நல்ல இடத்து சம்மந்தம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 12,667 
 

நந்தினி கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
வயலட் நிற ஷிபான் புடவை, அதில் சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள். அதே கலர் ரவிக்கை. ஒற்றை முத்து தோடுகள். முத்து வளை. கழுத்தில் மூன்று முத்துக்கள். வெள்ளை கைப்பை வெள்ளை குதிகால உயர்ந்த ஷூ.

வில்லாக இருந்த மெல்லிய புருவங்களின் கீழே வயலட் ஐ ஷேடோவை மெல்ல தீற்றினாள், ஐ லைனர், ஆழ்ந்த நிற லிப்ஸ்டிக், அதே நிற பொட்டு.
திருப்தியுடன் தன்னை முழுமையாக கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டு டிரஸ்ஸிங் டேபிளை விட்டு எழுவதற்கும், மரகதம் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

“நந்து இன்னைக்கு அப்பா சொன்ன மெட்ராஸ் பையன் உன்னை பார்க்க வருவதாக போன் பண்ணியிருக்கிறார். சாயந்திரம் கொஞ்சம் சீக்கிரம் வந்து விடு!” என்று சொல்லியபடியே மகளின் அழகைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.

“ம் . . . ம் . . .” என அசுவாரஸ்யமாக முனகிக் கொண்டே வெளியேறினாள் நந்து.

வராண்டாவில் நின்ற தன்னுடைய டி.வி.எஸ் 50ஐ ஸ்டாண்ட் தள்ளி ஏறியமர்ந்து ஸ்டார்ட் செய்தாள்.

அவள் அலுவலகம் போவதற்குள் அவளைப் பற்றிய சின்ன அறிமுகம்.
மரகதம் – சந்திரசேகரின் ஒரே சீமந்த புத்ரி இந்த நந்தினி. தந்தை பாங்க் மானேஜராக இருந்து சமீபத்தில்தான் ரிடையரானார்.

கிராமத்தில் ஏதோ கொஞ்சம் நிலபுலன்கள் இருக்கிறது. அதை சொந்தத் தம்பியிடமே குத்தகைக்கு விட்டிருக்கிறார்.

இதைத் தவிர டவுனில் அவர்கள் தற்பொழுது குடியிருக்கும் இரண்டு கிரவுண்டில் உள்ள இந்த வீடும் சொந்தமானது தான்.

நந்தினியை ஒரு டிகிரி ஹோல்டர் ஆக்கியிருந்தார். சந்திரசேகர் தன்னுடைய சிபாரிசால் அந்த பொம்மை கம்பெனியில் எக்ஸ்கியூட்டிவ் போஸ்டிங் வாங்கி தந்திருக்கிறார். திருமணம் வரை வேலை பார்க்கும்படி சொல்லியிருக்கிறார்.

அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன்.

சரி மேலே போவோம்.

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே செல்லவும், அலுவலகத் தோழிகள் நந்தினியை சூழ்ந்து கொண்டனர்.

“நந்தினி யூ லுக் ஸ்மார்ட்” என்றாள் வசந்தி.

“ப்யூட்டி ! என்றாள் சவுமியா.

“ஓ! லவ்லி!” என்றாள் பூமா.

நந்தினி ஒவ்வொரு நாளும் செய்து வரும் அலங்காரத்தைப் பார்த்து இப்படித்தான் வாய் பிளப்பார்கள். இது வாடிக்கையான விசயம்.
எல்லோருடைய ரசிப்புகளையும் ஒரு மெல்லிய சிரிப்பு மூலம் அங்கீகரித்துக் கொண்டு உள்ளே போனாள் நந்தினி.

அலுவலகத்தினுள் நுழைந்ததும் தன்னுடைய வேலைகளில் மூழ்கியதில் அம்மா சொன்னது ஞாபகம் இல்லை.

பைல்களை சரி பார்த்து முடித்து விட்டு மணியை பார்த்தபொழுது ‘திடுக்’ கென்றது அவளுக்கு . . .

‘அம்மா! ஒரு மணி நேரம் முன்னதாக வரச் சொன்னாளே! நாம் ஒரு மணி நேரம் தாமதமாக தான் போகப் போகிறோம் இன்று.’

‘அப்பா முறைப்பார். அம்மா சப்தம் போடப் போகிறாள் சமாளித்துதான் ஆக வேண்டும். அந்த மெட்ராஸ் பையன் வந்து காத்திருப்பாரோ. காத்திருக்கட்டுமே. அவளுக்குத் தெரியாதா? ஒரு அலுவலகத்தில் பொறுப்பான பதவியில் இருந்தால் என்னென்ன வேலைகள் இருக்கும் என்று தெரியாமலா இருப்பார்!

அவளுக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு தோழிகளிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.

அவள் எதிர்பார்த்தபடியே உள்ளே நுழைந்ததும் எதிர்ப்பட்ட அப்பா, அவளை முறைத்துப் பார்த்து மெல்ல சொன்னார். “அவர்கள் வந்து காத்திருக்கிறார்கள். முன்னாடி வரக்கூடாதா?”

“முக்கியமான பைல்கள் அனுப்ப வேண்டியிருந்தது. சாரி அப்பா”
தலைகுனிந்த படியே ஹாலில் அமர்ந்திருந்தவர்களைத் தாண்டி தன் அறைக்குள் நுழைந்தாள் நந்தினி.

பின்னாலேயே அம்மா போனாள். “இருந்தாலும் உனக்கு இத்தனை மறதி கூடாது. ஒரு மணி நேரம் முன்னதாக வரச் சொன்னால் இப்படியா லேட்டா வரது. அவாளெல்லாம் நாலு மணிக்கே வந்துட்டாங்க” படபடத்தாள்.

“சரி, சரி. இப்ப என்ன செய்யணும்?” என்றாள் நந்தினி.

“ சீக்கிரம் முகம் கழுவி டிரஸ் மாத்திகிட்டு வா!”

“நான் வரும்போதுதான் என்னை பார்த்துட்டாங்களே, மறுபடி என்னத்த பார்க்கப் போறாங்க? எரிச்சலடைந்தாள் நந்தினி.

“அப்படியெல்லாம் பேசப்படாது. நீ முகம் கழுவிகிட்டு டிரஸ் மாத்தாட்டி கூட பரவாயில்லை. சீக்கிரம் வெளியில் வந்து சேர்.” அம்மா மேற்கொண்டு பேசப் பிடிக்காமல் கட்டளையிட்டு விட்டுப் போனாள்.
பெற்றவர்களை நினைத்து நகைத்துக் கொண்டாலும், அவர்கள் சொல்லுக்கு கீழ்ப் படிந்து சிறிது நேரத்தில் ப்ரஷ்ஷாக வெளி வந்தாள்.
வந்திருந்த அவர்களுக்கு நந்தினியைப் பிடித்து போய்விட்டது என்பது அவர்கள் அகன்ற விழிகளில் நன்றாகத் தெரிந்தது.

சம்பிரதாயப் பேச்சுக்கள் பேசும்போது தான் இருப்பது நல்லதல்ல என்று நந்தினி உள்ளே போனாள்.

சிறிது நேரத்தில் அவர்கள் விடை பெற்றுக் கொள்வது காதில் கேட்டதும் மரியாதைக்காக நந்தினி வெளியில் வந்தாள்.

அவளிடமும் சொல்லிக் கொண்டு அந்தக் கும்பல் வெளியேறியது.
அவர்கள் போனதும் சந்திரசேகர் மகளை கூப்பிட்டார்.

நந்தினி, உனக்கு அந்தப் பையனை பிடித்திருக்கிறதா?

மவுனமாக அப்பாவை ஏறிட்டாள் நந்தினி.

“பையன் எம். காம். படித்திருக்கிறான். உன்னைப்போல அவனும் வீட்டிற்கு ஒரே பிள்ளை வரதட்சணையும் அதிகமா ஒண்ணும் கேட்கலை. முப்பது பவுன் போட்டா போதும் என்று சொன்னார்கள். மற்றபடி வீட்டிற்கு தேவையான கிரைண்டர், மிக்சி, பிரிஜ் எல்லாம் வாங்கி தந்தா போதுமாம். செல்வாக்கை பயன்படுத்தி பையனுக்கு ஒரு வேலை மட்டும் வாங்கி கொடுக்கணும். மற்றபடி நல்ல இடத்து சம்பந்தம்தான். பையனும் கண்ணுக்கு நீட்டா இருக்கான் என்ன சொல்றே?”

இதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த நந்தினி டக்கென்று எழுந்து உள்ளே போனாள். ஏதும் சொல்லாமல்.

“என்னடி, அப்பா கேட்கிறாரு எதுவுமே சொல்லாம போறே?” அம்மா பின் தொடர்ந்தாள்.

“யோசிக்க அவகாசம் தேவை. கொஞ்சம் பொறுமையா இருக்கியா?” வெடவெடத்தாள் நந்தினி.

அவள் வெடவெடப்புக்கு காரணம் புரியாமல் குழம்பிய மரகதம் கணவரைப் பார்க்க, சந்திரசேகர் கைகளால் சைகை செய்து அமைதியாய் இருக்கும்படி மனைவிக்கு கட்டளையிட்டார்!

இரண்டு நாட்கள் வரை நந்தினி யாரோடும் இதுபற்றி எதுவும் பேசவில்லை.

மரகதம் சந்திரசேகரும் அதுபற்றி அவளை தொந்திரவு செய்யவில்லை. மெல்ல யோசித்து சொல்லட்டும் என்று விட்டுவிட்டனர்.

அதற்குள் நந்தினியை பெண் பார்க்க வந்த செய்தி அலுவலகத்து தோழிகளுக்கு எட்ட, ஒரே கலாட்டாதான்!

“ஏய் கள்ளி யாருடி அந்த மன்மதன்?”

“உனக்கென்னப்பா உன் அழகுக்கு, வசதிக்கும் இன்ஜினியரும், டாக்டருமா க்யூவில் நிற்பாங்க எங்களைச் சொல்லு!”

“நந்தினி உன் ஆள் என்ன படிச்சிருக்கிறார், என்ன வேலை பார்க்கிறார்?”

தோழிகள் கலாட்டாவை வெறுத்து நந்தினி பேச்சை மாற்றினாள்.

“ஏய் இது என்ன புது அயிட்டம் இன்று?” – நந்தினி கையிலெடுத்து கேட்டாள் அந்த சிப்சை.

“அதான், நானும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இது பரங்கி பிஞ்சு மாதிரி இருக்கு!” – பூமா சொல்ல.

“இன்னைக்கு ‘லஞ்ச்’ பிரமாதம்டி. அந்த ஆளைப் பார்த்தா நம்ம பாராட்டை தெரிவிச்சுடணும்” என்றாள் சவுமியா.

“எக்ஸ்கியூஸ் மீ” என்ற குரல் கேட்டு தலை நிமிர்ந்தனர். தோழிகள் தங்கள் கமெண்டை நிறுத்தி விட்டு. எதிரில் க்யூட்டான அந்த ‘டெஸ்க் லஞ்ச்’ காண்ட்ராக்டர் வாஞ்சிநாதன்.

“லஞ்ச்’ எல்லாம் நேரப்படி வருதா? ஏதாவது குறைகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக்கிறோம்” என்று பணிவோடு சொன்னான் வாஞ்சிநாதன்.

“ஏன் சார், இன்றைய அயிட்டத்தில் அந்த சிப்ஸ் எந்த காயில் செய்தது?” பூமா கேட்டாள்.

“பரங்கி பிஞ்சு!”

“ஓ! வெரி நைஸ்! நாங்க இது மாதிரி கேள்விப்பட்டதே இல்லை, சாப்பிட்டது ம் இல்லை ரொம்ப பிரமாதம் சார்” என்றாள் சவுமியா.

“தாங்க்ஸ்!” என்றான் வாஞ்சிநாதன்.

“உங்களை ரொம்ப நாளா ஒண்ணு கேட்கணும்னு ஆசை, கேட்கலாமா சார். கோவிச்சுக்க மாட்டீங்களே?” வசந்தி கேட்டாள்.

“சும்மா கேளுங்க!”

“நீங்க எதுவரையிலே படிச்சிருக்கீங்க?

“பி. எஸ். சி. கெமிஸ்ட்ரி”

“ஏன் மேலே படிக்கலை?”

“வீட்டுச் சூழ்நிலை இடங்கொடுக்கலே!

“ஏன் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தீங்க?”

“எல்லோருமே ‘ஒயிட் காலர் ஜாப்’ வாங்கணும்னு ஆசைப்பட்டா எப்படி? ஆரம்பத்தில் நானும் அப்படி ஆசைப்பட்டு போடாத அப்ளிகேஷன் இல்லே. ஏறாத அலுவலகம் இல்லே. எங்கேயும் வேலை காலியில்லை. சும்மா இருக்க பிடிக்காம, என் குடும்ப சுமையை குறைக்க இந்த சுய தொழில் வேலையை மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேன்.”

அவன் சொன்னதை வியப்புடணும், ஆர்வத்துடனும் கேட்டுக் கொண்டிருந்த நந்தினி நன்றாக இப்பொழுது அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
‘ஏன் மேடம், எல்லோரும் என்னை மனம் திறந்து பாராட்டிட்டாங்க ஆனா நீங்க மட்டும் மௌனமாக இருக்கிறதைப் பார்த்தா . . . எங்க லஞ்சிலே ஏதாவது குறை இருக்கிறதா நான் உணருகிறேன் உண்மையா?
அவசரமாக மறுத்தாள் நந்தினி “நோ, நோ. எல்லாமே நன்றாக இருக்கிறது!” அவள் சொன்னது அவனையும் சேர்த்துத்தான்!”

அவளுக்கும் ‘தாங்க்ஸ்’ சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டான் வாஞ்சிநாதன்.

நந்தினிக்குள் ஒரு தீர்க்கமான, தெளிவான முடிவு தெரிந்தது.
அந்த முடிவை தன் பெற்றோர்களிடம் தெரிவித்தபோது வீட்டிற்குள் பூகம்பம் வெடித்தது.

‘இதப் பாரு நந்தினி, நான் ஒரு ரிடையர்ட் பாங்க் ஆபிஸர் நீயோ பிரபல கம்பெனியில் வேலை பார்க்கிற ஒரு எக்ஸ்கியூட்டிவ் ஆபிசர். அப்படியிருக்க போயும், போயும் ஒரு சோத்துக் கடைக்காரனை இந்த வீட்டு மாப்பிள்ளையா கற்பனை பண்ணகூட எனக்கு இஷ்டமில்லே. இது நல்லாயில்லே. நம்மைத் தேடி வந்த நல்ல சம்பந்தத்தை உதறிவிட்டு. உனக்கேன் இப்படி புத்தி போகுது?” இரைந்தார்.

“எதுப்பா நல்ல சம்பந்தம் . . . வெறும் படிப்பை மட்டும் வைச்சுகிட்டு உங்க பெண்ணை பேரம் பேசிவிட்டு போறாததற்கு உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வேலை வாங்கிக்கிறதா? அதைவிட தன் சொந்தக் காலில் நிற்கிற அந்த சோத்துக் கடைக்காரனே மேலப்பா.”

“நந்தினி, நீ புத்தகத்தில் வர்ற கதைகளை படிச்சிட்டும், சினிமாவை பார்த்துட்டும் பேசற. ஆனால் நடைமுறைக்கு ஒத்து வருமா? உன்னை விட படிப்பிலும், வசதியிலும் குறைவான அந்தஸ்தும் உடைய அவன் என் மாப்பிள்ளையா வருவது. நெவர்!!’

“அப்பா! கொஞ்சம் யோசனை பண்ணிப் பாருங்க வரதட்சணை கொடுமைக்கு காரணம் பிள்ளையைப் பெற்றவங்க மட்டுமில்லே, உங்களைப் போல பெண்ணை பெற்றவங்களும்தான். பெண்ணை படிக்க வெச்சு அவைளைவிட மேலாக படிச்ச வரனை தேடறதாலும், வறட்டு கவுரவம் பார்க்கிறதாலும்தான்! இந்தக் கால இளைஞர்களோ ஏட்டுப் படிப்பை ஏராளமா படிச்சிட்டு வேலை தேட முயற்சி பண்ணாம, முயற்சி பண்ணினாலும ஒயிட் காலர் ஜாப்தான் பார்க்க வேண்டும் என்று நினைப்பதால் பெண்ணைப் பெற்றவர்களிடம் தம் படிப்பiச் சொல்ல ஏராளமான வரதட்சணை கேட்கிறாங்க.

உங்களைப் போன்ற பெற்றவர்களும் அவன் இன்ஜீனியர் படித்திருந்தால் போதும் வேலை கிடைக்கா விட்டால் போகிறது என்று வறட்டு அந்தஸ்து பார்த்து வரதட்சணை கொட்டிக் கொடுக்க தயாராகிறீர்கள். வாழ்க்கைக்கு வெறும் படிப்பு மட்டும் போதாது. தன் சொந்தக் காலில் நிற்கிற பொறுப்பும் வேணும். நான் தேர்ந்தெடுத்த அந்த வாஞ்சிநாதனிடம் திறமை, தகுதி, பொறுப்பு, முயற்சி எல்லாமே இருக்கு. அவரை பண்ணிக்கிறதுதான் நான் நல்ல இடத்து சம்பந்தமா நினைக்கிறேன். அதற்கு மேல உங்க இஷ்டம்.” சொல்லிவிட்டு அமைதியாக அலுவலகம் கிளம்பினாள் நந்தினி.

அவள் வாதத்தில் உள்ள உண்மை புரிய நேரமாயிற்று சந்திரசேகருக்கு.
பிறகென்ன! வாஞ்சிநாதனுக்கும், நந்தினிக்கும் நல்லதொரு நாளில் பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் நடந்தேறியது.

– வாரமலர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *