காத்திருந்த புன்னகை…




(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எழுபதுகளின் பிற்பகுதி –

பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலாகியிருந்தது. வடபகுதியில் பயங்கரவாதத்தை ஆறு மாதங்களுக்குள் அடக்கவென விசேடமாக பிரிகேடியர் ஒருவர் யாழ்ப் பாணம் அனுப்பப்பட்டிருந்தார்.
இரவோடிராவாக கறுப்புக் காரில் வருபவர்களால் பலர் கடத்தப்பட்டுக்கொண்டிருந்த இருண்ட காலத்தின் தொடக்கம்…
நள்ளிரவு வேளை கறுப்புக் காரில் வந்தவர்களால் நவாலியில் ஒரே வீட்டைச் சேர்ந்த இருவர் கடத்திச் செல்லப்பட்டு சொல்லொணா வகையில் சித்திரவதை செய்யப்பட்டு மரணமாகியபின் அல்லைப்பிட்டி பண்ணை வீதியில் வீசப்பட்ட அதிர்ச்சிச் செய்தி வடபகுதி மக்களை உலுப்பிய காலம்.
அந்தக் கல்லூரிக.பொ.த. உயர்தர வகுப்பு கலைப்பிரிவு மாணவர்களில் ஒருவன் சிவானந்தன். அதிபர், ஆசிரியர் களின் விருப்புக்குரிய சிறந்த மாணவன்.
அவன் படிக்கின்ற பாடங்களில் சமஸ்கிருதமும் ஒன்று. அவனது தமிழ் அறிவை மெச்சிய சமஸ்கிருத ஆசிரியர் சமஸ்கிருதம் கற்பதன் மூலம் மொழி, இலக்கிய அறிவு மேலும் வளம் பெறும் எனக்கூறி அவனைக் கட்டாயமாக சமஸ்கிருதம் கற்க வைத்தார்.
கல்லூரியில் நடைபெறும் கலை இலக்கிய நாடக விழாக்கள், போட்டிகள் பலவற்றிலும் சிவானந்தனுக்கும் பரிசுகள் காத்திருக்கும்.
அதேபோன்று இன்னுமொரு…
சுவர்ணலதா…. பெயருக்கேற்ற அழகுக்கொடி….
கலை இலக்கிய நாடக விழாக்கள், போட்டிகள் யாவற் றிலும் அவள் ஒளிர்வாள். சிவானந்தனும் சுவர்ணலதாவும் ஒரே வகுப்பில் கற்றாலும் இருவருக்கும் எல்லா விடயங் களிலும் போட்டிதான்…
அவர்களின் தர்க்கங்களுக்குச் சமஸ்கிருத வகுப்பு மிக்க வசதி…. ஏனெனில் அந்த நேரம் வேறு மாணவர் குறைவு…. மாணவிகளே அதிகமாக வகுப்பில் இருப்பர்.
போட்டிகள், விழாக்கள் எல்லாம் அவர்கள் இதயங் களிலும் ஒருவரையொருவர் மறக்கமுடியாதபடி செய்து கொண்டுதான் வந்தன.
கல்லூரி அதிபர்தான் அந்த வகுப்புக்கு ஐரோப்பிய வரலாறு கற்பிப்பார். அந்த வகுப்பு அவனுக்குப் பிடித்த மானது.
ஒரு நாள் தனது ஐரோப்பிய வரலாறு கொப்பியைப் புரட்டி பிரெஞ்சுப் புரட்சி பற்றிய விடயத்தை ஆர்வத் தோடு படித்தபின் கொப்பி மட்டையின் உட்பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்தான். அதில் ஆங்கிலத்தில் தீட்டப்பட்டிருந்த வாக்கியம் அவனை எண்ண அலைகளில் மிதக்க வைத்தது….
சாகும் வரை உன் சுவர்ணாவை நினைவில் வைத்திரு” இந்த வாசகம் நினைவில் ஆடிக்கொண்டே இருந்தது… ஆயினும்….அதிலும் மேலாக….
பரீட்சைக்கு இன்னும் நான்கு மாதங்கள்கூட இல்லை…. ஏப்ரலில் நடைபெறவுள்ள பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவிலும், கலைப்பிரிவிலும் மிகச் சிறந்த சித்தியினைப் பலர் பெறுவரென அதிபரும் ஆசிரியர்களும் எண்ணி யிருந்தனர்.
சிவானந்தன் சீர்திருத்த எண்ணங்களும், கருத்துக்களும், இனவுணர்வும், தமிழ் அபிமானமும் நிறையப் பெற்றவன். அவனது பெற்றோர் இலக்கியப் புலமை மிக்கவர்கள். அவ்வாறே அவனது சகோதரர்களும் இலக்கியத்துறையில் ஈடுபட்டவர்கள்.
இந்தத் தன்மைகள், தீவிரப் போக்குகள் சுவர்ணாவுக்கு அவ்வளவாய்ப் பிடிப்பதில்லை… வாழ்வுக்கான வழி தேட வேண்டும். இந்த விடயத்தில் அவள் தெளிந்த முடிவுள் ளவள். அவள் குடும்ப சூழ்நிலையும் அப்படி….
ஏப்ரலில் பரீட்சை…
கிறிஸ்மஸ் தினத்திலிருந்து சிவானந்தனும் அவனது வகுப்பைச் சேர்ந்த இரு நண்பர்களும் தலைமறைவாகி விட்டனர்.
சுவர்ணாதுடித்துப்போய்விட்டாள்.
“ஒரு சொல்லுச் சொல்லாமற் போய்விட்டாயே சிவா…” என மனதுக்குள் அழுதாள். வெள்ளிக்கிழமையில் கோவி லுக்குத் தாயுடன் போகும் போதெல்லாம் சிவா நல்லபடி இருக்கவேணும் என்று வேண்டிக்கொள்வாள்.
பல மாதங்களாகச் சிவா காடு, மேடு என நாட்டின் பல பகுதிகளைச் சுற்றி நடந்தான். மக்களைச் சந்தித்தான்.
அரைப்பட்டினி, சிலவேளை முழுப்பட்டினியாகவும் இருக்க வேண்டியிருந்தது. அபாயங்களை அடுத்தடுத்துச் சந்தித்தாலும் நுண்ணிய அறிவாலும், சாதுர்யத்தாலும் உயிர் தப்பி வந்தான். பல மாதங்கள் இந்தியாவிலும் கழிந்தது.
நண்பர்கள் – தோழர்கள் பலரை இழந்தான்.
மனிதநேயம் மிக்க அவனை, தொடர் அராஜகங்கள், கொலைகள் மனவருத்தமடையச் செய்தன…
எல்லாவற்றையும் துறந்துவிட்டு எழுத்துத்துறையில் மட்டும் ஈடுபட்டு வந்தான். புனைபெயர்களில் கட்டுரை, கவிதை, கதைகள் தொடர்ந்து எழுதி ஓரளவு மன ஆறுதல் அடையினும் அவனுள் ஏதோ ஒரு கனல் எரிந்து கொண்டே இருந்தது.
வீட்டாரிடமிருந்து பலமுறை திருமணப்பேச்சு வந்தது. அந்தப் பேச்சே வேண்டாமெனக் கண்டிப்பாக அவர்களுக்கு எழுதி விட்டான். அவன் மனதிலிருந்து சுவர்ணாவின் நினைவை அழிக்க முடியவில்லை. பத்திரிகை நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தான். பல்வேறு நெருக்கடிகளும் வந்து கொண்டிருந்தன…
பத்திரிகைத்துறைக் கருத்தரங்கொன்றில் கலந்துகொள்ள லண்டன் செல்லச் சந்தர்ப்பம் கிடைத்தது.
நண்பர்களின் அழைப்புகளுக்கிணங்க ஐரோப்பா விலுள்ள பல நாடுகளுக்கும் சென்றான். நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில் ஐரோப்பாவிலேயே தங்கிவிடத் தீர்மானித்தான்….
பல்கலைக்கழக பட்டதாரியாகிவிட்ட சுவர்ணாவுக்கு திருமணப் பேச்சு நடந்தது. “படத்தைப் பார்த்ததும் மாப்பிள்ளைக்குப் பிடிச்சுப் போச்சு….. சீதனமும் தேவை யில்லையாம்… நீங்கள் குடுத்து வைச்சனீங்கள்…” புரோக்கர் இனிக்கப் பேசினார்.
‘தகப்பனை இழந்த சுவர்ணா இந்த விடயத்தில் அதிஷ்டக்காரிதான்’ என அவளின் தாய் மனம் குளிர்ந்தது.
பிரெஞ்சுப் பிரசாவுரிமையுடைய தர்மராஜனின் அழைப்பில் சுவர்ணா பாரிஸ் வந்து தூரத்து உறவில் சிறிய தாய் முறையான ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தாள்.
ஒரு மாதத்தில் திருமண வரவேற்புபசாரத்தை சிறிய அளவில் நண்பர் மட்டத்தில் மட்டும் நடத்துவோம் எனவும் வசதியுள்ள சிறிய வீடொன்றும் வாடகைக்கு எடுக்கவுள்ளதாகவும் தர்மராஜன் கூறியிருந்தான்.
சுவர்ணா பாரிஸ் வந்துசேர்ந்து பத்து நாட்கள் கூடக் கழியவில்லை. ஒரு தொலைபேசி அழைப்பு அவளுக்கு வந்தது.
ஜெனிபர் என்ற இளம்பெண் அவளை அவசியம் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தாள்.
குழந்தையொன்றையும் கூட்டிக்கொண்டு வந்த அந்த அழகிய பெண், தானும் தர்மராஜனும் கணவன் மனைவி யாக ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒரே வீட்டில் வாழ் வதாகக் கூறினாள்.
தன்னுடன் கொண்டு வந்திருந்த “ஒலிவியா” என்னும் மூன்று வயதுப் பெண் குழந்தைக்கும் தர்மராஜன்தான் தந்தை என்றும் கூறி, தாங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட படங்கள் யாவற்றையும் காட்டிக் கண்ணீர் சிந்தினாள்.
தனது பெற்றோர் ரியுனியன் தீவைச் சேர்ந்தவர்கள் என்றும் தனது தந்தையின் மூதாதையர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினாள்.
தான் தமிழ்ப் பெண்ணாகவே இயன்றவரை அவர் மனம் கோணாமல் நடந்து வருவதாகவும், அவரது கபட நோக்கத்துக்கு இடமளித்து தனது வாழ்க்கைக்குத் துரோகம் செய்துவிட வேண்டாமெனவும் அவள் பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் கலந்து இரந்து கேட்டாள்.
சுவர்ணாவுக்கு என்னவோ செய்தது… தலை வலித்தது. “கவலைப்படாமல் போங்கோ” என அவளை அனுப்பி வைத்தாள்.
தான் தங்கியிருந்த வீட்டு உறவுக்காரப் பெண்ணிடம் இது குறித்துக் கேட்டாள். இது உண்மைதான் என உறுதிப் படுத்திக் கொண்டபின் தர்மராஜனுக்குத் தொலைபேசி எடுத்தாள்.
முதலில் மறுத்த தர்மராஜன் பின்னர்…
“இது சின்ன விஷயம்…. அவளோட சிநேகிதியாத்தான் பழகினனான்….. அவள் ஒரு கலப்புச் சாதிக் கழுதை….
நீங்கதான் மனுசியப்பா; உங்களுக்கேன் சந்தேகங்கள்… இன்னும் இரண்டு கிழமையில கலியாணம் முடியும்…. நாங்க நல்ல வீட்டுக்கும் போயிருவம்… ஆக்களின்ர கதை யளக் கேட்டு மனதைக் குழப்பிப் போடாதையுங்கோ…” என இழுத்தான். சுவர்ணாவுக்கு கோபம் தலைக்கேறியது.
நான்கு வார்த்தைகள் உறைக்கச் சொல்லிவிட்டு “வையடா போனை என்றும் சொல்லி விட்டாள்.
தற்போது சுவர்ணாவுக்கு அகதி அந்தஸ்தும் கிடைத்தது விட்டது.
ஓரளவு பிரெஞ்சும் படித்துவிட்டு ஒரு ‘சுப்பர் மார்சே’யில் வேலையும் பெற்றுவிட்டாள். ஞாயிறு தினங்களில் தமிழ் வகுப்பும் நடத்துகிறாள்.
இரண்டு வருடங்களுக்குப் பின் ஒரு நாள்….
பாரிஸில் ஒரு நூல் வெளியீட்டு விழா….
தமிழ் ஆசிரியை ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு போயிருந்தவளுக்கு அதிர்ச்சி…
பிரபல எழுத்தாளர் ஆனந்தன் தலைமை வகிப்பார் என விளம்பரத்தில் இருந்தது. ஆனால் மேடையில் ஆனந்தன் பெயரில் இருந்தவர்…..
சுவர்ணாவுக்கு ஒருவித ஆனந்தம்…. மறுபுறம் ஆச்சரியம்…
விழா இடைவேளையின் போது மேடைக்கு அருகில் சென்று ஆனந்தனுக்கு வணக்கம் சொன்னாள். “நீங்கள் சிவா தானே….” என்று கேட்டாள்.
“ஓமோம்…சுவர்ணா… நீங்க கூட்டத்துக்கு வந்தவு டனேயே கண்டனான், ஆனா…” என இழுத்தான்.
“என்ன ஆனா… நான் கலியாணம் செய்யவெண்டு இஞ்ச வந்தனான். ஆனா – அவன் இஞ்ச குடும்பகாறன் அதை அறிஞ்சதும் கலியாணமே வேணாமெண்டிட்டு சின்னம்மாவோடதான் இருக்கிறன். வேலையும் செய்யிறன்…
உங்களைப் பாத்து எத்தனை வருஷம்… ஒரு செய்தியும் உங்களைப் பற்றித் தெரியேல்ல… எத்தனை நாள் அழுதிருப்பன்…. அம்மாவின்ர கரைச்சலால தான் இஞ்ச வர ஓமெண்டனான்… இப்ப… அதில ஒரு….”
சிவானந்தன் புன்னகையுடன் தனது தொலைபேசி இலக்கத்தை அவளிடம் கொடுத்துவிட்டு விழாவைத் தொடர்ந்தான்.
இந்தச் சிரிப்பைப் பார்க்க எத்தனை காலம்.
சுவர்ணா ஆனந்தத்தில் மிதந்தாள்..!
– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.