கொலைகாரன்
(1991ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொலை அவன் கண்ணில் மிதந்தது. கொலை அவனுடைய கைவிரல்களில் துடித்தது. கொலை அவனது ஒவ்வொரு அங்கத்திலும் பதுங்கித் துறுதுறுத்தது.
கொலை அவன் எண்ணத்தில் இருந்தது. கொலை அவனது உள்ளத்தில் உறைந்திருந்தது. கொலை அவனுடைய தேக ரத்தத்திலே கிளுகிளுத்துக் கொண்டிருந்தது. அவன் காலடிகளில் அது பம்பி நகர்ந்தது.
அப்பொழுது இரவு மணி பத்து. உலகம் இருளில் குளித்துக் கிடந்தது. கொலை எனும் நினைப்பிலே ஊறியிருந்தான் அவன்.
நசுநசுவென்று அழுகுணித்தூறல் சிணுங்கிக் கொண் டிருந்தது. ரஸ்தாப் பரப்பு எங்கும் தண்ணீர் தெளித்து விட்டது போலிருந்தது. அது வேர்வையில் குளித்தது போலுமிருந்தது.
சிறிது தொலைவுக்கு ஒன்றாக நின்ற எலெக்ட்ரிக் கம்பங்களில் ஒளிப்பூ பூத்துத் தொங்கியது. நசுநசுத் தூற்றல் அற்புதப் பூச்சிகள்போல் மினுமினுத்தது. விளக்குகளின் கண்ணீர்த் திவலைகள் போலுமிருந்தது.
வானத்திலே நட்சத்திரங்கள் இல்லை. கொலைப்பசி கொண்ட ஓநாய்க் கூட்டங்கள் போல மேகங்கள் திரிந்து கொண்டிருந்தன.
பூமியில், அந்தகாரத்தினுள் சுவர்கள் தரும் அடக்க மான இருளினுள்ளே, விதவிதப் பசிகளைத் திருப்திப்படுத்து வதிலும் திருப்திப்படுத்த முடியாத ஏக்கத்திலும் மனித உருவங்கள் புரளும் வேளை.
அந்நேரத்தில் அவன் தனியனாய், கொலையின் உலவும் உயிர்ப்பிம்பமாய், கொலையின் நினைவே ஆகி, ஒரு மனித ஓநாய் போல நடந்தான்.
அவன் கண்களிலே கொலை இருந்தது. அவன் கருத்திலே கொலை நெளிந்தது. மூடிமூடித் திறக்கும் அவனது கைகளிலே கொலை நர்த்தனமிட்டுக் கொண்டிருந்தது.
அவன் யாரையாவது கொலை செய்திருக்க வேண்டும். அல்லது இனி எவரையாவது அவன் கொலை செய்யலாம். கொலை அவனைச் சுற்றிக் கவிந்திருந்தது. அதே நினைப்போடு நடந்து கொண்டிருந்தான் அவன்.
தூற்றல் அவனுக்குப் பெரிதல்ல. மனித இனத்தின் வசைத் தூற்றல் தான் அவனை வதைத்தது. சுட்டது. உணர்வுக் கொதிப்பு உண்டாக்கியது.
ஒளியை வட்டங்களாக வரைந்து காட்டும் மின்சார விளக்கின் கீழே அவன் நடக்கும் போது, அவன் மூஞ்சி பளிச்சிட்டது. குரூரத்தின் சித்திரம் அது.
மூக்கு சப்பையாக இருந்தது. மேல் உதடு முயல் உதடு போலிருந்தது. பற்கள் வெளியே நீண்டிருந்தன. கன்னங்களில் குழிகுழியாக அம்மைத் தழும்புகள் படிந்திருந்தன.
ஆகவே, மனிதர்கள் பரிகசித்தார்கள். அவற்றின் தழும்புகள் சூட்டுக் காயங்கள் போல படித்துவிட்டன அவன் இதயத்திலே.
அவன் குள்ளமாக இருந்தான். அவன் மனமும் குள்ள மாகவே இருந்து விட்டது.
நச்சுக் காற்றுடன் நகர்ந்து செல்லும் பாம்பு போல் ஊர்ந்து கொண்டிருந்தான் அவன். அவனுடைய நடை விசித்திரமாக இருந்தது. காரணம், ஒரு பாதம் கோணிக் குறுகி இருந்ததுதான்.
எனவே, அவன் உள்ளமும் கோணிக்குறுகி இருந்தது. அங்கு கொலை குடியிருந்தது.
அவன் முதுகு கொஞ்சம் கூனி இருந்தது. ஆகவே அவன் உள்ளமும் கூனல் காட்டியது. அங்கு நேர்மைக்கு இடமே இல்லை.
ஆள் நடமாட்டமற்ற ரஸ்தாக்களைக் கடந்து நடந் தான் அவன். மூலைகளையும் முடுக்குகளையும் தாண்டி. நடந்தான்.
அவன் நடையிலே நல்லதனம் இல்லை. அவன் உடையிலே நல்ல தன்மை இல்லை. அவன் தோற்றத்தில் நல்ல பண்பு இல்லை. அவன் எண்ணத்திலும் நல்லது கலந்திருக்கவில்லை.
அவன் பார்வையிலே பட்டது-
ஒரு வீட்டுக் கதவு திறக்கப்பட்டது. ஒரு மனிதன் உள்ளே போனான். கதவு அடைக்கப்பெற்றது. நன்றாகச் சாத்தப்படவில்லை. உள்ளே இருந்து விளக்கொளி இடை வெளி வழியாகத் தெருவை எட்டிப்பார்த்தது.
அவன் களுக்குச் சிரிப்பை எறிந்தான். கால்களை வேகமாக எட்டிப் போட்டான்…
தன்பின்னால், தன் மீது கண் பதித்தபடி யாரோ நிற்பதாக உணர்வுகள் எடுத்துச் சொல்லவே, டாக்டர் மாதவன் திரும்பிப் பார்த்தார்.
‘கதவை தாளிடாமல் விட்டது தப்பு’ என்றது அவர் மனம்.
அவர் பார்வை அறிமுகம் செய்து வைத்த தோற்றம் அவரைச் சற்றே திடுக்கிடச் செய்தது. பிசாசோ என்ற மயக்க நினைப்பு ஒருகணம். மனித உருவம்தான் என்று தெளிந்தது அறிவு. விநோதமான உடலமைப்பு, விசித்திர மான முகத்தோற்றம் என்றது மனம். எனினும் அவர் முகம் சலனமற்ற தன்மையையே காட்டியது.
டாக்டர் மாதவன் மனத்துணிவு பெற்றவர். எந்த நெருக்கடியையும் திறமையாகச் சமாளிக்கும் சாதுர்யம் உடையவர். எதிரே இருப்பவர்களைப் பார்வையால் எடைபோடும் திறமை உள்ளவர்.
அவனைப் பார்த்ததுமே அவன் நல்ல எண்ணத்தோடு வரவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. அவன் கண்களிலே அவர் குரோதத்தையும் கொலைத் துடிப்பையும் மாத்திரமே கண்டாரில்லை. அக்கண்களின் கரிய ஆழத்திலே, அவனுடைய உள்ளச் சுழிப்பின் சிற்றலைகள் படிந்து பிரதி பலிப்பதையும் கண்டார். அவனைப் புரிந்து கொண்டவர் போல் தலையசைத்தார்.
அவன் நின்றான். வெறிநாய் பாய்வதற்கு முன் பார்த்து நிற்பது போல.
‘வாருங்கள் ஐயா வாருங்கள். அகால நேரம்தான். ஆனாலும் டாக்டருக்குக் காலம், அகாலம் என்ற கணக்கு ஏது! இப்படி வந்து உட்காருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று பேசினார் டாக்டர். வைத்திய உதவி பெற வந்த நபரை வரவேற்பது போல் அவனை அவர் வரவேற்றார்.
அவன் எதிர்பாராதது அது. திகைப்புற்றான் அதனால். தன் பின்னால் யாராவது நிற்கிறார்களோ, டாக்டர் அவரைத்தான் வரவேற்கிறாரோ என்று ஐயுறுபவன் போல் திரும்பி நோக்கினான். அங்கு யாருமில்லை. அவன் டாக்டரை உற்றுக் கவனித்தான்.
டாக்டர் அவனைப் பற்றிக் கவலை கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. பயமோ, சந்தேகமோ, வெறுப்போ – எவ்வித உணர்வுமே இருந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. தன் பாட்டுக்குத் தனது அலுவல்களில் ஈடுபட்டவர் போல் நடித்தார். எனினும் அவர் கண்காணிப்பு அவன் மீதே நிலைத்திருந்தது.
அவன் அசையாது நின்றான். எரிந்து விழுந்திருந்தால், ‘போடா வெளியே!’ என்று சீறி ஏச்சையும் கலந்து வீசியிருந்தால், அவன் குழம்பியிருக்கமாட்டான். அவர் மீது பாய்ந்திருப்பான். ஆனால் அவர் தந்த வரவேற்பு- அவர் கையாண்ட முறைகள் – அவனுக்குப் புதியன.
மோகன முறுவல் பூத்தார் டாக்டர்.
‘என்ன நண்பரே, ஏன் தயங்குகிறீர்கள்? இடம் தவறி நுழைந்து விட்டீர்களா? நீங்கள் என்னைத் தேடித்தான் வந்தீர்களோ என்று எண்ணி விட்டேன். நான் டாக்டர்… டாக்டர் மாதவன்…’
கோட்டைக் கழற்றி ஸ்டாண்டிலே மாட்டினார். நிதானமாக நாற்காலியில் அமர்ந்து, கால்மேல் கால் போட்டுக் கொண்டு, மேஜை மீதிருந்த சிகரெட் டின்னிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்தார். ‘சிகரெட் எடுத்துக் கொள்ளுமேன், மிஸ்டர்!’ என்று டின்னை அவன் பக்கம் நகர்த்தினார். தன் சிகரெட்டை பற்ற வைத்து, அலட்சியமாகப் புகைக்கலானார்.
அவன் அசையவில்லை. வாய் திறக்கவில்லை. சலன மற்ற அவன் கண்கள் அவரையே பார்த்தன. அவரைப் பாராதது போலும் தோன்றின. உயர்ந்த அந்தஸ்தில் உள்ள அந்த டாக்டர் தன்னைக் கேலி பண்ணுகிறாரா; ஏமாற்றி ஆபத்திலே மாட்டி வைப்பதற்காக இவ்வளவு இனிமையாகப் பேசுகிறாரா; அல்லது தனது உண்மைத் தன்மையை உண ராத குறையினாலேதான் உபசரிக்கிறாரா? அவனால் தீர் மானிக்க முடியவில்லை.
டாக்டரின் போக்கை அவனால் புரிந்து கொள்ள இயல வில்லை. ‘என் குணமும் நோக்கமும் அவருக்குப் புரியாமல் இருக்கலாம். என்னுடைய தோற்றம்? அது கூடவா அவர் கண்ணில் படவில்லை? அவர் முகத்திலே வெறுப்பு தோன்ற வில்லையே?’ அவனது மனச் சிலந்தி இப்படி எண்ண இழை ஓடவிட்டது.
அவன் பெற்றிராத புதிய அனுபவம் அது. அவனைக் கண்டு, அவனது குரூரத்தைப் பார்த்து, கேலிச் சிரிப்பு சிந்து வதே மக்களின் இயல்பாக இருந்தது. சிறுவர்களும் பெரிய வர்களும் பரிகசித்து மகிழ்ந்தார்கள். சிறுபிள்ளைகளுக்கு ‘பூச்சாண்டி காட்டி’ பயமுறுத்தவும் அவன் உருவம்தான் துணைபுரிந்தது. அருவருப்பு தரும் பறைநாயைக் கண்டு சென் ஒதுங்குவது போல, அவனைப் பார்த்ததும் விலகிச் றார்கள் பலர். குஷ்டரோகி மீது வீசுகிற பார்வையைத் தான் அவன் பேரிலும் விட்டெறிந்தார்கள் மனிதர்கள். எவர் வீட்டிலாவது போய் குடிக்கத் தண்ணீர் கேட்டால் கூட, எரிந்து விழுந்து விரட்டினார்களே தவிர இன்முகம் காட்டி வரவேற்றதில்லை. இதனால் எல்லாம் அவன் உள்ளம் குமைந்து புழுங்கியது. ஜனங்களை வெறுக்கலானான்.
குரூரமானவர்களும் கொடுநோய்க்காரர்களும் பணபலத் தினால் மிகுந்த செல்வாக்குடன் இருந்து, பலரோடும் சகஜ மாகப் பழகி வாழ்வதை அவன் உணராமல் இல்லை. பகட் டான ஆடை அணிகளாலும் வாசனைப் பூச்சுகளாலும் அழகு படுத்திக்கொண்டு, அவர்கள் மேனாமினிக்கிகளோடும் சர சாங்கிகளோடும் சிரித்துப் பேசிக் களிப்பதை அவன் அறியா மல் இல்லை. அவன் அவர்களது நிலையில் இல்லாத காரணத்தால் அவன் ஏழையாய் திரிந்ததனால், பெண்கள் கூட அவனை வெறுத்தார்கள். காசுக்கு உடலை விற்கத் தயங்காத தொழிற்காரிகளும், இன்பத்துக்காக எவனோடும் போகத் தயாராகி விடுகிற காமவல்லிகளும் கூட அவனைக் கண்டு முகம் சுளித்தார்கள். வெறுத்துப் பேசி விரட்டினார் கள். ஆகையினால் ஜனத்துவேஷியாய் வளர்ந்துவிட்டான் அவன்.
அன்புக்காக, அனுதாபத்துக்காக, அவன் உள்ளம் ஏங் கிய தினங்கள்தான் எத்தனை? தனது தன்மையை எண்ணி எண்ணிக் குமைந்து புழுங்கிக் குமுறிக் கொதித்து, பித்தனாய் பேயனாய் வெறியனாய் மாறிவிடவில்லையா அவன்?
பழி வாங்கும் பண்பினன் ஆயினான். ‘கொலை பண்ணு! கண்டவனை எல்லாம் கொல்லு! உன்னை வெறுக் கும் மனித இனத்தில் வந்தவர்களைக் கொல்லு! மூட்டைப் பூச்சிகளை நசுக்குவது போல, சிலந்தியைக் கொல்லுவது போல, தேள்களையும் கரப்பான் பூச்சிகளையும் அடித்துக் கொல்வது போல – கொல்லு!… கொல்லு!… கொல்லு!” அவன் உள்ளத்தில் சைத்தான் குடிபுகுந்து விட்டான். அவனே வெறி நிறைந்த ஒரு ‘ஹைடு’ ஆக ஓங்கி விட்டான்…
வெறுப்பின் விளைவாக, கொடுமையின் நினைப்போடு, வந்து நின்ற அந்நியனின் கண்களிலே அவன் உள்ளத்தை உணர்ந்தார் டாக்டர் மாதவன். அவனைப் போன்ற மனிதர்கள் எத்தனையோ பேரை ஆராய்ந்து அறிந்தவர்தானே அவர்!
அன்புப் பசியுடன் தவித்த அவனுக்கு அன்பான சரணை தரத்துணிந்தார். சக மனிதனின் அனுதாபத்துக்கு ஏங்கிய அவனை ஒரு மனிதனாக ஏற்று மதிக்க முன்வந்தார் அவர்….
அவன் திகைப்புற்றுச் செயலற்று நின்றான். ‘ஏன் இப்படி மலைத்துப் போய் நிற்கிறீர்கள்? இங்கு உட்காருங் கள், ஐயா… அடடா மறந்தே போனேன். நீங்கள் சாப் பிடவில்லை என்று தெரிகிறது. உட்கார்ந்து சாப்பிடுங்கள். சோறு இருக்காது என்றே நினைக்கிறேன். கொஞ்சம் இட்லி இருக்கிறது. பழங்களும் தருகிறேன். சாப்பிட்டு விட்டு, நீங்கள் விரும்பினால் இங்கேயே படுத்துக் கொள்ளலாம். வெளியே எங்காவது போக விரும்பினாலும் போகலாம்…’
மாதவன் அன்பு கலந்த குரலில் பேசினார், அது அவனை, திக்குமுக்காடச் செய்தது. அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை. சிலை போல் நின்றான். டாக்டர் எழுந்து அவன் அருகில் வந்தார். அவன் இரண்டு எட்டுகள் பின் னால் நகர்ந்தான். அவர் அவன் தோள் மீது நட்பு முறை யில் கை பதித்து, குழந்தையின் முகத்தை நோக்கிச் சிரிப் பது போல் சிரித்தபடியே பேசினார்: ‘ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? தயவு செய்து ஏதாவது சொல்லுங்களேன். தேடி வந்து இப்படி மௌனம் சாதித்து நின்றால்?…’ அந்த மனிதன் கண்களில் நீர் துளிர்த்தது. அவன் ஏதோ பேச விரும்பியவன் போல் வாயைச் சற்றே திறந்தான். உதடுகள் துடித்தன. சட்டென்று, அவன் தன் கையிலே மறைத்து வைத்திருந்த கத்தியைக் கீழே வீசி விட்டு, திரும்பி வாசல் வழியே ஓடினான். திரும்பிப் பாராமலே ஓடினான். வெளி இருளில் கரைந்து விட்டான். பெருமூச்செறிந்தார் மாதவன்.
‘அவன் பைத்தியமாக இருக்கலாம். ஹைப்போக் காண்ட்ரியாக் – பாராநியாக் – ஏதோ ஒரு மேனியாக்! எப்படி இருந்தாலும், அவன் ஒரு மனிதன் தானே? மனிதக் கடலிலே நிலை இழந்து தவிக்கும் ஒரு சிற்றலை!’ இப்படி அவர் மனம் முனங்கியது. அவர் கைகளோ அவசரமாக கதவை நன்றாகச் சாத்தித் தாளிட்டன.
– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.