சாத்தானின் முகம்
சொந்த மண்ணை விட்டுத் திசை திரும்பிப் போகின்ற சராசரி மனிதர்களுள் ஒருவனாய் தானும் மாறிவிட நேர்ந்தது குறித்து, ராகவனுக்கு உள்ளூரப் பெரும் மனக் கவலைதான். உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவுக்கு இப்படித் தான் போக நேர்ந்தது குறித்து ,ஓரளவுதானும் மகிழ்ச்சி கொண்டாட முடியாமல்,அவனுக்குச் சதா மிகவும் துயரமளிக்கின்ற வாழ்வனுபவங்களினால் களையிழந்து, உயிர் விட்டுக் கிடக்கும் தன் சொந்த மண் மீதான,உயிர் ஞாபகமே பெரும் பாரமாய் நெஞ்சில் கனத்துக் கொண்டிருப்பதாக அவனால் உணர முடிந்தது.
அவன் வெறும் டாக்டர் மட்டுமல்ல, தன்னலமற்ற, சமூக சேவையின் பொருட்டு இந்த யுத்த, பூமியில், பல அழிவுகளுக்கு நடுவே,, உயிரைப் பணயம் வைத்து, உன்னத சேவையாற்றி, வரும், மக்கள் தொண்டனும் இலட்சியவாதி இளைஞனுமான, அவனுக்கு இப்போது என்ன நேர்ந்து விட்டது.? ஏன் இந்த வெளிநாட்டுப் பயணம்? பணத்துக்காகவா? புகழுக்காகவா? வெறும் வெளி வேஷமான வாழ்க்கையின், பொருட்டா? அவன் இப்படியெல்லாம் நேருமென்று கனவு கூடக், கண்டதில்லை.
முப்பது வயதில் ,மருத்துவப் படிப்பு, முடிந்த கையோடு, எல்லோரையும் போல் வெளி மாவட்டங்களுக்கோ, கொழும்புக்கோ, போய்ப் பணியாற்ற ,வேண்டுமென்று, விரும்பாமல் ,யாழ் ஆசுபத்திரியிலேயே ,சுமார் ,பத்து வருடங்களுக்கு ,மேலாக, லட்சியப் பணி புரிந்து வரும் அவனை, இப்படித் திசை திருப்பி விட்டவன் கூட அவனைப் போல ஒரு டாக்டர் தான்.
டாக்டர் நந்தகுமார்,சிறு வயதிலிருந்தே அவனுடன் ஒன்றாக படித்த ஓர் இனிய நண்பன் இணைபிரியா, நட்புக்கு, இலக்கணமாக, அவனோடு உயிர் கலந்து இருப்பவன். இரு வருடங்களுக்கு முன்பே, அமெரிக்காவுக்குப் போய், மேலும் பல, சித்திகள் பெற்று, உயர் நிலை மருத்துவனாக, உச்சத்தில் கொடிகட்டிப், பறக்கிற, சொர்கத்துக் கனவுலக வாழ்க்கை வாழ்பவன்.
இங்கு சொந்த மண்ணுக்காகத் தீக்குளித்தே, வாழப் பழகி விட்ட, ராகவனை நினைத்தால் அவன் மனதில் பரிதாபமே, மேலிடும்.
‘இதெல்லாம் எதற்கு?, நாம் யாருக்காகப், பிறந்தோம்? நீ உனக்காக
வாழாவிட்டால், உன் வாழ்க்கை எடுபடுமா? உன் புகழ் எடுபடுமா?
வேண்டாம் ராகவா! உனக்கு, இந்த நரகம் .எல்லோரையும், போல
இந்த நரகத்தை விட்டு, நீயும் வர வெண்டும், வரச் செய்வது, என் கடமை.நான் அதற்கான, எல்லா, உதவிகளையும் உனக்குச் செய்து தருவேன்.
இப்படி ராகவனை, அமெரிக்கா வரச் சொல்லி, ஓயாது அவன் நச்சரித்துக் கடிதம்,, அனுப்பியதன் விளைவே,, ராகவனது இந்த அமெரிக்கா பயணமும், அதன் தொடர்பான, மாற்றங்களும். இனியென்ன!
அதற்கான எல்லா, ஏற்பாடுகளையும், தடங்களின்றிச் செய்து முடித்த பின் அவன், கப்பலேற இனியென்ன தடை?
இதை நினைத்து வீட்டிலே,ஒரே கொண்டாட்டம்தான். .வயதான அப்பா அம்மா, கூடவே கல்யாண வயதில் ஒரு தங்கை.இவர்களுக்குக் கூட இனித் தேர் ஓடும். யாழ்ப்பாண நரகத்துச் சிறை ,வாழ்க்கை இனியில்லை. கொழும்பு நகரத்து, வெளிச்சம், கண்ணில், ஒட்டிக் கொள்ள, அவர்களும் காற்றில் கால் முளைத்துப், பறக்கவும் கூடும். .கொழும்பு போனால், எல்லாம் மறந்து போகும். அவனால் அப்படி, இருக்க முடியவில்லை. பொய்யில் உயிர், பிழைக்கத் தெரிந்த,அப்படிப் போக விரும்புகின்ற, தன்னையே, இப்போது அவன் நொந்து, கொண்டான். அந்தப் பொய், கேவலமென்று பட்டது. ஆனால் என்ன செய்ய? நண்பனைத் திருப்திப்படுத்த, ஆகக் குறைந்தது, இரு வருடங்கள் மட்டுமே, தன்னால், அங்கு இருக்க முடியுமென்று, அவனுக்குத் தோன்றியது.
இந்த மண்ணை விட்டு, அவன் விடை, பெறப், போகிற கடைசி நாள்எந்த முகத்தை ,வைத்துக் கொண்டு, அவன் ஆசுபத்திரிக்குப் போய் வேண்டிய எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு திரும்பப் போகிறான்?அவனது இந்த இழப்பு ஆசுபத்திரிக்குத் தான்,மிகப் பெரிய நட்டம். இனி அவன், போல் நல்ல டாக்டர் கிடைப்பாரா?
அவன் கடைசி முறையாக விடை பெற்றுப் போக, ஆசுபத்திரிக்கு வந்திருந்தான் இங்கு மரண ஓலமே அபஸ்வரமாகக், கேட்டுக் கொண்டிருக்கும்.தினம் தினம் ,சூடுபட்டுச், சாகிறவர்களே அதிகம்.அப்படிச் சாகிறவர்களைக், காப்பாற்ற யாருமே இன்றி, நாதியற்றுக் கிடக்கிறது இந்த மண். ஏன் இந்தச் சாபம் என்று, புரியாமல் தப்பிப் பிழைக்க நினைப்பது கூடக் கேவலமென்று, யோசித்தவாறே வார்டுகளைக் கடந்து, டாக்டர்களுக்கான பிரத்தியேக அறைக்கு வந்து சேர்ந்தான்.
அங்கு கூடியிருந்த, டாக்டர்களில் சிலர், ஆபரேஷனுக்காகத் தயாராகி
விட்ட நிலையில், அவசரமாக அறை வாசலைத் தாண்டி, வெளிப்படும் போது அவன் முகத்தில் சுரத்தின்றிக், ,கண் கலங்கியவாறே, கரம் கூப்பி அவர்களை வழியனுப்பி வைத்தான். பிறகு நடந்ததெல்லாம் மன உளைச்சலுடன் கூடிய, நம்ப முடியாது ஒரு கனவாகவே நடந்தேறியது.
அதன் பிறகு குடும்பத்தோடு, கொழும்பு புறபடுவதற்காக ,அவன் பிளேன் ஏறிய, சமயம், பலாலியூடாகîச் சுட்டெரிக்கின்ற கொடிய பாலைவனம் போல் களையிழந்து, அழுது வடியும், தன் உயினும் மேலான யாழ் மண்ணைப் பார்த்து, அவன் உள்ளம் உருகி இரத்தக் கண்ணீரே வடிக்க நேர்ந்தது.
கொழும்பு வந்து சேர்ந்த பின்னும், அவன் எதையோ பறிகொடுத்தவன் போல் நிம்மதியிழந்தே காணப்பட்டான்.பம்பலப்பிட்டியிலுள்ள ஓர் அழகான தனி வீட்டில் அவர்கள் குடியேறியிருந்தார்கள். இது அவர்களுக்காக மட்டுமல்ல தன் பெயர் விளங்குவதற்காகவும் ஏற்கெனவே நந்தகுமாரால் அதிக விலை கொடுத்து வாங்கின வசதியான ,மிகப் பெரிய வீடு .அதுவும் பிள்ளையார் கோவிலுக்கு ,மிக அருகில் இருந்தபடியால், அம்மாஅடிக்கடி கோவில் பூசை காண இது, வசதியாக இருந்தது.
ஆனால் சொந்த மண்ணைப் போல், சிரஞ்சீவித்தனமான, எவ்வித ஒட்டுதலுமின்றி, இந் நகரத்தின், மயக்கமூட்டுகின்ற வெளிசங்களோடு ஒன்றுபட்டு உயிர் கலக்க முடியாமல், தான் மிகவும், அந்நியப்ப்ட்டு நிற்பது போன்றதொரு, வெறுமையை ராகவன் உணர்ந்தான். இந்தவாழ்வும் இனி எத்தனை நாளைக்கு?
நாளை மறுதினம் அவன் அமெரிக்கா நோக்கிப் புறப்படப் போகின்றான்
நந்தகுமார் ஆவலோடு அவன் வரவை, எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறான் .இருளின் சுவடுகளேயறியாத, அது ஒரு புது உலகம். இரவில் கண்சிமிட்டி அவனை அழைத்துக் கொண்டிருக்கும் கந்தர்வலோகமாக அல்லவா அது, திகழ்கிறது, அந்த மண்ணில் கால் வைக்கிறவர்களே, மிகப் பெரிய பாக்கியசாலிகளென ,நம்புகிற, மூட உலகம் இது.! பணமும் நவீன வசதிகளும், அங்கு ஏராளம்.
அப்பா அருகிலுள்ள கடைக்குப் போய்ப் பேப்பர் வாங்கி வந்து சோபாவில் அமர்ந்தவாறு, மெய்மறந்து படித்துக் கொண்டிருந்தார். ஆங்கிலமும் தமிழுமாக, நாலைந்து, பேப்பர்கள் அவர் முன்னால் ரீப்போயில் பரவிக் கிடந்தன.அவன் ஒரு மன ஆறுதலுக்காக, அதில் ஒன்றை எடுத்து, வாசிக்கத் தொடங்கினான்.
அது ஓர் ஆங்கில வார இதழ். மூன்றாம் பக்கத்தைப் பிரித்தபோது, ஓர் அரசியல் கட்டுரை, கண்ணில் இடறியது. “சர்வ தேச நாடுகளின் வருகையெல்லாம், இங்கு சமாதானத்திற்காகவல்ல! குறிப்பாக அதில்முன்னணியில் நிற்கிற ஒரு நாடு. அது சமாதானக் கதவைத் திறப்பதற்காகவல்ல, இங்கு வந்து போவதெல்லாம். அப்படியானால் எதற்கு? தமது ஆயுத, வியாபாரத்தைச் சந்தைப்படுத்தவே, இந்தத் தலையீடெல்லாம். அது அந்த அமெரிக்கா அதன் வழியில் தான் ,பெரிய வல்லரசாக, நின்று, சிறு நாடுகளை, இரை விழுங்கவே இந்த நாடகமெல்லாம். அதன் சதியில், வீழ்ந்து, அழிந்து போகின்ற நாடுகளோ ஏராளம் அவற்றின் உயிர் அழிவுகள் பற்றி, அது கவலைப்படுவதேயில்லை. பணத்தைச் சுரண்டினால், மட்டும் போதும்”ராகவன் அதை, மேலும் வாசிக்கப் பிடிக்காமல், அந்தச் செய்தி, குறித்துமிகவும் துயரம் கொண்டவனாய், பேப்பரைத்துத் தூக்கி, வீசியெறிந்து, விட்டுத் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தவனாய் அப்பாவை நெருங்கினான்.
அமெரிக்காப் பணம் கோடி கோடியாகக் கொட்டப் போகிற மகிழ்ச்சி அவருக்கு. அந்தமகிழ்ச்சி அலைகளினூடே, கண்விழித்து பிரமிப்பாக அவனைப் பார்க்கிறபோது, அவன் குரல் கம்மிக் கேட்டான்
“அப்பா…………………! ஒன்று சொல்லுவன் கோபிக்க மாட்டியளே?”
“நான் கோபிக்க மாட்டன். சொல்லு”
“நான் அமெரிக்கா போகேலையப்பா” போகமாட்டேன். போனால் அந்த மண்ணின் பாவமே, என்னை முழுமையாக விழுங்கிப் போடும். நான் எரிஞ்சு போடுவன்!. வேண்டாமப்பா இந்தப் பண வேட்டையெல்லாம். அதைச் சம்பாதிக்க, நானும் துண போகவேணுமே? சொல்லுங்கோ அப்பா!”
“நீ என்ன சொல்லுகிறாய்”
“எல்லாம் எனக்கு விளங்குதென்று சொல்லுறன்’ இதை படியுங்கோவப்பா! எல்லாம் விளங்கும்.”
அவன் அந்தப் பேப்பரை எடுத்து தான் வாசித்து மனம் உடைந்து போன பக்கத்தையே அவருக்கு காட்டினான்.அவர் முழுவதும் வாசித்து விட்டு மீண்டும் அவனிடம் கேட்டார்.
“எனக்கு ஒன்றும் விளங்கேலை!. அவர்கள் ஆயுத வியாபாரம் செய்தாலென்ன. நீ ஏன் இதற்காகப் போக மறுக்க வெண்டும்?”
“அப்பா!! ஆயுதம் பெருக்கி, அவர்கள் வாழலாம்! அவர்களின் வாழ்வுக்காக
எங்கடை மண் இப்படிப் பற்றி எரிய வேண்டுமா? உயிர்கள் சாக வேண்டுமா? . இது பெரிய பாவமில்லையா? நானும் இதற்குத் துணைபோக வேண்டுமா? சொல்லுங்கோவப்பா!”
அவரால் பதில் கூற முடியவில்லை. இதைப் பற்றியெல்லாம், யார் சிந்தித்தார்கள்/ எல்லோருக்கும் வேண்டியது பணத்தில் கப்பல் விட்டுப் பறக்கிற, காட்சியுலகம்தான்..அவனுக்கு அது தேவையில்லை வெறுமையான, சத்தியமற்ற பொய்யில் உயிர் பிழைத்து, வாழ்கின்ற வெட்கம் கெட்ட வாழ்க்கை!, அவனுக்கு அது சரிப்பட்டு வராது. ஏனென்றால் அவன் உயிர்களை மதிப்பவன். வணங்குபவன், வாழ்விப்பவன். அவனது மனம் ஒரு கோவில் இப்படிச் சகதி குளித்து வாழ அவனால் எப்படி, முடியும்?
தாய் மண்ணின், காற்றோடு மூச்சுக் கொண்டு, வாழ்கிற, அவனுக்கு அந்த மண்ணின் சோகங்களை மறந்து விட்டு, நண்பனின் சுய திருப்திக்காக,ப் பாவக் குட்டையாய் உலகை,அழித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா மண்ணில், கால் வைப்பதே பெரிய பாவமென்று இப்போது பட்டது.
“இதுதான் உன்ரை முடிவா?
“ஓமப்பா! நாங்கள் திரும்ப யாழ்ப்பாணத்திற்கே போய் விடுவம். அங்கு எனக்காக எவ்வளவு புனிதப் பணிகளெல்லாம் காத்துக் கொண்டிருக்கு உங்களுக்குத் தெரியுந்தானே நான் இப்பவே நந்தனை ,அழைத்து இந்த முடிவைச் சொல்லி விடப் போறன்.”
அம்மாவும் தங்கையுமாக, இதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டுப் பேயறைந்தது போலானார்கள். ராகவன் இப்படி ஏமாற்றி விடுவானென்று யார் நினைத்தார்கள்? அவர்களைப் பொறுத்தவரை இது, பெரிய ஏமாற்றம்தான். இது வெறும் பண வரவுகள், குறித்த, ஏமாற்றம் மட்டும் தான். இதற்கு அப்பால், ஊடுருவி உயிர், பார்க்கிற நிலையில்,, ஒட்டு மொத்தமான மனித நேயம் குறித்த, நடத்தைகளே, பெரிதென்று படும். அதற்கு ஈடாகவே, ராகவனுடையை இந்த வாழ்க்கை முடிவும் பரந்த அளவில் அன்பு, ஒன்று மட்டுமே, குறிக்கோளாக,க், கொண்டு, வாழப் பழகி விட்ட அவனுக்கு, அன்புக்கு, எதிர்மறையாகத் தோன்றுகின்ற, தீய விடயங்கள் கண்ணில், நிழல் விட்டு, மறைந்துதான் போகும். நிழலை மறந்து விட்டு, நிஜத்தையே நம்பிப் பயணம் செய்கிற, அவனுக்கு, இது போதும்.
அவனது இந்தத் திடீர் மன மாற்றம் கேட்டு, நந்தகுமார் கோபம் கொண்டு, எரிச்சலோடு, கத்தியது அக்கரையிலிருந்து, பெரிய அலையாய் வந்து, அவனை அடித்து விட்டுப் போனது. அந்த அலையினுள் மூழ்கிப் போகாத, வைராக்கிய சித்தி கொண்டவனாய், ராகவன் மீண்டும் தன் சொந்த மண்ணுக்கே திரும்பினான். அங்கு அவன் வாழவல்ல. வாழ்விக்க, இந்த மண்ணை, மண்ணோடு வாழும், தீனமுற்ற மனிதர்களையே, வாழ்விக்க வேண்டுமென்ற, பெரிய மனம் கொண்டபின், சிறுசிறு துரும்புகளாக, மறைந்து போகும், வாழ்வியல் தொடர்பான, உறவுச் சங்கிலியில், இழுபட்டு, உயிர் விட, இருந்த கேவலம் இப்போது அவனுக்கு நன்றாகவே உறைத்தது. இனி உறவு இல்லை. வாழ்விக்க நினைக்கிற, அதுவே வாழ்வாகி, வாழ்ந்து கொண்டிருக்கிற, அவனது இந்த உயிர் வழிபாட்டு, வாழ்க்கை வேள்விக்கு முன்னால், ஒன்றுபடாத, ஒன்றுபட மறுக்கிற, இப்படிப்பட்டஉறவுகள் கூடக் கருகி, அழிந்து தான் போகும். போகட்டுமே!. அன்புச் சமுத்திரத்தில் நீச்சலடித்துப் போகிற, அந்தச் சுகமே அவனுக்குப் போதும்.
– மல்லிகை (நவம்பர்,2007)