கிழக்கு நோக்கிய மேற்கு மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 5, 2025
பார்வையிட்டோர்: 227 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மத்தியான உணவுவேளை முடிந்து பூட்டுவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார் தியாகர். 

பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள துலூஸ் பெருநகரின் பிரதான இரயில் நிலையத்திற்கு அண்மையி லுள்ளது தென்னிந்திய இலங்கை உணவகமான “யாதவா” 

இதன் உரிமையாளர் தியாகர் என அழைக்கப்படும் தியாகராசா. 

இவருடன் இவரது மனைவி, ஒரு வேலையாள். மூவரும் தான் உணவகத்தினை இயக்கி வருகின்றனர். 

இது ஒரு சிறிய உணவகம். 

சுமார் முப்பது பேர் ஒரே நேரத்தில் உணவருந்தக்கூடிய இடவசதி கொண்டது. 

அன்று மத்தியானம் அருகிலுள்ள அலுவலகங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் வந்து சாப்பிட்டுவிட்டுப் போய் விட்டனர். அவர்களில் அதிகமானோர் காசுக்குப் பதிலாக உணவுக்கென வழங்கப்படும் ‘ரிக்கற்’ தான் கொடுத்துச் சென்றனர். 

இந்த ‘ரிக்கற்’றுகளைச் சேர்த்து ஒரு கட்டாக அதற்குரிய அலுவலகத்திற்கு அனுப்பினால் இரண்டு கிழமையில் அதற்கான தொகை சிறிது கழிவு நீக்கி வந்துசேரும். 

இப்படி வந்துசேரும் தொகையில் ஏதாவது கடனை அல்லது கொடுக்குமதியைச் சரிக்கட்டிவிடுவார் தியாகர். 

இந்த ‘ரிக்கற்’ புத்தகம் அலுவலகங்களில் பணி புரிபவர் களுக்கு மிகுந்த கழிவுடன் கிடைக்கும். 

இதனால் வாடிக்கையாளர்களும் உணவகத்தினரும் நன்மையடைவர் என்றே கூறலாம். 

ஒருவர் திடீரென உள்ளே வந்தார். 

வாட்டசாட்டமான உருவம். அழகாக உடையணிந் திருந்தார். 

பிரான்ஸின் வடபகுதியைச் சேர்ந்த கலப்பில்லாத பிரெஞ்சு மனிதர் என்று கூறிவிடலாம். வெளிர் நீலக் கண்கள்…. 

“மன்னித்துக்கொள்ளுங்கள்… நேரம் பிந்தி வருகிறேன்…. சாப்பிடலாமா….” என்று கேட்டார். 

நேரம் பிந்தினாலும் ஏன் வருமானத்தை இழப்பான்… என்ற எண்ணத்தில்… “ஆம்… சாப்பிடலாம். உட்காருங்கள்…” என்றார் தனக்குத் தெரிந்த பிரெஞ்சு உச்சரிப்பில் தியாகர். 

“சலாட், மரக்கறி சமுசா, கோழிக்கால் தண்டூரி, பசுமதிச் சோறு, பருப்புக்கறி… அத்துடன் “போதோ வைன்’ போத்தல் என ‘மெனு’ புத்தகத்தைப் பார்த்து ஓடர் கொடுத்தார் வந்தவர். 

தியாகரும் ‘நல்ல ஓடர்’ எனச் சந்தோஷத்துடன் ஓடிஓடி வேலை செய்தார். மத்தியானச் சாப்பாட்டுக்கு வருபவர் களில் அதிகமானோர் விரைவுச் சாப்பாடு எனக் குறைந்த விலைச் சாப்பாட்டையே வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அவசரமாகப் போய்விடுவர். 

இரவுச் சாப்பாட்டுக்கு வருவோரில் சிலரே, ‘நல்ல சாப்பாடு’ என விலை கூடிய சாப்பாட்டைத் தெரிவுசெய்து குடிவகையும் எடுத்துக் கொள்வது வழக்கம். அப்படியான தெரிவின் போது தான் தியாகருக்கும் இலாபம் அதிகரிக்கும். 

உழைப்பதில் அதிக பணத்தை அரசு பல வகைகளிலும் வரிகளாகப் பெற்றுவிடும். மருத்துவக் காப்புறுதி, பென்சனுக்கான கட்டுப்பணம், ஒவ்வொரு சாப்பாட்டுக் கும் 19.6% வீதம் அரசுக்கு வரி, சமூகக் கொடுப்பனவுக் கான வரி, மாகாண, மாவட்ட, மாநகர சபைகளுக்கான வரிகள், ‘காஸ்’, மின்சாரம், தொலைபேசி என்ற செலவுகள் எல்லாம் முடிந்து இன்றைய நிலையில் இலாபம் பெறுவது மிகவும் சிரமமானதுதான். 

ஆனால், இன்றைய சூழ்நிலையில் தனக்கேற்ற வேறு வேலைகள் இந்நகரில் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் தான், ‘சுதந்திரமாக இயங்கலாம்’ என்ற முடிவில் ‘யாதவா உணவகத்தை வங்கிக் கடன் உதவியுடன் தியாகர் ஆரம்பித்தார். 

ஒரு ‘கிளாஸ் வைனை’ இழுத்துவிட்டு ‘சலாட்’டைச் சாப்பிட்டு முடித்தார். பின்னர் இன்னும் கொஞ்சம் வைனைக் குடித்துவிட்டு சமுசாவைச் சாப்பிட்டார். மிக நன்றாயிருக்கிறது என்றார். 

இது பிரெஞ்சுக்காரரின் நல்ல பண்புகளில் ஒன்று. நன்றாயிருந்தால் உடனேயே மனந்திறந்து பாராட்டி விடுவார்கள். 

‘யாதவா’ உணவகத்தின் மரக்கறி ‘சமுசா’ மற்ற இந்திய உணவகங்களில் வழங்கப்படும் சமுசாவைவிட கொஞ்சம் வித்தியாசமானது. 

வீட்டில் தயாரிப்பது போன்று மாவை முறைப்படி குழைத்து, அத்துடன் அவித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கப்பட்ட மசாலா வகைக்ளை அதனுள் பொதிந்து பொரித்து எடுக்கப்படுவதாகும். இதனைச் சுடச்சுட சாப்பிட்டவர்கள் மிக நன்றாயிருக்கிறது என்று கூறிச் செல்வதே வழக்கம்…. 

பசுமதிச் சோற்றையும் பருப்புக் கறியையும் கலந்து சாப்பிட்டுக் கொண்டு இடைக்கிடை கோழிக்கால் தண்டூரியையும் பதம் பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்கள் கலங்கின. உறைப்புக் கூடி விட்டதோ எனத் தியாகர் நினைத்துக்கொண்டார். 

“சாப்பாட்டில் காரம் கூடிவிட்டதோ…?” 

“இல்லை…. இல்லை…… சாப்பாடு நன்றாயிருக்கிறது…. எனக்கு என் மகனின் ஞாபகம் வந்துவிட்டது….” என்று சொல்லும்போதே அவருக்குப் புரக்கேறியது… 

உரத்துச் செருமி, இருமிவிட்டுத் தண்ணீர் குடித்தார். 

“நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா அல்லது ஸ்ரீ லங்கா வைச் சேர்ந்தவரா….?” 

“நாங்கள் இலங்கைத் தமிழர்….” 

“அப்படியா… நல்லது… நீங்கள் நல்ல கலாசாரத்தை உடையவர்கள்… உங்கள் குடும்ப வாழ்க்கை அற்புத மானது. 

எனது நண்பர் பாண்டிச்சேரி தமிழ்ப் பெண்ணை மணந்து அங்கேயே வாழ்கிறார். விடுமுறையில் வருடம் ஒருமுறை இங்கு வந்து போவார்…..நான் இருமுறை அங்கு போயுள்ளேன். 

அவர் அங்கு ஒரு தொழில் நிறுவனம் நடத்துகின்றார். அத்துடன் பிரெஞ்சு மொழியும் கற்பித்து வருகிறார். அவருக்குத் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் நன்கு தெரியும். 

இந்து தத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என்பனவும் ஓரளவு கற்று வருகிறார். இரு குழந்தைகளுடன் அவர்கள் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகவுள்ளதை நான் பார்த்துப் பாராட்டினேன்… 

சாப்பிட்டு முடித்துவிட்டு மிகுதியாகவிருந்த வைனை யும் கொஞ்சமாகக் குடிக்கிறார். 

“உங்கள் மகனின் ஞாபகம் வந்ததாகச் சொல்லிக் கவலைப்பட்டீர்கள்… மகன் எங்கே இருக்கிறார்…?” 

“அது பெரிய கதை….. அதனை உங்களுக்குச் சொல் வதில் கொஞ்சம் ஆறுதல்….. ஏனெனில்…. உங்களுக்குத் தான் குடும்ப வாழ்க்கையின் அருமை…. பாசம் புரியும்…..” 

வைனை உறிஞ்சுகிறார். 

நீலக் கண்கள் சிவந்து கலங்கி ததும்பி நிற்கின்றன….

“நான் பிரான்சின் வடகிழக்கிலுள்ள ஸ்ரார்ப்பூக் நகரத்தைச் சேர்ந்தவன்.” 

“உங்களுக்கு ஸ்ரார்பூக் நகரைத் தெரியுமா….?” 

“ஆம்… இரு முறை அந்நகருக்கு வந்திருக்கிறேன்…. அங்கு எனக்குத் தெரிந்தவர்கள்….. எங்கள் நாட்டவர் சிலர் இருக்கிறார்கள்…” 

“நான் அங்கு ஒரு நிறுவனத்தின் பணிப்பாளராக இருக்கிறேன்…. நாலாயிரம் ஈரோவுக்கு மேல் சம்பளம்… மற்றும் வசதிகள்…. 

இரண்டு வருடங்களாகக் காதலித்துத் திருமணம் செய்தேன். 

அவள் வேறு ஒரு நிறுவனத்தில் வரவேற்பாளராகக் கடமையாற்றினாள். பின்னர் எங்கள் நிறுவனத்திலேயே அவளுக்குக் காரியதரிசிப் பதவி பெற்றுக் கொடுத்தேன். ஒரு வருடம் சந்தோஷமாகவே கழிந்தது. 

செல்ல மகன் பிறந்தான். நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன். 

ஆனால் அவள் ஊதாரித்தனமாகத் தனது சம்பளத்தை யும் செலவு செய்து எனது சம்பளத்தையும் முடித்து விடுவாள். 

குடும்பம் என்பதை மறந்தவளாக வாழ முற்பட்டாள். சிக்கனம் என்பதே தெரியாது…. மகனின் வேலைகளைக் கூட கவனிக்க மாட்டாள்…. 

அதிகமாகக் குடிக்கவும் தொடங்கிவிட்டாள்…. 

எனது பணம் மட்டும் தான் அவளுக்குத் தேவைப் பட்டது. 

மகனைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்வது முதல் அவனுக்கு உணவு கொடுத்து படுக்கைக்கு அனுப்புவது வரை நானே செய்ய வேண்டியிருந்தது…. 

அவள் “டிஸ்கோ…. கசினோ…” எனப் பணத்தைச் செலவு செய்து திரிந்தாள். 

இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை எழுந்தது. தனது சுதந்திரத்தில் தலையிட வேண்டாமெனக் கூறிக் கொண்டு அவள் புதிய நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு இரவு நேரங் கழித்தே வீடு வருவாள்…. மகனுக்காக எல்லாவற்றையும் பல மாதங்களாகப் பொறுத்துக் கொண்டேன்….” 

“இன்னொரு சிறிய வைன் போத்தல் தாங்கோ…” மீண்டும் வைனை உறிஞ்சிக்கொண்டு தொடர்ந்தார்…. “ஒரு நாள் பொறுமை எல்லை மீறி… அவள் வார்த்தை களால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவள் முகத்தில் இரு முறை அறைந்துவிட்டேன்.” 

அவள் உடனே ‘பொலிஸை’ வரவழைத்துவிட்டாள். பொலிஸார் நீதிமன்றத்துக்குக் கொண்டுபோய் விட்டனர். 

அவள் புதிய நண்பனுடன் எங்கோ போய் இருந்து விட்டாள். 

மகன் என்னைவிட்டுப் போக மறுத்துவிட்டான். 

பொலிசார் மகனைத் தாயிடம் கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் மகன் அப்பாவுடன் தான் இருக்கப் போகிறேன் எனப் பொலிஸாரிடம் நேரேயே கூறி விட்டான். 

அவள் பின்னர் நீதிமன்றத்தில், மகனைத் தன்னிடம் தரும்படி வாதாடினாள்… மகனைத் தாயிடம் கொடுக்கும் படி நீதவான் தீர்ப்பளித்துவிட்டார். 

மகன் நீதிமன்றத்தில் அழுதபடியே அவளுடன் போனான்…. 

என் உயிரையே பறித்துக்கொண்டு போனதுபோல் இருந்தது…. 

எத்தனையோ இரவுகள் நித்திரையின்றி இருந்தேன்…. மகனின் விளையாட்டுப் பொருட்களைப் பார்க்கும் போதெல்லாம் அழுகையே வரும்…. 

எனது நிலையை எனது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறி, மாதம் ஒரு நாள் மகனைப் பார்க்க அனுமதி பெற்றுத் தந்தார்…. 

ஆனால் அதுவும் நான்கு மாதங்களுக்குமேல் நீடிக்க வில்லை… 

அவளுக்கும் மகனுக்குமென பெருந்தொகைப் பணம் மாதந் தோறும் செலுத்துகிறேன். அவள் அந்தப் பணத் துடன் புதிய நண்பர்களோடு நன்றாகக் குடித்துக் கும்மாளம் போடுவதாக அறிகிறேன்….” 

“நீங்கள் விவாகரத்துப் பெறவில்லையா….?” 

“அவள் புதிய நண்பனுடன் வாழ்கிறாள் என்பதை நீதி மன்றத்தில் நிரூபிக்க வேண்டும்…” 

அப்படி நிரூபித்தால்தான் விவாகரத்து கிடைக்கும்… அது சுலபமான வேலையல்ல….. 

இங்குள்ள சட்டங்கள் அப்படி…. 

பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்துக் கெடுத்து வருகிறார்கள்… 

பெண் விடுதலை எனக் கோஷம் போடுவதெல்லாம் போலித்தனமானவை…. 

ஆண்களுக்குத்தான் நீதி கிடைக்கவில்லை…. என்ன செய்வது…. 

என்னைப் போன்ற தந்தையின் நிலையில் இருந்து பார்த்தால்தான் பிரச்சினையை உணர முடியும்…. 

பாசப் பிரச்சினைக்கு முன் சட்டத்தை நீட்டக்கூடாது… கண்ணீர் நிறைந்துவிட்டது. துடைத்துக்கொண்டு… இங்கு துலூஸ் நகருக்கு புதிய நண்பனுடன் ஓடிவந்து விட்டாள். 

நான் கடந்த சில மாதங்களாக மகனைப் பார்க்க முடிய வில்லை. நீதிமன்றத்தில் மனுச்செய்தபோதுதான் அவள் இங்கிருப்பதாகப் பதில் கிடைத்தது. 

மகனைப் பார்க்க இங்கு வந்தேன்… மகனை ஒளித்து வைத்து விட்டு தன்னைத் தாக்க வந்ததாகக்கூறி பொலி சாரை வரவழைத்து விட்டாள். 

நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்தினர். அவளும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தாள். ஏன் அவளைத் தாக்கச் சென்றீரென நீதிபதி கேட்டார். 

நான் மகனைப் பார்க்கத்தான் அந்த வீட்டைத் தேடி அதன் வாசல்வரைதான் போனேன்… மகனைத் தான் அழைத்தேன். அவள் ஒளித்துவைத்துவிட்டு பொலிசாரை அழைத்தாள் என உண்மையைச் சொன்னேன். 

என்னிடம் மிகப் பிரியமான மகனுக்கு ஏதும் தீங்கு செய்து விடுவாள் என மனம் வருந்திக் கூறினேன். 

பிள்ளையின் பாதுகாப்பு நலன் கருதி குறிப்பிட்ட காலம்வரை பிள்ளை தாயுடன்தான் இருக்க வேண்டும்.நீர் அங்கு வீட்டில் போய் பிரச்சினை கொடுக்க வேண்டாம். இங்கு நீதிமன்றத்துக்கு வந்து மகனை மாதத்திற்கொரு தடவை பார்க்கலாம் என்றார் பாசம் புரியாத நீதிபதி. 

முதலில் என் மகனைக் கண்ணில் காட்டுங்கள் என்று உரக்கக் கத்தினேன்…. அடுத்த தவணையின்போது அழைத்து வருவதாக அவள் சொன்னாள். கடந்த மாதம் தான் இது நடந்தது. 

இந்த ஒரு மாதமும் ஒரு வருடம்போல் இருந்தது. 

இன்று காலை தான் மகனை என் முன் அழைத்து வந்தார்கள். 

என் செல்ல மகன் ‘பப்பா…’ என்று கத்தியவாறு ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். 

நீதிமன்றம் முடியும்வரை தான் என் மகன் என்னுடன் இருந்தான். என் முகத்தைத் தடவியவாறு சொன்னான்…” 

“பப்பாகவலைப்பட வேண்டாம்… நான் உங்கள் செல்ல மகனாகவே என்றும் இருப்பேன்… எனக்கு இப்போது ஏழு வயது முடிந்துவிட்டது…. இன்னும் ஐந்து வருடங்கள் பொறுங்கள்… அதன்பின் நான் உங்களிடமே வந்து விடுவேன்…. அதன் பின் சட்டம் எங்களைப் பிரிக்க முடியாது…நான் பாடசாலையில் எங்கள் ஆசிரியரிடமும் என் கவலைகளைச் சொன்னேன். அவர் உளவியல் ஆசிரியரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் என் பிரச்சினைகளைக் கேட்டு எனக்கு ஆலோசனை கூறினார். ஐந்து வருடங்களுக்குப் பின் “பப்பாவுடன் இருக்கலாம்… இப்போது நன்றாகப் படிக்கிறேன்.. ‘மம்மாவின் போக்குகள் குறித்து நீங்கள் கவலைப்படவேண்டாம்.” 

”பப்பா… நன்றாகச் சாப்பிட்டு நன்றாக இருக்க வேண்டும். ஐந்து வருடங்கள் விரைவில் கழிந்துவிடும்… உங்களுக்கு நேரங் கிடைக்கும்போது இங்கு வந்து என்னைப் பாருங்கள்… கவலைப் படக்கூடாது….பப்பா….” 

“ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்துக்கப்பாலிருந்து மாத மொரு முறை இங்கு நீதிமன்றத்துக்கு என்னால் வர முடியுமா….?” 

“எனக்கு எத்தனை வேலைகள் அங்கு இருக்கின்றன… இந்த நீதித்துறைக்கும் சட்டங்களுக்கும் எங்கள்…” 

விக்கல் எடுக்கிறது…. விம்முகிறார். 

எனக்கும் கண்கள் கலங்கி என்னவோ செய்தது. 

“கவலைப்படாதீங்க….. ஐந்து வருடம் மிக விரை வாகவே ஓடி விடும்…. உங்கள் மகன் புத்தியுள்ள பிள்ளை… உங்களைக் கவலைப்படக்கூடாது என்றல்லவா சொல்லி யிருக்கிறான்….நீங்கள் மகனுக்காகவேனும் கவலைப் படாமல் பொறுமையாக இருக்க வேண்டும்….” என மனதார ஆறுதல் வார்த்தைகள் கூறினேன். 

“இந்திய மண் ஒரு புண்ணிய பூமி…. அந்த மண்ணில் பிறப்பதை பெருமையாக நினைக்க வேண்டும்… அங்குள்ள கலாசாரம் எனக்குப் பிடித்தது…. 

ஒரு சில புறநடையானவர்கள் எங்கும் இருப்பார்கள் தான்…. 

ஆனால் அந்த பூமி….. 

மகன் என்னிடம் வந்ததும், அவனையும் அழைத்துக் கொண்டு வருடந்தோறும் பாண்டிச்சேரி செல்லவிருக்கி றேன். அங்கு என் நண்பர் எல்லா உதவிகளும் செய்வார்…. 

எனக்குத் தெரியும்…. உங்கள் நாட்டிலும் அரசியல் பிரச்சினைகள்; அதனால் இங்கு அதிகம் பேர் வந்திருக்கிறீர்கள்… 

அங்கு பிரச்சினை தீர்ந்தால்… நானும் கட்டாயம் அங்கும் போவோம்…” 

“அந்த நாள் எப்போது வரும் என்று தான் எம்மவர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்….” என்றேன். 

“சாப்பாட்டுக்குரிய பணத்தைவிட ஐந்து ஈரோ மேலதிக மாக வைத்துவிட்டு மீண்டும் ஒரு நாள் கட்டாயம் சந்திப் போம்” என்று கூறி கைகுலுக்கி விடைபெற்றார் அந்த மனிதர்… 

– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *