கை எங்கே? கால் எங்கே?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 14,750 
 
 

ஓர் ஊரில் பத்து நண்பர்கள் இருந்தார்கள்.

அவர்கள் எங்கே போனாலும் சேர்ந்தேதான் போவார்கள்; வருவார்கள். அப்படியரு பாசப் பிணைப்பு.

பக்கத்து நகரத்துக்கு அவர்கள் ஒரு தடவை சினிமா பார்க்கப் போனார்கள்.

இரண்டாவது ஆட்டம்…

படம் முடிந்து வெளியே வந்தார்கள்.

பக்கத்தில் இருந்த மதுக்கடைக்குள் நுழைந்தார்கள்.

மயக்கத்தோடு வெளியே வந்தார்கள்.

ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

வழியில் ஒரு பெருங்காடு.

அதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

நள்ளிரவு நேரம்.

நடுக்காட்டில் அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென்று மழை… நேரம் ஆக ஆக மழை வலுத்தது.

“இனி… நாம இங்கேயே தங்கிக்கறதுதான் நல்லது. விடிஞ்சதும் ஊருக்குப் போகலாம். இப்ப நாம இந்த ஆல மரத்துக்குக் கீழே படுத்துக்கலாம்!” என்று அந்தப் பத்துப் பேரில் ஒருவன் சொன்னான்.
எல்லோரும் படுத்துக் கொண்டார்கள்.

குளிர் ஒரு பக்கம்; பயம் ஒரு பக்கம்.

எப்படியோ தூங்கிப் போனார்கள்.

பொழுது விடிந்தது.

விழித்துப் பார்த்தால் அவர்களுக்குள் ஒரு புதிய சிக்கல்.

ஆமாம்… அவர்களின் கைகளும் கால்களும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டிருந்தன.

பிரிக்க முடியவில்லை. காரணம் அவரவர்களின் கை எது? கால் எது என்பது அவர்களுக்கே அடையாளம் தெரியவில்லை.

அழ ஆரம்பித்தார்கள். இந்த அழுகைச் சத்தம் அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு வழிப்போக்கனின் காதில் விழுந்தது.

நெருங்கி வந்தான்.

“என்ன ஆச்சு உங்களுக்கு?”

“பயத்துலே நடுங்கிக்கிட்டே படுத்தோம்… காலையிலே பாத்தா கை – கால் எல்லாம் பின்னிக்கிட்டு கிடக்குது!”

“அதாங்க பிரச்னை… எது எங்களுடையதுனு அடையாளம் தெரியலே.. இப்ப என்ன பண்றது..?”

“கவலைப்படாதீங்க… நான் உங்க சிக்கலைத் தீர்த்து வைக்கிறேன்!”

வழிப்போக்கன் பக்கத்திலிருந்த கருவேல மரத்திலிருந்து ஒரு நீண்ட முள்ளை ஒடித்துக் கொண்டு வந்தான். ஒரு காலில் குத்தினான்.

“ஆ…!” என்றான் ஒருத்தன்.

“இந்தக் கால் உன்னுடையது. எடுத்துக்கோ…!” என்று சொல்லிவிட்டு ஒரு கையில் குத்தினான்.

“ஐயோ!” என்று அலறினான் ஒருத்தன்.

“இந்தக் கை உன்னுடையது. இழுத்துக்கோ” என்றான்.

வெடுக்கென்று இழுத்துக் கொண்டான்.

இப்படியாக அந்த நண்பர்களின் கை-கால்களை அவர் அடையாளம் காட்டினார். அவர்கள் விடு பட்டார்கள்.

பந்தபாசம் இப்படித்தான். பல சமயம் மனிதர்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. சிக்கிக் கொள்கிறார்கள்.

ஆன்மிக வெளிச்சம் என்கிற முள் வந்துதான் அவர்களை விடுவிக்க வேண்டி இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *