குசலகாரி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 1,778 
 
 

ஊரில் நன்றாக வாழ்வோரின் குடும்பங்களைப்பிரித்து மகிழ்வதில் கில்லாடிப்பெண் தான் சங்காளி. ‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் விளங்காது’ என்பது பழமொழி என்றால் ‘சங்காளி புகுந்த வீட்டில் பங்காளி சண்டை தீராது’ என்பது புது மொழியாக இருந்தது.

கணவனை இழந்த அம்மாயிக்கு நான்கு ஆண் குழந்தைகள். நான்கு பேரும் திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக‌, ஒற்றுமையாக வாழ்ந்தனர். உறவுக்காரியான வயதான பெண் சங்காளியை வீட்டு வேலைக்கு உதவ வேலையில் சேர்த்துக்கொண்டனர்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். சங்காளி தன்னுடன் இட்லிக்கு மாவு ஆட்ட உதவிக்கொண்டிருந்த அந்த வீட்டின் நான்காவது மருமகளான சிவந்தியின் மனதைக்கரைக்க, கலைக்க ஆரம்பித்தாள்.

“உன்ற மொக லட்சணத்துக்கு ஒன்னங்கொஞ்சம் ஒசத்தியான எடத்துக்கே உன்ற அப்பங்காரன் கட்டிக்கொடுத்திருக்கலாம். ஒரே பையனா இருக்கற ஊட்டுக்கு கட்டிக்கொடுத்திருந்தா சொத்த பங்கு பிரிக்க வேண்டிய வேலையே இருக்காது. உனக்குப்பொறக்கற கொழந்தைகளுக்கே சொத்து பூராவும் சொந்தமாயிருக்கும். இந்த ஊட்ல ஒன்னா, ரெண்டா நாலப்பெத்துப்போட்டுட்டா உன்ற மாமியா‌.‌‌.. பந்திக்கு பண்ணற மாதர மூணு வேலைக்கும் அண்டாவ வெச்சு சோறாக்கற வேலையே தெனத்துக்கும் செரியா இருக்கும். ஒரு வேலைக்காரிக்கு பதிலா வேலைக்காரி மாதர தான் நீயும். அப்பறம் எங்க போயி மத்தது நடக்கும்? புருசங்கூடப்போயி சித்த சந்தோசமா பேசலாம்னா உன்னால முடியவா போகுது? ஆசப்பட்டத, ஆசப்பட்ட நேரத்துக்கு அனுபவிச்சு வாழோனும்னா தனிக்குடித்தனம் போனாத்தா முடியும். ம்.‌‌.. அதுக்கு உன்ற ஊட்டுக்காரன் ஒத்துக்கவா போறான்….? அவனத்தா மொதல் சிறுக்கி, அண்ணங்காரன் பொண்டாட்டி சிங்காரி தாஞ் சொல்லறத தலையாட்ற பொம்மை மாதர கேக்க வெச்சிருக்கறாளே…‌‌” இந்த வார்த்தையைக்கேட்டு அதிர்ச்சியடைந்தாள் சிவந்தி.

“நீ என்னாத்தா சொல்லறே…?”

“நானும் உன்ற சின்னாத்தா மாதர சொல்லறேன். உன்ற புருசங்காரனோட மொதல் அண்ணன் செங்கையன் பொண்டாட்டி சிங்காரி இருக்காளே அவதான் மத்த மூணு கொழுந்தனார்களையும் வித விதமா பலகாரத்த செஞ்சு போட்டு மயக்கி வெச்சிருக்கா. அவ எந்திரின்னா எந்திரிப்பானுக, உக்கார்னா உக்காருவானுக. பெத்தவ சொல் பேச்சு கூட கேட்க மாட்டாங்க. அவ எங்க பேசப்போறா ஊமச்சி? அதுலயும் உன்ற ஊட்டுக்காரன் இருக்கறானே சிங்கன் அவன் அவளஅண்ணின்னு கூப்புடாம அம்மான்னு தான் கூப்புடுவான். அவ கண்ணாலமாயி வார போது அவனோட ஆத்தா கிட்ட பால் குடிச்சிட்டிருந்தான்னா பாத்துக்குவே. அப்பறம் அண்ணியோட முந்தானையப்புடிச்சிட்டே சுத்துவான். புதுசா ஆராச்சும் பாத்தா உன்ற மவனான்னு கேட்டா ஆமான்னு சொல்லிப்போடுவாளாக்கும் சிங்காரி. எல்லாமே நடிப்புதாம்பாத்துக்க. அப்பத்தானே மாமியாளுக்கப்பறம் சொத்தப்பூராத்தையும் அவ பேருக்கு எழுதி வாங்கிக்கலாம்‌. உன்னப்பொண்ணுப்பாத்தப்ப அவ சரின்னு சொன்னதனாலதான் உன்ற புருசன் உன்னக்கட்டிட்டான்னா பார்த்துக்குவே….” இந்த வார்த்தை சிவந்திக்குப்பிடிக்கவில்லை.

பகலில் மட்டுமல்லாது இரவிலும் தனி அறையில் தனியாக கணவனுடன் பேசும் சந்தர்ப்பம் அடிக்கடி கூட்டுக்குடும்பத்தில் வாய்ப்பதில்லை எனும் வருத்தம் அவளிடம் எப்போதும் உண்டு. இன்று சிங்காரி தனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாலும், பிறந்த வீட்டில் கணவனுடன் தங்கியதாலும் சிவந்திக்கு சிங்கனுடன் தனிமையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

தனிமையால் மனைவியைத்தொட வந்தவனைத்தடுத்தாள். முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு போர்வையால் தன்னை முழுமையாகப்போர்த்தியபடி திரும்பிப்படுத்துக்கொண்டாள். நடு இரவாகியும் தூங்காமல் படுக்கையில் கணவன் அமர்ந்து கொண்டு இருந்ததால் மனமிறங்கி திரும்பி அணைத்தவள் “நான் ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே….?” என்றாள் கொஞ்சலாக.

“கேளு…” என்றான்.

“என்னை உங்களுக்கு புடிச்சதால கல்யாணம் பண்ணிகிட்டீங்களா? உங்க அண்ணிக்கு புடிச்சதாலையா?”

“சிங்காரி அம்மாவச்சொல்லறியா…?”

“ஆமா. அவளத்தான் சொன்னேன்” கோபத்தை வரவழைத்து பேசியவளின் கன்னத்தில் சற்றும் யோசிக்காமல் அறைந்தான்‌ சிங்கன். வலி தாங்க முடியாமல் தேம்பி அழுதாள் சிவந்தி.

“அவள்னு சொன்னதுக்கே கட்டுன பொண்டாட்டின்னு பாக்காம அறைஞ்சு போட்டீங்களே… மத்ததெல்லாம் கேட்டா என்ன பண்ணுவீங்க?”

“மத்ததுன்னா என்னடி கழுத….?” மறுபடியும் அறைய முற்பட்ட போது எதிர்த்து கணவனது கைகளைப்பற்றித்தடுத்தவள் கதவைத்திறந்து வெளியே திண்ணையில் போய் பாய் விரித்துப்படுத்துக்கொண்டாள். வேறு ஏதும் விபரீதம் நடந்து விடாமல் இருக்க விடியும் வரை உறங்காமல் மனைவிக்கு காவலிருந்தான் சிங்கன். நடு இரவில் தாய் அம்மாயி எழுந்து வந்து ஜாடையில்  கேட்க, புழுக்கம் தாங்க முடியாமல் வெளியில் படுத்திருப்பதாக பொய் சொன்னான்.

அன்று இரவு நடந்த வாக்கு வாதத்தால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. சிங்கனும், சிவந்தியும் நடந்து கொள்ளும் விதத்தால் அவர்களுக்குள் ஊடல் ஏற்பட்டுள்ளதைக்கண்டு பிடித்து விட்டாள் தந்தை வீட்டிலிருந்து வந்த சிங்காரி. 

“சிவந்தி…”

“என்ன?” ஒருமையில் முகத்தை வெடுக்கெனத்திருப்பியவாறு கேட்டாள்.

“கோபமா..‌?”

“ஆமா..‌.”

“என்ற மேலயா….?” வருத்தத்துடன் கேட்டாள் சிங்காரி.

“ஆமா..‌‌..” என்றாள் அழுத்தமாக சிவந்தி.

சுந்தரியின் கண்களில் கண்ணீர் பெருகியது. “உன்னை ஒரு தங்கச்சி மாதிரி நெனைக்கல. மாமியார் ஸ்தானத்துல இருந்து மருமகளாத்தான் நெனைச்சேன். ஏன்னா சிங்கன் என்னோட மொதல் பையன். அவன் பால் குடிக்கிற வயசுல நான் இந்த வீட்டுக்கு மருமகளா வாழ்க்கைப்பட்டேன். என்ற மாமனாரு போனதுக்கப்புறம் ஊமையான மாமியாவால பசங்கள வெச்சு சோறாக்கிப்போட்டு வாழ முடியாம அவங்க அண்ணனோட பொண்ணு என்னை தன்னோட மொதல் பையனுக்கு கட்டி வெச்சுட்டு மணவறைல வாழ்த்தற போது மத்த மூணு பசங்களையும் கூட நிறுத்தி, இவனுக உன்ற கொழந்தைங்கன்னு என்ற கையப்புடிச்சு அவங்க கையோட இணைச்சு ஜாடைல என்ற கிட்ட சொன்னாங்க. நானும் அதனாலயே கொழந்தை பெத்துக்காம அவங்க சந்தோசமே என்ற சந்தோசம்னு இன்னைக்கு வரைக்கும் வாழ்ந்திட்டிருக்கறேன். நீயே சொல்லு… என்ற பேச்ச உன்ற புருசன் கேக்கறது தப்பா? இப்பவும் சொல்லறேன் நான் அவங்க மூணு பேருக்கும் யசோதை தான். உன்னோட மனச நான் ஊருக்குப்போன ரெண்டு நால்ல யாரோ கூனி கைகேயி மனசக்கலைச்ச மாதர குசலம் வெச்சு குடும்பத்தக்கெடுக்க கலைச்சிருக்கறாங்க. அது மட்டும் எனக்கு நல்லாப்புரியுது. நல்லா இருக்கற குடும்பத்தப்பிரிக்க நெனைக்கிறவங்க நாசமாத்தாம்போவாங்க” என கூறி நிறுத்தியவள்,  சங்காளியை நெருப்பாகப்பார்த்த போது அவள் தலை குனிந்தாள்.

“சிங்கனோட சந்தோசத்துக்காக நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்‌. எல்லா சொத்தையும் உன்ற பேருக்கு வேணும்னா எழுதி வெச்சிடச்சொல்லி அம்மாயி கிட்ட சொல்லறேன். ஆனா இந்தக்குடும்பம் மட்டும் நாஞ்சாகற வரைக்கும் பிரிஞ்சு போக ஒத்துக்க மாட்டேன்…. ஏன்னா நான் மணவறைல என்னோட மாமியாருக்கு சத்தியம் பண்ணிக்கொடுத்திருக்கறேன்…. நாம் பொணவறைக்கு போற வரைக்கும் அந்த படைச்சவனே வந்து சொன்னாலும் சத்தியத்த மீற மாட்டேன்…” சொன்னவள் மீண்டும் கண்ணீர் விட்டாள்.

சிவந்திக்கு சிங்காரியின் வார்தைகளின் உறுதித்தன்மையால் பதில் பேச இயழவில்லை. இதை பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த சிவந்தியின் பத்து வயது மகள் ரயி தனது தாய் மடியில் அமர்ந்திருந்தவள் கீழிறங்கி பெரியம்மா சிங்காரி மடியில் போய் அமர்ந்து கொண்டாள்.

“குசலம்னு சொல்லறாங்களே, அது என்ன சங்காளி பாட்டி?” சிறுமி ரயி கேட்டாள்.

“அதுவா…? அது வந்து  நல்லா வாழற குடும்பத்துல இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி குடும்பத்த பிரிக்கிறது தான்….” உண்மையைச்சொல்லி விட்டாள்.

“அத எனக்கும் சொல்லிக்கொடுக்கறீங்களா…? ஏன்னா இந்தக்குடும்பத்துல இருந்து உங்கப்பிரிக்கோணும்” என்றாள் ரயி.

ஒரு சிறுமியிடமிருந்து இப்படிப்பட்ட பெரிய வார்த்தை வருமென சற்றும் நினைத்துப்பார்க்காத, ஒரு சிறுமியே தன்னை குசலகாரி எனப்புரிந்துகொண்டு விட்டாளே எனும் வருத்தம் மேலோங்க, சங்காளி  விக்கித்து, தலை குனிந்து மௌனத்தையே பதிலாக்கி நின்றாள்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *