சிவராமனுக்கு படிக்க முடியவில்லை என்பதை விட படிக்கப்போனால் சோற்றுக்கு வழியில்லை என்பதால் சிறுவயதிலேயே காட்டுக்கு கல் பொறுக்கும் வேலைக்கு தினக்கூலிக்கு போக வேண்டிய நிலைமை.
தந்தை காலமாகி விட்டதால் தாயாரும் கைக்குழந்தையைப்பார்க்க வேண்டிய நிலையில் தந்தை போன வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படவே ‘படிப்பை தொடரமுடியவில்லையே…’ எனும் வருத்தத்தில் வேலைக்குச்சென்று வாங்கும் கூலியில் ஒரு ரூபாய் கூட தனக்கென எடுக்காமல் தாயிடம் கொடுத்து விடுவான்.
ஆனால் இவ்வளவு வறுமையான வாழ்வின் நிலையிலும் சிறுவனான சிவராமன் வேலை செய்யாமல் யாராவது பரிதாபப்பட்டு உணவு கொடுத்தாலோ, காசு கொடுத்தாலோ வாங்க மாட்டான். ‘அது பிச்சை வாங்கறதுக்கு சமம். பிச்சை கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது’ என்பான். அந்த குணத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தான்!
இப்படியிருக்க ஒரு நாள் வார இதழை தோட்டத்து முதலாளி படித்து விட்டு திண்ணையில் வைத்ததை எடுத்துப்படித்த போது சென்னையில் பிரபல ஹோட்டலில் வேலை என போட்டிருந்த விளம்பரத்தை சட்டைப்பாக்கெட்டில் பத்திரமாக கிழித்து வைத்துக்கொண்டான். இந்த நிலையில் அம்மாவின் கைக்குழந்தையும் காய்ச்சலால் தவறி விடவே அம்மா எப்போதும் போல் காட்டு வேலைக்கு செல்லத்துவங்கியதால் சிவராமனின் வேலையால் வந்த பணம் சேமிப்பானது. தாயாரின் செலவுக்கு அவரின் வேலையால் கிடைக்கும் கூலியே போதுமானதாக இருக்கும் என்பதால் தான் எண்ணியது நிறைவேற தடையில்லை என நினைத்தவன் தனது முடிவை உறுதிப்படுத்திக்கொண்டான்.
சேமித்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊட்டியிலிருந்து சென்னைக்கு உருளைக்கிழங்கு கொண்டு செல்லும் லாரியில் ஓட்டுனருக்கு பணம் கொடுத்து ஏறிக்கொண்டான். பேருந்து பயணத்துக்கான டிக்கெட் விலையில் பாதி கொடுத்தால் போதும்.
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதில் இறங்கியவன் காய்கறி மண்டியிலேயே எடுபிடி வேலையில் சேர்ந்து கொண்டு விளம்பர முகவரியை வீசி எறிந்தான். விடுமுறை எடுக்காமல் வேலை செய்ததால் முதலாளிக்கு நம்பிக்கை ஏற்பட, தள்ளு வண்டியும் காய்கறிகளும் கொடுத்து தனியாக சிவராமனை வியாபாரத்துக்கு அனுப்பி வைத்தார். தள்ளு வண்டியில் வந்த லாபம் தனிக்கடை போட வைத்தது.
சிறு வயதில் வறுமை வந்ததால் பெரிய பணக்காரனாக வாழ வேண்டும் எனும் சிந்தனை போதையாக மாறியது. திருமணம் செய்தால் பணம் செலவாகுமென திருமணமே செய்து கொள்ளவில்லை. ஊருக்கு போனால் மனசு மாறிவிடுமென ஊருக்கும் செல்லவில்லை. மாதம் ஒரு முறை பக்கத்து வீட்டு தமிழாசிரியர் முகவரிக்கு கடிதம் எழுதுவான். அதுவும் ஐந்து பைசா கார்டில் தான் எழுதுவான். அவரும் அம்மா நலமாக உள்ளார் என பதில் கடிதம் எழுதுவார்.
பல வருடங்கள் கடந்தன. பல மாடிக்கட்டிடங்களுக்கும், பல விலையுயர்ந்த கார்களுக்கும் சொந்தக்காரனாகி விட்ட நிலையில் அம்மாவை அழைத்து வந்து கூடவே வைத்துக்கொள்ள எண்ணி பிறந்த ஊருக்கு சென்ற சிவராமனுக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.
அம்மா குடியிருந்த வீடு பாழடைந்த நிலையில் பூட்டி வெகு நாட்களான நிலையில் இருந்தது. நோயால் படுக்கையிலிருந்த பக்கத்து வீட்டு ஆசிரியரிடம் விசாரித்தார்.
