கிட்னி காவுகள்!





(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13
அத்தியாயம் – 11

இரண்டே நாளில் சின்னச்சாமி அடுத்த கிட்னியும் எடுக்கப்பட்டு ஒரு புதரில் பிணமாகக் கிடந்தான்.
சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம்தான் பிணத்தைக் கைப்பற்றினார்.
போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பினார்.
“ஏட்டு! நாம விசாரணை பேர்ல காலம் கடத்தினா இவனுங்க இன்னும் ரெண்டு பேர்களைப் போட்டுத் தள்ளி நம்மை மேலும் சிக்கல்ல மாட்டிவிடுவான்கள் போலிருக்கு. இனி அதிரடியாய் இறங்கினாத்தான் நாம தப்பிக்கலாம். இல்லேன்னா உன் கட்டுப்பாட்டுக்குள்ள ஏரியாவுல இத்தனை பேர் கிட்னி எடுக்கப்பட்டு செத்திருக்கான். நீ இருபது கான்ஸ்டபுள்களை வைச்சுக்கிட்டு என்ன பண்றேன்னு சட்டசபை வரை கேள்வி மேல கேள்வி கேட்டபாங்க.” ஸ்டேசனுக்குள் வந்ததும் சொன்னார்.
“ஆமாங்க ஐயா!” என்றார் அவர் பவ்வியமாக.
சந்தானத்தால் இருக்கையில் உட்கார முடியவில்லை. இப்படியும் அப்படியும் உலாத்தி எதைப் பற்றியோ தீவிரமாக யோசித்தார். பின் மேசை டிராயரைத் திறந்து கான்ஸ்டபுள்கள் கொண்டு வந்து கொடுத்த மருத்துவமனைப் பட்டியலைப் பார்த்தார். முக்கியமான பத்து பெரிய மருத்துவமனைப் பெயர்கள் அதில் இருந்தது, ஒரு மாதத்திற்குள் கிட்னி சிகிச்சைக்காக வந்தவர்கள், சென்றவர்கள், இருப்பவர்கள் பெயர் எண்ணிக்கையுடன் அந்த தாள் இருந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் யாரும் புதிதாக சேர்க்கவில்லை என்ற குறிப்பும் இருந்தது.
இதுதான் ஏட்டுவின் திறமை. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டும் வந்துவிடுவார். அடுத்தவர் குறை சொல்லாதவாறு ஐடியா கொடுத்தவர்களே ஆச்சரியப்படும்வாறு வேலைகள் செய்வார்!
சந்தானம் பென்சிலை வைத்து அந்த தாளை மேலிருந்து கொண்டு வந்தார். ஒரு இடத்தில் நிறுத்தினார்.
தனுஷ் மருத்துவமனை..!. குணாளன் பெயர் போன் நம்பர் விலாசம் எல்லாம் இருந்தது. ஒரு கான்ஸ்டபுளை அழைத்துக் கொண்டு புல்லட் எடுத்தார்.
அழைப்பு மணி அழைக்க… போய்த் திறந்த மனோன்மணிக்கு போலீஸ்தலைகளைப் பார்த்ததும் குழப்பம் வந்தது..
“இது குணாளன் வீடுதானே?” சந்தானம் கேட்டார்.
“ஆமாம்.”
“நாங்க அவரைப் பார்க்கனும்.”
“என்ன விசயம்?”
“ஒரு சின்ன விசாரணை..”
“வாங்க..” அவள் கதவைத் திறந்து திரும்பி நடந்தாள்.
குணாளன் சோபாவில் அமர்ந்திருந்தான். மனோன்மணி நறுக்கி வைத்திருந்த ஆப்பிள் துண்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தான்.
சந்தானம் குணாளனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“உட்காருங்க”.
“சின்ன விசாரணை!” அமர்ந்தார்.
“என்ன?”
“நீங்க தனுஷ் மருத்தவமனையிலதானே கிட்னி மாற்றம் அறுவை சிகிச்சை செய்துக்கிட்டீங்க?”
“ஆமாம்.”
“எந்த தேதி?”
“போன மாசம் பதினைஞ்சு.”
“உங்களுக்கு யார் கிட்னி தானம் செய்தா?”
“ஏன் சார்?” குணாளன் ஏறிட்டான்.
“இந்த கிட்னி மாற்றத்துல ஒரு சின்ன கோளாறு.”
“என் கிட்னி மாற்றத்திலேயா?!”
“ஆமாம்.”
“என்ன கோளாறு?”
“நாலு பைத்தியங்கள் கிட்னி காணாம போயிருக்கு. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமிருக்மோன்னு எங்களுக்குச் சந்தேகம்.”
கணவன் மனைவி முகத்தில் நிம்மதி வந்தது.
“உங்களுக்குக் கிட்னி யார் கொடுத்தா?”
“என் உறவுக்காரி.”
“சின்ன வீடா?”
“ஒன்னுவிட்ட தங்கை!”
“அவுங்க விலாசம்?”
சொன்னான்.
“நீங்கதான் அவுங்ககிட்ட பேசி ஏற்பாடு செய்தீங்களா?”
“இல்லே. என் நண்பர்கள். அவங்கதான் நான் உயிர் பிழைக்கக் காரணம். முழு மூச்சா உழைச்சி என் தங்கைகிட்ட பேசி கொண்டு வந்தாங்க. அவுங்க முயற்சி இல்லேன்னா நான் இவ்வளவு சீக்கிரம் மருத்துவமனையைவிட்டு வந்திருக்க முடியாது. நட்புக்கு அர்த்தம் அவுங்க. ஒரு கால கட்டம்தான் தாய், தந்தை, உறவு, சுற்றம் அடுத்தாப்போல கடைசி வரை நிக்கிறது நல்ல நண்பர்கள்தான் சார்.”
“ரொம்ப உயிர் நண்பர்களா?”
“ஆமாம் சார்.”
“அவுங்க பேர்?”
“சோமு, பாலா, பவித்ரன், சுந்தர்”
“விலாசம்?”
“அது உங்களுக்குத் தேவை இல்லாதது.”
“மன்னிக்கனும். தேவை.”
“ஏன்?”
“சமீபத்துல நாலு பேர் ஒரு பைத்தியத்தைக் கடத்தி இருக்காங்க.”
“அவனுங்க யோக்கியனுங்க. சம்பந்தம் இருக்காது.”
“சந்தோசம். நீங்க விலாசம் சொல்லுங்க?”
“ஓ.கே.”
அவர்கள் விலாசம் சொன்னான்.
“அவுங்க புகைப்படம் இருக்கா?”
“எதுக்கு?”
“அடையாளம் காண.”
“இது அதிகப்படி சார்.”
“நீங்க கோபப்படுறது தப்பு. அவுங்க கண்ணியமானவர்களாய் இருந்தாலும் விசாரிக்கிறது தப்பில்லை. கொடுங்க.”
“மன்னிக்கனும் கைவசமில்லே.’
“நீங்களெல்லாம் சின்ன வயசிலிருந்தே நண்பர்களா?”
“ஆமாம்.”
“அப்படின்னா அவுங்க இல்லாம உங்க திருமணம் நடந்திருக்காது. ஆல்பம் கொடுங்க.”
குணாளன் மனைவி மனோன்மணியைப் பார்த்தான். அவள் மறு பேச்சு இல்லாமல் போய் எடுத்து வந்தாள்.
சந்தானம் வாங்கி புரட்டினார். குணாளன், பாலா, பவித்ரன், சுந்தர், சோமு கொத்தாக நின்றார்கள்.
“ரொம்ப நன்றி எடுத்துக்கிறேன்!” அவன் அனுமதிக்குக் காத்திராமலே ஆல்பத்திலிருந்து உருவிக் கொண்டு, “வர்றேன்!” எழுந்தார்.
குணாளனுக்குத் தனக்குள் இருக்கும் கிட்னி மீதே இப்போது சந்தேகம் வந்தது.
‘நட்பின் இறுக்கம் அவளைக் காட்டி இப்படி செய்துவிட்டார்களா?!’ யோசனை வந்தது.
கைபேசியை எடுத்து சோமு எண்களை அழுத்தினான்.
“என்ன குணா?”
“எனக்குள் இருக்கிறது யார் கிட்னி?”
“ஏன்?”
“உண்மையைச் சொல். விசயத்தை அப்புறம் சொல்றேன்.” ‘
“சத்தியமாய்ச் சொல்றேன். உன் தங்கை வைதேகியுடையது.”
“பைத்தியத்தோட இல்லையே?”
“என்னடா சொல்றே?!”
“நாலு பைத்தியங்களோட கிட்னிகளைக் காணோமாம். சப்- இன்ஸ்பெக்டர் சந்தானம் என்கிட்ட வந்து விசாரிச்சார்.”
சோமுவிற்கு வேர்த்தது.
“உங்களுக்கு யார் ஏற்பாடு செய்யதது யார் என்னன்னு விலாசம் புகைப்படம் உட்பட வாங்கிப் போயிருக்கார். ஆள் வந்து விசாரிச்சார்ன்னா உளறாம உண்மைச் சொல்லுங்க.” அணைத்தான்.
“மாட்டிக்கிட்டோம்டா!” சோமு முழுதும் வேர்த்து போனை அணைத்தான்.
“என்னடா?!” மற்றவர்கள் அவனைத் அதிர்ச்சியாய்ப் பார்த்தார்கள்.
விசயம் சொன்னான். அவர்களுக்கும் நடுக்கியது.
“இப்போ நாம என்ன பண்றது?”
“தலைமறைவாகிடலாம்.”
“வேணாம் போலீசக்கு நம்ம மேல சந்தேகம் இன்னும் வலுக்கும்.”
“அப்போ மாட்டிக்கலாம்ங்குறீயா?”
“வேற வழி இல்லே.”
“நாம மாட்டினா உண்மையான குற்றவாளி தப்பிச்சுடுவான்.”
“இதுக்காகவா நாம இவ்வளவு பிரயாசைப் பட்டோம்?!”
“உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கிறவரை நாம போலீஸ் கையில சிக்காம இருக்கிறது நல்லது. சிக்கினால் போலீஸ் சுலபமா நம்மை வைச்சு கேசை முடிச்சுடும்.”
“அதனால நாம தப்பிக்கனும் போலீஸ் கையில சிக்கக்கூடாது.”
“சும்மா இருந்தா சரி படாது. நல்ல வக்கீலாப் புடிச்சு முன் ஜாமீன் வாங்கிடலாம்”.
“அது சரி இல்லே. போலீஸ் நெருங்காத அளவுக்கு ஏதாவது செய்யனும்.”
“வெடிகுண்டுதான் வீசனும்.”
“இது விளையாட்டுப் பேச்சக்கோ வீரத்துக்கோ இப்போ வேலை இல்லே பாலா. நாம தப்பிக்க வழி வேணும்.”
“யோசிக்கிறதுல பிரயோஜனமில்லே. நாம நிரபராதி. நண்பன் உயிரைக் காப்பாத்த குறுக்கு வழியில முயற்சி செய்தோம். நம்ம நல்ல நேரம் தப்பிட்டோம். ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டு நாம சும்மா இருப்போம். போலீஸ் வந்து கைது செய்யட்டும். இனிமே நம்மாளேயும் எவனையும் தேடி அலைய முடியாது. உண்மையான குற்றவாளி அகப்பட்டதும் தானா வெளியில வந்துடலாம்”.
பாலா எல்லாரையும் பார்த்தான்.
அத்தியாயம் – 12
சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் சௌக்கியாபுரம் வந்து டீக்கடையில் புல்லட்டை நிறுத்தினார்.
“டீ போடுப்பா!” பெஞ்சில் அமர்ந்தார்.
மாஸ்டருக்கு ‘இவர் இப்போது யாரைத் தேடி வந்திருக்கார்!’ சந்தேகம்.
“ஸ்ட்ராங்கா லைட்டா சார்?”
“ஸ்ட்ராங்!”
போட்டுக் கொடுத்தான்.
வாங்கிக் கொண்ட சந்தானம்…
“அன்னைக்கு அந்த பைத்தியத்தைக் கூட்டிப் போன ஆளுங்களை உனக்கு அடையாளம் தெரியுமா?” டீயை உறிஞ்சினார்.
“தெரியாது சார். துாரத்துல நடந்துது. நான் கடையைவிட்டு போகலை.”
“வேற யாருக்கோ தெரியும்ன்னு சொன்னியே! யார் அது?”
“படவா ரங்கசாமி சார்.”
“அதென்ன படவா ரங்கசாமி ?”
“பட்ட பேர் சார்.”
“எப்படி?” காலி கிளாசோடு காசையும் அவனிடம் கொடுத்தார்.
“இங்கே ரெண்டு ரங்கசாமி சார். ஒன்னு பட்டா இன்னொன்னு படவா. பட்டா சும்மா நான் மலையை வெட்டினேன். மணலைக் கயிறாய்த் திரிச்சேன்னு ரீல் விடும் சார். படவா பேசும் போது நிறைய படவா போட்டுப் பேசும் சார்.”
“படவா ரங்கசாமி விலாசம் சொல்லு?”
“இப்படியே போனீங்கன்னா மூணாவது தெருவுல நாலாவது வீடு சார்.”
எழுந்தார்.
“ஒரு சந்தேகம் சார்…”
“என்ன?”
“பைத்தியம் கேஸ் ரொம்ப சிக்கலா சார்?”
“இல்லே.”
“பின்னே எதுக்கு சார் படவா ரங்கசாமியைத் தேடுறீங்க?”
“உன் டீயில ஜாக்ரீம் கலந்திருக்கிறதா புகார் வந்துது, நான் குடிச்சு சோதனை செய்து பார்த்தேன். அப்படித்தான் இருக்கு. அவரைச் சாட்சியாய்ப் போட்டு உன்னை உள்ளாறத் தள்ளப் போறேன்.” எழுந்து போய் புல்லட்டை எடுத்தார்.
மாஸ்டர் அப்படியே அரண்டு போய் நின்றான்.
கடையில் இருந்த வாடிக்கையாளனுக்குச் சிரிப்பு வந்தது. சிரித்தான்.
“ஏன்ய்யா சிரிக்கிறே?” மாஸ்டர் அவரிடம் எரிந்து விழுந்தான்.
“இது உனக்கு தேவையா? டீயைப் போட்டோமா பொழைப்பைப் பார்த்தோமான்னு இல்லாம அநாவசியமா கேள்வி கேட்டு ஆப்பு வைச்சிக்கிட்டியே…!” சொல்லிச் சென்றான்.
மாஸ்டர் சொன்ன விலாசத்தில் போய் கதவைத் தட்டினார் சந்தானம்.
வயசான ஆள் திறந்தார். அவர் இவரைப் பார்த்து மிரளவில்லை. மடியில் கனமில்லாதவரை யாரும் யாருக்கும் பயப்படத் தேவை இல்லை.
“என்ன சார்..”
“நீங்கதான் படவா ரங்கசாமியா…?”
“ஆமா…”
“ஒரு சின்ன சந்தேகம் விசாரணை.”
“சொல்லுங்க?”
“அன்னைக்கு அந்த பைத்தியத்தை அழைச்சுப் போகும் போது நீங்க பக்கத்துல இருந்திருக்கீங்கன்னு கேள்விப் பட்டேன்.”
“ஆமாம் சார்.”
“அழைச்சுப் போன அந்த நாலு பேர் முகம் நினைவிருக்கா?”
“நல்லா நினைவிருக்கு சார். எதுக்குடா வரமாட்டேன்னு முரண்டு பிடிக்கிற ஆளை இப்படி வலுக்கட்டாயமா அழைக்கிறீங்கன்னு நான் கேள்விக் கேட்டேன். அதுக்கு அவனுங்க சடார்ன்னு என்கிட்ட வந்து கால்ல விழாத குறையாய் கெஞ்சி இவன் சொந்தக்காரன் வைத்தியத்துக்குக் கூட்டிப் போறோம். வரமாட்டேன்கிறான். நீங்க சமாதானம் செய்து அனுப்புங்க சொன்னானுங்க நானும் பைத்தியத்துக்கிட்ட போன்னு அதட்டல் போட்டேன் சார்.”
“நல்லது இந்த போட்டாவுல இருக்கிறது அன்னைக்கு வந்தவங்களான்னு பார்த்து சொல்லுங்க ?” தன் பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்த குணாளனிடமிருந்து எடுத்து வந்த புகைப்படத்தை நீட்டினார்.
வாங்கி உற்றுப் பார்த்த ரங்கசாமி. “இல்லே சார்?” திருப்பி கொடுத்தார்.
“நல்லா பார்த்து சொல்லுங்க?”
“இல்லே சார்.”
“இதுல இருக்கா பாருங்க.” அடுத்து ஒரு படத்தை கொடுத்தார்.
“ம்ஹீம்…” உதட்டைப் பிதுக்கினார்.
“இல்லியா?”
“இல்லே சார்.” திருப்பிக் கொடுத்தார்.
“நன்றி.” வாங்கி கொண்டு ஸ்டேசன் வந்தார்.
“என்ன சார் ஆச்சு போன விசயம்?” ஏட்டு வந்து கேட்டார்.
“குணாளன் வீட்டிலேர்ந்து கொண்டு போன போட்டோ நம்ம கேடிங்க போட்டோ ரெண்டையும் காட்டினேன் ஆள் இல்லேன்னுட்டார்.” சொன்னார்.
“பெரிய கும்பலே இருக்கும் போல இருக்கு சார்.”
“ஆமாம். புத்திசாலி கும்பல். கேடிங்ககிட்ட கடத்தி வரச்சொன்னா போலீஸ் சுலபமா கண்டுபிடிச்சுடும்ன்னு புது ஆட்களை அனுப்பி இருக்காங்க.” சொல்லி தொலைபேசி மணி அடிக்க எடுத்தார்.
“டேய்! நான் ஆனதாண்டவராயன் பேசுறேன்டா!”
“யாரு?”
“செங்கல்பட்டு சப்-இன்ஸ்பெக்டர்!”
சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியின் போது இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். நினைவுக்கு வந்தது.
“நண்பா! எப்படி இருக்கே?”
“நல்லா இருக்கேன்.”
“மாமூல் எல்லாம் சரியா வருதா?”
“அடி செருப்பால….” ஆனதாண்டவராயனும் சந்தானம் போல் நேர்மைசாலி.
“என்ன திடீர்ன்னு என் நெனப்பு?”
“உன் ஏரியாவுல கொள்ளையடிச்சுட்டு வந்து என்கிட்ட நாலு பேர் மாட்டியிருக்கானுங்க.”
“என் ஏரியாவுல கொள்ளையா?” துணுக்குற்றார்.
“ஆமாம்டா. என் ஏரியாவல வந்து பங்கு பிரிக்கும் போது தகராறு. அதுல ஒருத்தனைப் போட்டுத் போட்டுத் தள்ளிட்டானுங்க. தகவல் கெடைச்சதும் மின்னல் வேகத்துல போய் மத்த மூணு பேரையும் புடிச்சேன். விபரம் தெரிஞ்சுது.”
“என் ஏரியாவுல எந்த இடம்?”
“சிங்காரபுரம். 54ஆம் நம்பர் வீடு. புறநகர் பகுதி. அசோகா நகர் எக்ஸ்டென்சன். இந்த வீடு மட்டும் ‘என்னைக் கொள்ளையடிச்சுட்டுப் போ’ன்னு திருடன்கள் பார்த்தா கை அரிக்கிறாப்போல தனியே இருக்காம்.!”
“வீட்டுக்காரர் பேர்?”
“என்னத்தை அடிச்சு உதைச்சும் தெரியலைங்குறானுங்க. கொள்ளை சம்பந்தமா உனக்குப் புகார் வரலை..?”
சந்தானம் போன் வாயை மூடிக் கொண்டு, “ஏட்டு! அசோகா நகர்ல கொள்ளைன்னு ஏதாவது புகார் வந்துதா?” கேட்டார்.
“இதுவரைக்கும் இல்லே சார்.!”
“இல்லே வரலை.”
“பெரிய தொகை ஆச்சரியமா இருக்கு?!”
“எவ்வளவு?”
“ஏழு லட்சம். அம்பது பவுன்!”
“இவ்வளவு பெரிய கொள்ளை. ஏன் புகார் வரவில்லை?”
சந்தானத்திற்கு உறுத்தியது.
“ஓ.கே. நான் கவனிக்கிறேன்.” துண்டித்தார்.
அப்படியே சிந்தனைவயப்பட்டவராய் அமர்ந்தார். ஒரு முடிவிற்கு வந்தவராய் எழுந்து தொப்பியை மாட்டி கையில் பிரம்பை எடுத்துக் கொண்டு, “ஏட்டு! வாங்க.. ! வாங்க..” அழைத்து வெளியில் சென்றார்.
பத்து சதுர அளவில் 60க்கு 30 பிளாட்டில் அந்த வீடு கொலை கொள்ளை நடந்தாலும் தெரியாத அளவிற்குத் தனித்துதான் இருந்தது. மொட்டை மாடி கொடியில் வீட்டில் ஆள் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாய் சிகப்பு நிற புடவை கிளிப் போட்டு காய்ந்து காற்றில் படபடத்தது. வயலைத் துார்த்து பிளாட் போட்டிருந்ததால் பேருக்கு மட்டும் சாலை. இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையில் அதுவும் ஒரளவிற்குச் சகதி.
புல்லட்டை கடைசி வீட்டு வாசலிலேயே வைத்து விட்டு சந்தானமும் ஏட்டும் அந்த வீடு நோக்கிச் சென்றார்கள்.
கதவு சாத்தி இருந்தது. ஆனால் வலது பக்கம் வீட்டை ஒட்டி தச்சு வேலை நடப்பதற்கான அறிகுறியாய் உளி அடி சத்தம் கேட்டது.
எட்டிப்பார்த்தார்கள். அந்தப் பக்கம் ஒரு சன்னல் பெயர்க்கப்பட்டு கீழே இருந்தது. அதன் கிரில் சிதைக்கப்பட்டிருந்தது. தச்சர்கள் இருவர் அதை கழற்றி புது கிரில் வைக்கும் வேலையில் மும்முரமாய் இருந்தார்கள். சந்தானம் அழைப்பு மணி அழுத்தினார்.
முப்பது வயது பெண். நல்ல மஞ்சள் நிறம். தற்போதுதான் குளித்து முடித்ததின் அடையாளமாய் முகத்தில் அதிக மஞ்சள், அதன் மேல் பவுடர் பூ ச்சு… திறந்தாள்.
போலீஸ் தலைகளைப் பார்த்ததும் அவள் முகம் பட்டென்று வெளுத்தது.
“நீங்கதான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரங்களா?”
“அ…ஆமாம்.”
“சன்னல்ல என்ன வேலை?”
“கிரில் சரி இல்லே. புதுசு பொருத்துறாங்க..”
“பழசுக்கென்ன?”
“….”
“நடந்தது என்னன்னு பொய் சொல்லாம சொன்னீங்கன்னா எங்களால உதவி செய்ய முடியும்.”
“சி….சின்ன திருட்டு சார்.”
“எப்போ ?”
“முந்தா நேத்து.”
“எவ்வளவு ?”
“பாத்திரம் பண்டம். கொஞ்சம் சொற்ப தொகை.”
“ஏழு லட்சம் அம்பது பவுன் சொற்ப தொகையா?” அவள் மிரண்டாள்.
“ஏன் போலீசுக்குப் புகார் கொடுக்கலை?”
“தனி வீடு சார். போலீசுக்குப் புகார் கொடுத்து வீண் காபரா செய்தால் அடுத்தடுத்தும் திருடன்கள் குறி வைச்சு வருவான்கள்ன்னு பயம்.” நடுக்கத்துடன் சொன்னாள்.
“அப்படின்னு யார் சொன்னா?”
“எ….ன் வீட்டுக்காரர்.”
‘வீட்டுக்காரர் பேர்?”
சொன்னாள்.
“எங்கே வேலை?”
அதையும் சொன்னாள்.
“உள்ளாற போன் இருக்கா?”
“இல்லே சார். இன்னும் வாங்கலை.”
“கை போன் இருக்கா?”
“இரு…இல்லே.” தடுமாறினாள்.
“ஏன் உண்மையை மறைச்சு பொய் சொல்றீங்க?”
“எ…னக்குப் போலீஸ்ன்னா பயம் சார்.”
“போய் எடுத்து வாங்க.”
திரும்பினாள். சந்தானமும் அவளைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்தார். அவள் மேசை மேலிருந்து போனை எடுக்க….சுவரிலுள்ள கணவன் மனைவி புகைப்படங்களைப் பார்த்தார்.
“கொடுங்க.” வாங்கிக் கொண்டு வெளியே வந்தவர் “ஏட்டு! இவுங்களுக்குத் துணையாய் இருங்க. வீட்டு வேலையைச் சீக்கிரம் முடிக்கச் சொல்லுங்க. நான் வர்றேன்.” கிளம்பினார்.
அத்தியாயம் – 13
புல்லட்டை நோக்கி நடந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் மனசுக்குள் சின்ன தடுமாற்றம்.
‘முதலில் இவனைக் கைது செய்தால்.. சம்பந்தப்பட்ட டாக்டர் சேதி கேள்விப்பட்டு தப்ப வாய்ப்பு உண்டு யார் அந்த டாக்டர்?’ யோசித்தபடி புல்லட்டை நெருங்கி தன் கைபேசியை எடுத்தார். காவல் நிலையத்தில்.. “ஹலோ!” கலிவரதன் எடுத்தான்.
“நான் சப்- இன்ஸ்பெக்டர் பேசறேன்.”
“சொல்லுங்க சார்?”
“ஸ்டேசன்ல யார் இருக்கா?’
“நான், ரவி, ரகுபதி, திருப்பதி சார்.”
“மத்தவங்களெல்லாம்?”
“ரெண்டு பேர் அவசர விடுப்பு சார். இன்னும் ரெண்டு பேர் ரவுண்ட்ஸ் போயிருக்காங்க.”
“மத்த மூணு பேர்?”
“மருத்துவ விடுப்பு.”
“ஜீப் ரெடியா இருக்கா?”
“டிரைவர் இருக்கார் சார்.”
“சரி. உடனே புறப்பட்டு நான் சொல்ற இடத்துக்கு வாங்க.”
“ஸ்டேசன்ல ஆள் சார்?’
“ஒருத்தர் மட்டும் இருக்கட்டும்.”
”சரி சார்.”
“அடுத்து இன்னொரு விசயம். ரவுண்ட் போன ஆளுங்க வந்ததும் உடனே போய் பாலா, பவித்ரன், சோமு, சுந்தர் ஆட்களை அழைச்சு வரச்சொல்லி, ஸ்டேசன்ல இருக்கிறவன்கிட்ட சொல்லிட்டு நீங்க கிளம்புங்க.”
“விலாசம் சார்?”
சொன்னார்.
“ஓ.கே சார்.” அணைத்தார்.
அடுத்து மடமடவென்று செய்ய வேண்டிய காரியங்களைப் கைபேசியிலேயே முடித்து புல்லட்டை மருத்துவமனையை நோக்கி விட்டார்.
இவர் அங்கே செல்லவும். சொன்னபடி கலிவரதன் ஜீப்போடு வந்து நிற்கவும் சரியாக இருந்தது
சந்தானம்… கலிவரதனை மட்டும் தன்னோடு அழைத்துக் கொண்டு மற்ற கான்ஸ்டபுள்களைக் கீழே இருக்கச் சொல்லி விட்டு விடுவிடு என்று மாடி ஏறி டாக்டர் அறைக்குள் நுழைந்தார்.
தனுஷ் ஏதோ பைல் பார்த்துக் கொண்டிருக்க….அவருக்குப் பக்கத்தில் எத்திராஜ் பவ்வியமாய் நின்றான்.
டாக்டர் இவர்களை ஏறிட்டு “எத்து! நீ போ. இவுங்களோட நான் கொஞ்சம் பேசி இருந்துவிட்டு அப்புறம் எல்லாத்தையும் கையெழுத்துப் போட்டு அனுப்புறேன்.” சொன்னார்.
“இல்லே சார். எங்களுக்கு எத்திராஜ்தான் சார் வேணும்.” சந்தானம் அவன் கையைப் பிடித்தார்.
அவன் அரண்டு சப்த நாடியும் ஒடுங்கியவன் போல் வெடவெடத்தான்.
“என்ன காரணம்?” தனுஷ் திடுக்கிட்டார்.
“இவர் கிட்னி கொள்ளை கொலையில சம்பந்தப்பட்டிருக்கார்.”
“இவனா?!”
“நானா?!” புரியாதவன் போல் வெடவெடத்தான்.
“ஆமாம். ஒன்னும் தெரியாதவன் போல் நடிக்காதே. எல்லாம் தெரிஞ்சுதான் உன்னைத் தொட்டிருக்கேன். உனக்கு உதவின டாக்டர் கூட்டாளி யார்?”
மலங்க மலங்க விழித்தான். சப்-இன்ஸ்பெக்டர் கை பளாரென்று அவன் கன்னத்தைத் தாக்கியது.
எத்திராசுக்கு காதுகள் இரண்டும் “நொய்ங்….” என்றது. கன்னத்தைப் பிடித்துக் கொண்டான்.
“சொல்லுடா டாக்டர் யார்?”
“வந்து… வந்து…”
“உடம்பு அநாவசியமாய் வீங்காம இருக்கனும்ன்னா உண்மையை ஒழுங்கா சொல்லு?”
சொன்னான்.
காவல் நிலையத்தில் பெரிய கூட்டமே இருந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் தன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் எதிர் நாற்காலியில் தனுஷ் இருந்தார். மற்ற எவருக்கும் நாற்காலி இல்லை.
சோமு, பாலா, பவித்ரன், சுந்தர் சப்-இன்ஸ்பெக்டர் மேசைக்கு வலது புறம் கைகட்டி நின்றார்கள்.
இடது புறம்…. டாக்டர் பரணீதரன், எத்திராசு இருவரும் இடுப்பில் அண்டர்வேயருடன் நின்றார்கள். போலீஸ் கவனிப்பில் உடல் திட்டுத்திட்டாக உப்பி கன்றிப் போயிருந்தது.
மூலையில் எத்திராசு மனைவி அழுது அழுது முகம் வீங்கி இருந்தாள்.
சந்தானம் எல்லாரையும் ஒரு முறை பார்த்துவிட்டு தொண்டையைக் கணைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.
“நண்பருக்கு உதவனும்ங்குற நல்ல எண்ணத்துல டாக்டர்கிட்ட பேசி சோமு கோஷ்டி முதல் பைத்தியத்தைக் கொண்டு வந்தாங்க. டாக்டர் தனுஷும் வழக்கம் போல எத்திராசை அழைச்சு கிட்னி பரிசோதனை செய்யச் சொன்னார். எத்திராசுக்கு அப்பவே நாமும் இப்படி செய்தாலென்னனு மூளை வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு. உதவிக்கு டாக்டர் எங்கேன்னு மூளையைக் கசக்கினான். பரணீதரன் பட்டார்.”
“அவரும் மருத்துவமனை கட்டிதொழில்ல ஈடுபட்டாலும் வருமானம் கம்மி. சமீபத்துல பொண்ணுக்கு வேற விரலுக்கேத்த வீக்கமா இல்லாம ரொம்ப தடபுடலா கலியாணம் முடிச்சதுனால கொஞ்சம் கடன், கஷ்டம். தொழில் முறையில எத்திராசு இவர்கிட்ட ஏற்கனவே பழக்கம். அந்த வகையில இவன் அவர்கிட்ட போய் இந்த தொழில் ரகசியத்தைச் சொல்லி இருக்கான். பரணீதனுக்கு மொதல்ல உடன்பாடில்லே. தப்புன்னு சொல்லி மறுத்திருக்கார். ஆனா காரியம் சாதிக்கப்போன எத்திராசு தப்பு நம்ம மேல வராது, சோமு கூட்டம், டாக்டர் தனுஷ் மேலதான் வரும். அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்னு தன் திட்டத்தைச் சொல்லி சமாதானம் செய்திருக்கான். அவரும் விழுந்துட்டார்.”
“இதன்படி சோமு கோஷ்டி கொண்டு வந்து விட்டுப் போன பைத்தியங்க கிட்னியை எடுத்து காசு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. முதல் ஆள் சின்னச்சாமி. அந்த கிட்னி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று முதல். உடனே அது மும்பைக்கு ஏற்றுமதி. அவனை ஆஸ்பத்திரியில சுய நினைவு இல்லாமலேயே வைச்சு நல்லா சிகிச்சை நல்லா சிகிச்சை செய்து வெளியே அனுப்பிட்டாங்க.”
“அடுத்து இரண்டு கிட்னி அவசரத் தேவை. மீண்டும் நீங்க விட்ட பைத்தியத்தையே புடிச்சு இவன்கிட்டேயும் ரெண்டு கிட்னிகளையும் ஒரே புடுங்கா புடுங்க…. ஆள் குளோஸ். பிணத்தை என்ன செய்யிறது எங்கே போடுறதுன்னு யோசிக்கும் போதுதான்… தனுஷ் ஊட்டி மருத்துவனையில் ஒரு கிட்னி ஆபரேசன் விசயமாய் அங்கே போனார். அங்கே தள்ளிவிட்டால் அவர் மேலேயே சந்தேகம் வலுக்கும், குற்றம் அவர் மேல பாயும்ன்னு எத்திராசு சொல்ல…டாக்டர் பரணீதரன் உதவியோட அவர் கார்லேயே பிணத்தைக் கொண்டு போய் ஊட்டியில் போட்டாங்க.”
“மூணாவது பைத்தியத்துக்குக் கிட்னி எடுத்தாங்க. ஆனா அந்த பைத்தியம் மருத்துவமனையில இருந்து ஒழுங்கா வைத்தியம் பார்த்துக்காம, இல்லாம தப்பி ஓடி பூ ங்காவுல போய் சுருண்டு கிடந்து, உதவும் கரங்கள் மூலமா மருத்துவமனையில சேர்த்து ஆள் அவுட்.”
“நாலாவது பைத்தியம் இப்படி தப்பிப் போய் ரோட்டோரம் விழுந்து சாவு.”
“தொட்ட மூணு பைத்தியஙகள் செத்துப் போச்சு. உசுரோட இருக்கிற சின்னச்சாமி உளறினால் வம்பு, கம்பி எண்ணனும்ன்னு ரெண்டு பேருக்கும் பயம் வந்துடுச்சு. அதே நேரம் கிட்னி ஒன்னும் அவசரத் தேவை. ஆதே ஆளைப் புடுச்சு எடுத்து ஒரு கல்லுல ரெண்டு மாங்காய், தீர்த்துக்கட்ட ஆசை. அதுக்காக நாலு ஆட்களைப் புடிச்சு துாக்கி வந்தாங்க.”
“டாக்டர் பரணீதரன் பணத்தைக் கடன் கொடுத்து செலவழிச்சார். எத்திராசு ஆரவாரமா செலவு செய்தா மத்தவங்களுக்குச் சந்தேகம் வரும், அதனால மாட்டிப்போம்ன்னு நெனைச்சு, ரொம்ப ஆடம்பர செலவு செய்யாம அடக்கமா செலவு செய்து பொண்டாட்டிக்கு நகைகளாய் வாங்கிப் போட்டு மிச்சத்தை வீட்டுல வைச்சான்.”
“இந்த கணிசமான தொகையைக் கணக்குப் போட்டு திருடன்கள் கொள்ளையடிக்கலை. புருசன் பொண்டாட்டி தவிர்க்க முடியாத காரியம் ஒரு நாள் ஊருக்குப் போக… சிறையிலேர்ந்து வெளியே வந்த திருடன்கள் நாலு பேரும் கொள்ளையடிக்க வசதியாய் தனியே இருந்த வீட்டைப் பார்க்க ஜன்னலை உடைச்சு உள்ளே போய் ஜாக்பாட் அடிச்சுட்டாங்க. ஜாக்பாட் அடிச்ச சந்தோசம். வெளியே போய் பிரிச்சுக்க திட்டம் போட்டாங்க. அதன்படி செங்கல்பட்டு போனாங்க. அங்கே அவுங்களுக்குள்ள தகராறு. ஒருவனைப் போட்டுத் தள்ளி… மாட்டிக்கிட்டாங்க.”
“இவ்வளவு பெரிய கொள்ளை ஏன் புகாருக்கு வரலை? இதுதான் எல்லா சிக்கலையும் இவ்வளவு சீக்கிரம் அவிழ்க்க காரணம். ஏன் சொல்லலை ? புகார் கொடுத்தால் சாதாரண வருமானத்துல உள்ள உனக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்ததுன்னு கேள்விவரும் மாட்டிப்போம்ன்னு நெனைச்சுதான் புருசன் பொண்டாட்டிக்கிட்ட சொல்ல …. இருவரும் மூச்சு விடலை.”
தனுஷ் தொடர்ந்தார்.
“என் மருத்துவமனை மூலமாத்தான் விசயம் கசிஞ்சு தப்பு எங்கோ நடக்குதுன்னு எனக்கு ஆரம்பத்திலேர்ந்தே சந்தேகம். ஆனா எத்திராசு சாமார்த்தியத்தினால திரும்பத் திரும்ப பழி என் மேலேயும் சோமு கோஷ்டி மேலேயும் வந்ததுனால எனக்கும் முழி பிதுங்கிப் போச்சு. அந்த கோஷ்டியையே மிரட்டி குற்றவாளிகளைச் சீக்கிரம் பிடிக்க ஏற்பாடு செய்தேன். அதே சமயம் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானத்துக்கிட்டேயும் விபரம் சொல்லி கேசை அவர்கிட்ட ஒப்படைச்சேன். அடிக்கடி நாங்க நடக்கிறதைப் பரிமாறிக்கிட்டோம்.” நிறுத்தி தனுஷ் சோமுவைப் பார்த்து, “உங்களை இங்கே அழைச்சு வரச் சொன்னதுக்குக் காரணம் உங்களுக்கும் இந்த சிக்கல் தெரியனும்ங்குறதுக்காகத்தான்.”
“உங்களுக்கு நண்பன் மேல் அக்கரை. உருப்படாத உடல்லேர்ந்து உபயோகப்பட்டதை எடுத்துக்கிட்டா லென்னன்னு யோசனை. இது சட்ட விரோதம், சம்மதம் இல்லாமல் ஒரு உடலேர்ந்து எதையும் எடுக்கக் கூடாதுன்னு மறுத்தும் நீங்க கேட்கலை. உங்க மனசு வலிபடாம இதைத் தெரிஞ்சுக்கனும்ங்குறதுக்காக இதுக்கு ஒப்புத்துக்கிட்டது போல நடிச்சு, பைத்தியங்கள் கிட்னியெல்லாம் சேரலைன்னு திருப்பி அனுப்பினேன். ஆனா அது இவ்வளவு தூரம் கொண்டு வரும்ன்னு நெனைக்கலை. நம்மகிட்டே இருந்து விசயத்தை எடுத்து எத்திராஜ் நமக்கே சிக்கல் வைப்பான்னு எதிர்பார்க்கலை.” முடித்தார்.
சோமு, பாலா, பவித்ரன், சுந்தர் நிம்மதி மூச்சு விட்டனர்.
(முற்றும்)
– கிட்னி காவுகள்! (நாவல்), முதற் பதிப்பு: 20-12-2019, காரை ஆடலரசன் வெளியீடு, காரைக்கால்.
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |