குட்டி இளவரசி
“எடீ, சுப்ரியே…! உனக்கு இன்னும் வேடிக்கை பாத்துத் தீரலியா? வந்து புஸ்தகத்த எடுத்துப் படியடீ…!” வைஷாலி குரல் கொடுத்தாள்.

இடக் கையில் கதவு நிலையைப் பற்றி நின்றிருந்த சுப்ரியா மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.
“வெளக்கு வெக்கற வரைக்கும் அப்படியே நின்னுக்கோ. வேலை ஒண்ணும் செய்யறதுக்கு மாயாது உனக்கு. படிக்கறதுக்கும் முடியாது. பரீட்சை வேற பக்கமாயாச்சு. நீயானா அதப் பத்திக் கவலையே இல்லாம இருக்கற. இந்த வருஷம் தோத்துட்டு வந்தால்ல இருக்கு!”
காலைத் தரையில் தேய்த்தபடி சாவகாசமாக நடந்து வந்தாள் சுப்ரியா. இனி அவள் புத்தகப் பையைத் தேடி, அதிலுள்ளதையெல்லாம் கடை விரித்து, படிப்பதற்கென்று ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குள் அந்தி இருண்டுவிடும். என்ன ஒரு பெண்ணோ, இப்படி எதிலும் மந்தமாகவே இருக்கிறது.
வைஷாலியைக் கடந்து அறைக்குள் சென்றாள் அவள். வைஷாலி அரிசி எடுத்த பாத்திரத்துடன் அடுக்களைக்குள் சென்றாள்.
அடுப்பில் விறகு புகைந்துகொண்டிருந்தது. பச்சை விறகு. அருகிலிருந்து சற்று இடம் மாறிவிடக் கூடாது. இடைக்கிடையே ஊதிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஊதுகுழலில் ஊதி புகைகிற விறகை எரிய வைத்தாள்.
நாளைக்காவது காட்டுக்குப் போய் முள்விறகு வெட்டி வரவேண்டும். அதுவானால் இந்தப் புகையின் தொல்லை இராது. ஆனால் சீக்கிரமே எரித்து தீர்ந்துவிடும். எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒரு குறை ஒவ்வொன்றிலும் இருக்கத்தான் செய்கிறது.
சுபாஷிணி இன்னும் திண்ணையிலிருந்து வராமல் இருந்தாள். என்னவோ தெரியவில்லை. பள்ளிவிட்டு வந்ததிலிருந்து உம்மென்றே இருக்கிறாள். குழந்தைகளுக்குள் ஏதாவது சண்டையாக இருக்கலாம். அல்லது அப்பாவின் நினைவு வந்திருக்கும். பள்ளியிலிருந்து வந்ததும் தீனியைத் தின்றுவிட்டு விளையாட ஓடுகிறவள், இன்று எங்கும் போகவில்லை. திண்ணையில் ஒரே இருப்பு. வைஷாலியும் ஒன்றும் கேட்கவில்லை. எதற்காவது கோபம் வந்தால்தான் சுபாஷிணி அப்படி இருப்பாள். அப்போது அவளை சமாதானப்படுத்தவோ, என்ன என்று விசாரிக்கவோ கூடாது. இன்னும் கோபமாகும். சுபாவம் தெரிந்து வைஷாலி பேசாமல் இருந்துவிட்டாள்.
குழந்தைகள் இரண்டும் ஒவ்வொரு மாதிரி. சுப்ரியாவுக்கு வீட்டில் ஒரு வேலை சொன்னால் சலிப்பு. அப்போதுதான் படிக்கிறேனென்று புத்தகத்தைத் தூக்கி வைத்து உட்கார்ந்துகொள்வாள். படிக்கிற படிப்போ பின்னே,… ஜெயித்து வந்தால் அதிசயம்! அவளுக்கு படிக்கிற ஒன்றும் மனதில் தங்குவதில்லை சத்தமிட்டு வாசித்ததையே மீண்டும் மீண்டும் வாசிப்பாள்.
நான்கு வரியை மனதில் பதிய வைக்க அரை மணி ஆகிவிடும். இப்படி கெடுபிடி செய்யாவிட்டால் போய் வாசலிலோ கதவோரமோ நின்று தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். தெருவில் அப்படி என்னதான் உண்டோ! வீட்டின் எதிரே நிற்கிற மரங்களையும், அப்பால் மாரியம்மன் கோவிலையும் விட்டால் வீடுகள்தான். இவற்றில் தினந்தோறும் பார்க்க வேடிக்கை என்ன இருக்க முடியும்?
ஆனால், அவளால் தொந்தரவுகள் ஏதும் இல்லை. இன்னது வேண்டும் என்று கேட்பதோ, இது வேண்டாம் என மறுப்பதோ கிடையாது. கொடுத்ததை வாங்கிக்கொள்வாள். இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எல்லாம் அவளுக்கு ஒன்றுதான்.
சுபாஷிணி அப்படியல்ல. எதற்கும் அடம்பிடித்துக்கொண்டேயிருப்பாள். முக்கியமாக, அவளுக்கு எப்போதும் தீனி வேண்டும். பள்ளி விட்டு வந்ததும் முகம் கழுவி வீட்டுக்குள் வருவாளோ இல்லையோ…. அலமாரியிலிருந்து டப்பாவை எடுப்பாள். மிக்சரோ, சிப்ஸோ, பிஸ்கட்டுகளோ இருக்கும். அதைத் தின்றுவிட்டுத்தான் மறு காரியம். பசியாக இருந்தால் அதையடுத்து வைஷாலியிடம் சோறு கேட்பாள். சாப்பிட்டு கை கழுவியதும் ஓட்டம். வீதி மண்ணைத் துணியிலும் தலையிலும் அப்பிக்கொண்டு, இருட்டிய பிறகு வருவாள். படிப்பதில் குறையில்லை. அப்பா இருந்தால் குறும்பு சற்று அதிகரிக்கும். இந்த இரண்டு வாரம் முழுக்கவும் அதற்கு வகையின்றிப் போய்விட்டது.
பாலச்சந்திரனுக்குக் குழந்தைகளிடம் பாசம் அதிகம். அவர்களுக்கு அவனைத்தான் பிடிக்கும். அவன் குழந்தைகளை அடிக்கவோ மிரட்டவோ மாட்டான். அதற்கான தேவைகள் ஏற்படின் அதை அவளே செய்ய வேண்டும். அதற்கு வைஷாலியை அனுமதித்துவிட்டு, பிறகு அவர்களை சமாதானப்படுத்துவான். கேட்பதை வாங்கியும் கொடுப்பான்.
“இப்படிச் செல்லம் குடுத்தாப் பின்னெ அதுக சொன்னபடி கேக்குமா?” கேட்டால் சிரிப்பான்.
அவன் அடிக்கடி சொல்வதுண்டு. ”சின்ன வயசுல நான் ரொம்பக் கஷ்டப்பட்டேன் வைஷி. வீட்டுல சாப்பாடு இருக்காது. அப்பா இப்பத்த விட அப்போ அதிகமா குடிப்பாரு. வேலைக்கும் சரியாப் போகமாட்டாரு. என்னைக்காவது அவர் தர்ற காசுலதான் எல்லாச் செலவையும் பாத்துக்கணும். அம்மா கடன் வாங்கி, முடிஞ்சவரை சமாளிக்கும். அதுவும் கூடாமப் போறதுண்டு. பசியோட வேதனைகள அத்தனைக்கு அனுபவிச்சிருக்கேன். இப்ப நாம நல்லா இருக்கறோம். நம்ம கொழந்தைங்க கஷ்டப்படக் கூடாதில்லையா?”
“அதுக்காக இப்படியா? ராத்திரி தூக்கத்துல எந்திரிச்சுட்டு திங்கறதுக்கு வேணும்ங்கறாளே சுபாஷி?”
“போகட்டும்டி! கொழந்தைங்களுக்கு அதெல்லாம்தானே சந்தோஷம்!”
அப்படிப் பழக்கப்படுத்தியதுதான் பாடாக இருக்கிறது. அனைத்து விதங்களிலும். அதுகளுக்கு அவன் மேல் உள்ள பாசமும் தேவையும் அவள் மேல் இல்லை. எருத்தேன்பதிக்கு பாலச்சந்திரன் வேலைக்குப் போனதிலிருந்து அவற்றின் குறும்புகளும் உற்சாகமும் போய்விட்டன. இரண்டோ மூன்றோ தினங்களுக்கு ஒரு தடவை வருகிறான் என்றாலும் குழந்தைகளோடு கழிக்க வாய்ப்பது கொஞ்ச நேரம்தான். மறுநாள் அவன் போகும்போது குழந்தைகளுடைய முகத்திலிருக்கும் புன்னகையையும் சந்தோஷத்தையும் கொண்டுபோய்விடுகிறான்.
இத்தனைக்கும் குழந்தைகளுக்கு வேண்டியதை வைஷாலியும் எப்போதும் போல செய்கிறாள். ஆனாலும் அப்பாவைப் போல அவை அம்மாவை உணர்வதில்லை. இதை நினைக்கும்போது அவளுக்கு வருந்தமாகவே இருந்தது.
“சேச்சீ…!”
வைஷாலி திரும்பிப் பார்த்தாள். பத்மாவதி நின்றிருந்தாள். சுபாஷிணியோடு மூன்றாம் வகுப்பு படிப்பவள். இதோ, தொட்டடுத்துத்தான் பள்ளிக்கூடம்.
“என்ன பத்மா?”
“அம்மா சந்தகை மரம் வாங்கிட்டு வரச் சொல்லுச்சுங் சேச்சீ!”
பத்மாவதி அதை எடுத்துக் கொடுக்கும்போது சேவை என்றால் சுபாஷிணிக்கு மிகவும் பிடிக்கும் என்பதை நினைத்துக்கொண்டாள். அதிலும் தேங்காய்ப் பால் ஊற்றி சாப்பிடுவதில் அவளுக்கு அலாதியான விருப்பம். இப்போது அவள் இங்கே இருந்திருந்தால் நமக்கும் சேவை உண்டாக்கலாம் என்று சொல்லியிருப்பாள். சேவை பிழியும்போது அது நூல் நூலாக இறங்கி புழுவினைப் போல நெளிந்து வருவதை சுப்ரியா ஆர்வத்தோடு வேடிக்கை பார்ப்பாள்.
“சேச்சி,… உங்க சுபாசிணிக்கு இன்னைக்கு டீச்சருகிட்ட அடி உளுந்துதுங் சேச்சி…” என்றாள் பத்மாவதி
“எதுக்கு பத்மா?”
“சங்கீதாவப் புடிச்சு சுபாசிணி கிள்ளி வெச்சுருச்சுங்ளா,… அந்தப் புள்ள ஊளையுட்டுட்டே இருந்துச்சு. டீச்சரு பாத்துட்டு, ‘ஏன் சங்கீதா அளுகற?’ன்னு கேட்டாங்க. அந்த சங்கீதா சொல்லிக் குடுத்துருச்சுங் சேச்சி. அதுக்குத்தான் சுபாசிணிக்கு அடி.”
“அப்படியா?”
“ஆமாங் சேச்சி. போயிட்டு வர்றனுங் சேச்சி.”
பத்மாவதி விடைபெற்றுக்கொண்டு போய்விட்டாள்.
சுபாஷிணி, தான் டீச்சரிடம் அடி வாங்கியதைப் பற்றி சொல்லியிருக்கவில்லை. திண்ணையில் உம்மணா மூஞ்சியாக உட்கார்ந்திருப்பது அதனால்தானா? அதை அவள் சொல்லாமல்
இருக்கிறாளே,… அழுத்தக்காரிதான்! சொன்னால் காரணம் தெரிவிக்க நேரிடும். அதைக் கேட்டு அம்மா திட்டுவாள் என்று மறைத்திருக்கலாம்.
உலை கொதித்ததும் வைஷாலி கழுவிய அரிசியைப் போட்டுவிட்டு முருங்கைக் காயைக் குழம்புக்கு அரிந்தாள். கூர்க்கங் கிழங்கு இருந்தது. கல்லில் உரசித் தேய்த்து தோல் தீக்கி வைத்திருந்தாள். அதைப் பொரியல் வைத்துவிடலாம்.
அம்மிக்கல்லில் செலவு அரைக்கும்போது சுபாஷிணி முகம் கழுவி வருவது அடுக்களை ஜன்னலில் தெரிந்தது. அவளுடைய கன்னங்கள் உப்பியிருந்தன.
”அக்காவையும் முகம் கழுவிட்டு வந்து தீபம் வெக்கச் சொல்லு. சாயந்திரம் ஆகறது தெரியலையா அவளுக்கு? அப்புறம்,… நீயும் சாமி கும்பிட்டுட்டு உக்காந்து படி.”
சுபாஷிணி உதடுகளை இறுக்கிய வசத்திலாக்கி, வாயிலிருந்த நீரை ‘ப்ர்ர்ர்’ எனத் துப்பினாள். திவலை புகையைப் போல காற்றில் விரவியது. வைஷாலிக்கு அவளின் செயலைக் காணவும் சிரிப்பு வந்தது. சுபாஷிணி திரும்பி ஜன்னவைப் பார்த்துவிட்டு ஓடினாள்.
சுப்ரியாவுக்கும் இவளுக்கும்தான் எத்தனை வேறுபாடு! அவளுடைய மந்தத்துக்கு எதிரான சுறுசுறுப்பு மட்டுமல்ல. அக்கா எவ்வளவு சாந்தமோ அவ்வளவுக்கு தங்கை கோபக்காரி. தவிர, சுபாஷிணிக்கு எனத் தனி குணங்கள் நிறையவே உள்ளன.
சிறு குழந்தையாக இருந்தபோது இன்னுமே சூட்டிகையாகவும் அழகோடும் இருப்பாள். அப்பாவைப் போல நல்ல நிறம். துறுதுறுத்த கண்கள் அவளைப் பிரத்யேகப்படுத்தும். சீக்கிரமே பேசவும் செய்தாள். எடுக்கிற யாரிடமும் தயங்காமல் போய்விடுவாள். அதன் காரணமாக அயல் வீட்டுப் பெண்கள், சிறார்கள் அனைவருமே அவளை விரும்புவார்கள். ஒரு வீடு மாற்றி மற்ற வீட்டுக்கு அவளை எடுத்துக்கொண்டு போவார்கள். அவர்களின் ஓய்வுப் பொழுதுகளை சுவாரஸ்யமாக்கியவள் சுபாஷிணி. பெரும்பாலும் பூரணி வீட்டில்தான் அவள் இருந்து வளர்ந்ததே. அவர்களின் வீட்டில் மூன்று பெண்கள். அதனால் இவளைக் கவனித்துக்கொள்வது அவர்களுக்கு எளிதாயிருந்தது.
எல்லோரும் தன்னைத்தான் கவனிக்க வேண்டும், தன்னைத்தான் கொஞ்ச வேண்டும் என்பது சுபாஷிணியின் நினைப்பு. அவள் இருக்கும்போது யாரேனும் வீட்டுக்கு வந்தால் முதலில் அவளோடுதான் பேச வேண்டும். சுப்ரியாவிடம் பேசிவிட்டால் பிடிக்காது. பிறகு அவர்கள் தன்னிடம் வந்தால் பேசமாட்டாள். முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வாள். அந்தக் கோபம் தீர்கிறவரை மற்றவர்களோடும் பேச்சிராது. அப்போது அவளுக்கு முகம் கன்றியது போல சிவத்துவிடும். கண்களை விரித்து ஒரே இடத்தைப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். போய்த் தொட்டால் உரக்கக் கத்தி அழுவாள். அடித்து உதைப்பாள். அவளுக்காக கோபம் தீர்ந்தால்தான்.
இப்படித்தான் அவள் பூரணி வீட்டுக்குப் போவது நின்றதும். பூரணியின் அண்ணி பிரசவம் முடித்து குழந்தையோடு திரும்பிய பின்னர் அவர்களுடைய
கவனம் அந்தக் குழந்தையிடத்தில் மாறியது. அதை எடுத்து வைத்துக்கொள்ளவும் சீராட்டவும் செய்தனர். சுபாஷிணி அங்கே போன வேகத்தில் திரும்பிவிட்டாள்.
“எங்கீங்க சேச்சி சுபாஷியக் காணோம்? நேத்துலர்ந்து வீட்டுப் பக்கமே வல்லயே…! ஒடம்புக்கு செரியில்லயாக்கு?”
மறுநாள் பூரணி வந்து கேட்டபோதுதான் சுபாஷிணி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதை வைஷாலி உணர்ந்தாள்.
பூரணி அவளை அழைத்தபோது, “நான் வரமாட்டேன்! நீங்க பாப்பாவத்தான தூக்கி வெச்சுக்கறீங்க?” என்றாள் அவள்.
பூரணியும் வைஷாலியும் பிறகு என்னென்ன சொல்லியும் சமாதானமாகவில்லை. அதெல்லாம் இப்போது அவளுக்கு நினைவில் இருக்குமோ இருக்காதோ? இன்னும் அந்த குணம் மாறவில்லை. சுப்ரியாவைவிட கூடுதலாகத்தான் தனக்கு எதுவும் வேண்டும் என்பாள். அதுவும் முதலில் அவளுக்கே தரவேண்டும்.
இந்த அடம்பிடிப்புகள் தவிர்த்த நேரங்களிலும் சும்மா இருக்கமாட்டாள். எதாவது சேட்டைகள் செய்துகொண்டேயிருப்பாள். விளையாட வாங்கிய, லைட் எரியும் ஏரோப்ளேனும் ரோபாட்டும் ஒரே வாரத்தில் பாகம் பிரிக்கப்பட்டன. சுவர்களில் பென்சிலாலும், கதவு – ஜன்னல்களில் சாக்பீஸாலும் படங்கள் கிறுக்கப்படுகின்றன. பாருக்குட்டி வீட்டிலுள்ள சிறிய மாமரத்தில் ஏறி விழுந்து காலை உடைத்துக்கொண்டிருக்கிறாள். விளையாட்டுப் போக்கில் எதையாவது செய்து, வீட்டு உபயோகப் பொருட்களை வீணாக்கிவிடுவதும் நடக்கும்.
சமையல் வேலைகள் முடிந்திருந்தன. சோற்றைத் தட்டுகளிலும், குழம்பைப் பாத்திரத்திலும் ஆற வைத்துவிட்டு வைஷாலி வெளியே வந்தாள். அடுப்பருகே நின்றிருந்ததில், வெப்பத்தால் உடல் வியர்த்திருந்தது. முந்தானையால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துக்கொண்டாள்.
சுப்ரியா படுக்கை அறையில் உட்கார்ந்து சத்தமாகப் படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு மனதிற்குள்ளாக வாசிக்கிற வழக்கம் இல்லை. அப்படி வாசித்தால் புரியாது என்பாள்.
திண்ணைக்கு வந்து பார்த்தபோது திண்ணை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. சுபாஷிணி சாய்ந்து, முட்டிக் கால்களை உயர்த்தி உட்கார்ந்திருந்தாள். மடியில் விரிந்த புத்தகம். அதில் பதிந்திருக்கும் பார்வை. முகத்தில் இன்னும் தெளிவற்று இருந்தது. கோபமா சோகமா எனப் பிரித்தறிய இயலாத உணர்ச்சிக் கலவை. அந்த பாவமும் அவளுக்கு அழகாகவே இருப்பதாக வைஷாலிக்குப் பட்டது.
“சுபாஷி,… சாப்பிட வா!”
புத்தகத்திலிருந்து நிமிர்ந்த முகம் திரும்பியது. “ம்…”
இருவருக்குமாக உணவைப் பரிமாறினாள். சாப்பிடும்போதும் சுபாஷிணி எதுவும் பேசலில்லை. சாப்பிட்டு எழுந்தவள் தயங்கி நின்றாள்.
“மம்மி,… இன்னைக்கு டேடி வருவாரா?“
“இன்னைக்கோ நாளைக்கோ வருவாரு.”
“தீனி ஒண்ணும் இல்லேன்று கேக்கறா மம்மீ. டேடி வந்தா நெறைய வாங்கிட்டு வருவாரில்ல?” என்றாள் சுப்ரியா.
“போடீ எலும்பி!” சுபாஷிணி அவளைத் திட்டினாள்.
“போடீ குள்ளப் பன்னி!” பதிலுக்கு அவளும்.
“இதா…, வாயாடீட்டிருந்தீங்கன்னா ரெண்டு பேருக்கும் எங்கிட்டக் கெடைக்கும் இப்ப. பேசாமப் போயி படிச்சுட்டு, தூக்கம் வந்தாத் தூங்குங்க.”
எழுந்த சுப்ரியா அப்போதே கொட்டாவியோடு சோர்வு காட்டினாள். தூக்கம் வராவிட்டாலும் அவள் இப்படி ஏய்க்கத் தொடங்கிவிட்டாள். அவளின் வித்தாரம் அம்மாவுக்குத் தெரியாது என்று எண்ணம். இவளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? நிர்ப்பந்தப்படுத்தி படிக்க உட்கார வைத்தாலும் உட்கார்ந்தபடியே தூங்கி விழுவாள்.
குழந்தைகள் போன பிறகு வைஷாலி எச்சில் தட்டுகளைக் கழுவி ஒதுக்கி வைத்தாள். பாலச்சந்திரன் வாக்கூடும் என்று காத்திருந்தாள்.
வருவதாயின் எட்டு மணிக்குள் வந்துவிடுவான். அந் நேரத்துக்கு கொழிஞ்ஞாம்பாறயிலிருந்து சத்திரம் வழியில் வருகிற ராம்தர்ஷன் கிடைக்கும். அதைத் தவறவிட்டால் சுற்று வழியாக வேலந்தாவளம் வழி வருகிற ஒன்பதே முக்கால் மணி ‘கண்டாத்’துதான். கடைசி பஸ்ஸானதால் சற்றுத் தாமதமாக பத்து மணிக்குக்கூட வரும். அந்த பஸ்ஸும் வந்து போவது தூரத்து மெயின் ரோட்டில் இரைச்சலாகக் கேட்டது. இறங்கி வீட்டுக்கு ஐந்து நிமிடத்துக்குள் வந்துவிடலாம். யாருடனாவது பேசிக்கொண்டிருக்கக் கூடும் என்று பத்தே கால் வரைக்கும் திண்ணையில் வந்து எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் வரவில்லை. முன் கதவை அடைத்துவிட்டு வந்தாள். விரித்துக் கொடுத்திருந்த படுக்கையில் குழந்தைகள் உறங்கிவிட்டிருந்தன.
அடுக்களைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு, கழுவ வேண்டிய பாத்திரங்களைக் கழுவி எடுத்துவைத்துவிட்டு வந்தாள். சுவர்க் கடிகாரத்தில் பார்த்தபோது பத்தே முக்காலைத் தாண்டியிருந்தது.
குழந்தைகளின் பாயை ஒட்டி இன்னொரு பாயை விரித்தாள். பழைய சேலையை அதில் விரித்து தலையணையைப் போட்டுக்கொண்டாள். படுக்கை அறையின் ஒற்றைக் கதவின் பின்புறம் ஏதோ கிறுக்கலாக எழுதியிருப்பது பார்வையில் பட்டது. சுபாஷிணியின் வேலைதான். அவள் கிறுக்கியிருந்த கோழி, யானைப் படங்களின் கீழாக இப்போது எதையோ புதிதாக எழுதியிருந்தாள். வைஷாலி அதைக் கூர்ந்து பார்க்கவும்தான் வாசிக்க முடிந்தது.
குழந்தைக் கையெழுத்தில் சாக்பீஸ் எழுத்துக்கள்: ‘டேடீ என்னை டீச்சர் அடிச்சாங்க.’
– மாலைக்கதிர், 30.05.1993.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |