குறைகுடம் கூத்தாடும்
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 290
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோழப் பேரரசனாகிய இராசராசன், தஞ்சைப் பெருங்கோயில் கட்டுவதில் பேரூக்கம் காட்டி வந் தான். முன்னமே குறிப்பிட்ட நல் ஓரையுள், அதனை முடிக்கும்படி வேலையை விரைவுபடுத்த வேண்டு மென்று அவன் திருப்பணி மேலாட்களுக்குக் கட் டளை பிறப்பித்திருந்தான்.
வேலைக்கு எத்தகைய குந்தகமுமில்லாம லேயே அதனைப் பார்வையிட விரும்பிப் பேரரசன் யாதோர் ஆரவாரமுமின்றிப் பொது வழிப்போக் கன் போன்ற உடையுடன் ஒற்றை மாட்டு வண்டி யிலேறிக் கோயிற்பக்கம் வந்தான்.
யாரோ வெளியூரான் கோயிலுக்கு வந்திருப்ப தாக எண்ணி, வேலையாட்கள் தங்கள் வழக்கமான வேலையிலீடுபட்ட வண்ணமா யிருந்தனர்.
கோயிலின் ஒருபுறம், பெரிய உத்தரக் கல் லொன்றைச் சுவர்மேல் ஏற்றவேண்டி யிருந்தது. நூற்றுக் கணக்கானவர்கள் தோள் கொடுத்தும் அதை சுற்றிக் கட்டிய கயிறுகளை உருளையிட்டு இழுத்துங்கூடக், கல் மிகவும் பளுவாயிருந்ததனால் உயர்த்தமுடியாது சற்றுச் சோர்வடைந்தனர். அத் தொகுதியின் மேலாள், “சீ, சோற்றாண்டிகளா முழு மூச்சுடன் தூக்குகிறீர்களா என்ன?” என்று தொலைவில் நின்று கூவிக்கொண்டிருந்தான்.
பேரரசன் மேலாளை நோக்கி, “ஐய! தாங் களும் சென்று கைகொடுத்து ஊக்கப்படாதா?” என்றான்.
மேலாள் திடுக்கிட்டு அரசனை ஏற இறங்கப் பார்த்து, “என்ன ஐயா! உமக்கு, நான் மேலாள் என்பது தெரியவில்லையோ?” என்று இறுமாப்புடன் கேட்டான்.
அரசன், “தங்களை அறியாது கூறிவிட்டேன். ஐயனே! பொறுத்தருள்க,” என்று கூறிவிட்டுத் தானே வண்டியிலிருந்து இறங்கி வேலையாட்களு டன் தோள்கொடுத்து ஊக்கினான். பார்வைக்குப் பெருஞ்செல்வர்போல் தோன்றிய அவரது முயற்சி கண்டு அனைவரும் முழு முயற்சியிலீடுபட்டுக் கல் லைத் தூக்கிவிட்டனர்.
மறுநாள் மேலாளுக்கு அரசனிடமிருந்து வந்த ஆணைச் சீட்டில், “இனித் திருப்பணிக்கு ஆள் போதாதிருந்தால், அரசருக்குச் சொல்லியனுப் புக!” என்ற வாசகத்தைக் கண்ட மேலாளது உடல் எண்சாணும் ஒரு சாணாகக் குறுகிற்று. தன் இறுமாப்பின் சிறுமையையும் அரசனின் எளிமை யையும்எண்ணி, அவன் மனநொந்து அன்றுமுதல் திருப்பணியில், தானே நேரிடையாக ஊக்கங் காட்டி வேலையாட்களுக்கு எழுச்சி தந்தான்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.