குட்டையும் மட்டைகளும்





(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நேரத்தோடு விழுந்தடித்து பாய்ந்து ஏறிவிட்டபடி யால் மினி பஸ்ஸில் இருக்க இடம் கிடைத்தது. உண்மை யில் புண்ணியம்தான்.

இல்லாவிட்டால் எட்டாக வளைந்து தலையை மடக்கித் தவம் செய்ய வேண்டியிருக்கும். இருக்க இடம் கிடைத்தாலும் பஸ்ஸில் நின்று கொண்டிருப்பர் தோளில் ஏறி அமராத குறையாக சாய்ந்து கொள்ள முனைய, அவர்களை முறைத்துப் பார்க்க முடியாமல் நெளிய வேண்டியதாயிற்று.
ஜன்னல் கரையோரமாக பக்கத்தில் இருந்த பெண் “லெதர் பாக்கை” திறந்து சிறிய கண்ணாடியில் முகம் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டாள்.
வியர்வை கண்ணாடியில் வழியும் மழைநீர் போல உடலில் பெருகிக் கொண்டிருந்தது. யன்னலின் ஊடாக நகரத்து அழுக்கினை கையில் தாங்கிக் கொண்டிருந்த பெண்மணி பிச்சைக்காகப் பேணியை நீட்டினாள். எப்போதும் அவளுடன் இருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பிள்ளை பரட்டைத் தலையுடன் சிரித்துக் கொண்டிருந்தது.
பக்கத்தில் இருந்த பெண் லேஞ்சியால் முகத்தை மறைத்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள். நானும ஒன்றுமே தெரியாதுபோல முகத்தைத் திருப்ப அந்தப் பிச்சைக்காரி அப்பால் நகர்ந்தாள்.
மனம் விசிலடித்துக் கொண்டிருந்தது. எப்போது மினி பஸ் புறப்படும், எப்போது போய்ச் சேரலாம் என்ற பரபரப்பு கூடவே எழுந்தது.
“இடம் இருக்கு வாங்கோ….வாங்கோ” என்று சனங் களை அள்ளி அடைத்து “பின்னுக்குப் போங்கோ போங்கோ” என்று கத்திய மினி பஸ்ஸின் மினிப் பெடியன் ரைட் சொல்ல நிறைமாதக் கர்ப்பிணியாக அது புறப்பட்டது.
பொன்னம்பலத்தின் வீட்டில் அனேகம் பேர் கூடியி ருந்தார்கள்.கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவதற்கு உறுதி எடுப்பதற்காக காத்திருப்பதாக ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
கிராமத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும், கிராமம் பல வழிகளில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு “வேண்டும்களை” தங்கள் மனங்களில் கொடியாக பிடித்திருந்தனர்.
கிராமத்தின் பாதைகள் சரியில்லை. அதனை சீரமைக்க வேண்டும். பள்ளிக்கூடத்தை திருத்த வேண்டும் இப்படி எத்தனையோ அபிவிருத்திகள் செய்ய வேண்டும் என்பது அவர்களது கூட்டத்தின் நோக்கம்.
இதுவரை காலமும் அவர்கள் ஏதோ பாவம் செய்து விட்டவர்கள் போலவும், இனிமேல் அதற்கு பிராயச்சித் தம் செய்ய வேண்டும் போலவும் மனமுருகினர்.
அவர்களில் பலபேர் கிராமத்தில் பிறந்து கிராமத்தி லேயே வளர்ந்து கிராமத்து புழுதியில் குளித்து அதன் வாசனையில் திளைத்து கிராமத்தின் ஒவ்வொரு அணு வோடும் இரண்டறக் கலந்தவர்கள்.
பொன்னம்பலந்தான் அந்தக் கூட்டத்தின் தலை வராகவும் அங்கு குழுமியிருந்தவர்களின் தலைவர் போலவும் காணப்பட்டார்.
நீண்ட நேர அமளியின் பின்னர் அவர்களிடையே அமைதி பிறந்தது. எல்லோரும் பொன்னம்பலத்தை பார்த்தார்கள்,
பொன்னம்பலம் பேசத் தொடங்கினார். பேச்சு உஷ்ணமாக இருந்தது.
இவர்கள் இப்படி கூட்டம் போட காரணம் இருந் தது. இரண்டு கிழமைக்கு முதல் இதே போல ஒரு கூட் டம் சின்னத்தம்பி வீட்டிலும் நடந்தது.
துரிதமான அபிவிருத்தியாலோ அல்லது என்ன காரணத்தினாலேயோ எட்டாக வளைந்தோ பத்தோடு பதினொன்றாக அடைந்து கொண்டோ விரைவில் இப் படி மினி பஸ்சில் ஒரு இடத்தில்இருந்து இன்னொரு இடத்திற்கு போய் கொள்ள முடிகின்றது.
“மினிபஸ் வந்தால் மூன்று மணித்தியால ஓட்டம் தான், மச்சான் எங்கடை கிராமத்தின்ர முகப்பில் பஸ்சில நீ வந்து இறங்கேக்க நான் அங்கை நிப்பன். நீ காலமை ஒன்பது மணிக்கு பஸ் எடுத்தாலும் பன்னி ரண்டு மணிக்கு வந்திடலாம். நான் பார்த்துக் கொண்டு இருக்கிறன்” என்று சொன்ன நண்பனின் வேண்டு கோளிபடி நானும் புறப்பட்டு விட்டேன்.
மூன்று நாட்கள் பரபரப்பு இல்லாத வாழ்க்கை. பைல் களுடன் போராடத் தேவையில்லை. தலையை சொறிந்து கொண்டு “ஓம்சேர்” என்று சொல்லத் தேவையில்லை. தேடிவரும் பொது சனங்கள் மீது வள்ளென்று பாயத் தேவையில்லை. இப்படி எத்தனையோ தேவையில்லை களை மனம் நினைத்து சந்தோஷப்பட்டது.
இவ்வளவு கால வாழ்க்கையில் தொடர்ச்சியாக ஒரு கிராமத்தில் தங்கியிருந்த அனுபவம் எனக்கில்லை. ஏதோ நகரத்தில் நவீன வசதிகள் நிறைந்த இடத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவன் என்பது இதற்கு அர்த்தமில்லை.
ஆனால், இதமான விடியற்காலை நேரத்தில் இனி மையான இயற்கை அழகு நிறைந்த இடத்தில் ஏகாந்தமாக இருந்து அந்த இனிமையை அனுபவிக்க வேண்டும். என்ற ஆர்வம் எனக்கு உண்டு.
எந்த நேரமும் கூக்குரலும் குழப்பமும் நாலாவிதமான சத்தங்களும் நிறைந்த நகரத்து வாழ்க்கையில் இப்படி யான அமளிகள் இல்லாவிட்டால் தன்னை நகரம் என்று யாரும் சொல்லமாட்டார்களோ எனப் பயந்துவிடாமல் அமளிப்பட்டுக் கொண்டிருக்கும் நகரத்தில்.
இனிமையான அழகினையோ ஏகாந்தத்தையோ எங்குபோய் ரசிப்பது? லட்சுமிகரமான பெண் அழகிற்கும் முகம். கழுவாமலே றோஸ் பவுடரை பூசிக்கொண்டு காட்டும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாதா?
சின்னத்தம்பி வீட்டில் நடந்த கூட்டத்தில் பலபேர் வட்டமாக அமர்ந்திருந்தார்கள்.
பல காலமாக இயங்காது இருக்கும் கிராமத்து அமைப்புகள் பற்றி அவர்கள் குறைப்பட்டார்கள். இயங்குவதாகச் சொல்லிக் கொண்டு தங்கள் வயிற்றை வளர்க்கும் பலபேரைக் கண்டித்தனர்.
பெரிய கிராமம். வளங்கள் பல நிறைந்தது. அதனை இப்படி கைவிட்டால் அதுவும் கிராமத்தில் வசிக்கும் நாங்களே பாராமுகமாக இருந்தால்? |நிலைமை என்ன என்று தங்களைத் தாங்களே கேள்வி கேட்டார்கள்.
“நாங்கள் எல்லோரும் இருக்க, எங்கையோ இருந்து வந்த ஆட்கள் ஒன்றும் செய்யாமல் நல்ல பிள்ளை பட்டம் காவிறான்கள்” என்று ஒருவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
சின்னத்தம்பி இடையில் குறுக்கிட்டான். “தயவு செய்து அமைதியாக இருங்கள். யார் எப்படி இருந்தால் என்ன நாங்கள் செய்வதை சரியாக ஒழுங்காகச் செய் வோம். து எங்கள் கிராமம். அதன் வளர்ச்சிக்கு நாங்கள் தான் பாடுபட வேண்டும். அதன் முன்னேற்றம் எங்கள் கைகளில் தான் உள்ளது. எனவே யாரும் ஆவே சப்பட வேண்டாம். ஆவேசத்தால் பயன் இல்லை. சரியா கத் திட்டமிட வேண்டும். அந்த திட்டங்களை ஒழுங் காக செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் கிராமம் வளரும். எங்களுக்கு முன்பு இருந்தவர்கள் செய்யாமல் விட்டவைகளை நாங்கள் செய்யவேண்டும். எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக நாங்கள் தவறு செய்ய முடியாது. நாங்கள் நல்லதை செய்ய வேண்டும்.
ஒன்றரை மணித்தியால ஓட்டத்திற்கு பிறகு அந்த பிள்ளையார் கோயிலடியில் தங்களுக்கு வழக்கமாக நானாவித பரிகாரங்களுடன் கப்பம் செலுத்தும் தேனீர்க் கடை வாசலில் மினிபஸ்சை நிறுத்தினார் மினிபஸ் றைவர்.
பாடசாலை முடிந்து வெளியேறும் சிறு பிள்ளை களைப் போல சனங்கள் இறங்கினார்கள்.
இவ்வளவு நேரமும் சீரியசாக ஏதோ வாசித்துக் கொண்டிருந்த எனது பக்கத்து சீட் பெண் மெல்லிய தாக என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு.
“கொஞ்ச நேரம் ஆறியிருக்கலாம்” என்று சொன் னாள். நானும் சிரித்துக் கொண்டு பஸ்சை விட்டு இறங்கினேன்.
இங்கும் சனங்கள்தான். ரோட்டின் ஓரமாக வாகனங்கள். அதனை சுற்றிய சனங்கள். சுவாமி தரிசனம்- செய்பவர்கள். தேனீர் கடைகளை மொய்த்துக் கொண்டு நிற்பவர்கள் என்று.
நானும் தேனீர் குடித்து அவர்களை வேடிக்கை பார்த்து பழையபடி மினிபஸ்சில் ஏற பக்கத்து சீட் பெண்மணி கண்ணாடியில் முக அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்போது நான் கதை கொடுத்தேன்.
“நீங்கள் ரீச் பண்ணுறீங்களா?”
“ஓமோம்”
“எங்கே”
சொன்னாள், அதுவும் ஒரு கிராமம்தான்.
“நல்ல இடமாக இருக்கும்”
அவள் முகம் சட்டென்று மாறியது.
“அது ஒரு அண் டெவலப்மெண்ட் ஏரியா, உங்களுக்கு அப்படியான இடங்களில் வேலை செய்து அனுபவம் இல்லைப்போல”
நான் சிரித்தேன்.
“சுத்த சூனியமான இடம் என்ன செய்யிறது எண்டு வேலை செய்யிறன். றான்ஸ்பருக்கு ஓடித்திரிஞ்சும் பலன் இல்லை.
எனக்கு வியப்பு உண்டாகவில்லை. கிராமத்தை பற்றிய எனது கண்ணோட்டம் வேறுதானே.
சின்னத்தம்பியின் பேச்சு அங்கு இருந்த எல்லோரின் மனத்தையும் தொட்டது. அவர்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள். பெற்ற தாயின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வது போன்ற ஒரு மனோ உணர்வினை அவர்கள் அடைந்தர்கள்.
“எங்கள் நோக்கம் சரியாக அமைய எங்களிடையே ஒழுங்கான அமைப்பு இருக்க வேண்டும்” என்ற சின்னத் தம்பியின் கோரிக்கையை ஏற்று “கிராமப்பணி மன் றம்’ ஒன்றை அந்த இடத்திலே உருவாக்கினார்கள் அவர்கள்.
“கிராம பொதுப்பணி மன்றத்தை உருவாக்கினால் மட்டும் போதாது. தகுதியான ஆட்களை மன்றத்தின் நிர்வாகிகளாக தெரிவும் செய்ய வேண்டும். அதுவும் தலைவர் செயலாளர் பதவிகளுக்கு ஆட்களை தெரிவு செய்வது முக்கியம்., வல்லவர்களாகவும், செயல்பாட்டு திறன் கொண்டவர்களாகவும் இருப்பவர்களை தெரிவு செய்வது தான் பொருத்தமானதாகும்” என்று சின்னத் தம்பி பல தடவை சொன்னதன் உட்பொருளை உணர்ந்த தாலோ என்னவோ எல்லோரினதும் ஏகோபித்த வேண்டு கோளின்படி சின்னத்தம்பியே தலைவராக தெரிவு செய் டியப்பட்டார், ஏனைய அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
அந்தப்படலம் முடிந்த பின்னர்…
அடுத்ததாக நாங்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம் அதாவது எமது முதலாவது திட்டம் என்ன என்பது பற்றி தீர்மானித்து முடிவு எடுக்க வேண்டும். எமது முதலாவது திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு சிறப்பாக முடிந்தால் தான் எமக்கு நன்மை கிட்டும். அத னால் கிடைக்கும் பெருமையினால், புகழினால் கிராமத்து மக்களிடையே எமக்கு மதிப்பு உண்டாகும். இதை யாரும் மறந்து போகக் கூடாது. எனவே எப்படியான ஒரு திட் டத்தை அமுல்படுத்துவது என்பது பற்றி யோசிக்குமாறு வேண்டுகின்றேன்’ என்றான் தலைவர் சின்னத் தம்பி.
‘மன்னிக்க வேணும். நீங்கள் சொல்லுறது சரிதான். நான் நல்ல இடம் எண்டு சொன்னது வேறு பார்வை யில், எனக்கு அமைதியான கிராமம் என்றால் நன்றாக பிடிக்கும். கொஞ்ச காலம் கிராமத்தில் வசிக்க வேணும் எண்டு விரும்புகின்றவன், அதன் அழகை ரசிக்க ஆவல் உள்ளவன்’ என்றேன் நான் அவள் சிரித்தாள்.
‘நீங்கள் சொல்றது இரண்டு, மூண்டு நாள் நிண்டு சுற்றிப் பார்க்கத்தான் சரி. கொஞ்சகாலம் அங்கை இருந்து சீவித்துப் பார்த்தால் தெரியும், அங்கை உள்ள பிரச்சினைகளை. நீங்கள் இப்ப எங்கை போறீங்க’
சொன்னேன்.
“நல்லதுதான். போறதுக்கு முதல் கிராமம்தான். ஏதோ நல்ல காலம். கரண்ட்கூட அங்கை வேந்திட்டுது. ஆனால் எத்தனையோ பிரச்சினைகள்தான் ஒண்டையும் சொல்ல விரும்பவில்லை. போறீர்கள்தானே உங்களுக்குத் தெரியவரும், உங்களைப்போல ஆம்பிளையள் எப்படியும் சமாளிக்கலாம். எங்களைப் போல பொம்பளையளுக்குத் தான் பிரச்சினை. கிராமத்தில் சரி, நகரத்தில் சரி சனங்கள் சகல வசதியளோடை வாழத்தான் விரும்பினம். ஆனால் எப்படியான வசதிகளை என்னமாதிரித் தேடிக்கொள்ளு- றது. என்னமாதிரி பயன்படுத்திறது எண்டுதான் தெரியேல்லை நாகரீகம் வளர்ந்தாலும் எங்கடை அடிப் படைக் குணங்கள் மாறாத மாதிரித்தான் சனங்களும்” என்று சொல்லி முடித்தாள் அவள்.
என்மனம் குழம்பிப் போய்விட்டது. நான் இறங்க வேண்டிய இடம் வந்தபோதும் மனதில் குழப்பம் தீர வில்லை,
”இதுதான் நீங்கள் இறங்கிற இடம்” என்று அவள் சொன்ன பிறகுதான் விழுந்தடித்துக் கொண்டு அவ னிடம் விடைபெற்று பஸ்சைவிட்டு இறங்க நண்பன் எதிர் கொண்டான்.
“இதே உங்களடை ரவுண்”
“இல்லை. இது ஒரு சக்திதான், எங்கடை கிராமத் திற்கு இன்னும் இடம் இருக்கு”
எதிரும் புதிருமாக நாலைந்து கடைகள் கடை வாசலில் குந்தியிருக்கும் சனங்கள். கடைகளில் அலறும் சினிமாப்பாடல்கள்.
சின்னத்தம்பியின் வேண்டுகோளைத் தொடர்ந்து பலரும் பலவிதமான யோசனைகளைச் சொன்னார்கள் பின்தங்கிய பிரதேசமாகிய அக்கிராமத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளா இல்லை.
முதலில் செய்வதை நன்றாகச் செய்ய வேண்டும் என்ப தால் நல்லதொரு திட்டத்திற்காக எல்லோரும் காத்திருக் கும்போது தலைவர் சொன்னார்.
“தற்கால உலகத்திலே எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அதற்கேற்ப நாமும் மாறுபட வேண்டும். நான் ஒரு திட்டத்தை இப்போது சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் பல பேர் சொன்னவைகளைக் கூடச் செய்யலாம். ஆனால் செய்கின்ற செயல்களால் எங்களுக்குப் பிரயோசனம் இருக்க வேண்டும். எதிர் காலத்தில் இதனை யார் செய்தார்கள் என்று கிராமத்தவர் கள் வியக்க வேண்டும். சில அலுவல்களைச் செய்யலாம். அவற்றால் பயன் ஏனையவர்களுக்குக் கிடைத்தாலும் யார் அதனைச் செய்தார்கள் என்று தொடர்ந்து யாரும் கதைக்க மாட்டார்கள். அதனால் பிரயோசனம் இல்லைத் தானே. நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பது உங்க ளுக்கு தெரியும் என நம்புகின்றேன். ஒவ்வொரு முறையும் நாங்கள் செய்வது பற்றி கிராமத்தவர்கள் கதைக்க வேண்டும். எங்கள் புகழ் எல்லோரிடையேயும் பேசப்பட வேண்டும். கிராமப் பொதுப்பணி மன்றம் என்ற பெயர் எங்கள் கிராமத்தில் மாத்திரம் அல்ல. ஏனைய கிராமங் களில் ஏன் நாட்டிலேயே புகழுடன் விளங்க வேண்டும்.”
எல்லோரும் மௌனமாக தலைவர் சின்னத்தம்பி சொன்னவைகளை ஏற்றுக் கொண்டவர்கள் போல காணப்பட்டார்கள்
“இப்போது நான் சொல்லும் திட்டம் புதுமையானது. எங்கள் கிராமத்தவர்களுக்குப் பயன் தரக் கூடியது. ஆனால் பெருமளவு செலவும் கொண்டதுதான்” என்று தொடர்ந்தார் தலைவர்.
“எங்கை போனாலும் இந்த சினிமாப் பாடல்கள் விடாது” என்றேன் நான்.
‘ஏன்டாப்பா ஒரு மாதிரியாக இருக்கிறாய்” என்று பாக்கை வேண்டிக் கொண்டு நண்பன் கேட்டான்.
மினி பஸ்ஸில் நடந்த கதையைச் சொன்னேன். அவன் சிரித்தான்,
மத்தியான வேளை என்றாலும் மழைக் கோலத்தால் வெய்யில் தெரியவில்லை.தொடர்ச்சியாக பெய்த மழை தரையில் தெரிந்தது.
நாங்கள் சென்ற பாதை தார் போட்ட கல் றோட் டாக இருந்தாலும் குளங்கள் அதிகம் இருந்தன, சேறும் சகதியும் திரண்டு இருக்க நான் அவற்றுடன் போராடத் தொடங்கினேன்.
“இந்தப் பாதை பரவாயில்லை, இன்னும் போனால் ஆக மோசம்”
“உண்மையோ”
அவன் சிரித்தான். அடிக்கடி இப்படி நான் கேட்ட கேள்விகளுக்கு சிரிப்பாலேயே பதிலை முடித்து விட்டான்
அவன் கொண்டு வந்த சைக்கிளில் நான் முன்னுக்கு இருக்க அவன் ஓட ஆரம்பித்தான்.
“எங்கடை கிராமத்தின் சனங்கள் வசிக்கும் பகுதிக்குப் போக இன்னும் மூண்டு மைல் இருக்கு”
“பஸ் ஒண்டும் இல்லையே, சிரிக்காமல் பதில் சொல்லு”.
“இல்லை. தட்டிவான் சேவிஸ்தான், அதுவும் குறைவு” இரண்டு பக்கமும் நெருக்கமில்லா காடும், பசுமை யான புற்தரையும், தேங்கி நிற்கும் மழை நீரும், வட்ட மிடும் பறவைகளும் விழிகளுக்கு விருந்தாகின.
பெரிய கட்டிடம் ஒன்று செடிகொடிகளால் மூடப் பட்டுக் கிடந்தது.
“என்னடாப்பா இது”
“இதுதான் சந்தைக் கட்டிடம், கனகாலத்திற்கு முந்தி அரசியல் காரணங்களுக்காகப் பொருத்தமில்லாத இடத் தில் கட்டினது. சனங்கள் அதைக் கவனிக்கவில்லை. சம்பந் தப்பட்டவர்களும் கைவிட்டு விட்டார்கள். இப்படி இருக்கு”
தொடர்ந்தும் வேறு சில கட்டிடங்கள் கூரை, கதவு, யன்னல், நிலைகள் ஒன்றுகூட இல்லை. நான் கேட்காமலே அவன் சொன்னான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் மழை காலத்து மாலை நேரம். ஆகையால் உரிய நேரத்திற்கு முன்னதாகவே இருள் படர ஆரம்பித்து விட்டது.
கிராமத்தில் இருந்த கிராம முன்னேற்ற சங்கத்தின் சிறிய கட்டிடத்தின் முன்னால் கிராமத்து சனங்கள் சேர்ந்திருந்தார்கள்.
குளிர்மை பொருந்திய தரையில் படங்கு விரிக்கப்பட்டு அதனை மறைத்துப் பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர் களுக்கு முன்னால் சின்னஞ் சிறு சிறுவர், சிறுமியர் தரை யில் உருண்டு புரண்டு கொண்டிருந்தனர்.
பெண்களுக்குப் பின்னால் வியூகம் அமைத்து வயது மண்ணோடு போராடும் வேறுபாடு இன்றி கிராமத்து உழவர்களும் ஏனையவர்களும் நின்றார்கள்.
அந்தக் கிராம முன்னேற்றச் சங்க கட்டிடம் வெகு காலத்திற்கு முன்னர் கட்டப்பட்டு இருந்தாலும் இப்போது புனரமைத்கப்பட்டு வெள்ளை அடித்துக் கொஞ்சம் புதுமை பெற்றிருந்தது.
அதன். வாசலில் உயரமான மேசையில் ஒரு ரெலிவிஷன் பெட்டியும், வீடியோ டெக் ஒன்றும் இருந்தன.
சம்பிரதாயபூர்வமான உரையின் பின்னர் படக் காட்சி ஆரம்பமானது.
சினிமா கதாநாயகனும், கதாநாயகியும் ஒருவர் தோலை ஒருவர் உரிக்க ஆரம்பிக்க கிராமத்து சனங்கள் அதில் மெய்மறக்கத் தொடங்கினர்.
“கிராமத்து சனங்கள் பயன்பெற நாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வீடியோப் படக் காட்சியை இலவச மாகக் காட்டினால் சனங்கள் எப்போதும் ஒவ்வொரு கிழமையும் எங்களை நினைத்துக் கொண்டிருப்பார்கள். எங்கள் புகழ்…” என்று அன்று நீண்ட பேச்சுப் பேசிய தலைவர் சின்னத்தம்பியின் முடிவை ஏற்றுக் கிராமத்து மண்ணில் வியர்வையை விதைத்துப் பயன் பெறும் விவசாயிகளிடம் காசு திரட்டி இதனை ஒழுங்கு செய் தார்கள். தொடர்ந்தும் செய்வார்கள்.
இதனை பொன்னம்பலம் குழுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“எல்லாத்தையும் சனங்கள் கொண்டுபோய் விட்டுது கள். கொண்டு போய்விட்டுதுகள் எண்டால் களவு போய் விட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் இந்தச் சுவர்களை இடித்துக் கல்லுகளைக்கூடக் கொண்டு போயிடுங்கள்”
எந்த இடத்திலும் சனங்கள் எல்லோரும் அல்ல சிலர் தான். ஒரே மாதிரித்தான்.
”எனக்கே இங்கை வாழப் பிடிக்கேல்லை” என்றான் நண்பன்.
“ஏன்”
“நான் சொல்லுறதைக் கேள். இங்கை பார்.இந்தப் பாதையை. இதை விட மோசமாய் சேற்றுப் பாதைகள் ஊருக்கை இருக்கு மழை பெய்தால் குடை பிடித்து படிக்கிறநிலையில் பள்ளிக்கூடம். சுவரில அல்லது தரையில் வைத்து எழுதுற நிலையில் பள்ளிக்கூடம் பிள்ளையள் மேசை, வாங்கு, கதிரைகள் குறைவு. இருக்கிறதும் உருப் படியாய் இல்லை. அங்கை பார். சந்தைக்கட்டிடம் அப்படி பாழடைந்து போய் இருக்கு. சனங்கள் ஆல மரத்தடியில் மழையில் நனைந்து வியாபாரம் செய்யுது. இப்படி எத்தனையோ அடிப்படையான பிரச்சினைகள்” என்று நண்பன் சொல்லும்போதே அவன் மனத்தின் வேதனை களைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“ஏன் இவைகளை தீர்க்க முடியாதா? ‘யாரைக் கொண்டு”
“சம்பந்தப்பட்டவர்களைக் கொண்டு”
”அதுசரி வந்தால்தானே”
“ஊரில் உள்ள நீங்கள்தான் ஒண்டு சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி நீங்களாகவே ஏதாவது சேர்ந்து இவைகளை நிவர்த்தி செய்ய முடியாதா?”
அவன் சிரித்தான் .
“அப்படியெண்டால் ஊரில் உள்ள எல்லாரும் தலைவர்களாகவும், பெயர், புகழ் வரக் கூடியதுமான ஒரு அமைப்பை சொல்லு பார்ப்பம்”
“ஏன்”
“வாற் சனிக்கிழமை இஞ்சைதானே நிற்பாய். அன்றைக்கு பின்னேரம் என்னோடை கிராமத்து ஆல் மரத்தடிக்கு வா” என்றான் நண்பன்.
சின்னத்தம்பி குழுவுக்கு எதிரானவர்கள்தான் இந்தப் பொன்னம்பலம் குழுவினர்.
சின்னத்தம்பியைத் தலைவராகக் கொண்ட கிராமத்து பொதுப்பணி மன்றம் வாரம் தோறும் இலவச ரெலிவிஷன் படக்காட்சியை காட்டத் தொடங்கிய பின்னர் அவர்கள் புகழ் சட்டென்று கிராமத்தை மூடிக் கொண்டது.
எல்லோரும் பெரிதாகக் கதைத்தார்கள். சின்னத்தம்பி யைப் புகழ்ந்தார்கள்.
“கிராமத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க ரெலிவிஷன் படக்காட்சியைக் காட்டி சனங்களை ஏமாத் துறார்கள். இதனால் சனங்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா? கிராமம் வளர்ந்து விடுமா?” என்று பேசிக் கொண்டார்கள்.
ஆதனால்,
பொன்ம்பலம் கூட்டிய அந்தக் கூட்டத்தில் பொன்னம் பலத்தை தலைவராகக் கொண்ட “கிராமநற்பணி மன்றம்’ அமைக்கப்பட்டது.
“கிராமத்தின் அபிவிருத்திதான் முக்கியம்” என்றும் பேசப்பட்டது. வீண் வேலைகளைச் செய்யாமல் பொருத்த மான நல்ல வேலைகளாக செய்வதாக ஒப்புக் கொள்ளப் பட்டது.
இருந்தாலும்,
சின்னத்தம்பிக்குக் கிடைத்த பெயர் புகழை தற்காலிக மாகவேனும் உடைத்தெறிய வேணும் என்ற அடிப்படை யில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆலமரத்தடியில் இரண்டு சினிமாப் படங்களை ரெலிவிஷன் படக்காட்சிக ளாக இலவசமாக கிராமத்து சனங்களுக்கு காட்டுவதாக முடிவு செய்யப்பட்டது.
இன்று சனிக்கிழமை பின்னேரம் ஆலமரத்தடியில் சனங்கள் கூடுவார்கள்.
– வீரகேசரி, 18-12-1983.
– வெட்டு முகம், முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1993, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.