காமாட்சி மெஸ் சபேசன்
(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வசந்தா நிலையத்தின் உள்ளே காமாட்சி மெஸ் என்னும் உணவகத்தை சபேசன் நடத்தி வருகிறார். சபேசனுக்கு நடுத்தர வயது. ஒல்லியான தேகம். மழித்த முகம். யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார். மெஸ்ஸில் பணியாளர்கள் என்று யாரும் கிடையாது.. அவரும் அவரது மனைவி பார்வதியும் சேர்ந்து பார்த்துக் கொள்கிறார்கள். பருமனான உடல்வாகு கொண்ட பார்வதிக்கு உடலில் சில பிரச்சனைகள் இருந்த போதும் மாங்கு மாங்கு என்று வேலை செய்வாள். வேலைச்சுமை காரணமாக கணவனிடம் கோபத்தைக் காட்ட மாட்டாள். இவர்கள் இருவரின் மலர்ந்த முகங்கள், காம்பவுண்டில் வசிப்பவர்களுக்கு பிடித்துப் போனது. அவசரமான காலை வேளையில், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப உணவு தயாரிக்க முடியாத தாய்மார்கள், இவர்களை அவசரப்படுத்தி சிற்றுண்டிகளை பேக் செய்து பெற்றுக் கொண்டு செல்வார்கள். தொகையை சேர்த்து வைத்து அவர்கள் தரும் போது தான் தருவார்கள். எந்த தருணத்திலும் வருபவர்களிடம் இந்த தம்பதி எரிந்து விழ மாட்டார்கள்.
சபேசன், ஊரில் உள்ள அண்ணன் வீட்டுக்குச் சென்ற போது அண்ணனின் மூன்றாவது மகள் திலகா,வாய் பேச முடியாதவள் ” இங்கு அக்காக்கள் என்னை வெறுக்கிறார்கள். நான் பள்ளிக்கூடம் போனாலும் அங்கும் கேலி செய்கிறார்கள். என்னை உன்னுடன் கூட்டிச் சென்று விடு சித்தப்பா “ காகிதத்தில் முத்து முத்தான கையெழுத்தில் எழுதிக் கொடுத்தாள். அண்ணன் அண்ணியிடம் திலகா எழுதியதைக் கூறாமல், திலகாவை எங்களுடன் அனுப்பி வையுங்கள் என்று கேட்டார் சபேசன். “ நீயே ஆள் வைச்சுக்காம கஷ்டப்பட்டு மெஸ் நடத்தறே…. இவளைப் பார்த்துக்க முடியுமா “ அண்ணன் வினவினார். அவரது அண்ணன், திலகா, தன்னுடைய அக்காக்களிடம் படும் அவஸ்தை அறிந்தவர் என்பதால் சபேசனுடன் அவளை அனுப்பி வைத்தார். மெஸ்ஸில், அந்த ஒல்லியான தேகம் கொண்ட பதின் பருவ மங்கை திலகா, சித்தப்பா – சித்திக்கு பலவகையிலும் உறுதுணையாக இருந்தாள். விட்டுப் போன பள்ளிப் படிப்பை நேஷனல் ஓபன் ஸ்கூலில் சேர்ந்து வீட்டில் இருந்தபடியே படித்தாள். உணவகத்திற்கு வருபவர்கள், மறந்து வைத்து விட்டு போகும் பத்திரிகைகளையும் பொட்டல காகிதங்களில் உள்ளவற்றையும் வாசிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தாள் திலகா. சிற்றப்பாவின் உணவகத்திற்கு வரும் பல தரப்பட்ட மனிதர்களின் குணங்களையும் கூர்ந்து கவனித்தாள் அவள். அன்றொரு நாள். இரவு நேரம். மழை கனமழையாகப் பொழிந்து கொண்டிருந்தது. இனிமேல் யாரும் வரப்போவதில்லை. அவர்களுக்குத் தர உணவு வகைகளும் ஏதுமில்லை என்று எண்ணமிட்ட சபேசன், உணவகத்தின் வாயிற் கதவை சாத்தச் சென்றார். அங்கு மழையில் நனைந்த ஓர் ஒல்லியான தேகம், தாடி முகம் கொண்ட இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
“என்னப்பா மழைக்கு ஒதுங்க வந்தியா உன்னை இந்த காம்பவுண்டில் பார்ததது இல்லையே அவுட்சைடரா?” கேட்டார் சபேசன்.
இளைஞன் பதில் சொன்னான்
“பஞ்சு அண்ணனை பார்க்க வந்தேன். அவரு ஊர்ல இல்லை போல “ காம்பவுண்டில் இல்லாத நபரைச் சொல்கிறான் என்று நினைத்த சபேசன், “இந்த இடம் ஒதுங்க சரியா இருக்காது. எதிரில் இருக்கும் போர்ஷனில் திண்ணை இருக்கு. அங்க போய் இரு” என்று சொல்லி கதவை அடைக்கப் பார்த்தார் சபேசன். இளைஞன் நகர்வதாக இல்லை. அவன், “சார் பசிக்குது. டிபன் இருக்குமா? “ ஆபத்துக்கு அழைப்பு விடுக்கிறோம் என்பதை அறியாமல் அவனை உள்ளே அழைத்தார் சபேசன். உணவு மேசையின் முன்னால் நீள் இருக்கையில் அமர்ந்தான் அந்த இளைஞன். மேசையில் சீரகம் கலந்த வெந்நீரை வைத்தார். என்னென்ன இருக்கு ன்னு சொல்ல முடியாது. சப்பாத்தி தான் இருக்கு “ அவன் தலையை அசைத்தான். சபேசன், திலகா என்று குரல் கொடுத்தார். உள்ளிருந்து வந்த திலகா, சப்பாத்தி குருமா உள்ள தட்டை இளைஞன் முன்னால் வைத்தான். இளைஞன், திலகாவை பார்த்தான். பின்னர், வேகமாக சாப்பிட்டு முடித்தான். வாஷ் பேசினில் கைகளைக் கழுவிக் கொண்டு, கல்லாவில் அமர்ந்து இருந்த சபேசன் முன்பு வந்தான்.
“தம்பி முப்பது ரூபா கொடுங்க “ என்றார் சபேசன்.
இளைஞன், பேண்ட் பாக்கெட்டில் இருந்த கத்தியை காட்டினான்
“நீ கல்லாவுல இருக்கற பணத்தை கொடு “ என்றான். இந்த காட்சியைப் பார்த்த திலகா, வீட்டுக்குச் சென்று அவளுடைய சித்தி பார்வதியை அழைத்து வந்தாள்.
“கல்லான்னு தான் பேரு… என் ரெகுலர் கஸ்டமர் எல்லாம் ஜி பேல தான் அனுப்புவாங்கப்பா… நீ வேற இடம் பாரு” என்றார் சபேசன். இப்பொழுது அந்த இளைஞன், கத்தியை அவரது கழுத்தில் வைத்தான்.
“பிச்சைக்காரன் கிட்ட வேற வீடு பாருன்னு சொல்றா மாதிரி சொல்றே… அப்படின்னா இது உன் வீட்டுக்காரி தானே. அதோட நகை எல்லாம் எடுத்துகிட்டு வர சொல்லு “
“அதெல்லாம் அடமானத்தில் இருக்கு பா இந்த நேரத்தில் எடுத்துகிட்டு வர முடியாது “ சிரித்தார்.
“என்னய்யா கத்தி முனையில் இருக்க சிரிக்கற”
பார்வதி, நீண்ட கரண்டியைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த இளைஞனைத் தாக்க அவனை நோக்கிச் சென்ற போது, திலகா சித்தியைத் தடுத்தாள். கணக்கு நோட்டுப் புத்தகத்தில் அவசர அவசரமாக எழுதி சித்தியிடம் காண்பித்தாள். சித்தி வாசித்தாள்.
“சித்தி. நீ வீட்டுக் கூடத்தில் மாட்டி வைத்து இருக்கிறாயே உன் அண்ணன் படம். இந்த இளைஞர் உங்க அண்ணன் ஜாடையில் இருக்கிறார் “
பார்வதி அந்த இளைஞனின் முகத்தை ஆராய்ந்தாள். அவன் அருகில் வந்தாள்.
“தம்பி, ஒங்க அப்பா பேர் என்ன?”
பார்வதி கேட்டாள்.
“புருசனும் வொய்பும் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் இருக்கீங்க… ஆதார் அட்டை காமிச்சா தான் நகை பணமெல்லாம் எடுப்பீங்களா? “
கத்தியை எடுக்காமல் பேசினான் அந்த இளைஞன்.
“சொல்லு தம்பி… “ கனிவான குரலில் கேட்டாள் பார்வதி.
“என் பேரு சதீஷ்குமார். அப்பா பேரு சந்திரன் அம்மா பேரு தங்கம் தாத்தா பேரு குணசேகரன் ஊரு கடலூர் புதுப்பாளையம்…. போதுமா? உள்ளே போய் பணம் நகை எடுத்துகிட்டு வா “ என்றான் அந்த இளைஞன்.
பார்வதி அவனுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். கத்தி கீழே விழுந்தது.
“நான் ஒங்க தாத்தாவோட பொண்ணு ஒங்க அப்பாவோட தங்கை உனக்கு அத்தை என் பேரு பார்வதி என்னைப் பத்தி ஒங்க அம்மாவும் அப்பாவும் சொல்லி இருக்காங்களா இல்லையா”
இளைஞன் சதீஷ் தலை குனிந்து நின்றான். சில நிமிடங்கள் கழித்து, பார்வதியின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
“என்னை மன்னிச்சுடு அத்தை அம்மா ஒன்னை பத்தி நிறைய சொல்லி இருக்கு… நம்ம வீட்லேயே.. சாரி அத்தை இனிமேல் இந்த பாதையில் போக மாட்டேன்“ என்றான். திலகா, சித்தப்பா, சித்தியைப் பார்த்தாள். மன்னித்து விடுங்கள் என்று அவள் விழிகளால் கேட்டுக் கொண்டாள்.
“மாறினால் சரிதான். நான் இவரை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால ஒங்க அப்பா அம்மா தாத்தா யாரும் தான் என் கிட்ட பேசறதே இல்லையே… நான் உன்னைப் பத்தி யார் கிட்ட சொல்ல போறேன்…. மழை விட்டுடுச்சு…. நீ போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வா… மாமாவை அவருக்கு தெரிஞ்ச பெரிய மனுஷங்க சொல்லி உனக்கு நல்ல வேலை வாங்கித் தர சொல்றேன் “ என்றாள் பார்வதி.
சதீஷ், சபேசனையும் திலகாவையும் பார்க்காமல் வாசலை நோக்கிச் சென்றான். அவன் போனதும் உணவகத்தின் கதவை சாத்தி விட்டு பின்னால் இருந்த
வீட்டுக்கு வந்தார் சபேசன். திலகாவும் பார்வதியும் கட்டிலில் அமர்ந்து இருந்தனர்.
“ ஏன்…. அண்ணன் பிள்ளைய தங்க சொல்லாம இரவு நேரத்தில்.. மழையில் வெளியே அனுப்பிட்டே… பாவம்… ரெண்டு நாள் கழிச்சு வான்னு சொல்லிட்டே”
சபேசன் மனைவியிடம் கேட்டார்.
பார்வதி பேசினாள் :
“தவறான வழில போய்ட்ட பையனை எப்படி இங்க தங்க வைக்க முடியும்? ராத்திரி நாம அசந்துட்டா என்ன ஆகும்…? திருந்திட்டேன்னு சொன்னது ரெண்டு நாளாவது நிலைக்குமா ன்னு பார்க்கத்தான் ரெண்டு நாளைக்கு அப்புறம் வான்னு சொன்னேன்”
திலகா, சித்தப்பாவைப் பார்த்து புன்னகை பூத்தாள்.
குறிப்பு : இந்தப் புனைகதைகளில் விவரிக்கப்படும் சூழல், உலா வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
– இவர்களைச் சந்தியுங்கள் (சிறுகதைகள்), எஸ்.மதுரகவி வெளியீடு, விழுப்புரம்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |