காதல் காவியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் நாடகம்
கதைப்பதிவு: March 1, 2025
பார்வையிட்டோர்: 6,198 
 
 

(1998ல் வெளியான புதுக்கவிதை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 1-5 | காட்சி 5-10

முதற்காட்சி

இடம் : கல்லூரி ஒன்றின் வகுப்பறைகளுக்கு வெளியே.

மலர் மர நிழலில்
கோடைகால நாள் ஒன்று.
பிற்பகல் முடிந்து மாலை
தொடங்குகிற வேளை.

இரு தோழியர்
மலர்விழியும் கோதையும் அமர்ந்திருத்தல்.
நாமும் போவோம் அங்கு.

மலர்விழி:
என்னவாயிற்று, ஓயாமல் பேசும்
உன் வாய்க்கு
இன்று என்ன ஓய்வுநாளா?
மௌனத்தில் வசிக்கிறாய்.

என்ன என்று சொல்லி விடு.
சொல்லாவிடில் யோசித்து
யோசித்து என் தலை
கழன்று போனாலும் போகும்.

கோதை:
புதிதாகக் கவலையுற
ஏதுமில்லை.
பழைய சுவலைகள்.
சட்டென்று என்னுள்
புகுந்து என்
குணத்தையே மாற்றிவிடும்.

சந்தோஷத்தைச்
சஞ்சலம் அடித்து
விரட்டிவிட்டு ஆட்டம் போடும்.
இதற்கு என்ன செய்வது மலர்?
மனத்தைக் கட்டுவது எப்படி
என் சகியே?

மலர்விழி:
மகிழ்ச்சிக்குரிய யௌவனத்தில்
கவலையிடம் உன் மனதை
அடகு வைப்பதில் என்ன பயன்?
கவலைகள் உன் விவேகங்களை
அறவே செல்லரிக்கச் செய்யும்.
பிரச்சனைகள்
கவலைகளால் தீராது.
தீர்வுகளால் தீர்வுக்கான
சிந்தனைகளால்தானே தீரும்?

கோதை:
நீ சொல்வது நிஜத்தின்
வார்த்தைகள்
என் கவலை – என்
அக்காளின் வாழ்வு குறித்த
கவலை
பிரச்சனையோ அவளிடம்
இருக்கும்.
நான் பார்வையாளராய்ப்
பார்த்து உடன் பிறப்பாகி விட்டதால்
தாங்க முடியவில்லை அவள் சோகம்.

மலர்விழி:
என்னவாயிற்று உன்
அக்காவின் வாழ்வுக்கு?
நல்ல கணவன், கண்போல் ஒர் ஆண்
குழந்தை
இவ்வாறெல்லாம் நீதானே
சொன்னாய்.

கோதை:
ஆமாம். சொன்னதெல்லாம்
பொய்யாய்ப் பழங்கதையாய்ப்
போய்விடும் போலிருக்கிறது.

என்ன செய்வது?
எங்கள் அத்தானுக்கு இப்போது
வாழ்வதில் நாட்டம் இல்லை.
தத்துவ தரிசனம் தேடிப்போய்க்
கொண்டிருக்கிறார்.

வேலையை விட்டும்
குடும்பத்தை விட்டும் பிரிந்து போய்
தத்துவத் தேடலைத்
துவங்குவதாக அவரது திட்டமாம்.
இது அக்காவைக் கவலையில் ஆழ்த்தி
விட்டது!

எங்களிடம் முன்னைப்போல்
பேசுவதில்லை அவர்.
அக்காவிடமும் குழந்தையிடமும்
அதிகம் பேசுவதில்லை.
இதற்கு என்னதான் செய்யலாம்?
இந்தப் பிணிக்கு என்னதான்
மருந்து?

மலர்விழி:
தத்துவம் என்பது குடும்பத்தைத்
தவிக்க விட்டுத் தேட வேண்டும்
என்று எவரும் விதிசெய்திடவில்லை.

வாழ்வின் அர்த்தங்கள்
மனிதர்கள் தங்களுக்குள்
பொழிந்து கொள்ளும்
அன்பு மழையில்தான் புரிபட
ஆரம்பிக்கின்றன.

வாழ்வில் சிக்கெடுத்துச் சீராக்கி
வாழ்பவர்கள்
வாழ்வுக்கலையை-
வாழும் கலையை
முழுதாகப் புரிந்து கொண்டவர்கள்.

விட்டுக்கொடுத்தல்
மனிதக் குலத்திற்கே
உகந்த தத்துவம் என்று
கொண்டாடினால் வாழ்க்கைக்கலை
அனைவருக்கும் ஆயாசப்படுத்தாத
ஒன்றாகும்.

கோதை:
உனக்கும் எனக்கும்
இப்போதே புரிந்துவிட்ட
தத்துவ இரகசியத்தை
அந்தப் பெரிய மனிதருக்குப்
புரிபட வைப்பது எப்படி
ஏந்திழையே?

மலர்விழி:
புத்தரின் மனைவி
யசோதரையைப் பற்றி நான்
செய்துவைத்த கவிதை ஒன்றினை
உனக்குத் தருகிறேன்.

எப்படியாவது உன் அக்காவின்
அன்புக்குரிய அத்தானைப் படிக்கக் செய்.
மாற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சியே.

கோதை (படிக்கிறாள்):
என் கண்கள் படிக்கக் கொடுமுதலில்!
யசோதரை
உணர்ச்சிகளை வென்றுவிட்ட புத்தன்.
உணர்ச்சிகள் நிறைந்த
மனிதனாய் இருந்தபோது
உணர்ச்சிகளில் நீந்திக்
கண்டெடுத்த
கடற்சங்கான இராகுலன்-
அவனது மகன்
குரல்கொடுத்து அழுதபோது
புத்தனின் மனைவி
யசோதரை விம்மலின் விளிம்பில் விழலானாள்….

ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு கனவிலும்
கணவரையே காதல் சுரங்கமாய்
நினைத்து வாழ்ந்த
யசோதரையின் வாழ்க்கை
பாலையாகிப் போனது போதிமரத்தால்!

பெண்மையின் அன்பின்
ஆட்சியில்தான் கடவுள்
ஒரு குடிமகன் என்பதைப்
போதிமரம் எடுத்துரைக்காததால்
புத்தனின் மனைவி
விம்மலின் விளிம்பில்
விழலானாள்…

இருள்
சித்தார்த்தன் புத்தனாகப்
பரிணாமம் பெறும் முதல் கட்டத்தில்
உடன் இவன்தோள்மீது
தலைசாய்ந்து உறங்கிக்கொண்டிருக்கும்
அன்பும் அழகும் மிளிரும்
அவன் மனைவி யசோதரை.

மழலைகள் பொழிந்து
மயக்கவைத்து, இப்போது
நித்திரையில் திளைத்திருக்கும்
அருமை மகன் இராகுலன் இப்புறம்.

சித்தார்த்தன், தோளிலிருந்து
மனைவியின் முகத்தை மெதுவாய்
நகர்த்தித் தலையணைக்குத்
தருகிறான்.

அவளது சாந்தம்
அவனை ஒருநொடி
அவனது அப்போதைய முடிவுகளை
மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது.

இராகுலனின் இராத்தக்க
உளறல்களோ அப்பா அப்பா
என்று சன்னமாய்
அவனது செவிகளுக்கு
இனிமை பரப்புகிறது.

சில கணப்பொழுதுகளில்
தடுமாறுகிறான் சித்தார்த்தன்.
ஆனால், மனஉறுதி
அவனை மயக்கிலிருந்து
மீட்டுவிடுகிறது.

இருளில் தெரிகிற அவனுக்கே
சொந்தமான அந்த இரண்டு
ஒளிகளை விட்டுவிட்டு
சித்தார்த்தன் புறப்படலானான்.

அன்றைய விடியல்
யசோதராவைக் கனவுகளிலிருந்து
அதிர்ச்சிக்கு மாற்றுகிறது.

துன்பமறியாத அவளது
கணவன் இரவோடிரவாக
வீட்டுப்பிரிந்தான் என்ற
செய்தியால் உயிரோடு செத்துப்போனாள்.

இராகுலன் நிகழ்ந்தவை
யறியாது மலர்ந்து சிரிப்பதில்
தன்னைச் சுதாரித்துக் கொள்ள
முனையலானான்.

வருடங்கள் வந்து வந்து
போனதில் சித்தார்த்தன்
உலகம் போற்றும்
புந்தனாகப் பரிணமித்தான்.
இராகுலன் வளர்ந்து
இளைஞனாகி யசோதரையின்
கண்களுக்குக் குளிர்ச்சியைத்
தந்தான்.

பந்தங்கள் அற்றுப்போன
புத்தன் ஒருநாள் வந்தான்
யசோதரையின் அரண்மனைக்கு.

முன்னிலும் ஒளிமிகு
அவன் முகத்தைக்கண்டு
வாழ்வில் இழந்தவற்றையெல்லாம்
திரும்பப் பெற்றவளாய்
மகிழ்ச்சியில் பூரித்தாள் அவள்.

புத்தனிடமிருந்தோ
ஒரு வெற்றுப்புன்னகை
இவள்பால்.
அதையும் வாங்கி மனதில்
பூட்டிக் கொண்டாள்.

அரண்மனையில் தங்கியிருந்த
இரண்டே நாட்களில்
தந்தையின் சீலம்
இராகுலனை நிரம்ப ஈர்த்ததாம்.

தானும் தந்தையுடன்
செல்லப்போவதாய் வந்துசொன்ன
மகனைப்பார்த்து
விக்கித்துப்போனாள், யசோதா.

சித்தார்த்தன் புத்தனான
காலங்களில்
ஒரு தவம்போல் இப்பிள்ளையையே
முழு உலகாய் நினைத்து
வளர்த்ததென்ன?
வளர்ந்தபின் அவன்
கணவனைப் போலவே
சிரித்த சிரிப்பில்
மகிழ்ந்ததென்ன?

உள்ளுக்குள் புன்னகைத்து
புதல்வனை வாழ்த்தினாள்.
புத்தனோடு சேர்த்து நிறுத்தி,
வழி அனுப்பித் தன் வழி புரியாது
நின்றாள்.

ஒளியை ஒளியுடன்
சேர்த்துவிட்டு
இருளுக்குப் போகிறாள்
யசோதரை.

கோதை(படித்து முடித்தபின்):
அப்பப்பா யசோதரையின்
பாடு இப்படியா?
இதைப் படிக்க வைக்கிறோம்
எங்கள் வீட்டு மாப்பிள்ளையை
பிறகு சொல்கிறேன் உனக்கு.

(இருவரும் எழுந்திருக்க காட்சி முடிகிறது)

(திரை)

இரண்டாம் காட்சி

(அதே இடம், அதே இளம்பெண்கள், நின்று கொண்டிருக்கும் மலர்விழி, வருகிற கோதையின் கரத்தைப் பிடித்து வரவேற்கிறாள்)

மலர்விழி:
வருக என் தோழி.
அத்தானின் நெஞ்சம்
அக்காவிடம் தஞ்சம் ஆயிற்றா
இல்லையா?

கோதை:
கவிதைக் காகிதத்தை
ஒருவாறு அவரைப்
படிக்கச் செய்தோம்.
படித்தது கண்ணோடு போயிற்றோ
நெஞ்சுள் படிந்து தெளிவுகளை
ஏற்படுத்தியதா என்பது தெரியவில்லை.

சலனத்தை ஏற்படுத்தி
தத்துவத் தேடல்… அன்புத் தேடல்
போல்
மாறியிருப்பது போல் தெரிகிறது.

முற்றிலும் மாறிவிட்டால்
எங்கள் நன்றிகள் உன் பாதங்களில்தாம்
என் சிநேகிதியே!

மலர்விழி:
அடியேன் செய்த
அற்புதம் என்ன?
அந்தக்காலத்துப் பெண்ணின்
அவல அழுகையைக்
கவிதையாய்ச் சொன்னேன்.

கோதை:
எப்படி உன்னால்
சின்னவயதில் அற்புதமாக
வாழ்க்கையை அவதானிக்க
முடிகிறது மலர்?

இளமையிலேயே இத்தனை
முதிர்ச்சி
இரகசியம்தான் என்ன?

மலர்விழி:
இதுவரை உனக்குச்
சொல்லாத உண்மையினை
இப்போது சொல்கிறேன்.

நீ நினைப்பதுபோல்
இளமையின் படிகளில்
கனவுக் கண்களோடு
உலாவரும் கன்னி இல்லை
இந்த மலர்விழி.

வாழ்வின் இளமையின் ஆரம்பத்தில்
மணக்கோலம்கண்டு குறுகியகாலத்தில்
கணவன் பிணக்கோலம் கண்டதால்
இப்போது இந்தக் கல்லூரிக் காரிகை
ஓர் இளம் விதவை.

முகத்தின் மத்தியில் இருக்கும்
சின்னஞ்சிறு பொட்டு
வாழ்வின்
உண்மையைப் பறைசாற்றாமாலிருக்க.

திருமணத்திற்குப் பின்னரும்
என்னைப் பராமரித்து, வாழ்வின்
பெரும் இடியை மறக்கப் படிக்கவும்
வழி செய்தவர் என் தந்தை.

கல்லூரிப் பாடங்களோடு
வாழ்வையும் உலகத்தையும்
மனிதர்களையும் படித்து வருவதால்
அடியேனும்
எழுதுகிறேன் எப்போதேனும்.

கோதை (அதிர்ச்சியில் தழுதழுத்த குரலில்):
இவ்வளவுநாள் உடன்வரும்
என்னிடமே மறைத்து விட்டாயே!
வாழ்வின் துவக்கத்தில் வீசிய
புயலை எப்படித் தாங்கினாய்
என் அன்புச் சகியே!

மலர்விழி:
நம்பிக்கையுடன் இருளில்
ஒளியைத் தேடி, நான் என் கணவர்
எனக்குக் கொடுத்துச் சென்ற
சின்ன உயிருடன்
நடந்துகொண்டிருக்கிறேன்.

என் வாழ்வுக்காக நீ அதிர்ந்து
போகாதே, வா, வகுப்பறைக்குச்
செல்வோம். அதற்காகத்தான்
கல்லூரிக்கு வருகிறோம்
என்று என் நெஞ்சம் அறிவுறுத்துகிறது.

(அதிர்ச்சியிலிருந்து மீளாத கோதை அவளுடன் பைய நடந்து செல்கிறாள்)

(திரை)

மூன்றாம் காட்சி

(ஒரு மதுக்கடை, மதுக்கடைக்குள் ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள், மதுப்புட்டிகள், மதுக்கோப்பைகள் உடன் இரண்டு இளைஞர்கள் கபிலன் – பாரி)

கபிலன்:
துயரக்கடலில்
மானுடத்தைச் சோதிக்கும்
எல்லையில்லாப் பரம்பொருளே!
உனக்கு என் வணக்கம்.

போதைக்கடலைக் கண்டெடுத்த
மனித நண்பா!
உனக்கு ஒருகோடி நன்றிகள்.

ஊற்றடா நண்பா ஊற்று.
எரிந்துகொண்டிருக்கும்
என் இதய வீட்டிற்கு
இதுவே தீயணைப்புப் படையாகட்டும்!

அடே இது என்ன
திரவமா? திராவகமா?
வயிற்றில் எரிச்சல் பொங்குதே
ஆயினும் நண்பா!

எனக்கு வஞ்சனை புரிந்தோரின்
வாய்ச்சொற்களால்
ஏற்பட்ட எரிச்சலைக் காட்டிலும்
இது குளுமையடா.

எனது பாதையில்,
எக்களிப்புகளும் ஏமாற்றங்களுமே
எதிர்வந்தன.

இப்போது போதைக்கடலை,
கண்ணாடிக் கமண்டலத்தில்
அடக்கிக் கொணர்ந்த என்
நண்பா நீ வாழ்க!

இன்னும் கொஞ்சம் ஊற்றினால்
உன் பரம்பரையும் வாழும்.

பாரி:
அழகுப்பாவையின்
விரிந்த உள்ளங்கையடா
இந்தப் பூமி.

முட்களுக்குப் பயந்து
மலர்களை
ஸ்பரிசிக்காமல் போன
மகாபாவியே.

மானுடம் அழகாம்.
மங்கையின் ஆறுதல்
வார்த்தை அழகாம்.
வண்ணப்பொடிகள் ஏதும்
கலவாமல்
இதயங்களை ஈர்க்கும்
இயற்கையின் வனப்புகள் அழகாம்.

அனைவரிடமும் பரஸ்பர அன்பு
என்னும் ஊற்று பெருகினால்
வாழ்வே அழகாம்.
உலகே சொர்க்கமாம்.

கபிலன்:
கனவு புரியிலேயே நிரந்திரச்
சுற்றுலா மேற்கொண்டு
காலத்தை ஓட்டி விட்டாயா?

நிகழ்கால உலகின்
கோர முகங்களைக் கண்ட பின்னர்,
உன் கோரைப்பாய்க் கனவுகளைக்
கொட்டு.

கொலையும் கொள்ளையும்
வஞ்சகமும் இவர்களின்
இன்றியமையாத இயற்கைக்
குணங்களாக்கிக் கொண்டு
விட்டனர்.
சாதியும் மதங்களும்
இன்னபிற பிரிவுகளும்
இவர்களின் நிரந்தர ஆயுதங்கள்.

மனிதன் தனது
சகமனிதனிடம் போர்தொடுக்கும்
குருச்சேத்திரமடா இந்தப் பூமி!

இவர்களை எவர் வந்து
நெறிப்படுத்தினாலும் மாறுவதில்லை.

பரம்பரைச் சண்டைக் குணத்தைக்
சுழற்றுவதில்லை.

பாரி:
மனிதப்பிறவியின் மகத்துவம்
புரியாத எதிர்மறையாளன் நீ.
பேசிப் பயன் என்ன?

வீட்டிற்கு நீயே சென்று
விடுவாயா?

அந்தப் பாரி
புலவர் கபிலனை ஆதரித்தான்.
இந்தப் பாரி கபிலனுக்கு
ஊற்றிக் கொடுத்தான் என்ற
பழிக்கு என்னைத் தள்ளி
விட்டாயே அறிவில்லாத மடையா!

கபிலன்:
அறிவில்லாதவன்தான் மடையன்.
போதையில் உனக்குப்
பேச்சும் போயிற்றா?
நான் நிதானத்தில்தான்
வாழ்கிறேன்.
என்னை உன் வாகனத்தில் ஏற்றி
என் வீட்டில் விட்டுவீடு.

மதுதானம் செய்த நண்பா
போக்குவரத்துத் தானத்தையும்
செய்யப்பா.

(இருவரும் செல்லுதல்)

(திரை)

நான்காம் காட்சி

(கடற்கரை, மாலைவேளை, கோதை காத்திருக்கிறாள். அவளது காதலன் அன்பரசன் வருகிறான்) (தாமதமாக வந்ததற்காகச் சமாளிக்கத் தயாராக அசட்டுப் புன்னகையுடன்)

அன்பரசன்:
வணக்கம் கோதையம்மா.

கோதை:
நான் இன்னும்
தாயாகவில்லை.
கன்னியைப் போய் அம்மா
என்கிறீர்களே
அறிவு என்பதை எங்கு
அடகு வைத்தீர்கள்?

அன்பரசன்:
இரண்டு வார்த்தைக்கு
இத்தனை வார்த்தைகளா?
பெண்குலத்தை அம்மா
என்பது இந்திய மரபு.

அம்மாவும் அம்மா.
காதல் காவியம்
மழலையர் பள்ளிப் பெண்
குழந்தையும் அம்மா.
கல்லூரிக் கன்னியும்
அம்மா.
புரிந்ததா அம்மா?

கோதை:
போதும் போதும் ஐயா
உங்கள் சொற்பொழிவு.

காத்திருக்கச் செய்வதில்
என்ன உறக்கு
இவ்வளவு இன்பம்?

ஒரு நாளும் குறித்த
நேரத்தில் வருவதில்லையே?
அலுவலகத்திற்குப் போவதும்
இப்படித்தானா?

அன்பரசன்:
அலுவலகத்தில் நேரம்
தவறாமைக்காக,
சிறப்புப்பரிசு வாங்கியவன்
உன் அன்பன்
அறிந்துகொள்.

கோதை:
அங்கு வந்து
ஆராய்ந்தால்தான்
அதன் உண்மை தெரியவரும்.
மெய்போல்
பொய் சொல்வதில்
வல்லவர்கள் ஆண்கள்
என்று என்னைப்
பெற்றவள் உரைப்பாள்
அவ்வப்போது.

அன்பரசன்:
பெண்களை எளிதில்
நம்புவது கூடாது
என்று என் அப்பா
அடிக்கடி அறிவுரை
சொல்வார் எனக்கு.

கோதை:
அவருடனேயே தந்தைக்குப்
பிரியமான தனயனாக
இருக்க வேண்டியதுதானே?
உங்களுக்கு
எதற்கு காதலும் கத்தரிக்காயும்?

அன்பரசன்:
நீ உன் அம்மாவின்
வார்த்தையை மேற்கோள்
காட்டினாய்.
நான் என் தந்தை
சொன்னதைச் சொன்னேன்
அதற்கு ஏன் இவ்வளவு
கோப நெருப்பு?

பெற்றோர் காட்டும் திசையில்
இருவரும் போகப் போவதில்லையே.
அவர்கள் சொல்வதை அனுபவித்த
பின்னர்தானே உணரப் போகிறோம்.
சரி சரி மீண்டும்
காதல் காவியம்
பார்வையை முறைப்பாக்காதே.
(பேச்சை மாற்றுபவனாக)
ஏன் உன் முகத்தில்
சோகக்கோடு?

கோதை:
என் தோழி மலர்விழி பற்றி
நேற்று உம்மிடம் சொன்னேன்.
அவளைப் பற்றித்தான்
சுவலை நெஞ்சை நெருடுகிறது.
முதிர் கன்னிகளும் இளம் விதவைகளும்
நிறைந்த பூமியாகி விட்டது
நமது தேசம்.

அன்பரசன்:
ஒரு கன்னியை நான்
மணம்புரிய உறுதி எடுத்துள்ளதால்
அந்த எண்ணிக்கையில்
ஒன்று குறையும்.

கோதை:
நான் என்ன முதிர்கன்னியா?
பிதற்றலைத் தவிர
உமது நாவுக்கு வேறு
எதுவும் தெரியாதா?
பிதற்றலாய்ப் பொழிந்தது போதும்.
என் தோழிக்கு என்ன
செய்யலாம். அதைச் சொல்லுங்கள்.

அன்பரசன்:
மூளையைக் கசக்கி
நல்லதோர் முடிவு சொல்வேன்.
அதற்கு முன் ஒரு
புதுக்கவிதை பகர்கிறேன் கேள்.

கோதை:
உமக்குக் காதலி
ஆனதற்கு எல்லாச்
சோதனைகளையும்
எதிர்கொண்டுதானே
ஆக வேண்டும்
சொல்லுங்கள்
செவி மடுக்கிறேன்…

அன்பரசன்:
சரி சரி படு… முறைத்தலை வீடு
செவி மடு என்று
சொல்ல வந்தேன்.

பருவக்கோளாறு
ஆட்டுவிக்கிறது இந்த ஆடவனை.
சரி, கவிதைக்கு வருகிறேன்.
கவிதையின் தலைப்பு
மாதக்கடைசி

சின்னஞ்சிறு எரிச்சல்கள்
சின்னஞ்சிறு கனவுகளைச்
சிதைக்கிற காலம் இது.

மனைவியின் இந்தியமுகம்
எப்படியோ ஜப்பானிய எரிமலை
ஆகிவிடுகிறது.

இந்நாட்களில்
குழந்தைகளுக்குக் கிடைக்கும்
பெற்றோர்களின்
கொஞ்சல்களும் திடுமெனத்
தலைமறைவாகின்றன.
முதல்தேதியின்
நாணய மழைக்காகக் காத்திருக்கும்
சாதகப்பறவைகள்
போன்ற சராசரி
இந்தியர்களுக்கு
மாதக்கடைசி
சின்னஞ்சிறு
எரிச்சல்கள்
சின்னஞ்சிறு
கனவுகளைச்
சிதைக்கிற காலம்.

கோதை:
மனைவியின் இந்திய முகம்
ஜப்பானிய எரிமலை
எப்படி இப்படி ஒரு கற்பனை உமக்கு?
சுய அனுபவம் பேசுகிறதா?
உமக்குத் திருமணம் ஆகிவிட்டதோ?
இரண்டாவது பெண் தேடி
என்னிடம் வலை விரித்தீரா?

அன்பரசன்:
கவிதையைப் பற்றி
ஏதும் சொல்லாமல்
இது என்ன சந்தேக விதை?
சந்தேகக் குணம் இல்லா
பெண்ணைக் காண்பது அரிது
என்று….

கோதை:
உங்கள் தந்தை உம்மிடம்
எப்போதும் சொல்வார்.
போதும். போதும்.
தந்தையைக் கால்பிடித்து
அவர்தரும் சொத்தைச்
சொந்தமாக்கிக் கொள்ளும்.
நான் வருகிறேன்…
இல்லை… உம்மிடருந்து
போகிறேன். விலகிப் போகிறேன்.

(கோபமுற்ற கோதை விரைந்து செல்கிறாள். செய்வதறியாது நிற்கும் அன்பரசன்)

(திரை)

ஐந்தாம் காட்சி

(நூலகத்தின் வாசலில் பாரியும் மலர்விழியும் சந்தித்துக் கொள்கின்றனர்)

மலர்விழி:
வணக்கம் பாரி அண்ணா.
நலம் தானே நீங்களும்
உங்கள் அன்புத் தங்கையும்
பெற்றோர்களும்?

பாரி:
வணக்கம் மலர்விழி
அனைவரும் நலமே
எங்கள் தரப்பில்.
அம்மா அடிக்கடி
உன்னை நினைவுகொள்வாள்.
உன் வாழ்வு இப்படி
ஆனதில் நாங்கள்
வருந்தாத நாளில்லை.

மலர்விழி:
வருவதைத் தடுக்க
நமக்கு எல்லாம் ஏது சக்தி?
விதி கொடுக்கும்
எதையும் ஏற்கத்தானே
நாம் வாழ்கிறோம்.

நீங்கள் பார்த்துவைத்த
மாப்பிள்ளை மரணத்தின்
மாப்பிள்ளையான என்
கணவர்.
அதனால் உங்கள்
தாயாரின் வருத்தங்களுக்கு
எடை கூடியிருக்கலாம்.

வருந்தச் சொல்லாதீர்கள்.
என் தந்தை ஆதரவும்
தாயின் அன்பும்
குழந்தையின் மழலையும்
என்னை உயிர்ப்பித்துக்
கொண்டிருக்கின்றன.

பாரி:
உன் நெஞ்சுறுதி
வலியது அம்மா. தொடர்ந்து
வைரமுடைய நெஞ்சுடன்
நீ வாழ வாழ்த்துகிறேன்.

மலர்விழி:
உங்கள் வாழ்த்தும்
உங்கள் அன்னையின் ஆசியும்
என்னை வழிநடத்தும்.
விடைபெறட்டுமா?
உங்கள் உடல்நலனைப்
பார்த்துக் கொள்ளுங்கள்.

மதுப்பழக்கத்தை
விலக்கி விட்டீர்களா?
இல்லை இன்னமும் அது
உங்களைப் பிடித்துக்கொண்டு
நிற்கிறதா?

பாரி:
அப்பழக்கத்திலிருந்து
என்னை மீட்க முயன்று
வருகிறேன் மலர்விழி.
விடைபெறட்டுமா?

மலர்விழி:
வருகிறேன் அண்ணா
உங்கள்
உடல் நலம் காக்க
மறக்காதீர்கள்.

(மலர்விழி போகிறாள். கபிலன் வருகிறான்)

கபிலன்:
யாராடா அந்த இளம்மங்கை?
பேயடித்தவன் போல்
நிற்கிறாய்.
உன்னைக் காதலிக்க
மறுப்புரை செய்தாளா?

பாரி:
குடித்து குடித்து
முட்டாளாக மறுபிறவி
எடுத்துவிட்டவனே.
அவள், இறந்து போன என்
நண்பன் செல்வத்தின்
மனைவி மலர்விழியடா!

கபிலன்:
மன்னித்து விடு மாமனிதா
மலர்விழி கலங்காத நெஞ்சம்
கொண்டவள்.
அவள் எந்தப் புயலையும்
எதிர்கொள்வாள்.
உன் கவலையை விடு.

பாரி:
அவளுடைய குணச்சித்திரம்
வார்த்தைகளில் வரைகிறாயே
எப்படி?

கபிலன்:
அது ஒரு பழைய கதை
பிறகு சொல்கிறேன்
நம்முடைய மதுவேளையில்.

பாரி:
மது அருந்தாத நேரத்தில்
நீ பேசினாலே உளறல் வெள்ளம்
இப்போதே சொல்லி விடடா என் இராசா.

(அன்பரசன் வருதல்)

பாரி:
வா அன்பரசா
நலம்தானா உன்
உடலும் உள்ளமும்
காதலியும்?

கபிலன்:
காதலிக்க நீ கற்றுக்கொடுத்தால்
அவர் வெற்றி பெறுவார்.
காதல் கலையில் வல்லவர்
உம்முடைய அண்ணன்.
விடாதீர்கள் உறுதியாகப்
பீடித்துக்கொள்ளுங்கள்.

பாரி:
உன் வாய்க்குக் கொஞ்சம்
ஓய்வு கொடு.

அன்பரசா:
சிற்றப்பாவும்
சித்தியும் நலமா இலைத்தில்?

அன்பரசன்:
அனைவரும் நலம்தான்
என்னைத் தவிர
என் காதலைத் தவிர!

பாரி:
உன் காதலுக்கு
வந்த இடர்தான் என்ன?

கபீலன்:
இருவர் ஒருவரைக்
காதலிக்கிறார்கள் போலும்
திரைக்கதைகளில் காட்டும்
பாத்திரங்கள் போல்….

பாரி:
கல்லன் இனி வாய் திறந்தால்
வன்முறைக்கு
என் கைகள் ஆணையிடும்..

கபீலன்:
வன்முறையால் நாடு
படும் பாடு பார்த்து
இந்தியத்தாய் கண்ணீர்
வடிக்கிறாள்…

நீங்கள் பகருங்கள் அன்பரசன்.
உங்களுக்குத் தீர்வுசொல்ல
வள்ளல் துடித்தவண்ணம்
நிற்கிறார்.

அன்பரசன்:
நூலகத்திலிருந்து வெளிவந்து
உம்மிடம் அன்பாய் உரையாடிச்
சென்ற ஏந்திழையின்
கல்லூரித் தோழிதான் என்
காதலி கோதை என்னும்
பாவை
பல மாதங்களாக
இதுவரை காதலித்து வந்தோம்.
நேற்றுமுன்தினம் கோபித்துச்
சென்றாள்.

நேற்றும் இன்றும் என்னைப்
பார்க்க எங்கள் சந்திப்பு
இடத்திற்கு வரவில்லை.
தாங்கள் ஏதேனும் செய்ய
முடிந்தால் மகிழ்ச்சியின்
எல்லைக்குச் செல்வேன்.

கபிலன்:
தூதுபோகும் வேலை
போலும் பாரி வள்ளலே.
தவறில்லை.
இறைவனே
பக்தருக்காகத் தாது சென்றார்.
நீங்கள் இளவலுக்காகச்
செல்லலாம்.
ஆனால்….
தூது செல்லப்போய்
அவளை உங்கள் காதலியாக
மாற்றம் செய்துவிடாதீர்கள்.

அன்பரசன்:
அண்ணா.
இவர்
பேச்சு பயத்தை
விதைக்கிறதே.

பாரி:
கபிலன் விளையாட்டுப்
பேச்சை அவனிடமும்
காட்டித்தான் ஆக வேண்டுமா?
அன்பு.
நீ கவலையை உதறி விடு.
மலரிடம் நான் பேசுகிறேன்.
உன்னைப் பற்றிச் சொல்வி வைக்கிறேன்.
உன் காதலியை தேடிப்பேச
எனக்கு நேரம் இடம் தராது.

கபிலன்:
இப்படிச் சொன்னால் போதும்.
இப்போதுதான் அவர்
முகத்தில் நிம்மதிப் பரவசம்
குடியேறுகிறது.

பார்த்தாயா பாரி?
உங்கள் காதலி பாரியின்
காதலியாக மாறும் பெரும்
அபாயம் இல்லை அன்பரே.

அன்பரசன்:
கபிலனுக்குக் காதல்
அனுபவம் உண்டா?

கபிலன்:
இப்படித்தான்….
முறைத்துக் கொண்டுபோய்
மூன்றுநாளாய்ப் பேசாத
காதலியை என்னிடம்
பேச வைக்க
அனுப்பி வைத்தேன்
என் நண்பன் ஒருவனை.

நண்பனும் அவளும்
செல்வர்களின் செல்வக்கொழுந்துகள்
பெரியவர்கள் பேசினார்கள்
சிறியவர்கள் இணைந்தார்கள்…

மண்டபத்திற்குப் போனேன்
வாசலில் கை கூப்பினார்
மணப்பெண்ணின் தந்தை:
‘மானசீகமாய் வாழ்த்தி விட்டு
போய் விடு இங்கிருந்து’
காதலிக்குத் தாது
அடுத்த முறை எவரையும்
அனுப்பக்கூடாது என்று
உறுதி பூண்டேன்.
ஆனால், காதலிக்கத்தான்
எவரும் இல்லை.

பாரி:
அன்பு
அவன் சொன்னது
அவனது உண்மைக்கதைதான்.
வாழ்க்கையில் விதி அவனைத்
துரத்திய வண்ணம் இருப்பதால்தான்
அப்படிப் பேசினான்.
தப்பிதமாக எண்ணாதே.

அன்பரசன்:
புரிந்து கொண்டேன்
புண்பட்ட அவரது உள்ளத்தை.
விடைபெற்றுச் செல்கிறேன்.
வருகிறேன் அண்ணா.
கபிலன் அவர்களே வருகிறேன்.

(திரை)

– தொடரும்…

– காதல் காவியம் (தமிழின் முதல் புதுக்கவிதை நாடகம்), முதற் பதிப்பு: 1998, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *