கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2025
பார்வையிட்டோர்: 342 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஹ்விட்… ஹ்விட்டோ ஹுவிட்!’ 

இருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது அந்த ஒலி கனத்த இருளின் கூரிய கதறல் போலும் ஒலித்தது அது. இரவின் அமைதியைக் குத்திக் குதற முயல்வது போல் எழுந்த கிறீச்சொலி அமானுஷ்யமானது அல்ல; மனித உதடுகள் எழுப்பிய சீழ்க்கைதான். 

குறுங்குடி ஊர்க்காரர்களுக்குப் பழக்கமான ஒலியே அது. இரவுப் பொழுதில்— ‘வேளை கெட்ட வேளைகளில்’ எல்லாம் – அடைபட்டுக் கிடக்கும் வீட்டுக் கதவுகளையும், சாளரங்களையும் குடைந்து உட்புகுந்து, தூங்கியும் தூங்காமலும் இருக்கின்ற மனிதர்களின் காதுகளை அறுக்கும் அந்தச் சீட்டி. 

‘அவன்தான்— அந்த ராக்காடு வெட்டி- ஊர் சுற்றக் கிளம்பிவிட்டான்!’ 

‘காத்தலிங்கம் பயல்தான். வேறே யாரு இப்படி ராத்திரி வேளையிலே திரிவாங்க?’ 

‘பேய் பிசாசு என்கிறாங்க. அவனைப் புடிச்சுது, இவனை அடிச்சுது என்கிறாங்க. இந்தக் காத்தலிங்கத்தை அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது போலிருக்கு!’ 

‘அவனை எதுதான் என்ன செய்ய முடியும்? அவனே ஒரு பேய்தானே!’ 

இவ்வாறு பலரது பேச்சுக்கும் பொருளாகித் திரிந்த காத்தலிங்கம் ‘நல்லவனுக்கு நல்லவன்; பொல்லாதவனுக்குப் பொல்லாதவன்’ என்று பெயர் எடுத்திருந்தான். 

அவன் நல்லவனாக இருப்பதும், அல்லாதவனாக மாறுவதும் அவனுக்குள்ளே போகிற சரக்கின் தன்மையைப் பொறுத்தது என்று ஊர்க்காரர்கள் சொல்வார்கள்.அதில் ண்மை இல்லை என்று தள்ளிவிட முடியாது. ஆனால், அவனுக்குள்ளே ‘காட்டமான சரக்கு’ எப்போது புகுந்திருக் கிறது, அல்லது எப்பொழுது அவன் சுய அறிவுடன் இருக் கிறான் என்று சொல்வது சிரமமான காரியமாகும். 

அவன் முகத்தில் இயல்பாகவே ஒரு கடூரம் குடியிருந்தது. அவன் கண்கள் வெறித்த பார்வை உடையன; அடர்த்தியாக வளர்ந்து முறுக்கேறி நிற்கும் மீசை அவன் முகத் தோற்றத்தைப் பயங்கரமாகச் சித்திரிக்கப் பெரிதும் துணை புரிந்தது. காத்தலிங்கம் நன்கு வளர்ந்து வாட்ட சாட்டமாக இருந்தான். அவனைக் காண்கிற சிறுபிள்ளைகள் மனசில் ஒருவித உள்ளத்தில் பயம் எழும். பெரியவர்கள் மரியாதை தோன்றும். அவன் குடித்துவிட்டுக் கையிலே தடியும் இடுப்பில் கத்தியுமாகக் கிளம்பிவிட்டாலோ, பெரியவர்கள் உள்ளத்திலே கூடப் பயம்தான் தலையெடுத்து நிற்கும். 

‘இந்தக் காத்தலிங்கம் வம்புச் சண்டைக்குப் போக மாட்டான். ஆனால், வந்த சண்டையை விடவும் மாட்டான். ஆமா. காத்தலிங்கம் எப்பவும் நியாயத்தின் கட்சி. அநியாயமானது எதையும் அவன் செய்யவே மாட்டான்!’ – இவ்வாறு காத்தலிங்கமே அடிக்கடி ஒலிபரப்புவது வழக்கம். 

காத்தலிங்கத்தின் துணையாய் – தோழனாய் – முன்னோடியாய், சதா அவனை விட்டுப் பிரியாமல் இருந்தது கறுப்பன் எனும் நாய். அதை அவன் மிகுந்த அன்போடு சீராட்டிப் போற்றி வளர்த்து வந்தான். ஒரு சமயம் தோட்டக்காரன் ஒருவனின் நாய்க்கும் கறுப்பனுக்கும் சண்டை ஏற்பட்டது. தனது நாயைத் தாக்கியதால் ஆத்திரம் கொண்ட தோட்டக்காரன் கறுப்பன் மீது கற்களை வீசினான். ஒரு கல் நாயின் காலைக் காயப்படுத்தியது. அதை அறிந்த காத்தலிங்கம் தோட்டக்காரனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான். அதற்காக அவனோடு சண்டை பிடிக்கவில்லை. அவன் நாயைப் பிடித்து அதன் இரண்டு கால்களையும் முறித்து அனுப்பினான். ‘இதுதான் நியாயம்!’ என்று பெருமையாகப் பேசவும் பின்வாங்கவில்லை. 

காத்தலிங்கத்தின் நியாய உணர்ச்சிக்கு இது ஒரு ‘சாம்பிள்’ ஆகும். 

முன்பெல்லாம் அவன் தினசரி இரவு நேரங்களில் பாட்டு எனும் பெயரால் ஊளையிட்டுத் திரிவது வழக்கம். ‘ரோட்டடி வீட்டுக்காரி, ரோசாப்பூச் சீலைக்காரி’ என்பதும், ‘சாலையிலே ரெண்டு மரம், சர்க்காரு வச்சமரம்; உனக்கேத்த தூக்குமரம், தங்கமத் தில்லாலே’ என்ற பாட்டும் அவனுக்கு அதிகம் பிடித்தவை. காட்டுக் கூப்பாடு போடுகிற ‘ஒலி பெருக்கி’ மாதிரி அவன் அவற்றைக் கதறிக் கொண்டு தெருவில் நடக்கிற போது, வீடுகளுக்குள்ளே தூங்குகிறவர்கள் விழிப்புறாமல் இருக்க முடியாது. 

‘காத்தலிங்கம், நீருபாடுறது ஜோராகத்தானிருக்கு. பாட்டும் அருமையான பாட்டுதான். இருந்தாலும் கொஞ்சம் மெதுவாகப் பாடக்கூடாதா வேய்? நடு ராத்திரியிலே தூக்கத்தைக் கெடுக்கும்படியாக… என்று பெரிய வீட்டு ராமையாப் பிள்ளை இவனிடம் தயங்கித் தயங்கிப் பேசலானார் ஒரு தடவை. 

காத்தலிங்கம் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, பெரிதாக ஒரு கும்பிடு போட்டான். ‘சரிதான் ஐயா. அப்படியே செய்றேன்’ என்றான். 

அவனுக்கு என்ன தோன்றியதோ, மறுநாள் முதல் அவன் வாய்விட்டுப் பாடவேயில்லை. ஆயினும், ‘அப்பாடா, இனி நிம்மதியாய்த் தூங்கலாம்’ என்று எண்ணியவர்கள் ஏமாந்தார்கள். அதற்கு அடுத்த நாளிலிருந்து தெருக்களில் பலமான சீட்டி ஒலித்தது. பாட்டுகளைச் சீட்டியடித்து ஒலிபரப்பும் காத்தலிங்கம் இடைக்கிடை ‘ஹ்விட்-ஹ்வீட்டோ ஹ்விட்’ என்று சீழ்க்கை ஒலி செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டான். 

‘சத்தம் போட்டுப் பாடாதேயின்னு பெரிய வீட்டு ஐயா சொன்னாக. காத்தலிங்கம் நியாயத்துக்கு கட்டுப்படுகிறவன். அதனாலேதான் நான் பாடுறதையே நிறுத்திப் புட்டேன். ‘டேய் சீட்டி அடிக்காதேடா காத்து’ யின்னு யாராவது என்னிடம் சொல்ல முடியுமா? மரம் மட்டைகளுக்கு ஊடே திரிகிற காத்து கூடத்தான் சீட்டியடிக்குது. அப்புறம்?’ என்று அவன் நடுத்தெருவில் நின்று நியாயம் பேசினான். 

பெரிய வீட்டுப் பிள்ளை என்ன, எவருக்குமே அவனிடம் பேசி வாதாட வேண்டும் என்ற எழுச்சி ஏற்படவில்லை. ‘போக்கிரிப் பயல் எப்படியும் போறான்னு விட வேண்டியது தான்!’ என்று பெரியவரும் பிறரும் கருதிச் சும்மா இருந்து விட்டார்கள். 

இப்படிப் பல வாரங்கள் ஓடிவிட்டன. 

அன்று காத்தலிங்கத்துக்கு வழக்கமான உற்சாகத்தை விட அதிக அளவு குஷி இருந்திருக்க வேண்டும். இல்லை யெனில், வெறும் சீட்டியடிப்போடு ஊர் சுற்றுகிறவன் வாய் திறந்து பாடத் துணிந்திருப்பானா? பாட்டும் வழக்கமாக அவன் பாடுவது அல்ல. 

‘தண்ணிக்குப் போ மகளே, 
தலை குனிந்து வா மகளே! 
மோட்டாரு டைவரைக் கண்டால் 
மொகம் கொடுத்துப் பேசாதேடி!’ 

என்று கத்தினான். திரும்பத் திரும்ப ஊளையிட்டான். அந்தப் பாட்டிலே அவனுக்கு அத்தனை லயிப்பு! 

‘ஏது காத்தலிங்கம், இன்னிக்குப் பாட்டு பிரமாதமாக இருக்குதே?’ என்ற குரல் அவனை உலுக்கியது. பெரிய வீட்டு ராமையாப் பிள்ளைதான் பேசினார். 

காத்தலிங்கம் கூழைக் கும்பிடு போட்டான். ‘என்ன ஐயா, இந்த நேரத்திலே எங்கே போயிட்டு வாரீக?’ என்றான். 

அவர் லேசாகச் சிரித்தார். ‘என்னடே காத்து, தினசரி ராத்திரி இப்படித் திரிகிறியே? நீ தூங்குவதுதான் எப்போ? உனக்குத் தூக்கமே வர்றதில்லையா?’ என்று கேட்டார். 

‘தூக்கமாவது ஒண்ணாவது!… தூங்கையிலே போகிற மூச்சு சற்றே சுழிமாறிப் போனாலும் போச்சு…’ இதை நீட்டி இழுத்துப் பாடிவிட்டு, ‘அதனாலே நான் ராத்திரி வேளைகளில் தூங்குவது கிடையாது’ என்று காத்து சொன்னான். 

‘அப்ப பகல் வேளையிலே நன்றாய்த் தூங்குவீர் போலிருக்கு!’ என்றார் ராமையாப் பிள்ளை. 

‘கெக்கெக்’ என்று விசித்திரமான சிரிப்பொலி எழுப்பினான் அவன். ‘ஐயா, ஒரு விஷயம். இந்தக் காத்தலிங்கமும் ஒரு யோகின்னுதான் சொல்லணும். ஏன்னு கேட்டியளா? ஒரு பிரசங்கியா பிள்ளை ஒரு நாள் சொல்லிக்கிட்டிருந்தாரு: ‘ஊர்க்காரர்கள் தூங்குகிறபோது யோகி விழித்திருக்கிறான். மற்றவர்கள் விழித்திருக்கும் வேளையில், யோகி தூங்குகிறான்’ அப்படீன்னாரு. காத்தலிங்கமும் அதையேதான் செய்கிறான். என்ன ஐயா நான் சொல்றது?’ என்றான். 

‘ஆகா!’ என வியந்து பாராட்டினார் பிள்ளை திடீரென்று நினைத்துக் கொண்டவர் போல் சொன்னார்: ‘காத்தலிங்கம் நான் ஒண்ணு சொல்றேன் கேளு. நீயோ ராத்திரி நேரங்களிலே தூங்கப் போறதில்லே. ஒரு இடத்தில் உட் காந்திருப்பதும் உனக்குப் பிடிக்காது. இப்படி வெட்டியாகத் திரிந்து வீண் பொழுது போக்குவதையே வேலையாக மாற்றி, சம்பளமும் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கு. நீ வேலை பார்க்கத் தயாரா?’ 

‘என்னய்யா கேலி பண்றீங்களா?’ என்று கடுப்பாகக் கேட்டான் அவன். 

‘கேலி இல்லை காத்து. நிசமாத்தான் சொல்றேன். பண்ணையார் ராசாப்பிள்ளைவாள் இருக்காகளே, அவுக எஸ்டேட்டுலே மரம் மட்டையின்னு திருடு போகுதாம். சரியான காவல்காரன் ஒருவனை நியமிக்கணுமுன்னு பார்க்கிறாங்க. காவல் வேலைக்கு ஏற்ற ஆளு இருந்தால் சொல்லுங்கன்னு எஸ்டேட் கணக்குப்பிள்ளை என்னிடம் சொன்னாரு. அவருகூடப் பேசிக்கிட்டு இருந்து விட்டுத்தான் வாரேன்’ என்று பிள்ளை கூறினார். 

‘வேலையா! எனக்கா? ஹெஹஹே’ என்று கனைத்தான் காத்தலிங்கம். 

‘நல்ல இடம் வே. நல்ல சம்பளம் கிடைக்கும். விசேஷ நாட்களில் வேட்டி சட்டை இனாம் எல்லாம் தருவாரு. யோசிச்சுச் சொல்லும்’, என்று சொல்லிவிட்டு அகன்றார் பிள்ளை. 

‘ஹ்விட்டோ ஹ்வீட்!’ என்று சீட்டியடித்தான் காத்தலிங்கம். உயர்ந்த குரல் எடுத்துப் பாடலானான்: 

‘நல்வாக்கு, நல்வாக்கு 
நல்வாக்கு நீ கொடடி!
பத்தினிக் கண்ணகியே, 
பாங்கான பெண்மயிலே!’ 

துரத்தி வந்த பாட்டைக் கேட்டு ராமையாப்பிள்ளை வேகமாக நடந்தார். ‘பயலுக்கு இன்னிக்கு நல்ல வேட்டை போலிருக்கு. ஏக ஜாலிதான்!’ என்று அவர் மனம் முனங்கியது. ‘இவன் இங்கிருந்து ஒழிஞ்சால்தான் இந்த ஊருக்குச் சேமம். நான் சொன்ன வேலையிலே சேர்ந்து விட்டான் என்றால், எல்லாருக்குமே நல்லது’ என்றும் அவர் நினைத் துக் கொண்டார். 


காத்தலிங்கம் சுற்றி அலைந்து எப்படி எப்படியோ பொழுது போக்கிய பிறகு ஒரு டீக்கடையில் சாயா ‘அடித்து விட்டு’ வீடு திரும்பும் பொழுது நன்றாக விடிந்து விட்டது. காலை வெயிலின் புத்தொளி எங்கும் புது வனப்பையும் புதிய உற்சாகத்தையும் பூசிக் கொண்டிருந்தது. 

அவனுக்கு எதிரே சில பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். வயல் வேலைக்குச் செல்கிறவர்கள். பொதுவாக, பெண்களுக்குக் காத்தலிங்கத்திடம் ஒரு பயம் உண்டு. ஆனால், விதிவிலக்காக விளங்கினாள் மீனாட்சி. 

அவள் அவனுக்குச் சொந்தக்காரியும் கூட. சரியான வாயாடி. குறும்புத்தனம் மிகுந்தவள். நாகரிக மோகம் அவளைப் பிடித்திருந்தது. அவளும் அந்த கும்பலோடு சேர்ந்து வந்தாள். 

அவளைக் கண்டதும் காத்தலிங்கம், ‘என்ன, அக்கா மகளே; சொக்காய்க்காரி! வெத்திலை வைச்சிருக்கியா?’ என்று கேட்டான். 

‘இல்லையே!’ என்று கையை அசைத்தாள் அவள். தன் தோழிகளைப் பார்த்து, ‘நீங்க எல்லாம் கூகை பார்த்திருக்கிறீங்களா?’ என்றாள். 

‘கூகையா?’ என்று ஒன்றிருவர் கேட்டு வைத்தார்கள். 

‘பாராதவங்க இங்கேயே பார்த்துக் கொள்ளலாம்’ என்று மீனாட்சி காத்தலிங்கத்தைச் சுட்டிக் காட்டியபடி கலகல வெனச் சிரித்தாள். 

‘என்னா புள்ளே என்னா? உனக்கு எப்படி வருது?’ என்று அவன் முறைத்தான். 

அவள் சிரித்தபடி சொன்னாள் : ‘கூகை என்ன செய் யுது? பகல் நேரத்திலே பொந்துக்குள்ளே பம்மியிருக்கும். ராத்திரி ஆனதும் வெளியே புறப்படும். ஊர் நெடுகச் சுற்றி வரும். அது மட்டுமா? எல்லாருக்கும் பயம் கொடுக்கிற குரலிலே ஹுவோ – ஹுவோன்னும் கத்தும். நீயும் அதையே தான் செய்றே. சரியான மனிசக் கூகை நீ!’ 

அவளோடு சேர்ந்து சிரித்தார்கள் மற்றப் பெண்கள். என்ன செய்வது? அவனும் சிரித்தான். 

‘ஒக்கச் சிரித்தால் வெக்கமில்லே. அப்படித்தானே மாமா?’ என்று கேட்டாள் அவள். 

‘ஒரு நாள் பாரு உன் காதைப் பிடிச்சி ஒரே திருகாகத் திருகிவிடுவேன். அப்புறம் நீ கம்மல் போடுறது எங்கே? குலுக்கி மினுக்குவது எப்படீன்னு பார்க்கலாமே!’ என்று முனகினான் அவன். 

‘பின்னே என்ன? ஏதாவது வேலை பார்ப்போம், நாலு பேரைப் போல மதிப்பாக இருப்போம்கிற எண்ணம் இல்லியே உனக்கு. சோம்பேறியாக் கிடந்த சிங்காரம் கூட வேலை பார்க்கப் போறான். பண்ணையார் எஸ்டேட்டிலே காவல் வேலை அவனுக்குக் கிடைக்குமாம். அப்புறமென்ன? பண்ணை பங்களாவிலே இருக்கலாம். அப்புறம் டவுனி லேயே ஒரு வீடு பார்த்து…’

‘ஓகோ!’ என்றான் காத்தலிங்கம். மீனாட்சி மேலும் சொல்ல விரும்பியதைக் கேட்கும் ஆசை இல்லாமலே நடந்தான். அவன் மனம் கொதித்தது. ‘சிங்காரம் பயல் எதிலும் எனக்குப் போட்டியாக முளைப்பான் போலிருக்கு. இந்தக் குட்டி மீனாட்சியிடம் நெருங்காதேடான்னு அவனுக்குப் பாடம் போதிக்க நினைச்சிருந்தேன். அதுங்காட்டியும், எஸ்டேட் வேலையிலும் தலையைக் காட்டுறானா பய? இந்தக் குட்டி டவுனுக்குப் போகலாம், சினிமாப் பாக்கலாம்னு கனவு காண ஆரம்பிச்சுடுமே. ஓ, இவ்வளவுக்கு ஆயிட்டுதா?’ என்று உறுமியது அவன் மனக் குறளி. 

அதன்பிறகு அவன் வீண் பொழுது போக்கவில்லை. ராமையாப் பிள்ளையைத் தேடிச் சென்றான். அவர் பண்ணையார் வீட்டுக் கணக்குப் பிள்ளையைப் பார்க்கப் போயிருக்கிறார் என்று தெரிந்ததும், அவனும் நேரே அங்குப் போனான். 

அங்கே பலர் இருந்தார்கள். சிங்காரமும் காணப்பட்டான். கணக்குப்பிள்ளை சிங்காரத்திடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். 

‘ஐயா சேவிக்கிறேன்’ என்று பெரும் கும்பிடு ஒன்று போட்டான் காத்தலிங்கம். அவனைக் கண்டதுமே விஷயத்தைப் புரிந்து கொண்டார் ராமையாப்பிள்ளை. ‘என்ன காத்து, என்ன விஷயம்?’ என்று கேட்டார். 

‘ராத்திரி நீங்க சொன்ன விஷயமாத்தான் வந்தேன். எசமான் பண்ணையிலே காவல் வேலை…’ என்று அவன் இழுத்தான். 

‘அதுக்குச் சிங்காரத்தை ஏற்பாடு பண்ணலாமுன்னு கணக்குப்பிள்ளை ஐயா……’ என்று ஆரம்பித்தார் பிள்ளை. 

‘ஹஹம்’ என்று தொண்டையைச் செருமியபடி மீசையை முறுக்கிவிட்டான் காத்தலிங்கம். 

சிங்காரம் அவசரமாகக் குறுக்கிட்டான் : ‘எசமான் காவல் வேலைக்குக் காத்தலிங்கம் அண்ணன்தான் லாயக்கு. அண்ணன் மாதிரி சரியான ஆளு யாரும் கிடைக்க மாட்டாங்க…’ 

‘ஆமாமா’ என ஒத்து ஊதினார்கள் அவனைச் சேர்ந்தவர்கள். 

காத்தலிங்கத்தின் உதடுகளில் விளையாடப் பிறந்த நமட்டுச் சிரிப்பு அவனது அடர்ந்த மீசைக்குள் மறைந்து கொண்டது. 

‘அவன் பேரே காத்தலிங்கமாச்சே, அவன் வேறு எப்படி இருக்க முடியும்?’ என்று ஹாஸ்யம் பண்ண முயன்றார் ராமையாப் பிள்ளை. 

எல்லாம் திருப்தியாக முடிந்த நிறைவோடு எல்லாரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். 

காத்தலிங்கம் எஸ்டேட் காவல்காரனாகச் செல்வதில் மீனாட்சியும் மகிழ்வடைந்தாள். ‘நான் குத்தலாகப் பேசினத்துக்காகப் பிறகு வருத்தப்பட்டேன். என்னை மன்னிச்சிரு மாமா’ என்று கெஞ்சலும் கொஞ்சலுமாகப் பேசி, காந்தச் சிரிப்பை வீசினாள். முரடனான காத்தலிங்கத்திடம் கூட அந்தக் கண்களை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. அவன் தேன் குடித்த குரங்கு மாதிரி, அவள் முகத்தைப் பார்த்து இளித்தபடி நின்றான். 

குறுங்குடிக்கும் டவுனுக்கும் நடுவிலிருந்தது பண்ணையாரின் எஸ்டேட். பலவித மரங்களும் நின்றன அங்கு. மா, பலா, முதலிய பழ மரங்களும், பனை, வேலமரம், கருவை போன்றவைகளும் நிறையவே இருந்தன. மாந்தோப்பு மத்தியில் ‘பங்களா’ என்று பெயர் பெற்ற சிறு வீடு ஒன்றும் இருந்தது. 

அங்கேயே தங்கியிருந்து வெகு காலமாகக் காவல் புரிந்து வந்த கிழவன் இறந்து விட்டான். அதன் பிறகு யார் யாரோ வந்தார்கள், போனார்கள். சரியான ஆள் ‘கிடைக்கவில்லை. விறகு விற்றுப் பிழைப்பவர்கள் மரக் கிளைகளை வெட்டிச் ‘சென்றார்கள். சிறு சிறு மரங்களை வெட்டிச் சாய்த்துப் பாழ் படுத்தினார்கள். மரங்களைத் திருடிச் சென்றார்கள். இவற்றைத் தடுத்தாக வேண்டும். எனவே, கடுமையாகவும் கண்டிப்பாகவும் காவல்காரன் நடந்து கொண்டால் கூட பண்ணையார் குறை கூறமாட்டார்; மகிழ்ச்சியே கொள்வார் என்று கணக்கு பிள்ளை காத்தலிங்கத்திடம் அறிவித்தார். நியாயமாக நடந்து, தனது கடமையை நிறைவேற்றுவதாக அவனும் வாக்களித்தான். 

அதன்படி செயல் புரியவும் அவன் தவறவில்லை. காத்த லிங்கம் காவலுக்கு வந்து விட்டான் என்று கேள்விப்பட்டதுமே பயந்து ஒதுங்கியவர்கள் பலர். அவனைக் கண்டு அஞ்சி ஒதுங்கியவர்கள் சிலர். தப்பு சாமி. அவன் கையில் அகப்பட்டு, அடிப்பட்டு, ‘இந்த ஒரு தடவை மாப்பு விடுங்க சாமி. இனி இப்படி செய்ய மாட்டேன்’ என்று அலறிப் புடைத் துக் கொண்டு ஓடியவர்கள் அநேகர். 

காத்தலிங்கம் தன் கையில் அகப்பட்டவர்களுக்கு இஷ்டம் போல் தண்டனை கொடுத்தான். மனம் போன போக்கில் பாட்டுப் பாடியும் சீட்டியடித்தும் திரிந்தான். இருந்தாலும் ஊருக்குள் உலவியது போல் இல்லை இது என்ற மனக்குறை அவனுக்கு உண்டு. 


ஒரு நாள் பிற்பகல், வெயில் நேரம். வழக்கமாகக் காத்தலிங்கம் காட்டின் பக்கம் வருகிற வேளை அல்ல அது. அன்று, ‘இந்த வெயிலுக்கு மரத்தடியில் விழுந்து கிடந்தால் சுகமாக இருக்கும். நிழலும் காற்றும் ஜிலுஜிலு வென்றிருக்கும்’ என்று அவன் மனம் ஆசைகாட்டியது. கால்கள் அங்கு போக வேண்டியதுதானே! 

அவன் அந்த நேரத்தில் அவ்விடம் வந்ததும் நல்ல தாயிற்று என்ற குதூகலம் உண்டாயிற்று அவனுக்கு. தூரத்தில் வரும் பொழுதே அவனது கழுகுக் கண்கள் ‘ஏதோ திருட்டு வேலை நடக்கிறது’ என்று உணர்ந்து விட்டன. எச்சரிக்கையோடு நடந்தான் அவன். இரண்டு பெண்கள் விறகு சேகரித்துக் கொண்டிருந்தார்கள். 

அவனது பண்பின்படி அவன் வாய் வசவுகளை அள்ளி வீசியது. அவன் ஏசிக்கொண்டே வருவதை உணர்ந்த பெண்கள் திடுக்கிட்டு, செய்யும் வகை அறியாமல் திகைத்து நின்று விட்டார்கள். அவன் பக்கம் முகம் திருப்பவேயில்லை. 

‘முகத்தைக் காட்ட வெட்கமாக இருக்குதோ?’ என்று கேட்டு, இரண்டு ஏச்சுக்களையும் சேர்த்துச் சொன்ன காத்தலிங்கம் அவர்களை நெருங்கி நோக்கியதும் திடுக்கிட நேர்ந்தது. அவன் எதிர்பார்க்கவேயில்லை இப்படியும் நிகழும் என்று அவன் எண்ணவும் முடியாதே! மீனாட்சி தனது காவலை அலட்சியமாக மதித்துத் திருடவும் துணிவாள் என்று அவன் ஏன் நினைக்கப் போகிறான்? 

ஆனால் அவள்தான் நின்றாள். இரண்டு பேரில் ஒருத்தி மீனாட்சி. 

அவள் தலை மண்ணை நோக்கித் தாழ்ந்தது. 

காத்தலிங்கத்தின் நெஞ்சு விம்மி, நெடிய மூச்சு ஒன்றை வெளியே தள்ளிவிட்டுத் தணிந்தது. வேதனைக் குளவி அவன் உள்ளத்தைக் குடையலாயிற்று. அவன் பேசுவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. பெண்கள் இருவரும் சிலைகளாக நின்றார்கள். 

‘மீனாட்சி, நீ கூடவா இப்படி?’ என்றான் அவன். 

மீனாட்சி குத்துக் கல்லாக நின்றான். மற்றவள் ரோஷம் கொண்டவள் போல் பேசத் தொடங்கினாள்: 

‘அவ மட்டும் என்ன உசத்தி? அவளும் எங்களை போல் தானே? அவளுக்கும் தாராளச் செலவுக்கு நிறையப் பணம் வேண்டித்தானே இருக்கு?’ 

‘சீ ச கழுதை, வாயை மூடு!’ என அதட்டி ஒரு முறைப்பு முறைத்தான் காத்து. 

உருட்டி விழிக்கும் கண்களையும் துடிக்கும் மீசையையும் பார்த்து அவள் பயந்து விட்டாள். அவன் அடித்து விடுவானோ என்று நடுங்கினாள். 

‘வேறே யாராகவாவது இருந்தால் இதுக்குள்ளே ஓங்கி அறைஞ்சிருப்பேன். பொட்டைச்சிகளை அடிப்பது காத்தலிங்கத்துக்குத்தான் அவமானம். உங்களைக் கொண்டு போய்ப் பண்ணையார் முன்னேதான் நிறுத்தணும்’ என்று அவன் சொன்னான். 

அவன் இதை கூறிய தோரணையும், தொனியின் வறட்சியும் அவர்களுடைய உள்ளத்தைச் சுட்டன. அவ்விதம் அவன் செய்தே தீர்ப்பான் என்று உணர்ந்த மீனாட்சி, ‘இனியும் சும்மா இருத்தல் கூடாது’ என்று கருதியவளாய் தன் வேலைத் தனங்களை காட்டத் துணிந்தாள். தலையை ஒயிலாக சாய்த்து, கோணவிழிப் பார்வை காட்டி, குறுஞ்சிரிப்பு தீட்டினாள். ‘என்ன மாமா, ஒரேயடியாகக் கோபிச்சுக்கிறயே!’ என்று குழைந்தாள். 

‘சீ நிறுத்து! இந்த வேலை எல்லாம் இங்கே வேண்டாம்’ என்று சீறி விழுந்தான் காத்தலிங்கம். ‘திருட்டுக் கழுதைங்க’ – என்று வெறுப்போடு முணுமுணுத்தான். 

‘சிங்காரம் வேலைக்கு வந்திருந்தால், இப்படியா நடந்து கொள்வாரு? அவரு கண் முன்னாலேயே…’ என்று நீட்டி நீட்டிப் பேசலானாள் மீனாட்சி. 

‘தூ’ என்று காரித் துப்பினான் அவன். அவள் இதயத்தில் தைக்கும் சூடான வசவு ஒன்றைப் பிரயோகித்தான். ‘காத்தலிங்கம் காத்தலிங்கமாகத்தான் இருப்பான். இருக்க முடியும். யாருக்காகவும் அவன் இன்னொருவனாக மாற முடியாது. வேறு எந்த நாய் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன?’ என்றான், கடுகடுப்பாக. பிறகு, ‘பிழைச்சு போங்க. கொம்புகள் குச்சிகளை எல்லாம் இங்கேயே போட்டு விட்டுத் திரும்பி பாராமல் ஓடிப் போங்க. ஜாக்கிரதை!’ என்று பயங்கரமாகக் கூச்சலிட்டான். 

‘இவ்வளவோடு விட்டானே மகாராசன். நம்ம புண்ணிய மும் பூசாபலனும் தான்’ என்று நினைத்தபடி அவ்விருவரும் தப்பிச் சென்றார்கள். 

மிகவும் நேர்மையாகவும், ஒழுங்காகவும் குற்றங்குறைகள் இன்றியும் வேலை பார்த்து வந்த காத்தலிங்கத்துக்குத் திடீரென்று என்ன மனக் கோளாறு வந்து விட்டது என்று பண்ணையார் ஆச்சரியப்பட்டார். 

‘குடிகாரப் பயல். நிலையான மனசு கிடையாது அவனுக்கு’ என்று கணக்குப்பிள்ளை எண்ணினார். 

இதற்கெல்லாம் காரணம் – 

‘நான் இனி காவல் வேலை பார்க்க முடியாது. என் போக்கிற்கு அது ஒத்துவரலே’ என்று சொல்லிவிட்டு, காத்தலிங்கம் விலகிச் சென்றதேயாகும். 

‘அப்பாடா, காத்தலிங்கம் ஒரு மாதிரியாத் தொலைஞ்சான். நிம்மதியாய்த் தூங்க முடிகிறது’ என்று இடைக் காலத்தில் மகிழ்ந்து போன குறுங்குடியினர் மறுபடியும் ஒரு நாள் இரவிலே துர்க்கனவு கண்டதுபோல் பதற நேர்ந்தது. 

‘பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம்…’ என்று கோரக் குரலில் பாட்டை ஒலி பெருக்கிக்கொண்டு, இரவின் அமைதியைக் குலைத்தவாறு அலைபவன் காத்தலிங்கம் என்பதை உணர ஊராருக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? 

அன்றே ராமையாப்பிள்ளை தற்செயலாக அவனைச் சந்திக்க நேர்ந்தது. ‘என்ன காத்தலிங்கம், ஏது மறுபடியும் இப்படி?’ என்று கேட்டார் அவர். 

‘காத்தின் குணம் என்ன? இஷ்டம் போலத் திரிவது. காத்தைப் புடிச்சு நீ இந்த இடத்திலேதான் இருக்கணுமின்னு யாராலேயும் கட்டிப்போட முடியுமா? காத்தலிங்கமும் அப்படித்தான் இஷ்டம்போல் சுற்றித் திரியாமல் ஒரு இடத்திலே நிலையாக இருப்பதுன்னு சொன்னால் அவனுக்குக் கட்டி வராது!’ என்றான் அவன். 

‘சரிதான்’ என்று இழுத்தார் பிள்ளை. 

‘ஐயா எந்தப் புஸ்தகத்திலேயாவது இருக்குதா? காத்தும் ஒரு தேவனாமே. அவன் ஆசை வச்சிருந்த பொண்ணு எவளாவது இருந்து, அவனை ஏமாற்றியிருப்பாளோ? அதனாலே விரக்தி அடைஞ்சு அவன் வேதனையோடு சுற்றிச் சுழல்கிறானோ?…’

‘ஏன் என்னப்பா விஷயம்?’ என்று ஆவலோடு விசாரித்தார் ராமையாப் பிள்ளை. 

‘சும்மா தெரிஞ்சுக்கிடலாமின்னு கேட்டேன்’ என்ற காத்தலிங்கம் நீண்ட குரலெடுத்து ஓலமிட்டபடி நடக்கலானான் – 

‘காத்து உருண்டு வருது! 
மேகம் திரண்டு வருது! 
வெள்ளம் புரண்டு வருது!’ 

அதைத் தொடர்ந்து, இருளின் இதயத்தைக் குத்திக் கிழிக்கும் கூரிய ஒலியாக எழுந்து மூலைக்கு மூலை பரவியது ‘ஹ்விட் ஹ்விட்டோ ஹ்வீட்!’ எனும் விசிலடிப்பு. 

– அமுதசுரபி தீபாவளி மலர், 1960.

– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *