குள்ளநரியும் சகாக்களும்




ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு குள்ளநரி ஆட்சியில் இருந்தது. அதன் மந்நிரி சபையில் நீர்யானை, ஆமை, கரடி,கழுதைப் புலி ஆகியன இடம் பெற்றிருந்தன. சில நாள்களாக அதன் ஆட்சி அமோகமாக நடைபெற்றது. காட்டில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் நரியின் ஆட்சியால் அவதிப்பட்டன. ஆனால் அந்த மந்திரிகளுக்கும் சரி, குள்ள நரிக்கும் சரி தனது வயிறு நிரம்பினால் போதும என்பதை அரசாங்கக் கொள்கையாகக் கடைபிடித்தன. தவறி யாரேனும் நரிக்கு எதிராக பேச முயன்றால் கழுதைப் புலி நைச்சியமாக குள்ளநரியிடம் சொல்லும். பிறகு என்ன அந்த 4 மந்திரிகளும் ஒன்று கூடி அந்த மிருகத்தை வேட்டையாடி விடும். இதைக் கண்டு குள்ளநரிக்கு மட்டற்ற ஆனந்தம் ஏற்படும்.
இவ்வாறு சீரும் சிறப்பாக நடந்து கொண்டிருந்த குள்ளநரியின் ஆட்சிக்கு அந்த காட்டுக்குள் புதிதாக வந்த சிங்கம், புலியால் ஆபத்து வந்தது.வெளியில் வீராவேசமாக பேசித் திரிந்த கரடி, ரகசியமாக குள்ளநரியைச் சந்தித்து ‘ஐயோ என்னைக் காப்பாற்று ‘ என்று கதறியது. கழுதை புலியோ குள்ளநரியின் தந்திரத்தால் எப்படியும் பிணம் விழும், அதை தின்று பிழைக்கலாம் என்று சப்புக் கொட்டியது. மற்றொரு மந்திரியான நீர்யானையோ சோம்பேறித்தனமாக பிளிறியபடி முரட்டுத் தூக்கத்தில் ஆழ்ந்தது.ஆமையோ தனக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாதே, தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே என கருதி ஓட்டுக்குள் தலையை இழுத்துக் கொண்டது.
இந்தச் சூழலில் வனத்துக்குள் புகுந்தது சிங்கமா, புலி அல்லது சுண்டெலியா எனத் தெரியாமல் அவற்றைச் சீண்டிப் பார்க்க தவறான முடிவெடுத்தது குள்ளநரி. சிங்கத்தை அனழத்து மற்ற மிருகங்களை மிரட்டுவதைப் போல அதையும் மிரட்டும் தொனியில் கேட்டடது
‘நான் யார் தெரியுமா’ என்றதும்
பொளேரென குள்ளநரியின் தலையில் விழுந்து டன் கணக்கிலான எடையுடன் கூடிய அடி. குள்ளநரிக்கு மயக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.
அப்போதும் தனது மீசையில் மண் ஒட்டவில்லை பாணியில் ‘சரி சரி போ’, என வடிவேல் பாணியில் முனகிக் கொண்டே அங்கிருந்து சென்றது.
அப்போதும் அடங்காமல் அந்த குள்ளநரி புலியிடம் சென்று ஂயேய் நான் யார் தெரியுமா?’ என்று ஆணவமாகக் கேட்டது.
‘தெரியலையே நீ யார்’ என சாதாரணமாகக் கேட்டது புலி.
ஆத்திரம் தலைக்கேற ‘யேய் நான்தான் இந்தக் காட்டின் ராஜா, சிங்கமே என்னைப் பார்த்தால் அஞ்சி நடுநடுங்கும்’ என குள்ளநரி வானுக்கும் பூமிக்குமாகக் குதித்தது.
பொத்துக் கொண்டு வந்த சிரிப்பை புலி அடக்கிக் கொண்டு அப்படியே பவ்யமாக பயந்தபடி பின்னால் அடியெடுத்து காட்டுக்குள் ஓடி மறைந்தது.
எங்கிருந்தோ ஏதோ மிருகத்தின் அடக்கமுடியாத சிரிப்பலை வனாந்திரத்தை நிறைத்தது. ஆனால் குள்ளநரியோ, புலியையே மிரட்டி விட்டோம் என்ற முட்டாள்தனமான மமதையில் தனது குகையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது செல்லும் வழியில் ஓர் புதர் மறைவில் இருந்து திடீரென குள்ளநரியின் மீது பாய்ந்தது புலி. அப்படியே குள்ளநரிக்கு சகல அவயங்களும் அச்சத்தால் நடுங்கி ஒடுங்கிய.து. தனது கூரிய நகத்தால் குள்ளநரியின் முதுகில் நச்சென்று இறக்கியது புலி. அப்படியே மண்ணுக்குள் புதைந்து ரத்தம் சொட்ட சொட்ட கானகமே நடுங்கும் வகையில் வலியால் ஊளையிட்டது குள்ளநரி.
சத்தத்தைக் கேட்டு பிற கானகவாசிகள் அஞ்சி நடுங்கினர். தனது மன்னருக்கு என்னானதோ என பதறியபடி குள்ளநரியின் குகையை நோக்கி ஓட்டமெடுத்தன. ஆனால் அதன் மந்திரிமார்களோ தங்களது உயிர் பிழைத்தால் போதும் கிடைத்த புதருக்குள் தலையை நுழைத்து மறைந்து கொண்டனர். நீர்யானை பயந்தபடியே தனது கனத்த உருவத்தை சுமந்தபடி மெல்ல மெல்ல ஊர்ந்து நீருக்கு அடியில் சென்று மறைந்து கொண்டது. மீன் கடித்தால் கூட தேள் கடித்தது போல அஞ்சி நடுங்கியது.
அடி வாங்கிய பீதியிலும், ரணம் பட்ட வலியாலும் களைத்துப் போன குள்ளநரி நிலை குலைந்து தட்டுத்தடுமாறி தனது குகைக்குத் திரும்பியது. குள்ளநரியின் பரிதாப நிலையைக் கண்டு அழுவதா சிரிப்பதா என கானகவாசிகளுக்கு தெரியவில்லை.
சற்றே ஓய்வெடுத்தால் போதும் என குள்ளநரி நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்தின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து சட்டென குள்ளநரியின் குகைக்கு முன்னால் வந்து நின்றது சிங்கம்,
அவ்வளவுதான் சிங்கத்தை கண்டதும் குள்ளநரிக்கு சப்தநாடிகளும் ஒடுங்கியது.
‘புலியிடம் என்ன சொன்னாய்’ என காடே அதிரும் வகையில் கர்ஜனை குரலில் கேட்டது சிங்கம்.
அய்யா என்னை மன்னித்து விடுங்கள், என கதறியபடி சிங்கத்தின் காலடியில் விழுந்தது குள்ளநரி. கூட்டத்தை திரும்பிப் பார்த்தது சிங்கம். அதன் கண்கனில் ஒளிரும் ஜ்வாலையைத் தாங்க முடியாமல் அத்தனை ஜீவராசிகளும் காட்டுக்குள் ஓடி மறைந்தன.
மீண்டும் திரும்பி குள்ளநரியை பார்த்தது சிங்கம். குள்ளநரி கை கூப்பி சிங்கத்தை அரியணையில் அமரும்படி சைகையால் வேண்டியது. குள்ளநரியின் காதுகளைப் கவ்வித் தூக்கி அரியணையில் அமரச் செய்தது சிங்கம். பின்னர் பிடறியை வேகமாக ஒருமுறைச் சிலிர்த்துக் கொண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தபடி காட்டுக்குள் சென்றது. வலி தாங்கமுடியாத குள்ளநரி அப்படியே அரியணையில் உறங்கிப் போனது. மறுநாள் கானகவாசிகள் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பினர். நரியின் குகை வாசலில் இருந்த பாறையில் யாரோ ஒரு விஷமக் குரங்கு ‘மந்திரி சபை கலைக்கப்பட்டு விட்டது’ வாழிய வாழிய என்று சுவரொட்டியை ஒட்டி விட்டு அங்கிருந்து மரத்தின் மீது தாவி ஒடி மறைந்தது.
அதன் பிறகு அந்த காட்டுக்கு சிங்கம் திரும்பவேயில்லை.