குற்றாலக் குறிஞ்சி





(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்.
இராகம் 1-3 | இராகம் 4-6 | இராகம் 7-9
இராகம்-4
சந்திரசேகரப்பிரியா
இவ்வளவு கம்பீரமாகத் தடை சொல்கிறவர் யார் என்பதனை அறிந்து திரும்பியபோது…
ஓ… இவர்தான் திருநெல்வேலிப் பாளையக்காரரோ?
சமஸ்தானத்தில்தான் இந்தச் சங்கீத மழையில் நனைய முடியாது. தெய்வ சந்நிதானத்திலாவது செவிகள் படைத்ததன் பயனைப் பெற எவ்வளவோ விரைந்து வந்தும் சங்கீதத்தைக் கேட்க முடியவில்லையே! ஆனாலும் பயங்கர கொள்ளைக்காரன் பிடிப்பட்டான் என்பது சப்த சுரங்களிலும் இனிமையான செய்தியாக அவருக்குப் பட்டது.
பின்னே பரிவாரங்கள் நின்றவண்ணமிருக்கின்றன.
ஆ! இவள்தான் குறிஞ்சியா?

இவளது அபரிமிதமான பேரழகில் வயதான தமது மனமே வழுக்கி விழுந்து விட்டதென்றால்… வாலிபர்கள்?
இமையசைத்தாலே இறந்துபடுவரே!
இந்த அழகுக்குள் இப்படியோர் தேவகானம் கூடுகட்டி இருக்கிறதென்றால், சமஸ்தானங்களை வெறுக்கும் செருக்கு இவளிடம் சரணடைந்திருப்பது இயல்புதானே?
கொடிய கொள்ளைக்காரனை மயக்கவல்ல சங்கீதத்தை நாம் கேட்க முடியாமல் போய்விட்டதே! இது போதை நிறைந்த இசையாகவல்லவோ இருக்க வேண்டும்?
இவளது புகழ் கொடிகட்டிப் பறக்கிறதென்றால்… இவள் பூமியின் மீது நிற்கவில்லை. பூமி இவளது கால் சுண்டு விரலின் மீது சுழன்று கொண்டிருக்கிறது…
கனன்ற கண்களுடன் குறிஞ்சி, தன்னை நோக்குவதை உணருகிறார் திருநெல்வேலிப் பாளையக்காரர். குறுக்கே நின்றதன் கோபம்.
அந்த நடுஇரவியின் நிசப்தத்தில், நிசப்தத்தில், தீப்பந்தங்கள், பொடிதாக வெடிபட்டு புகையைக் கக்குகின்றன.
“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள் பாளையக்காரரே!”
“தீப்பந்த புகையிலேயே நீ இவ்வளவு அழகாய் இருக்கிறாயே என்றுதான்…”
விலங்கோடு போராடும் ராஜகாந்தியின் சீற்றம் ராஜ நாகமாகப் படமெடுக்கிறது!
“ஏ, பாளையம்! பொருளைத் திருடும் என் போன்றவர்களைக் காட்டிலும் பொம்பளையைத் திருடும் உன் போன்றவர்களுக்கு விலங்கிட விலங்கிட வேண்டும்! சமுதாயச் சட்டவமைப்பு தலைகீழாக இருக்கிறது.”
பாளையத்தின் கௌரவம் பதறிப் போனது. “டேய் ராஜகாந்தி! திருட்டுப் பயலே!”
“டேய் பாளையம்! குருட்டுப் பயலே!”
பாளையக்காரர் வாளையுருவ, ராஜகாந்தி விலங்குடன் கைகளையோங்க…
“மகளே என்றழைத்த தந்தையே, அமைதி!”
இடைப்புகுந்த குறிஞ்சி, தனது புன்னாகவராளிக் கண் களால் ராஜநாகத்தை அமைதிப்படுத்துகிறாள்.
அமைதியாக இருந்த அதுவரை புதுக்கோட்டை அமைச்சர் நாவசைத்தார்: “திருநெல்வேலிச் சீமானே! தடை போட்டது உங்கள் வரை சரியானாலும், விடை போட்டது வெட்கும்படியாகிப் போய் விட்டது! தமிழ்க் கலை தந்த ஒரு மானுட வாணியை இப்படித் தகாத முறையில் நடத்தியது அடியேனுக்கே கோபம் வந்த தென்றால்… இந்தக் கொடியோனுக்கு ஏன் வராது? கொடியவனானாலும் சங்கீதத்தில் கொடி கட்டிய ராவணனாகி விட்டான் இந்த ராஜகாந்தி!”
எங்கோ கோட்டான்கள் அலறும் சத்தம்…
புதுக்கோட்டை அமைச்சரின் பதிலைக் கேட்டுப் புலியாக நகைக்கிறார் பாளையக்காரர்.
“இவள் ஏதோ உங்கள் மகள் என்பது போல வக்காலத்து வாங்கிப் பேசிவிட்டீர்கள் ! தொண்டைமானின் அமைச்சர் என்பதால் மன்னிக்கிறேன்! நீங்களிருப்பது எனது
எல்லைக்குள்!”
“அதனால்? குறிஞ்சியை உங்களிடம் ஒப்படைக்கச் சொல்லுகிறீர்களா?”
“இல்லை; ராஜகாந்தியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்!”
“மறுத்தால்?”
“திரும்ப முடியாது!”
“புதுக்கோட்டைப் பகை தேவைதானா?'”
“திருநெல்வேலிக்கு அது தேவையென்றால்…”
பாளையக்காரர் முடிக்குமுன் ராஜகாந்தி கர்ஜித் தான்: “புதுக்கோட்டை அமைச்சர் பெருமானே! சங்கீதத்தில் மயங்கியபோது என்னைச் சரணடையச் செய்துவிட்டீர்கள்! அதே சங்கீதத்தின் மீதும் அதனைப் பாடிய எனது பெறாமல் பெற்ற மகள் குறிஞ்சியின் மீதும் சத்தியம் வைத்துச் சொல்கிறேன். விலங்கை அவிழ்த்து விடுங்கள்! இவர்கள் விலா எலும்புகளை நான் ஒருவனே முறித்துவிட்டு மீண்டும் விலங்கை மாட்டிக் கொண்டு சத்தியத்தைக் காப்பேன்! நான் கொள்ளைக்காரன்தான்! கொடியவன்தான்! ஆயினும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட ராஜநாகம்! அவிழ்த்து விடுங்கள்!”
“அவசியமில்லை ராஜகாந்தி ! நானும் பரிவாரங்களுடன் தான் வந்திருக்கிறேன்! பாளையக்காரரால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளட்டும்!
புதுக்கோட்டை அமைச்சர் இவ்விதம் கூறியதும், அடுத்த கணமே சவாலை ஏற்றதுபோல் திருநெல்வேலிப் பாளையக்காரர் தமது பரிவாரங்களுக்குக் கட்டளையிட, பாளையத்து திவான் ஓரடி முன்வந்து, “வீணில் புதுக் கோட்டையைப் பகைத்துக் கொள்வது திருநெல்வேலிக்கு அழிவைத் தரும். புதுக்கோட்டைத் தொண்டைமான் ஆங்கிலக் கும்பினியரின் அன்புக்குரியவர். மேலும், இப்போதைய புதுக்கோட்டைத் தொண்டடைமானின் அண்ணார் ராஜா விஜயரகுநாதராய தொண்டைமான் ஒரு சீர்மைமிகு செம்மல்! அவரால் திருநெல்வேலி பல நன்மைகளைப் பெற்றது. எதிர்த்துத்தான் ஆக வேண்டுமானால், எனது பதவியை இக்கணமே ராஜினாமா செய்கிறேன். தமிழ் தந்த இசைச் செல்வம் குறிஞ்சியை நீங்கள் பார்த்த முறை தகாத முறை!” என்று கூறி தலை பணிந்தார்.
திருநெல்வேலி பரிவாரங்களும் அசையவில்லை.
புதுக்கோட்டை அமைச்சர் அமைச்சர் சொன்னார்: “என்ன இருந்தாலும் திருநெல்வேலி தென்பாண்டிய நாடல்லவா? அதன் பண்பாடு என்னை வெற்றி பெறச் செய்து விட்டது. பாளையக்காரரே அவசரப்பட்டு விட்டீர்கள். இப்போது உங்களை நான் மன்னிக்கிறேன்!”
அமைச்சர் சாரட்டு வண்டியில் ஏறிப் புறப்பட்டார். உடன் குறிஞ்சியும் விலங்கிட்ட ராஜகாந்தியும் பரிவாரங் களுடன் புறப்பட்டனர்.
*ஆங்கிலக் கும்பினியரால் ‘ஹிஸ் எக்ஸலென்ஸி’ என்ற விருதுவைப் பின்னாளில் பெற்றவர். ‘கள்ளர் சரித்திரம்’ – பேராசிரியர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் (1928).
புதுக்கோட்டை அரண்மனை, குற்றாலக் குறிஞ்சியே வருகை தந்து விட்டாள் என்பதில் பூரித்துப் புளகித்துப் போனது.
ராஜகாந்தி பிடிப்பட்டதுகூட ஒரு பெரிய ராஜ வெற்றியாகத் தெரியவில்லை.
அரசர் ஸ்ரீராஜ ரகுநாத தொண்டைமான் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு ஒருபுறம் வியப்பும், மறுபுறம் வேதனையும் அடைந்தாலும், குறிஞ்சிக்கு வேண்டிய பணிவிடைகளில் ஊசிமுனையளவும் குறைவேற்படாத வண்ணம் ஆணை பிறப்பித்திருந்தார். மக்களின் செல்வாக்கு பெற்ற இனிக்கும் பொன்மாங்கனியல்லவா அவள்?
அவள் ஒரு நிபந்தனை விதித்தாள். அதாவது –
“என்னைப் பாடச் சொல்லப் போகிறீர்கள். புரிகிறது. ஒப்புகிறேன். ஆனால் எனது கச்சேரி முடியும்வரை ராஜ காந்தியைச் சிறையிலடைத்து அகௌரவிக்கக் கூடாது. மகளே என்றழைத்தவனல்லவா? தனியறையில் வைத்துப் பூட்டிக் காவல் நிறுத்தினாலும் தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும்.’
அறவழி தவிரப் பிறவழி தெரியாத இளம் வயது ஆண ழகரான புதுக்கோட்டைத் தொண்டைமான் இதனை ஏற்கவே செய்தார்.
அன்றைய ஓய்வுக்குப் பிறகு மறுநாள் பாடுவதாக அறிவித்திருந்தாள் இசைத் தேவதை குறிஞ்சி.
அந்த விசாலமான கலையழகுமிக்க அறையில், தரை யிலேயே அமர்ந்து சுவரில் சாய்ந்து கண்மூடி எது குறித்தோ சிந்திக்கிறாள்…
ஆ! கொள்ளைக்காரனாக இருந்தாலும் அவனது இதயத்தே ராஜகம்பீரம் படைத்த ராஜகாந்தி ராகமல்லவா குடியிருக்கிறது.
ஒரு பக்கம், ஒரு தலைக் காதலால் உருகிச் செத்துவரும் ஞானசுந்தரம், தம்பூரை மீட்டிக் காதல் நாதத்தில் கவனத்தைக் கலந்து கொண்டிருக்கிறான்.
அறை முழுவதும் அகிற்புகை; தம்பூரின் நாத அலைகள்.
கண்களை மூடி அரம்பை சொரூபமாக அமர்ந்திருக்கும் குறிஞ்சியின் குறை சொல்லாப் பேரழகை, ரகசியமாகத் திருடியவாறு தம்பூரில் தாகத்தைத் தணித்துக் கொண்டிருந் தான் ஞானசுந்தரம்.
“குறிஞ்சி!”
“ம்ம்…”
“என்ன யோசனை?”
“ராஜகாந்தியை எவ்வாறு விடுவிப்பது என்று!”
“நம்புகிறாயா?”
“நம்புகிறேன்; எந்தக் குற்றாலக் குறிஞ்சி ராகம் அவரைப் பிடிபடச் செய்ததோ, அதே ராகம் விடுபடவும் செய்யும் என்று நம்புகிறேன்! எனது சங்கல்பத்தையே முறியடிக்கச் செய்துவிட்ட சம்பவமல்லவா இது? காஞ்சி மாமுனிவர் என்னைக் கைவிட மாட்டார்!”
“அவர் உனக்கு ஏதோ உபதேசித்து இருக்கிறார்.”
“அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்!”
“அப்படியானால் நீ முதலில் அவரைத் துதித்து கச்சேரியைத் தொடங்குவதுதான் சாலப் பொருத்தம்.”
நெற்றிச் சுழிமுனையில் ஒரு மின்னல்; உண்மை தானே?
“நல்ல கருத்து ஞானி!”
“அது மட்டுமல்ல; அவர் பேராலேயே இருக்கும் சந்திரசேகரப்பிரியா எனும் அபூர்வ ராகத்தில் அவரைத் தோத்திரம் செய்து தொடங்கு! நான் இன்று உன்னுடன் பாடப் போவதில்லை. சமஸ்தானம் விரும்புவது உனது சங்கீதமே!”
“ஞானி! இந்தச் சங்கீதம் நீங்கள் அளித்த பிச்சை: இதன் பிரகாசம் உங்களைச் சார்ந்ததுதானே?”
“அறிவேன்; ஆனாலும் சந்தர்ப்பம் அறியாதவனா நான்? ஏதோ… சந்திரசேகரப்பிரியா ராகத்தைக் கொஞ் சம் ஞாபகப்படுத்தி ஆலாபனை செய்து பார்!”
அதுவரையிலும் தம்பூர் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
ஆதார சுருதியில் குறிஞ்சியின் அனைத்து நரம்புகளும் சேதாரமின்றிச் சேருகின்றன…
முதலில் சந்திரசேகரப்பிரியா ராகத்தின் ஆரோகண சுரத்தை ஆராதித்துப் பார்க்கிறாள்…
ச…ரி..க…ப..த…நி…சா..
திடுமென்று தம்பூர் சுருதி நிற்கிறது.
ஆரோகணம் சொன்ன குறிஞ்சியின் கண்கள் தம்பூரை நோக்குகின்றன.
ஞானோதயமாய் இமையாது நோக்குகிறான் ஞானசுந்தரம்.
“என்ன ஞானி?”
“இந்த அபூர்வராகம் எதன் ஜன்யம்?”
“வகுளாபரணம்…”
“எத்தனையாவது மேளகர்த்தா?”
“…..”
“பதினான்காவது. நீ கைசிகி நிஷாதம் (நி) பாட வில்லையே! காகலியல்லவா ஒலித்தது!”
குறிஞ்சியின் நினைவில் நிஷாத தடுமாற்றம்…
ஞானசுந்தரம் ஆரோசை, அமரோசை சொல்லி ஆலாபிக்கிறான்.
சரிகபதநிசா… சநிதபகரிசா…
இராக வித்தாரம் அவனது குரலில் முத்தாரமாக மூர்ச்சனை காட்டுகிறது… அதுவும் ஒரு தேவகான குரலாயிற்றே!
ஞானப்பூர்வமான ஞானசுந்தரம் இசை மகா ஞானஸ் தனாயிற்றே!
குழைந்தும் இழைந்தும் தழைந்தும் போன குறிஞ்சி, ஞானசுந்தரத்துக் கமகத்தில் காதல் வயப்பட்டு, “ஞானீ!” என்றலறியவாறு எழுந்து சென்று அவனது பாதங்களில் நெற்றியைப் பதிக்கிறாள். அந்த நெற்றிச் சுழிமுனையில்…
இரவு நிலவு சுருதி கூட்ட..
அரண்மனைக் கொலுமண்டபத்தில் குறிஞ்சி பாடும் சந்திரசேகரப்பிரியா ராகத்தில், ஸ்ரீ சங்கராசாரியப் பெருமான் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளே பிரகாசிக்கிறார்…
அன்றைக்கு ஸ்ரீ ஆசார்யாள் பெருமான் முன் பாடிய அதே சமஸ்கிருத சுலோகத்தைச் சந்தனத் தமிழில் வந்தனை செய்கிறாள்.
குருவே நான்முகன்; குருவே திருமால்;
குருவே சிவன்; குருவே நிறையிறை !
குருவே…
கும்பிடுகிறேன்; கும்பிடுகிறேன்!
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிரியத் தைப் பெற்ற அடுத்த கணம்…
வேறு எதையும் அவள் பாட விரும்பவில்லை.
புதுக்கோட்டை அரசர் ராஜரகுநாத தொண்டைமான் விரும்பிக் கேட்டுக் கொண்டது இதுதான். ஒரு கொடிய கள்வனையே மயக்கிய அந்த குற்றாலக் குறிஞ்சி ராகத்தை எத்தனை நாழிகை பாடினாலும் இன்புறுவேன்! அது ஒன்றே போதும்….
அவரே ஒரு சங்கீத கலாரசிகர்தானே?
அமைதியை வாழ்த்தும் தம்பூரின் இனிய நாதம்…
யாரும் தும்மல் வந்தாலும் அடக்கிக் கொள்ள வேண்டும்; இல்லையேல் மூக்கறுப்படும் தண்டனை நிறைவேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இமைகளை மூடித் தியானித்து அதர்வண மந்திரத்தை ஆராதித்த பிறகு…
நிதநி பதநி சா…
சுருதியில் ஆலாபனை, சுகம் காணத் தொடங்குகிறது…
சரிகம நிதநி பதநிசா..
நீண்ட நேரம் நீள்விழிகளைச் சுருதியில் குரலிழைய நிறுத்துகிறாள்..
அப்போது அவளது குண்டலமணிந்த காதுகளில் ஒலிக்கும் சொற்கள்…
‘நண்பர்களே! என் மீது நம்பிக்கையிருந்தால் தப்பி யோடுங்கள்! எந்தச் சங்கீதம் எனக்கு விலங்கிட்டதோ. அதே சங்கீதம் என்னை விடுதலை செய்யும்!”
“மகளே! மகளே! மங்கையிடம் மயங்காதவன், மதுவிடம் மயங்காதவன், உன் இசையில் மயங்கி விட்டேன்!”
கொள்ளையர் தலைவன் ராஜகாந்தி, பிள்ளைத்தமிழில் – பிரமாதமான தமிழில், சத்திய நம்பிக்கையுடன் சாற்றிய சாரமிக்க சொற்கள்…
காலையில் ஞானசுந்தரம், “நம்புகிறாயா, குறிஞ்சி,’ என்று கேட்டபோது, அவள் சொன்ன பதில்: “நம்பு கிறேன்! எந்தக் குற்றாலக் குறிஞ்சி ராகம் அவரை பிடிப்படச் செய்ததோ அதே ராகம் விடுபடவும் செய்யும் என்று நம்புகிறேன்!”
ஓ…சரபக்தி! கிருபாஜனனீ! பக்த பிரியயே! புராதனீ! பெண்ணையுணர வைக்கும் பிரத்யங்க ரூபிணி! பிரேத போஜனீ! வாகினீ! பிரத்யங்கிர பரமேஸ்வரீ! க்ஷம், க்ஷம், க்ஷம்…
பீஜமந்திரம் சுரத்துக்குச் சுரம் பீறிட்டு, அரண்மனையை வெளியே அரணாக நிற்கும் ரசிக மட்டுமல்லாது, மக்களையும் வசந்தத் தாலாட்டி வயப்படுத்துகிறது…
ஆ… இராகமா ஆலாபனை செய்கிறாள்?
அதிலே யோகமிருந்தது; மோகமிருந்தது; போகமிருந்தது…
பக்தி இருந்தது; முக்தி இருந்தது; சக்தி இருந்தது…
அரண்மனை அறைக்குள் விலங்குடன் சிறைப்பட்டிருந்த ராஜகாந்தி மட்டும் எந்தத் தெய்வத்தையும் வேண்டிக் கொள்ளவில்லை. அவன் குறிஞ்சியாகிய பாடகியையே வேண்டிக்கொள்கிறான். ‘மகளே! இங்கேயும் என்னை மயக்கி விடாதே! நான் தப்ப வேண்டும்! தப்ப வேண்டும்!
ஆனாலும், அவனைக் குற்றால அருவி போலப் பாய்ந்து வரும் அந்த ராகம் அடிக்கடி மயக்க, அதிலிருந்து விடுபட நாழிகைக்கு நாழிகை சிலிர்த்து விழிக்கிறான்…
மேல் ஸ்தாயியில் குறிஞ்சியின் குரல் ஒலிக்கிறது…
ஆ! ஸ்ரீ ஆசார்யாள் சுவாமிகள் சொன்ன பாஷாங்க மத்திமத்தில் நிறுத்தி, பின்னர் அதே மத்திமத்தை (ம) உபாங்கமாகவும், பாஷாங்கமாகவும் உபாங்கமாகவும் பாஷாங்கமாகவும்…
சுத்தமாகவும் களங்கமாகவும் மாறி மாறி ஆலாபனை செய்தபோது…
இராகம்-5
பைரவி
அரசர் ராஜரகுநாத தொண்டைமான் கருணை விழிகளில், கங்கைப் பிரவாகமா? காவிரிப் பிரவாகமா? இல்லை குற்றால நீர்வீழ்ச்சிதானா?
குறிஞ்சியாகவா பாடுகிறாள் குறிஞ்சி?
வாணியன்றோ வாய்ப்பாட்டு பாடுகிறாள்? சமஸ்தானத்து முதல் கச்சேரி என்பதாலா?
சே. சே !
ஒரு ரத்தக்கறை படிந்த மனம், ரசிகனாகிச் சித்தம் தடுமாறிச் சிறைபட்டுக் கிடக்கிறானே என்கிற நாரதா வேசமோ? அன்றி அனுமந்தாவேசமோ?
இசைவெள்ளம் கரைபுரள ஆலாபிக்கிறாள்..
இதுதான் புதியதாகக் கண்டுபிடித்த குற்றாலக் குறிஞ்சி ராகமோ? கொலைஞனையும் சுவைஞனாக்கி, வியப்பே வியந்து விக்கித்த புதுமை ராகமோ?
அந்த ராகம் புதுக்கோட்டையில் முகவரி சொல்லி, வானத்தை அண்ணாந்து பார்க்கிற புகழ்ப் புயலாகிறது…
அந்த அபூர்வராகத்தை பிடிலும் குழலும் வீணையும் சொரூபமாக்கினாலும், மயூரி வாத்தியம் மட்டும் முருகனை அகவி அழைக்கிறது…
ஆலாபனை முடிகிறது.
குறிஞ்சியின் மைகொண்ட கயல்விழிகள் மெய் கொண்டு இமைகளை மூடி மேனி சிலிர்க்க, ‘தீட்சிதர் பெருமானே! என்று குருவை அழைக்கின்றன.
தோகையனைய இமைகள் திறக்கின்றன.
மிருதங்கத்துக்கு ஒரு சமிக்ஞை; அடுத்து கடத்துக்கும், முகர்சிங்குக்கும், டோலக்குக்கும்…
அவளது புதிய இசைமுறைக் கச்சேரியே அலாதியானது. கனத்தை எளிமையாக்கிய கற்கண்டுப் பந்தலில் கனிச்சாறு மழையாறிற்றே! மதிவாணர்கள் மட்டுமே ரசித்த இந்த இசைப் பளுவை இலேசாக்கி மக்கள் தோள் சுமக்கும் பூப்பல்லக்காக்கிய புதிய முறையாயிற்றே!
அவளது சமிக்ஞை கண்டு…
‘நம்’ – மிருதங்க சாப்பு. அது ஒரு தொடக்க சமிக்ஞை. தொடர்ந்து மிருதங்கம் ‘தத்தாங்கிட தகதரிகிட’ முழங்க, கடமோ, ‘தித்தாங்கிட திகதரிகிட’ என முழங்க, டோலக்கோ, ‘தத்தித்தா, தத்தித்தா, தத்தித்தா…’
மூன்று வாத்தியங்களுக்குமே முகர்சிங் மோகத்தைக் கிளறுகிறது…
இப்படி, மரபு தவறி, வழக்கமாகக் கச்சேரியில் சில வித்துவான்கள் மாவரைக்கிற பாணியைத் தவிர்த்து, லயம் என்கிற பெயரால் தொடையைப் புண்ணாக்கிப் பாமர மக்களைப் பயமுறுத்துவதை விடுத்து, புதிய மரபில் இசையென்றால் ஓரறிவு படைத்த ஜீவனையும் ஒரு கணம் யெய் சிலிர்க்க வைப்பது என்கிற சித்தாந் தத்தையே அவள் சீவக சிந்தாமணிக் காப்பியம் படித்ததில் அறிந்தவளாயிற்றே? தமிழ்ப் புலவன் எடுத்து வளர்த்த தவப்புதல்வியல்லவா!
*அந்தக் காலத்தில் இத்தனை வாத்தியங்களும் இருந்தன. இவை நடுவே வந்தவையல்ல. மயூரி ஒன்றுதான் இப்போதைய வழக்கில் மாறிவிட்டது.
பாடலைத் தொடங்குகிறாள்…
விலங்குகளே! வனவிலங்குகளே – கை
விலங்கு என்ன செய்யும்?
ஆ! என்ன பல்லவி இது?
குற்றாலக் குறிஞ்சிக்காக அமைந்த பாடலல்லவே இது? புதிதாகப் பாடலைக் கற்பனை செய்து இயற்றி இருக்கிறாள்…
பல்லவியைப் பாடி அவள் சுருதியில் நிற்கிறபோது…
மிருகங்களே எனது இசையில் எனது இசையில் மிருதுவாகிறபோது கைவிலங்கு ஏன் கரையாது என்கிற அருத்தமோ?
அந்தப் பனிமலைப் பார்வதியின் பவித்திரமான பேரழகு இந்த இசைமலைப் பேரழகின் இனிய முகத்தில் படருகிறது…
ஆ! கையெடுத்துக் கும்பிடும் அழகல்லவா இது?- என கரம் கூப்புகிறார் தொண்டைமான்!
எவர் கண்களில்தாம் ஆனந்த நீர் படர்ந்து பரமானந் தத்தைப் பறைசாற்றவில்லை?
அனுபல்லவி பாடி சரணத்தைத் தொடங்குகிறபோது, பத்திரகாளி பிரத்தியங்கிரா தேவியையே முத்திரை பதித்து முழக்குகிறாள்: அழைக்கிறாள்!
தெய்வங்களை எங்கே எப்போது அழைத்துப் பாட வேண்டுமோ, அங்கே அப்போது அழைத்துப் பாட வேண்டும் என்கிற புதிய கொள்கை படைத்த தமிழ்ப் பாடகியல்லவா குறிஞ்சி! தமிழர்தம் வாழ்வைப் பாடு பவள் அல்லவா குறிஞ்சி! தமிழச் சமுதாயத்து முன் னேற்றம் குறித்துப் பாடுபவளல்லவா குறிஞ்சி! ஏன்? உலகின் எந்தக் காப்பியங்களும் சொல்லாமல், தமிழ்க் காப்பியங்கள் மட்டுமே ஆரம்பமாகக் கூறும் ‘உலகு’ என்ற சொல்லின் உண்மை புரிந்து உலகைப் பாடுபவளாயிற்றே குறிஞ்சி!
ஓ… சரணத்தின் மூன்றாம் அடியை உச்சஸ்தாயியில் பாடுகிறாள்…
வழக்கமாக ஞானசுந்தரமும் சேர்ந்து பாடுகிறபோது வரிகளைப் பங்கிட்டுச் சங்கதிகளைச் சேர்த்துப் பாடி மகிழ்விப்பர். சமயத்தில் வார்த்தைகளைக் கூடப் பங்கு போட்டுப் போட்டிச் சங்கீதமாக்குவர். இது அவர்களது புதிய கண்டுபிடிப்பு; புகழ் பெற்றதன் ஆதார ரகசிய ஆணிவேர். ஆனால் இப்போது?
குறிஞ்சி மட்டுமே பாடினாலும் அது குறிஞ்சிப் பூவாய் அதிசயிக்கவும் செய்தது.
பக்கமேளங்கள் சமத்திலிருந்து, வழக்கத்தைத் தள்ளி, கால், அரை, முக்காலாக இடைபுகுந்து லயத்தின் நயத்தை லாகவமாகப் பேசுகிறபோது…
சேதனங்கள் அசேதனங்களாகின்றன; அசேதனங்கள் சேதனங்களாகின்றன… அசைவது அசையாததுமாக, அசையாதது அசைவதுமாக…
அரண்மனைத் தனியறையில் சிறை வைக்கப்பட்டிருந்த ராஜகாந்திக்கு அந்தப் பாட்டு புரிகிறது…
தனக்காகப் பாடுகிற பாட்டு.
அவன், அன்றுபோல மயங்கிவிடக் கூடாதே என்று குறிஞ்சியையே தெய்வமாக எண்ணிக் கும்பிட்டு மானசீகமாகக் கேட்டுக் கொள்கிறான்.
‘மகளே! நான் மயங்கக் கூடாது; தப்பிக்க மார்க்கமிருக் கிறதா என்று தேடுகிறேன்; தேடுகிறேன்…’
குற்றாலக் குறிஞ்சி ராகத்தின் சுரவிந்நியாசம், விநோத விசித்திரமாக, இடையிடையே ஆலாபனைக் குழைவுடன்.
ஆ! அந்த ‘கமபகரிச’ என்கிற பிரயோகத்தில் மத்திம பாஷாங்கம் மயக்குகிற போது…
அறைச் சிறைக்காவலர்கள் நிற்கிறார்களா? தூங்குகிறார்களா?
ஓரடி நீண்ட சங்கிலியுடன் பிணைக்கப்பட்ட விலங்குக் கரங்களை, கதவு கம்பிகளின் வழியே நீட்டிய ராஜகாந்தி, ஒரு சேவகன் இடுப்பில் செருகியிருந்த சாவியை எடுத்துக் கொண்டு, முயன்று அறைப் பூட்டைத் திறந்து வெளிப்பட்டு விடுகிறான்.
அவனா திறந்தான்? குற்றாலக் குறிஞ்சி ராகமல்லவா திறந்து விட்டது?
அரண்மனையின் மண்டபத்தையடைந்த ராஜகாந்தி, கூட்டத்துடன் கூட்டமாக நிற்கிறான். மது உண்ட மயக்கம் போல் மயங்கிக் கிடப்பவர்கள் கண்களில் அவன் எங்கே தெரிகிறான்?
ஆனாலும், அவன் தப்பித்து ஓடவில்லை, திருடர்களில் மனிதனில்லையா, என்ன?
குறிஞ்சி பாட்டை முடிக்கிறாள்.
அவள் முடித்ததை எவர் உணர்ந்தனர்? இன்னமும் அவர்கள் மயக்கத்திலிருந்தே விடுபடவில்லையே!
“சபாஷ் மகளே!” என்று ராஜகாந்தி கர்ஜித்த பிறகு தானே அனைவருமே விழிப்புக் கண்டனர். அசேதனங்கள் சேதனங்களாயின.
வயதில் சிறியவளானாலும் குறிஞ்சியின் பாதங்களில் விழுந்து வணங்குகிறான் ராஜகாந்தி.
அரசர் கண்கள் முதல் அனைவருடைய கண்களிலும் ஆச்சரியம் மேலிட்டு, உடைந்த இதயங்களை ஓட்டச் செய்து, உணர்வுகளுக்கே உயிரூட்டுகிறது.
‘எந்தச் சங்கீதம் என்னைப் பிடிபடச் செய்ததோ அந்தச் சங்கீதம் விடுபடச் செய்யும்!” என்று ராஜகாந்தி குற்றாலத்தில் கூறிய சொற்களை நினைவு கூர்ந்து பார்க் கிறார் புதுக்கோட்டை அமைச்சர்.
ஓ… இது சங்கீதமல்ல; அதற்கும் மேலே, அதற்கும் மேலே…
எவ்வளவு நம்பிக்கை இந்தக் கொள்ளைக்கார ராஜ காந்திக்கு? ஒரு மகாஞான ரசிகனுக்குக்கூட இந்த நம்பிக்கை ஏற்படாதே!
அரியணையை விட்டெழுந்த அரசர் ராஜரகுநாத தொண்டடைமான், குறிஞ்சியை நோக்கி வந்து நிற்க, குறிஞ்சியும் எழுந்து நின்று வணங்குகிறாள்.
“என் தங்கையே ! சங்கீத சக்கரவர்த்தினி! உன்னை மகளே என்றழைத்த கொலைகாரனை -கொள்ளைக்காரனை தப்பு தப்பு – சங்கீத ரசனையுள்ளவன் இவ்வாறு இருக்க முடியாது. ஏதோ சந்தர்ப்பம் இவனை இப்படி யாக்கி இருக்கிறது… இவனை விடுதலை செய்வது ராஜதரும் மில்லையென்றாலும் உனது இசை தருமத்தையும், நீ கேட்டுக் கொள்ளாமலேயே அவனே விடுதலையாகி வந்த அதிசயத்தையும் கண்டு, வழிகூட்டி அனுப்புகிறேன். அவனுக்குப் புத்தி சொல்லியனுப்புவது உனது கடமையாக விட்டுவிடுகிறேன்!”
தொண்டைமான் குரலில் ரசனையின் மனமாற்றம். ராஜகாந்தியே பதில் சொன்னான்:
“புதுக்கோட்டை சீமானே! நான் கொலை, கொள்ளை நடத்தியதாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் எவளை யாவது கற்பழித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நான் ஏழைகளின் வயிற்றெரிச்சலை எப்போதாவது கொட்டிக் கொண்டிருக்கிறேனா? தருமம் செய்யும் தனவந்தர்களின் வாசற்படியைத் தாண்டியிருக்கிறேனா? ஏழைகளின் வியர்வையில் ஏழடுக்கு மாளிகை கட்டுகிறானே… அவன் தான் எனது முதல் எதிரி! கற்பழிப்பதிலேயே கால சுகம் காண்கிறானே… அவன்தான் எனது இரண்டாம் எதிரி! மக்களின் கல்விக்காகவோ, முன்னேற்றத்துக்காகவோ பயன்படாமல் கோயில்களில் பொன்னும் பொருளும் குவிக்கின்றானே… அவன்தான் மூன்றாம் எதிரி. பசி என்றால் ஒரு படுபாவியும் பணம் தரமாட்டான்; பாவங்களைத் தீர்க்க, கோயில் என்றால் கொட்டித் தீர்க்கிறான். கோயிலைக் கண்டுபிடித்தவன் புத்திசாலி. ஆனால், கையில் உள்ள பணம் அறவழியில் செலவா காமல் புறவழியில் கொள்ளையடிப்பவனைவிட நான் கொடியவனா? நான் ஏன் கொள்ளைக்காரனாக மாறி னேன்? அழகிய பெண்களைக் கண்டுவிட்டால் கத்தியை நட்டுக்கல்யாணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்திக் காமலீலைசெய்கிறானே அந்நிய மராட்டிய அரசன்… அந்தக் கொடுமை சகியாது கொலைகாரனானேன்! ஆங்கிலக் கும்பினியன் செய்யும் அட்டூழியம் கண்டு பொறுக்க மாட்டாமல் கொள்கைக்காரனானேன்! ஆனால், ஏழை களின் பங்காளனாக இருக்கிறேன்; இது தவறா? ஐந்து சக்கரத்துக்குத் தங்கள் பெண்களை விற்கும் அக்கிரமம் முளைத்து இருக்கிறதே! இது சமூக தருமமா? நான் சொன்ன அனைத்தும் தவறு என்று சொல்லுங்கள்… நான் வணங்கும் குறிஞ்சியின் தலையில் சத்தியம் செய்து இவற்றிலிருந்து விடுபடுகிறேன். சொல்லுங்கள் தொண்டைமானே?*
“தவறில்லை; தவறில்லை; தவறில்லை!” குறிஞ்சிதான் ஆவேசமாகக் கூச்சலிட்டாள்.
“மகளே என்றழைத்த ராஜகாந்தி! எனது இசையின் பெயரால் உனது விடுதலையை யாசிக்கிறேன்! ஆனால் இந்தப் புதுக்கோட்டை ராஜ தருமத்துக்குக் களங்கம் வராமல் நடந்து கொள்!”
“மகளே! நீ சொன்ன ராஜகாந்தி ராகமாகவே நடந்து கொள்வேன். ஆனால் அது எப்படி இருக்கும் என்று நீ பாடி நான் கேட்க வேண்டும்,
“அடுத்த மூன்றாம் நாள் திருமழபாடிக் கோயிலில் கச்சேரி! அங்கே பாடுவேன். வந்து கேள். ஆனால் இங்கு மயங்கியதுபோல் அங்கு மயங்கி அகப்பட்டுக் கொள்ளப் போகிறாய்? எல்லாருக்குமே தொண்டைமான் இதயம் இருக்க முடியாது.
“வருவேன் மகளே! அங்கே நீ குற்றாலக் குறிஞ்சி ராகம் பாடக்கூடாது.
“பாடித்தான் ஆகவேண்டும். எனக்குப் பேசும் கச்சேரி கட்டணத்தைவிட, அந்த ஒரு ராகம் மட்டும் தனி யாக நூறு சக்கரம் (ரூபாய்) சன்மானம் பெறுகிறது. பாடாமலிருக்க முடியுமா? ஆனால் நான் ராஜகாந்தி பாடியதும் சமிக்ஞை செய்வேன். நீ போய்விடு! அரசர் தொண்டைமான் அனுமதியுடன் நீ விடை பெறலாம்.”
அரசர் ராஜரகுநாத தொண்டைமான் அனுமதியளிக்க, ராஜகாந்தி அனைவரையும் பணிந்து விடைபெறுகிறான். அப்போது சொன்னான்: “மகளே, குறிஞ்சி! நான் எங்கிருந்தாலும் உன் பக்கத்தில் இருப்பதாக எண்ணிக் கொள். உனது கற்பை எவனாவது முட்டிப் பார்க்க எண்ணிப் பார்ப்பானேயானால், அவனது முழங்கால்களை வெட்டி எறிவேன். இது நீ பாடும் குற்றாலக் குறிஞ்சி ராகத்தின் மீது சத்தியம்!”
ராஜகாந்தி அனைவரையும் வணங்கி விடுதலை பெற்று வெளியேறினான்.
“அரசே! நாங்களும் புறப்படலாம் அல்லவா?”
“என் வேண்டுதலுக்கிணங்கிப் பாட வந்த உனக்கு சன்மானம் வழங்க வேண்டாமா?”
“நான் உங்கள் வேண்டுதலுக்கு வரவில்லை; ராஜ காந்தியின் விடுதலைக்கு வந்தேன். அதுவே எனக்குக் கனகாபிஷேகம் செய்ததுபோல!”
“குறிஞ்சி இப்படிப் பேசலாம்; ஆனால் என் தங்கை இப்படிப் பேசலாமா?”
விதிர்த்தும் வியர்த்தும் போனாள் வேல்விழியாள் குறிஞ்சி.
“அண்ணனின் அபிப்பிராயம்?”
“நாளை உனக்குக் கனகாபிஷேகம்!” “தேவையா?”
“தேவை!”
“ஏற்கிறேன்; அரசர் என்ற முறையிலல்ல; அண்ணன் என்ற முறையில்…”
குறிஞ்சியும் ஞானசுந்தரமும் விடைபெற்றுக்கொண்டு தங்களுக்குகென ஒதுக்கப்பட்ட தனியறை நாடிச் சென்றனர்.
இதில் அதிகமாகப் பூரித்துப் போனவன் ஞானசுந்தரம்.
இரவுக்கன்னி நிலவைத் தாலாட்டிக் கொண்டிருக்கும் இனிய காட்சியை காட்சியை மேன்மாடத்து நிலா முற்றத்தில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள் குறிஞ்சி.
அருகே அமர்ந்திருந்த ஞானசுந்தரமோ, குறிஞ்சியாகிய தேயாத நிலவை ரசித்துக் கொண்டிருக்கிறான்.
“குறிஞ்சி!”
“ம்ம்!”
“இன்று உனது பாட்டு அபாரம்!”
“நீங்கள் கொடுத்த பிச்சை!”
“ஆனால் எனது பிட்சாப்பாத்திரம்தான் இன்னமும் காலியாகவே இருக்கிறது.”
ரதிநிவேதம் ராகாங்கமாகச் சிரிக்கிறது.
“ராகாங்க சிரிப்பு வேண்டாம் குறிஞ்சி! பாஷாங்கச் சிரிப்பைச் சிரிக்கலாமே!””
அவள் பைரவி ராகமாகப் பார்க்கிறாள்.
“இந்தப் பார்வையின் அர்த்தம்?”
“பைரவி!”
“உண்மையைச் சொன்னாய்! சம்பூரணமான நட பைரவி ராகத்தைப் பாடுபவர்களில்லை. ஏன்? நடபைரவி, ஒரு சுரத்தை பாஷாங்கமாகக் கொண்டு விட்டதால் அது பைரவியாகி, நாடு முழுவதும் புகழ் பெற்றதுமல்லலாமல், ராக நயத்திலும் புகழ் பெற்று விட்டது! வக்கிரமற்ற சம்பூரண ராகத்தில் ஒரே சுரப்பாஷாங்கம் கண்ட ஒரே ராக மல்லவா? அதுவும் அவரோகணத்தில் பாஷாங்கம். அவரோகணம் என்பது பெண்! ஆரோகணம் என்பது ஆண்! நீ எப்போது பாஷாங்கமாவது? நான் எப்போது ஆரோகணமாவது?”
ஆ பாலுணர்வை இசை ஞானமுடன் எவ்வளவு பக்குவமாகச் சொல்லி விட்டான் ஞானசுந்தரம்! குறிஞ்சி குதூகலித்துப் போனாள். “ஞானி! நீங்கள் ஞானிதான்!”
“இப்படியே என்னைப் புகழ்ந்து சாகடிக்க முடிவு செய்துவிட்டாயா? நீ பாஷாங்கமாகாவிட்டால், நான் பாஷாணமாவேன்!”
“ஞானீ!” பதறிப் போனாள் குறிஞ்சி.
“உன் பாட்டைக் கேட்டுக் கொள்ளைக்காரன் மயங்குகிற போது, உன்னைக் கொள்முதல் செய்து கொண்டவன் எத்தனை நாள்கள் மயங்கிச் சாவது?”
“ஞானி! என்று குருநாதர் வீட்டை விட்டு வெளியே வந்தோமோ அன்று முதல் தொடங்கிய நாடகம் இது! அன்று முதல் எதைச் சொன்னேனோ அதையே இன்றும் சொல்லுகிறேன். நான் புலைச்சி; தாழ்ந்த குலத்தவள். நீங்கள் பிராமணர்; மேலும் நீங்கள் எனது குருநாதரைப் போல்!”
“அதனால்தான் உனது காதலைக் காணிக்கையாகக் கேட்கிறேன்.”
“தருவேன். புலச்சியை மணந்த புண்சொல் உங்களுக்குத் தேவையா? ஞானி! உங்களுக்கிருக்கும் ஆசை எனக்கில்லையா? நமது கச்சேரியை ரசிப்பவர்களெல்லாம் ரதி-மன்மதன் போலிருக்கிறார்கள் என்று கூறுவது என் காதில் விழவில்லையா? ஐயோ ! நான் புலைச்சி! புலைச்சி! புலைச்சி! பச்சையாகச் சொன்னால் பறைச்சி; கொச்சை யாகச் சொன்னால் சண்டாளச்சி! இவை சமுதாயம் எங்களுக்குக் கொடுத்த இரக்கமற்ற விருதுகள்!”
ஞானசுந்தரம் ஞானமாகச் சொன்னான்: ‘ஆனால் இச்சையாகச் சொன்னால் நீயே அசல் பிராமணத்தி! எவருக்குக் கிடைக்கும் உனக்குக் கிடைத்த பாக்கியம்? ஆசார்யாள் பெருமான் ஆசியுடன் உபதேசம் பெற்ற நீ புலைச்சியல்ல; கலைச்சி! பறைச்சியல்ல; நிறைச்சி! சண்டாளச்சியல்ல; எனது பெண்டாளச்சி! என்னை குரு என்கிறாயே அதற்கும் விளக்கம் சொல்லுகிறேன். உனது மானசீகக் குரு ஸ்ரீ தீட்சிதர்; நான் ஞானசீகக் குரு! போதுமா? இன்னும் தேவையா?”
ஞானசுந்தரம் குரலில் அடாணா ராகம் எதிரொலித்தது.
“ஞானி! உங்கள் அடாணா ராகம் பிரமாதம்! அடாணா கோபத்துக்குரிய ராகம்தான்!”
“காரணம் அதுவும் வக்கிரம், பாஷாங்கம்; ஆனால் தோஷாங்கமல்ல!”
“நீ இல்லையேல் நான் எங்கே ஞானி?”
“இதையே நான் கேட்கிறேன்; நீ இல்லையேல் நான் எங்கே?”
குறிஞ்சியின் விழிகளில் நீர் முத்துக்கள்.
“நான் பாஷாங்கமாகத்தான் வேண்டுமா ஞானி?”
“ஸ்ரீ ஆசார்யாள் பெருமான் சொன்னதன் அர்த்தமே வேறு! குற்றாலக் குறிஞ்சி ராகம் போல வக்கிர பாஷாங் கமாகி விடாதே என்றுதான் சொன்னார். வக்கிர பாஷாங் கமோ, இருசுர பாஷங்கமோ நல்ல பெண்மணிக்கு உவமை கூற முடியாது. வக்கிர பாஷாங்கமென்பது போக்கிரித் தனமான பொண்டாட்டி! இருசுர பாஷாங்கமென் பது விபசாரியான பொண்டாட்டி! நீ அவரை பைரவி போல் வாழலாமா என்று கேட்டிருந்தால் ‘ததாஸ்து’ என்றிருப்பார். காரணம், நீ என்னைக் காதலிப்பது அந்த மகானுக்குத் தெரியாதே!”
ஓ… பைரவி, பைரவி, பைரவி…
ராகத்தில் சிறந்தது நாட்டைக் குறிஞ்சியல்ல; பைரவி!
“ஞானி! உங்கள் காதலை எப்போதோ ஏற்றுக் கொண்டு தானே நாம் இசை மணக்க வாழ்ந்து வருகிறோம்! ஒப்புக் கொள்கிறேன். சித்திரை மாதம் என்பது இளவேனில் மாதமாகச் சிந்தனாவாதிகள் புகழ்ந்தாலும் என்னைப் பொறுத்தமட்டில் நெருப்பு மாதம்! தைப்பாவையாகிய தமிழ்ப் பாவை மாதம் பிறக்கட்டும்! பிள்ளையார் சுழி பிறக்கும்; வாழ்வின் வழி திறக்கும்; வயிற்றில் விழி பிறக்கும்! அதுவரை பொறுக்க முடியாதா?”
அவன் பதில் சொல்லாமல் போய் படுத்துக் கொண்டான்.
அவனது விரகதாபம் அவளுக்கு மட்டும் இல்லையா? மீண்டும் நிலாமுற்றம் சென்று அந்தக் களங்கமான பாஷாங்கமான நிலவைக் கவனிக்கிறாள். மார்பகங்கள் விம்மிப் புடைக்கின்றன. குளித்தறியா கற்பின் குற்றாலத்தில் மெல்லிதான நீர்வீழ்ச்சி.
மண்குடம் இன்று பொன்குடமாகி அதில் பாலையும் தேனையும் பழச்சாற்றையும் நிரப்புவார்கள் என்பது எதிர் பார்த்ததா?
அருமை தந்தை குற்றாலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யின் மிருதங்கத்தின் சுநாதமான ஓசை எங்கோ ஒலிப்பது போலக் கேட்கிறது!
குறிஞ்சியின் கதைதான் என்ன?
இராகம்-6
குறிஞ்சி
வற்றாத அழகின் வார்ப்படத்தில் பிரமன், குற்றாலக் குறிஞ்சியைப் பொன்னாய் உருக்கி வார்த்துப் பூவுலகத் தேவதையாகப் படைத்து விட்டான் என்று குற்றால மக்கள் பேசி மகிழ்கிற அளவுக்குத் தகத்தகாயமாய்ப் பிறந்து, தரித்திரத்தில் வளர்ந்து, தசமியில் பூப்படைந்து, நாள்களை நகர்த்திக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று…
மிருதங்க சக்கரவர்த்தியான தந்தை மீனாட்சிசுந்தரம் பிள்ளை மீளாத் துயிலுக்கு ஆளாகிப் போனார்.
தெருவிலும் வீட்டினுள்ளும் கூட்டம் திணறிப் போய் நிற்கிறது.
கடலில் புயல் மையம் கொண்டு விட்டது போலக் கொந் தளித்துக் குமுறிப்போன குறிஞ்சி, தந்தையார் கடைசியாக வைத்துவிட்டுப் போன சொத்தான மிருதங்கத்தை எடுத்து மடியில் கிடத்தி, தாறுமாறாக வாசிக்கிறாள்.
தந்தையை மடியில் கிடத்தி அழுது பார்த்துப் பெற முடியாத உயிரை, இந்த மிருதங்கத்தின் மூலம் முயல் கிறாளோ என்று பார்ப்பவர் பரிதவிக்கின்றனர்; பரிதாபிக்கின்றனர்.
மிருதங்கத்தை அவள் வாசிப்பதாகத் தெரியவில்லை; ஏன்? நேசிப்பதாகவும் தெரியவில்லை. ஏதோ ஏசிப்பது போல ஏறுமாறாகச் சொற்கொட்டுக்களை முழக்குகிறாள்…
தாளத்தில் களங்க (கலப்பு)மான சங்கீரண ஜாதியில் வாசிக்கிறாள். வாசிக்க முடியுமா?
கண்களில் துன்பியல், குற்றால நீர்வீழ்ச்சி கண்டு மாணிக்க மார்பகங்களில் பாய்ந்து, இதயத்து எரிமலையைத் தணிக்க முடியாது தணிக்க முயல்கிறது…
என்ன செய்வாள்? இழப்பினை எவ்வாறு பெறுவாள்? எதிர்காலத்தை எங்ஙனம் நிர்ணயிப்பாள்?
மிருதங்கம் சொல்லி வைத்ததும், மிகுந்த நேரத்தில் அவரளவுக்குத் தெரிந்த சங்கீதப் பூக்களைச் சரங்கோத்து அவளது கூந்தலில் செருகி அழகு பார்த்ததும்தானே அவர் வைத்துவிட்டுப் போன சொத்தும், சுகமும்.
குறிஞ்சி என்ற பெயரை மட்டும் தெரிந்துதான் வைத் தாரோ? தெரியாமல்தான் வைத்தாரோ?
அவர் காதலித்ததும் இப்படித்தான்.
குற்றாலத்துச் சேரியில் புவனா என்கிற புலைச்சியையும் தெரிந்துதான் காதலித்தாரோ? தெரியாமல்தான் காதலித்தாரோ?
காதலுக்கு இனமில்லை என்பது காப்பியத்தோடு நிற்க வேண்டிய காண்டம்; ஆனால் சமூகத்தில் அது ஒரு கண்டம்.
இனத்தில் பெண்களிருந்தும் இதயத்தில் இடம் பிடித்து விட்டவளல்லவா புலைச்சி புவனா? இதனால் அவர் எத்தனை புரட்சிகளைச் சந்திக்க நேர்ந்தது? இந்த மானுட சமுதாயத்தை அவர் ‘தூ’ என்று காறி உமிழ்ந்தார்!
அவர் சொன்ன பதில்:
“என்னடா, ஜாதி? பெரிய ஜாதி? ஆதிதாளம் போன்று ஆதிக்குடி மக்களைவிட ஒரு ஜாதியா? ஒரு ஜாதியா? ஆதி என்ற சொல்லை திருவள்ளுவன் முதல் குறளில் ஏன் வைத்தான்?”
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறப்பது குறிஞ்சி மலர் என்பதால் குறிஞ்சி என்று பெயர் வைத்தாரோ?
ஒருவேளை, இசகுபிசகான ராகம் குறிஞ்சி என்பதால் இவ்வாறு சூட்டினாரோ? சங்கராபரணம் என்கிற சக்கர வர்த்தி ராகத்தில் பிறந்தாலும் குறிஞ்சி இசகுபிசகான ராகம்தானே?
இசையிலக்கணப்படி இதனை நிஷாதாந்தி என்றும் சொல்ல முடியாது; தைவதாந்தி என்றும் வாதிக்க முடியாது, வர்ஜவக்கிரமென்றும் சோதிக்க முடியாது. இது ஒரு சொப்பனராகம்! மேலேயும் செல்ல முடியாது; கீழே இறங்கவும் தயக்கம் மனித சமுதாயத்தில் சில ஜாதிகளைப் போல…
சித்தரஞ்சனி ராகம் ஒரு நிஷாதாந்தி சித்திரம்! இந்தப் பித்த ரஞ்சனி போன்ற குறிஞ்சி ராகம் அழகு லட்சணத்தில் சேர்த்தியா? அவலட்சணத்தில் சேர்த்தியா? தாழ்ந்த ஜாதி யில் சேர்த்தியா? உயர்ந்த ஜாதியில் சேர்த்தியா? கலப்பு ஜாதியில் சேர்த்தியா? களங்க ஜாதியில் சேர்த்தியா?
ஓ…
புரிந்தே பெயர் வைத்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பூதவுடல் சாய்ந்து கிடக்கிறது. மனைவியை இழந்தது மட்டுமல்லாது இப்போது மகளையும் தவிக்க வைத்து மறைந்து போனாரோ?
குறிஞ்சி வாசிக்கும் மிருதங்க ஒலி அந்த வீதியையே நடுக் குறச் செய்கிறது. அவள் உடைந்து போக வாசிக்கிறாளோ? இல்லை, அது உடைந்து போக வாசிக்கிறாளோ?
ஆ! அந்த மிருதங்கம்தான் எத்தனை மகாவித்துவான் களுக்கு வாசித்து மகிமை பெற்றது?
எவ்வளவு நேரம்தான் இந்தக் காட்சியை ஊராரும் உறவினரும் பொறுத்துக் கொள்வர்? யார் சொல்லிக் கேட்கிறாள்? எவர் சொல்லி நிறுத்துகிறாள்? அவளது விரல்கள் ஊழிநடம் புரிகின்றன.
ஒருவர் துணிந்து சத்தமிடுகிறார்:
“பிணத்தைக் குளிப்பாட்டுங்கப்பா! நேரமாவலே?”
பிணத்தை… பின் என்ன செய்ய முடியும்?
நோய்வாய்ப்பட்ட நைந்த உடலாயிற்றே! நேரம் கடத்தலாமா?
படுத்த படுக்கையாக இருந்தபோது அவர் எதிர்பார்த் திருந்த ஒரே உருவம் அருமை நண்பர் விருபாட்ச கவிராயர். திருவாரூருக்கு எத்தனையோ முறை எத்தனையோ பெயர் களிடம் சொல்லியனுப்பியாகி விட்டது.
பரிசுத்த இதயங்கள் இறப்பில்தான் சந்திக்கும் என்பது போல அன்று பார்த்து வருகை தந்தார் விருபாட்ச கவிராயர்.
அருமை நண்பன் இறந்து விட்டானா?
வீதியில் வருகிறபோது மிருதங்க ஓசை கேட்டதே! அவன் வாசிக்கிறான்; அதனைக் கேட்டு மக்கள் ரசித்தவாறு கூடியிருக்கிறார்கள் என்றல்லவா நினைத்தேன்!
“ஓ… மீனாட்சி… மீனாட்சி…” என்று கதறியவாறு ஓடிச்சென்று கவனிக்கிறார்.
தலை தலையாக அடித்துக் கொண்டு தவித்தும் துடித்தும் போனார் தமிழ்ப் பெருந்தகை விருபாட்ச கவிராயர்.
யார் மிருதங்கம் வாசிப்பது. இந்த நேரத்தில்? விளக்கம் கேட்டு வியக்கிறார்.
ஓ…குறிஞ்சி, குறிஞ்சி, என் மகளே!
விக்கி விக்கி விசும்புகிறார்.
பிள்ளைவாளின் சீடன் சொன்னான்:
“கவிராயரே! உங்களைத்தான் அவர் நிமிஷத்துக்கு நிமிஷம் எதிர்பார்த்தார். இறக்கும்போது அவர் சொன்னது. ‘குறிஞ்சியைக் கவிராயரிடம் ஒப்படைத்து விடுங்கள். அவளை ஒரு சங்கீத கலாபூஷணியாக்கி என் ஆத்மாவைக் குளிரச் செய்யச் சொல்லுங்கள்’ என்பதுதான்!”
கவிராயர் கண்களைத் துடைத்துக் கொண்டு அறை யினுள் பிரவேசிக்கிறார்.
மிருதங்கம் சாகவில்லை; இதோ உயிருடனிருக்கிறது என்பது போல விரல்களில் கதியின் ஜதிமழை ! கண்களில் விதியின் சதிமழை!
மெல்ல அவளருகே சென்று, கவலை தேங்கிய நடுங்கும் கரத்தால் தோளைப் பற்றி அழுத்த…
‘தகதிமிதா’ என மிருதங்கம் வாய்மூட…
அமைதியோ, அமைதி.
தக-தகுதியான, திமி- (அறிவு) சமுத்திரம், தா-தருக வென நின்ற அமைதியோ?
அண்ணாந்து கவனித்த குறிஞ்சி, “பெரியப்பா!” என்ற அலறலுடன் துடித்து எழுந்து அவரைச் சேர்த்துக் கட்டி கொண்டு தோளில் தலைபுதைத்து உலகமே இருண்டு விட்டதுபோல உரக்கக் கதறியழுகிறாள்.
கவிராயர், அவளது கண்ணீரைத் துடைத்துத் தேற்றுகிறார்.
‘உறங்குவதுபோலும் சாக்காடு’ என்று தமிழில் மட்டும் தேற்றவில்லை; ‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’ என்று சமஸ்கிருதத்திலும் தேற்றுகிறார். ஜனனம் என்பது பூபாள ராகமானதால், மரணம் என்பது முகாரி ராகம் என்று இசையிலும் தேற்றுகிறார்…
விருபாட்ச கவிராயர், நண்பர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு ஈமக்கிரியைகளை முடித்துவிட்டு. குறிஞ்சி யுடன் திருவாரூர் நோக்கிப் பயணமானார்.
திருவாரூரில் ஒரு பள்ளியாசிரியராக இருந்தார் விருபாட்ச கவிராயர்.
அப்போதெல்லாம் கல்வியைக் கறும்பலகையாக்குவது கிடையாது, நெஞ்சங்களாக்குவர். வினாத்தாள்களின் மூலம் பணத்துக்குக் கனா காண்பதில்லை; குணத்தாள் களில் (கால்களில்) பணத்தைக் கொட்டிய காலம். வகுப்பின் முதல் பிரிவுப் பாடமே வாழ்வின் முதல் தேவை யான பண்பாடு. பிறகுதான் எண்பாடு; எழுத்துப்பாடு! எண்ணும் எழுத்தும் இரு கண்களானால், பண்பாடு ஒன்றே நெற்றிக்குள் மறைந்திருக்கும் கண்பாடு!
தமிழ் அந்த வீட்டின் கட்டில்; அதில் குறிஞ்சி நன்றாகவே சயனிக்க முடிந்தது. ஆனால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொல்லிச் சென்ற இசைத் தொட்டிலில் அவளைத் தாலாட்ட வேண்டுமே!
கவிராயருக்கு அது ஒன்றும் எட்டாக் கனியாகத் தெரியவில்லை.
திருவாரூரில் பிறந்து, அந்த மண்ணுக்கே இசை மகிமை தந்த மும்மூர்த்திகள்தாமே முத்துசாமி தீட்சிதரும், தியாகப் பிரும்மமும், சியாமா சாஸ்திரிகளும்?
தியாகப்பிரும்மம் திருவையாறு நோக்கிச் சென்று விட்டார். சியாமா சாஸ்திரிகளோ தஞ்சாவூர் கோயில் பணியில் தமது காலத்தை இறைவழிபாட்டில் கழித்துக் கொண்டிருந்தார். முத்துசாமி தீட்சிதரும் எட்டையபுரத்துச் சமஸ்தான வித்துவானாகச் சென்று, அங்குப் பிடிக்காமல், திருவாரூர் வாழ்வே போதும் என்று திரும்பி வந்து விட்டவர்.
விருபாட்ச கவிராயருக்கு மிக்கவும் வேண்டப்பட்டவர் முத்துசாமி தீட்சிதர்.
ஆவணி அவிட்ட சுபதினத்தில் குறிஞ்சியை அழைத் துக் கொண்டு புறப்பட்டார் கவிராயர்.
வழிநெடுகப் பல்வேறுபட்ட சிந்தனைகள்.
குறிஞ்சியோ புலைச்சிக்குப் பிறந்தவள்.
பிரம்மோபதேசியான தீட்சிதரிடம் மாணவியாக்குவது தரும நியாயத்துக்கு அப்பாற்பட்டதல்லவா? பின்?
இந்த பாஷாங்க சுரத்தை ஒரு ராகாங்கத்துடன் சேர்ப்ப தாவது? சங்கீதம் பாஷாங்கமாகலாம்; ஜனங்கள் பாஷாங் கமாகலாம்; ஏன்? சக்கரவர்த்தியும் பாஷாங்கமாகலாம்! சாஸ்திரம் பாஷாங்கமாகலாமா? பின்?
அப்படிப் பார்த்தால் சங்கீதமும் ஒரு சாஸ்திரம்தானே? இந்தச் சங்கீதத்தையே அழுகை ராகமான முகாரியில் ‘சங்கீத சாஸ்திரக்ஞானமு’ என்று ஐயர்வாள் பாடலில்லையா? சங்கீதம் தோஷமற்றது! அதற்குப் பாவம் பைரவியாகவும், புண்ணியம் நடபைரவியாகவும் இல்லையா? பின்?
திருவாரூர் தியாகேசப் பெருமான் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, சுந்தரமூர்த்தி நாயனார் நடந்த சுந்தரப் பூமியில் குறிஞ்சியை அழைத்துக் கொண்டு சுதந்திரமாக தீட்சிதர் இல்லத்துள் நுழைகிறார் கவிராயர்.
முத்துசாமி தீட்சிதரும், பூணூல் புனித காரியத்தை முடித்துக் கொண்டு, சீடன் ஞானசுந்தரம் தம்பூரை மீட்ட… குருகுக ஞானத்தைத் திருத்தணிகை முருகன்பால் பெற்ற அந்த ‘குருகுக’ முத்திரையுடன் கூடிய ஸ்ரீ நாதாதி குருகு ஹோ ஜயதி’ என்கிற மாயாமாளவ கௌளை ராகப் பாடலைப் பாடத் தொடங்குகிறார்.
எதிரே…
சீடகோடிகளான, அருமை சகோதரர்கள் சின்னசாமி தீட்சிதர், பாலசாமி தீட்சிதர் ஒருபுறம்…
மறுபுறம், தமிழ்ப்புலவர் திருக்கடையூர் பாரதி, வள்ளலார் கோயில் அம்மணி, நாட்டிய கலாமணியான திரிவாரூர் கமலம், ஆவுடையார். ஆவுடையார் கோயில் வீணை வேங்கட ராமய்யர், தேவூர் சுப்பிரமணியஐயர், கூரைநாடு ராமசாமி, திருவழுந்தூர் பில்வவனம், திருவாரூர் நட்டுவனார் ஐயாசாமி முதலானோர்…
ஆனால் பிரதம சீடர்களான தஞ்சை (சொந்த ஊர் தஞ்சையல்ல) சகோதரர்களான பொன்னையாபிள்ளை, சின்னையாபிள்ளை, சிவானந்தம்பிள்ளை, வடிவேலு பிள்ளை ஆகிய நால்வரும் முக்கியமான விசேஷ நாள்களில் திருவாரூர் வந்து தங்கள் குருவைச் சந்தித்துச் சேவித்துச் செல்வார்கள். அன்றைக்கு ஆவணி அவிட்டமாதலால் அவர்களும் வந்து சிறப்பு விருந்தினர்களைப் போலத் தனிமையில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரும் அந் நாளைய சமஸ்தானத்து மகாவித்துவான்கள் – நட்டுவனார் களாயிற்றே!
சங்கீதத்தின் அரிச்சுவடி ராகமல்லவா மாயாமாளவ கௌளை?
வாசற்படியில் நின்றிருந்த கவிராயரும் குறிஞ்சியும் தங்களை மறந்து ரசித்துப் பிரமித்துப் போகிறார்கள்.
ஓ… இது ஒரு கனமான சங்கீதம்…
பாடலை முடித்துக் கண் திறந்து கவனித்த தீட்சிதர் பதறிப் போனார். *கவிராயரே! இதுவரை நின்று கொண்டா இருந்தீர்கள்?”
விருபாட்ச கவிராயரும் சிரித்துக் கொண்டே, “நானா நின்றேன்? எனது ஆத்மா நின்றது?” என்று கூறியவண்ணம் அருகில் சென்றமர்ந்தார். குறிஞ்சி, கொஞ்சமும் தாமதி யாமல், தீட்சிதர் திருவடிகளில் விழுந்து வணங்கினாள். வாழ்த்துக் கூறிய தீட்சிதர். “எழுந்திரு மகளே !” என்கிறார். மகளே.
மங்கல அழைப்பு…
“யார் கவிராயரே இவள்?”
யார்? ஏ, வள்ளுவப் பெருந்தகையே! நன்மை பயக்கு மானால், பொய்மை வாய்மை தரும் என்று நீ சொல்லி இருக்கிறாய்! இதோ, நான் வாய்மை பொருட்டுப் பொய் சொல்லப் போகிறேன்.
“என் நண்பர் ஒருவருடைய பெண். வீட்டுக்கு வேலைக் காரி தேவைன்னு பெரிய தீட்சிதரம்மா சொல்லி இருந்தார் கள். ஊர் குத்தாலம், அனாதைப் பெண், அதனால் அழைத்துக் கொண்டு வந்தேன்!”
“ஓகோ!”
முத்துசாமி தீட்சிதர் தமது தாயார் சுப்புலட்சுமி யம்மாளை நோக்குகிறார். சுகமான மௌனத்தின் சுமங்கலி அவர்கள்.
ஆனால், கன்னங்கரேலென்றிருந்த – சற்று வாய்த்துடுக்கு நிறைந்த முதல் மனைவியோ, “வேலைக்காரியாக வந்த வளை மகளேன்னு அழைக்கறதாவது? என் மகள் அன்ன பூரணி காதுலே இது கேட்டிருக்கணும்?” என்று பொறிந்து தள்ளினாள்.
திடுக்கிட்டுப் போனவர் விருபாட்ச கவிராயர் மட்டு மல்ல; குறிஞ்சியும்தான்.
விஞ்சையர் உலகைவிட்டு வழிதவறி இங்கு வந்துவிட்ட வளோ என்று குறிஞ்சியின் பேரழகு, பலர் கண்களைப் பளீரிட, அழகின் எதிர் அர்த்தம் கொண்ட முதல் மனைவி பொறாமையின்பால் பட்டுப் பொறிந்து தள்ளுகிறாள். என்பதனையுணர்ந்து, வயதில் மிக்கவும் சிறியவளான செக்கச் செவேலென்று அழகுத் தோற்றம் கொண்டவளான இளைய மனையாள் குறுக்கிட்டாள்:
“அக்கா! நீங்க அன்னபூரணியைப் பெத்தவங்க! நான் எந்தப் பூரணியையும் பெறாதவ ! அவரு வாயாலே மகளேன் னுட்டாரு! அதை நான் ஏத்துக்கறேன்!”
பெரிய மனைவியின் கண்கள் பெரிதாக விரிந்து சிவப்பாய் கனன்றன.
தீட்சிதர் இப்போது குறுக்கிட்டார், அவர் பரமேஸ்வரி மீது பவித்திர பக்தி பூண்டவர்.
“எதுக்கு இரண்டுபேரும் அடிச்சிக்கணும்! அன்னை பராசக்திக்கு முன்னே அனைத்துப் பெண்களும் மகள்கள் தானே? இந்த வீட்டுல ஒரு வேலைக்காரியைக் கூட நீ உருப்படியா வச்சு குப்பை கொட்டலை! இவளையாவது வச்சுண்டு குப்பை கொட்டனுமேன்னுதான் இளையவ ஏத்துகிட்டா! இவளைப் பார்த்தா அந்த ஈஸ்வரி பாலாம் பிகை மாதிரியே நேக்குத் தோணுது!” என்றார் தீட்சிதர்.
பெரிய மனைவி மோவாய்க்கட்டையைத் தோளில் இடித்தவாறு உள்ளே சென்று விட்டாள்.
தீட்சிதர் கேட்டார்: “பெயர் என்னம்மா?”
“குறிஞ்சி!” என்றாள் குறிஞ்சி.
அற்புதமான ஒரு ராகத்தின் பெயர் கொண்ட, அப்சரஸ். மாதிரியான ஒரு பெண், ஆவணி அவிட்டமும் அதுவுமாக வேலைக்காரியாக வந்து நின்றது ஆச்சரியத்தையே விளைவித்தது.
பாலாம்பிகைதான் இப்படி ஏதேனும் சோதிக்க அவதாரம் பூண்டு வந்திருக்கிறாளா?
கவிராயர் மனம் மட்டுமல்லாது, குறிஞ்சியின் இதயமும் பலவாறு அலைமோதியது.
விருபாட்ச கவிராயர் கேட்டார்:
“என்ன தீட்சிதர் யோசிக்கிறீர்கள்? உங்களுக்குள் இவளால் சர்ச்சை வருமானால் அழைத்துக் கொண்டு போய்விடுகிறேன்!”
திருத்தமான ஒரு சிரிப்புடன், தீர்க்கமாக தீட்சிதர் சொன்னார்: “நான் யோசிப்பது அதுவல்ல கவிராயரே! அந்த பாலாம்பிகையே எனக்குப் பணிபுரிய வந்திருக் கிறாளோ என்று யோசிக்கிறேன்! நெருஞ்சி முள் மீது நடப்பதுபோல் பாட வேண்டிய ராகம் குறிஞ்சி ராகம். இந்த ராகத்தை எனக்கு மட்டுமே பணிவிடை செய்ய அமர்த்திக் கொள்கிறேன்.”
தீட்சிதரின் மனம், குறிஞ்சி ராகத்து இசகுபிசகான ஆரோகண அவரோகணத்தை மெல்ல இசைத்துப் பார்த்துக் கொள்கிறது.
“சநி சரிகமபத… தபமகரிசநிச…”
ஆனால் கவிராயர் மனமோ தீண்டாமையையே அலசிப் பார்க்கிறது.
புருஷோத்தமரான தீட்சிதர் எங்கே? புலைச்சியின் ரத்தத்தில் உதித்தவளெங்கே?
ஓ… கேவலம் விலைமகளுக்குத் தீண்டாமை இல்லை; இந்தப் புலைமகளுக்கு மட்டும் தீண்டாமை என்ன வேண்டிக் கிடக்கிறது?
கவிராயர் கண்கள் திருவாரூர் கமலத்தைப் பரிசீலிக் கின்றன.
சே! இது மிருதங்கத்தின் ஜலதரங்கம்!
ஓ… தமிழே! நீ எந்த ஜாதி?
*ச்- இப்படிப் புள்ளிவைத்த ‘ச மேல்சட்சமம் அதாவது கச்சேரியில் குரலை மேலே உயர்த்தி உச்சரிக்கிற – ச். எனவேதான் புள்ளி. இது ஒருவித குறியீடு. கீழே புள்ளி வைத்த ‘நி’, ஆதாரமாக இருக்கிற ‘ச” கரத்தின் கீழ்ச்கரம் – கீழ்நிலை நிஷாதம். எனவே கீழே புள்ளி.
– தொடரும்…
– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
![]() |
கோவி. மணிசேகரன் (கே.சுப்பிரமணியன்( 2 மே 1927 - நவம்பர் 18, 2021) சிறுகதை, நாவல், கட்டுரை என பொது வாசிப்புக்குரிய நூற்றுக்கணக்கான படைப்புகளை எழுதியவர். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தனது 'குற்றாலக் குறிஞ்சி' நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றார். கோவி மணிசேகரன் கல்கி மற்றும் டாக்டர் மு.வ.வின் எழுத்துக்களால் ஈர்ப்படைந்தவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதியவர் பின்னர் நாவல்களை எழுதலானார். கோவி மணிசேகரன் 1954-ல் 'கலைமன்றம்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.…மேலும் படிக்க... |