கிளர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2025
பார்வையிட்டோர்: 205 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்பொழுது மனோகரமான மாலை வேளை அல்ல. இனிய தென்றல் உலவிக்கொண்டிருக்க வில்லை. நறுமண மலர்க் கொடிகள் மிகுந்த நந்தவனத்திலும் அவன் நிற்க வில்லை. 

டவுனிலிருந்து ஜங்ஷன் பிளாட்பாரத்திற்குக் கொணர்ந்து சேர்த்த வண்டியிலிருந்து இறங்கி, மறு வண் டியை எதிர்பார்த்துக் காத்து நின்ற கும்பலோடு கும்பலாக ஐக்யமானான் ராமனாதன். இரவு நேரம். மணி ஒன்பதரை. பனி கடுமையாகப் பெய்துகொண்டிருந்தது. சுற்றுப் புறத்தில் நின்ற மரங்களெல்லாம் குளிரால் விறைத்து நடுங்கியவைபோல் இலைகள் ஒடுங்கி நின்றன. 

ஏகக் கும்பல் பிளாட்பாரத்தில். பனிக்குப் பாதுகாவலாகப் ‘பிளாட் பார’க் கூரை யடியில் நெருக்கி நின்றனர் ஜனங்கள். அங்கு இடமில்லாததால் பலர் தலையில் துண்டை முக்கா டாகப் போட்டுக் கொண்டும், முண்டாசாகக் கட்டிக் கொண்டும், திறந்த வெளியிலும் மரத்தடிகளிலும் நின்று வம்பளந்து கொண்டிருந்தனர். கும்பலைப் பற்றியும், யுத்த காலப் பிரயாண அசௌகர்யங்கள் பற்றியுமே பேச்சு அடிபட்டது. அவன் ஒரு ஓரமாகப் போய் நின்று அனைத் தையும் கவனித்தான். 

எந்த ஸ்டேஷனிலும் எப்பொழுதும் இப்படி ஒரே கூட்டமாக இருப்பதைக் காண ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு. என்ன காரணம்? வண்டிகள் குறைந்ததாலா? அல்லது ஜனத்தொகை பெருகியதா? யோசித்தபடியே ‘பிளாட்பாரத்தில் அங்கு மிங்கும் உலவினான். திடீரென ஒரு நினைவு பிறந்தது. கூட ஒரு அழகி இருந்து அவளை யும் உடனழைத்துச் செல்ல வேண்டி வந்தால்! இந் நெருக் கடிகளைச் சமாளித்து அவளைக் கூட்டிச் செல்வது எவ்வ ளவு சிரமமாக இருக்கும்! இந் நினைப்பு ஒரு நிமிஷம்தான் நிலைத் திருந்தது. மறுகணம் அவன் விழிப்படைந்தான். பெண் நினைவையே அகற்றி, வாழ்வு முழுவதும் பிரம்மச் சாரியாகவே இருந்து, ஏதோ பிரமாத லட்சிய சேவை செய்யப் போவதாகப் பேசி வருபவன் அவன். எனவே அவன் மனதில் அவ்வித எண்ணம் தோன்றுவானேன்? சூழ்நிலையிலே தென்பட்ட அழகி எவளின் உருவமாவது அவன் சிந்தனையில் அவ்விதச் சலனம் ஏற்படுத்தி இருக்க முடியுமா? சுற்று முற்றும் பார்த்தான். கண்ணுக்கெட் டிய வரை பெண்கள் யாரையுமே காணவில்லை. 

பக்குவ நிலை பெறாத உள் மனதின் வெறியாட்டம் என்று எண்ணி அந் நினைப்பைத் துடைத்து விட முயன் றான். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. அவனது முயற்சிகளையும் மீறி அந்தச் சிந்தனை தோன்றிக் கொண்டே இருந்தது. ‘ஆமாம், ஒரு அழகி உன்னுடன் பிரயாணம் செய்யப்போகிறாள், உனது வைராக்கியத்தைப் பரிசோ திப்பவளைப் போல’ என்று தன்னுள் எதோ உணர்த்துவ தாக உணர்ந்தான். ‘பின்னால் நிகழவிருக்கும் சம்பவங்கள் முன்னதாகவே சிந்தையில் ஒளி வீ சும் என்பார்களே அந்த ரகத்தைச் சேர்ந்ததோ இது! சரி பார்ப்போமே!, என நினைத்தான். பின்பு ‘நாமென்ன திரிகாலமும் உணர்ந்த ஞானியா’ என்று கூறிச் சிரித்துக்கொண்டான். இவ்வள விற்கும் அவ் வெண்ணம் அவன் நினைவை விட்டு அகல வில்லை. உண்மையாகவே அழகி கி யாராவது வருகிறார் களோ என அவன் கண்கள் ஆராய்ந்தன. 

கொஞ்ச நேரத்தில் ஒரு கும்பல் வந்தது. அவ்வள வும் பெண்களே! ஆனால் ஒருத்தியாவது அழகியாய் இருக்க வேண்டுமே! கூலி வேலை செய்துவிட்டு ஊர் திரும்பும் பெண்கள். 

‘சபாஷ்! மனதின் நல்ல வெறியாட்டம், அதற்குத் தகுந்த ஏமாற்றம்;’ எனத் தனக்குத்தானே கூறிக் கொண் டான் ராமநாதன். 

அவனது சிந்தனைகளைத் துரத்தி அடிக்கும் தோரணையில் வெகு வேகமாக வந்து நின்றது ரயில். இருந்த கூட்டத் தில் சாவதானமாக நின்று, இடந்தேடி ஏறுவது என்பது இயலாத காரியம். 

எனவே, ராமனாதன் அவன் நின்ற இடத்திலே வந்து நின்ற -‘எஞ்சி’னுக்கு அடுத்தாப்போலி ருந்த வண்டியிலேயே ஏறினான். ஒரு வண்டிக் கதவு திறக்கப் பட்டால் போதுமே! ‘பொல, பொல’ வெனக் கும்பல் முழுவதும் அங்கேதானே சாயும்! பின்புற மிருந்து நெருக்கித் தள்ளிய கும்பலால் ரயில் ஏற்றப்பட்டான் அவன். அவனைத் தொடர்ந்து ‘மளமள’ வெனப் பலர் ஏறினர். 

ஏழெட்டுப் பேர் உள்ளே ஏறி இருப்பார்கள். உடனே கதவடிப் பெஞ்சுகளில் அக்காட்சியைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்த ராணுவ வீரர்கள் சிலர் தங்கள் சூரத் தனத்தைக் காட்டி மற்றவர்களை வெளியே தள்ளிக் கதவை இழுத்து மூடிவிட்டார்கள். 

அவ்வளவு நேரமும் மங்கலாக எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்துவிட்டது. ‘கம்பார்ட்மெண்’டிற்குள் கலவரம். வண்டிக்குள் இருள் படர்ந்ததும் பரஸ்பர அவ நம்பிக்கை தலை நீட்டியது. அங்கே ஒவ்வொருவரும் தங்கள் பொருள்களைப் பிறர் ‘அடித்துவிடக் கூடாதே எனப் பத்திரப் படுத்துவதில் ஈடுபட்டனர். ராமநாதனும் தன் கையிலிருந்த பையை மார்போடு அணைத்துக் கைகளைக் கட்டிக் கொண்டான். 

‘இங்கேயே ஏன் ஐயா நிற்கிறாய்? உள்ளேபோய் உட்காறேன்?’ என உத்திரவிட்டனர் பட்டாளத்து வீரர்கள். முன்னால் நின்றவர்கள் நகர்ந்து பெஞ்சுகளில் நெருக்கிக்கெண்டு அமர்ந்தனர். ராமநாதனும் மெதுவாக முன்னேறி ஒரு பெஞ்சில் அமர்ந்தான். 

இரண்டொரு நிமிஷங்களில் விளக்கு வெளிச்சம் வந்தது. ஆனால் மங்கலாகத்தான்; ஒவ்வொருவரும் அவ இவர் இடங்களில் வசதி செய்து கொண்டனர். ராமநாதனும் சௌகரியமாக அமர்வதற்காக நகர்ந்தான். 

‘குழந்தை படுத்திருக்கான் ஐயா. நெருங்காதே!’ என்றார் ஜன்னலருகில் இருந்தவர். அவருக்கு அடுத்தாற் போல் மூன்று நான்கு வயதிருக்கும், ஒரு சிறுவன் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். பாவம் சிறுவனைத் தொந்தரவு செய்வானேன் என்று இருந்த இடத்திலேயே வசதி செய்துகொண்டான் ராமநாதன். 

‘வேறு வண்டிக்குப் போ, ஐயா! 

‘இது என்ன உங்க சொந்த வண்டியா?’

‘சரிதான் போய்யா!’ 

‘இருக்கட்டும் ஸார். நெடுகப் போய்ப் பார்த்து விட்டுத்தான் வருகிறோம். இடம் இல்லை. நல்லா இருப்பே நீ!’ 

‘என்னடா இது எழவாயிருக்கு!’ 

மேற் கண்டவாறு சம்பாஷணை வண்டிக்குள் இருந்தும் வெளியிலிருந்தும் எழவே என்னவென்றறியத் திரும்பிப் பார்த்தான் ராமநாதன். 

தலைநிறைய சாக்கு மூட்டைகளையும், சாமான்களையும் தூக்கிக்கொண்டு நின்ற போர்ட்டர்கள் மிலிட்டெரிக்காரர்களுடன் சண்டை யிட்டார்கள். பின்னால் நின்ற ஒரு கிழவர் சமாதானமாக வேண்டிக்கொண்டு நின்றார். கடைசியாகக் கதவு திறக்கப்பட்டது. 

‘ஏறுங்க’ என்றார் கிழவர். 

அத்தனை நேரமும் அவருக்குப் பின்னால், ஒரு கையில் வீணையும் மறு கையில் ஒரு துணிப் பையும் ஏந்தி நின்று கொண்டிருந்த ஒரு அழகிய யுவதியும், அவளருகில் நின்ற ஒரு வாலிபனும் உள்ளே நுழைந்தார்கள். 

வாலிபன் போர்ட்டர்களிடம் இருந்த சாமான்களை வாங்கிச் சாமான்கள் வைக்கும் பலகையில் அடுக்கியவை போக பாக்கியை எங்கும் பரப்ப ஆரம்பித்தான். வண்டியிலுள்ளவர்கள் முணு முணுத்தார்கள். 

அவ்வாலிபன் அவ்வழகியின் அண்ணன் வயோதிகர் தந்தை என்பது அவர்கள் பேச்சு மூலம் தெளிவாயிற்று 

அந்த அழகி நேராக ராமநாதன் இருந்த இடத்திற்கு வந்து ‘ஸார், இதைக் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று வீணையை அவனிடம் நீட்டினாள். 

அவளது செய்கை அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. போகட்டும் பெண் என்ற பரிவுடன் அதை வாங்கினான். 

மறு நிமிஷம் அவள் படுத்திருந்த பையனின் கால்களை மடக்கி விட்டு அவன் அருகில் அமர்ந்தாள். ஜன்னலருகில் இருந்தவர் பெண்ணிடம் என்ன பேசுவது என்றெண்ணினாரோ அன்றி மனதிற்குள் புழுங்கி வெளியே மௌனமாயிருந்தாரோ, தம் பையன் தலையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு இடம் பண்ணிக் கொடுத்தார். சௌகரியமாக அமர்ந்ததும் அவள் ராமநாதன் கையிலிருந்த வீணையை வாங்கிக்கொண்டாள். பையை இன்னமும் மடியிலே வைத்திருந்தாள். 

‘பையைக் கீழே வையுங்களேன்!’ 

ராமநாதனது அந்த வேண்டுகோளைக் கேட்டதும் ‘அது நிறைய கண்ணாடிச் சாமான்கள் இருக்கின்றன. கீழேவைத்தால் உடைந்து போகலாம்’ என்று பதிலளித்து புன்னகைத்தாள் அவள். 

ராமநாதன் ஒன்றும் பதில் பேசவில்லை. அவளோடு ஏன் பேசினோம் என்று கூட எண்ணினான். அவள் நன்றாக அமர்ந்ததும் அவளது உடல் அவன் உடலோடு ஒட்டியது எழுந்து நிற்கலாமா என்றால் போர்ட்டர்களிடமிருந்து அவள் அண்ணன் வாங்கி அடுக்கிய சாமான்கள் பெஞ்சுக ளுக்கிடையே இருந்த இடம் முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்தன. ‘சே, என்ன!’ என்று தன் உடலைக் குலுக்கினான் அவன். 

‘நீங்க சௌரியமாக அமர்ந்து கொள்ளுங்கள். சிரமப்பட வேண்டாம்’ என்றாள் அவள். 

சாமான்களை எல்லாம் வாங்கி வைத்த அண்ணன் ராமநாதனுக்கு அடுத்தாற்போல் அமர்ந்தான். ராமநாதன் ‘ஸார் நீங்க இப்படி வந்து விடுங்களேன்’ என்று தனக்கும் அப்பெண்ணிற்கும் இடையில் அவனை வந்து அமரும்படி வேண்டினான். 

‘நீங்களே சும்மா இருங்க’ என்று சொல்லிவிட்டான் அவன். 

‘நீங்கள் கவலை யில்லாமல் இருங்கள் மிஸ்டர்’ என்றாள் அவள். 

‘அட அநியாயமே!’ என முணு முணுத்தது ராமநாதன் உள்ளம். அக்கிழவர் எதிர் பெஞ்சு ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். 

‘நீங்கள் இப்படி வந்து உட்காருங்களேன்!’ 

ராமநாதனின் அழைப்பைத் தலை யாட்டி நிராகரித்தி அக்கிழவர் ‘நீங்களே இருங்க. அடுத்தஸ்டேஷனில் இறங்கப் போகிறவன் நான்’ எனப் பதிலளித்தார். 

ராமநாதன் சூழ்நிலை மறந்து வேறு சிந்தனையிலீடுபட முயன்றான். முடியவில்லை. அந்த அழகியின் தேக ஸ்பர்சம் அவன் நரப்புகளைக் கிளுகிளுக்கச் செய்தது. அவன் மனப் பாம்பு, கட்டுண்டு அடைபட்டுக் கிடந்த பெட்டியின் மூடியை அவளது ஸ்பர்சம் திறந்து விடவே அது தறிகெட் டுத் தலைதூக்கி ஆட ஆரம்பித்தது. அவள் கைகளைக் கட்டிக் கொண்டு கம்பீரமாக அமர்ந்திருந்தாள். அவள் கண்கள் அவளது வள்ளைக் காதுகளை மறைத்துச் சுருண்டு கருநாகப் பாம்பெனத் தொங்கிய ஜடையை, காதுகளில் நடமிட்டு அசைவுதோறும் கழுத்தை முத்திட்ட லோலக்குகளை, அழகு முகத்தை அலங்கரித்த நாகரிகப் பொட்டை, பவள அதரங்களை, மின்வெட்டி மறையும் புன்னகையை, இருளாடும் கண்களை எல்லாம் எடை போட்டன. அவள் அணிந்திருந்த வெளிறிய நிற ஆடை அவள் அழகுக்கு அழகு பூசியது. ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து வெளியேறிய காற்று அவள் கூந்தலை அலங்கரித்த மல்லிகை மணத்தை வண்டி முழுவதும் சிதறிச் சென்றது. 

வண்டி நகர்ந்தது. நகர நகர விளக்கும் கொஞ்சங் கொஞ்சமாகப் பிரகாச மடைந்தது. என்றாலும் அவ் வண் டிக்குள் போதுமான வெளிச்சம் புகுத்தும் அளவுக்கு ஒளிபெய்யவில்லை. அம் மங்கல் வெளிச்சச் சூழ்நிலை ராமநாதனின் மனதில் என்ன வெல்லாமோ நினைவுகளைக் கிளறின. 

அவன் மன மன்றத்திலே ஆயிரம் ஆயிரம் நினைவுகள் சுழலிட்டன. சீறிப்பட மெடுத்தாடிய மனப்பாம்பு கற்பனா வெளியிலே விளையாடியது. ஒவ்வொருவர் மனதிலும் நல் லது, கெட்டது என இரு பகுதிகள் இருப்பதாகச் சொல் கிறார்களே அது பொய்யல்ல என்பது இத்தகைய சந்தர்ப் பங்களில் தான் புலனாகிறது. மனதின் நல்ல பகுதி பேசியது: ‘என்னப்பா, நைஷ்டிக பிரமச்சாரி! உனது உறுதிகளைத் தளர விடுகிறாயே. மனச் சஞ்சலம் அடைகிறாயே!’ என எச்சரித்தது. 

பெண்ணை விட்டு விலகியே வந்துகொண்டிருந்த ஒருவனை அவளோடு நெருங்குவதால் ஆபத்து எப்படி வந்து வளைகிறது என்ற நினைவு பிறந்தது ராமநாதனுக்கு. மெதுவாகக் கைகளை ஒடுக்க முயன்றான், கை அவள் உடலில் மோதியது. அவனுக்குச் சுரேல் என்றது. அவள் முகத்தில் எத்தகைய உணர்ச்சி பிரதிபலிக்கிறதெனப் பார்க்க வேண்டுமென்ற சபலம் எழுந்தது. ஏதேனும் சொல்லி விடுவாளோ என்ற பயம் வேறு. மனதின் கெட்டபகுதி ‘அவள்தான் நீ ஒன்றும் கவலைப்படாதே; தாராளமாக இருந்துகொள்’ எனக் கூறிவிட்டாளே, எனத் தைரிய மூட்டியது. அவள் பக்கம் திரும்பினான். அவளது நேர் கொண்ட பார்வை அவன் பார்வையில் பட்டுத்தெறித்தது. அதிலே வெறுப்பு மின்னவில்லை என்பதை அவன் கண்டான். அவனது செய்கைக்காக அவள் வருந்தவில்லை என்பதையுணர்ந்தான். 

அவளது தந்தையும் அண்ணனும் பார்த்திருப்பார்களோ, ஏதாவது எண்ணிக்கொள்வார்களோ என நினைத்து அவர்களைப் பார்த்தான். எவ்விதமான சிந்தனையும் பிரதி பலிக்காத முகத் தோற்றத்துடனிருந்தனர் அவர்கள். 

‘நீதான் எழுந்து நில்லேன்’ என மனதின் நல்ல பகுதி போதித்தது. ஆனால் இன்ப லாகிரியின் போதையேறிக் கிடந்த மறுபகுதி எழுந்து எங்கே நிற்பையாம்? எனச் சிரித்தது. இரண்டு பெஞ்சுகளுக்கும் இடைவெளியிலே படுக்கை, பெட்டி, சாமான் தட்டு முட்டு, சாக்கு மூட்டை என இக்குடும்பம் பரப்பி இருந்த கடை கிடந்தது. மற்ற இடமெங்கும் கும்பல் இந்தப் பக்கத்தில் சாமான் வைப்ப தற்கிருந்த பலகையைக்கூட இரண்டுபேர் ஆக்ரமித்திருங் தார்கள். அவர்கள் ரயில்வே சிப்பந்திகள். இப் பிரயாண நெருக்கடிச் சமயங்களில் கூடக் குளிப்பிரயாணம் கிளம்பியிருப்பவர்கள் ‘ப்ரீபாஸி’லே என்பது அவர்கள் சம்பாஷணை மூலம் விளங்கியது. 

அவள் அப்படியே அவன் மீது துவண்டபடியே இருந்தாள். அவள் தந்தையும் அண்ணனும் மௌனமாகவே வந்துகொண்டிருந்தார்கள். ராமநாதன் – மனக் கொந்தளிப்பைச் சிரமப்பட்டுச் சமாளித்து வந்தான். 

ஐந்து நிமிஷங்கள் கடந்திருக்கலாம். வண்டி ஒரு ஸ்டேஷனில் நின்று கிளம்பியது. ‘என்ன ஸ்டேஷன்?’ என்று கேட்டாளவள். தெரியாது’ என்பதே அவன் பதில். 

கிழவனார் கீழே குனிந்து நிமிர்ந்தவர் ஆரம்பித்தார்:- இந்தச்சேலையிலே சாமான்களைக் கட்டியது யாரு? நன்றாக கட்டப்படாதேர்? இத்தனை சாமான்களை ஏன் கொண்டு வரணும்? 

‘எல்லாம் மதனிதான் கட்டினாள்’ என மொழிந்தாள் அம்மெல்லியலாள் தன் கிள்ளை மொழியில். 

‘மதனி கட்டினா! மதினியா இப்ப கஷ்டப்படப் போறா? சாமானெல்லாம் கீழே சிந்துதே!’ கிழவர் முகாரியைத் துவக்கினார். 

‘போனது போக மிச்சம்’ என்றாள் மகள். 

‘நீ சும்மா இரு. பேசினால் தொணதொணக்க ஆரம்பிப்பார்,’ என மெதுவாக எச்சரித்தான் அண்ணன். 

‘நீங்களே சொல்லுங்க, ஸார் வாயில் (Voil) சேலையிலே இவ்வளவு சாமான்களைக் கட்டினாத் தாங்குமோ?’ என்றார் கிழவர் ராமநாதனைப் பார்த்து. 

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை ராமநாதனுக்கு. ‘சரிதான் ஐயா. சாமான் சிந்துவதைப் போய்ப் பிரமாதமாய்க் கவனிக்கப் போய்விட்டீரே! உம் மகளின் மனது சிந்துதே! அதற்குக் காரணம் என்ன? அதை நீர் கட்டிய துணி மெல்லியதா? அல்லது கந்தலா?’ என அவன் மனம் பேசியது. வெளியே ஒன்றும் சொல்லாமல் மௌனமாயிருந்தான். 

‘மன்னிதான் கட்டியது….’ என்றாள் மீண்டும் அவ்வலங்காரி. 

‘ஆனது ஆகிவிட்டது. இனிப் பேசி என்ன செய்வது. சிந்தியது போக பாக்கி இருக்கு என விடவேண்டியது தான்’, என்றான் ராமநாதன். 

‘இல்லை ஸார் எங்க மதனி இருக்காளே அவ சொன்னாக் கேட்டால்தானே!’ என்றாள் அவள். 

ராமநாதன் பதில் ஒன்றும் பேசவில்லை.

பின் பகுதியில் பேச்சு எழுந்தது. ‘எய் நடுவிலே இருக்கிற ஆளு வேறெல்லா போலிருக்கு!’ 

எல்லோர் காதுகளிலும் நன்றாக விழுந்தன அவ்வார்த்தைகள். மற்றவர் என்ன எண்ணினார்களோ! ராமநாதனுக்கு மட்டும் அவளது செய்கைகளை இதார்களும் இவ்வளவு நேரமும் கவனித்து வந்திருக்கிறார்கள் அவளுக்கு அவன் உறவு என்று எண்ணி இருந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. இம்பொழுது அவர்களுக்கிடையே நடைபெற்ற சம்பாஷணை மற்றவர்கள் மனதில் சந்தேகத்தைக் கிளப்பி அவன் வேறு என்ற உண்மையை அறிவித்தது. இனியும் சும்மா இருப்பார்களா! எதிர் வரிசையில் இருந்த ஒருவர் ‘அம்மா நீங்க இப்படிப் பெஞ்சுக் கடைசிக்கு வந்து விடுங்கள். உங்கள் அண்ணா அடுத்தாற்போல் வந்து விடலாம். மற்றவங்க நகர்ந்து உட்கார்ந்து கொண்டால் சரியாய்ப் போய்விடும்,’ என்றார். 

‘எப்படியாவது சனியன் ஒழிந்தால் சரி’ என்று சாந்தமடைந்தது ராமநாதனின் நல்லமனது. ‘இவனுக்கென்ன வந்தது?’ எனக் கனன்றது கெட்டமனது. 

‘ஆமாம் அப்படிச் செய்யம்மா,’ என்றார் தந்தை. அப்பொழுதுதான் அவர் அறிவுக் கண் திறந்தது போலும். 

அவளுக்கு அப்படிச் செய்ய மனமில்லை, ‘சே’ என முணுமுணுத்த வண்ணம் அவள் எழுந்துபோனா வண்டி அடுத்த ஸ்டேஷனிலே நின்று புறப்பட்டது. அங்குச் சிலர் ஏறினார்கள், உள்ளிருந்தவர்களின் பலமான ஆட்சேபணையையும் மீறி. 

‘இங்கே சௌகர்மாய் இல்லை. நான் பழைய இடத்திற்கே போறேன்,’ என எழுந்து வந்துவிட்டாள் அவள். 

உணர்ச்சிக்கு அணைபோட எத்தனித்த எதிர்பெஞ்சுப் போதகர் ‘பெண்கள் சௌகரியமாயிருக்குமே. அதிலே ஏற்றி இருக்கலாமே நீங்க,’ எனத் தந்தைக்கு உபதேசிக்கத் தொடங்கினார். 

‘இப்பொழுது என்ன குடி முழுகி போய்விட்டதாம்!’ என மீண்டும் கொக்கரித்தது ராமநாதனின் கெட்டமனது. ‘அடுத்த ஸ்டேஷனிலே நான் இறங்கணும். அப் பொழுது பெண்கள் வண்டியிலே ஏற்றிவிடுகிறேன்,’ என்றார் தந்தை. 

‘அதெல்லாம் வேண்டாம். நான் இங்கேயே இருக்கேன்,’ என முறைத்துத் தந்தையை வாயடக்கினாள் அவள். 

‘எனக்கும் அவளுக்கும் இஷ்டம். இதிலே உனக் கென்னடா தம்பி நஷ்டம்,’ என்ற பாட்டை ஒலிபரப்பினான் பலகைமேலிருந்து உல்லாசப் பிரயாணம் செய்யும் இருவரில் ஒருவன். 

ஆனால் அவள் ஒன்றையும் லட்சியம் செய்யவில்லை. அடுத்த ஸ்டேஷனில் இறங்கிய தந்தை மீண்டும் ஒரு முறை வேண்டினார். அவள் மறுத்துவிட்டாள். 

பாதையில் கவிழ்ந்து கிடந்த இருளைக் கிழித்துக் காண்டு ஓடி ஓடி முன்னேறியது ரயில். 

ஒரு ஜங்ஷன் வந்தது. வண்டியிலிருந்தோர் பெரும் பாலோர் இறங்கிவிட்டனர். எதிர் பெஞ்சில் பையனைச் சாவகாசமாகப் படுக்கச்செய்து, தானும் நீட்டி நிமிர்ந்து விட்டார் ராமனாதன் பக்கத்தில் இருந்தவர். அண்ணன் எழுந்து சோம்பல் முறித்தான். 

‘சாப்பாடு வாங்கு,’ என்றாள் அழகி. 

அவன் சாம்பார் சாதமும் தயிர் சாதமுமாக, இரண்டு பொட்டணங்கள் வாங்கிக் கொடுத்தான். பிறகு தான் போய்ச் சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்டு விட்டு வருவதாகக் கூறினான். 

‘தண்ணீர் வேண்டுமே,’ என்றாள் அவள். 

‘நான் வாங்கி வருகிறேன்,’ எனக் கூறிப்போனான் அவன். 

‘நீங்கள் சாப்பிடுகிறீர்களா?’ என்று ராமனாதனிடம் கேட்டாள் அவள் 

‘வேண்டாம்,’ என மறுத்துவிட்டான் அவன். 

அவள் சாப்பிடத் துவக்கினாள். ‘சே! ரொம்பமோசம். நன்றாகவே இல்லை!”என்ற சொற்கள் சாதத்தைப் பற்றிய விமர்சனமாக அவள் வாயிலிருந்து உதிர்ந்தன. 

உண்மையிலேயே அப்படித்தானா அன்றித் தான் சாப்பிடாததாலா என எண்ணினான் ராமநாதன். 

சாப்பாடு முடிந்தது. அண்ணன் வரக்காணோமே கைகழுவத் தண்ணீர் வேண்டுமே எனச் சடைத்துக் கொண்டாள் அவள். 

கீழிறங்கிப் போய்க் குழாயில் கழுவிவிட்டு வருமாறு யோசனை சொன்னான் ராமநாதன். அவள் இறங்கிப்போக விரும்பவில்லை பக்கத்து ‘ஸீட்’களில் இருந்த ஓரிருவர் கக்கூஸில் தண்ணீர் இருக்கும் என நினைவு படுத்தினர். அவர்கள் குரல் கேலியாக ஒலித்தது. 

‘ஆமாம் கையை முதலில் கழுவிவிட்டால் குடிக்க அண்ணன் தண்ணீர் கொண்டுவந்து விடுவான்’, என்று சொல்லி அவள் எழுந்து போனாள். 

போனவள் உள்ளே ‘குழாயைத் திறக்க முடிய வில்லையே!’ என்றாள். 

‘ஏன் ஸார், நீங்கள் போய் உதவி செய்வது தானே!’ என்றான் உல்லாஸப் பிரயாணி ராமநாதனிடம். 

அவள் வெளியே வந்தாள், 

‘ஸார் பம்பைத் திறக்க முடியவில்லை,’ என்றாள் ராமநாதனைப்பார்த்து. 

அவள் குரலும் பார்வையும் அவனை உதவிக்கு அழைக்கும் தோரணையில் விளங்கின. 

ராமநாதன் மௌனமாக இருந்தான். 

‘தண்ணீர் கிடைக்கலையே!’ என்று சொன்னபடியே வந்து சேர்ந்தான் அண்ணன். 

உண்மையாகவே ‘பைப்’பை அவளால் திறக்க முடிய வில்லையா, அல்லது அவள் நாடகம் ஆடுகிறாளா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ராமநாதன் அவள் மேலும் என்ன செய்யப்போகிறாள் என்பதை ஆவலுடன் கவனித்தான். 

‘சரி கை கழுவணும் பைப் திறக்க முடியவில்லை. நீ வா,’ என்று சொல்லி முன்னே போனாள் அவள். அந்த அதிசய அண்ணனும் பின் தொடர்ந்தான். 

மெய்யோ, பொய்யோ மிகவும் திறம்பட நடிக்கிறாள் என உணர்ந்தான் ராமநாதன். 

கை கழுவு படலம் முடிந்தது, தாகத்திற்காகக் கலர் வாங்கிக் கொடுத்தான் அண்ணன். அவள் அவளிடத்தில் வந்து அமர்ந்தாள். அண்ணன் பழையபடி ராமநாதனுக்கு அடுத்தாற்போல் அமர்ந்தான். 

‘கதம்பம்! கதம்பம்!’ 

அந் நடுச் சாம வேளையிலும் தன் வியாபாரத்தையே நோக்காகக் கொண்ட பூக்காரன் குரல் கொடுத்து உலவினான். 

‘அண்ணா கதம்பம்!’ 

‘எதற்கு? தலையிலேதான் பூ இருக்கே!’ 

‘வேணும்,வாங்கு!’ 

அவள் பிடிவாதம் பிடித்தாள். அண்ணன், ‘என்ன ஸார்?’ என்று ராமநாதனிடம் ஆலோசனைக்கு வந்தான். 

‘வாங்கிக் கொடுங்களேன்,’ என்ற ராமநாதன் அடுத்த நிமிஷம்தான் என் அவ்விதம் சிபாரிசு செய்தான் என்ற சிந்தனையிலீடுபட்டான். 

‘நீங்களும் அவள் கூடத்தான் சேர்ந்துகொண்டீர்களா?’ என்று சொல்லிச் சிரித்தபடியே இரண்டணாவுக்குக் கதம்பம் வாங்கினான் அவன். வாங்கி அவள் கையில் கொடுத்துவிட்டு, ‘ஸார் உங்கள் ‘பேக்’கைக் கொஞ்சம் கொடுங்கள். நான் இப்படிப் படுத்துக்கொள்கிறேன்’, எனக்கூறி, ராமநாதன் காலடியில் இருந்த பையை எடுத்துத் தலைக்கு வைத்துக்கொண்டு படுத்துவிட்டான். 

‘கதம்பத்தை இப்பொழுதே தலையில் வைத்துக்கொள் வதா? பிறகு வைக்கிறதா?’ எனக்கேட்டாள் அவள் ராம்நாதனிடம். 

‘அது உங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது’, என்றான் அவன். 

‘அது தானிருக்கே! கேட்டால் சொல்லுங்களேன்!’

என்னத்தைச் சொல்வது?மநாதன் மௌனமாகவே இருந்தான். 

அவள் குழலுக்குப் பாரமாக இருந்த மல்லிகை இன்னும் வாடவில்லை. மணங்குன்றவில்லை. அந்நிலையில் அவள் ஏன் இன்னும் பூ வாங்கினாள், வாங்கியவள்  வத்துக் கொள்ளாமல் அவனைக் கேட்பானேன்? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. 

‘காலை ஏழரை மணிக்குள் வாடிப்போகாது?’ என்றாள் மீண்டும். 

‘வாடி விடலாம்.’ 

‘எனவே இப்பவே தலையில் வைத்துக் கொள்ளலாம் என்கிறீர்!’ 

கேள்வியின் அமைப்பு முறையை மாற்றியோ, அன்றி சுற்றிவளைத்துப் பேசியோ தான் விரும்பும் பதிலைப் பெறக் குறுக்கு விசாரணை நடத்தும் வக்கீல் முயல்வதைப்போல அவள் சாமார்த்தியமாகக் கேள்வி எறிவதை எண்ணி வியந்தான் ராமனாதன். ‘பூச் சூடிக்கொள்வது உங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. நான் ஏற்கனவே சொல்லி விட்டேனே’ எனத் திரும்பவும் பதிலளித்தான். 

அவள் முகத்திலே க்ஷணநேரம் வருத்தத்தின் சாயல். எதிர்பார்த்த விதத்தில் உற்சாகமாகப் பதில் வராததின் விளைவோ என்னவோ ! 

‘வாடிப்போய்விடும் என்கிறீர்கள். எனவே இப்பொழுதே சூடிக்கொள்கிறேன்,’ என்று கூறித் தலையிலிருந்த பூக்கொத்தை எடுத்துக் கூடையில் வைத்துவிட்டுக் கதம்பத்தை அணிந்து கொண்டாள். 

‘இனி வண்டி மூன்று நான்கு ஸ்டேஷன் தாண்டித் தான் நிற்கும். வேகமாகப் போகும்,’ எனப் பேசிக் கொண்டனர் பிரயாணிகள் சிலர். 

‘சரி. அப்பொழுது நான் கொஞ்சம் படுத்துக்கொள்கிறேன்’, என்று சொல்லி அவள் முடக்கிக் கொண்டு படுத்தாள். பெஞ்சின் ஒரு புறத்தில் ஏற்கனவே படுத்திருக்கும் அண்ணன். மறுபக்கம் அவள் படுத்துவிட்டாள். மத்தியில் இருந்த ராமநாதன் குறுக்கி உட்கார வேண்டி வந்தது. காலை மடித்து ஜன்னலில் முட்டுக் கொடுத்துப் படுத்த அவள் தலை அவன் மடிக்கு வந்துவிடும் போலிருந்தது. எனவே துணிப் பையை எடுத்து இடையில் அணை அமைத்தான் ராமனாதன். அவள் அதில் சௌகரியமாகத் தலையை வைத்துக்கொண்டாள். 

‘அடி அம்மா! தூக்கம் கண்ணைச் சுழட்டுது! அடுத்த இடத்தில் வண்டி நின்றவுடன் எழுப்புகிறீர்களார் அங்கு எங்க அண்ணா ஒருவர் இருக்கிறார். அவரைப் பார்க்க வேண்டும்’, என்றாள் அவள். பிறகு கண்களை மூடிக் கொண்டாள். 

வெளியில் நிலவிய கும்மிருட்டைப் பிளந்து கொண்டு ரயில்வண்டி சென்றது. உள்ளே மங்கல் விளக்கு சிறிது ஒளிவீசிக்கொண்டிருந்தது. பிரயாண அலுப்பாலும், அசத்தும் தூக்கத்தாலும் ஆடி விழுந்து கொண்டிருந்தனர் பிரயாணிகள். அநேகர் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தனர். அண்ணன் ஆனந்த நித்திரையில் லயித்திருந்தான். உல்லாசப் பிரயாணிகள் கூட ‘சாமான்களுக்கு மட்டும். என்ற பலகையின்மேல் நித்திராதேவியின் தழுவலில் மயங்கிக் கிடந்தனர். ராமநாதன் அவளைப் பார்த்தான். வெளிறிய நிற ஆடையில் மிளிர்ந்த அவள் அழகு அங்கங் களுக்கு அணி செய்வதாய் அமைந்திருந்த பிம்பமுகத்திலே கரிய புருவங்களுக்கடியில் நீண்ட கயல் மீன்களைப்போன்ற கண்கள் மூடிக்கிடந்தன. அப்படியே குனிந்து அப்பவள அதரங்களில் முத்திடலாமா என்ற சபலம் எழுந்தது ராம நாதனுக்கு. அவள் கண் விழித்துவிட்டாள். அவன் அவளையே கவனிப்பதைக் கண்டதும் ‘குப்’பென்று முகத் திலே சிவப்பேறியது. உதடுகளிலே மென்னகை அரும்பியது. 

‘ஸ்டேஷன் வந்துவிட்டதா?’ என்றாள். 

”இல்லை’ எனப் பதிலளித்தான் அவன். 

பிறகு ஸ்டேஷன் வரும்வரை அவள் கண் மூடவில்லை. அவள் தூங்குகிறாளா விழித்திருக்கிறாளா என அவன் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் கண்கள் அவன் கண் களைச் சந்தித்தன. 

கடைசியாக நிற்கும் இடம் வந்தது. அவள் எழுந்து அமர்ந்தாள். 

‘யாரையோ பார்க்கவேண்டும் என்றீர்களே’ ராம நாதன் நினைவுபடுத்தினான். 

‘ஓ மறந்து விட்டேன்!’ என்றாள் அவள். 

மறுகணம் அவளது கருநாகச் சடையும் முதுகும் மட்டும் மங்கல் ஒளியிலே அழகுசிதற, முகத்தை மட்டும் வெளியே நீட்டி பிளாட்பாரத்தைக் கண்களால் துழாவினாள். ‘காணவில்லை’ என்று தலையை மீண்டும் உள்ளுக்கு இழுத்து உதட்டைப் பிதுக்கியபடியே இடத்தில் அமர்ந்தாள். 

வண்டி புறப்பட்டது. அதன்பிறகு அவள் பேசவே இல்லை வண்டி அடுத்த ஜங்ஷனை நெருங்கவும் அவள் அண்ணனை எழுப்பினாள். அவனும் கண்களைக் கசக்கிய படியே எழுந்தான். ஸ்டேஷன் சமீபித்து விட்டது என்றும், சாமான்களை எல்லாம் சரி செய்யும்படியும் தூண்டினாள். அவன் சாமான்களை எடுத்துத் தயாராக வைத்தான். 

ராமநாதனும் தன் பைகளை எடுத்து வைத்துக் கொண்டான். ‘ஸார் வீணையையும் கண்ணாடிச் சாமான் கூடையையும் கீழிறங்கினதும், ஜன்னல் வழியாக வங்கிக் கீழேவைத்து விடுங்கள்,’ என்றாள். 

ஸ்டேஷன் வந்ததும் ராமனாதன் இறங்கினான். ‘ஸார். இதை வாங்கி அப்படி வைத்துவிடுங்கள்!’ என்றாள். 

வீணையை முதலில் எடுத்துக்கொடுத்தாள். 

அவள் விரல்கள் அவன் விரல்களை ஸ்பரிசித்தன. பிறகு பையைக் கொடுத்துவிட்டு ஒரு சாமானை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். 

‘வந்தனம்’ என்றாள். 

ராமநாதன் நகர்ந்தான். 

‘கொஞ்சம் இருங்கள்.’ 

அவள் அழைப்பைக் கேட்டு அவன் நின்றான். போர்ட்டரிடம் சாமான்களை ஒப்படைத்துவிட்டு அண்ணனும் கிழிறங்கி வந்தான். 

‘அண்ணா. மருந்து வாங்க வேண்டாம? நீ சாமான் களைப் பார்த்துக்கொண்டு இரு. நான் இவர்கூடப்போய் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன்,’ என்றாள். 

‘நீங்கள் இங்கிருந்தால் அவர் போய் வாங்கிவந்து விடுவார்,’ என்றான் ராமனாதன். 

‘இவ்வளவு சாமான்களையும் பார்த்துக்கொண்டு தனியாக என்னால் இருக்கமுடியாது,’ என்றாள் அவள். 

அவளது பதில் ராமநாதனுக்குச் சிரிப்பாக இருந்தது. ஸ்டேஷனில் தனியாக இருக்கப் பயந்த அவள் அவனுடன் வெளியே அந்நேரத்தில் தனியே வரத் தயாராக இருந்ததை நினைத்துப் பார்த்தான். அவள் பயங்கரமானவள் என உணர்ந்தான். 

‘இந்நேரத்தில் கடை திறந்திருக்காது’ என்றான்.

‘திறந்திருக்கும். இரவு பகல் எந்நேரமும்,’ என்றாள் அவள். 

‘காலையில் ஏழே முக்கால் மணிக்குத்தானே வண்டி. காலையிலேயே போய் வாங்கிக் கொள்ளுங்கள்,’ எனக் கூறிவிட்டுப் பதிலை எதிர்பாராமலே நகர்ந்தான் அவன். 

தன் மனக்கிளர்ச்சிக்குக் காரணம் தனது மனம் பக்குவம் அடையாதது எனக் கொள்ளலாம்; அவள் மனக் கிளர்ச்சிக்குக் காரணம் அவள் தாம்பத்ய வாழ்விலே அவளுக்குள்ள மனக்குறையாயிருக்குமோ என எண்ணிய படியே நடந்தான் ராமநாதன். 

– கள்ளக் கோழி கதைகள், முதற் பதிப்பு: ஜூன் 1949, எரிமலைப் பதிப்பகம், திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *