கொடும்பாவி




(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வாழ்க்கையிலே நடப்பவைகள் எல்லாம் மனதிலே நிற்பதில்லை. குறிப்பிடக்கூடிய ஒன்றோ இரண்டோ சம்பவங்கள் அடி மனதோடு ஒட்டிப்போய் நின்றுவிடுகின்றன. அநேக சம்பவங்கள் மனதின் விளிம்பிலே சில நாள் நின்று விட்டு, அதற்கப்புறம் மெதுவாக நகர்ந்து போய்விடுகின்றன.

இந்த நியதி எனக்கு மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? இதற்குட்பட்ட கொடும்பாவிச் சின்னான் என் மனதிலே ஒட்டிப் போய்க் கிடக்கிறான்.
சின்னானை நினைக்கும்போது அவனின் பெண் வேடம், தேர்ப் பாடையிலே வளர்த்தப்பட்டிருக்கும் வைக்கோற்பாவை, இளவட்டங் களின் தலையிலே குந்தியிருக்கும் ‘கிச்சின் லைட்டு’ எல்லாமே சேர்ந்து மனக்கண் முன்வந்து விடுகின்றன.
மரத்தாலான நான்கு சில்லுகளின் மேல், தேர்போலப் பாடை கட்டி, அதன் நட்டுக்கு நடுவே ஆடை அலங்காரங்கள் செய்யப்பட்ட வைக்கோற் பாவையை வைத்து, அதற்கு நீறிட்டு, பொட்டிட்டு, புனிதப்படுத்தி, வீதி வீதியாக, வீடுவீடாக இழுத்துச் சென்று, அதைச் சுற்றி மாரடித்து, ஒப்பாரி வைத்துக் கட்டியழும் ஒரு காட்சியை இப்போது தத்ரூவமாகச் செய்து காட்டினால் ‘இப்படியு மொரு பைத்தியக்காரத் தனமா!’ என்ற எண்ணம் ஏற்படும்.
ஆவணி மாத்தில் நெல் வயல்களின் விதைப்பை முடித்துக்கொண்டு, கமக்காரர்கள் மழைக்காகக் காத்திருப்பார்கள். இடையிடையே சிறு அளவில் மழை பெய்து புழுதி நிலத்தை நனைக்க வேண்டும். அப்போது தான் நெல்மணி முளைவிடும். அதற்குப் பின் மூன்றிலை. நான்கிலைப் பயிராக இருக்கும்போது, மழை சற்று அதிகமாகி நிலமட்டத்தோடு நீர் நிற்க வேண்டும். அதற்கு மேல் மழை அதிகரித்து பயிர் வட்டுவரை நீர் பெருகி நிற்க வேண்டும். அப்போதுதான் கமக்காரர்கள் பூரண சாந்தியடைவார்கள். சில வேளைகளில் வானம் எல்லோரையுமே ஏமாற்றிவிடும்.
ஊரில் கொடுமைகள் அதிகரித்ததுதான் மழை பெய்யாததற்குக் காரணமென்ற நம்பிக்கை ஊர்ஜிதமாகும்போது, கொடும்பாவி கட்டி அழுது அந்தக் கொடும்பாவியைச் சுடலைவரை இட்டுச் சென்று சாம்பலாக்கி, காடு மாத்தி, கருமாதியும் செய்துவிட்டார்களானால் மழை வந்துவிடுமாம்.
ஊரில் உள்ள கொடுமைகளை மொத்தமாகத் திரட்டி, அதற்கு கொடும்பாவி என்ற உருவம் கொடுத்து, அந்தக் கொடுமைகள் சுட்டெரிக்கப்படும் போது…
***
கயிறு போன்ற உடற் கட்டுடைய சின்னான் இயல்பான நீண்ட தலை முடியை நடு வகிடு வைத்து வாரி, அள்ளிக் கொண்டை போட்டுக் கொள்வானாயின், இப்போதைய நாகரிக யுவதி, கறுப்பு வலைக்குள் சிகையைத் தொங்கவிட்டுத் தூக்கி நிமிர்த்தியிருப்பது போலவே இருக்கும்.
முகத்துக்கு முத்து வெள்ளையும், கண் முருத்துக்குக் குங்கும மசியும் தடவிக் கொண்டு, காதுக் கடுக்கனுக்குப் பதிலாக காக்காப் பொன் – நெருப்பு வர்த்தித் தொங்கட்டானும் அணிந்து கொண்டு, சின்னான் ஒயிலாகக் கை வீசி நடந்து வந்து, ஒப்பாரி வைக்கத் தொடங்கு வானாயின் அவனின் குரலுக்கும், தளுக்குக்கும், தாடகைத் தனத் திற்கும் ஈடுகொடுக்க யாருக்கும் முடியும்?
கொடும்பாவி எட்டுப் பத்து நாட்களாக வீடுவீடாக இழுத்து வரப்பட்டு, இறுதியில் சுடலையை வந்தடையும். இந்த எட்டுப் பத்து நாட்களும் ஆள் மாறி அழுபவர்கள் பலர் வருவார்கள். முதல் நாள் அழுதவர்களுக்கு மறுநாள் தொண்டை அடைத்துப் போய்விடும். ஆனால் சின்னான் மட்டும் தொடர்ச்சியாக அழுது கொண்டே போவான். அவனுக்குத் தொண்டை அடைப்பதுமில்லை; அலுப்புச் சலிப்பு வருவதுமில்லை.
இந்தக் காலத்தைய பெண்களுக்கு புதுப்புது வித கொண்டை கட்டிக் கொள்வதில் அலாதி ஆசை! ஒவ்வொரு கொண்டை அமைப்பும் தங்கள் கைப்பட்டுப் புதுசு புதுசான மோஸ்தர் அடைகிறது என்பதனால் பெருமை! சின்னானின் கொடும்பாவிக் கொண்டை வகைகளைக் கண்ணால் பார்ப்பவர்கள் இக்கால கொண்டைகள் புதிதென ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.
ஒருநாள் சின்னான் குதிரைவால் போல மயிரை உச்சிக்குச் சமீபமாகப் பிடித்துத் துணியால் முடிச்சுப் போட்டுக் கொள்வான்.
இன்னொரு நாள் கரப்பு போல வரும்படி செய்து கொள்வான். வேறொரு நாள் திருகணை போல வைத்துக் கொள்வான். அதற்கு மறுநாள் திருகி முறுக்கி வளைத்து அநாயாசமாகச் செருகிக் கொள்வான்.
கண்ணாடி நைலோன் சேலை உடுத்திக் கொள்வதில் இக்காலப் பெண்களுக்குப் பெருமை. தங்களுக்காகவே இச்சேலை புதுமையாகத் தயாரிக்கப்பட்டதாக இவர்கள் நினைப்பு.
அப்போது சின்னான் நார்ப்பட்டுச் சேலையை உடுத்திக் கொண்டி ருப்பான். இந்தக் கிளாஸ் நைலோன் அந்த நார்ப்பட்டின் தரத்திற்கும் காசாக் கச்சுக்கும் எம்மாத்திரம்.
சின்னான் குரலெடுத்து அழுதால் மெதுமெதுப்புக் காணாத உள்ளங் களும் கனிந்து கரைந்துவிடும். கண்ணீர் வடித்தவர்களும் உண்டு.
அவனுக்காக வானமும் இரங்கியிருக்கிறது.
***
கதிரவேற்பிள்ளைக் கமக்காரனின் நிலத்தில் பல்லாண்டுக் காலமாகச் சாகுபடி செய்தவர்களெல்லாம் இந்தத் தடவை வெறுங் கையோடு நின்றனர்.
தூக்குமரக் காட்டுச் சுடலையிலிருந்து முக்கிராம் பிட்டி தாண்டி, மாட்டொழுங்கை வரையில் விரிந்து கிடக்கும் நிலப்பரப்புக் கதிரவேற் பிள்ளையினுடையது. இந்தப் பகுதியில், சொல்லப்பட்ட காணிக்காரர் என்று பெயரெடுத்தவர் கதிரவேற்பிள்ளை ஒருவரேதான்! அவரு டைய நிலத்தை நம்பி சுமார் ஐம்பது குடும்பங்கள் வாழ்வு நடாத்தி வருகின்றன. சுடலை வயிரவர் கோயிலில் நட்டுவ வேளம் அடித்து விட்ட ஒரு குற்றத்திற்காகக் கதிரவேற்பிள்ளைக்கும் இந்தக் குடும்பத் தினருக்கும் அபிப்ராய பேதம் வளர்ந்து வந்து கடைசியில் அத்தனை உயிர்களினதும் வாழ்க்கையையே அடித்துவிட்டது.
கோவில் தகராறிலிருந்து கதிரவேற்பிள்ளைக்கு வந்து விட்ட கோபமோ மிகவும் பொல்லாததாகிவிட்டது. இதனால் அவர் நிலத்தையே இம்முறை மலடாக வைத்து விட்டார். குத்தகைகாரர் களையே நிலத்தில் காலடி வைக்காமல் தடுத்துவிட்டார். வருடா வருடம் பச்சை பசேல் என்று கிடக்கும் நிலப்பரப்பு இம்முறை புழுதிப்பட்டு கோர்வை படர்ந்து மலடாகிக் கிடக்கிறது.
நடுநிலையானவர்கள் சிலர் பேசிப் பார்த்தார்கள். கதிரவேற்பிள்ளை யாராவது பேசுவதற்கே அனுமதி மறுத்துவிட்டார்.
அதிகாலையோடு மாட்டொழுங்கை வீதி நீளத்திற்கு நின்று உதித்து வரும் சூரிய ஒளிக்கூடாகக் கண்களைப் புதைத்துக் கொண்டு, அந்தப் புழுதி நிலத்தைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சுவிடும் விவசாயி களைப் பார்க்கும் போது மனித உணர்ச்சியுள்ளவர்களின் நெஞ்சுகளே வெடித்துப் போய்விடும். பூமித்தாயின் நெஞ்சைக் கிழித்துக் கிழித்துப் பழகிப் போய்விட்ட அந்த மனிதர்களின் கரங்கள் தினவெடுத்துத் துடிப்பதை ஒரு தடவையேனும் கவிஞர்களால் பார்க்க முடிந்தால் கதிரவேற்பிள்ளையின் குடும்பத்தையே அறம்பாடி வீழ்த்தி விட்டிருப்பார்கள்.
முகம் வற்றிச் சுருங்கிப் போய்ப் பிரேதக்களை எடுக்க வயற்பரப்பின் பெரும் வரம்புகளில் நடந்து சென்று, பெருமூச்சுகளால் அந்த மண்ணையே கருக்கிக்கொண்டிருந்த பெண்களை, ஊத்தைச் சீலை போர்த்தப்பட்ட எலும்புக் கட்டைகளை உருவகப்படுத்தித் தங்கள் இலக்கியங்களைச் செறிவுப்படுத்தக் கூடிய இலக்கியப் பேராசான்கள் அந்தப்பூமியில் பிறக்கவேயில்லை. இரண்டொரு இலக்கியப் பிள்ளைப் பூச்சிகள் தான் ஊருக்குள் பேருடனும் புகழுடனும் இருந்தார்கள். அவர்கள் காசுக்காக எழுதுவார்கள். தசை நார்களின் இழிந்த உணர்ச்சிகளுக்குத் தெய்வீகத்தன்மை தருவதற்கு – தங்கள் மனப் பசிக்குத் தீனி போட்டு முடிந்துவிட்டால் மயங்கித் தூங்கிப் போய்விடுவார்கள். சேணமிட்ட குதிரை நேராகப் பார்த்துக்கொண்டு ஓடுகிறது. அதற்குப் பக்கப் பார்வை தேவையில்லை.
***
இந்த ஆண்டு கொடும்பாவிக்கு அழுவதில் யாருக்குமே உற்சாகமிருக்க வில்லை. உள்ளூர் விவசாயிகளில் பாதிக்குப் பக்கமான பேர்கள் வாழ்வின்றித் தவிக்கும் போது மற்றவர்களுக்கு மட்டும் மழை என்ன வேண்டியிருக்கிறது? இருந்தும் சொற்பப் பேருக்காக உலகத்தில் எல்லோருமே கஷ்டத்திற்குள்ளாவதா? என்ற பெரிய மனசு, கொடும் பாவிக்கு அழுதுதான் தீரவேண்டுமென்ற முடிவையே ஏற்படுத்திற்று. தங்களின் கொடும்பாவிக் கூக்குரலுக்கு வருண பகவான் வந்திறங்கி விடுவார் என்பதில் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை!
கொடும்பாவி கட்டப்பட்டுவிட்டது. முத்துமாரி அம்மன் கோவிலி லிருந்து தொடக்க விழா நடத்த நாளும் குறிப்பிட்டாயிற்று. அழுகைக் காரர்களெல்லாம் தங்களைத் தடல்புடல் படுத்திக் கொண்டபோது சின்னான் மட்டும் வீட்டோடு ஒட்டிப் போய்க் கிடந்தான்.
பெண்சாதியா, பிள்ளையா, தாயா, தகப்பனா? எதுவுமேயில்லாத அந்தத் தனிக் கட்டையை இந்தக் கொடும்பாவிக்காகத் தேடுவதைத் தவிர வேறெப்போது அவசரப்பட்டுத் தேடப் போகிறார்கள்?
‘சின்னான் அழ மறுக்கிறான்’ என்ற செய்தி ஊருக்குள் பரவவே எல்லோரும் அசந்து போய்விட்டனர். இந்தக் காரியத்திற்குக் கச்சை கட்டிக்கொண்டு முன்னுக்கு நிற்கும் சின்னான், இப்படிப் பிகு பண்ணியது எல்லோரையுமே அசந்து போக வைத்துவிட்டது.
“சின்னானில்லாத கொடும்பாவியும் ஒரு கொடும்பாவியே!’ என்று மொத்தமாக எல்லோருமே கூறிக்கொண்டனர்.
ஒரு நாள் ஊரே திரண்டுப் போய்ச் சின்னானின் குடிலைச் சுற்றி விட்டது. நிலத்தை இழந்துவிட்டவர்கள் கூடப் பெரிய மனசு வைத்து வந்து வற்புறுத்துவதைப் பார்க்க சின்னானுக்குத் தன்னாலேயே மனது கரைந்து விட்டது.
சின்னான் ஒப்புக்கொண்டுவிட்டான்.
எல்லோருக்கும் உற்சாகம் பிறந்தது; பழையபடி தடல்புடலுடன் வந்துவிட்டது.
முத்துமாரி அம்மனுக்குப் பலி கொடுத்து, சம்பிரதாயங்கள் முடிந்து, கொடும்பாவி புறப்பட்டபோது சின்னான் இரண்டு தடவை குரல் வைத்தான். அதற்கப்புறம் அவன் உற்சாகங்குன்றி ஒதுங்கிக்கொண்டான்.
இரண்டாம் நாளும் இரண்டு குரல். மூன்றாம் நாளும் இரண்டோ மூன்றோ குரல்.
நான்காம் நாளும் அப்படி.
ஐந்ததாம் நாள், ஆறாம் நாள், கடைசியாக ஏழாவது நாள்…
இன்று கொடும்பாவி தகனம் செய்யப்படுவதாக முடிவு.
காலையிலிருந்து வானமும் இருண்டு கிடக்கிறது.
மாலையானபோது காற்றும் உறங்கி அடிவானமும் மின்னி முழங்கி வந்தது.
இரவு, மணி பன்னிரெண்டுக்குமேல்!
சுடலைக்குப் போகும் வழியில், தென்னந்தோப்பில் இருப்பது கதிரவேற்பிள்ளையின் வீடு.
கதிரவேற்பிள்ளையின் வீட்டிற்குப் போவோமா விடுவோமா என்பதில், கொடும்பாவிக்காரர்களிடையே இப்போதுதான் அபிப்பிராய பேதம் நிலவத் தொடங்கியது. ‘போவதில்லை’ என்ற அபிப்பிராயம் ஆரம்பத்தில் மேலோங்கித்தான் நின்றது. ஆனால் ‘ஊருக்கெல்லாம் பொதுவான காரியத்தில் ஒதுக்கல் கூடாது’ என்ற பொது, நீதி, பொதுவில் இழையோடவே, கடைசியில் போகத்தான் வேண்டு மென்பது முடிவாயிற்று. ஆனாலும் சின்னானால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் பிடிவாதஞ் செய்தான். பலர் பலவிதமாகச் சொல்லிப் பார்த்தும் சின்னானால் மனசை மாற்ற முடியவில்லை .
அவன் மட்டும் ஏன் இப்படிப் பிடிவாதமாக நிற்கிறான்?
பலரிடையே இது பெருங் கேள்வியாக நின்றாலும், அதை எதிர்த்து முடிவான முடிவை ஏற்படுத்த யாருக்குந் துணிவில்லை. கடைசியில் ஒரு நடுவான முடிவை எல்லோருமே ஏற்றுக்கொண்டனர். எல்லோருமே ஏற்றுக்கொண்ட முடிவுகூட, அவனைத் திருப்திப்படுத்தவில்லை. ஆயினும் அரை மனதோடு அதை ஏற்றுக்கொண்டு விட்டான்.
‘உள்ளே போகாமல் வீட்டுப் படலையோரமாக நின்று அழுவது’ என்ற முடிவுக்கமைய, கொடும்பாவி கதிரவேற்பிள்ளையின் தலை வாயில் முன்பாக நிறுத்தப்பட்டது.
கதிரவேற்பிள்ளையின் வீட்டுப் படலை மூடியே கிடக்கிறது. யாருமே படலையைத் திறக்கவில்லை.
அரைமணிக்கு மேலாகிவிட்டது. உள்ளே மனித நடமாட்டம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. ஆனால் கொடும்பாவிக்காகப் படலைக்கு வருபவர்களை மட்டும் காணோம்!
கதிரவேற்பிள்ளை வீட்டுக் குடும்ப எண்ணிக்கை, பேரப்பிள்ளைகள் கூடிப் பதின்நான்கு. இந்தப் பதின்நான்கில் ஒன்று தன்னும் படலை யோரம் வரவில்லை. இரும்புக் கதவு இறுக்கி மூடப்பட்டிருக்கிறது.
அரை மணிவரை அழுது தீர்த்த பின் எல்லோருக்குமே அலுப்பும் கோபமும் வந்துவிட்டது.
சின்னான் அழுகுரலில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறான். கதிரவேற்பிள்ளை இப்படிச் செய்வாரென்று அவனுக்கு முன்னமே தெரிந்திருந்தது. இந்த அழுகைக்காரர்கள் நிச்சயமாகத் தோற்றுப் போவார்கள் என்று அடிமனதுக்குள் அவனுக்கு நினைப்புத் தோன்றி வந்தது.
நேரம் நகர்ந்து கொண்டே போகிறது.
சின்னானுக்கு மனசு கருவத் தொடங்கிவிட்டது.
‘இந்த அற்பன் படலையைத் திறக்காமல் பிடிவாதம் செய்கிறானே!’ என்ற ஏக்க நிலையிலிருந்து ‘கதவு திறக்காமல் இருக்க இவனால் முடியுமா?’ என்ற கேள்வி ரூபமான கொந்தளிப்பு மேலோங்கிக் கொண்டே வந்தது.
அலுத்துப் போனவர்கள் பாடையை இழுத்துக்கொண்டு தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராகி விட்டார்கள்.
சின்னானுக்கு உடலெல்லாம் வெடவெடக்கிறது. கோபக் கொதிப் பேறிய இரத்தம் சிரசுவரை ஏறிச்செல்லவே, அவன் முகம் சிவந்து இரத்தம் போலாகிவிட்டது.
கொடும்பாவிப் பாடைக்கு முன்னால் சின்னான் தாவிப்பாய்ந்து ‘மளார் மளா’ரென்று நெஞ்சில் குத்தி அழத்தொடங்கிவிட்டான்.
அவனை ஆவேசம் கவ்விப் பிடித்திருக்க வேண்டும். சின்னான் கொடும்பாவிப் பாடையை ஓடி ஓடி வலம் வந்துவிட்டான்.
எல்லோருமே திகைத்துப் போய்விட்டார்கள்.
சின்னான் இப்படி என்றுமே நடந்ததில்லை.
தன்னந் தனியாக அவன் இப்படிச் செய்கிறான்.
‘கோரக் கொடும்பாவி…’
இப்படி ஆரம்பித்த அவனின் குரல் எங்கெல்லாமோ சுற்றிச் சுழன்று நாதக் கனல் கக்குகிறது.
பணக்காரர்களின் அசுத்த நினைவுகளைச் சின்னான் சொல்லாமல் சொல்கிறான்.
‘நிலத்தை, உடையவனே நீசனாய்ப் போயிட்டாயே…’ நாதக் கனல் மேலெழுந்து சுடர்விட்டுத் தனது நாக்குகளைக் காட்டி நெளித்து லலிதமிடுகிறது.
கதிரவேற்பிள்ளையின் வாழ்க்கையிலே வந்து போய்விட்ட கர்ண கடூரச் செயல்களைச் சின்னான் குத்திக் கிழறுகிறான்!
‘பஞ்சத்தை இழைத்தவனே, பழிகாரப் பாவியனே, கொடும்பாவி கட்டியல்லோ உன்னை ….’
நாதக்கனல் ஆகாச வெளியெங்கும் நிறைந்து நிறைவாகிப் பொலிந்து, தனது தீ நாக்குகளை அங்குமிங்குமாகத் துழாவி மனிதர் களைத் தழுவிக்கொள்ளத் துடியாய்த் துடித்துக் கோரமடைகிறது….
சின்னானுக்கு ஆவேசமா?
கதிரவேற்பிள்ளையின் இரும்புப் படலைப் படாரென்று திறக்கப் பட்டது.
முன்னே கதிரவேற்பிள்ளை, அவருக்குப் பின்னால் அவரின் குடும்பத்தின் பரிவாரங்கள்.
‘டேய் நாய்ப்பயல்களே, நாய்க்குப் பிறந்த பிண்டங்களே…’
கதிரவேற்பிள்ளை, விரிசடைக் கடவுளாகத் தலையை உயர்த்தி அசைத்து, உடம்பைப் போர்க்குரல் புரிகிறார்.
சின்னானின் ஆவேசக் கோலம் இன்னும் உக்கிரமடைகிறது.
படலையைத் தாண்டிக்கொண்டு பாய்ந்தோடி வந்த கதிரவேற் பிள்ளைக்கு உடல் நடுங்கித் தலை சுழன்று, கால்கள் தடம்புரண்டு போக, அவர் தரையை நோக்கிச் சரிந்து போகிறார்.
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எல்லோரும் பெருங்குரல் வைத்து அவரைத் தூக்கி எடுத்துக்கொண்டு உள்ளே போகின்றனர்.
வழக்கமாக அவருக்கு வரும் இரத்தக் கொதிப்பு வந்துவிட்டது. கதிரவேற்பிள்ளையின் நிலைக்குப் பரிதாபப்பட்ட சிலர் உள்ளே போக முயற்சிக்கின்றனர். அவர்களின் முயற்சி வெற்றிப் பெறவில்லை. சின்னான் வழிமறித்துக் கொண்டு…
சின்னானுக்கு மயக்கம் வந்துவிட்டது.
முகமெல்லாம் வியர்த்துக்கொட்ட தலையைச் சுழற்றி அவன் அப்படியே இருந்த இடத்தில் சரிந்து விட்டான்.
சின்னானை மடியில் வைத்துக்கொண்டு காற்றுவர எல்லோருமே ஒத்துழைக்கின்றனர்.
வானத்திலே இடி கேட்கிறது. *சோ’வென்று கொட்டிய மழையின் குளுகுளுப்பில் சின்னான் உணர்வுப் பெற்றுவிட்டான்.
அவசர அவசரமாகக் கொடும்பாவித் தூக்குமரக் காட்டுச் சுடலையை நோக்கி இழுத்துக்கொண்டு செல்லப்படுகிறது.
சின்னான் பாடைக்குப் பின்னே அசந்து தளர்ந்து நடந்து போகின்றான்.
மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. கொடும்பாவியைத் தகனஞ் செய்து சாம்பலை எடுத்துக் கடலில் கொட்டிவிட்டு, அந்த மனிதக் கட்டைகளெல்லாம் திரும்பும்போது விடிவெள்ளி காலித்துவிட்டது.
மழை ஓய்ந்து போயிற்று. கதிரவேற்பிள்ளையின் புழுதி நிலம் புது வெள்ளத்தால் தெம்பிப் போய்க் கிடக்கிறது.
எல்லோருமே மடலாகிக் கிடக்கும் அந்த நிலப் பரப்பில் கண்களை இலயிக்க விட்டுக்கொண்டு நடந்து செல்கின்றனர்.
கொட்டிக் கிடக்கும் மழைநீர், மலட்டுத் தரையில் பயனற்றுக் கிடக்கிறதே! அந்த நிலை அவர்களின் ஈரல் குலைகளை உலுப்பி விட்டிருக்க வேண்டும்.
கூனிக் குறுகிக்கொண்டு அவர்கள் நடந்து வருகிறார்கள். குடியிருப்புப் பகுதிக்கு அவர்கள் வந்தபோது கதிரவேற்பிள்ளை வீட்டில் மனிதக் குரல்களின் பிரலாபம் வானை நோக்கித் தாவிக் கொண்டிருந்தது.
– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.