கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 6,089 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கீர்த்திவாசன் கைக் கடிகாரத்தை ஒருமுறை உற்றுப் பார்த்துக் கொண்டு மதில் மீது இருந்து கீழே குதித்தான். அவனை இடித்தபடி உட்கார்ந்திருந்த சுந்தரம் சட்டை யைப் பிடித்து மேலே இழுத்தான்.

“கொஞ்சம் வேல இருக்கு. போகணும்” என்றபடி கீர்த்திவாசன் முன்னே ஓரடி எடுத்து வைத்தான்.

“எங்க? நாய் மாமா வீட்டுக்கா?” என்று முன்னே வந்தான் லோக நாதன்.

“டேய் இவன் நாய் மாமா கிட்ட நல்லா மாட்டிக்கிட்டான். நாய் மாமா தன் கிட்ட இருக்கிற ஒரு சொர்ணரேகாவை இவனுக்குக் கட்டி வச்சிடப் போறார்.’

கீர்த்திவாசன் திரும்பி சுந்த ரத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னே காலெடுத்து வைத்தான். ‘கீர்த்தி, மறந்து போயிடுச்சா. இது மயிலு வர்ற நேரம்.”

“ஆமாண்டா, மயிலு இன்னைக்கி சால்வார் கம்மீஸ் மாட்டிக்கிட்டு ஜெகஜெகன்னு வந்திருக்கு” என்று சொல்லிவிட்டு மதில் மீது தாவி ஏறி உட்கார்ந்து கொண்டான் லோக நாதன்.

”கீர்த்தி, திங்கக் கிழம நீ இல்ல. மயிலு சுத்திச் சுத்தி பார்த்துட்டுப் போச்சி…டேய். நிஜமா மயிலு உன்னத்தாண்டா சையிட் அடிக் குது ” – சுந்தரம் மதில் மேல் இருந்து இறங்கி வந்து இவன் தோள் மீது கை வைத்தான்.

இவன் பார்வை சிவப்பாய் பூத்துக்குலுங்கும் குல்மோகர் மரத் தைத் தாண்டி பெண்கள் மேல் நிலைப் பள்ளிப் பக்கம் சென்றது. மயில் என்று இவர்கள் பெயர் சூட்டியிருக்கும் சித்ரா மீது இவ னுக்கு ஒரு கண்தான். ஆனால் அவளோ இவனைப் பார்த்ததும் பயந்தது மாதிரி தலையைக் கவிழ்த் துக்கொண்டு ஓடிப்போய் விடுகிறாள்.

ஒருநாள் மயில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டாள். இவன் அவள் பின்னாலேயே நடந்தான். இரண்டு தெருக்கள் இவனைப் பார்க்காதது மாதிரி சென்றவள், திடீரென்று நின்று ஒரு சிரிப்புச் சிரித்தாள். சந்தோஷத்தில் இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே நின்று கொண்டிருந்தான். சாலையில் இரண்டு மூன்று பஸ்கள் சென்றன. அப்புறம் திடீரென்று சாலை வெறுமை ஆனது. மயிலைக் காணோம். பஸ் ஏறிப் போய்விட்டாள் போலும் என்றபடி மெது மெதுவாக நடந்தான்.

கடற்கரை வந்தது. நிழல் பரப் பிக்கொண்டு இருந்த ஒரு பூவரசு மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்து நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுத ஆரம்பித்தான். எழுத எழுத வார்த் தைகள் சரசரவென்று வந்து கொண்டே இருந்தன. எழுத எழுத நெஞ்சுக்குள் மயில் டக்டக்கென்று நடப்பது மாதிரி யும், தலையசைத்துச் சிரிப்பது மாதிரி யும் இருந்தது.

கீர்த்திவாசன் ஒன்றும் பெரிய படிப்பாளி இல்லை. தட்டுத் தடு மாறித்தான் பள்ளிக்கூடப் படிப்பை முடித்தான். அவன் வாங்கிய மார்க் கைப் பார்த்ததுமே அம்மா கலங்கிப் போய்விட்டாள். அன்றிரவு முழுவ தும் அவளுக்குத் தூக்கம் வரவே இல்லை. புரண்டு புரண்டு படுத் தாள். கொஞ்ச நேரத்திற்கு அப்புறம் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். மனத்தில் என்னென்னவோ யோசனை கள் எல்லாம் உதித்துக் கொண் டிருந்தன. விடியும் நேரத்தில் அவளுக்குத் திடீரென்று வக்கீல் மாமா நினைவுக்கு வந்தார்.

வக்கீல் மாமா நாராயணசாமி முதலியார் அவள் வீட்டிற்கு நான் காவது வீடு. அந்தத் தெருவிலேயே அதுதான் பெரிய வீடு. வீட்டின் முன்னே இரண்டு வேப்ப மரங்கள். காம்பௌண்டைச் சுற்றி உயர உயரமான தென்னை மரங்கள். மாமா ஐந்தாறு வருஷத்திற்கு முன்னா லேயே கோர்ட்டிற்குப் போவதை விட்டுவிட்டார். ஆனால் அவரிடம் யோசனை கேட்க வக்கீல்கள் அடிக் கடி வந்து போய்க் கொண்டிருந் தார்கள்.

வக்கீல் மாமா வீட்டில் ஏழெட்டு தாய்கள். இரண்டு கறவைப் பசு, ஒரு சமையல்காரன், இரண்டு தோட்டக் காரர்கள், ஒரு காவல்காரன், ஒரு கார் – எல்லாம் உண்டு. ஆனால் அவர் வீட்டு நாய்கள்தான் பிரசித்தி. உயரமான, குட்டையான, குண்டான, கருப்பான, வெளுப்பான என்று வித்தியாசமான நாய்கள். வித்தியாசமான நாய்களில் வித்தியாசமே இல்லாதது, எல்லாம் பொட்டை நாய்கள் என்பதுதான். எப்பொழுது பார்த்தாலும் ஒரு நாய் இரண்டு மூன்று குட்டிகளோடு அலைந்து கொண்டே இருக்கும்.

மாமா தன் வீட்டு நாய்களுக் கெல்லாம் சொர்ண மோகினி, சொர்ண சுந்தரி, சொர்ண கலா, சொர்ண ரேகா, சொர்ண லதா, சொர்ண சொரூபி என்று பெயர் வைத்திருந்தார். காலைப்பொழுதில் மாமா தனது சொர்ண சுந்தரிகளோடு வெள்ளை பனியனும் கருப்புப் பேண்ட்டும் போட்டுக் கொண்டு வேகவேகமாக நடந்து செல்லுவார். குளிர், மழை, வெயில் என்று ஒன்றையும் பார்க்கமாட்டார். காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து ஏழரை மணிக்குள் இரண்டு தெருக் களைச் சுற்றி வந்துவிடுவார். அந்த நடை நாய்களுக்கா இல்லை மாமாவுக்கா என்று சந்தேகப்பட்டவர்கள் கூட உண்டு.

புதிதாக பத்மநாபபுரத்திற்குக் குடி வந்த ஜானகி அம்மாள் காலைப்பொழுதில் நாய்களோடு நடந்து போகும் மாமாவைப் பார்த்து பயந்து போய்விட்டாள். இரண்டு நாட்கள் கழித்து இவன் அம்மாவிடம், “யார் மாமி அது? எமதர்மன் மாதிரி விடியக் காலத் தில இருபது முப்பது நாய இழுத்து கிட்டு திரியறது” என்று கேட்டாள்.

”அப்படி சொல்லாதீங்கோ மாமி. இவர் பெரிய லாயர். இந்திரா காந்திக்கு எல்லாம் அட்வைஸரா இருந்தவர். இந்தப் பகுதியே அவா தாத்தா பெயரிலதான் பத்மநாப புரமென்று இருக்கு. நம்ப தெருவில வக்கீல் மாமா இருக்கறது நமக் கெல்லாம் பெருமை மாமி -” என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு கீர்த்திவாசன் அம்மா சொன்னாள்.

”யார் அம்மா. நம்ப நாய் மாமாவா?” என்று கீர்த்தி முன்னே வந்து நின்றான்.

‘போடா, தடியா?” அம்மா அவனை அடிக்க கையை மேலே தூக்கினாள். அவன் குனிந்து பின்னால் ஓடினான்.

‘பார்த்தா பெரிய மனுஷன் மாதிரிதான் தெரியுது. ஆமாம் மாமா பெயரு என்ன சொன்ன.”

“நாராயணசாமி முதலியார்.”

”மெட்ராஸ் முதலியா? பொண்டாட்டி புள்ள ஒண்ணும் இல்ல.”

‘மூணு வருஷத்துக்கு முன்னால தான் மாமி தவறிப் போயிட்டா. ரெண்டு பையன்கள். அமெரிக்காவில் இருக்கா. பொண்ணு ஆஸ்திரேலியாவில”

”இவ்வளவு ஜனம் இருந்துமா கிழம் தனியா இருக்கு. ஏன்… யாரும் கூட்டிக்கிட்டு போக மாட்டேன்னுட்டாங்களா?”

“இல்ல மாமி… மாமாதான் போக மாட்டேன்னுட்டார்.”

”ஏன்? எதுக்காம்?”

”பொறந்து வளர்ந்த ஊர் விட்டுட்டு கடைசி காலத்தில புத்தி உள்ள மனுஷன் வேற தாட்டுக்குப் போவானானுட்டார் மாமி!”

”ஏன் சரோஜா? மனுஷன் என்ன கொஞ்சம் கிறுக்கா?”

“மாமி, மாமா காதுல விழுந்தா. நாய விட்டுத்தான் உங்களக் கடிக்க விடுவார்” என்றபடி அவசர அவசர மாக உள்ளே சென்றாள்.

ஏழு ஆண்டுகளாக சரோஜா பத்மநாபபுரத்தில் குடியிருந்து வரு கிறாள். வக்கீல் மாமாவைப் பற்றி இப்படியொருத்தி சொல்லி அவள் கேட்டதே இல்லை. வக்கீல் மாமா என்றால் எல்லோருக்கும் பயம் கலந்த ஒரு மரியாதை. எதிரே அவரைப் பார்க்க நேர்ந்த போதுகூட தலை குனிந்தபடி வேகவேகமாகப் போய்விடுவார்கள். அவசியம் என்று வீட்டிற்குப் போனால் மாமா தன் னால் ஆனது என்றுதான் இல்லை – ஆகாது என்று சொல்லாமல் செய்து எதையும் முடித்துவிடுவார் என்று சொல்லிக் கொள்வார்கள்.

அவள் வக்கீல் மாமாவைத் தேடிக் கொண்டு இரண்டு முறை சென்றாள். முதல் முறை அவள் கணவன் சங்கர நாராயணன் ஞாயிற் றுக்கிழமை நாடக ஒத்திகை பார்த்து விட்டு ஸ்கூட்டரில் வரும்போது. அண்ணாசாலையில் பஸ்ஸில் அடி பட்டு போய்விட்டான். டி.வி.யில் தமிழ்ச் செய்தி கேட்டுக் கொண்டு இருக்கும்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் பாடி இருக்கிறது என்று ஒரு போலீஸ்காரன் வந்து சொன்னான். ஒரு நிமிஷம் அவ ளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பூமியே காலுக்குக் கீழே இறங்கு வது மாதிரி இருந்தது..

கீர்த்திவாசன் கையைப் பிடித்துக் கொண்டு சப்தமே இல்லாமல் அழு தாள். கொஞ்ச நேரத்தில் செய்தி தெரு முழுவதும் பரவி விட்டது. ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்க வந்து கொண்டே இருந்தார்கள்.

எதிர்வீட்டு சுந்தரமூர்த்தி அவள் பக்கமாக வந்து, ‘பாடிய எடுத்தாற என்னம்மா ஏற்பாடு பண்ணியிருக்க?” என்று மெதுவாக விசாரித்தார்.

“…”

“போலீஸ் கேஸ்… நம்ப சார் வேற குடிச்சிட்டு இருந்து இருக் கார். அதெ சொல்லியே நாலு பக்கமும் பணம் புடுங்கப் பார்ப் பாங்க… யாராவது போலீஸுக்கு தெரிஞ்ச ஆளு இருந்தா காரியம் சுலபமா நடக்கும்.”

“…போலீஸில நமக்கு யாரைத் தெரியும்” அம்மா முந்தானையை எடுத்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

”அம்மா, நம்ப வக்கீல் மாமா வுக்கு போலீஸில ஏகப்பட்ட செல் வாக்கு… மாமா ஒரு வார்த்தை சொன்னா போதும்…”

“…”

*நமக்கும் மாமாவுக்கும் நாய் விஷயத்தால ஒரு சின்ன தகராறு… ரெண்டு வருஷமா பேச்சு வார்த்தை இல்லை…”

அவள் தலை நிமிர்ந்து பார்த் தாள்.

“நீங்கள் மாமாகிட்டப்போனா. காரியம் செத்த நேரத்தில முடிஞ் சிடும்.”

அம்மா கீர்த்திவாசன் கையைப் பிடித்துக்கொண்டு நாராயணசாமி முதலியார் வீட்டிற்குச் சென்றாள். இவர்களைப் பார்த்ததும் நாய்கள் லொள்லொள் என்று குரைத்தன. அம்மா பயந்து போய் நின்றாள். அவன் முன்னே ஓரடி எடுத்து வைத்தான். எட்டி அம்மா அவன் கையைப் பிடித்தாள்.

நாய்களுக்கு மத்தியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி படித்துக் கொண்டிருந்த மாமா எழுந்து வந்தார். குரைத்த நாய்களை அதட்டி அமைதிப்படுத்தினார்.

”…எல்லாம் கேள்விப்பட்டேம்மா.”

அம்மாவுக்குத் தன் துயரத்தைத் தாள முடியவில்லை. முந்தானையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித் தாள்.

மாமா ஓரடி முன்னே வந்து கீர்த்தி கையைப் பிடித்து இழுத்து தன்னோடு அணைத்தபடி, ”அழா தேம்மா… நீ இந்த வயசில ரொம்ப கஷ்டப்பட்டுட்ட… பகவான் எதுக் குத்தான் இப்படி உன்ன சோதிக் கிறானோ தெரியல” என்றார்.

அவள் ஒன்றும் பதில் சொல்ல முடியாதவளாக சுவரோடு சுவராகச் சாய்ந்து கொண்டாள்.

“பாடி ஆஸ்பத்திரியிலதானே இருக்கு?”

“…”

“ஆஸ்பத்திரியில இருந்து நேரா பரியல் கிரெவுண்ட்டுக்கு எடுத்துக் இட்டுப் போறீங்களா? இல்ல வீட்டுக்கு வருதா.”

‘”…வீட்டுக்கு வந்துட்டுப் போகட்டும்.”

”சரி…. அதுதான் சரி. காலையில் பாடி வந்துடும்….அந்த வேலையை எல்லாம் நான் பார்த் துக்கிறேன்…. அப்புறம் யாருக்கெல்லாம் தகவல் சொல்லணும்…. போன் இருக்கு… இந்த போனி லேயே சொல்லிடலாம்.”

கீர்த்தி, அம்மாவையும் மாமா வையும் மாறி மாறிப் பார்த்தபடி இருந்தான்.

“இரு” என்பது மாதிரி மாமா கையைக் காட்டி விட்டு உள்ளே சென்றார். அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டாள். படுத்துக் கிடந்த சொர்ண ரேகா என்ற பெரிய நாய் எழுந்து முன்னே வந்தது.

”சொர்ணா”-என்று நாயின் தலையில் ஒரு தட்டுத் தட்டி பின்னால் அனுப்பிவிட்டு கீர்த்தி யிடம் ஒரு சின்ன பையைக் கொடுத் தார். அவன் தடவிப் பார்த்தான்.

”அவசர செலவு இருக்கும். அதுக்கு இருக்கட்டும் அம்மா”

“இல்ல மாமா… அவர் தன் கடைசி செலவுக்குன்னு கொஞ்சம் பணம் வச்சிட்டுப் போயிருக்கார்.”

“இருக்கட்டும்….இருக்கட்டும் அம்மா”

இரண்டு நாய்கள் குரைத்துக் கொண்டு வந்தன. மாமா அவற்றை அடக்கி இழுத்துக் கொண்டு பின் னால் சென்றார்.


கீர்த்திவாசனுக்கு ஒரு கல்லூரியிலும் அட்மிஷன் கார்டு வராமல் போகவே அம்மாவுக்கு மறுபடியும் பயம் பிடித்துக் கொண்டுவிட்டது. அவள் வாழ்க்கையின் நம்பிக்கையே இவன்தான். சவூதி அரேபியாவில் சிவில் எஞ்சினியராக இருக்கும் அவள் தம்பி பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு கடி தத்திலும், கீர்த்தியை சிவில் எஞ்சி னியராகவோ பி.காமாகவோ அனுப்பி வை அக்கா. மற்றதை யெல்லாம் நான் பார்த்துக் கொள் கிறேன் என்று எழுதிக் கொண்டே இருந்தான். அவள் தம்பியின் கடி தத்தை எடுத்து இவனிடம் கொடுத்தாள்.

”அதெல்லாம் அவரையே படிக் கச் சொல்லும்மா. நம்ப படிப்பெல் லாம் வேற என்று சொல்லி விட்டு தலையை ஒரு சிலுப்புச் சிலுப்பிக் கொண்டு போய்விட் டான்.

அவள் இரவு முழுவதும் யோசித் தாள். மனத்தில் இனந்தெரியாத கலவரமும் பயமும் மூண்டுவிட் டது. அவளால் படுத்திருக்க முடிய வில்லை. எழுந்து உட்கார்ந்து கொண்டாள். பரண் மீது எலி உருட்டுவது மாதிரி இருந்தது. விளக்கைப் போட்டாள். கீர்த்தி கால்களை நீட்டி மல்லாக்கப் படுத்து குறட்டை விட்டுக்கொண்டு இருந்தான். விளக்கைப் போட்ட தும் புரண்டு படுத்தான். அவன் தூக்கம் கலைந்துவிடுமோ என்ற பயத்தோடு அவசர அவசரமாக எழுந்து விளக்கை அணைத்துவிட்டு சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

கூர்க்கா தரையில் தடியால் தட்டிக் கொண்டு சென்றான். வேப்ப மரத்தில் இருந்து பறவை கள் கூட்டமாகக் கத்திக் கொண்டு பறந்தன. பால் வண்டி சென்றது. அவள் எழுத்து குளித்துவிட்டு ரேடி யோவில் சுப்ரபாதம் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

எட்டு மணிக்கு அவன் படுக் கையில் இருந்து எழுந்தான். அம்மா வைப் பார்த்ததும் அவனுக்குப் பயம் வந்துவிட்டது. “என்னம்மா, ராத்திரி எல்லாம் தூங்கவே இல் லையா?” என்று கேட்டான்.

“வக்கீல் மாமா, உங்கிட்ட என்னமோ பேசணுமாம். கூட்டிக்கிட்டு வரச் சொன்னார்.”

“நாய் மாமாவா, அம்மா.”

”உம்'”

”எதுக்கு அம்மா?”

”என்னக் கேட்டா,”

அவன் அவசர அவசரமாகக் குளித்துவிட்டு ஒரு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வந்தாள். இரண்டு பேரும் வக்கீல் மாமா வீட்டிற்குச் சென்றார்கள். நாய் களோடு கொஞ்சிக் கொண்டிருந்த மாமா இவர்களை உட்காரச் சொன் னார். அவள் கீர்த்திக்குப் பின்னால் வந்து நின்று திரிந்து கொண் டிருக்கும் நாய்களைப் பார்த்தபடி இருந்தாள்.

வக்கீல் மாமா ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ‘கீர்த்தி…எந்தெந்த காலேஜ்க்கு அப்ளிகேஷன் போட்டிருக்க?” என்றார்.

”தேவ்ராஜ் காலேஜில இங்கிலிஷ் லிட்.”

”அப்புறம்…”

‘செயின்ட் ஜார்ஜில பாட்டனி.”
“சரி”

“கருப்பண்ணன் செட்டி கல்லூரியில ஹிஸ்டரி.”

”சரித்திரமா?”

“…”

“கீர்த்தி படிச்சி மேல வந்துதான் குடும்பத்தை கரையேற்றணும்.”

”நீ ஒண்ணும் கவலப் படாதேம்மா. நம்ப கீர்த்தி படிச்சி பெரிய ஆளா வந்துடப்போறான்.”

அம்மா ஆச்சரியத்தோடும் இனங் கண்டு கொள்ள முடியாத ஆனந்தத் தோடும் மாமாவைப் பார்த்தபடி இருந்தாள்.

”காலேஜுக்கு அப்ளிகேஷன் போட்டு இருக்கற விவரத்தை எல்லாம் இங்க கொடு.”

கீர்த்தி சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த பேப்பரை எடுத்து மாமாவிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு, “சரி… நான் இன்னம பார்த்துக்கறேம்மா… நீ ஒண்ணுக்கும் கவலப்பட வேண்டாம்” என்றார்.

“மாமா, நான் உங்களத்தான் மலை போல நம்பி இருக்கேன் மாமா” என்று கரம் கூப்பினாள்.

“மலை மேல இருக்கிற ஏழு மலையான வேண்டிக்க அம்மா. அவர்தான் நம்ப எல்லோருக்கும் மேல… ஆனா ஒண்ணு… அவர் ரொம்ப வருஷத்துக்கு யாரையும் கஷ்டப்பட விடுறது இல்ல.”

அவள் மெதுவாக தலையசைத்த படி கீர்த்தி கையைப் பிடித்துக் கொண்டு மாமா வீட்டைவிட்டு வெளியில் வந்தாள்.


கீர்த்திவாசன் கருப்பண்ணஞ் செட்டியார் கல்லூரியில் சேர்ந்து மூன்று மாதங்கள் சென்றுவிட்டன. அவன் கிராப்பை மாற்றிக் கொண்டு விட்டான். பேண்ட் ஜீன்ஸாக மாறி விட்டது. மயிலைப் பிடிக்க நான்கு மணிக்கெல்லாம் மதில் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். மயில் வலையில் விழுந்துவிட்டது என்று தான் சிநேகிதர்கள் சொன்னார்கள். ஆனால் அவளோ தலை குனிந்த படிதான் போய்க் கொண்டு இருந்தாள்.

ஒருநாள் வக்கீல் மாமா வரச் சொள்ளதாக அம்மா சொன்னாள். இரண்டு நாட்கள் கழித்து காலைப் பொழுதில் சென்றான். மாமா முகச் சவரம் செய்து கொண்டிருந்தார். இரண்டு நாய்கள் இப்படியும் அப்படியுமாகத் திரிந்து கொண் டிருந்தன. கையைக் கட்டிக்கொண்டு தலையை நீட்டிப் பார்த்தான். பெரிய நாய் இவனைப் பார்த்து லொள் லொள் என்று குரைத்தது. பயந்துபோய் ஹாலுக்குள் சென் றான். ஹாலில் வரிசையாகக் கண் ணாடி வைத்த அலமாரிகள். ஒவ் வொரு அலமாரியிலும் தடித் தடி யான புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகத்தின் முதுகிலும் கொட்டை கொட்டையாகப் பெயர். குனிந்து படித்துப் பார்த்தான். சட்டம், சரித்திரம், பூகோளம், அரசியல், நாவல், கவிதை படித்துக் கொண்டே ஒவ்வொரு அடியாகக் காலெடுத்து வைத்து முன்னே சென்றான். நாற்காலி நகர்த்தும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.

”புஸ்தகம் பார்க்கிறீயா? பாரு…இங்க இருக்கற புஸ்தகத்தில பாதிக்கு மேல தாத்தா வாங்கினது… கொஞ்சம் அப்பா… ஒரு ஆயிரம் போலத்தான் நம்ப வாங்கினது” என்றபடி தாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார் வக்கீல் மாமா.

”பெரிய லைபரரி மாதிரியே இருக்கு மாமா…”

“பார்க்கிறவங்க எல்லாம் இப் படித்தான் சொல்லுறாங்க… நீ இப்படி உட்காரு” மாமா தனக்கு நேர் எதிராக இருந்த நாற்காலியைக் காட்டினார்.

கீர்த்தி அமர்ந்தான். காபி வந்தது. மாமா தலையசைத்தார். தயங்கியபடியே வாங்கி ஒரு மிடறு குடித்தான். கமகமவென்று காபி மணத்தது. கண்களை மூடியபடி இன்னொரு மிடறு குடித்தான். காபியின் சுவையில் மனம் நிறைந்து போனது.

”கீர்த்தி, நம்ப கண் டாக்டர் ஒரு ஆறு மாசத்துக்கு ஒண்ணுமே படிக்கக் கூடாதுன்னுட்டார். புஸ்தகம் படிக்காம இருக்கறது ஒரு வாழ்க் கையா? அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சிப் பார்த்தேன்… அப்பத்தான் உன் நினைப்பு வந்துச்சி…”

அவன் வக்கீல் மாமா முகத் தையே பார்த்தபடி இருந்தான். ஒரு சின்ன கருப்பு நாய் மாமா காலடி யில் வந்து குந்தி இவனை நிமிர்ந்து பார்த்தது.

”வாரத்தில மூணு நாள்…. திங்கள், புதன், வெள்ளி காலேஜ் விட்டதும் நேரா இங்க வர்ற… கைகால் அலம்பிட்டு ஒரு காபி சாப்பிட்டு விட்டு ஒரு புஸ்தகத்தை எடுத்து ஒரு பத்துப் பதினைந்து பக்கம் படிக்கற…”

கீர்த்தி அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தான்.

”புஸ்தகம் படிக்க நான், நீன்னு நிறைய பேரு வந்தாங்க… எனக்கு அந்தக் குரல் எல்லாம் பிடிக்கல… உன் குரல்ல ஒரு அழகு இருக்கு… அதான்,”

அவன் சந்தோஷமாக தலை யசைத்தான். மாலையில் சிநேகிதர் களைச் சந்தித்த போது மாமா வீட்டில் புஸ்தகம் படிக்கப் போகிற விஷயத்தை சொன்னான்.

“டேய், மாமாகிட்ட மாட்டிக் கிட்ட இல்ல. அவ்வளவுதான்… உன் கழுத்தில ஒரு சங்கிலிய கட்டி பத்தோடு பதினொன்னா உன்னை யும் ரோட்டுல இழுத்துக்கிட்டுப் போகப் போறார்…”

‘ஐயோ… பாவண்டா.”

“யாரு?”

“யாரு? எல்லாம் நாய் மாமா கிட்ட மாட்டிக்கிட்ட நீதான்.”

“போங்கடா” – அவன் கையை வீசிக்கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

அம்மா விளக்கேற்றி வைத்து விட்டு ஐயப்பன் படத்தின் முன்னே விழுந்து கும்பிட்டுக் கொண்டு இருந்தாள். அவன் நின்று ஒரு பார்வை பார்த்துவிட்டு சப்தம் இல்லாமல் உள்ளே சென்றான்.

திங்கள்கிழமை. அவன் தயங்கிய படி வக்கீல் மாமா வீட்டிற்குள் சென்றான். சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த மாமா, ”வா… வா…” என்று தலையசைத்து வரவேற்றார். அவருக்குப் பின்னால் நின்று கொண்டு இருந்த மூன்று நாய்கள் ஒரே குரலில் குரைத்தன. கையை முன்னே நீட்டி, நாய்களை அடக்கிவிட்டு அவனை உட்காரச் சொல்லி நாற்காலியைக் காட்டி னார்.

காபி வந்தது. தயங்கியபடியே வாங்கிக் குடித்தான். ஒரு பெரிய நாய் மெதுமெதுவாக இவன் பக்க மாக வந்தது.

“சொப்பனா” என்று மாமா நாயை அதட்டினார். அது நின்று நிமிர்ந்து பார்த்தது. ”உள்ள போ… பின்னால் உம்…” கையைப் நீட்டினார். அது பின்னால் சென்று சுவரோடு சுவராக ஒட்டிப் படுத்துக் கொண்டது. மாமாவையும் சொப்னா வையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

”கீர்த்தி நீ நாய்களைப் பற்றி படிச்சி இருக்க?”

அவன் நின்று கொண்டும் படுத்துக் கொண்டும் இருக்கும் நாய்களையே பார்த்தபடி இருந்தான்.

“..அறுபது எழுபது வருஷத்துக்கு முன்னால் அமெரிக்காவில ஒரு எழுத்தாளன் நாயை முன்னால வச்சி ஒரு நாவல் எழுதியிருக்கான். அவனுக்கு அமெரிக்காவை விட அந்தக் காலத்து சோவியத்தில் நல்லபேரு … மகா புத்திசாலி…. ஆனா வாழ்க்கை ஒன்னும் சரியா இல்ல… ரொம்ப கஷ்டம் நஷ்டம்… ஆனா எழுத்தில அதெல்லாம் இல்ல… ரொம்ப ஜோரா ஜொலிச் சிக்கிட்டு இருந்தான்… இன்ன வரைக்கும் அந்த ஜொலிப்பு அடங்கவே இல்ல… அதுதான் அவன் மகத்துவம்…”

ஒரு பழுப்புநிற நாய் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு இவ னுக்கு நேர் எதிராக கால்களை முன்னே நீட்டிக்கொண்டு உட் கார்ந்தது.

”கதை, ரொம்ப சின்னக் கதை. ஒரு சீமான் வீட்டுல ஒரு நாய் ரொம்ப சொகுசா இருந்துக்கிட்டு இருக்கு. அதை ஒரு வேலைக்காரன் திருடி விற்று விடுகிறான். அது தங்கம் எடுக்க வடதுருவத்த நோக்கி. நாய் வண்டி கட்டிக்கொண்டு நூற் றுக் கணக்கில் ஆட்கள் போய்க் கொண்டிருந்த காலம். சீமான் வீட்டு நாய தங்கம் எடுக்கப் போற ஒரு வண்டியில கட்டி விடுறாங்க… பாவம்… அதுக்குப் பழக்கம் இல்ல… ஓடவும் தெரியாம… வண்டி இழுக்கவும் தெரியாம ரொம்பக் கஷ்டப்படுது…”

அவன் மேல் சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான்.

”வண்டியில கூட கட்டியிருந்த. மற்ற நாய்கள் எல்லாம் சீமான் வீட்டு நாயைக் கடிக்க ஆரம்பித்து விட்டன. வண்டி ஓடலியேன்னு வண்டிக்காரன் சாட்டையை எடுத்து விளாச ஆரம்பிச்சிட்டான்… பாவம் சொகுசா இருந்த நாய்க்கு இப்பத் தான் உலகம் தெரிகிறது. அந்த மாற்றத்தை – இது புரிந்து கொள் வதை ஒரு ஞானி அறிந்துகொள்வது மாதிரியான ஒரு தொனியில் சொல்லி இருக்கிறான்…” வக்கீல் மாமா தெகிழ்ந்து குரல் உடைய சொன்னார்.

அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தான். மாமா பின்னால் திரும்பி தன் நாய்களை ஒருமுறை பார்த்துக் கொண்டார். படுத்துக் கிடந்த ஒரு புள்ளி நாய் எழுந்து உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு முள்ளே வந்தது. மணி ஐந்து அடித்தது. மாமா நிமிர்ந்து உட் கார்ந்து கொண்டார்.

“கீர்த்தி… நீ புதன்கிழமை வர்ற… அன்னக்கி நான் ஒண்ணும் பேசல… நீ தான் படிக்கற…”

அவன் தலையசைத்துக் கொண்டு எழுந்தான். இரண்டு நாய்கள் வாலை அசைத்தபடி இவன் பக்க மாக வந்தன.

மறுபடியும் அவன் மாமா வீட்டிற்குச் சென்றபோது மேசை மீது ஐந்தாறு புத்தகங்கள் இருந்தன. ஏதாவது ஒன்றை எடுத்துப்படி என்பது மாதிரி கையைக் காட்டி விட்டு மாமா கண்களை மூடிக் கொண்டுவிட்டார். அவன் ஒரு சரித்திரப் புத்தகத்தை எடுத்தான். பக்கங்களைத் தள்ளிக் கொண்டே மாமாவைப் பார்த்தான். கண்களை மூடியபடி கேட்க தயாராகிக் கொண்டு இருந்தார். நடுவில் இருந்து அவன் படிக்க ஆரம்பித் தான். குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் வாயை மூடிக் கொண்டன. தலையை மெல்ல மெல்ல அசைத்து மாமா அவன் படிப்பதை சந்தோஷ மாக செவிமடுத்துக் கொண்டிருந்தார்.

நாட்கள் ஆக ஆக படிப்பதில் அவனுக்கே ஒருவிதமான சந்தோ ஷம் இருப்பது மாதிரி இருந்தது. அப்புறம் படிப்பதைக் கேட்கும் வக்கீல் மாமா, பரவசத்தோடு ஒரு சின்னப் பையன் மாதிரி ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட் டுக்கொண்டு வந்தார். இடையிடையே நிறுத்தி, ”நல்லா படிக்கற… குரல் ரொம்ப வளமா இருக்கு” என்று பாராட்டிக் கொண்டு வந்தார். அவர் பாராட்டு மேலும் மேலும் அவனை ஆட்கொண்டது. சிநேகிதர்கள், மயில் எல்லாவற்றையும் விட படிப்பை அவன் முக்கியமாக எடுத்துக் கொண் டாள். அதிலும் சரித்திரம்: சரித்திர புத்தகமாகவே எடுத்து எடுத்துப் படித்தான். கல்லூரியில் பேராசிரியர் சொன்ன புத்தகங்களுக்கு மேலாக மாமாவிடம் புத்தகங்கள் இருந்தது அவனை ஆச்சரியமடைய வைத்தது. தன்னை அடக்க மாட்டாதவனாக, மாமா எங்க நூலகத்தில் கூடஆனந்த குமாரசுவாமி புஸ்தகமெல் லாம் இல்ல மாமா?” என்றான்.

அவர் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். சந்தோஷத்தில் முகம் மலர்ந்தது.

“எல்லாம் எங்க தாத்தா வாங் கினது… கொஞ்சம் அப்பா வாங்கிச் சேர்த்தது. நம்ப பண்ணி இருக்கற காரியம் என்ன தெரியுமா?”

அவன் பதிலொன்றும் சொல் லாமல் மாமா முகத்தையே பார்த்த படி இருந்தான்.

‘”அப்பா, தாத்தா வச்சிட்டுப் போயிருக்கற புஸ்தகத்தை எல்லாம் விற்காம வச்சியிருக்கிறதுதான். உம்… நீ…படி…” அவர் ஆனந்தகுமார சுவாமி புஸ்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னார்.

சிவதாண்டவத்தைப் படிக்கற போது அவனுக்குச் சில இடங்களில் புரிவது போலவும் பல இடங்களில் புரியாதது போலவும் இருந்தது. ஆனாலும் படித்துக் கொண்டே போனான். மூன்று பக்கங்கள் முடிந்தன.

“போதும்… இது போதும்” என்றார் மாமா.

அவன் படிப்பதை நிறுத்திவிட்டு மாமாவை நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன?”

“நான் வீட்டுக்குப் புஸ்தகத்தை எடுத்துக்கிட்டுப் போய் கொஞ்சம் படிச்சிப் பாக்கறேன் மாமா”

“நீ நாளைக்கு வா… நம்ப ரெண்டு பேரும் முதல்ல இருந்து படிக்கலாம்.”

அவன் புஸ்தகத்தை, எடுத்த அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டு சாவியை மாமாவிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தான். டி.வி. பார்த்துக் கொண்டிருந்த அம்மாவுக்கு அவன் வருகை ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக அவன் பத்துப் பத்தரை மணிக்குத்தான் வீட்டிற்கு வருவான். வந்தாலும் சாப்பிட உட்காரமாட்டான். டி.வி. பார்ப்பான். சாப்பிடக் கூப்பிட்டு கூப்பிட்டு அம்மா சோர்த்து போய் உட்கார்த்தபடியே தூங்கிப் போய் விடுவாள்.

சினிமா பார்த்துப் பார்த்து அப்பா மாதிரி ஆகிவிடுவானோ என்று ஒரோர் சமயம் அம்மா வுக்குப் பயம் வந்துவிடும். அந்தப் பயம் வந்துவிட்டால் கை காலெல் லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். நடுக்கத்தோடு மாங்காடு, திருவேற் காடு, திருமுல்லைவாயில் – என்று கோவில் கோவிலாகக் கிளம்பிப் போய்விடுவாள்.

”அம்மா, இந்த நாய் மாமா சுத்த மோசம் அம்மா” என்றபடி நாற் காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அம்மா பக்கத்தில் உட்கார்ந்தான்.

”ஏன்? எதுக்கு?”

”பின்ன என்னம்மா… படிக்க ஒரு புஸ்தகம் கேட்டா கொடுக்க மாட்டேங்கறார்.”

”கொடுப்பார். எல்லாம் கொடுப்பார்.”

“ஒரு நாளைக்கு புஸ்தகத்தை எல்லாம் சுட்டுக்கிட்டு வந்துடப் போறேன்.”

”அது என்ன சுடுறது.”

“அதுவா அம்மா, திருட்டு.”

“அடப்பாவி, அப்படி எல்லாம் ஒண்ணும் பண்ணிடாத” – அம்மா எட்டி அவன் கையைப் பிடித்தாள். அவன் தலையசைத்தான்.

திங்கள்கிழமை அவன் வக்கீல் மாமா வீட்டிற்குச் சென்றபோது அவர் ஊஞ்சலில் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் சொர்ண ரேகா, சொர்ண தாரா, சொர்ண சுந்தரி, சொர்ண லதா, இவனைப் பார்த்து சந்தோஷமாக தலையசைத்து வாலை ஆட்டின. மாமா கடிகா ரத்தை நிமிர்ந்து பார்த்தார். மணி நான்கு அடித்தது.

”தான் உன் வயசில இந்த மாதிரி ஒழுங்கா ஒரு காரியமும் செய்த தில்லை” என்றார் மாமா. பதி லொன்றும் சொல்லாமல் எதிர்நாற் காலியில் உட்கார்ந்தான். மாமா இடுப்பில் சொருகி இருந்த சாவிக் கொத்தை எடுத்து அவனிடம் நீட்டி னார். சாவிக் கொத்தை வாங்கிக் கொண்டு புஸ்தகம் எடுத்து வரச் சென்றான்.

வக்கீல் மாமா எழுந்து போய் நாய்களை பின்னால் கட்டிவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து மெல்ல அசைத்தார். சங்கிலி கிறீச்சிட ஊஞ்சல் அசைந்தாடிக் கொண்டிருந் தது. அவன் கையில் ஒரு புத்த கத்தோடு வந்து நாற்காலியில் உட் கார்ந்து நிமிர்ந்து பார்த்தான். ‘படி’ என்பது போல மாமா தலையசைத்தார். இரண்டு பக்கங்களைத் தள்ளினான். பார்வை ஓரிடத்தில் நிலை கொண்டது.

அவன் படிக்க ஆரம்பித்தான்.

‘நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்கு தாரர்கள். புனிதமும் பூரணத்துவ மும் பெற்றவர்கள். ஒரு பொழுதும் உன்னை பலவீனன் என்று சொல் லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு, பொறுப்பு முழுவதையும் உன் இரண்டு தோள் கள் மீது சுமந்துகொள். உன் விதி யைத் தீர்மானிப்பவன் நீயே என்று அறிந்துகொள். உனக்குத் தேவை யான வலிமையும் உதவியும் உனக் குள்ளேயே குடி கொண்டிருக்கின்றன.’

படிக்கப் படிக்கச் சந்தோஷம் கூடிக் கொண்டு போவது மாதிரி இருந்தது. அவன் குரலை உயர்த்தி படித்துக்கொண்டே போனான். பின் னால் இருந்து குட்டிகளோடு சொர்ண சுந்தரி முன்னால் வந்தது. அவன் ஒரு பக்கத்தைத் தள்ளிவிட்டு விட்டு மாமாவைப் பார்த்தான். அவர் கண்கள் மூடியிருந்தன.

“மாமா”

“…”

“மாமா”

அவன் புத்தகத்தை மூடினான். மாமா திடீரென்று கண் விழித்தது மாதிரி தலையசைத்துக் கொண்டார்.

அவன் நாற்காலியில் இருந்து எழுந்து அவர் பக்கத்தில் இருந்த புத்தக அலமாரி சாவியை எடுத் தான்.

”எதுக்கு எடுக்கற”

”புஸ்தகத்தை வச்சி பூட்ட மாமா.”

“வேணாம்… ஒண்ணும் வேணாம்.”

“…”

”நீ வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போய் படி.”

கீர்த்திவாசன் ஆச்சரியத்தோடு மாமாவை தலை நிமிர்ந்து பார்த்தான். அவர் முகத்தில் லேசாக சிரிப்பு மலர்ந்து கொண்டிருந்தது. பின்னால் இருந்து இரண்டு நாய்கள் ஆனந்தமாக விளையாடிக்கொண்டு வந்தன.

– சுபமங்களா, நவம்பர் 1995.

Sa_kandasamy சா.கந்தசாமி (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968-இல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *