குருவிக் கூடுகள் கூட…
விசாகாவின் மனம் ஒரு சின்ன சலசலப்புக்கும் படபடவென அடித்துக் கொண்டது. ஒரு அன்னையின் அன்பு மனம் என்றால் அப்படித்தான் இருக்குமோ? ஆறு வயதேயான அவளது அன்பான சின்ன மகனை ஆஸ்பத்திரியில் சேர்த்து மூன்று மாதங்களாகின்றன. இந்த மூன்று மாதத்தில் அவன் பத்துக் கிலோவுக்கு மேல் எடை குறைந்திருந்தான். அவனால் உட்கார்ந்து நிம்மதியாக சாப்பிட முடிவதில்லை.
அன்றொருநாள் அவளது சின்ன மகன் அருண் பிரகாஸ் படிக்கும் பாடசாலையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அருண் பாடசாலை மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மயக்கமடைந்து விழுந்து விட்டான் என்று அவனது வகுப்பாசிரியர் தகவல் தெரிவித்தார். விசாகா பதறிப்போய் அவள் கணவர் தொழில் புரிந்த தனியார் நிறுவனத்துக்கு தொலைபேசி எடுத்து விசயத்தைக் கூறி அவரையும் பாடசாலைக்கு வரச் சொல்லிவிட்டு விரைந்து பாடசாலைக்கு சென்றாள். அருணுக்கு பாடசாலை சுகாதார உத்தியோகத்தர் முதலுதவி அளித்து பாடசாலையின் மருத்துவ அறையின் கட்டிலில் படுக்க வைத்திருந்தார்.
அருண் மிகச் சோர்வடைந்து பலவீனனாக படுக்கையில் படுத்திருந்தான். அவன் இருந்த நிலையைப் பார்த்ததுமே விசாகாவுக்கு மனதுக்குள் திக்கென்று அடித்துக் கொண்டது. அவன் முகங்கூட வெளிறிப்போயிருந்தது. அவன் இவ்வளவு நாளும் நல்லாதான் இருந்தான். அவனுக்கு கடுமையான எந்த நோயும் இருக்கவில்லை. அவள் தன் கணவர் வரும்வரையும் காத்திருந்து அவனை அழைத்துச் சென்று நகரத்தின் அந்த மதிப்பு வாய்ந்த மருத்துவமனையில் அனுமதித்தாள்.
உடனேயே மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு இரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன், எக்ஸ் கதிர் பரிசோதனைகள் ஆகிய பரிசோதனைகளின் பின்னர் அருணின் இதயத்தில் ஒரு சிறு துளை இருப்பதாகவும், அது சிறுவயது முதலே தோன்றி இப்போது அபாயகரமான கட்டத்துக்கு வந்திருக்கின்றது என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர். அவனுக்கு மூன்று மாதங்களுக்குள் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு மேற்படி துளையை சரிசெய்யவேண்டுமென்றும் கூறினார்கள்.
இந்த செய்தியால் விசாகா மிக இடிந்து போய் விட்டாள். அவள் தனக்குத் தெரிந்த எல்லா தெய்வங்களையும் மனதார வேண்டிக் கொண்டாள். அருண் இப்போது பலவீனமானவனாக இருப்பதால் அவனை போசனையூட்டி சத்திரசிகிச்சைக்கு தயார் செய்ய வேண்டுமென்றும் மருத்துவர்கள் கூறினார்கள். இடையில் அருணுக்கு சுவாச மார்க்கத்தில் தடங்கல் ஏற்பட்டு, அவன் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட போதெல்லாம் அவனுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. இப்படி இருதயத்தில் துவாரத்துடன் குழந்தைகள் பிறப்பது சகஜம்தான் என்றும் , இன்று மருத்துவ உலகம் பலபடி தொழில்நுட்பத்தால் முன்னேறியிருப்பதால் இதுவிடயத்தில் கவலைகொள்ளத் தேவையில்லையென்றும் மருத்துவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
என்றபோதும் அவர்கள் என்ன ஆறுதல் வார்த்தைகள் கூறியும் விசாகாவின் மனம் ஆறுதலடைய மறுத்தது. அவள் அருணுக்கு சத்திரசிகிச்சை நிகழ்த்தப்படுகின்ற நாளை மிகப் பதற்றத்துடனும் பரிதாபத்துடனும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி சோகத்துடன், தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் பல கடந்து போய் அருணுக்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டியிருந்த அந்த நாளும் நெருங்கி வந்தது.
ஏற்கனவே இந்த விடயம் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரியவந்துவிட்டதால் அன்றாடம் துக்கம் விசாரிப்போரும், ஆஸ்பத்திரிக்கு வந்து போவோரினதும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது. ஒரு விதத்தில் அவர்கள் ஆறுதல் சொல்வதற்காகவே வந்து போனாலும் அது விசாகாவுக்கு தொந்தரவாகவும், அருண் தொடர்பான பயத்தை அதிகரிப்பதாகவும் இருந்தது. எதற்காக இவர்கள் எல்லாரும் இப்படி துக்கம் விசாரிக்க வருகிறார்கள் என்று மனதில் ஒரு பயமும் உருவானது.
அன்று பிற்பகலில்தான் அருணை சத்திரசிகிச்சை செய்வதற்காக ஒப்பரேசன் தியேட்டருக்கு எடுக்க இருந்தார்கள். விசாகா விடியற்காலையிலேயே எழுந்திருந்து குளித்து முழுகிவிட்டு, பூஜையறையை சுத்தம் செய்து, தன் மகனுக்கு சுகம் வேண்டி பூஜை செய்யத் தயாரானாள். அதற்கென தோட்டத்தில் பூத்திருந்த எல்லா பூமரங்களில் இருந்தும் வண்ண வண்ண நிறங்களில் பூக்களைப் பறித்து வந்திருந்தாள். அவள் லட்சுமி விளக்கை விளக்கித்துலக்கி எண்ணெய் ஊற்றி தீபமேற்றி விட்டு கீழே விரித்திருந்த சிறு மெத்தை விரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்து எல்லாத் தெய்வங்களிடமும் தன் மகனைக் காப்பாற்றித் தருமாறு பிரார்த்தனை செய்தாள். அவள் கண்களை இறுக மூடிக் கொண்டு தனக்கு தெரிந்த சமஸ்கிருத மந்திர சுலோகங்களையும் காப்புச் செய்யுள்களையும் முணுமுணுப்பாக உச்சரித்துக் கொண்டிருந்தாள். அவளது எல்லா கவனமும் அருண் நல்லபடியாக சுகமாகி வந்துவிட வேண்டும் என்பதிலேயே இருந்தது.
அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. அவள் ஏற்றி வைத்திருந்த லட்சுமி விளக்கை திரைச்சீலைக்கு மிக அருகாமையில் கவனமின்றி வைத்துவிட்டிருந்ததாள் அந்தத் திரைச்சீலை காற்றில் ஆடி ஆடி விளக்கின் தீபச்சுவாலையில் பட்டு எரிய ஆரம்பித்துவிட்டது. விசாகாவின் எல்லாக் கவனமும் பிரார்த்தனையிலேயே இருந்ததால் அவள் திரைச் சீலை எரிவதைத் தெரிந்து கொள்ளவில்லை.
நல்ல வேளையாக அடுத்த அறையில் கட்டிலில் அமர்ந்து யோசனை பண்ணிக் கொண்டிருந்த விசாகாவின் கணவருக்கு ஏதோ துணி எரியும் நெடி மூக்கில் பட்டுவிட அவர் சாமியறையை நோக்கி ஓடிவந்தார். அவர் எரியும் திரைச்சீலையைக் கண்டு சத்தம் போட்டு விசாகாவை எழுப்பி அப்பால் தள்ளிவிட்டு திரைச்சீலையை அதன் மற்றுமொரு நுனியால் பிடித்து அப்படியே கீழே இழுத்து, கசக்கி தீயை அணைத்துவிட்டார்.
அங்கே பெரியதொரு அசம்பாவிதம் நிகழவிருந்தது. து தடுக்கப்பட்டுவிட்டபோதும் இந்த நிகழ்வினை ஒரு சாதாரண சம்பவமாக நினைத்து மனதில் இருந்து ஒதுக்கி விட விசாகாவால் முடியவில்லை. தன் அன்பு மகன் அருணின் உயிரைக் காப்பாற்றிக் கொடு என்று இறைவனை மன்றாடிக் கொண்டிருந்த போது இப்படி ஒரு காரியம் இடம்பெற்றுவிட்டமையினை அவள் ஒரு கெட்ட சகுணமாகவே கருதினாள். ஏற்கனவே நொந்து போயிருந்த அவள் மனம் குமுறியழத் தொடங்கியது. விசாகாவின் கணவரும், வீட்டுக்கு வருகை தந்திருந்த உறவினர்களும் சேர்ந்து அவளை தேற்ற முற்பட்டபோதும் அவள் மனதுக்குள் ஆழமாகப்பதிந்து போய்விட்ட அந்த கருப்பு தழும்பு அவளை பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. அவளுக்கு வேறு எல்லாவற்றையும்விட அவளது அன்பு மகனின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டுமென்பதுதான் முக்கியம்.
நேரம் அன்றைய பிற்பகலையும் தாண்டிக் கொண்டிருந்தது. அருணுக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருந்தன. இந்த மூன்று மாத காலத்தில் அருண் மிகக் கவனிப்புடன் வளர்க்கப்பட்டிருந்ததால் அவன் முகம் புஸ்சென்று மிக மலர்ந்து காணப்பட்டது. அவனுக்கு இந்த சத்திரசிகிச்சை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுடைய பிரச்சினை அங்கிருந்தோர் அனைவருக்கும் தெரியுமாதலால் டொக்டர் முதல் நர்ஸ் வரை ஆஸ்பத்திரியில் இருந்த அனைவரும் அவனிடம் அன்பும் பாசத்துடனும் நடந்து கொண்டனர். விசாகா மாத்திரமே அவனை கட்டித் தழுவி அழுது குளறிக் கொண்டிருந்தாள்.
மருத்துவர்கள் சத்திரசிகிச்சைக்கான சகல நடைமுறைகளையும் பூர்த்தி செய்து அருணின் தந்தையிடம் உரிய உடன்பாட்டுப் பத்திரத்தில் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு அவனை சத்திரசிகிச்சைக் கூடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அடுத்த மூன்று மணிநேரத்துக்கு அங்கு கூடியிருந்தோர் ஒருவருக்கு ஒருவர் அவ்வளவாகப் பேசிக்கொள்ளவில்லை. விசாகா மாத்திரம் கண்ணைத் துடைப்பதும் மூக்கை சிந்துவதுமாக இருந்தாள். அங்கே ஆஸ்பத்திரி சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தின் டிக் டிக் என்ற மெல்லிய ஓசை கூட பெரும் குரலெடுத்து கத்துவது போல் பெரிதாகக் கேட்டது.
மூன்றுமணி நேரங்கள் மூன்று யுகங்களாக கடந்த சென்றன. எல்லோரும் சத்திர சிகிச்சைப் பிரிவின் நுழைவாயிலில் “உள் நுழைய அனுமதியில்லை” என்ற போர்டு மாட்டப்பட்டிருந்த கதவு எப்போது திறக்கும் என்று ஆவலாக எதிர்ப்பார்த்திருந்தனர். திடீரென அந்தக் கதவை திறந்துகொண்டு ஒரு நர்ஸ் சிட்டென பறந்து வந்தாள். எல்லோரும் அவள் முகத்தையே அவதானித்தார்கள். அதில் சிறு புன்னகை ஒன்று தெரிந்தது அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. அவள் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்து “சத்திர சிகிச்சை வெற்றியளித்துவிட்டது பயப்படத் தேவையில்லை” என்று அந்த புன்னகை மாறாமலே கூறினாள். அவளைத் தொடர்ந்து வந்த தலைமை மருத்துவர் இன்னும் அரைமணியில் அருணுக்கு மயக்கம் தெளிந்துவிடும் என்றும் அவர்கள் அவனை சென்று பார்க்க முடியும் என்றும் அருணிண் அப்பாவிடம் கூறினார்.
கடந்த மூன்று மாதகாலமாக நடைபிணமாக நடமாடிக் கொண்டிருந்த விசாகாவின் உடம்புக்குள் அப்போதுதான் உயிர்வந்ததுபோல் இருந்தது. அவள் கண்கள் அங்கே பிரகாசம் அடைந்தன. அவள் அருகில் இருந்த தனது கணவரின் கரங்களை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டாள். அவரும் அவள் தலையை தன் தோள்மீது சாய்த்து அவள் தலைமுடியை கோதிவிட்டார்.
குருவிக் கூடுகளும் கூட அவற்றின் குஞ்சுகளுடன் கூடிக் குலாவிக் கொண்டிருக்கும் போதுதான் மகிழ்ச்சிகரமாகக் காணப்படுகின்றன. மனிதனும், அதற்கு விதிவிலக்கல்ல.