சரியான நேரம்! – ஒரு பக்க கதை





தமிழ் நடிகர்களிலேயே பத்து கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் மிக பிரபலமான நடிகர் அவர்!
அவருடைய ஈ.சி.ஆர். ரோடு,.பால வாக்கம் பண்னை வீடுகள், தி.நகர், வேளச்சேரியில் உள்ள பங்களாக்கள், சிட்டியில் உள்ள அவருடைய அனைத்து அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமானத்துறை அதிகாரிகளால் ரெய்டு!
சென்னை நகரமே அமளி துமளிப் பட்டது! தெருவெங்கும் அவருடைய ரசிகர் கூட்டம்! திரும்பிய பக்கமெல்லாம் இதே பேச்சு!
திடீர் ரெய்டு!. ஹீரோவால் எவ்வித முன்னேற்பாடும் செய்ய முடியாமல் போய் விட்டது!
கோடிக்கணக்கில் ரொக்கம், லாக்கரில் நிறைய தங்க கட்டிகள், மனை நிலம், பங்களாக்கள் வாங்கிய பத்திரங்கள் அனைத்தையும் வருமானத் துறை அதிகாரிகள் அள்ளிக் கொண்டு போனார்கள்!
தலைமை அதிகாரியைச் சுற்றிலும் பத்திரிகை, டி.வி. சேனல் நிருபர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுத் துளைத்தார்கள்.
“சார்!….ரெய்டு நடத்த இது தான் சரியான நேரம் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது?….உங்களுக்கு யார் தகவல் கொடுத்தாங்க?…”
“அவரே தான் சொன்னார்!…” என்று சொல்லி விட்டுச் சிரித்தார் அந்தக் குறும்புக்கார அதிகாரி!
“என்ன சார்…தமாஷ் பண்ணறீங்க?….” என்றார் ஒரு நிருபர் எரிச்சலோடு!
“உண்மையைத் தான் சொல்லறேன்! கறுப்பு பணம் அதிகம் சேர்ந்திட்டா நடிகர்களால் சும்மா இருக்க முடியாது! …..தங்களிடம் இருக்கும் கறுப்பு பணத்திற்கு ஏற்ப எம்.எல்.ஏ.,எம்.பி.,முதல்வர் ஆசை வந்து விடும்! அந்த ஆசைகளை அவர்களே தங்கள் வாயால் சொல்லும் நேரம் தான், ரெய்டு நடத்த சரியான நேரம்! வரும் பாராளும் மன்றத் தேர்தலில் அவரே போட்டி இடப் போவதாகவும், அதற்காக அவருடைய ரசிகர் மன்றங்களைக் கூட்டி அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி அறிவிப்பு செய்திருந்தார்!..கறுப்பு பணம் அதிகம் சேர்ந்து விட்டதென்பதைப் புரிந்து கொண்டு, நாங்க உடனே ரெய்டுக்கு ஏற்பாடு செய்தோம்!” என்றார் கூலாக!.
– 11-9-2013