சமூக ஜீவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 17, 2025
பார்வையிட்டோர்: 161 
 
 

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலையில் அவன் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான். கை கால்கள் எல்லாம் துவண்டு போய்க்கொண்டிருந் தன. இப்போதெல்லாம் என்னவோ தெரியவில்லை, ஒரே அசதி. காலையில் ஒன்பது மணிக்கு வீட்டை விட்டு இறங்கி ஒரு மைல் தூரம் ஓட்டமும் நடையுமாய் நகர பஸ் நிலையத்துக்குச் சென்று கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறி நெரிசலில் வவ்வாலாய்த் தொங்கியவாறு ஆறு மைல் யாத்திரை செய்து, கீழ்ச் சிப்பந்திகள், மேலதிகாரி இவர்களின் கெடுபிடியில் அகப்பட்டு, வேலை செய்து களைத்துப் போய், மறுபடியும் பஸ்ஸைப் பிடித்துக்கொண்டு இப்படி வீடு திரும்பும்போது உடம்பில் உயிர் என்ற ஒன்று இருக்கிறதா என்றே அவனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. இனி வீட்டுக்குள் சென்று உடையை மாற்றிவிட்டு, ஒரு அரை மணி நேரமாவது சவாசனத்தில் அப்படியே படுத்துக் கிடக்காமல் அவனால் ஒரு வார்த்தை பேசக் கூட முடிவதில்லை. அத்தனைக்கு ஒரு சோர்வு… களைப்பு… 

தெரு முனை திரும்பியதும், தன் வீட்டு நடையில் ஒரு கை வண்டி (தள்ளு வண்டி) நிற்பது தென்படுகிறது. பக்கத்தில் வந்தபோது, லுங்கி உடுத்திக்கொண்டிருந்த ஒருவன் – கன்னங்கருப்பு, முகத்தில் அம்மைத் தழும்பு, தலையில் ஒரு கட்டு, மேலே சட்டை இல்லை – வண்டியைப் பிடித்துக்கொண்டு நிற்க, இன்னொருவன் இருபது வயதிருக்கும், வெள்ளைச் சட்டை, மடக்கிக் கட்டியிருக்கும் வேஷ்டி, வெளியே உந்தி நிற்கும் பெரிய பற்கள் மண் வெட்டியால் இவன் வீட்டு நடையில் தெருவில் அழகாய் வளர்ந்து நிற்கும் பச்சைப் புல்லுடன் மண்ணை வெட்டி வெட்டி வண்டியில் நிரப்பிக்கொண்டிருப்பது தெரிகிறது. 

சென்ற ஆண்டு… வீட்டின் முன் பள்ளமாய் இருந்ததால், மழை சமயத்தில் சேறு கெட்டி, லாரியோ, காரோ அந்த வழிப் போகும்போது வெளிக் காம்பவுண்டுச் சுவர் முழுவதும் சேற்றை வாரி அடித்து அசிங்கமாக்கிக்கொண்டிருந்தது. அதோடு தெருவில் மண்ணில் புதை போட்டிருக்கும் டிரைனேஜ் பைப் வேறு வெளியில் எழும்பித் தெரிந்துகொண்டிருந்தது. ஒரு வேளை அது உடைந்து கிடைந்து போய்விடக்கூடாதே என்றெல்லாம் எண்ணி, லாரிக்கு நூறு ரூபாய் என்பது அப்போதைய நிலைமையில் ஒரு பெரிய துகையாய் இருந்தும்கூட, நாலைந்து லாரி மண் தன் சொந்தச் செலவில் இங்கே தெருவில் இறக்க வைத்து, பள்ளத்தை, குழியை எல்லாம் மூடி, வீட்டின் முன் தெருவை சமநிரப்பாக்கியிருந்தான் இவன். மழையில் பசும்புல் வளர்ந்து அழகாய் இருந்த தெரு நடை, இப்போது அவன் மண்ணை அள்ளப் பள்ளமாகிக் கொண்டிருப் பதைக் காண இவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. 

நடையில் வந்து நின்றுகொண்டு, ‘எதுக்கு இப்படி மண்ணை வெட்டி எடுக்கிறே?’ குரலைச் சிறிது உயர்த்தி இவன் கேட்டான். 

வெள்ளைச் சட்டையன் தலை தூக்கி இவனைப் பார்த்துவிட்டு – அவன் பற்கள் முழுதும் வெளியே தெரிகின்றன – மீண்டும் அவன் பாட்டுக்கு மண்ணை வெட்டி எடுத்து வண்டியில் தட்டிக் கொண்டிருக்கிறான். வண்டியைப் பிடித்துக்கொண்டு நிற்பவன் மடியிலிருந்து ஒரு பீடியை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு அந்த வழியே என்னமோ சத்தம் போட்டுப் பேசியவாறு சென்ற ரெண்டு பேரிடம் ‘அண்ணாத்தே… தீயிருக்கா?’ என்று கேட்கிறான். அதில் ஒருவன், இவனையே பார்த்தவாறு நெருப்புப் பெட்டியை இவனிடம் கொடுக்கிறான். இவன் ஒரு தடவை, அவனைப் பார்த்துவிட்டு, மெல்ல நெருப்புப் பெட்டியை வாங்கிப் பற்ற வைத்துவிட்டுத் திருப்பிக் கொடுக்கிறான். அவர்கள் ரெண்டு பேரும் இடையில் துண்டிக்கப்பட்ட அவர்களது பேச்சைத் தொடர்ந்து பேசியவாறு செல்கிறார்கள். 

‘ஏய்… உங்கிட்டத்தான் கேக்கிறேன். இதென்ன வேலை? இவன் குரலை உயர்த்தி மறுபடியும் கேட்கிறான். வெள்ளைச் சட்டையன் பல் முழுவதும் தெரிய, அசிங்கமாய்ச் சிரித்துவிட்டு, ‘இது தெரு மண்ணு… கார்ப்பரேஷன் சொத்து’ என்கிறான். வண்டியைப் பிடித்துக்கொண்டு நின்ற லுங்கிக்காரனும், வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கும் தெருச் சிறுவர்களும் என்னவோ ஒரு பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டுவிட்டதைப் போல் சிரிக்கிறார்கள். 

மறுபடியும் அவன் தன் வேலையில் ஈடுபடுகிறான். இரண்டு போலீஸ்காரர்கள் அவர்களையும் இவனையும் பார்த்தவாறு அந்த வழி செல்கிறார்கள். 

வீட்டு நடையில் இவன் சத்தம் கேட்டு, இப்போது, இவன் மனைவி ராதா, குழந்தைகள் எல்லோரும் வெளியே வருகிறார்கள். 

வண்டி நிறைந்த பிறகு லுங்கிக்காரன் இழுக்க, வெள்ளைச் சட்டையன் தள்ள, வண்டி செல்வதைப் பார்த்துவிட்டு இவன் உள்ளே வந்து உடை மாற்றிவிட்டுக் கட்டிலில் படுக்கிறான். 

களைப்பில் சோர்ந்து துவண்டுபோய்க்கொண்டிருக்கும் உடம்பு… மனசில் சொல்லத் தெரியாத எரிச்சல். 

‘டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து படுங்களேன்…’ ராதா வந்து அழைக்கிறாள். ‘நீ பார்த்துக்கிட்டுப் பேசாமல் இருந்தி யாக்கும்…’ இவன் எரிந்து விழுகிறான். 

‘நான் பார்க்கவே இல்லை… பார்த்திருந்தாலும் நீங்க சொல்லும் போதே கேக்காதவன் நான் சொன்னாக் கேக்கவா போறான்?’ 

இவன் எழுந்து வீட்டின் பின்பக்கம் பாத்ரூமுக்குச் சென்று கை கால் முகம் அலம்பிவிட்டு, இறங்கும்போது விழிகள் வழக்கம்போல் மேலே செல்ல, திறந்துக் கிடக்கும் ஜன்னல்… ஜன்னலின் மறு பக்கம் இரண்டு தலைகள்… மனசில் சொரு சொருவென்று ஆத்திரம்… அந்தக் கள்ளச் சாமியாரைச் செருப்பைக் கழற்றி அடிக்கணும் என்று மனசுக்குள் பொருமிக் கொண்டே, கொல்லையில் கொடியில் காற்றில் படபடத்துக் கொண்டு கிடந்த துண்டை எடுத்து முகத்தையும் கை கால்களையும் அழுத்தித் துடைக்கத் தொடங்கினான். 

மூணு நாலு மாசம் முன்… 

இவன் வீட்டின் வலப் பக்கம் தொட்டு அடுத்த பெரிய பங்களாவைத் திடீரென்று புதுப்பிக்கும் மராமத்து வேலையெல்லாம் அமர்க்களமாய் நடைபெறுவதைக் கண்டு எதிரில் இருந்த பெட்டிக் கடை ஆறுமுகத்திடம் விசாரித்தபோது, ‘சார்… அந்தப் பங்களாவை ஒரு லட்சம் ரூபாய்க்கு என்.வி.ஈ. சாமியார் வாங்கியிருக்கிறார்’ என்றான். 

‘ஒரு லட்சம் ரூபாய்க்கா?’ என்று கேட்கும்போதே எப்போதும் சட்டை இல்லாத உடம்பில் இடுப்பில் காஷாய வேஷ்டி, பெரிய கன்னங்கரிய தாடி மீசை, கூலிங் கிளாஸ், தோல் பை, மிதியடி, பியட் கார் இத்தகைய சின்னங்களுடன் அடிக்கடி வழிகளில் எதிர்ப்படும் அந்தச் சாமியாரை இவனுக்கு ஞாபகம் வந்தது. 

‘அவருக்கென்ன சார்… கள்ளப் பணம்… காஷாய வேஷம் எல்லாம் வெளியேதான் சார்… மற்றபடி… ஒன்றும் சொல்ல வேண்டாம்… பத்திருபது வருஷத்துக்கு முந்தி பட்டாளத்துக்குப் போயிட்டு வந்தவராம்… பக்கத்து வெளியூரில் எல்லோர் கிட்டையும் நிலம் புலன்களுக்காகச் சண்டை சச்சரவுதான் சார்… கோர்ட்டில் எத்தனையோ வழக்குகள் நடக்குதாம்… அதோடு ரெண்டோ மூணோ பெண்டாட்டி… இந்தப் பங்களாவைப் புதுப்பித்து ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஏதோ ஆபீஸுக்கு விடப் போகிறாராம்…’ 

இதன்பின் அந்த மூன்று மாடிக் கட்டிடத்தில் மூன்றாம் மாடிக் கூரையில் பழைய ஓடுகள் மாற்றப்பட்டுப் புதிய ஓடுகள் பரப்பப்பட்டன… புதிய பிரம்மாண்டமான தடி உத்திரங்கள் மாட்டப்பட்டன. அப்போதெல்லாம், ஓட்டுத் துண்டுகள், பெயர்ந்த காரை, தடிச் சிதில்கள் எல்லாம் இவன் வீட்டுக் கொல்லையில் சடசடவென்று விழத் தொடங்கின. ஒருநாள் மாலையில் ஆபீஸிலிருந்து வந்து வீட்டு மாடிக்கு இவன் போனபோது, மாடி வராந்தாவில் வழக்கத்துக்கு விரோதமாய் ஒரு இருட்டு. சுற்றுமுற்றும் பார்த்தபோதுதான் புரிந்தது, காற்று வெளிச்சம் வர அந்த மாடி வராந்தா சுவரின் மேலே இருந்த சின்ன இரண்டு வென்டிலேட்டர்களை அடைத்துக்கொண்டு மறு பக்கம் ஒரு செங்கல் சுவர் எழுப்பப்பட்டிருப்பது. கம்பிகளின் இடைவழி தெரிகிறது. மனசுக்குள் ஒரு ஆத்திரம் தோன்றியது. ஆனாலும், சாமியாரிடம்போய் எப்படி முறையிட முடியும். அவர் வீட்டின் ஸீக்ரஸிக்கு அந்த வென்டிலேட்டர்கள் தடையாக இருக்கிறது என்று அவர் காரணம் சொன்னால் அதை மறுத்துத் தன்னால் என்ன சொல்ல முடியும்? எனவே அவன் உள்ளுக்குள் பொருமிக்கொண்டு பேசாமல் இருந்து விட்டான். இரண்டு நாட்கள் கழித்து அவன் ஆபீஸிலிருந்து வீட்டில் வந்து ஏறும் போது ராதா வந்து, ‘பார்த்தேளா சாமியார் செய்திருக்கும் காரியத்தை’ என்று இவனைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டினாள். இவன் வீட்டுக் கொல்லையில், பாத்ரூம் நடையில், நேர் இரண்டு வீட்டுக்கும் பொதுவாக இருந்த சுவரில் மேலே மாடியில் இடித்து சாமியார் ஒரு ஜன்னல் போட்டிருப்பதைப் பார்த்தான். 

‘இது எப்போ.’ 

‘நீங்க ஆபீஸுக்குப் போனபிறகு நாலைஞ்சு பேருங்க மேற்பார்வையில் அவசர அவசரமாய்ச் செஞ்ச கைங்கரியம்.’ 

‘நீ பார்த்துக்கிட்டு சும்மாவா இருந்தே?’ 

‘சொன்னாக் கேட்டாத்தானே… அவுங்க நாலைஞ்சு ஆம்புளை கள் நின்னு இப்படிச் செய்யும்போது, பொம்பளை நான் என்ன செய்வேன்?’ 

இவனுக்கு ஆத்திரம் சகிக்க முடியவில்லை. ஆபீஸிலிருந்து வந்த டிரஸைக்கூட மாற்ற நிற்காமல், வந்த காலுடன் அடுத்த வீட்டுக்கு விரைந்தான். இவனைக் கண்டதும் தாடி மீசையின் இடையில் பல் முழுவதும் தெரியச் சிரித்தவாறு, ‘அடேடே… நீங்களா… வரணும்… வரணும்… என்ன சார் விசேஷம்?’ என்று சாமியார் அமர்க்களமாய் வரவேற்றபோது இவன் வந்த வேகம் குறைந்து விட்டது. 

‘இல்லே… நீங்கள் இப்படிப் பொதுச் சுவரில் என் வீட்டு பாத்ரூமைப் பார்த்து இப்படி ஒரு ஜன்னல் போட்டிருப்பது முறையா? பொம்பளைங்களுக்கு வீட்டுக்குப் பின்னாலே நடமாட வேண்டாமா?’ 

‘ஓ… அதைச் சொல்றேளா…’ என்று அவர் இழுத்தபோது, ‘எங்க போர்ஷனில் முன்னாலேயே இருந்த வென்டிலேட்டரை மறைச்சு நீங்க சுவர் கட்டியபோது நான் வந்து கேட்கவில்லை… இப்போ நீங்க மட்டும் பொதுச் சுவரில் இப்படிப் புதுசா ஜன்னல் போடுவது சரியா?’ அவர் இப்போது சிரிக்கிறார்… ‘ஆமா சார்… இந்தக் காலத்தில் இதெல்லாம் பெரிய ஒரு தொந்தரவுதான் சார். அந்தக் கொத்தனாரிடம் நான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன்; வேண்டாம், வேண்டாமுண்ணு! ஆனா, அவன் கேட்டாத் தானே… நேரே இந்தத் தெரு முனையில் இங்கே பார்த்திருக்கும் அம்பாள் கோயில் வாசலை அடைத்து இங்கே சுவர் இருப்பது தோஷம் அப்படிண்ணு சொல்லி இதைச் செஞ்சுட்டான். இப்போ அதுக்கென்ன… உங்களுக்கு இஷ்டமில்லாட்டி, இப்போ அதை மாற்றி விட்டு சுவர் கட்டி விடலாம். ஆனால், அந்த ஜன்னல் அங்கே இருந்தாலும் உங்களுக்கு ஒரு கஷ்டமும் வராம் நான் பார்த்துக்குறேன்…’ 