“உங்கொம்மா ஊர விட்டுப்போயி முழுசா ரெண்டு வருசமாச்சு. இந்த விசயத்த உங்கிட்ட சொன்னா நீயும் வருத்தப்படுவீன்னு பதில் லெட்டர்ல நலம்னு எழுதிட்டேன்.என்ன மன்னிச்சிரு தம்பி ” எனக்கூறியதைக்கேட்டு “மன்னிக்கப்பட வேண்டியவனும், மன்னிப்பு கேட்க வேண்டியவனும் நான் தான். பணமங்கிற வெறில பல வருசமா பெத்த தாய பார்க்காத பாவியாயிட்டனே…” என கதறி அழுததை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது.
மறுபடியும் சென்னைக்கு சென்றவர் தாயின் புகைப்படத்தை பத்திரிக்கைகளில் லட்சங்களை செலவு செய்து, புகைப்படத்தில் இருப்பவரைக்காணவில்லை. கண்டு பிடித்து தருபவர்களுக்கு உரிய வெகுமதி லட்சங்களில் அளிக்கப்படும் என வரி விளம்பரம் செய்திருந்தார்.
தனது பங்களாவில் அமர்ந்து தாயின் நினைவிலேயே மூழ்கியவராய் வரி விளம்பரத்தை பத்திரிக்கையில் பார்த்து விட்டு விரைவில் அம்மா கிடைத்து விடுவார் எனும் நம்பிக்கையில் காஃபி பருகியபோது நான்கு பேர் வந்து “ஐயா அனாதை பொணத்தை தகனம் பண்றவங்க நாங்க. உங்கள போல உள்ள வசதியானவங்க உதவனம்” என கேட்டதும், கோபத்தில் எழுந்தவர் “போங்கையா வெளில. அந்த வாட்ச்மேன் எங்க போயிட்டான்? இவங்களை யாரு உள்ளே விட்டது?” என கத்தியவாறு கூறியும் வந்தவர்கள் போகாமல் நின்றிருக்க, “உங்களுக்கு பிச்ச தான வேணும் இந்தாங்க இந்த செல்லாத ஒரு ரூபா இருக்கு வாங்கீட்டு போங்க” என கூறி காசை வந்தவர் ஒருவருடைய கையில் கொடுக்க, அதையும் வேண்டாமென கூறாமல் வாங்கிக்கொண்டு வெளியேறினர்.
‘இந்த பிச்சக்காரங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேசத்துல வராங்க. உழைக்காம ஊரை ஏமாத்தி வாழறதே பொழப்பா போச்சு. கைகால் நல்லாருக்கும் போது வேலைக்கு போகாம எதுக்கு பிச்சை எடுக்கறாங்க? கோயில் கட்டோணும், அனாதை பொணத்தை தகனம் செய்யோணும், அனாதை குழந்தைகளுக்கு சோறு போடோணும்’ னு கூட்டங்கூட்டமா கிளம்பிட்டாங்க. வர்றவங்களுக்கு செல்லாத காசையாவது கொடுத்தாத்தாம் போறாங்க. இந்த வீட்டுக்கு போனா செல்லாத காசுதாங்கெடைக்கும்னு இனிமே வராம இருக்கட்டும்னு தான் இன்னைக்கு செல்லாத காசையே போட்டேன்’ என நினைத்தபடி இன்னும் சில பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும் படி தனது நிறுவன மேனேஜருக்கு போன் செய்தார்.
சிவராமன் வசிக்கும் அரண்மனை போன்ற பங்களா இருக்கும் வீதிக்கு நான்கு வீதி தள்ளியுள்ள வீதியில் ஒரு பூங்கா அருகே கிடந்த அனாதை பெண் சடலத்தை சில தன்னார்வலர்கள் எரியூட்டும் மயானத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றியபோது, ஒருவர் முன் வந்து காலையில் சிவராமனிடம் வாங்கிய செல்லாத ஒரு ரூபாய் நாணயத்தை பிணத்தின் நெற்றியில் வைத்தார். சடலமாக இருக்கும் வயதான பெண் செல்லாத காசைக்கொடுத்த தொழிலதிபர் சிவராமனின் தேடப்படும் தாய் தான் என்பது காசை பிணத்தின் நெற்றியில் வைத்த, தினசரிகளைப்படிக்கும் பழக்கம் இல்லாத சமூக சேவை செய்யும் அந்த நல்ல ஏழை மனிதருக்குத்தெரியாது!