குறைகளைவிட குணங்களைப் பார்ப்பது நல்லது..!





“குருவே என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“ஏன்? என்ன பிரச்னை?’ என்று கேட்டார் குரு.
“என்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன. மற்றவர்கள் என்னைவிட திறமைசாலிகளாக தெரிகிறார்கள்’ என்று சொன்ன இளைஞனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது.
அவனுக்கு ஒரு கதையைச் சொல்லத் துவங்கினார்.
“ஒரு வேட்டைக்காரன் நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அபூர்வ சக்தி இருந்தது. அதனால் தண்ணீர் மீது நடக்க இயலும். வேட்டையாடிய பறவைகள் ஆற்றின் மீதோ, குளத்தின் மீதோ விழுந்து விட்டால் அந்த நாய் தண்ணீரில் நடந்து சென்று எடுத்து வரும்.
அந்த நாயைக் குறித்து அவனுக்கு ரொம்ப பெருமை. நாயின் சக்தியை தன் நண்பனுக்குக் காட்ட வேண்டும் என்று விரும்பினான்.
காட்டுக்குள் ஒரு ஏரியில் வாத்துகள், நாரைகள் நிறைந்து இருந்தன. அவற்றைக் குறி பார்த்து சுட்டான். சில வாத்துக்கள் விழுந்தன. உடனே அவனது நாய் தண்ணீர்மீது நடந்து சென்று வாத்துகளை கவ்வி எடுத்து வந்தது.
இதைப் பார்த்து நண்பன் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் சில வாத்துகளை சுட்டான். மீண்டும் நாய் தண்ணீர்மீது நடந்து சென்று வாத்துகளை எடுத்து வந்தது. அப்போதும் நண்பன் எதுவும் சொல்லவில்லை.
இவ்வளவு விசேஷ சக்தியைக் கொண்ட நாயைப் பார்த்து ஆச்சர்யமடையாத நண்பனிடமே கேட்டுவிட்டான்.
“என்னுடைய நாயை கவனித்தாய்? ஏதாவது வித்தியாசமாக தெரிகிறதா’ என்று கேட்டான்.
அதற்கு நண்பன், “ஆமாம் உன் நாய் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது, அதற்கு நீந்தத் தெரியவில்லை” என்றான்.
இந்தக் கதையை குரு சொன்னதும், இருக்கும் திறமையைப் பார்க்காமல் இல்லாததை குறையாகச் சொல்வது தவறு என்று வந்தவனுக்குப் புரிந்தது. அப்போது குரு அவனுக்கு
சொன்ன Win மொழி:
குறைகளைவிட குணங்களைப் பார்ப்பது நல்லது.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)