‘அதெப்படி…? நீங்கள் ஏதோ ஆபீஸுக்கல்லவா வாடகைக்கு விடப் போறேள்… ஆபீஸுன்னா பல பேருங்க வருவாங்க… போவாங்க…’ 

‘என்ன சார், நான் அவ்வளவு தூரம் விவரம் இல்லாதவனா? எனக்குத் தெரியாதா இடைஞ்சலா இருக்குமுண்ணு! அதனாலே தான் எப்போதும் அந்த ஜன்னலை அடைச்சுப் போடும்படி வச்சிருக்கேன். நீங்க கவனிச்சேளா சார். அந்த ஜன்னலின் கதவுகளும் போல்ட்டும்கூட உங்க பக்கம்தான் போட்டிருக் கேன்… எதுக்குத் தெரியுமா? அந்தப் பக்கம் ஏணி வச்சு ஏறி ஜன்னல் கதவுகளை அடைச்சு போல்ட்டையும் போட்டு விட்டால், பிறகு இங்கே இருந்து யாராலையும் அதைத் திறக்க முடியாது… எப்படி நம்ம யோசனை?’ என்று கூறிவிட்டு சத்தம் போட்டு அவர் சிரித்தபோது, கூடச் சிரிப்பதுபோல் காட்டவேண்டியது தன் கடமை என்று இவனுக்குத் தோன்றியது. பிறகு, இவனை அவர் பேசவே விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இந்த மூன்று மாச காலமாக ராத்திரி பகல் ஒருநாள்கூட இந்த ஜன்னல் அடைத்துக் கிடந்து காணும் பாக்கியம் இவனுக்குக் கிட்டவில்லை. பாத்ரூம் பக்கம் வரும்போதெல்லாம் மலக்கத் திறந்து கிடக்கும் அந்த ஜன்னலைப் பார்த்து இப்போதுபோல் உள்ளுக்குள் பொருமிக் கொள்கிறான்… ஓரிரு தடவை வழியில் சாமியைப் பார்த்த போது, அவர் ஈ என்று பல்லைக் காட்டுவதைப் பாராட்டாமல், காரசாரமாய் ரெண்டு வார்த்தை அவரிடம் கேட்க அவர் பக்கத்தில் ஓடிச் சென்றும், சகிக்க முடியாத ஆத்திரத்தால் வார்த்தைகள் ஒன்றும் வாயிலிருந்து வெளியே வராமல், ‘நீங்க செய்வது சரியா?’ என்று மட்டும் கேட்டு ஒரு உறுமல் உறுமிவிட்டுத் திரும்பி நடக்கத்தான் தன்னால் முடிந்திருக்கிறது… 

கோர்ட்டில் ஒரு கேஸ் தாக்கல் செய்தால் என்ன என்று இவன் நண்பன் அட்வகேட் சுந்தரவதனனிடம் இது பற்றி விசாரித்த போது, ‘நீ ரொம்ப ஆர்த்தடாக்ஸா இருக்கிறே… இந்தக் காலத் தில் இதெல்லாம் சகஜம்… யூரோப்பியன் லாவில் இதுக்கெல் லாம் ஷரத்துக்கள் இருக்கும். நாம் இந்தியர்கள். சாதாரணமா இதுக்கெல்லாம் அப்படி அலட்டிக் கொள்வதில்லை…’ என்று சொல்லி இவனைப் பின்வாங்க வைத்துவிட்டான். 

‘என்னா அங்கேயே நின்னுட்டீங்க… டிபன் ஆறிப் போகுது’ என்று ராதா கூப்பிட்டதும் இவன் சமையல் அறைக்கு வந்தான். 

தட்டில் ஆவி பறக்கும் உப்புமா… ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டிருக்க மாட்டான். வீசிய காற்றில் குப்பென்று அந்த வாடை தொண்டைக்குள் அடைத்துக்கொண்டதைப்போல் அவனுக்குக் குமட்டல் எடுத்தது… 

‘உம்,உம்… போதும்… காப்பியை எடு’ என்றுவிட்டு எழுந்து கையை அலம்பினான். ராதாவும் மூக்கில்லாதவள் அல்லவே. அவளையும் அந்த நாற்றம் போய்ச் சேர்ந்திருக்காமல் இருக்க முடியாது. ஆனால், அவள் ஒன்றும் சொல்லவில்லை. இதுபற்றி அவளிடம் இவனாக வாய் திறந்தால், கடைசியில் ஒரு சண்டையில் போய்த்தான் அது முடியும் என்பது இவனுக்குச் சரிவரத் தெரியுமாதலால், காப்பியைக் குடித்தது பாதி, குடிக்காதது பாதி, தம்ளரை அவள் கையில் கொடுத்துவிட்டு அவன் சமையலறையை விட்டு வெளியேறினான். 

இவன் வீட்டின் இடப் பக்கம் தொட்டுக் கிடக்கும் முப்பது சென்ட் தென்னந்தோப்பு ராதாவின் தங்கச்சியுடையது. அவள் மாப்பிள்ளை வீடு அடுத்த தெருவில் இருந்தது. இப்படித்தான் ஒரு நாள் இவன் ஆபீஸிலிருந்து வீட்டுக்குள் ஏறவில்லை. திப்பென்று குடலைப் புரட்டுவதுபோல் ஒரு நாற்றம். தோப்பை எட்டிப் பார்த்தபோது, ராதாவின் தங்கச்சி புருஷன் சேதுராமனும், சேதுராமனின் அப்பா குப்புஸ்வாமியும் மேற்பார்வையிட, வண்டி வண்டியாய், எங்கோ கிடந்து புழுத்த ஹோட்டல் எச்சில் இலைகள், குப்பை கூளங்களை எல்லாம் தென்னம்பிள்ளைகளின் அடியில் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளே வந்த போதும், மலினப்படுத்தப்பட்ட அந்தக் காற்றின் அசுத்த விஷ வாடை… ‘இங்கே அவுங்க தென்னம்பிள்ளைகளை நட்டு எத்தனையோ வருஷமாச்சு… நாம் இப்போ இங்கே இந்த வீட்டில் குடி வந்தபிறகுதானே இவுங்களுக்கு இப்படி ஒரு நீச புத்தி போச்சு. இங்கே நாமோ பிள்ளை குட்டிகளோடு வசிக்கிறோம்… இப்படி ஏர் பொலுஷன் ஆக்கி பிள்ளைகளுக் கும் நமக்கும் ஏதாவது சீக்கு வரட்டுமுண்ணுதானே? அவன் வீட்டு முற்றத்தில் நிக்கும் தென்னம்பிள்ளைகளுக்கு இந்த அழுகிப் புழுத்த எச்சிலைக் குப்பைக் கூளங்களைப் போடுவானா? இதுக்கெல்லாம் இவன் ஒரு டாக்குட்டராம். டாக்குட்டர்…’ என்று ராதாவிடம் சத்தம் போடத்தான் இவனால் முடிந்தது. இந்த மணத்தை ஏற்றவாறு இங்கே வந்த மாமனாரி டம் சொன்னபோது, ‘நான் சொல்லுகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனவர், பிறகு இந்தப் பக்கமே வரவில்லை. ஓரிரு முறை நேரில் இதைப்பற்றி அவர்களிடமே கேட்க நினைத்தபோது அவர்கள் தோப்பு தென்னைகளுக்கு உரம் போடுவதில் தனக்குப் பொறாமை என்று அர்த்தப்படுத்தி விட்டால்… என்று ஒரு சங்கடம். தோப்பில் சேதுராமனின் அப்பா தலை தென்படும் போதெல்லாம் குப்பைஸ்வாமி என்று ராதாவிடம் உச்சரித்துக் கலி தீர்த்துக்கொண்டிருக்கிறான் இவன். 

கட்டிலில் கிடந்த அவன் மறுபடியும் வெளியில் என்னவோ சத்தம் கேட்டு எழுந்துபோய்ப் பார்த்தபோது மீண்டும் அந்த லுங்கிக்காரன் வண்டியைப் பிடித்துக்கொண்டு நிற்க, வெள்ளைச் சட்டையன் மண் வெட்டியால் வீட்டு நடையிலிருந்து மண்ணை வெட்டி வண்டிக்குப் போட்டுக்கொண்டிருக்கிறான். இவனுக்கு ஆத்திரம் அணை உடைத்துக்கொண்டு குபீரென்று பாய்ந்தது. ஓடித் தெரு நடைக்கு வந்தான். ‘ஏய்… உங்ககிட்டே எத்தனை வாட்டிச் சொல்லணும்? இப்ப வீட்டு நடையிலிருந்து மண்ணை முழுதும் வாரிக் கொண்டு போய்க்கிட்டிருக்கே…’ 

வெள்ளைச் சட்டையன் பல் முழுதும் வெளியில் தெரிய பதில் சொன்னான்: ‘வீட்டுக்குள்ளே இருந்து வாரல்லையே. இது கார்ப்பரேஷன் ரோடு…’ 

‘உன் வீட்டு நடையிலும் கார்ப்பரேஷன் ரோடு இருக்குமே. அங்கே போய் வாரு… இது நான் காசு கொடுத்து வாங்கிப் போட்ட மண்ணு…’ 

‘இப்போ காசு வேணுமா?’ 

‘காசும் வேண்டாம்… ஒண்ணும் வேண்டாம்… பேசாம் போயிட்டாப் போதும்…’ 

‘போடா… அப்படித்தான் வாருவேன்…’ அதன்கூடச் சில கெட்ட வார்த்தைகள்… 

தெருவழிப் போகிறவர்கள், வருகிறவர்கள், தெருவாசிகள் சிலர் கூட்டமாய்க் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். கூடி நிற்கும் தெருப் பையன்களுக்கு ஒரே குஷி… இவன் பார்த்துக்கொண்டு நிற்கையில் வெள்ளைச் சட்டையன் ஈண்ணு பல்லை இவனை நோக்கிக் காட்டியவாறு, மண்ணை மண் வெட்டியால் வாரி வண்டியில் நிரப்பிக்கொண்டிருக்கிறான். வண்டி நிரம்பியதும், லுங்கிக்காரன் இழுக்க, வெள்ளைச் சட்டையன் பின்னாலிருந்து தள்ள, வண்டி நகரவில்லை. இவனையும் அவர்களையும் மாறி மாறி பார்த்துச் சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்த தெருப் பையன்கள் வண்டிச் சக்கரங்களைத் தள்ளி உதவ, வண்டி முன்னால் இவனைக் கடந்து செல்லும்போது, ஒரு வெற்றிப் பெருமிதத்துடன் இவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, ‘அவன் முறைக்கிறான், பார்க்கலையா?’ என்று சொல்லிச் சிரிக்கிறான் வெள்ளைச் சட்டையன். ‘உன்னைப் போல் எத்தனை பேரையோ பார்த்திருக்கேண்டா… இப்போ வாரிக்கிட்டுப் போவதைப் போல் இந்த மண்ணை உன்னைக்கொண்டே இங்கே திரும்பக் கொண்டுவந்து தட்ட வைப்பேன் பாரு…’ என்று தெரு நடையில் நின்றுகொண்டு இவன் சத்தம் போட்டபோது, ‘போடா…’ வுடன் கனமான ரெண்டு கெட்ட வார்த்தைகளைக் கூடச் சொல்லி அவன் வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்கிறான். 

– 25.06.1974 – சதங்கை, ஏப்ரல் 1975.

– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *