கோடிப் பக்கத்தில் ஒரு பலாமரம்




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஞாயிற்றுக் கிழமையென்றால் போதும் சொல்லிவைத்தாற் போல எல்லோருமே அந்த இடத்தில் கூடி விடுவார்கள். ஐந்தாறு வீடுகளைக் கொண்ட அழகான லயம் அது. கோடிப்பக்கம்தான் அதன் சிறப்பே. அங்கே நல்ல உயர்ந்து வளர்ந்த பெரிய பலாமரமொன்று நிற்கும். பரந்த கிளைகளும், குமுகுமுவென மொய்த்த இலைகளுமாய் கோடிப்பக்கத்திற்கே அந்த பலாமரம்தான் அழகு. காற்றடிக்கும் போதெல்லாம் சருகுகள் கொட்டி கொட்டி வாசலெல்லாம் கோலம் போட்டது போல இருக்கும். அதிலே யாரோ வரைந்த கிளித்தட்டு பெட்டியொன்றும் அழியாமல் அழுந்திப்போய்க் கிடக்கும்.
வழமைபோலவே எழுந்ததும் கோடிப்பக்கத்திற்கு ஓடிப்போன பாலுவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது. எந்தச் சலனமும் இல்லாமல் கோடிப்பக்கம் வெறுமையாய்க் கிடந்தது. பலாமரம் கூட ஏதோ ஒன்றை இழந்துவிட்ட துவளலுடன் இருப்பதாய்த்தான் பாலுவிற்கு தோன்றியது.
நேற்றைய சண்டையில் அந்த லயமே மூர்ச்சையாகிப்போனதென்னவோ உண்மைதான். தன்னுடன் கூடப்படிக்கும் கண்ணாதம்பியின் வீடுதான் தொங்கல் வீடாய் இருந்தது. கண்ணாதம்பியின் அம்மாதான் கோடிப்பக்கத்தை கூட்டி, சாணி தெளித்து அழகாய் வைத்திருப்பாள். ஓரத்தில் நான்கைந்து கனகாம்பரச் செடிகள் பூத்து சிரித்துக் கொண்டிருக்கும். ஆனால் இன்று கோடிப்பக்கம் கூட்டப் பட்டிருக்கவில்லை. ஆங்காங்கே கோழியின் எச்சங்களும், அம்மாச்சி புள்ளையுடன் மண்சோறு ஆக்கிய சிரட்டைகளுமாய் பார்க்கவே சகிக்கவில்லை. ஓடிப்போய் கூட்டுமாரை எடுத்துவந்தான் பாலு.
“எங்க வாசலை மிதிச்சால் காலை வெட்டுவன்”
கண்ணாதம்பியின் கையில் கத்தியொன்றிருந்தது.
“அடேய் கண்ணாதம்பி நான் ஒன்னும் செய்யலடா”
“யாரையும் வர விடவேணான்னு எங்க அம்மா சொன்னிச்சி”
“வாடா வெளையாடுவோம் சண்ட போடாதடா”
பாலு கெஞ்சினான். அவனுக்கும் பயம். கண்ணாதம்பி அவங்க அப்பாவை போலவே முரடன். சொன்னால் செய்திடுவான்.
நேற்று சும்மாதான் சண்டை ஆரம்பிச்சது. கடைசியில வெட்டு குத்துன்னு பெரிய ரகளையாய் மாறி, பாலுவுக்கு நினைக்கவே உடல் சிலிர்த்தது.
ஒருபக்கம் கண்ணாதம்பி, மகேஸ், பெரியபுள்ள, ராணி, சின்னதொரமாமா எல்லோரும் கிளித்தட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். பலாமரத்து நிழலோரமாய் பாலுவும் அம்மாச்சியும் மண்சோறு ஆக்கி கொண்டிருக்க, கட்டையா பலாமரத்தில் ஏறி பழம் தேடிக்கொண்டிருந்தான். பணிய லயத்தில் “கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாட்டு சத்தமாய் போய்க்கொண்டிருந்தது.
இதையெல்லாம் பார்த்தபடி கண்ணாதம்பியின் அப்பா ரொட்டி தின்று கொண்டிருந்தார். பாலுவிற்கு எச்சி ஊறியது. கண்ணாதம்பி வீட்டுல நல்ல ருசியா ரொட்டி சுடுவாங்க. தேங்காப்பூ நெறையப் போட்ட ரொட்டி நடுவில பிலாக்காய் கறி வச்சு அப்படியே கடிச்சி சுடச்சுட சாப்பிட்டா சும்மா எப்படி இருக்கும் தெரியுமா……?
அந்த நேரம்தான் அவன் வந்தான். சின்னையாவாம் சின்னைய்யா. பாலுவிற்கு அவனைக் கண்டாலே பிடிக்காது. எந்த நேரமும் குடிச்சிட்டு திரிவான். சட்டைப்பையில எப்பவும் ஒருகட்டு பீடியும் நெருப்பட்டியும் வச்சியிருப்பான். ஸ்டோர் வேல செய்யிறதாலை பகலைக்கும் குடிப்பானாம். அப்பதான் மேல்வலி தெரியாதாம். இருந்தாலும் அவனைப் பார்த்தாலே பாலுவிற்கு குமட்டிக்கொண்டு வரும். எல்லார்கூடவும் சண்டைபோடுவான். ஆ…ஊ..ன்னா கத்தியை காட்டி மிரட்டுவான். அந்த லயமே அவனுக்கு பயம். கண்ணாதம்பியின் அப்பா மட்டும் பயப்பட மாட்டார்.
ஏதோ ஒரு சிங்களப்பாட்டு பாடிக்கிட்டேதான் சின்னைய்யா வந்தான். சாரத்தை ஒரு பக்கம் உயர்த்தி பிடிச்சுக்கிட்டே கிளித்தட்டு பெட்டியில உட்கார்ந்ததுதான், கண்ணாதம்பிக்கு சுர்ருன்னு கோவம் வந்துரிச்சி.
“எழும்புங்க மாமா வெளையாடனும்” என்றான்.
“அப்பறமா வெளையாடுங்கடா”
“எழும்பாட்டி இதாலேயே அடிப்பேன்” கண்ணாதம்பி ஒரு கல்லைக் கையில் எடுத்து காட்டினான்.
“என்னடா சொன்ன? ஒங்கொப்பன் மவனே ஒன்ன என்னப்பண்ணுறேன் பாரு”
என்றபடியே கண்ணாதம்பியின் தலையில் இரண்டு அடிவிட்டான் சின்னையா.
கண்ணாதம்பியின் அப்பாவிற்கு கோபம் வந்திருக்க வேண்டும். விறுவிறுவென வந்து கண்ணாதம்பியை இழுத்துக் கொண்டு,
“சின்னைய்யா, புள்ளைக வெளையாடுற எடத்துல வம்பு பண்ணாம மரியாதையா போயிடு” என்றார்.
சண்டைபோடவென்றே வந்தது போல சின்னையா கத்தினான்.
“போகாட்டி…. போகாட்டி அடிச்சிருவியா? அடிடா பார்க்க ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்தை அடிடா பாக்கலாம். பொன்னப்பயலே’
“சின்னையா உன் சண்டித்தனத்தையெல்லாம் ஒங்க லயத்தோட நிப்பாட்டிக்க. அப்பரம் என்னை கெட்டவன்னு சொல்ல வேணாம்.”
“அதான் சொல்லிட்டேனே வந்து அடிச்சு பாருடா”
சொல்லிக்கொண்டே தன் சாரத்தில் செருகியிருந்த கத்தியை எடுத்துக்கொண்டான் சின்னையா. எல்லோருமே பயந்து போனார்கள். விபரீதம் புரியாமல் கத்தியை மேலும் கீழும் ஆட்டிய படியேபச்சை ஊத்தையில் ஏசினான்.
கண்ணாதம்பியின் அப்பா கத்தியை பறித்துவிட எத்தனையோ முறை முயற்சித்தார். இறுதியில் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு கிளித்தட்டுப்பெட்டி மேலேயே உருண்டு புரண்டு சண்டை போட்டுக் கொண்டார்கள். பாலுவிற்குப் பயத்தில் மூத்திரம் கூட வந்து விட்டது. அம்மாவிடம் சொல்ல வீட்டுக்கு ஓடிப்போனான். கதவு சாத்தியிருந்தது. திரும்பவும் ஒடி வந்தவன் அப்படியே உறைந்துபோனான்.
எப்படி நடந்ததென்றே தெரியவில்லை. சின்னையா, கை கால் வயிறெல்லாம் வெட்டுப்பட்டு ஒரே இரத்தமயமாகியிருந்தான். கண்ணாத் தம்பியின் அப்பாவிற்கும் மீசையில் வெட்டுப்பட்டு காயம் இருந்தது. கோடிப்பக்கம் சத்தமாயிருந்தது. சின்னையாவின் பொண்டாட்டி கத்திக் கொண்டே வந்து அவனை இழுத்துப்போய் விட்டாள். அதன்பின் அவரவர் வீட்டுக்கு போனவர்கள்தான் யாரும் வெளியே வரவில்லை.
விடிந்தால் எல்லாம் சரியாகுமென்று பாலு நினைத்தான். ஆனால் கண்ணாதம்பி தன்னை ஏன் வரவிடாமல் தடுக்க வேண்டும்? அதுதான் பாலுவுக்கு புரியவில்லை.
“அடேய் கண்ணாதம்பி வாடா சோறாக்கி வெளையாடுவோம். அம்மாச்சி புள்ளைய கூப்பிடட்டா…?”
பாலு திரும்பவும் கெஞ்சினான்.
“போடா கிழிஞ்ச கழிசான் ஒருக்கா சொன்னா வௌங்காதா?” பாலுவிற்கு கிழிஞ்ச கழிசான் என்றால் கோபம் வரும். சற்று தூரமாய் போய் நின்று கொண்டு,
“நீதாண்டா கொரங்கு மூஞ்சி” என்றான்.
“கொரங்கு மூஞ்சா…? இரு இரு இனிமே நீ எப்பிடி சோறாக்கி வெளையாடுறன்னு நானும் பாக்குறேன். இன்னைக்கு எங்கப்பா மரத்த வெட்டிருமே…. அப்பரம் எங்க போய் வெளையாடுவ…. எங்க போய் வெளையாடுவ…..?”
சொல்லிக் கொண்டே ஆடிக்காட்டினான் கண்ணாதம்பி.
“என்னது மரத்த வெட்ட போறீங்களா? வேணாண்டா கண்ணாதம்பி. அந்த மரம் பாவம்டா. நான் வேணுன்னா என் கிட்டிப்புள்ள உனக்கு தந்திடுறேன். மரத்த வெட்ட விடாதடா?”
“உன் கிட்டிப்புள்ளும் வேணாம் ஒன்னும் வேணாம். மரத்த வெட்டிட்டா யாருமே கோடிப்பக்கம் வரமாட்டாங்கன்னு எங்கம்மா சொன்னிச்சி.”
பாலுவிற்கு இனம் புரியாத கவலை. அவன் சின்ன வயதிலிருந்தே அந்த பலா மரத்துடன் சினேகம் வைத்திருக்கிறான். நொண்டி, காக்காமுட்ட, கண்ணாமூச்சி, பம்பரம், கிளித்தட்டு எல்லா விளையாட்டுமே இந்த பலாமரத்து அடியிலதான் ஆரம்பிக்கும். அதை வெட்டிட்டால் வெயில் சுட்டெரிக்கும். எல்லா அழகும் போய்விடும். என்ன செய்வது…? பாலு அதே இடத்தில் நின்றபடியே யோசிக்கலானான். பலாமரத்தை கட்டிப்பிடிக்க முயற்சி செய்தான். முடியவில்லை. மரத்தில் சாய்ந்தபடியே கொஞ்சநேரம் தேம்பி தேம்பி அழுதான். தொட்டுத்தடவி ஆசையாய் முத்தம் கொடுத்தான். ஒரு கருங்கல்லை எடுத்து ‘பாலு’ வென்று எழுதிவைத்தான். கீழே கொட்டிக் கிடந்த இலைகளைப் பொறுக்கி கவலையுடன் பார்த்தான்.
பச்சைப் பலா இலைகளை பறித்து ஈர்க்கு குச்சியால் குத்தி குத்தி தொப்பி செய்து போட்டுக்கொள்ள அந்த லயத்துப் பிள்ளைகளுக்கு கொள்ளை ஆசை. அம்மாச்சியும் பாலுவும் நீட்ட முடி செய்து போட்டுக் கொண்டு லயமெல்லாம் ஆடித்திரிவார்கள்.
இனியென்ன செய்யலாம்..? பாலுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. செய்வதறியாது மரத்தைச் சுற்றி சுற்றி ஆடத்தொடங்கினான். கையை வீசிக்கொண்டு…. தலையை ஆட்டிக்கொண்டு…… இன்னும் வேகமாய் ஆடினான். தலைமுடியை குழப்பிப் கொண்டான். ஆவேசம் வந்தவனைப்போல் மரத்தில் மோதி மோதி விடாமல் ஆடினான்.
ஓடி வந்து பார்த்த கண்ணாதம்பி,
“ஐயய்யோ! பாலுவுக்கு சாமி வந்திருச்சி” என்று சத்தமாய் கூச்சலிட்டான்.
“சாமியா……? ஆஹா! இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே….’
பாலுவுக்கு உள்ளுக்குள் சிரிப்பு. இருந்தாலும் சாமியாடுவது போலவே நடிக்க ஆரம்பித்தான். மரத்தை விடாமல் பற்றிக் கொண்டான். ரொம்பவும் நடித்தால் மாட்டிக்கொள்வோமென்று, கண்களை மூடிக்கொண்டே ஆடினான்.
யார் யாரோ வந்துவிட்டார்கள்.
“நேத்து ரெத்தம் சிந்தினதுமே நினைச்சேன். கோடிப்பக்கம் காளியாத்தா குடியிருக்கான்னு அடிச்சிக்கிட்டேன். யாராவது கேட்டீங்களா? இப்ப ஆத்தாவே வந்திருச்சி.”
சொல்லிக்கொண்டே பாலுவின் தலை நடுவில் வைத்து ஒரு தேசிக்காயை வெட்டி, குங்குமத்தை அள்ளி பூசிவிட்டாள் பணிய லயத்து பார்வதம் ஆச்சி. பாலுவும் ஒருவாறு ஆடுவதை நிறுத்திக் கொண்டான்.
எது எப்படியோ மரத்தில் சாமியிருப்பதாய் எல்லோரும் நம்பிவிட்டார்கள். இனி என்ன நடந்தாலும் மரத்திற்கு ஆபத்தில்லை. ஆனாலும் இவர்கள் செய்வதைப்பார்த்தால் இனி மரத்தடியில் விளையாட முடியாது போலிருக்கிறதே..!
பாலு திரும்பவும் யோசிக்கத் தொடங்கினான்.
– ஞானம்
– பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007, ஞானம் பதிப்பகம்,கொழும்பு.
![]() |
பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை…மேலும் படிக்க... |