குறுணிக்கல்





(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இளவாலையை விட்டு வெளியேறி இரண்டு வருடங்களுக்க மேலாகி விட்டது. இப்போது இருவரும் முதல் முறையாகச் சந்திக்கின்றர். எதிர்பாராத சந்திப்பு இருவருக்குமே பெருமகிழ்ச்சி.
வீதியோரத்தில் நின்ற பூவரசு மரத்தோடு சைக்கிளைச் சாத்திவிட்டு திருநாவுக்கரவுக்குப் பக்கத்தில் வந்தமர்கிறார் இரத்தினம்.
ஒரே மண்ணில் பிறந்து ஒன்றாகவே படித்து…
திருநாவுக்கரசு தான் உடுத்திருந்த சாறத்தின் கீழ்ப்பகுதியால் முகத்திலும், குரல்வளையிலும் வடிந்து கொண்டிருந்த வியர்வையைத் தேய்த்துத் துடைக்கின்றார்.
“என்னடா இப்பிடி மாறிப் போனாய்…” உதட்டில் விரலை வைத்துக் கேட்கின்றார் இரத்தினம்.
“புற அழகுதான்ரா மாறியிருக்கு… அக அழகு இன்னும் அப்பிடியே தான்ரா இருக்கு…” பதில் கூறிய திருநாவுக்கரசு வழகைபோல் சிரிக்கிறார்.
உன்ரை சிரிப்பு… அப்பிடியே இருக்கு…” இருவரும் சேர்ந்து சிரிக்கின்றனர்.
“உன்ரை பாடெல்லாம் எப்பிடி… இப்ப எங்கை இருக்கிறாய்… தொழில்துறை…” திருநாவுக்கரசு கேள்விகளை அடுக்குகின்றார்.
“எல்லாம் இளவாலையோடை சரி… இப்ப படுகிற பாடு… நாட்டிலையம் நிம்மதியில்லை… வீட்டிலையும் நிம்மதியில்லை… இப்பிடியும் ஒரு வாழ்க்கை…” இரத்தினம் மிகவும் வேதனையுடன் கூறுகின்றார்.
“நீ இப்ப எங்கை இருக்கிறாய்…”
“செம்மணி றோட்டிலை…”
“வீடு எப்பிடி வசதியானதே..”
“எங்களுக்குப் போதுமானது..” திருநாவுக்கரசு கூறுகின்றார்.
சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் செல்கின்ற பாதையில் கைதடிப் பாலத்தை அண்மித்துள்ள வளைவில் இடதுபக்கமாகவுள்ள சைக்கிள் கடை வாசலில் இருவரும் அமர்ந்திருக்கின்றனர். திருநாவுக்கரசின் சைக்கிள் பின்சில்லில் ஐந்து கம்பிகள் உடைந்து விட்டன. அதைப் பூட்டக் கொடுத்துவிட்டு சைக்கிள் உழக்கிய காலலுப்புத் தீரக் கால்கள் இரண்டையும் நீட்டி அமர்ந்திருந்தார் திருநாவுக்கரசு. இரத்தினம் தற்செயலாக அந்தப் பக்கம் வந்தார்.
“லொறியிலை ஏத்திற பாரங்களைச் சைக்கிள்ளை ஏத்தினால் கம்பியள் உடையுந்தானே…” சைக்கிளைப் பூட்டிக் கொண்டிருந்த சைக்கிள் கடைக்காரன் கூறுகிறான். கடைக்காரன் கூறியதைக் கேட்ட இரத்தினம் ஆச்சரியத்தோடு திருநாவுக்கரசைப் பார்க்கின்றார்.
“என்ன பாக்கிறாய்…”
“நீ இப்ப விறகு கட்டிறியே..”
“எப்பிடியோ வாழவேணுமே…”
“அதுக்காக…” இரத்தினம் வாக்கியத்தை முடிக்காமல் சுற்றிப் பார்க்கின்றார். வேலிக் கரையோடு மிகப் பெரியதொரு மரக்குற்றியைப் பார்த்த இரத்தினம் திரும்பி திருநாவுக்கரசைப் பார்க்கின்றார். ‘இந்தப் பெரிய குற்றியை எப்பிடியடா கொண்டு வந்தாய்’ இந்த உணர்வோடுதான் இரத்தினம் பார்க்கின்றார்.
“முருகா.. இந்தப் பாரத்தை இவ்வளவு தூரம் சைக்கிளிலை…” இரத்தினத்தின் உதடுகள் துடிக்க நுனி நாக்குநடுங்குகின்றது.
“மனப் பலமிருந்தால் எதையும் செய்யலாம்…”
“சும்மா தத்துவம் கதைக்கிறாய்..” இளவாலையில் திருநாவுக்கரசு ஓரளவு மதிப்புள்ளவர். பெரும் படிப்பு படிக்காவிட்டாலும் நிறையப் புத்தகங்கள் வாசித்தவர். முக்கியமான விடயங்களை எழுதி வைக்கின்ற பழக்கமும் இவரிடமுண்டு. சரளமாகத் தத்துவங்கள் கூறுவார்.
பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் சேர்ந்து கட்டிப் பிடிக்கக்கூடிய பருமனிலானதொரு மஞ்சவுண்ணா மரத்தின் அடிக்குற்றி. வேர்கள் ஒழுங்காகத் தறிக்கப்பட்டு வாளினால் அரியப் பட்டிருந்தது.
வைரவ கோயிலடியிலுள்ள மாவீரர் நினைவாலயத்திற்கருகில், சைக்கிள் ஒரு கிடங்கில் விழுந்து… அவலப்பட்டு… சைக்கிளை நிதானப்படுத்தி மீண்டபோது… பின் சில்லில் உள்ள கம்பிகள் சிக்குப்பட்டு… திருநாவுக்கரசு ஒருவாற சைக்கிளை நிறுத்தினார். பக்கத்திலுள்ள சர்பத் கடைக்காரன் மிகவும் வாஞ்சையோடு திருநாவுக்கரசுக்கு உதவி செய்து… சைக்கிள் கடை இருக்கும் இடம் பற்றிய ஆலோசனையும் வழங்கினான்.
“என்னடா இரத்தினம் நெத்தியிலை சந்தனப் பொட்டைக் காணயில்லை…”
“அதெல்லாம் இளவாலையோடை போட்டிது…”
“ஏனடா….”
“எங்கடை வாழ்க்கைச் சிறப்பிலை…ஒரு சந்தனப்பொட்டு…”
இரத்தினம் இளவாலையில் வாழ்ந்த காலத்தில், நெற்றியில் பொட்டு வைக்காமல் எங்குமே செல்லமாட்டர். பரந்த நெற்றியில் இருபத்தைந்து சதக் குற்றியளவிலான ஒரு சந்தனப்பொட்டு வைத்து அதன்மேல் குண்டு மணியளவில் குங்குமம் வைத்திருப்பார். வட்டமான அவரது முகத்துக்குச் சந்தனப் பொட்டு மிகவும் அழகாகவே இருக்கும்.
“உப்பிடியெல்லாம் மனதை விடக்குடாது இரத்தினம்…”
“இளவாலையிலை உந்த மாதிரிச் சீவிச்சுப் போட்டு… இஞ்சை வந்து… பரிசுகெட்ட சீவியம் சீவிக்க வேண்டிக்கிடக்கு…”
“பரிசு கிடைக்கிறதும்… பரிசு கெட்டப் போறதும்… எங்களாலை தான்…”
“நீ ஒவ்வொண்டுக்கும் ஒவ்வொரு வியாக்கியானம் சொல்லுவாய்…”
மேற்கு வானத்தில் கதிரவன் இறங்கி. பனைமரங்களின் நிழல்கள் நீண்டு போயிருக்கின்றன… நாலுமணியிருக்கும். இலேசான மழை இருள் ஜில்லிட்ட காற்று… திருநாவுக்கரசு தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்க்கின்றார்.
“இரவைக்கு இலேசான மழை இறங்கினாலும் இறங்கும்..”
இன்று அதிகாலையில் வீட்டிலிருந்தும் புறப்பட்ட திருநாவுக்கரசு பத்து மணியளவில் பளைக்கு வந்து, இந்தக் குற்றியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். மிருசுவிலில் சிறிது தங்கி, கொடிகாமத்தில் அரை இறாத்தல் பாணால் இரைப்பை வெறுமையை நீக்கிக் கொண்டு… அடுத்துக் கைதடிச் சந்தியில் இடது பக்கமாகவுள்ள வேப்பமரத்தின் கீழ் சிறிது தங்கலாமென எண்ணியிருந்தார்… எதிர்பாராத விதமாக இந்த இடத்தில் தங்கவேண்டி ஏற்பட்டுவிட்டது.
“அண்ணை… புதுக்கம்பியள் போட்டால் காசு கூடவரும்… என்னட்டைக் கிடந்த கம்பியளில நல்ல கம்பியளாய் தெரிஞ்சு போட்டிருக்கிறன்… கொஞ்சநாளைக்குப் பாவிக்கலாம்… வசதி கிடைக்கயிக்கை மாத்தி விடுங்கோ” சைக்கிள் கம்பிகளைப் பூட் முடித்த சைக்கிள் கடைக்காரன் மனிதாபிமானத்துடன் கூறுகிறான்.
ஆறு கப்புக்கள் நாட்டப்பட்டு சில தடிகளோடும்… புல்லுக் கொத்தப்பட்ட நிலத்தில் இயங்கும் சைக்கிள்கடை! திருநாவுக்கரசு நன்றியுணர்வோடு அவனைப் பார்க்கின்றார்.
“நானும் உங்களைப் போலைதான் வயாவிளானிலிருந்து இடம்பெயர்ந்து வந்தனான்… வயித்தைக் கழுவ வேணுமே…”
“எங்கை பார்த்தாலும் அகதியள்… என்ன பாவம் செய்தமோ..”
“அப்படிச் சொல்லாதை இரத்தினம்… நாங்கள் கற்பனை பண்ணாத எத்தனை சம்பவங்களைப் பாக்கிறம்… இதுகளெல்லாம் எங்கடை காலத்திலை நடந்தது என்று சொல்லிறதிலை பெருமையிருக்கு…”
“அப்பிடி என்னடா பெருமையிருக்கு…”
“எடேய்…இரத்தினம்… முந்தி சிங்கள ஆமியள் தேடித்தேடி எங்களை அழிச்சவங்கள்… இப்ப சிங்கள ஆமியளின்ரை முகாம்களைத் தேடித்தேடி எங்கடை பொடியள்… அழிக்கிறாங்கள்… இது பெருமையில்லையா’
திருநாவுக்கரசு சைக்கிள் கடைக்காரனுக்குப் பத்து ரூபாவைக் கொடுத்துவிட்டு அவனது முகத்தைப் பார்க்கிறார்… சைக்கிள் கடைக்காரன் எதுவுமே பேசவில்லை.
மூவரும் சேர்ந்து திரும்பவும் மரக்குற்றியைச் சைக்கிளில் ஏற்றுகிறார்கள். வாளால் அரியப்பட்ட பகுதியை “கரியலில்” பக்குவமாக வைத்து, சமநிலை பார்த்து திருநாவுக்கரசு கட்டுகிறார்.
மரக்குற்றியை மார்போடு சரித்து வலது கையால் மரக்குற்றியை அணைத்துப் பிடித்து, இடது கையால் சைக்கிள் ‘ஹான்டிலை’ பிடித்தபடி உருட்ட ஆரம்பிக்கிறார் திருநாவுக்கரசு. இந்த பாலத்தடியில் வழமையாகவே இவர் சைக்கிளை உருட்டித்தான் செல்வார். மேடு பள்ளங்களுக்கு விலத்தினால்
வருகின்ற வாகனங்களில் முட்ட வேண்டி வரும். வாகனங்களில் விலத்தினால், கிடங்குகளில் இடறுப்பட வேண்டி வரும்… பெருங் கஷ்டங்களைத் தவிர்ப்பதற்காகச் சிறு கஷ்டங்களை ஏற்றுக் கொள்கிறார் திருநாவுக்கரசு.
திருநாவுக்கரசுவுக்குப் பக்கத்தில் சைக்கிளை உருட்டியபடி நடக்கிறார் இரத்தினம்.
வட கிழக்குத் திசையிலிருந்து தென்மேற்குத் திரையாக ‘ஹெலி’ ஒன்று செல்கிறது… இருவரும் தலையை நிமிர்த்தி ‘ஹெலி’யைப் பார்க்கின்றனர். “இண்டைக்கு ஹெலி ஓட்டம் கூடவாயிருக்கு… காலமை ஒரு ‘பொம்மரும்’ உந்தப் பக்கம் போனது… ஏதோ பிரச்சனை இருக்கு…” இரத்தினம் தனது ஊகிப்பைக் கூறுகின்றார். இரத்தினத்தின் மனம் இலோசாகச் சஞ்சலப்படுவதைத் திருநாவுக்கரசு உணர்ந்து கொண்டு தனக்குள் சிரிக்கிறார்.
திருநாவுக்கரசு மிகவும் நிதானமானவர். எந்த நிலையிலும் பதற்றப்பட்டுக் கொள்ளமாட்டார். இளவாலையிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பின் தேங்காய் வியாபாரம் செய்து, மரக்கறி வியாபாரம் செய்து கூலிவேலை செய்து… கடைசியாக விறகு கட்டத் தொடங்கினார். விறகு கட்டத் தொடங்கியபோது பலர் பலவாறு கூறினர்… அவர் எதையுமே சட்டை செய்யவில்லை! எதற்குமே சிரிப்பார்… பார்ப்பவர்களுக்கு அந்தச் சிரிப்பு வெகுளித்தனமாகவே தெரியும்… ஆனால் அந்தச் சிரிப்புக்குள் அவரது முடிவுகள் கருக்கட்டியிருக்கும்.
கண்டி றோட்டுடன் தனங்கிளப்பு றோட்டுச் சந்திக்கின்ற சந்திக்கு வந்து விட்டனர். இரத்தினத்தின் உதவியோடு சைக்கிளில் ஏறி ஓட ஆரம்பிக்கின்றார் திருநாவுக்கரசு.
இரத்தினம் அவருக்காக சைக்கிளில் மிக மெதுவாக ஓடிக்கொண்டிருக்கிறார்.
“இளவாலையிலை இருந்து வந்த சுவாமியார் ஒருவரை போனமாதம் சந்திச்சனான் எங்கடை வீடு வாசலெல்லாம் காடாய்க் கிடக்காம்…”இரத்தினம் கூறுகின்றார்.
இருவரும் இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இராணுவம் இளவாலையை ஆக்கிரமித்தபோது… மக்களோடு மக்களாய் இவர்களும் அங்கிருந்து புறப்பட்டு… சண்டிலிப்பாய் மகா வித்தியாலயத்தில் சில நாட்கள் தங்கி… அங்கிருந்து புறப்பட்டு வந்து மானிப்பாய் அந்தோனியார் கோவிலில் சில நாள் தங்கி…
அங்கிருந்து திருநாவுக்கரசு குடும்பம் செம்மணி வீதியிலுள்ள வீட்டுக்கு வந்தனர். இரத்தினம் குடும்பம் நுணாவிலில் ஒரு வீட்டை எடுத்துக் கொண்டனர்.
“தொழிலில்லாமல் எவளவு காலத்துக்குச் சீவிக்கிறது. ஏதாலும் தொழில் செய்யப்பார்…” திருநாவுக்கரசு கேட்கிறார்.
“என்ன வேலை செய்யிறது…”
“மனமிருந்தால் எந்த வேலையையும் செய்யலாம்.”
”உன்னைப் போல விறகு கட்டச் சொல்லுறியே…”
“கட்டினால் என்ன…”
“இளவாலையிலை இருக்கையுக்கை என்ன மாதிரி இருந்தனி.. இப்ப என்ன மாதிரி மாறிவிட்டாய்… உப்பிடி என்னையும் வரசொல்லுறியே…”
“எந்தத் தொழிலையும் மன நிறைவோடு செய்தால் அதிலை ஒரு சுகத்தைக் காணலாம்…”
இரத்தினம் எதுவுமே பேசவில்லை.
இளவாலையில் திருநாவுக்கரசு இராச வாழ்க்கை வாழாவிட்டாலும் அடக்கமாகவும், கௌரவமாகவும் வாழ்ந்தவரென்று நாக்குப் புரளாமல் கூறலாம்…
கட்டையாக வெட்டப்பட்டு, நடுவகிடிட்ட தலை, மூக்கடியில் விரிந்து கடைவாயடியில் கம்பிபோல் சுருங்கிய அளவான மீசை, அளவான உயரம், அதற்கேற்ற உடற்கட்டு, மடித்து விடாத நீளக்கை சேட், தடித்த பிறேமுடைய கண்ணாடி… றலி சைக்கிள்… சனசமூக நிலையம், ஆலயம், பாடசாலை அபிவிருத்திச் சபை… சகலத்திலும் அங்கத்துவம்… பதவிகள்…
இப்படி வாழ்ந்தவர் திருநாவுக்கரசு… இன்று…
”உனக்குச் சொன்னாலென்ன… எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு… வீட்டிலை பெத்த பிள்ளையள்மதிக்கிறதில்லை… கட்டின பெண்சாதி மதிக்கிறாளில்லை… காலையிலை வெளிக்கிட்டால் இருட்டுப்பட்டு எல்லோரும் படுத்தாப் பிறகுதான் வீடு… அலுப்பெண்டு வீட்டிலை நிண்டால் சண்டை… அரிசிக்குக் காசு… மீனுக்குக் காசு… உப்புக்குக் காசெண்டால் நான் எங்கை போறது… என்னத்தைச் செய்கிறது…” இரத்தினம் மனம் விட்டு கூறுகிறார்.
இரத்தினத்தின் குடும்ப ஒட்டுறவைப் பற்றி திருநாவுக்கரசு தீர்மானித்துக் கொள்கிறார்.
தென்மேற்குப பக்கமாகச் சென்ற ஹெலி இப்போது தென்மேற்குத் திசையிலிருந்து வட கிழக்குப் பக்கமாகச் சென்று கொண்டிருக்கின்றது.
இருவரும் கைடிதடிச் சந்தியையும் தாண்டி நாவற்குழிச் சந்தியையும் தாண்டி விட்டனர்.
நெல் சேமித்து வைக்கும் அந்தக் கட்டிடம் தலைவிரி கோலமாய் கிடக்கின்றது.
“இதிலை தான் ‘சுப்ப சொனிக்’ குண்டு போட்டது.. ஞாபமிருக்கே..” திருநாவுக்கரசு கேட்கிறார்.
“ஓமோம் நல்ல ஞாபகம்… சுப்ப சொனிக் இரண்டு குண்டுகள் போட்டு.. ஒண்டு இதிலை விழுந்தது… ஒண்டு வீட்டுக்குப் பக்கத்திலை விழுந்தது… வீட்டிலை இருந்ததுகள் செத்தது…’
‘பாக்கிற இடமெல்லாம் அகதியளும்… இடிஞ்ச கட்டிடங்களும், குண்டு விழுந்த இடங்களும் செத்துப்போன பொடியங்களின்ரை படங்களும்… இதுகளுக்கு மத்தியிலைதான் எங்கடை வாழ்க்கை நடந்து கொண்டிருக்கு…”
நாவற்குழிப் பாலத்திற்கு முதல் வருகின்ற சிறிய வளைவு… சில வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் இலங்கை இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர் அவர்கள் தங்கள் பாதுகாப்புக் கருதி வீதி ஓரத்தில் சரித்து நட்ட ஒன்றரை அடி நீளமான தண்டவாளத் துண்டுகள் இன்னமும் அப்படியே கிடக்கின்றன.
அந்த இடத்தையும் அவர்கள் தாண்டிவிட்டனர்… அடுத்து நாவற்குழிப் பாலம்…
நீர் நின்று வற்றிய நிலம் வரண்டு, கீலங் கீலமாக வெடித்துக் கிளம்பியதைப் போன்ற வீதி… அதிலும் இரண்டு வாகனங்கள் விலத்த முடியாத அளவிலான ஒடுங்கிய பாலம்… அந்த பாலத்தில் திரளி மீன்குஞ்சு பிடிப்பவர்களின் கூட்டம்…
இந்தப் பாரத்தோடு பாலத்தைக் கடக்க முடியாதென்பதைத் தீர்மானித்துக் கொண்ட திருநாவுக்கரசு… பிறேக் பிடித்து சைக்கிளை நிறுத்தி, இறங்க முயற்சிக்கிறார்… அவதானமாக இறங்கி விட்டார்… திடீரென்று முன் சில்லுக் கிளம்பி… சைக்கிள் மரக்குற்றியுடன் சரிகிறது….
இரத்தினம் மிகவும் பயந்து போய்விட்டார்.
“இண்டையோடை இந்த வேலையை விட்டிடு…” இரத்தினம் கோபத்துடன் கூறுகிறார்.
கட்டை அவிழ்த்து, மரக்குற்றியையும், சைக்கிளையம் வேறாக்கி சைக்கிளை நிமிர்த்துகின்றனர். இனி மரக்குற்றியைத் தூக்கிச் சைக்கிள் ‘கரியரில்’ வைக்க வேண்டும். இன்னும் ஒருவராவது தேவை… எத்தனையோ மனிதர்கள் அவர்களை விலத்திச் செல்கின்றனர்…. எல்லோரும் மனச்சாட்சியுள்ள மனிதர்களாக இருக்க வேண்டுமே!
சில நிமிடங்களின் பின்பு… ஆஸ்பத்திரியில் வேலை செய்கின்ற ஒருவர் அவர்களுக்கு உதவி செய்து, மீண்டும் மரக்குற்றி சைக்கிளில் ஏற்றப்படுகின்றது…
பாலத்தில் சைக்கிளை உருட்டி அதன் பின்பு சைக்கிளில் ஏறி ஓட ஆரம்பிக்கின்றார்.
“இரத்தினம்… நீ இப்ப சுருட்டுப் பத்திறதில்லையே” இரத்தினத்தார் அடிக்கடி சுருட்டுப் பத்துவதை திருநாவுக்கரசு அறிவார். நரம்பைப் பார்த்து புகையிலையைக் கிழித்து, வீடிப்பருமனில் சுருட்டைச் சுற்றி மிகவும் பக்குவமாய் பத்துவார் இரத்தினம். அவரது சேட்பையுள் புகையிலையும் தீப்பெட்டியும் எந்த நேரமும் இருக்கும்.
“அதெல்லாம் நிப்பாட்டியாச்சு…” இரத்தினத்தின் அவல வாழ்க்கையைப் பார்த்து திருநாவுக்கரசு மனத்துள் வேதனைப் பட்டுக் கொள்கிறார்.
“இவ்வளவு தூரம் வந்திட்டாய்… என்ரை வீட்டையும் பாத்திட்டுப் போவன்…”
“யாழ்ப்பாணம் வரவேற்கின்றது’ என்று எழுதப்பட்ட இந்த வளைவையும் தியாகி அன்னை பூபதியின் மிகப்பெரிய அந்தப் படத்தையும் தாண்டி… செம்மணி வீதியில் சைக்கிள் ஊர்ந்து கொண்டிருக்கின்றது.
திருநாவுக்கரசின் வீடு
வாசலில் மிகப் பெரியதொரு தீன் முருங்கை மரம். பத்தோ பதினைந்து பனை மட்டைகளால் செய்யப்பட்டதொரு படலை… இன்றோ நாளையோ விழப்போகின்ற பல்லைப் போல அது கிடக்கின்றது…
முருங்கை மரத்தோடு சைக்கிளைச் சாத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார் திருநாவுக்கரசு. இரத்தினம் திருநாவுக்கரசின் வீட்டை நோட்டம் விடுகிறார்.
ஒரு பெரிய கொட்டிலும் ஒரு சிறிய கொட்டிலும்… சிறிய கொட்டிலின் முகட்டால் புகை கிளம்பிக் கொண்டிருப்பதால் அது குசினி என்பதை இரத்தினம் தீர்மானித்துக் கொள்கிறார். பெரிய கொட்டில்… அண்மையில் மேயப்பட்டிருக்கின்றது. செத்தைக் கிடுகுகள் ஓரளவு உக்கிவிட்டன… முன்பக்கத்தில் சிறியதொரு விறாந்தை வடிவிலான அமைப்பு அதன் பக்கங்களை மறைப்பதற்கு கிழிந்த பல துவாரங்களுடையதொரு சாக்குக் கட்டப்பட்டிருக்கின்றது. மிகவும் துப்புரவாக இருக்கின்றது. குத்தியிருந்து கை விளக்குமாறினால் கூட்டுவார்களே அப்படிக் கூட்டப்பட்ட துப்புரவு.
“மங்களம்…” திருநாவுக்கரசு சைக்கிளைச் சாத்திவிட்டு குரல் கொடுக்கின்றார்.
மங்களம் – அவரது மனைவி.
“அம்மா… அப்புச்சி வந்திட்டார்…” குசினிக்குள்ளிருந்து ஒரு குரல்…
“அப்புச்சி வந்திட்டார்…” கொட்டிலின் பின் புறத்திலிருந்து இன்னொரு குரல்…
இரத்தினத்தின் மனத்தளத்தில் ஒரு சிந்தனைச் சுளியடித்து…
திருநாவுக்கரசும், இரத்தினமும் முற்றத்துக்கு வருகின்றனர் புள்ளை அப்புச்சிக்குத் தேத்தண்ணி போடு” குசினிக்குள்ளிலிருந்த தனது மகளுக்கு கூறியபடி வருகின்றாள் மங்களம். வந்தவள் இரத்தினத்தைக் காண்கிறாள்.
‘இரத்தினண்ணை வாருங்கோ…’ புள்ளை இரத்தினம் மாமாவும் வந்திருக்கிறார். அவருக்கும் தேத்தண்ணி போடு”
“அப்புச்சி…இண்டைக்கு நான் மீனும் சோறும் சாப்பிட்டனான்.. அப்புச்சி… நான் இண்டைக்கு மீனும் சோறும்…” திருநாவுக்கரசரின் இளையவள் திருநாவுக்கரசின் கால்களைக் கட்டிப் பிடித்தபடி கீச்சுக் குரலில் திரும்பக்கூறுகிறாள்… திருநாவுக்கரசும், மங்களமும் சிரிக்கின்றனர்….
இரத்தினத்தின் மனதில் அடித்த சுளி அவரது அதயப் பொக்கணையைக் கலக்குகின்றது…! அப்புச்சி நான் மீனும் சோறும்..” அந்தக் கீச்சுக்குரல் பெருநாதமாய் இரத்தினத்தின் செவிப்பறையை அதிர வைக்கிறது…”
திருநாவுக்கரசு வியர்வையால் நனைந்து போயிருந்த சேட்டைக் கழட்டிக் கொண்டு பெரிய கொட்டிலுக்குள் செல்கிறார்… அவருக்குப் பின்னால் சென்ற மங்களம்…
இடுப்பில் செருகியிருந்த சீலையின் முந்தானையை இழுத்தெடுத்து… துடைப்பம் போல் மடித்து… திருநாவுக்கரசின் முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைக்கின்றாள்… ஓலைக் குடிசைக்குள் ஒல்லித் தேங்காய் வாழ்க்கை… அதற்குள் இப்படியொரு பாசம்… உறவு…!
கிழிந்துபோன சாக்குத் துவாரத்தினூடாக… அந்தக் காட்சி..!..? இரத்தினத்தின் குடும்ப வாழ்க்கை சிரட்டைத் தணலாய் அவர் நெஞ்சைக் சுடுகின்றது!
இரத்தினத்தின் மனதில் அடித்த சுளி இதயப் பொக்கணையைக் கலக்கி இப்போது உடலிலுள்ள அத்தனை நரம்புகளையும் ஊடறுத்து வருகின்றது…!
திருநாவுக்கரசு வெளியே வருகின்றார்.
“என்ன இரத்தினம் கடுமையாக யோசினை…”
“ஒண்டுமில்லை”
”நீ என்ன யோசிக்கிறாயெண்டு எனக்குத் தெரியும் இரத்தினம்” திருநாவுக்கரசின் ஆத்மாவிலிருந்து வார்த்தைகள் ஜனனிக்கின்றன…
“மனிசன்ரை புற அழகு காலத்துக்குக் காலம் மாறும்… அதைப் பாதுகாக்கேலாது… ஆனால் அக அழகு… அதை மாறாமல் பாதுகாக்கலாம்…
நீயும் நானும் ஒரே பிரச்சனைக்குள்ளை தான் வாழ்றம்…
… எங்கை பாத்தாலம் அகதியள்…
எங்கை பாத்தாலும் குண்டு விழுந்து சிதறின கட்டிடங்கள்…
எதைப்பார்த்தாலும் குண்டு பட்ட காயங்கள்.
…வீதிக்குவீதி… மதிலுக்கு மதில்… செத்துப்போன புள்ளையளின்ரை படங்கள்…
…இதுக்குள்ளை தான் நாங்கள் வாழ்றம்..
…இதுகளுக்கூடாகத்தான் நாங்கள் வாழ வேண்டியிருக்கு… முடிஞ்சது முடிஞ்சதுதான்… அதுகளை நினைச்சு நினைச்சு ஆவலாதிப் பகிறதிலை அர்த்தமில்லை…
…குறுணிக்கல்லை கண்ணுக்குக் கிட்டப் புடிச்சுப் பார்த்தால் அது உலகத்தை மறைக்கும்… பயங்கரமாக இருக்கும் அதையே, கண்ணுக்கு எட்டப் புடிச்சுப் பார்த்தால் அது குறுணிக்கல்தான் எண்டது தெரியும்…
…நான் குறுணிக்கல்லை, குறுணிக்கல்லாகவே பாக்கிறன்.
நீ குறுணிக்கல்லை… பாறாங் கல்லாய்ப் பாக்கிறாய்…
…அவ்வளவுதான்! திருநாவுக்கரசின் பேச்சுக்கள் இரத்தினத்தின் மனக்கிணற்றுக்குள் எதிரொலிக்கின்றன.
– ஈழநாதம். 19.02.1995.
– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.