குட்டி கதைகள்
சாலை
அந்த ஊரின் பிரதான சாலைதொடர் மழைக்குப் பிறகு குண்டும் குழியுமாய் போக்குவரத்துக்கே லாயக்கில்லாமல் சேதமாகியிருந்தது. பாதாசாரிகளும் வாகனம் ஓட்டுபவர்களும் மிகவும் அவதிக்குள்ளானார்கள்;
சாலையை சீர்படுத்தக் கோரி அரசு அதிகாரிகளுக்குப் பலமுறை விண்ணப்பித்தும் பலனேதும் ஏற்படவில்லை.
பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி.க்கு ஒரு பிரமாதமான ஐடியா தோன்றியது. அவருடைய பள்ளி மெயின் ரோடில்தான் இருந்தது. பள்ளி தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆனதைக் கொண்டாட ஊரார் ஒத்துழைப்புடன் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தார். கல்வி மந்திரியை அழைத்து விழாவை சிறப்பாக நடத்தித் தர ஏற்பாடு செய்தார்கள்.
ஆச்சரியம்!
அத்தனை நாட்களும் கவனிப்பாரற்று இருந்த சாலை சீரமைப்புப் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, சீக்கிரமே முடிவடைந்தது. அலங்கோலமாக இருந்த தெரு ஒரு புத்தப்புது தார் ரோடாக மாறியது! பொது ஜனங்களுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி !
மீசை
மணிக்கு வயது இருபதை நெருங்கிவிட்டது. ஆனால் முகத்தில் மீசையே அரும்பாதது அவனுக்கு பெருத்த கவலையை அளித்தது. கல்லூரி சக மாணவர்களின் கிண்டலும் கேலிப் பேச்சும் அவன் மன அமைதியைக் குலைத்தன.
அவன் நண்பன் சிவாவிடம் இதற்கு ஒரு தீர்வு காண உதவுமாறு கேட்டுக் கொண்டான். அவன் சிபாரிசு செய்த டாக்டர் கொடுத்த மருந்துக்கு நல்ல பலன் இருந்தது. முகத்தில் ‘கருகரு’ என்று மீசையும் தாடியும் வளரத்தொடங்கின,
தன்னைக் கேலி செய்தவர்களுக்குப் பதிலடி கொடுப்பதைப் போல் ஒரு பெரிய வீரப்பன் மீசை வைத்துக்கொண்டான்.
ஐந்து வருஷங்கள் கழித்து, மணிக்குத் திருமணம் ஆயிற்று. முதல் இரவில் அவன் புது மனைவி லதா அவனிடம்,” என்ன நீங்க, இப்படி என்னைப் பயமுறுத்தறாப்பிலே ஒரு பயங்கர மீசையை வச்சுகிட்டு? எனக்கு மீசை வச்சுகிட்டிருக்கிற ஆம்பிளைங்களையே பிடிக்காது. நீங்க என்னை அணைக்கறப்போ கம்பளிப் பூச்சி என் முகத்திலே ஊர்றாப்பிலே அருவருப்பா இருக்கு. அதனாலே நாளைக்கு முதல் வேலையா உங்க மீசையை எடுத்துட்டு. அப்புறம் என் கிட்டே வாங்க” என்று போலிக் கோபத்துடன் சொன்னாள், அவள் கட்டளையை மீற முடியாமல், அடுத்த நாளே மீசை மைனசான முகத்துடன் மீண்டும் அசட்டுத்தனமாகக் காட்சியளித்தான் மணி !
– நவம்பர் 06 2008