காய்ந்த மல்லிகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2025
பார்வையிட்டோர்: 191 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

67 ஆண்டுகளுக்கு முன்பு சிறுகதை இலக்கியச் சூழல் நிலவிய வண்ணங்களை ‘காய்ந்த மல்லிகை’ என்னும் இச்சிறுகதை பிரதிபலிக்கிறது. 

சிறுகதை இலக்கியம், இன்று பல நிலைகளில் வளர்ந்துள்ளது. என்றாலும் அவற்றின் அடிப்படைத் தன்மை மாறாதல்லவா? அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கிய நிலையைக் கவனத்தில் கொண்டு இக்கதையைப் படிக்கும்பொழுது, இதன் சிறப்பியல்புகள் மனத்தில் பதியும். 

கலைமாமணி விக்கிரமன் அவர்கள் ‘வேம்பு’ என்னும் தம் இயற்பெயரில் எழுதியுள்ள 1944ஆம் ஆண்டு இச்சிறுகதையில் பாத்திரப் படைப்புகள் யதார்த்த நிலையைச் சித்திரிக்கின்றன. கிராமத்திலிருந்து பட்டணத்திற்குப் படிக்கச் சென்று மீண்டுத் தன் கிராமத்துக்கு வரும் இளம் வாலிபனின் உணர்வுகளை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ள முறை வெகு இயற்கையாக அமைந்துள்ளது. இடையிடையே நிகழ்காலக் கண்ணோட்டத்தில் சில உண்மைகளைக் கூறுவதும் பாராட்டத்தக்கதாகும். 

மல்லிகா பவனமும் மல்லிகாவின் சந்திப்பும் காதலாகக் கனிந்து மணமாக முடியுமோ என்று எண்ணுமளவு விறுவிறுப்புடன் கதை செல்கிறது. அக்காலத்தில் நிலவிய ஜாதிபேதம் மல்லிகாவை மலரச் செய்யாமல், காய்ந்த மல்லிகை ஆக்கி விடுகிறது. வாசகர்கள் மனம் ஏற்றுக் கொள்ளும்படியாகச் சித்திரித்திருக்கும் ஆசிரியரின் ‘உத்தி’யைப் பாராட்ட வேண்டும். 

இத்தகைய உத்திக்குத் துணையாக, படிப்பிற்காக அவன் வெளியூர் செல்ல நேரிடுவதாக ஒரு திருப்பத்தை அமைத்திருப்பது சிறுகதையின் வடிவிற்கு ஏற்றமளிக்கிறது. 

மணம் பரப்பி மகிழ்வூட்ட வேண்டிய மல்லிகை, அதற்கு மாறான நிலைப்பட்டுப் போனதை மல்லிகா பவனம் ‘பாம்குரோவ்’ ஆனதாகக் கூறுவதில் வலியுறுத்துகிறார். கதையின் கருவுக்கும் தலைப்பிற்கும் பொருந்தும் வகையில் கொண்டு போயிருக்கும் விதம் நம் நெஞ்சில் பதிகின்றது. 

சிறுகதை இலக்கியம் ஐம்பதாண்டுகளில் நிறைய வளர்ந்திருக்கிறது. கதைக்கரு (Theme), யதார்த்தம் (Reality), வடிவம் (Form), கதைப்போக்கு (Narration). கற்பனைச் செறிவு (Imagination), திருப்பமும் முடிவும் Climax and Conclusion) ஆகிய சிறுகதைக்குரிய இலட்சணங்கள் இக்கதையில் இயல்பாகவே அமைந்திருப்பதை நான் படித்து வியந்தேன். 

ஆசிரியர் தம் 17ஆவது வயதிலேயே தெளிவான சிந்தனையுடன் விறுவிறுப்பான கதைப் போக்குடன் சரளமான நடையுடன் எழுதியுள்ள காய்ந்த மல்லிகை’ என்னும் இச்சிறுகதை, இக்காலத்திற்கும் ஈடுகொடுக்கும் வண்ணம் அமைந்திருக்கும் நேர்த்தி வெகு அழகு! 

இன்றைக்கு இலக்கியச் சோலையாக மணம் பரப்பும் ஆசிரியரின் இலக்கிய மணத்தை, இச்சிறுகதை எனும் அரும்பில் தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது. 

இன்றைய இளம் எழுத்தாளர்களின் நெஞ்சில் பதியும்படியாகப் பண்போடும். தெளிவோடும் எழுதப்பட்டுள்ள இச்சிறுகதை ஒரு நல்ல இலக்கியம் என்று பாராட்டுகிறேன். 

– கங்கா ராமமூர்த்தி 

காய்ந்த மல்லிகை

‘காய்ந்த மல்லிகை’ என்னும் தலைப்பைப் போட்டுவிட்டுக் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்ன எழுதுவது என்னும் எண்ணம் என்னைத் தீவிரமாக வாட்டியது. நாளைக்குள் சிறுகதை ஒன்றைக் கொடுத்தாக வேண்டும். 

என் அறையின் ஜன்னல் கதவுகள் திறந்திருந்தன. மெல்லென வீசி வரும் தென்றலிலே தோட்டத்திலிருந்து வீசும் மல்லிகையின் மணம் என்னைப் பெரும் சிந்தனையில் ஆழ்த்தியது. 

சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இந்நிலையில் இல்லை. வெள்ளைத்தாள்களில், மசியால் கிறுக்கி நிரப்பி ‘கதை’ எனக் கதை பண்ணும் வழக்கம் அப்பொழுது இல்லை. ‘பணம், பணம்’ என்று பணத்திற்குப் பறக்கும் புத்தி அப்பொழுது இல்லை. பரட்டைத் தலையுடனே கிழிந்த கதராடை அணிந்து ஊரெல்லாம் சுற்றியலைந்து திரியும் பிழைப்பு அப்பொழுது எனக்கில்லை. 

லட்சக்கணக்காகப் பணம் நடமாடும் ஒரு கம்பெனியிலே முப்பது ரூபாய்க்காக மணிக்கணக்காக உழைக்கும் பிழைப்பு அப்பொழுது எனக்கில்லை. 

ஆனால்…அந்தக்காலத்தை நினைக்கையில் என் மனம் சொல்லொணா வேதனையை உண்டாக்குகிறது. கால தேவனுக்குத்தான் என்ன வேகம்? மாயத் தொழில் ஈடுபட்டு மக்களை மயக்குவதில்தான் என்ன ஆசை? 

சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கும் பவானி ஆற்றின் கரையை ஒட்டி, பச்சைப் பசேலென்று கண்ணைக் கவரும் தோட்டங்களின் நடுவே விளங்கியது பூந்தோட்டம் கிராமம். 

பூந்தோட்டம் என்னும் பெயருக்கேற்றபடி அக்கிராமத்தைச்சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மலைகளும், மலர்களைத் தாங்கி வளர்ந்திருக்கும் பூந்தோட்டங்களும், கருப்பஞ் சோலைகளும் செழித்து விளங்கி அவ்வூருக்குத் தனியழகை அளித்து வந்தன. 

இயற்கை வளம் பூர்ண சோபையுடன் விளங்கிய அந்தக் ராமத்தில்தான் துரதிருஷ்டம் பிடித்த நான் பிறந்தேன். என் தந்தை பணக்காரரல்லர். ஏதோ கொஞ்சம் கரும்புக் கொல்லை உண்டு. விளைகிற கரும்பை ஆலை முதலாளிகளுக்குக் கொடுக்காமல், தானே வெல்லம் காய்ச்சுகிறேன் என்று பல ரூபாய்களைக் கோட்டை விட்டவர். நான் படித்துப் பாஸ் செய்து வேலைக்குப் போய்ச் சம்பாதித்து அத்தால்தான் குடும்பத்துக்கு விமோசனமென்று என்னை அவ்வளவு தஷ்டத்திலும் பக்கத்திலுள்ள மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பிப் படிக்க ஏற்பாடு செய்தார். 

மூன்றாவது பாரம் வரையில் நான் மேட்டுப்பாளையத்திலேயே தான் படித்து வந்தேன். ஆண்டவன் ஏன் எனக்குப் புத்தியை அளித்தார்? 

படிப்பு வரவில்லையே புத்தியை அளி ஆண்டவா!’ என்று ஈற்றுகின்றவர்களுக்கு அதை அளித்திருந்தால், அவர்கள் எவ்வளவோ பயன் பெற்றிருப்பார்கள். 

நான் நன்றாகப் படிப்பதைக் கண்டு என் பள்ளித் தலைமைப் பாதிரியார் சம்பளமில்லாமல் மேலே படிக்க ஏற்பாடு செய்தார். 

எப்படியாவது நான் படித்துச் சம்பாதிக்க வேண்டும் என்னும் ஆசை என் தந்தைக்கு இருந்ததால், நான் அவருடைய ஒரே மகனென்றும் பாராது சென்னைக்கு என்னை அனுப்பினார். 

பாதிரியார் கொடுத்த கடிதத்தைச் சென்னைக்குச் சென்று அவர் குறிப்பிட்டவரிடம் காட்டினேன். அவரும் பாதிரியார்தான். என்னைப் புன்முறுவலுடன் வரவேற்றார். பெயர், சாதி, மதம் ஆகியன பற்றிக் கேட்டதற்குக் கணீர் கணீர் என்று பதிலளித்தேன். 

‘உனக்கு இயேசுநாதரைப் பற்றித் தெரியுமா? பைபிள் படித்திருக் றொயா?’ என்று கேட்டார். அவரது முகம், என் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தது. 

நான் சட்டென்று ‘ஓ! படித்திருக்கிறேன். இவ்வளவு நாள் அதைப் படித்த மகத்துவந்தான் என்னை இங்கு அனுப்பியது” என்றேன். அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. 

மறுநாளே என்னை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டுப் பள்ளிக்கும் போகுமாறு சொல்லிச் சென்றார். 

எனக்குச் சென்னைப் பட்டணத்தைப் பார்க்க அப்பொழுது மிகவும் ஆச்சர்யமாயிருந்தது. கட்டை வண்டியை விட மெதுவாகச் செல்லும் டிராம் வண்டியையும், மின்சார விளக்கையும், வெயிலையும் பார்க்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

ஆனால், இன்று இதே சென்னை நகரம் எனக்கு நரகமாகத் தோன்றுகிறது. டிராம், பஸ்ஆகியவற்றின் கோர சப்தமும்தனிமையையே அறியாத கடற்கரையில் அழும் மின்சார விளக்குகளையும் காண எனக்குக் கசப்பாக இருந்தது. 

உயர்நிலைப் படிப்பு உருண்டோடி மறைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் சிறப்பாகத் தேறிவிட்டேன். பாதிரியாருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. என் தாய் தந்தையரைப் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், பாதிரியாரிடம் விடை பெற்றுக் கொண்டு பூந்தோட்டம் கிராமத்துக்குப் புறப்பட்டேன். 

பூந்தோட்டம் முன்பைப் போலில்லை. மேட்டுப்பாளையம் ஸ்டேஷனில் இறங்கி எங்கள் கிராமத்தை நோக்கி வருகையிலேயே மல்லிகையின் மணம் கம்மென்று வீசத் தொடங்கிவிட்டது. தென்றலின் இனிமையிலே, கலந்து வரும் மல்லிகையின் மணம் என்னை மறக்கச் செய்தது. 

ஊருக்குள் புகுமுன்னரே, சிறு தோட்டத்திற்குள் புதிதாக நகர பாணியில் கம்பீரமாகக் கட்டப்பட்ட ஒரு வீடு கண்ணில்பட்டது. அழகான சிறு வீடும், வீட்டைச் சுற்றியுள்ள சிறு தோட்டமும், தோட்டத்திலே வெள்ளை வெளேரென்று பூத்துக் குலுங்கி இருக்கும் மல்லிகைப் பூவும் என் கவனத்தை மிகவும் கவர்ந்தன. 

மல்லிகைத் தோட்டத்திற்கும், அழகிய வீட்டிற்கும் ஏற்றாற்போல் ‘மல்லிகை பவனம்’ என்று பெயர் இடப்பட்டிருந்த அவ்வீட்டின் பெயரைப் படித்தவுடன், எங்கள்கிராமம் நாகரிகமடைந்ததைப் பற்றிச் சந்தோஷம் ஏற்பட்டது. அவ்வீட்டில் வசிப்பவர்களைப் பற்றி அறிய ஆவல் உண்டானதால், என்தந்தையிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். 

“ஏதப்பா… இப்படி கம்மென்று வாசனை வீசுகிறதே?” என்றேன். “அதோ… அந்த மல்லிகை பவனத்திலிருந்துதான் வீசுகிறது. நீ இந்தக் கிராமத்திலிருக்கையில் இந்த மாதிரி வீடு ஏது?” என்றார். 

நானும், “ஆமாம், சென்னை முறையில் கட்டப்பட்டிருக்கிறதே, யாருடைய வீடப்பா?” என்று கேட்டேன். 

என் தந்தை சட்டென்று பதில் சொல்லவில்லை. என்னவோ யோசிக்கிறார் என்று எண்ணினேன். சிறிது நேரம் கழித்து, “நானும்…இது போன்றதொரு வீடுதான் கட்ட வேண்டுமென்று எண்ணினேன். ஹூம்… என்ன செய்வது? நீ படித்துப் பாஸ் ஆகிவிட்டாய். இனி ஏதாவதொரு வேலைக்குப் போய்ச் சம்பாதித்தால் உண்டு” என்று ஏதேதோ பேசிக் கொண்டே வந்தார். 

ஆனால், என் மனம் மல்லிகை பவனத்தின் மாடியின் மேல் நின்று கொண்டிருப்பவர் மீதும், அவர் பின்னால் நின்று கொண்டிருக்கும் பெண்ணின் மீதும்தான் சென்றது. 

இரண்டு நாள்கள் கழிந்தன. ஒருநாள் மாலை, நான் வீட்டுத் திண்ணையிலே உட்கார்ந்துகொண்டு பாரதி பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தந்தை வேகமாக வந்தார். “மணி, முதலியார் வீட்டுக்குப் போகலாம் வா… உன்னை அவருக்குப் பார்க்க வேண்டு மாம்” என்றார். 

‘இந்த வீடுதானா?’ என ஆச்சர்யத்தால் என் முகம் மலர்ந்தது. நான் ஊருக்கு வந்த அன்றே என் மனத்தைக் கவர்ந்த அதே மல்லிகை பவனம்தான். தோட்டத்திற்குள் நுழையும்போதே எனக்கு ஒருவித உணர்ச்சி இதயத்துள் எழுந்தது. 

”வாங்கோ!” என்று என் தந்தையை வரவேற்றபின், “வாப்பா!” என்று என்னையும் புன்முறுவலுடன் வரவேற்றார் முதலியார். 

சிறிது நேரம் எங்களிடையே அமைதி நிலவியது. கூடத்தின் எதிரேயிருந்த அறையில் கலகலவென்று வளை குலுங்கும் ஒலியும், யாரோ நடமாடும் ஓசையும் தவிர வேறு வித ஒலியுமின்றி அந்த வீடு நிசப்தமாய் இருந்தது. 

“எங்களைக் கூப்பிட்டனுப்பி இருந்தீர்களாமே!” என்று என் தந்தை முதலில் பேச முற்பட்டார். 

“ஆமாம்… உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக் கிறேன்” என்று கூறிவிட்டு ஹாலுக்கு எதிரேயுள்ள அறையை நோக்கி, “பாப்பா… இவர்களுக்கு ஏதாவது சாப்பிடப் பழம் கொண்டு வா!” என்றார். 

“அதெல்லாம்எதுக்குங்க” என்று என்தந்தை சொல்லிமுடிப்பதற்குள் பாப்பாவே கையில் பழத்தட்டுடன் அங்கே வந்தாள். 

நான், யாரையோ முதலியார் ‘பாப்பா’ எனக் கூப்பிடுகிறார் என்று எண்ணினேன். ஆனால், காட்சியளித்ததோ… “இவள்தான் என் பெண்… மல்லிகா!” என்று அவர் என் தந்தையைப் பார்த்துக் கூறினார். மெல்ல, பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந் தோம். என் தந்தையும் முதலியாரும் பேசியதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். ஹூம்… சும்மாவா உட்கார்ந்திருந்தேன்? என் மனம் முழுதும் மல்லிகை மலரைப் போன்று அழகு மணம் வீசி நிற்கும் மல்லிகாவின் மீதிருந்தது. 

முதலியார் என் பக்கம் திரும்பினார். “தம்பி! நீ பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம்!” என்றார். 

நான் மௌனமாக இருந்தேன். பிறகு அவர், “தம்பி… உனக்கு டைப் அடிக்க வருமா?” என்று கேட்டார். 

நான் சிறிது புன்முறுவலுடன், “எங்கள் ஹாஸ்டல் வார்டனுக்காக அடிச்சுப் பழக்கமிருக்கு!” என்றேன். 

உடனே அவர் என் தந்தை இருக்கும் பக்கம் திரும்பி, “என்னங்க, பையனை மேலே எதுக்காவது படிக்க வைக்கப் போறீங்களா?” என்றார். 

என் தந்தை பெருமூச்சுடன், “படிக்க வைக்க ஆசைதான். பணம் எங்கே இருக்கு? எங்கேயாவது வேலையில் அமர்த்த வேண்டியது தான்” என்றார். 

சிறிது நேரம் முதலியார் மௌனமாக இருந்தார். பிறகு அவர், “அன்னிக்குப் பையன் ஊருக்கு வரும்போதே பார்த்தேன். பையன் நல்ல புத்திசாலியா இருக்கான். நீங்கள்தான் எங்கேயாவது வேலைக்கு அனுப்பப் போகிறேன் என்கிறீர்கள். எனக்குப் பெரிய எஸ்டேட் இருப்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு அடிக்கடி இந்த மார்பு வலி வந்து பெரும் தொந்தரவைக் கொடுக்கிறது. என்னால் எதையும் கவனிக்கவே முடியவில்லை. இவனிருந்தால் வருகிற கடிதங்களுக்குப் பதிலெழுதவும், கணக்குகளைப் பார்க்கவும் சௌகரியமாக இருக்கும்” என்றார். 

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என் தந்தை, “அதற்கென்ன, உங்கள் வார்த்தைக்கு மறுப்பு என்ன சொல்வது?” என்றார். 

முதலியார் என் பக்கம் திரும்பினார். அச்சமயம், அந்த அறையில் உள்ள இரு கண்கள் எங்களையே கவனித்துக் கொண்டிருந்தன. 

நானும், “அதற்கென்ன ஸார்… உங்கள் இஷ்டப்படி செய்கிறேன்” என்றேன். 

”நாளைக்கே நல்ல நாளாக இருக்கிறது. வந்து விடுங்கள்!” என்றார் முதலியார். 

நாங்களும் விடை பெற்றுக் கொண்டோம். எனக்கு அந்தக் கண்களையோ, வீசும் காற்றினில் மிதந்து வரும் மல்லிகையின் ஞானத்தையோ மறந்து ஒருநாள் முழுவதும் இருக்க முடியவில்லை. எப்பொழுது பொழுது விடியும் என்று காத்திருந்தேன். 

மறுநாளிலிருந்து நான் முதலியார் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினேன். வேலை ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஆனால், பொழுது மட்டும் இன்பகரமாகச் சென்று கொண்டிருந்தது. முன்பு என் கண்ணில் தென்படாத மல்லிகா, ஏதாவது ஒரு காரணத்திற்காக என் ஆபீஸ் அறைக்கு வருவாள். பழைய இலக்கியங்களில், பெண்களின் கண்களுக்குள்ளகாதல்சக்தியின்வர்ணிப்பைப் படித்து, அவையெல்லாம் ‘சுத்தப் போலித்தனமான கற்பனை’ என்று எண்ணியிருந்த நான், கண்கூடாக அன்றுதான் காதலின் சக்தியை அறிந்தேன். 

எஸ்டேட் விஷயமாக சகல வேலைகளையும் முதலியார் என்னிடமே தம்பி விட்டு விட்டார். நான் சில நாள்கள் ஆபீஸில் முக்கிய விஷயமாகக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்பொழுது, தபால்காரன் கொடுத்த சுடிதங்களை அவளே என் மேஜையின் மீது கொண்டு வைத்து விட்டுச் செல்வாள். கடிதத்தை நேரிடையாக அவளிடமிருந்து வாங்குகையில், என் கை அவள் கை மீது பட்டுவிடும். அப்பொழுது என் உடலில் உண்டாகும் உணர்ச்சியை என்னால் இப்பொழுது விவரிக்க முடியவில்லை. 

எந்தவிதத்திலோ எங்களிருவருக்கும் தெய்விகக் காதல் பிறந்து வளரத் தொடங்கியது. காதலுக்குத்தான் என்ன சக்தி? அது சமூக வேற்றுமையையோ, தாழ்வு உயர்வையோ இலட்சியம் செய்யவில்லை. ஒருநாள் முதலியார் ஏதோ அவசர வேலையாக கோயமுத்தூர் சென்றிருந் நார். மல்லிகாவுக்குத் துணையாக என்னை வைத்துச் சென்றிருந்தார். 

என்னிடம் அவருக்குள்ள நம்பிக்கைதான் என்ன! அவ்வீட்டில் சமையல்காரனைத் தவிர வேறு யாரும் இல்லை. 

நான் ஏதோ சில கடிதங்களை டைப் செய்து கொண்டிருந்தேன். மல்லிகாவும் உள்ளே கையில் அன்றைய தபால்களுடன் நுழைந்தாள். நான் டைப் அடிப்பதை நிறுத்தினேன். 

“ஸார்… அப்பா எங்கே போயிருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டாள். அந்த ‘வார்த்தைகளின்’ இனிமையிலே மயங்கிவிட்ட எனக்குச் சட்டென்று பதில் பேச முடியவில்லை. எனினும் சமாளித்துக் கொண்டு “கோவை வரையில் போயிருக்கிறார்” என்றேன். 

“ஸா…ர்…” என்றாள் அவள். 

“… … … … …” 

அவளது குரல் தழுதழுத்திருந்தது. என் நாற்காலியின் பிடிகளில் சொந்தமுள்ளவள்போல் வந்து உட்கார்ந்து கொண்டாள். 

எனக்கு என்னையே நம்ப முடியவில்லை. என்னவோ அவள் கேட்டாள். மிருதுவான அவள் கை விரல்களின் ஸ்பரிசத்தில் மெய் மறந்திருந்த எனக்கு, என்ன கேட்டாள் என்றே புரியவில்லை. 

எவ்வளவு நேரம் அவ்விதமிருந்தேனோ எனக்கே தெரியாது. “ஸார் காபி” என்று சமையல்காரன் கூப்பிடும் குரல் கேட்டது. நான் கனவு உலகிலிருந்து விழித்துக் கொண்டேன். 

நாள்கள் உருண்டு காற்றினும் கடிய வேகத்தில் சென்றன. எனக்குப் பூந்தோட்ட வாழ்க்கையிலே கசப்புண்டாகி விட்டது. 

‘கண்காணா இடத்திலே, காற்றுக்கு எட்டாத தீவிலே மல்லிகாவுடன் இருப்பதே போதும்’ என்று ஒரு பைத்தியக்கார எண்ணம் ஏற்பட்டது. வேற்றுச் சாதி பெண்ணான அவளை மணப்பது இயலுமா என்று அப்போது என் பேதை மனம் எண்ணவில்லை. ஆனால், நான் சில வேளைகளில் ‘நாம் ஏன் வேறு சாதியில் பிறந்தோம்? மல்லிகாவின் மாமனாக ஏன் பிறந்திருக்கக்கூடாது’ என்றெண்ணுவேன். 

இவ்வளவையும் சொல்லி வந்த பின்பு, இதை முடிக்கும் தறுவாயில் வருகிறேன். இந்தக்கதையையும் சோகமாக முடித்து விட்டீர்களே என்று என் நண்பர்கள் கேட்பார்கள். அதற்கு நானென்ன செய்வேன்? என் வாழ்க்கை துன்பத்தோடு பின்னிக் கொண்டிருக்கும்பொழுது அதை எப்படி இன்ப முடிவாகக் காட்ட முடியும்? 

ஆறு மாதங்கள் சென்றன. எனக்கு காலேஜில் படிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. பழைய பாதிரியாரின் உதவி கிட்டும் போலிருந்தது. ஆனால், என்னிடம் அன்பு பூண்டிருக்கும் அந்த மல்லிகாவின் இரு கண்களையும், கனிவுடன் கூடிய அவள் தந்தையின் முகத்தையும் விட்டு எப்படிப் பிரிவது? 

முதலியார் திடீரென இதய நோய்வாய்ப்ாட்டார். அந்த நோயே அவருக்கு இடும்பையாக முடியுமென்று யாருக்குத் தெரியும்? 

டாக்டர்கள் கைவிட்டனர். அவரது மரணப் படுக்கையைச் சுற்றி மல்லிகா, அவுள் மாமன் மற்றும் பலர் கூடியிருந்தனர். 

என் கண்களில் நீர் நிறைந்திருந்தது. அவருடைய உயிர் வெளியே போசு மன்றாடுவதுபோல், கண்ணிலே முட்டிக் கொண்டிருக்கும் தண்ணீர் கீழே சிந்தப் பிரயத்தனப்பட்டது. 

ஏதோ பேச வாயெடுத்தார் முதலியார். அவரால் பேச முடியவில்லை. யிர் நெஞ்சை அடைத்துவிட்டுக் கடைசி முறையாக அவரிடம் விடை இயற்றுச் சென்றது. 


ஒருநாள் என் வீட்டிற்குப் பழைய பாதிரியார் தேடிக் கொண்டு அந்தார், “உனக்குக் காலேஜ் படிப்புக்கு ‘ஸ்காலர்ஷிப்’ கிடைத்திருக் இறது” என்றார். 

எனக்குப் பாதிரியார் கூறியது ரொம்பப் பிடித்தது. அந்த வாரத்திலேயே மீண்டும் நான் சென்னைக்குப் புறப்பட்டு விட்டேன்.ங 

நாள்கள் மறைந்து கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாகப் பூத்தோட்ட வாழ்க்கை மலர்ந்து பின் வாடிய மலர்களைப் போன்றாகியது. ஒருநாள் ஹாஸ்டலில் நானிருக்கையில் என் பெயருக்கு ஒரு தபால் வந்தது. 

ஒருமுறை கடிதத்தைப் படித்து முடித்தவுடன் எனக்கு என்னவோ செய்தது. மறுமுறை படிக்கத் தோன்றவில்லை. இப்பொழுதும் எனக்கு அக்கடிதத்தின் சுருக்கத்தைச் சொல்லப் பிடிக்கவில்லை. அப்படியே அந்தக் கடிதம் முழுமையையும் கீழே கொடுத்து விடுகிறேன். 

“அன்பு! இக்கடிதத்திலிருந்து என்னை யாரென்று தெரிந்து கொண்டிருப்பீர்கள். 

நீங்கள் பூந்தோட்டத்தை விட்டுச் சென்ற மறு மாதமே என் மாமன் மகன் சண்முகத்துக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. எனக்கு என் தாய் ‘மல்லிகா’ என்று பெயர் வைத்ததை விட துர்பாக்கியவதியென வைத்திருக்கலாம். 

என் கணவருக்குக் காசநோய் உண்டென்பது எனக்குத் தெரியாது. அது அவர் உடலை உள்ளுக்குள்ளேயே அரித்து வந்தது. கடைசியில் நான் சென்ற வாரம் பெண்களுக்குரிய இலட்சணங்களை இழந்தேன். 

ஸார்! இனி உங்களிடம் ஒன்றையும் ஒளிக்காமல் கூறுகிறேன். மனித வர்க்கத்திலே ஒதுக்கப்பட்ட இனமாக இருந்து வாழ்வதில் பயமென்ன? நல்ல மலர் இன்றி, மஞ்சள் இன்றி, கலகலப்பான பேச்சின்றி வாழ்வு எதற்கு? 

என் சகோதரி பவானி நதி என்னை அழைக்கிறாள். வருகிற அமாவாசை இரவு அவளுடன் சேர்ந்து விடப் போகிறேன். 

முடிவாக என்னை நினைவு வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் துணையாக வருபவளுக்கு அளிக்குமிடத்தில் முடிந்தால் எனக்கும் பாகம் கொடுங்கள். 

மல்லிகா”

எங்கிருந்து வந்தது என்ற விலாசமே இல்லை. கடித உறைக்குள் நான்கைந்து காய்ந்த மல்லிகைப் பூவிதழ்கள் இருந்தன. 

நான் பரபரப்புடன் என் துணிப் பெட்டியின் அடியில் வைத்திருந்த பழைய டைரியில் வைக்கப்பட்டிருந்த மல்லிகை மலர்களை எடுத்தேன். சருகுபோல் காய்ந்திருந்த இதழ்களுடன், மல்லிகா அனுப்பிய மலர்களையும் சேர்த்தேன். 

இரண்டாண்டுகள் கழிந்தன. பூந்தோட்டம் சென்றிருந்தேன். 

முன்னைப்போல் அக்கிராமத்தில் பூத்துக் குலுங்கியிருந்த மல்லிகையின் வாசனையைக் காணோம். ‘மல்லிகை பவனம்’ என்னும் அவ்வீட்டை ஒரு வெள்ளைக்காரன் வாங்கி, ‘பாம்குரோவ்’ என்னும் பெயரிட்டு, தோட்டம் முழுதும் குரோட்டன்ஸ் செடிகளை வைக்க, மல்லிகைப் பந்தல்களை வெட்டி வீழ்த்தி விட்டான். 

மல்லிகாவைப் பற்றிய நினைவே அவ்வூராருக்கு இல்லை. 

என் மனத்தில் காய்ந்து போன மல்லிகாவின் வாழ்க்கையும், வெட்டி வீழ்த்தப்பட்டுக் காய்ந்து கொண்டிருக்கும் மல்லிகைக் கொடியும் தோன்றின. 

‘சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி
சொல்லல் பாவம்’ – பாரதி 

– 1944, நவசக்தி. 

– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *