கிட்னி காவுகள்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: July 1, 2025
பார்வையிட்டோர்: 4,212 
 
 

(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13

அத்தியாயம் – 9

சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் போலீஸ் நிலையத்திற்குள் வந்ததும் முதல் வேலையாய் நாற்காலியில் அமர்ந்து வழக்கம் போல் தினசரியை விரித்து கொலை, கொள்ளை என்கிற எல்லா தலைப்புச் செய்திகளையும் படித்தார்.

போலீஸ் லாக்கப்பில் கைதி மரணம். சந்தேகத்தின் பேரில் கொண்டு சென்ற இருபத்ததைந்து வயது வாலிபனை போலீஸ் அடித்ததால் சாவு. விசயம் தெரிந்து பொது மக்கள் ஆவேசம். நிலையத்தை அடித்து நொறுக்கி துவசம் செய்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள்.

படித்து முடித்ததும், “மக்களுக்கு இப்போ போலீஸ் பயமெல்லாம் போச்சு!” முணுமுணுத்து மூடி மேசை மீது போட்டார்.

‘இந்த உத்தியோகம் பார்க்கிறதைவிட மாடு மேய்க்கப் போகலாம்! ஆண்டியிலிருந்து அரசியல் ஆட்கள்வரை பதில் சொல்ல வேண்டிய வேலை.’ நினைக்கக் கசப்பாய் இருந்தது.

“சார்!” எதிரில் கான்ஸ்டபுள் கலிவரதன் வயது 30 இளரத்தம். தயக்கத்துடன் வந்து நின்றான்.

“என்ன?”

“எங்க ஊர்ல ஒரு பைத்தியம் திரியுது. ஆனா அது உளறல் வித்தியாசமா இருக்கு. நமக்கு உபயோகப்படும் போல் தெரியுது…..” இழுத்தான்.

“சொல்லு?”

“என்னைக் கூட்டிக்கிட்டுப் போய் என் கர்ப்பப்பையை வெட்டிட்டான்க. கொலை செய்யப் போறேன்னு ஒரே கூக்குரல்.”

“இதுல என்னய்யா ஸ்பெசாலிட்டி?”

“ஆம்பளைக்கு ஏது கர்ப்பப்பை?”

“உங்க ஊர்ல திரியறுது ஆம்பளப் பைத்தியமா?”

“ஆமாம் சார்”

“உடனே கிளம்பு…” அவசரமாய் ஜீப்பில் அவனை அள்ளிப் போட்டுக் கொண்டு விரைந்தார்.

அரை மணி நேரத்தில் சென்று அந்த ஊரை அலசினார்கள். ஊரில் எந்த பைத்தியத்தையும் காணவில்லை. சோர்ந்து வந்து ஒரு டீக்கடை பெஞ்சில் அமர்ந்தார்கள்.

“ரெண்டு டீ!”

தொப்பியைக் கழற்றி மடியில் வைத்துக் கொண்டு சந்தானம் மாஸ்டரிடம் இரட்டை விரல்களைக் காட்டினார். மாஸ்டர் டீ போட்டுக்கொண்டே…

“காலையிலேர்ந்து அலையிறாப் போல இருக்கு. நீங்க யாரைத் தேடிக்கிட்டு இருக்கீங்க?” கேட்டான்.

“தலைவிதி. ஒரு பைத்தியத்தை.!”

“அதை ஏன் தேடுறீங்க?” டீக்களை ஆற்றி கொடுத்தான்.

“காணலைன்னு புகார்.” குடித்தார்.

“இங்கே சுத்திக்கிட்டிருந்தது ஒரே ஒரு பைத்தியம் அதையும் இன்னைக்கு நாலு பேர் புடிச்சுக்கிட்டுப் போய்ட்டாங்க.”

சப்-இன்ஸ்பெக்டர் சந்தானத்துக்கு சொரக்.

“எப்போ?” பரபரக்க டீயைக் குடித்தார்.

“ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி.”

“எப்படி?”

“கார் கொண்டு வந்தாங்க.”

“கார் நம்பர் தெரியுமா?” அவசரமாக கேட்டார்.

“தெரியலை கவனிக்கலை.”

“நாலு பேரும் எப்படி இருந்தாங்க?”

“பேண்ட் சட்டை போட்டு நல்ல நாகரீகமா படிச்சவங்களாத்தான் தெரிஞ்சாங்க.”

“வேற என்னத் தெரியும்?”

“அந்த பைத்தியம்… நான் வரலைன்னு ஒரே முரண்டு சார். நாலு பேர் இழுத்தும் முடியலை. கொலை! கொலை ன்னு கத்தல். இங்கே இருந்து டீக் குடிச்சுட்டுப் போன ஒருத்தர் பரிதாபப்பட்டு அவன்தான் வரலைன்னு முரண்டு பிடிக்கிறானே… எதுக்குய்யா அவனை இத்தனை வலுக்கட்டாயமா புடிச்சு இழுக்குறீங்க? கேட்டார். அதுக்கு அவுங்க… இவன் சொந்தம் வைத்தியத்துக்குக் கூட்டிப் போறோம்ன்னு சொல்லி கார்ல வைச்சு திணிச்சு கொண்டு போய்ட்டாங்க.” விபரம் சொன்னான்.

“ச்சே!” வந்தும் ஆளைத் தொட முடியவில்லை என்கிற ஆத்திரம்.

டீ கிளாசை டக்கென்று வைத்து எழுந்து வண்டிக்கு வந்ததார்.

“கலி! பைத்தியத்துக்குச் சொந்தமா இருந்தா வைத்தியத்துக்கு ஆஸ்பத்திரிக்குத்தானே கொண்டு போயிருப்பாங்க?” ஜீப்பை ஓட்டிக் கொண்டே அவனைக் கேட்டார்.

“ஆமாம் சார்.”

வண்டி காவல் நிலையம் வந்தது.

ஸ்டேசனுக்குள் நுழைந்ததும் “ஏட்டு!” அழைத்தார்.

எழுதிக் கொண்டிருந்த அவர் சந்தானத்தின் எதிரில் வந்தார்.

“ஸ்டேசன்ல்ல நானும் கலியும் இருக்கோம். மத்த எல்லாரும் உடனே போய் இந்த ஊர்ல இருக்கிற மருத்துவமனைகள் அத்தனையிலும் புகுந்து எத்தனைப் பைத்தியங்கள் எங்கே எங்கே இருக்குன்னு குறிப்பெடுத்துக்கிட்டு வாங்க” சொன்னார்.

“ஏன் சார்?”

“நாங்க தேடிப் போன பைத்தியத்தை வைத்தியத்துக்குன்னு அந்த ஊர்ல சொல்லி ஆட்கள் கடத்தி வந்திருக்காங்க…”

“வைத்தியம்ன்னா கீழ்ப்பாக்கம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேர்த்திருப்பாங்க சார்?”

“ஆமாம். அங்கேயும் புகுந்து இன்னைக்கு எத்தனைப் பைத்தியங்களைப் புதுசா சேர்த்திருக்காங்கன்னு கணக்கெடுத்துக்கிட்டு வாங்க”.

“அலையிறதைவிட போன் போட்டு கேட்டா என்ன சார்?”

“கேட்கலாம். ஆனா நேரடியாய்ப் போனால் சரியான விபரங்கள் கிடைக்கும்!”

“ஓ.கே. சார்!” தலையாட்டிக் கொண்டு நகர்ந்தார்.

அத்தியாயம் – 10

சோமு. பாலா. பவித்ரன். சுந்தர் சௌக்கியாபுரம் நுழையும் போது… அங்கிருந்து சப்-இன்ஸ்பெக்டரும் கலிவரதனும் புறப்பட்டு செல்வதைப் பார்த்தார்கள்.

‘இவர்கள் எதற்கு இங்கே….?’ யோசித்தபடியே சோமு டீக்கடையில் வண்டியை நிறுத்தினான். மற்றவர்களும் நிறுத்தினார்கள்.

“போலீஸ் எதற்கு இங்கே வந்துது?” டீ மாஸ்டரை விசாரித்தான்.

“அதுங்களா…?” ஆரம்பித்து அவன் விபரம் சொல்ல… இவர்கள் இடி விழுந்தது. திரும்பினார்கள்.

“சோமு! நம்பளை மாட்டி விடனும்ன்னு குறி வைச்சு எவனோ வேலை செய்யுறான்!” பாலா பீதியுடன் சொன்னான்.

“ஏன்டா?”

“நாமத்தானே நாலு பேர் இதுல முழு மூச்சாய் இருக்கோம். அவனுங்க நாலு பேர் வந்தால் நம்மை மாட்டிவிடுறதாய்த்தானே அர்த்தம் !”

“அப்படித்தான் எனக்கும் தோணுது.” சுந்தர் ஆமோதித்தான்.

“யாராய் இருக்கும்?”

“எவனுக்குத் தெரியும்?”

“டாக்டர்தான் விசயம் தெரிஞ்சவர் அவர்…” பாலா இழுத்தான்.

“சும்மா சும்மா அவர் மேல சந்தேகப்படாதீங்க. அவர் நம்ம கட்சி!” பவித்ரன் சொன்னான்.

“தோள் மேல கை போட்டு அழுத்தலாம்!” சுந்தர் சொன்னான்.

“டாக்டரை அப்படி சொல்ல முடியாது. அப்படி இருந்தா சின்னச்சாமி இருக்கும் இடத்தைப் போன் பண்ணி நமக்குச் சொல்லி இருக்க மாட்டார்.”

“அவர் பேச்சை விடுங்க. வேற யார் இதை செய்திருப்பா? எவன் இந்த பைத்தியங்களைக் குறி வைச்சு கொண்டு போனான்? எந்த டாக்டர் உதவி? எந்த மருத்துவமனை?” பாலா கேள்விகளை அடுக்கி நிறுத்தினான்.

“இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் எவனாவது மாட்டினாத்தான் தெரியும்!” ஏதோ யோசனையில் சோமு பதில் சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

மற்றவர்களும் யோசனை செய்தார்கள். சோமுவிற்குள் ஏதோ வெளிச்சம் அடித்தது.

“பாலா!” அழைத்தான்.

“என்ன?” அவன் யோசனையை நிறுத்தி திரும்பினான்.

“உனக்கு யாராவது எதிரிங்க இருக்காங்களா?”

“ஏன்?”

“நமக்கு வேண்டப்படாதவன் எவனாவது இருந்தாலும் நம்மை சிக்கல்ல மாட்டி விடனும்ன்னு இப்படி செய்யலாம்….”

“எனக்கு அப்படி யாரும் கெடையாது”.

சோமு மற்றவர்களையும் பார்த்தான்.

“சுந்தர்! நீ ஒரு பொண்ணை டாவடிச்சு, புள்ளைக் குடுத்து கர்ப்பவதியாக்கி காலை வாரி விட்டியே… அவள் அண்ணன் தம்பி எவனாவது மொளைச்சி உனக்கு எதிரா வில்லங்கம் செய்ய… எல்லாரும் மாட்றோமா?!” சந்தேகத்துடன் அவனைப் பார்த்தான்.

“அதெல்லாம் பழங்கதை. அவளுக்கு அண்ணன் தம்பி மாமன் மச்சான் யாரும் கெடையாது.”

“அனாதையா?”

“இல்லேடா. பின்னால இப்படியெல்லாம் சங்கடம் வரக்கூடாதுன்னு ரொம்ப முன்னெச்சரிக்கையா யாரும் இல்லாதவளாய் டாவடிச்சான்.” பவித்ரன் அவனுக்கு வக்காலத்து வாங்கினான்.

“நீ பக்கத்துல இருந்தியா?”

“எல்லாம் அவன் சொல் கேள்விதான்.”

“சோமு! உன்னால ஒருத்தி துாக்குப் போட்டு தற்கொலை செய்துக்கிட்டாளே!…அவ அக்கா தங்கச்சி எவளாவது ஆளுங்களை வைச்சு இப்படி செய்யுறாளா?” சுந்தர் அவனை மடக்கினான்.

“பொம்பளையெல்லாம் இப்படித் திட்டம் போட்டு சரியாய் செய்ய முடியாது”.

“எல்லாரையும் இப்படி கழிச்சுக்கட்டி யாரும் இல்லேன்னா யார்தான் இப்படி நம்மைக் குறி வைச்சு அடிக்கிறா?” சோமு கேட்க….

எல்லாரும் மண்டையை உடைத்துக் கொண்டார்கள்.

– தொடரும்…

– கிட்னி காவுகள்! (நாவல்), முதற் பதிப்பு: 20-12-2019, காரை ஆடலரசன் வெளியீடு, காரைக்கால்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *