கிளியோபாட்ரா
(இதற்கு முந்தைய ‘சங்ககாலப் பெண் புலவர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)
உலகிலேயே மிகப் பழமையான புஸ்தகம் ரிக்வேதம்.
சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும், ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வான சாஸ்திர அடிப்படையில் இதை நிரூபித்துள்ளனர்.
அவர்கள் கணக்குப்படி குறைந்தது கி.மு 4500; அதாவது இன்றைக்கு 6500 ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியத்தில் அவை தொகுக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டு வரை எப்படிப் பல புதிய பாடல்களும் உள்ளதோ அப்படி ரிக் வேதத்தின் கடைசி மண்டலத்திலும் புதிய பாடல்கள் உள்ளன. தமிழ் சங்கப் பாடல்களில் கடை ஏழு வள்ளல்கள் என்ற குறிப்பு வரும் பாடல் மிகப் புதியது.
ஏனெனில் இப்படிப் பல காலத்தில் வாழ்ந்தவர்களை ஒருவர் தொகுத்து அடைமொழி கொடுக்க 200, 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். இது போலவே ரிக் வேதத்திலும் ஜமதக்கினி பரசுராமர் பாடல்கள் உள்ளன. பல யயாதி மன்னர்கள் (மஹாபாரதம்) குறிப்பிடப் படுகின்றனர். அவைகளை வைத்து வியாசர் காலம்வரை கடைசி பாடல்கள் நுழைக்கப் பட்டிருக்கலாம் என்பது பலரின் எண்ணம்.
தமிழ்ச் சங்கப் பாடல்கள் உருவாக 2500++ ஆண்டுகள் பிடித்தன. ஏனெனில் இடைச் சங்கப் புலவர்கள் பாடல்கள் சிலவும் இதில் அடக்கம். இதேபோல ரிக் வேதத்தில் 1100++ துதிகளும் உருவாக ஐநூறு ஆண்டுகள் பிடித்ததாக தற்கால அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
எகிப்து நாட்டில் ஆறு பெண்ணரசிகள் பிரபலமானவர்கள். ஆயினும் சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்த கிளியோபாட்ரா என்ற பேரழகியைப் பற்றி மட்டுமே பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். கழுதைப் பாலில் குளித்த சொக்க வைக்கும் அழகி கிளியோபாட்ரா. எனினும் அவர்கள் வெறும் ராணிகள் மட்டுமே. எவ்வளவு அறிவாளிகள் என்பது நமக்குத் தெரியாது.
ஆனால் ரிக் வேதத்தில் அதற்குப் பின்னர் வந்த உபநிஷத்துக்களில் வரும் பெண் அறிஞர்களைப் பார்க்கையில் நாம்தான் உலகிற்கே நாகரீகத்தைப் பரப்பினோம் என்று புரிகிறது. ரிக் வேதப் பெண் புலவர்கள் கெட்டிக்காரர்கள். சொல்லப் போனால் பழங்காலப் பெண்களின் உண்மைப் பெயர் எதுவுமே நமக்குத் தெரியாது.
ராமனின் அம்மா பெயரோ; பரதனின் அம்மா பெயரோ; பாண்டவர் அம்மா பெயரோ நமக்குத் தெரியாது. கெளசல்யா என்றால் கோசல நாட்டு ராணி; கைகேயி என்றால் கேகய நாட்டு ராணி; குந்தி என்றால் குந்தி நாட்டு ராணி; சோழமாதேவி என்றால் சோழ நாட்டு ராணி; பாண்டிமாதேவி என்றால் பாண்டிய நாட்டு ராணி. நமக்கு அவர்கள் அம்மா அப்பா வைத்த உண்மைப் பெயர்கள் தெரியாது.
சங்க இலக்கியத்தில் வரும் காமக்கண்ணியார் என்ற புலவரின் பெயர், ‘காமாட்சி’ என்று தமிழ்த் தாத்தா ஊவேசா, காஞ்சி மஹா பெரியவா, நற்றிணைக்கு உரை எழுதிய பின்னத்தூர் நாராயண ஐயர் ஆகியோர் கூறுகின்றனர். பல புலவர்கள் இதை ஆமோதித்திருக்கின்றனர்…
கிரேக்க நாட்டிலும், சுமேரியாவிலும் பாம்பு ராணி தேவி சிலைகள் கிடைத்துள்ளன. இவை 2000++ ஆண்டுப் பழமையுடைத்து சிந்துசரஸ்வதி நாகரீகத்திலும் பாம்பு வழிபாடு இருந்தது.
புறநாநூற்றிலும், தமிழ் கல்வெட்டுகளிலும் ராணிகளின் பெயரில் இந்த ‘தேவி’ உள்ளது. தேவன், தேவி என்பதை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் இறைவன், இறைவிக்கும்; ராஜா, ராணிக்கும் பயன் படுத்துவர். பூதப் பாண்டியன் தேவி என்பவர் பாண்டிய மன்னன் இறந்தவுடன், யார் சொல்லையும் கேளாமல் சிதைத் தீயில் ஏறி உயிர்விட்டது புறநானூறில் உள்ளது. தவிர, கல்வெட்டுக்களில் எண்ணற்ற இடங்களில் ‘தேவி’ உள்ளது. சாம வேதமும் சில பெண் கவிஞர்களைக் குறிப்பிடுகிறது.
வேத காலப் பெண்கள், சங்ககாலப் பெண்கள் தவிர, மேலும் பலர் தங்களின் தனித்துவத்தால் பிரபலமானார்கள்…
கார்க்கி வாஸக்ணவி (கி.மு. 850); மைத்ரேயி (யாக்ஞவல்க்யரின் மனைவி); நளாயினி; சாவித்திரி; கைகேயி (தசரதனின் டிரைவர்); பரதனின் தாய்; சீதா தேவி; மண்டோதரி; அகல்யா; அருந்ததி; குந்தி; திரவுபதி (சட்ட நிபுணி); தவிர மொத்தம் ஆறு ஒளவ்வையார்கள் உண்டு. ஒரு ஒளவ்வையார் திருவள்ளுவரின் சகோதரி என்று தமிழ்ப்புலவர் வரலாறு கூறுகிறது.
கண்ணகி; மணிமேகலை; புனிதவதி (காரைக்கால் அம்மையார்); திலகவதி (அப்பரின் சகோதரி); மங்கையர்க்கரசி பாண்டிமாதேவி; பூதப்பாண்டியன் தேவி (கணவனுடன் உடன்கட்டை ஏறிய புறநானூற்றுப் புலவர்); குந்தவை; கங்காதேவி (மதுரா விஜயம் எழுதிய ராணி); அகல்யாபாய் ஹோல்கர்; ஜீஜாபாய்; ஜவஹர்பாய்; புத்லிபாய் (காந்தியின் தாய்); கஸ்தூரிபாய் (மனைவி); மஹாராஷ்டிர ஜானாபாய்; முக்தாபாய் (ஞாநேஸ்வரர் சகோதரி); ஜான்சிராணி லட்சுமிபாய்; ராணி மங்கம்மாள்; வேலு நாச்சியார்; துர்க்காவதி; சாரதாதேவி; ராஸ்மணி; மா ஆனந்தமயி; ஆண்டாள்; மீராபாய்; சாசவாணி (மண்டனமிஸ்ரர் மனைவி); கானா; சங்கமித்ரை; லீலாவதி; சித்தூர் ராணி பத்மினி; வாசுகி (வள்ளுவர் மனைவி); சரோஜினிதேவி; ஆதிமந்தி (ஆட்டனத்தி); அமராவதி; வாசவதத்தா (உதயணன்); சகுந்தலா (துஷ்யந்தன்); மாளவிகா (அக்னி மித்ரன்); தாட்சாயணி (சிவன் மனைவி); சுலபா; ராஜ்யஸ்ரீ (ஹர்ஷர் சகோதரி); பிரபாவதி தேவி (சந்திர குப்தன்); அக்காதேவி (ஜெயசிம்மன்); ருத்ராம்பாள் (காகதீய வம்சம்); விஜயங்கா; ஆம்ர பாலிகா (அம்பா பாலிகா); விஜய பட்டாரிகா (சாளுக்கிய வம்சம்); காஷ்மீர் ராணி சுகந்தா; காஷ்மீர் ராணி தித்தா; மைலாதேவி; லட்சுமிதேவி; தாராபாய்; தாரா (வாலியின் மனைவி); ராணி மீனாட்சி (நாயக்க வம்சம்).
பாரதப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி; நேருவின் மனைவி கமலா நேரு; சகோதரி விஜயலட்சுமி பண்டிட்; எம்.எஸ்.சுப்புலட்சுமி; பாலசரஸ்வதி, கேபி சுந்தராம்பாள் போன்றவர்களை சேர்க்கவில்லை. அவர்கள் தற்காலத்தியவர்கள். சில பல காரணங்களால் புகழ் பெற்றவர்கள்.
அதேபோல வெளி நாட்டிலிருந்து வந்து மதத்துக்கும் நாட்டுக்கும் சேவை செய்த பெண்மணிகள் அன்னி பெஸன்ட் அம்மையார்; சிஸ்டர் நிவேதிதா (மார்க்கரெட் நோபிள்); புதுவை அரவிந்தாஸ்ராம அன்னை (பிரெஞ்சுப் பெண்மணி) ஆகியோரைச் சேர்க்கவில்லை.
அன்னை தெரஸா, கிறிஸ்தவ மதம் தவிர, மற்றவை எல்லாம் ஒதுக்கப்பட வேண்டியவை என்கிற அணியைச் சேர்ந்தவர் என்பதால் அவரையும் சேர்க்க முடியாது. குறுகிய மதவெறி கொண்ட கோஷ்டி.
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்” என்று பாரதி பாடினான். புறநானூறும், மனு ஸ்ம்ருதியும்; பெண்களை குடும்ப விளக்கு என்று சமஸ்கிருத நூல்களும், தமிழ் இலக்கியமும் வருணிக்கின்றன.
இல்லத்தரசிகள் வழிபடத் தக்கவர்கள், அவர்கள் மனைக்கு ஒளி ஊட்டுகிறார்கள். அவர்களுக்கும் அதிர்ஷ்ட தேவதைகளுக்கும் இடையே வேறுபாடு என்பதே இல்லை என்று மனு கூறுகிறார்.
புறநானூற்றில் 314 வது பாடலில் ஐயூர் முடவனார் என்ற புலவரும் இதை எதிரொலிக்கிறார். “மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன்” என்று இதே கருத்தை எடுத்தியம்புகிறார் பேயனார் என்ற புலவர்.
“ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர் போல மனைக்கு விளக்காயினள்” என்று கூறுகிறார். ஒளி ஊட்டும் அகலில் ஏற்றப்பட்ட ஒளிப்பிழம்பு போல இல்லத்திற்கு விளக்காகத் திகழ்கிறாள்” என்று பேயனார் பெண்களைப் புகழ்கிறார்…