காதல் காவியம்




(1998ல் வெளியான புதுக்கவிதை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காட்சி 11-15 | காட்சி 16-20 | காட்சி 21-23
பதினாறாம் காட்சி

(நம்பியின் வீடு. நம்பியின் அக்கா செல்வி, கோதை, நம்பி, அன்பரசன் ஆகியோர்)
நம்பி:
ஓய்வு நாளான ஞாயிற்றுக்
கிழமையில் இப்படி
அனைவரும் மௌனம்
காக்கிறீர்களே.
பிரச்சனைகளைப்
பேசித்தானே தீர்க்க வேண்டும்!
செல்வி:
பேசிப் பேசி
என்ன செய்து விட முடியும்?
இவருடைய தந்தையோ
முரண்டு செய்கிறார்!
இவளைப் பற்றித்
தகாத வார்த்தைகளைக் கக்கிய
வண்ணம் உள்ளார்.
இவரோ இருதலைக் கொள்ளி
எறும்பாய்த் தவிக்கிறார்.
நூறுமுறை இதையெல்லாம்
அனைவரும் பேசியாச்சு.
தீர்வு எங்கே?
சொல்லுங்கள்.
நம்பி:
என் தந்தையும்
அன்பரசனின் தந்தையும்
பல காலமாய் நண்பர்கள்.
என் தந்தையாரிடம் பேசி…
செல்வி:
உங்கள் யோசனையைத்
தூக்கி எறியுங்கள்.
திருமணமாகிக் குழந்தை
பிறந்து இவ்வளவு
காலமாகியும் என்னையே
ஏற்காதவர்
என் சகோதரிக்காக
வரிந்து கட்டிக்கொண்டு
வந்துவிடப் போகிறாரா?
நம்பி:
உன்னை ஏற்கவில்லை என்று
எவர் சொன்னார்?
தூர இருந்து ஆசிகளை
அனுப்புகிறார்.
செல்வி:
ஆமாம் அனுப்புகிறார்
நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.
நம் கதை
இப்போது வேண்டாம்.
இளம் காதலர்களுக்கு
ஏதேனும் உதவ முடிந்தால்
பேசுங்கள்.
இல்லையானால் வாய் மூடி
மௌனியாயிருங்கள்.
அதுவே பெரும் உதவி ஆகும்.
கோதை:
அக்க! எங்களுக்காக
அத்தானிடம் ஏன் கோபம்
கொள்கிறாய்?
நம்பி:
கோபம் உங்கள்
அக்காவின் இன்னொரு நகை.
அன்பரசன்:
பாரி அண்ணன்
நேற்றிரவு
எனக்காக என் தந்தையிடம்
வாதிட வந்தார்
என்னால் அவர்
முகம் கணக்கமானதுதான் மிச்சம்.
செல்வி:
பணப்போதையில்
உள்ளோருக்கு
மனிதர்களைப் புரிந்துகொள்ள
முடியுமா என்ன?
அன்பரன் நீங்கள் இவளைப் பதிவுத்
திருமணம்
மூலம்தான் உங்களுடையவளாக்கிக்
கொள்ளுதல் வேண்டும்
பெற்றோர் ஆசிக்காகக்
காத்திருத்தல் கூடாது.
நான் இவ்வாறு அறிவுரை
கூறுதல் தவறு எனினும்
வேறு வழி ஒன்றும்
புலனாக வில்லையே.
இவளும் குழாயடிச் சண்டைபோல்
உம் தந்தையுடன் தெருமுனையில்
பேசியிருக்கிறாள்.
ஏழைக்கு என்ன சபதமும்
சவாலும்?
இவரும் அதை வேடிக்கை
பாத்திருக்கிறார்.
நாடகம்
பார்ப்பவர்போல்.
நான் எங்கே போய்
முட்டிக் கொள்வேன்?
நம்பி:
என் மீது வந்து விழுந்த
அடுத்த அம்பு.
செல்வி:
என் கணவரே
நான் சொல்வதைக்
கேளுங்கள்.
என் தாயையும்
இவளையும் அழைத்துக்
கொண்டு அன்பரசனின்
தந்தையைப் பார்த்துவிட்டு
வாருங்கள்.
கோதையை ஏதும் பேசவிடாதீர்கள்.
இறுதி முயற்சியாய்
இதைச் செய்வோம்.
அதன்பிறகு விதி விட்ட வழி.
நம்பி:
சரி மகாராணியாரின்
சுட்டளைப்படியே செய்கிறேன்.
செல்வி:
கையில் என்ன புத்தகம்
மீண்டும் சாமியாராக
எண்ணம் இடுகிறீர்களா?
நம்பி:
இது மனைவியை
வசப்படுத்துவது எப்படி
என்று என் நண்பன்
இராஜ இராஜன் எழுதிய
புதிய புத்தகம்.
படிக்கக் கொடுத்தான் நண்பன்.
நீ பட்டியலிடும் புத்தகங்களை
மட்டுமே படிக்கக்
கட்டளை சொல்வாயோ?
செல்வி:
புத்தகம் எழுதியவரின்
இல்லம் சென்று பார்த்தால்தான்
தெரியும்.
அவர் மனைவியை
வசப்படுத்தினாரா
அல்லது
மனைவியின் முந்தானையில்
ஒளிந்து வாழ்கிறாரா என்பது.
நம்பி:
இப்போது நான் இருப்பதுபோல்
என்று சுருக்கமாய்ச் சொல்லேன்.
சுற்றி வளைத்து வார்த்தைகளை
ஏன் வீணாக்குகிறாய்?
செல்வி:
நான் உங்களை
சாவி கொடுக்கும்
பொம்மை போலவா
இயக்கிக் கொண்டிருக்கிறேன்?
என்ன பேச்சு பேசுகிறீர்கள்?
நம்பி:
உண்மயை நீயே
உன் நாவால் அறிவித்து
விட்டாயே, என் செல்வி.
செல்வி:
நான் கோபத்தின்
உச்சிக்கு…..
நம்பி:
பயணப்பட்டு விடாதே.
இரத்தக் கொதிப்பு
அதிகரிப்பு ஆகிவிடும்.
வா நாம் மாடிக்குச் செல்வோம்.
சிறிசுகள் இங்கே
பேசட்டும்.
(இருவரும் செல்லுதல்)
அன்பரசன்:
புரிந்து கொள்ளுதலில்
முழு மதிப்பெண் பெறக்கூடிய
தம்பதியர் என்று சொன்னாய்.
இப்படி கோபத்தால்
பந்தாடுகிறார் கணவனை
உங்கள் தமக்கை.
கோதை:
பரிதாபத்துக்குரியவர் தாம்
எங்கள் அத்தான்.
அக்கா நிலையோ அதற்கு
மேல் பாவம்.
தந்தை இல்லா குடும்பத்தை
வழி நடத்தி
என்னையும் என் தங்கையையும்
ஆளாக்கி உருக்கொடுத்தவள்
என் தமக்கை.
அவளுக்குக் காதலன்
செல்வத்தைத் துறந்து
தன் பின்னே வந்ததால் கவலை.
சகோதரிகளின் திருமணம்
பற்றிய கவலை.
இப்படி எண்ணற்ற கவலைகள்.
என்னதான் செய்வாள் அவள்?
அன்பரசன்:
கோபம் ஒன்றுதான்
உங்கள் குடும்பச் சொத்தா?
அன்றைக்குத் தெருமுனையில்
கோபமுற்ற என் தந்தையை
நீ மௌனத்தால் வென்றிருக்கலாம்.
அவரை மேலும் கோபம் ஏற்றிப்
போக வைத்தாய்.
கோதை:
பெரியவர்கள் பெருந்தன்மையைக்
கழற்றி வைத்துச் செயல்படுதல்
தவறுதானே?
சரி நீங்கள் ஒரேயடியாகக்
கவலையில் தோய்ந்து விடாதீர்கள்.
இப் புயல் அடங்கிப் போகும்.
கண்டிப்பாய்க் கரை சேர்வோம்.
அன்பரசன்:
அந்த நம்பிக்கையில்தான்
நான் ஜீவிக்கிறேன்.
விடைபெறட்டுமா?
கோதை:
கவலையின்றிப் போய் வாருங்கள்.
காதல் வாழ்க!
(திரை)
பதினேழாம் காட்சி
(இரவு நேரம். பூஞ்சோலை கிராமத்தில் மணியின் வீடு, வாசற்புறம் மங்கலான ஒளி. மாணிக்கம் மட்டும் உலவிக் கொண்டிருத்தல்)
(தங்கம் கணவனைத் தேடி வருதல்)
தங்கம்:
ஏன் இப்படி அலைபாய்கிறீர்கள்?
உறக்கத்தைத் தவிர்த்தால்
உடல் என்ன ஆகும்?
வாருங்கள் வந்து உறங்குங்கள்.
மாணிக்கம்:
நீ உள்ளே செல்.
குழந்தையைத் தனியே
விட்டு வரலாமா?
பயந்து அழுகைகொள்ளப்
போகிறான்.
தங்கம்:
அவன் ஆழ்ந்து உறங்குகிறான்.
நீங்கள் இப்படி இருப்பதைக்
சுண்டு எனக்குத்தான்
துளியும் உறக்கம் இல்லை.
என்னதான் உங்கள் பிரச்சினை?
மனைவியிடம் சொல்ல
ஏன் தயக்கம்?
நான் உங்களில் பாதி
இல்லையா?
உங்கள் குழந்தையைப்
பெற்று வளர்க்க மட்டும்தான்
மனைவியா?
மாணிக்கம்:
ஏன் இப்படிப் பேசி
என் மனதை மேலும்
புண்ணாக்குகிறாய்?
தங்கம்:
மனைவியிடம் வாழ்க்கைப்
பிரச்சினையை
எடுத்துரைக்காமல் வேறு
எவரிடம் சொல்வீர்கள்?
மாணிக்கம்:
சரி சொல்கிறேன்.
நான் பணிபுரிந்த
பெரும் நிறுவனத்தில்
வளர்ச்சி மேலாளர்களுக்கு
வாகனம் அனுப்பும்
வேலை எனக்கு.
என் நண்பன் செல்வாவும்
நிறுவனத்தின்
வளர்ச்சி மேலாளர்களில் ஒருவன்.
அவனது பகைவர்கள்
அவனை அழிக்கத்
திட்டமிட்டனர்.
அதை என்னிடம்
தொலைபேசியில் தெரிவித்தனர்.
அவர்கள் திட்டத்திற்கு
வசதியாக ஆட்டோவில்
அவனை ஏற்றி அனுப்பிட
மிரட்டல் ஆணை இட்டனர்.
என் நண்பனும்
எங்கள் நிறுவன வாகன
ஓட்டுநரும் விபத்தில் சிக்கி மாண்டது
அன்றைய தலைப்புச் செய்தி.
இந்தத்
தொலைபேசிச் செய்தியை
என் நண்பனுக்குச்
சொல்லவில்லை.
சொல்லி விட்டால்
உனக்கும் அதே கதி தான்
என்று அவர்கள்
விடுத்த மிரட்டல்
என் மூளையை மழுங்கச் செய்தது.
நண்பனுக்கு எச்சரிக்கை
சொல்லாததால்
நிர்வாகத்திடம் என்
நிலையை உரைக்காததால்
இரண்டு உயிர்கள்
அகாலத்தில் விண்ணுக்குச்
செல்ல நான் காரணம்
ஆகிப்போனேன் என்கிற
உறுத்தலில்தான் நான்
வெந்து கொண்டிருக்கிறேன்.
சென்னையை விட்டு
ஓடி வந்ததற்குக் காரணமும்
அதுதான் தங்கம்.
தங்கம்:
மனதை அலட்டலில்
ஈடுபடுத்திக் குழப்பத்தில்
ஆழ்ந்து போகாதீர்கள்.
சரி வாருங்கள் உறங்கச்
செல்வோம்.
மாணிக்கம்:
நான் பிறகு வருகிறேன்.
மணி அண்ணா உறங்கி
விட்டாரா?
தங்கம்:
அவரும் சாமிகளும்
எங்கோ சென்றவர்
இன்னமும் வரவில்லை.
உங்கள் தம்பி கபிலனுக்குக் கடும்
காய்ச்சல்,
மாத்திரைகளை உண்டு
உறங்கிக் கொண்டிருக்கிறார்.
ஏன் அவருடன் நீங்கள்
பேசுவதில்லை?
சென்னையில்தான் இருக்கிறாராம்.
இதுவரை நம் இல்லம்
வந்ததில்லை.
விநோதமாய் இருக்கிறது
உங்கள் வீட்டு விவகாரம்.
மாணிக்கம்:
சொத்துக்களை அதிகமாய்ப்
பகிர்ந்துகொள்ளவே மணி
அண்ணன் மேல் பாசம் பொழிந்து
நாடகம் நடத்துகிறான் கபிலன் என்று
ஊரார் சொல்ல-
நானும் வழி மொழிந்தேன்
பத்தாண்டுகளுக்கு முன்.
அப்போது
என்மீது
கோபம் கொண்டு ஊரை
விட்டுச் சென்றான்.
இங்குதான் சந்திக்கிறோம்.
அதன் பிறகு
அவன் சென்னையில் வசிப்பது
எனக்குத் தெரிந்திருந்தால் சந்தித்துப் பேசிப்
பாசத்தைப் புதுப்பித்திருப்பேன்.
தங்கம்:
ஒரு தாய் வயிற்றுப்
பிள்ளைகள் பேசாமல்
இருப்பதைப் போல்
இழுக்கு குடும்பத்திற்கு
வேறு எதுவும் இல்லை.
போனது போகட்டும்
பேசி மகிழுங்கள்
நாளையிலிருந்தாகிலும்.
நான் உள்ளே செல்கிறேன்
விரைவில் வாருங்கள்.
(தங்கம் செல்லுதல்)
(ஓர் உருவம் ஓடி வருதல் களைத்து விழுதல்)
(மாணிக்கம் அந்த உருவத்தைக் கைத்தாங்கலாகப் பிடித்து திண்ணையில் கிடத்துகிறான். உள்ளிருந்து செம்பில் தண்ணீர் கொண்டு வருகிறான். உருவத்தின் மீது தெளிக்கிறான்)
மாணிக்கம்:
ஆ! செல்வா என்
நண்பா!
விதியை வென்று நீ
உயிர் பிழைத்திருப்பது
எனக்கு மகிழ்ச்சியைத்
தருகிறது.
எங்கிருந்து ஓடி வருகிறாய்
நண்பா!
இந்தா தண்ணீர் அருந்து.
செல்வா:
நண்பா மாணிக்கம்
நாம் இங்கிருந்து
உரையாடுவது நம்
இருவருக்கும் ஆபத்து.
மறைவிடம் ஒன்று சொல்
அங்கு செல்வோம்.
மாணிக்கம்:
எங்கள் வீட்டில் நிலவறை
ஒன்று உண்டு.
அங்கு போவோம்.
நீ உள்ளே செல்.
தொடர்ந்து வருகிறேன் நான்.
(செல்வா எழுந்து உள்ளே செல்கிறான் மாணிக்கமும் சுற்று முற்றும் பார்த்துவிட்டு உள்ளே செல்கிறான்)
(ஏழுமலை சாமிகளும் மணியும் வருகின்றனர்)
ஏழுமலை சாமிகள்:
விரைவில்
மங்கலத் திருமணம்
ஏற்பாடுகள் பற்றி….?
மணி:
ஏற்பாடுகள் செய்து
வருகிறேன் ஐயா.
சகோதரன் ஒருவனுக்கு
உடல் சுகவீனம்.
இன்னொருவனின் பணிக்குப்
போவதை விடவில்லை.
என்னிடம் பயின்றவர்கள்
சிலர் உதவி புரிந்து வருகின்றனர்!
ஏழுமலை சாமிகள்:
சரி நீ சென்று
ஓய்வுகொள்
காலையில் சந்திப்போம்.
மணி: நன்றி சாமிகளே.
(திரை)
பதினெட்டாம் காட்சி
(திருமகளின் வீடு. சுடர்விழியும் திருமகளும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)
சுடர் விழி:
நாளை மாலை
என்னுடன் வருகிறாயா?
திருமணம் பார்க்க
பூஞ்சோலை கிராமம்
செல்கிறோம் நானும்
அண்ணாவும்.
திருமகள்:
இரண்டொரு நாளில்
திரும்புவதாக இருந்தால்
வந்து விடுவேன்.
என் தந்தை தாயிடம்
அனுமதி கேட்க பாரி
வருகிறேன் என்று செல்லியிருந்தார்.
இன்னமும் வரவில்லையே.
சுடர்விழி:
அலுவலகத்தில் அவருக்கு
வேலைக்கு மேல் வேலை.
விடுபட்டு ஓய்வு பெறுகிற
கலையை அறியாதவர் அவர்
அதனால்தான் அவதிகள் அனைத்தும்.
திருமகள்:
பொறுப்புள்ள பதவி
அல்லவா?
எதிலும் பூரணத்துவம்
பார்க்கிற குணத்தைக்
கைவிடவில்லையே அவர்.
(கோதை வருதல்)
திருமகள்:
வா என் தோழி நலம்தானா நீ?
கோதை:
நலம் என்றால் என்ன என்று கேட்கும்
நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்.
என் பிரிய சகி.
நேரம் என்பது எனக்கு
இல்லை இப்போது.
என் காதலரின்
தந்தை மருத்துவமனையில்
அவசர சிகிச்சைக்கு
அனுமதியாகியுள்ளார்.
பாரியிடம்
தெரிவிக்க என்னை அனுப்பினார்
என் அன்பர்.
அவரது இல்லம் தெரியாததால்
அடியேன் வந்தேன் இங்கே.
திருமகள்:
இதோ இவள்தான் பாரியின்
அன்புச் சகோதரி சுடர்விழி.
சுடர் இவள் கோதை மகள்
என் அன்புத் தோழி.
(கோதையும் சுடர்விழியும் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்)
சுடர்விழி:
என்னவாயிற்று எங்கள் சிற்றப்பாவுக்கு?
எமக்கு ஒன்றுமே தெரியாதே
இதுவரை.
கோதை:
நேற்றுத்தான் அனுமதிக்கப்பட்டார்
தனியார் மருத்துவமனை ஒன்றில்
திடீரென வந்த மாரடைப்பால்.
என் அக்காவின் துணைவரும்
அடியேனும்
அன்பரசனுக்குத் துணையாய்
இருந்து வருகிறோம்.
சுடர்விழி:
எங்கள் வீடு வரை
நீங்கள் அலைய வேண்டாமே.
வாருங்கள்
பொதுத் தொலைபேசியில்
பாரி அண்ணனுடன்
பேசி வரலாம்.
திருமகள்:
அவள் அலைந்து
களைப்பில் இருக்கிறாள்.
வா நாமிருவரும் பேசித்
திரும்புவோம்.
கோதை நீ இங்கே
சற்றே ஓய்வெடு
அம்மா,
கோதைக்குத்
தாகம் தணிக்கவும்
பசி தீர்க்கவும் ஏற்பாடு செய்யேன்.
சுடர்விழி:
எந்த மருத்துவமனையடி?
அதைத் தெரிந்து கொள்ளாமல்
என்ன பேசுவாய் அவரிடம்?
கோதை:
மன்னிக்கவும்.
அதைச் சொல்ல மறந்து போனேன்.
நமது கணிப்பொறிப் பயிலகத்துக்கு
அருகே இருக்கும்
அன்பு மருத்துவனையின்
முதல் பிரிவில்
(திருமகளின் தாய் கோதைக்காக பருகவும் உண்ணவும் பொருட்கள் கொண்டு வருதல்)
(அரங்கில் இப்போது கோதையும் திருமகளின் தாயும் இருக்கும் பகுதியில் ஒளி குறைந்து, மேடையில் இன்னொரு பக்கத்தில் ஒளி பாய்ச்சப்பட அங்கே ஒரு பொதுத் தொலைபேசிக் கூண்டுக்கு வெளியே திருமகளும் சுடர்விழியும் நின்று கொண்டிருக்கிறார்கள்.)
சுடர்விழி:
என்னடி தோழி
இவன் பேசி முடிக்க
பொழுது விடிந்து போகும்
என்றல்லவா எண்ணத்
தோன்றுகிறது.
அவன் எப்போது
வெளியே வந்து
நாம் எப்போது அண்ணனுடன்
பேசித் தகவலை அனுப்புவது?
திருமகள்:
இந்தத் தெருவில்
வேறு எங்கும்
பொதுவான தொலைபேசி
இல்லையேயடி.
சுடர்விழி:
அவன் வருவதாக
எனக்குப் புலனாகவில்லை.
(கூண்டிலிருந்து ஆள் வெளியே வருகிறான்)
(சுடர்விழி கூண்டினுள் செல்லுதல். திருமகள் வெளியே நிற்கிறாள்)
(நம்பி வருதல்)
திருமகள்:
வணக்கம் என்னை
அறிவீர்களா நீங்கள்?
பாரியின்…..
நம்பி:
வணக்கம்மா
பாரியின் வருங்கால மனைவி.
நிகழ்காலக் காதலி நீங்கள்….
நான் அறிவேன்.
என் மைத்துனியைத் தேடி
நான் அலைகிறேன்.
எங்கே சென்றாளோ?
திருமகள்:
அவள் எங்கள் வீட்டில்
இருக்கிறாள்.
பாரிக்குச் செய்தி சொல்ல
அவர் வீட்டு முகவரி அறிய
என் இல்லம் வந்தாள்.
நம்பி:
பாரிக்கு அடியேன்
முன்னமே செய்தி சொல்லி விட்டேனே.
என்னிடம் விசாரிக்க
வேண்டாமா அந்த இளங்காதலர்கள்?
(சுடர்விழி வருதல்)
(சுடர்விழி நம்பிக்கு வணக்கம் தெரிவிக்கிறாள்)
சுடர்விழி:
என்னதான் ஆச்சு அண்ணா?
சிற்றப்பா உடல் சுகவீனம்
பெற்றது எவ்வாறோ?
நம்பி:
எதுவும் நம் வசத்தில்
இல்லையம்மா.
விதி தரும் பரிசு
எதுவாயினும் ஏற்றுக் கொள்ளவே
மனித ஜீவிதம்.
நானும் கோதையும்
கோதையின் தாயும்
அன்பரசனின் வீட்டிற்குச்
சென்றிருந்தோம் திருமணம் பேச.
அதற்கு முன்னரே
உடல் சுகவீனமாகி
படுத்திருந்தார்.
அப்போது
திடுமென வந்த நெஞ்சுவலியால்
தனியார் மருத்துவமனையில்
சேர்ப்பித்து சிகிச்சை அளித்தார் அன்பரசன்
உடன் உதவ நானும் என் மைத்துனியும்
அன்பரசன்
தனியாய்ச் சிந்தித்துச்
சிந்தித்து குழப்ப
அரசனாய் விடுவான்
நான் செல்கிறேன்.
கோதையை என்
இல்லம் சென்று இருக்கச் சொல்.
என் இல்லத்தரசியிடம்
நான் அன்பரசனுக்குத் துணை
இருப்பதைச்
சொல்லிடச் சொல்.
வருகிறேன்.
(நம்பி செல்லுதல்)
திருமகள்:
உன் அன்பு அண்ணா இருந்தாரா
அலுவலகத்தில்?
சுடர்விழி:
அவர் இருந்தார்.
தொலைபேசியில் அவரைப்
பிடிப்பதுதான் பெரும் பாடாய்ப்
போயிற்று.
இயக்குநருடன்
விவாதத்தில் இருக்கிறார்.
இணைப்பு தரமுடியாது
என்று அலட்டல் செய்தனர்.
எனது அதட்டலால்தான்
பேச முடிந்தது.
அலுவலக வேலையிலிருந்து
விடுபட்டு மருத்துவமனை சென்று,
சிற்றப்பாவைப்
பார்க்க உள்ளதாய்ப் பகர்ந்தார்.
வா உன் இல்லம் செல்வோம்.
காத்திருப்பாளே உன் சகி.
திருமகள்:
ஏன் உன் வருங்கால
அண்ணி என்று
சொல்லல் ஆகாதா?
சுடர்விழி:
ஆகாது. ஏன் என்றால்
எனக்குப் பின் பிறந்தவன்தான்
அன்பரசன்.
தம்பி முறைதானேயன்றி
அண்ணன் இல்லையடி தோழி.
திருமகள்:
நீ இளமை குன்றா
இனிய நங்கையடி.
வயதாக வயதாக
உன் இளமை மெருகு ஏறும்போலும்.
சுடர்விழி:
காதலனின் தங்கை
என்பதால்தானே இந்தப் புகழுரைகள்?
திருமகள்:
புகழுரையாய்ச் சொல்லவில்லை
நிஜமெனச் சொல்கிறேன் நம்பு.
சுடர்விழி:
நிஜமும் பொய்யும் எப்படி
வெளிப்படும் என்பதை அறிவேன்.
வா செல்வோம்.
திருமகள்:
அண்ணனைப் போலவே தங்கை!
சுடர்விழி:
நீ என் அண்ணனுக்கு
ஏற்ற நங்கை – வா.
(திரை)
பத்தொன்பதாம் காட்சி
(பூஞ்சோலை கிராமத்தில் – மணியின் வீட்டின் உட்புறம், முற்றம் போன்ற பகுதியைச் சித்திரிக்கும் மேடை கபிலன் காய்ச்சல் நீங்கி ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். காலை நேரம். மாணிக்கம் சிற்றுண்டி நிறைந்த தட்டுடன் வருதல். தங்கம் அவனறியாமல் அவனைப் பின் தொடர்கிறாள்)
கபிலன்
காலை வணக்கம்
மாணிக்கம் அண்ணா!
தான் ஆடாமல் போனாலும்
சதை ஆடும் என்பதற்குப்
பொருள் புரியாமல்
இத்தனை வயதை ஓட்டி விட்டேன்.
இன்றுதான் புரிந்து கொண்டேன்;
உடன்பிறந்தவனின் அன்பைத்
தெரிந்து கொண்டேன்!
காய்ச்சலில் விழுந்த தம்பிக்கு
சூடான இட்லியால் அன்பை
அறிவித்த தமையனே. நீ வாழ்க!
மாணிக்கம்:
(வீழித்தவாறு)
ஆங் இட்லி உனக்காக?
(சமாளித்த)
ஆமாம் தம்பி,
சுரத்தில் இருந்து காய்ந்து
கிடந்தவனுக்கு அல்லவா
உணவின் அருமை புரியும்.
இந்தா நீ சாப்பிட்டுப்
பசியாறு.
பல் துலக்கும் பழக்கம் உண்டா?
விட்டுவிட்டாயா?
கபிலன்:
பெயருக்குப் பல் தேய்க்கும்
பழக்கம் உண்டு.
என்ன அண்ணி அதிசயத்தைக்
கண்டாற்போல் நிற்கிறீர்கள்?
நானும் அண்ணணும் பேசுகிறோமே
மழை வரப் போகிறதே என்று
எண்ணம் இடுகிறீர்களா?
தங்கம்:
அதுதான் என் மனதைப்
படித்துச் சொல்லி விட்டீரே.
பெரியவரிடம் மட்டும் வாய் ஓயாமல்
பேசுவீர்.
இவருடனும் பேசுகிறீரே
என்று வியந்து போகிறேன்.
கபிலன்:
ஒரு சகோதரனுடன்
பேசிப் பேசி அன்பைச்
செலுத்துவேன்.
இன்னொரு சகோதரனுடன்
மௌனத்தால் அன்பைச்
செலுத்துவேன்.
தங்கம்:
உமக்கு சமாளிப்புத் திலகம்
என்றுதான் பெயரிட வேண்டும்.
ஆண்டுகளுக்குப் பின்
அண்ணன் தரும் அன்பு கலந்த
இட்லியை உண்டு மகிழும்.
நான் அடுக்களைக்குள்
அடைக்கலம் ஆகிறேன்.
மாணிக்கம்:
தங்கம்.
அவனுக்குப் பருகத் தண்ணீர்
கொண்டு வா.
நான் வெளியே சென்று
சிறிது நேரத்தில் இல்லம்
திரும்புகிறேன்.
(தங்கம் தலையசைத்து உள்ளே செல்லுதல். மாணிக்கம் வேறொரு பக்கம் செல்லுதல்)
(கபிலன் அமர்ந்திருக்கும் பகுதியில் ஒளி மறைந்து… மீண்டும் ஒளி பாய்ச்சப்பட அதே வீட்டின் நிலவறை. செல்வா உலவிக் கொண்டிருக்கிறான். மாணிக்கம் வருகிறான்)
மாணிக்கம்:
காலை வணக்கம்!
செல்வா:
வணக்கம் நண்பா!
நீண்ட நாளைக்குப் பின்
உறக்கத்தில் நிம்மதி கண்டேன்.
மாணிக்கம்:
இந்தா இவற்றை உண்டு
பசியாறு.
பற்பசையும்
பல் துலக்கும் குச்சியும் கூட
இச் சிறிய பையில் உள்ளது நண்பா.
செல்வா:
இது என்ன நண்பா
ரொட்டிப் பொட்டலம்-
தண்ணீர்ப் புட்டி.
நகரம்தான் பொட்டலத்துக்குள்
அடங்கி விட்டது என்றால்……..
இங்குமா?
உன் வீட்டின்
சுவையான சிற்றண்டிக்காக
என் நாவு ஏங்கிற்று நண்பா.
மாணிக்கம்:
மன்னித்து விட்டா
சிற்றுண்டியை உனக்காகத்தான்
எடுத்து வந்தேன்.
தம்பி
கபிலன் வழி மறித்து
அவனுக்கு
எடுத்து வருவதாக
எண்ணிக் கொண்டான்.
வாங்கிக் கொண்டான்.
கிராமத்து வீட்டு விருந்தினனுக்கு
நகரத்துத் தண்ணீர்ப் புட்டியைத்
தர வேண்டிய நிலைமை.
என்னை மன்னித்து விட்டா!
செல்வா:
அதனால் என்ன?
புரிந்துகொண்டேன் உன் நிலைமை.
மாணிக்கம்:
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க
ஒரே வழி எனக்குத் தோன்றுகிறது.
சொல்லட்டுமா?
செல்வா:
சொல்லப்பா. தலைமறைவு
வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாய்
ஏதேனும் செய் நண்பா.
மாணிக்கம்:
நீ உடனடியாகச்
சாமியாராக உருமாற்றம் அடைதல்
வேண்டும்.
செல்வா:
என்ன சொல்கிறாய் நீ
நான் குடும்பியடா.
மாணிக்கம்:
மடையனான நண்பா
கொடியவர்களின் கொடுமையால்
உன் மூளை இயங்கவில்லைபோலும்.
நீ சாமியார் வேடம் தரித்துக் கொள்.
என் அண்ணனும் தம்பியும்
சாமியார் பித்துப் பிடித்தவர்கள்
ஏற்கனவே ஏழுமலை சாமிகளின்
பின்னால் இருவரும் அலைகிறார்கள்.
இன்னொரு சாமியாரை நான்
அழைத்து வந்தால் அண்ணன்
நிச்சயம் தருவார் அடைக்கலம்.
செல்வா:
மழைக்கும் நிழலுக்கும் கூட
ஆலயம் பக்கம் போகாதவனடா.
வேதாந்த விசாரம் செய்யாத
பிறவியைச் சாமியாராய்ச்
செயல்படச் சொல்கிறாய்.
மாணிக்கம்
உன் மனைவி ஆன்மீகத்தில்
ஊறியவள் என்று சொல்வாயே
அவள் இறையன்பைப் பற்றி
சொன்னதை வைத்து
ஏதேனும் செய்து ஒப்பேற்று.
செல்வா:
கஷ்டத்தில் கடவுளை
நினைப்பார்கள் என்பார்கள்.
துயரத்திலும் கடவுளை
நினையாமல் மனைவியை மட்டுமே
நினைத்தேன்.
மாணிக்கம்:
உணர்ச்சிகளை
மூட்டை கட்டி வை.
செயல்படும் தருணம் இது.
எதிரியிடமிருந்து தப்பித்து
உன் மனைவி மகனைக்
காண வேண்டாமா நீ?
செல்வா:
அதற்காகத்தானே
உயிரைக் கையில் ஏந்தி நிற்கிறேன்.
நீ என்ன வேண்டுமானாலும்
வேடமிடு.
நான் உருமாறுகிறேன்.
(அவர்கள் இருக்கும் பகுதி இருட்டடிக்கப்பட்டு, முன்னர் இருந்த முற்றம் பகுதியில் வெளிச்சம் காட்டப்பட கபிலன் நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான். ஏழுமலை சாமிகள் வருகிறார். கபிலன் கைகூப்பி எழுந்து நிற்கிறான்)
ஏழுமலை சாமிகள்:
உடல்நிலை தேறி விட்டதா?
காலை வெய்யில் படும்
முற்றத்தில் அமர்ந்திருக்கிறாய்.
சூரியக் குளியலா?
கபிலன்:
நீர்க்குளியல் தானய்யா
எனக்குத் தெரியும்.
இங்கே அமருங்கள்.
ஏழுமலை சாமிகள்:
எனக்கு உட்கார நேரமில்லை
அம்பிகைக்கு இன்று
சிறப்பு வழிபாடு ஆலயத்தில்
அங்கு செல்கிறேன்.
மதியம் உணவு இன்னொரு அன்பரின்
இல்லத்தில்
உன் அண்ணியிடம்
தெரிவித்து விடு.
நான் வருகிறேன்
கபிலா.
கபிலன்:
வணக்கம் ஐயா.
(ஏழுமலைசாமிகள் செல்லுதல்)
(செல்லம்மா வருதல்)
கபிலன்:
வணக்கம் அண்ணியாரே
வாருங்கள்.
செல்லம்மா:
உடல்நிலை என்ன
சொல்கிறது?
திருமணத்திற்கு ஒடோடி
வேலை செய்வீர் இல்லையா?
கபிலன்:
சாப்பாட்டுப் பந்திக்கு
ஒட மட்டும் தெம்பு இருக்கும்.
என்று எண்ணுகிறேன்.
செல்லம்மா:
சரி அண்ணா எங்கே
கபிலன்:
உங்கள் அண்ணனை நான்
கண்டதில்லை இதுவரை?
செல்லம்மா:
உமது அண்ணன்
தமிழாசிரியர் எங்கே?
கபிலன்:
அவர் உங்களைத் தேடி
காலையிலே புறப்பட்டதாய்
அண்ணியார் சொன்னாள்.
(புடவைத் தலைப்பால் வியர்வையைத் துடைத்தப்படி தங்கம் வருதல்)
தங்கம்:
வாங்க வாங்க
மணப்பெண்ணின் ஒளி
இன்னமும் முகத்தில்
வரவில்லையே ஏன்?
செல்லம்மா:
பருவத்திலா மணம்
புரிகிறேன் நான்?
உதிர இருந்த மலரை
உமது மைத்துனர் சூட வந்தார்.
சரி வா உன்னிடம்
பேச வேண்டும் நிறைய.
(இருவரும் மேடையின் ஒரு புறம் நோக்கிச் செல்கிறார்கள்)
(மாணிக்கமும் சாமியார் உருவில் செல்வாவும் வருதல்)
கபிலன்:
அடடே நீங்கள்
சாமியாருடன் வருவது
வியப்பான விஷயமாச்சே.
எப்படி நேர்ந்தது இந்த
விபத்து?
மாணிக்கம்:
இவர்…. சாமியாராகி விட்ட
என் நண்பர்
பூர்வாசிரமத்தில் நானும்
இவரும்
நகமும் சதையும்
என வாழ்ந்தோம்.
கபிலன்:
நகம் நல்ல வழி
தேடிப் போய் விட்டது.
சுவாமிகளின் பெயர் என்னவோ?
செல்வா:
அடியேனுடைய பெயர்
செல்வ…. செல்வ……..
மாணிக்கம்:
செல்வ நாயக சுவாமிகள்
செல்வா:
ஊர் ஊராய்ச் சென்றவன்
பூஞ்சோலை வந்தவன்
மாணிக்கத்தை கண்டேன்.
இங்கேயே சில நான்
தங்கும்படி மாணிக்கம்
வேண்டிக் கொண்டான்.
கபிலன்:
நீங்கள் இங்கு வந்திருப்பதைப்
பெரும் பேறாகவே எங்கள்
அண்ணன் ககுதி மகிழ்வார்.
இந்த நாற்காலியில் எழுந்தருளுங்கள்
அடியேன் தங்கள்
தாக சாந்திக்காக உள்ளே செல்கிறேன்.
(கபிலன் செல்லுதல்)
செல்வா:
எனக்கு தாக சாந்தி என்று
எவரையும் தெரியாதே
யார் அந்தப் பெண்?
மாணிக்கம்:
பெண்ணும் இல்லை
மண்ணும் இல்லை
உளறுதல் இல்லாமல்
இருக்க மாட்டாயா?
காலை வாரக்
கங்கணம் கட்டிக் கொண்டாயா?
செல்வா:
இல்லை நண்பா
உன் இளவல்
என் நண்பன் பாரியின்
உற்ற நண்பன்
அவனைக் கண்டதும்
குழப்பமாகிப் போச்சு
இனிமேல்….. பார்……
(கபிலன் கையில் சிறுகுவளை எந்தி வருதல். செல்வாவின் கையில் தருதல்,)
கபிலன்:
ஆ! இந்த முகம்
எனக்கு மிகவும் அறிமுகம்
எங்கோ பார்த்த முகம்….
மாணிக்கம்:
ஒருவரைப் போல்
உலகத்தில் ஏழு பேர்
இருப்பதாகச் சொல்வார்கள்
அது போல் தான்…
செல்வா:
ஆமாம் நாங்கள்
அண்ணன் தம்பி ஏழுபேர்.
உடன்பிறந்த ஆறுபேரும்
என்னைப் போலவே…
செல்வா:
சாமியார்களாகி விட்டார்களோ?
பூர்வீகம் எதுவோ தங்களுக்கு?
செல்வா:
ரிஷிமூலம் நதிமூலம்
வேறு எந்த மூலம் பற்றியும்
சாமியாரிடம் வினவுவது தவறு கபிலா
கபிலன்:
என் பெயரைத்
தாங்கள் எப்படி அறிந்தீர்கள்?
ஞானக் கண்ணோ?
செல்வா:
ஞானக் கண்ணை
வீணாக வீண்படுத்துவதில்லை
மாணிக்கம்தான் சொன்னான்.
நீ வாழ்க தம்பி. வருகிறேன் நான்.
(செல்கிறான்)
(மாணிக்கம் உடன் செல்லுதல்)
கபிலன்: (தனக்குத்தானே)
எங்கோ பார்த்த தாடியாய்
உள்ளதே……..
ஆன்மீகம் அறிகிற முகமாய்த்
தெரியவில்லையே..
(திரை)
இருபதாம் காட்சி
(கிராமத்து ஆற்றங்கரை போன்ற அமைப்பு மேடையில். கபிலன், பாரி, மலர்விழி ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்)
கபிலன்:
இன்று நடந்தேறிய
என் அண்ணனுடைய
திருமணத்திற்கு
வந்திருந்த உங்கள்
இருவருக்கும்
என் நன்றிகளை
உரித்தாக்குகிறேன்.
எளியேனின் அழைப்பைப்
பெரிதென மதித்ததற்கு…
எனக்கு வார்த்தைப்
பஞ்சம்..
மலர்விழி:
அடடா
பாரி அண்ணா.
சின்னஞ்சிறு விடயத்திற்கும்
உணர்ச்சி மயமாகிறார்
உங்கள் நண்பர்.
பாரி:
நீ முன்னமே கூறினாயே
இது பற்றி..
திருமகள் எங்கேயம்மா?
மலர்விழி:
அவளும் உமது தங்கையும்
இங்குதான் வருவதாக
உரைத்தனர்.
இன்னமும்
காணோம்….
பாரி:
இதுவரை இல்லற
இன்பங்கள் ஏதும் வேண்டா
என்றிருந்த கபிலனின்
அண்ணன் மண வாழ்வில்
இப்போதாகிலும் காலடி
வைக்கத் தயாரானது
மகிழ்ச்சியைத் தருகிறது.
கபிலன்:
அவரைக் கவர்ந்திழுத்து
இல்லற நெறிக்குக் கொண்டு
வந்தவர் எங்கள் அண்ணியார்தான்!
மலர்விழி:
காதலுக்கு வயதில்லை
என்பதை நிரூபணம் செய்து
காட்டி விட்டாரே அவர்.
கபிலன்:
உங்கள் புதல்வனை
அழைத்து வந்திருக்கலாமே.
விசேடங்கள் குழந்தைகளால்
மேலும் அழகு கொள்கின்றன.
(மேடையில் விளக்குகள் அணைய மீண்டும், ஒளிரும் போது, ஆற்றங்கரையின் இன்னொருபுறம்)
செல்வா:
போதும் போதும் மாணிக்கம்.
வேடமிட்டு வாழ்ந்தது போதும்
என் மனைவியைப் பார்த்தும்
அருகில் செல்ல முடியாமல்…
இது என்ன வாழ்வு?
சுமங்கலியை விதவையாக்க
வேண்டும் என்று அந்த
மனித மிருகம் நினைத்ததுதான்
நடந்து போச்சு.
மாணிக்கம்:
என்ன சொல்கிறாய் நீ?
செல்வா:
என்னைக் கொலை செய்யத்
திட்டம் நிறைவேறாது போனதும்
அந்த வக்கிர மிருகம்
என்னை உயிரோடு வதைத்து
சுமங்கலியாய் இருக்கும் போதே
அவள் விதவைக் கோலத்தில்
உலவ வேண்டும் என்று எண்ணமிட்டது.
அவனுடைய அடியாளிடம்
சிறைப்பட்டிருந்து
அடியேன் தப்பிப் பிழைத்து
ஓடிவந்த போதுதான் உன்னைக்
கண்டேன்.
மாணிக்கம்:
அவனுடைய அடியாட்கள்
நம் வீட்டுத் திருமணத்தையும்
கவனமாய்ப் பார்த்திருப்பார்கள்
சற்றே பொறுத்திரு
உன்னை உன் குடும்பத்துடன் சேர்த்து
இணைப்பது என் கடமை.
மனதைக் கவலையில் ஆழ்த்தி
மனத்தின் சக்தியை இழக்காதே. வா.
(விளக்குகள் அணைக்கப்பட்டு ஒளிரும்போது மேடையில் மீண்டும் பாரி, கபிலன், மலர்விழி ஆகியோர் நின்றவண்ணம் – திருமகளும் சுடர்விழியும் வருதல்)
மலர்விழி:
திருமகளே
உங்கள் காதலின் பெயர்தான்
தெய்வீகக் காதல்
உம்மைக் காணாமல்
உமது காதலர் தவித்த
தவிப்பு இருக்கிறதே.
நாங்கள் பேசும் பேச்சுக்கள்
அவரது செவிகளில்
புகவே இல்லை!
திருமகள்:
கிண்டலிக்காதே மலர்
நான் உங்களுடன் வராததால்
எங்கே என
வினவியிருப்பார்.
கபிலன்:
தமிழ்ப் பெண்கள்
வட இந்தியரின் உடையைச்
சுவீகரித்துக் கொண்டு விட்டார்கள்.
ஆனால், தாவணி என்னும்
சிற்றாடைக்குள்ள வசீகரம்
வேறு எந்த உடையிலும் இல்லை.
என்பதுதான் என் தீர்ப்பு….
சுடர்விழி:
நீர் துணிக்கடைக்காரரும் இல்லை
ஆடை அலங்கார நிபுணரும் இல்லை
நாங்கள் கம்மீஸ் அணிந்தாலோ
சுரிதார் அணிந்தாலோ
உமக்கு வாட்டம் வருவது ஏனோ?
கபிலன்:
தமிழன் நான் என்பதால்
தமிழச்சியின் உடையைப்
பற்றி தார்மீகக் கவலையைத்
தெரிவித்தேன் தவறா?
சுடர்விழி:
வட இந்தியாவிலிருந்து வந்து
கடைதோறும் தொங்கும்
வண்ணப் பொடிப் பைகளை
வைத்திராத ஆண்கள் உண்டா?
நாங்கள் உடையைத்தான்
தேர்ந்தெடுத்தோம்
நீங்கள் தேர்ந்தெடுத்தநோ உடல்
சீரழிவுக்கான
உகந்த வழியை
பாரி:
ஏனட அவளிடம்
வாயைக் கொடுத்துச்
சிக்கலில் சிக்கிக் கொள்கிறாய்?
கபிலன்:
உன்னுடன் பிறந்த ஓவியம்
சொல்வது நிஜம்தான் எனினும்
எனக்கு அந்தப் பழக்கம் இல்லை.
உன் உடையைச் சோதித்தால்
தெரியும் –
உனக்கு அவள் சொல்லும்
பழக்கம் உண்டா இல்லையா என்பது.
திருமகள்:
உண்டா உங்களுக்கு அந்தப்
பழக்கம்
சொல்லுங்கள் உடனே.
பாரி:
சந்தேகம் பெண்களைத்
தொடரும் நிழலா?
அவன் விளையாடுகிறான். நீயும்
நம்பி விடுவதா அவன் சொல்லை!
கபிலன்:
திருமகள் அவர்களே.
அவனுக்குப்
பொடி உண்ணும் பழக்கம்
இல்லாவிடினும்..
(பாரி, கபிலனைப் பேசவிடாமல் அடிக்கச் செல்ல, கபிலன் ஓடுகிறான். பாரி அவனைத் தொடர்ந்து ஓடுகிறான்)
சுடர்விழி:
திருமகளே கவலையைக் கைவிடு.
அண்ணனைப் பிடித்து ஆட்டிய
உடலைக் கெடுக்கும்
பழக்கங்களிலிருந்து அவர்
விடுபட்டுப் பல காலமாயிற்று.
மலர்விழி:
சுடர், பேச்சின் திசையை
மாற்று.
திருமகள்
அதே நினைப்பில்
ஆழ்ந்து போவாள்.
அன்பரசனின் காதல் போராட்டம்
சுபமாய் முடிந்து விடுமா?
சுடர்விழி:
காதலிக்கும் பெற்றோருக்கும்
நடுவே பந்தாடப்பட்டவர் அவர்.
இப்போதுதான் கோதையின்
குணம் புரிந்துள்ளது
அன்பரசனின் பெற்றோருக்கு.
சுபமாய் முடிந்து விடும்
அவர்களது காதல்.
அதன்பின் மணக்கோலம்
காணப் போகிறவள் இந்த
அழகிய நங்கை.
என் திருமணம் பற்றித்தான்
நினைக்க எவருக்கும் இல்லை நேரம்.
சரி முறைக்க வேண்டாம்
தோழி திருமகளே.
ஓடிப்போன ஆடவர் வரமாட்டார்கள்.
இருள் வருமுன் வீடு போய்ச்
சேர்வோம். வாருங்கள்.
(மூவரும் செல்லுதல்)
(திரை)
– தொடரும்…
– காதல் காவியம் (தமிழின் முதல் புதுக்கவிதை நாடகம்), முதற் பதிப்பு: 1998, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.