குரு பலன் வந்தது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 51 
 
 

“சுமதி, அந்த கோதையோட ஜாதக நோட்டு இருக்குதே, அதை கொஞ்சம் எடுத்துவை. நாளைக்கு கேரளா போயி ராமுண்ணி ஜோசியர் கிட்ட ‘குரு பலன் வந்துருச்சா’ன்னு பார்த்துட்டு வந்துரலாம்,” என்று சொன்னபடியே பைக்கை ஸ்டார்ட் செய்தார் ரிட்டையர்டு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையன்.

அவரின் ஒரே பெண் கோதை. அரிவைப் பருவத்தில் இருந்தாள். பி.இ. கணினி பொறியியல்( Software) முடித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் திருமணம் செய்து கொண்டு, பின்னர் வேறு ஏதாவது துறையில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தாள்.

தமிழில் பெண்களின் வயதுக்கேற்ப அவர்களைப் பல்வேறு பெயர்களால் அழைப்பது, தமிழின் தொன்மையை வெளிப்படுத்துகிறது. அந்தப் பருவப் பெயர்கள் : பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம்பெண்.

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு பிடிவாதம் அதிகம் என்பது அவருடைய தந்தைக்கும் தெரியும். இந்த ராசிப் பெண்கள் தங்கள் கருத்துகளிலும் கொள்கைகளிலும் மிகவும் உறுதியாய் இருப்பதால், அவர்களை மற்றவர்கள் எளிதில் மாற்றிவிட முடியாது. ஆதலால், இதைப் பற்றி அவர் மகளிடம் அதிகமாகப் பேசுவதில்லை.

இருந்தாலும், வயதிற்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்திருந்தால் உற்றார் உறவினர் ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். ஒரே பெண்ணை மணமுடித்து வைத்துவிட்டால் தான் தன்னுடைய சமூகக் கடமை முடிந்துவிடும் என அவர் கருதினார். ஆகவே, திருமண யோகம் வந்து விட்டதா என்று ஆலோசனை பெறுவதற்காக, குடும்ப ஜோசியர் ராமுண்ணியைப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்.

பொதுவாக, பெண்களுக்கு எப்போது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பார்கள்? குரு தசை வரும்போது, அல்லது குரு கோச்சாரத்தில் 7-வது வீட்டைப் பார்க்கும் காலத்தில், அல்லது சுக்கிரன் / 7-வது அதிபதி தசை வந்தால். இவ்வாறு நேரம் பொருந்தினால்தான் குடும்பத்தில் பேச்சு தொடங்கும். இதைத்தான் ‘குரு பலன் ஜாதகத்தில் வந்து விட்டது’ என்று இந்துக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது.

கோதை வாடிப்பட்டியில் பிறந்த, மாநிறம் கொண்ட, ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம் உள்ள பெண். கல்லூரிக் காலத்தில் சமூக சேவையில் ஆர்வம் இருந்ததால், என்.எஸ்.எஸ். போன்ற சமூகத் தொண்டு அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்தாள்.

தன் குடும்பத்திலிருந்து கல்வி தொடர்பான எந்த ஆலோசனையும் பெற முடியாததால், தோழிகளின் ஆலோசனையை நம்பி, “லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்” என்ற மூடநம்பிக்கையில், மதுரையில் உள்ள தியாகராஜர் கல்லூரியில் பி.இ. சாஃப்ட்வேர் படித்தாள்.

அதிக உலக அனுபவம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், தேடி பிடித்து படிக்கும் பழக்கம் கொண்டவள். இதன் காரணமாகவே, “கணினி மென்பொருள் பொறியாளர்” என்ற தொழில் மனிதனுக்கு பணத்தைத் தவிர வேறு எதையும் தராது என்பதை படிக்கும் காலத்திலேயே உணர்ந்திருந்தாள். அதனால் தான், அந்தத் துறையில் வேலைக்கு செல்ல அவருக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தது.

அவருடைய தந்தை காவல்துறை அதிகாரியாக இருந்து, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து பலதரப்பட்ட மக்களின் குணாதிசயங்களை அறிந்தவராக இருந்ததால், தன் செல்ல மகளை நிர்பந்தப்படுத்த விரும்பவில்லை.

தாயைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. “குடும்பமே கதி” என்று இருப்பவள். அவருக்கு நடப்பவை எல்லாம் நன்றாக நடந்தால் போதும்.

ஜோசியர் ராமுண்ணியின் ஜோதிட ஆராய்ச்சிப்படி, கோதைக்கு ‘குரு பலன்’ வந்துவிட்டது என்பது அடுத்த நான்கு நாட்களுக்குள் ஊருக்கே தெரிந்துவிட்டது.

***

மதுரை மேலமாசி வீதியில் கடலை எண்ணெய் மொத்த வியாபாரம் செய்யும் நாச்சிமுத்து செட்டியாரை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். மூன்று தலைமுறையாக இதே வியாபாரத்தை செய்து கொண்டிருப்பவர். தரத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பவர். விலை சற்று அதிகமாக இருந்தாலும், பொருள் கெட்டியாக இருக்கும். ஆதலால், சில்லறை வியாபாரிகள் அவரிடமே கொள்முதல் செய்ய விரும்புவார்கள்.

செல்வச் செழிப்பு மிக்கவர். வெங்கலக்கடைத் தெருவிலும் அவருக்கு ஒரு குடோன் இருந்தது. அழகான குடும்பம்.இரண்டு குழந்தைகள்.

மூத்தவள் ஊர்மிளா. கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக அமெரிக்காவின் Atlanta நகரில் வசித்து வருகிறார். இளையவன் கண்ணன். மீன்வளத் துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு, தற்போது உதவி பேராசிரியராக பணிபுரிகிறார்.

செட்டியாரைப் பற்றி பேசும்போது, “ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒரு ஆணும் பெற்றெடுத்த மகராஜன்!” என்று நண்பர்கள் கூறுவது வழக்கம். அது உண்மையும் கூட. கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், பொது நடத்தை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், இரு குழந்தைகளும் மிகவும் நல்லவர்கள் என்ற பெயர் பெற்றவர்கள். எனவே, அவர்களின் திருமண ஏற்பாடுகள் நடைபெறும் போது, அந்தக் குழந்தைகளை தங்கள் வீட்டில் மருமகனாகவும் மருமகளாகவும் அழைத்துக் கொள்ள போட்டி இருக்கும்.

அப்படித்தான் ஊர்மிளாவின் திருமணத்திலும் நடந்தது.

ஊர்மிளாவை கைப்பற்றிய மகாராஜன் ராமசுகந்தன் — இன்ஜினியரிங் டாக்டரேட் முடித்துவிட்டு, அமெரிக்காவில் உயர்நிலை நிர்வாகப் பொறுப்பில் பணிபுரிகிறார். ஊர்மிளாவும் அமெரிக்கா சென்று எம்.எஸ். முடித்தார். இருவரும் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கான அடையாளமாக, இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுள்ளனர் — காவியா மற்றும் கீர்த்தனா.

கடைசியாக ஊர்மிளா இந்தியா வந்தபோது, தன் தம்பிக்கு பெண் பார்ப்பது குறித்து குடும்பத்தினருடன் பேசிவிட்டு சென்றார். அதற்குள் கண்ணனுக்கும் திருமண வயதும், ஆசையும் வந்துவிட்டதால், “இப்போது பெண் பார்க்க ஆரம்பிக்கலாம்” என்று முடிவு செய்தார்கள்.

அதீதமான தெய்வ நம்பிக்கை உடையவர் செட்டியார். ஆகவே, ஜாதகப் பொருத்தம் மிகவும் அவசியமானதாக இருந்தது. தன் மகனுக்கு ‘குரு பலன்’ வந்துவிட்டது என்பதை ஜோசியர் மூலம் அறிந்தவுடன், பெண் பார்க்கத் தொடங்கினார்.

விளம்பரம் கொடுத்து பெண் தேடுவதில் அவருக்கு ஆர்வம் இல்லை. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலமாகவே பெண் தேடுவது தான் சரி என்று நம்பினார்.

இரு ஊர்களிலும், இந்த இரண்டு வீடுகளிலும், திருமண யோகம் குடிகொண்டது.

இவ்வாறு இரண்டு வீடுகளிலும் மனப்பொருத்தம் பார்க்கும் வேலை துரிதமாக நடைபெற்றது.

முடிவில், கண்ணனுக்கும் கோதைக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கப்பட்டது. ஒன்பது பொருத்தங்கள் சரியாக உள்ளன என்று ஜோதிடர்கள் தெரிவித்ததால், “ஒரு சிறு கூடலும் நானும்” என்ற வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சன்னதியில் சந்தித்து, இதைப் பற்றி மேலும் பேசி நல்ல முடிவை எட்டலாம் என்று தீர்மானித்தார்கள்.

அந்த நாளும் வந்தது.

இரு குடும்பங்களிலும், “பிள்ளைகள் ஒருவருடன் ஒருவர் சந்தித்து, பேசி, உணர்வுகளைப் பகிர்ந்து, இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே முடிவு எடுப்போம்” என்று ஒப்புக் கொண்டனர்.

கண்ணனும் கோதையும் அரைமணி நேரம் மதுரை தெப்பக்குளம் அருகில் அமர்ந்து, தங்களைப் பற்றிய விவரங்கள், தங்கள் ஆசைகள், எதிர்காலத் திட்டங்கள், பல்வேறு விஷயங்களில் தங்களுடைய கருத்துக்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொண்டனர். இறுதியில், “முடிவை வீட்டு பெரியவர்கள் சொல்லட்டும்” என்று அன்றைய நாளுக்கு பிரிந்துச் சென்றார்கள்.

இதனைத் தொடர்ந்து, இரு குடும்பங்களிலும் பல்வேறு கட்டங்களிலும் விவாதங்கள் நடந்தன.

கண்ணனுக்கு கோதை ஏன் பிடித்தாள் என்ற கேள்விக்கு விடை அவளுடைய வெளிப்படைத்தன்மை. மனதில் இருந்ததை மறைக்காமல் சொல்லும் இயல்பு. இதை பற்றி தன் தந்தையிடம் கண்ணன் ” இல்லப்பா . அந்த பெண்ணின் தன்மானம், புரிதல் மிகவும் பிடித்தது. அந்த பெண் சொல்லுச்சு ” இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பியர் கூட பெண்ணுக்கு “இர்” விகுதியிட்டு அவர் இவர் என்று அளித்ததில்லை. வள்ளுவர் கூட “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்று தான் சொல்லுகிறார். நாம் திராவிட இனத்தவர் . ஆணுக்கு பெண் சமம். அதனால் என்னை வாடி போடி என்று அழைத்தால் என் மனம் உடன்படாது “இப்படிப்பட்ட பெண் தான் நம் குடும்பத்திற்கு செட் ஆகும் . செட்டியார் தலையை அசைத்தார் . மௌனம் சம்மதம் .

ஆனால் கோதை தன் பெற்றோருக்கு ஒரு நீண்ட விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது.

அவள் சொன்னது:

“பொதுவாக நாம் பார்க்கிற எந்தப் பொருளுக்கும் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற வேறுபாடு கிடையாது. அது அந்தப் பொருளைப் பற்றிய நம்முடைய எண்ணங்களையும், நாம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களையும் பொறுத்தது.

டாக்டரேட் முடித்தவரின் ‘Intangible Value’ என்ன என்பதைக் குறித்து உங்களுக்கு முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம்.

உங்களுக்குத் தெரிந்த சிறந்த வாழ்க்கை சாப்ட்வேர் வேலையில் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி, இருபத்துநான்கு மணி நேரமும் பதட்டத்தில் இருந்து, நேரமில்லாமல் சாப்பிட்டு, உடல்நலத்தை கெடுத்து, மனைவிக்குக் கூட நேரமில்லாமல், குழந்தை பெறுவதற்கே I.V.F. மையத்தை நாட வேண்டிய சூழலில் இருப்பது.

அந்த வாழ்க்கையைவிட, அரசு வேலையில் ‘ப்ரொபசர்’ என்ற மரியாதையில், சமூக அங்கீகாரத்துடன், மன அமைதியுடன் வாழும் ஒருவரின் மனைவியாக இருப்பதே சிறந்தது என்பது என் எண்ணம்.

ஆகவே, எனக்கு இந்த வரனைத்தான் பிடித்திருக்கிறது.”

இங்கு அவள் குறிப்பிட்ட ‘Intangible Value’ (கண்ணுக்குப் புலப்படாத மதிப்பு) என்பது கண்ணால் பார்க்கவோ, கையால் தொடவோ முடியாத, ஆனால் ஒரு மனிதரின் வாழ்விற்கு ஆழ்ந்த மதிப்பை சேர்க்கும் பண்புகள். அறிவு, குணநலம், சமூக மரியாதை, சிந்தனைத் திறன் போன்றவை அதில் அடங்கும்.

கோதையின் இந்த வாதம் பெற்றோரால் கவனமாகக் கேட்கப்பட்டு, இறுதியில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

பெரியோர்கள் இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்தனர்.

அந்தத் திருமணம் ராஜ் மஹால் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

***

இருவர் குடும்பத்திலும் தங்கள் குழந்தைகள் வெகு தொலை தூரம் சென்று வசிப்பதை விரும்பாத காரணத்தால் மதுரை கேகே நகரில் கண்ணனும் கோதையும் தங்களுக்கென ஒரு புதிய வீட்டை கட்டிக் கொண்டார்கள். புது வீட்டில் குடி பெயர்ந்த அதிர்ஷ்டம் அவர்களுக்கு ஒரு வருடத்தில் அழகான பெண் மகவு பிறந்தது. ரம்யா என்று அதற்கு பெயரிட்டு அழைத்தார்கள் ரம்யமான பெயர் தானே என்று கண்ணன் கோதையை பாராட்டினான்.

வருடங்கள் உருண்டோடின. இப்பொழுது அதே கல்லூரியில் கண்ணன் பேராசிரியராக பணிபுரிகிறார் அவருக்கும் கீழ் ஆராய்ச்சி மாணவர்கள் இரண்டு பேர். அந்த ஆராய்ச்சிகள் தொடர்பாக அடிக்கடி வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளுவார். போகும் பொழுது ஏதாவது ஒரு பயணங்களில் குடும்பத்தை அழைத்துக் கொண்டு செல்வதும் கண்ணனுக்கு வழக்கமாக இருந்தது.

ரம்யா பிறப்பதற்கு முன் இங்கிலாந்து வந்த பொழுது ஐ கேட் சிமெட்ரி Highgate Cemetery, Hampstead உள்ள காரல் மார்க்ஸின் வெங்கல சிலையை பார்த்ததும் அதன் கீழ் “உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று செதுக்கியிருப்பதை பார்த்ததும் நன்றாக நினைவுக்கு வந்தது. அதேபோல செட்டிநாடு உணவகத்தில் நம் ஊர் பள்ளிபாளையம் சிக்கன் மாதிரி தேங்காய் ஆட்டு குழம்பு சாப்பிட்டது நன்றாக நினைவுக்கு வந்தது. இதெல்லாம் ரம்யாவிடம் சொல்லும் பொழுது என்னை எப்பொழுது அங்கு கூட்டி செல்கிறீர்கள் என்று கண்ணனிடம் ரம்யா கேட்டாள்.

ரம்யாவிற்கு தமிழை ஆரம்பத்திலிருந்து படிக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தால் அவளுக்கு கதைகளை கூட தமிழ் கதைகள் இருந்து எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கண்ணனின் டைரியில் எழுதி வைத்திருப்பதைக் கூட கண்ணன் வாசித்து காண்பிப்பார்.

கண்ணனுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் இருந்தது அப்போதைக்கு அப்போது மனதில் தோன்றுகிற ஒரு சில செய்திகளை நாட்குறிப்பில் குறித்துக் கொள்வார். பின்னர் அதை ஒரு காலை வணக்க செய்தியாக மாற்றி நண்பர்களுக்கும் அனுப்புவார்.

***

அப்படிப்பட்ட ஆராய்ச்சிக்கு ஒருமுறை கண்ணன் பயணப்பட்டார். இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய பல்கலைக்கழகம் அவரை அழைத்திருந்தது. ஆனால் அவருக்கு சென்னையில் இருந்து விமானம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால், அகமதாபாத் சென்று அங்கிருந்து லண்டனுக்கு பயணம் செய்ய அந்த பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. அதற்கான பயணச்சீட்டும் அனுப்பி இருந்தது.

அது ஏர் இந்தியா பிளைட் நம்பர் 171… புறப்பட்ட தேதி 12 ஜூன் 2025.

***

“குட் மார்னிங் சார்” என்னப்பா இந்த நேரத்துல கூப்பிடுற என்ன விசேஷம்?

சார். ஏர் இந்தியா ஃபைட் 171 crashed…

சரி அதுக்கு நமக்கு என்ன சம்பந்தம்?

இல்ல சார் அதுல தான் கண்ணன் சார் லண்டன் போனார்…

shit…

அந்த கடைசி பயணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது…

***

கோதைக்கு குரு பலன் வந்தது. திருமணம் நடந்தது. ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால் வாழ்க்கை கைக்கு எட்டாத தூரத்தில் போய்விட்டது. இதற்கு ஜாதகம் என்ன சொல்கிறது என்பதை ராமுண்ணியிடம்தான் கேட்க வேண்டும்.”ஆனால் அவன் அந்த ஊரை விட்டு வேறு எங்கோ சென்று பலகாலம் ஆயிற்று. கோதையின் தந்தையைப் போலவே பலரும் அவனைத் தேடுகிறார்கள்.

கண்ணனின் டைரியில் எழுதப்பட்டிருந்த காலை வணக்க செய்தியை “நாளை என்ன செய்வது என்பது பற்றி கவலைப்பட்டவன் நேற்று இரவு செத்துப் போனான். காலை வணக்கம்”. யார், எப்படி ரம்யாவிற்கு வாசித்து சொல்ல முடியும்?

குரு பலன் வந்தது… ஆனால் குரு காக்கவில்லை…

எதை எதையோ இறைவனிடம் வேண்டி, கடைசியில் நிம்மதியான மரணம் வேண்டும் என்பதில் நிறுத்துகிறது காலம்.

மனிதன் எதிர்காலத்தை அறிந்து கொள்ள விரும்புகிறான் அறிய முடியாததை அறிந்ததாக நம்பி… ஆனால் வாழ்க்கை அவனுக்கு வேறு திசையை காண்பிக்கிறது.

குரு பலன் வந்தது என்ற சொல்லின் பின்னால் நிற்கும் ஒரு குடும்பத்தின் நிஜம் தான் இந்த கதை. பலன் வந்ததா வாழ்க்கை தன் பாதையை தானே தீர்மானித்ததா

அதை வாசகன் முடிவு செய்யட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *