ தன் சுவெட்டரை, மணிக்கட்டுவரை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டான். 

இன்று பரவாயில்லை! அவன் வாய் முணுமுணுத்தது. 

இரண்டு நாட்களாக காற்றும் மழையும் கலந்தடித்தன. இன்று மழை ஓய்ந்திருந்தது. அவனுக்கு ஆறுதல் அளித்தது- ஆறுதல் உடலுக்கு மட்டுந்தான். 

உள்ளமோ, மரகதம் தன்னிடம் சொல்லியவற்றை நினைத்து நினைத்து தவித்துக் கொண்டிருந்தது. 

அவள் சொன்ன செய்தியின் பயங்கரம் அவளுக்கே தெரி யுமோ என்னவோ! இரண்டு நாட்களாக அவன் உள்ளம் அவனிடமில்லை. 

அயரா விழிகளும் ஆறாத சிந்தையுமாக அவன் இரண்டு நாட்களைக் கடத்தி விட்டான். இன்றும் ஏதும் நடக்காது விட்டால்… ஒரு வேளை மரகதம் சொன்னது தவறானதாயிருக்குமோ… 

சுருட்டைப் பற்றி வாயில் இழுத்தான். சுகமாக இருந்தது. 

கடிகாரத்தைப் பார்த்தான் மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. தொழிற்சாலையைச் சுற்றிவர நி னைத்து, கைக்கோடரியை ஒரு கையிலும், லாந்தரை மறு கையிலுமாக பிடித்துக்கொண்டு அவன் புறப்படுவதற்கும், தொழிற்சாலையின் மின்விளக்குகள் அனைத்தும் ஒரு சேர அணைவதற்கும் சரியாயிருந்தது. 

அப்படி விளக்குத் திடுமென அணைந்துவிடுவது ஒன்றும் இன்று மாத்திரம் புதிதாக நடப்பதல்ல. இரவு நேரங்களில் மழை கனத்துப் பெய்தாலே இந்த தொல்லைதான். 

நீருளைகளை இயக்கும் மின்சார உற்பத்திக்குத் தேவை யான நீர் வரும் வழி அடைபட்டுப் போகும்போது. மின்சாரம் இப்படி தடைபட்டுப் போவதுண்டு. 

அருகே ஓடுகிற ஆற்றுநீரை வழிமறித்து, அகன்ற வாய்க்கால் வழியாக தொழிற்சாலைக்கு நீரை வருவிக்க ஏற் பாடு செய்திருக்கின்றனர். மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வரும்போது அடிபட்டு வரும் மரமும், செடிகளும் குறுக்கும் மறுக்குமாய் விழுந்து வழியை மறித்து விடுவதால் மின்சாரத் தடை ஏற்படுவதுண்டு… 

ஆனால் இன்று… 

பொட்டு மழையைக் கூடக் காணமே! அப்படியென் றால், மரகதம் தந்த செய்தி சரியானதுதானா? அவன் சிந்தனை வேகமாக ஓடியது. 

லாந்தரைக் கையில் எடுத்துக்கொண்டு, கோடரியைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு தெப்பக்குளத்துக்குச் செல்லும் குறுக்குப் பாதையில் இரண்டு மூன்று படியாகத் தாண்டித் தாண்டி கொஞ்ச தூரத்துக்கு ஓடினான். அப்படி ஓடியவன், சட்டென்று நின்று, லாந்தரை மாத்திரம் ஒரு கல்லில், அதன் வெளிச்சம் எட்டிநிற்பவர்களுக்குத் தெரியுமாப் போல வைத்துவிட்டு விடுவிடென்று தொழிற்சாலையின் பின்புற மாக ஓடிச்சென்று ஒரு மூலையில் நின்று கொண்டான், சுவ ரோடு சுவராக. 

அவன் நின்ற இடம் சல்லடை காம்பரா அமைந்திருக்கும் மூலையிலாகும். அங்கிருந்து பார்த்தால், சல்லடை காம்பரா விற்குள்ளாக நடக்கும் யாவும் நன்றாகத் தெரியும். பதப் படுத்திச் சுத்தம் பண்ணப்பட்ட தேயிலை, அடைப்புக்குத் தயாராய் பெட்டிகளில் அங்குதான் குவித்துவைக்கப் பட்டிருக் கின்றன. 

வகை வகையாகப் பிரித்து வைக்கப்பட்ட, அவைகளி லிருந்து எழுகிற மணத்தைச் சுவாசித்தாலே போதும் சுவைத்த திருப்தி ஏற்படும். உண்மையில் அவைகளைத் தயாரித்து. அதன் மணத்தைச் சுவாசித்துத் திருப்தி படுவ தோடு சரி சுவைத்து மகிழ ஒன்று தோட்டத்தில் உத்தி யோகத்தராயிருக்க வேண்டும். அல்லது அவர்களின் நண்பர் களாக இருக்க வேண்டும். 

தூளின் நிறம் கறுப்பாயிருக்க வேண்டும் என்பது தொழி லாளர்களுக்குத் தெரியும்! தொழிற்சாலையில் வேலை செய் யும் தொழிலாளர்களுக்கு கறுப்பாய் தூளிருக்க கவனமாக வேலை செய்யவேண்டும் என்றும் தெரியும். அவ்வளவு தான்… அவர்களுக்குக் கிடைப்பதோ வெறும் தூசி… கடைத் தூள்… செம்பட்டை நிறத்தில், தூசும் கழிவும் கலந்த டஸ்ட். 

நாட்டின் தேசிய வருமானத்தில் அறுபது சதவிகிதம் அவர்கள் ஏன் சம்பாதித்துத் தரமாட்டார்கள்? 

இந்த உண்மையை, தேசிய வருமானத்தின் முது கெலும்பு இவர்கள் தாம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லாதார் யார்? ஆனால், அது எப்படிச் சாத்தியமான தென்று விளக்கி ஏமாந்து போனவர்களின் ஏமாளித்தனத்தை போக்கி வைக்கத்தான் யாரையும் காணோம். 

ஏமாற்றி வாழவும், எத்தித் திரியவும் மாத்திரம் பழகிப் போனார்கள். ஒன்று, பகலில் நடக்கிறது- பலரும் அறிய நடக்கிறது. மற்றது, இருளில் நடக்கிறது -யாரும் அறியா மல் நடக்கிறது.வித்தியாசம் இதுதான். 

கும்மிருட்டு… ஜேமிஸிங்கோ கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு காத்திருந்தான். அவனுக்கே வியப்பாயிருந்தது. எத்தனை விரைவாக அவர்கள் செயல்படுகிறார்களென் பதை அறிந்தபோது, கண்ணாடியை உடைத்து, யன்னலைத் திறந்து உள்ளே புகுந்திருந்த சிலர், சின்னஞ்சிறு மெழுகு வர்த்தி ஒன்றின் வெளிச்சத்தின் உதவியோடு தங்கள் வேலை யில் வெகு மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். ஐந்து பேர்களின் அசைவை ஜேமிஸிங்கோ அவதானித்தான். 

மரகதம் சொன்னது உண்மைதான். தேயிலைத் திருடப் படுகிறது. ஆனால், அவளது அப்பனைக் காணோமே! ஒரு வேளை, இருளில் உருவம் அவனுக்குப் பிடிபடாமல் போயி ருக்கலாம்! கைக்கோடரியை அவனது கை அழுத்திப் பிடித்தது. 

உயிருக்குப் பயந்தவனில்லை அவன். ஆனால் உயிரை விடத் தோட்டத்து உடைமை அவனுக்கு முக்கியம். அதைக் காப்பாற்றியாக வேண்டும். 

ஐந்து மூடைகளை கட்டி விட்டார்கள். அரிசி சாக்கில் மூடை மூடையாகத் தூளை அள்ளிப் போட்டுக் கட்டி விடு வதில்தான் அவர்களுக்கு எத்தனை வேகம். 

ஜேமிஸிங்கோ பதுங்கி பதுங்கி மறுகோடிக்கு, அவர்கள் திறந்து வைத்திருக்கும் யன்னலுக்கருகே வந்து, மூலையில் மறைவாக நின்று கொண்டான். 

அதற்குள்ளாக, உள்ளிருந்து தூக்கிவரப்பட்ட மூடை யைத் தலையில் சுமந்து கொண்டு வெளியில் நின்றவன் நடக்கத் தொடங்கினான். 

ஜேமிஸிங்கோ ஓரடிகூட அசையவில்லை. நின்ற இடத் திலேயே நின்று கொண்டிருந்தான். மூடையோடு முன்னே நடப்பவனை அப்படியே நடக்கவிட்டு, தங்கள் திட்டப்படியே எல்லாம் நடப்பதாக அவர்களை நம்பவைத்து அவர்களைப் பிடித்துவிட அவன் நினைத்தான். 

வெளியில் நின்றவன் தூக்கிச்சென்ற மூடையை, ஆற் றைத் தாண்டி நின்றிருந்த ‘வேனி’ல் வைத்துவிட்டுத் திரும்பிவரும் வரைக்கும் உள்ளிருந்தவர்கள் உயிரை பிடித்துக் கொண்டு நின்றிருந்தனர். 

அவனைக் கண்டதும் அவர்களுக்குத் திருப்தி. 

மேலே தெப்பக்குளத்துக்கு நீர் திருப்பச்சென்ற ‘வாட்சர் ஜேமிஸிங்கோ’ வருவதற்குள்ளாக எல்லாம் முடிந்தாக வேண்டும் என்ற அவசரம் மேலிட்டது அவர்களுக்கு. 

போனவன் திரும்பிவரும் வரை பொறுத்திருக்க நேர மில்லை. ஒருவர்பின் ஒருவராக மூடையைத் தூக்கிச்செல்ல ஆரம்பித்தனர். 

ஜேமிஸிங்கோ அடிமேல் அடிவைத்து அவர்களின் பின் சென்றான். அவனுக்கு எப்படி அந்த நிதானம் வந்தது, அந்த நிதானம்தான் அவனுக்கு எத்தனை மகத்தான சக் தியை ஊட்டிவிட்டிருக்கிறது. 

வலிமையற்ற நிதானமும், நிதானமற்ற வலிமையும் வாழ்க்கைக்கு உதவாதவை. இந்த இரண்டின் சேர்க்கை யுமே, வாழ்க்கையில் ஒரு புதிய பிடிப்பை உண்டு பண்ணு கிறது; ஒரு புது சாதனையைத் தோற்றுவிக்கிறது. 

போன மூவரையும் காணவில்லை என்றதும் உள்ளிருந்த வர்களுக்குத் திக்கென்றது. ஒருவன் குதித்தான் வெளியில். தான் போய் பார்த்து வருகிறேனென்று புறப்பட்டவன் தலை யிலும் மூடை இருந்தது. 

ஆசை பிறக்கும்போது ஆபத்தையும், அவசரத்தையும் பற்றிய அறிவும் மறைந்து விடுகிறது. 

ஆவேசத்தோடு பாய்ந்தான் ஜேமிஸிங்கோ, அத்தனை இருளிலும் அவனது குறிதவறவில்லை. அவன் கரங்களுக்குத் தான் ஏத்தனை வெறி? அவனது கண்களுக்குத்தாம் எவ்வ ளவு ஆவேசம்? நறநறவென்று அவன் பற்களைக் கடித்துக் கொண்டான். 

அந்த நால்வரையும், அவன் தேயிலைத்தூறில் கட்டிப் போட்டிருந்தான், கையையும் காலையும் பிணைத்து, வாயில் துணியைத் திணித்து அவர்கள் தப்பிவிடாமலிருக்க வேண்டுமே! 

அவர்கள் யாரென்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் முணுமுணுத்த மொழி புரிந்தது… மொழி அவனுடையதுதான்!… அருகில் கடைத்தெருவில் இருக்கும் சிங்களவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடன் தானே வீரமுத்துவுக்கு சிநேகிதம். 

பெரிய டீமேக்கர் பிச்சைமூர்த்தி அவனை நன்றியோடு பார்த்தார். அவரது தொழிலை அவன் பாதுகாத்து தந்திருக் கிறான். 

பெரியதுரை அவனைப் பெருமையோடு பார்த்தார். அவரது மதிப்பை அவன் உயர்த்தி வைத்திருக்கிறான். 

தோட்டத்து மக்கள் அவனை ஆச்சரியத்தோடு பார்த்த னர் . அவன் தனி ஒருத்தனாக அவர்கள் நால்வரை பிடித் திருக்கிறான். தப்பி விட்ட மற்றவர்களையும் அந்த நாலு பேரைக் கொண்டே பிடித்துவிட முடியும். 

ஆனால் அவனோ… 

அமைதியிழந்து விட்ட மனதோடு தவித்துக் கொண்டிருந் தான். அவளுந்தான் பரதவிக்கிறாள். அப்பனைப் பறிகொடுத்துவிட்ட அதிர்ச்சியில். 

அவனது சாவு யாரும் எதிர்பாராதது. 

நீர் வரும் வழியில் பாறாங்கல் ஒன்றை உருட்டித் தள்ளி விட்டு ஓடிச் செல்லும் அவசரத்தில் காலிடறி விழுந்தவன், சரிவில் உருண்டுவந்து ஆற்றில் இறந்து கிடந்தான். விடியற் காலையில், திருட்டு நடந்த சேதி பரவிய பரபரப்போடு அவனது மரணச் சேதியும் பரவத் தொடங்கிற்று. 

போலீஸ், கொரணல், ஜீப், லொரி என்று தோட்டமே அமர்க்களப்பட்டது. 

அவனது மரணம் குறித்து நடந்தது என்னவென்று யாராலும் திட்டமாகச் சொல்ல முடியவில்லை. தெரிந்த இரு வரும் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. 

ஆனால், அவனோடு அவர்கள் கொண்டிருந்த உணர் வும் உறவும் அறுந்து விட்டதென்ற அர்த்தமா? 

மரண பரிசோதனைக்குப் பிறகு ஜேமிஸிங்கோ, வீர முத்துவின் பிரேதத்தை பொறுப்பெடுத்துக் கொண்டான், இறுதி மரியாதைகளுடன் அடக்கம் பண்ண. 

ஜேமிஸிங்கோ முன்னின்று நடத்துகிறான் என்றதும் தோட்டம் முழுக்க அணிவகுத்து நின்றது; தோட்டத்தில் நடந்த திருட்டு முயற்சியை முறியடித்த அவனது தீவிரம் அவனை அவர்களிடையே தலைவன் அந்தஸ்துக்கு உயர்த்தி யிருந்தது. 

வீரமுத்துவோடு வெறுப்பு கொண்டு உயிரோடு இருந்த காலத்தில் அவனுடன் பேசாதிருந்தவர்கள் கூட அவனது மரணச் சடங்கில் கலந்து கொண்டனர். 

வெய்யில் இறங்கத் தொடங்கிற்று. வேலைக்குப் போக தனக்கு நேரமானதை அவன் உணர்ந்தான். 

ஆனால் அவளோ வைத்த கண் மாறாது, ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த மீன்களின் செதில்கள் தாம் எப்படி ஒளி பாய்ந்து கிடக்கின்றன. 

அவளும் இப்போது பழகிப் போனாள். அப்பனைப் பறி கொடுத்த பின்னர் அவளது வாழ்க்கையின் பற்றுகோல் அவன் என்பது பிறருக்குத் தெரிய வந்த பின்னர் அவனோடு மாலை நேரங்களில் வாரத்துக்கொரு முறையாவது ஆற்றோ ரங்களில் நடந்துவர. 

அது மாதிரியான நேரங்களில் அவளுக்குப் புதிய புதிய உணர்வுகள் தோன்றும். வாழ்க்கையில் புதியதொரு நம் பிக்கை விழும். 

ஜேமிஸிங்கோ அது மாதிரியான வேளைகளில் வழக்கத் துக்கு அதிகமாகவே கதைப்பான். 

அழகின் லயிப்பில் அவளை சூழ்ந்துவரப் பழக்கிய அவனது பேச்சிலிருந்து அவள் அறிந்து கொண்டது ஏராளம். 

ஆற்றின் வேகத்தில் அடித்து வரப்படுகிற மணல் ஆங் காங்கே தேங்கி, திரண்டு திட்டாய் தெரிவதைப்போல கால வெள்ளத்தில் சிதறுண்டு போன தமிழர் கூட்டம் மலை நாட்டிலும் குடியேறி வாழுகின்றனர். மணல் வீடு கட்டி மகிழும் சிறுவர்கள் போல சிற்றில் சிதைத்து சிந்தை மகிழும் சேடியர் போல-அவர்களது வாழ்க்கையையும் அர்த்தமற்ற தாக்கி விட்டச் சிறுவர்களும், சேடிகளும், அரசியலிலும், தொழிற் சங்கங்களிலும் பெருகி விட்டார்கள் என்று சொல்லி இருக்கிறான். 

‘ஆற்று நீரை தடுத்து அணைக்கட்டு எழுப்பினால் ஆற்றல் பெருக்கும் மார்க்கம் பிறப்பதைப்போல, இந்த மக்களின் சக்தியும்’ என்றும் அவன் கூறி இருக்கிறான். 

‘ஆறும், மலைகளுமாய் இயற்கை அழகு நர்த்தனமாடும் மலைப் பிரதேசத்தில் மக்கள் வாழ்க்கையில் மாத்திரம் அழகைக் காணோம்’ என்று அவன் மனம் நொந்து சொல்லி யிருக்கிறான். 

கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கும் இவைகளெல்லாம் விளங்கத் தொடங்கிற்று. அவளும் அவனுக்குச் சமமாக வேண்டாமா? 

‘என்ன மரகதம் பொழுது போவது தெரியவில்லையா’ அவன் கேட்டான். 

‘தெரியாமலென்ன, ஏதோ யோசனை’ அவள் சமாளித் தாள். உண்மையில் அவளுக்குப் பொழுது போவதே தெரிய வில்லைதான். 

‘என்ன யோசனை, அந்திவானம் ஆற்று நீரில் படும் போது உன் போன்ற பெண்களின்வண்ணம் காட்டுகிறதாம் நெளிந்தோடும் அதன் விரைவில் உங்கள் மெல்லிடையின் நளினம் தெரிகிறதாம் ஒரு கவிஞன் சொல்லுகிறான். அதைப் போல உனக்கும்…’ 

அதைக் கேட்ட அவள் சிரித்தாள்; அவனும் அவளோடு சேர்ந்து சிரித்தான். 

அந்தச் சிரிப்பில் வாழ்க்கையைப் புரிந்து கொண்ட ரம்மியம் இருந்தது. 

– 1967

– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *