குறை ஒன்றுமில்லை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 21, 2025
பார்வையிட்டோர்: 5,338 
 
 

பிஷர் என்னும் சூபி ஞானி மாணவராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது.

அப்போது அவர் ஒரு தீவில் இருந்தார். அங்கு அவர் மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு நபரைக் காண நேர்ந்தது. பரிதாபத்திற்குரிய அவர் ஒரு தொழுநோயாளி; பார்வையற்றவர்; கால்களும் முடம். அவருக்கு உதவியாக யாரும் இல்லை.

அவரைக் கண்டதும் பிஷரின் மனம் மிகுந்த வேதனையுற்றது. அவர் அந்த நபரிடம் சென்று, குனிந்திருந்த அவரது தலையை நிமிர்த்தி, அவருக்கு ஆறுதல் கூறும் விதமாகவும், மனிதாபிமானத்துடனும் சற்று நேரம் பேசினார்.

அந்த நபர் சொன்னார்: “யார் அது, எனக்கும் கடவுளுக்கும் நடுவே இடைஞ்சலாக இருப்பது? நான் கடவுளை எவ்வளவு நேசிக்கிறேன்! அவரும் என் மீது எவ்வளவு கருணையோடு இருக்கிறார்! அது தெரியாமல் யாரோ ஒருவர், ஏதோ உளறிக்கொண்டிருக்கிறாரே!”

பிஷருக்கு அது ஒரு பெரும் பாடமாக அமைந்தது. தன் வாழ்நாள் முழுக்க அவர் அதை மறக்கவே இல்லை.

மிகச் சிறிய, ஆனால் மிக ஆழமான கதை இது.

மனிதாபிமானம் என்று நினைத்து நாம் செய்கிற செயல், அதை ஏற்பவருக்கும் மனிதாபிமானமாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. அவருக்கு அது ஒருவேளை மனிதத்தன்மையற்ற செயலாகக் கூட ஆகிவிடலாம். நாம் இரக்கப்பட்டு செய்கிற உதவி, சம்பந்தப்பட்டவரின் சுய உணர்வைக் காயப்படுத்துவதாகக் கூட ஆகிவிடலாம். அதே போலத்தான், நன்மை – தீமை என நாம் கருதுகிற விஷயங்கள், சிலருக்கு மாறுபாடாக இருக்கும்.

பரிதாபத்திற்குரிய நபர் என பிஷரால் கருதப்பட்ட அந்த நபர், தனது நோய்மை மற்றும் குறையை நினைத்து எந்தக் கவலையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, அப்போதும் அவர் கடவுளை நேசிக்கிறார்; கடவுளிடம் நன்றி உணர்வோடு இருக்கிறார். ஆகவே, அவருக்கு மற்றவரிடமிருந்து ஆறுதலோ, மனிதாபிமானமுமோ தேவையாக இருக்கவில்லை. தனது துயரமான நிலையில் கூட, அவர் வருத்தப்படவில்லை. கடவுள் மீது குறை சொல்லவோ, வெறுப்பு கொள்ளவோ இல்லை. வாழ்வின் இன்ப துன்பங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கும், நிபந்தனையற்ற பக்திக்கும், ஆகச் சிறந்த உதாரணமாக அவர் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *