காதல் காற்சட்டை
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 22, 2024
பார்வையிட்டோர்: 372
(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
யாழ்ப்பாணம் ஒட்டியுள்ள ஒரு பகுதி புறநகர் என்று சொல்லலாம். அதில் இரண்டு பரப்புக்காணி தென்னம் கமுகுகள் மாமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் வளவு. ஒரு வீடு ஒரு மால் ஒரு அடுக்களை இந்த மூன்று வீடுகளும் ஓலைக்குடிசைகளாக இருந்தாலும் புனிதம் உடையவைகளாய் காணப்பட்டன.
விரத காலங்களில் வீடுகளும் திண்ணைகளும் மெழுகப்பட்டிருக்கும் அழகே அலாதியானதுதான். பக்கத்திலுள்ள வீடுகளில் வசிக்கும் சில பெண்கள் கூட மெழுகிய இந்த திண்ணைகளிலே வந்து இருந்துகொண்டு புகழுவார்கள்.
“பத்தினி அக்கையின் வீடுகள், எங்கள் கல்வீடுகளிலும் பார்க்க குளிராகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றன. இது பக்கத்து வீட்டாருடைய பாராட்டுரை.
அந்த வீடுகளிலே பத்தினி என்ற தாயும் பார்வதி என்ற மகளுமே வாழுகின்றனர். பிறந்த காலத்திலே பத்தினி என்ற பெயரைப் பிதாமாதாக்கள் என்ன காரணத்தினால் வைத்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் இப்போது அவள் பத்தினியாகவே காலங்கழித்து வருகின்றாள்.
கலியாணஞ் செய்து இரண்டாண்டுகளுக்குள்ளே பார்வதி பிறந்தாள். பிறந்த சில மாதத்திலே பிதாவும் கண் மூடிவிட்டான். இரண்டொரு வருடங்கள் கழிந்தன. பத்தினியின் உடலழகையும், நற்குணத்தையும் கேள்விப்பட்ட சிலர் அவளை கலியாணஞ் செய்ய விரும்பினார்கள். வாழ்விழந்த உத்தியோகத்தர்களும் வலைவீசினார்கள். பிரமச்சாரிய வாலிபர்களும் அவளை விவாகஞ் செய்ய ஆசைப்பட்டனர். இவர்கள் எல்லோருக்கும் பத்தினியின் பதில் ஒன்றே ஒன்றுதான்.
“அவர் இறந்துபோய்விட்டாலும், என் உள்ளத்தில் இருந்து இறக்கவேயில்லை.”
இதுதான் பத்தினி மாதின் புத்திமொழி!
ஆனாலும் தாய் பத்தினி, ஏற்றுக்கொள்ளாத தத்துவம் மகள் பார்வதியிடம் சற்று விரிவாகவே காணத்தொடங்கிவிட்டது. அவள் படிப்பு ஏற ஏற பாவாடையும் ஏறிக்கொண்டே வந்தது. தாய் துக்கப்படாள். எவ்வளவோ சொல்லியும் மகள் கேட்கவில்லை.
“எத்தனையோ உத்தியோக பெண்பிள்ளைகள் இப்படித்தானே அம்மா உயரமாக சட்டை போடுகிறார்கள். காலத்துக்கேற்ற விதமாய் நானும் நடக்க வேண்டும்” என்றாள். பார்வதி தாய் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
உத்தியோகத்தர்கள் எது செய்தாலும் அது ஒரு முன்மாதிரியாகக் கொள்ளப்பட்டு வருவதைப் பார்வதி மாத்திரமோ, பெருந்தொகையானவர்கள் அப்படித்தானே நம்புகிறார்கள்.
பார்வதி, ஆங்கில எஸ்.எஸ்.ஸி. சோதனையில் இரண்டு மூன்று முறை தவறிப் பின்பு சித்தியடைந்து விட்டாள். அன்று அவள் வீட்டிலே ஒரு சிறு விழா நடந்தது என்று கூறலாம். பார்வதியின் அழகும் வயதும் அவளின் திருமணத்தை நினைவூட்டத் துவங்கிக் கொண்டிருந்தன. சோதனை ‘பாசாகட்டும்’ என்று எண்ணியிருந்த தாய்க்கு மகளின் விவாகம் புதிய பிரச்சினையாயிற்று.
வீடு வளவு, சில ஆயிரம் ரூபா, எஸ்.எஸ்.ஸி. பர்ஸ்தேசதான அழகு இவைகளையெல்லாம் ஒன்று கூட்டிப் பத்தினி அக்கை, மூளையை பல திசைகளிலும் செலுத்தி யோசிக்கத் தொடங்கினாள்.
‘உத்தியோக மாப்பிள்ளையின் கையிலே மகளை ஒப்படைக்கலாம் என்ற ஆசையும் மனதில் ஏற்பட்டதுண்டு, ஆனால் அதுதான் தன்னுடைய முடிந்த முடிவாக அவள் கொள்ளவுமில்லை. சில இடங்களிலே இப்படித் துளாவி விசாரித்த போது இவர்களின் சீதன – ஆசனங்கள் துாரத்திலேயே நின்றபடியால் கலியாணம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
பார்வதியுடன் படித்த பல பெண் பிள்ளைகள் உத்தியோக மாப்பிள்ளைமாரைக் கலியாணம் செய்துகொண்டார்கள். இது பார்வதிக்கு ஒரு தூண்டுதலுமாயிற்று. “நான் காற்சட்டை மாப்பிள்ளையையே கலியாணஞ் செய்வேன். என்று படிக்கிற காலத்திலே சும்மா விளையாட்டாக சகமாணவிகளிடமும் சொல்லிய சத்திய வாக்கு இப்பொழுது அவளது ஆசைக்கு அரணாகவும் நிலைபெற்றுவிட்டது.
சின்னத்தம்பி என்பவன் பத்தினிக்கு மிகவும் தூரமான மருமகன் முறை உள்ளவன். நல்ல குணசாலி, எஸ்.எஸ்.ஸி. சித்தியடைந்தவன். ‘பஸ்’ வண்டியிலே கொண்டக்டர் வேலை செய்பவன். வேறு சிலரைப் போல கொட்டில்களிலே இருந்து பணத்தையும் மதியையும் பாழாக்காத நல்ல வாலிபன். தாய் தந்தையருக்கும் ஒரே மகன்.
மகளுக்கு இவனை மணம் பேசிவந்தாள் பத்தினி. பத்தினி பார்வதி வீடு வளவு எல்லாவற்றையும் சின்னத்தம்பி முன்னமே கொஞ்சம் அறிந்திருந்தவனாதலால் கலியாணத்திற்கு உடன் பட்டான்.
ஆனால் மகள் பார்வதியோ ‘காற்சட்டை மாப்பிள்ளை’ என்ற சுலோகத்தை உச்சரித்தபடி அந்தக் கலியாணத்தை மறுத்து விட்டாள். இது தாய்க்கு பெரிய வேதனையை மூட்டிவிட்டது. ஆயினும், சின்னத்தம்பி மற்றைய வாலிபர்களைப் போல உணர்ச்சி வசப்படுகிற முரடர் வர்க்கத்தை சேர்ந்தவனல்லன்.
“அம்மா, என் விருப்பத்திற்கு மாறாக எவரையும் நான் கலியாணஞ் செய்ய மாட்டேன். ஆனால் எங்கள் குடும்பத்திற்கு எந்தவிதமான வசையும் ஏற்படாமல் கண்ணியமாய் வாழ்வேன்.”
இப்படி உறுதி உரை கூறி வந்தாள் பார்வதி. என்றாலும் தாய்க்கு இந்த உறுதி உரைகள் ஆறுதல் அளிக்குமா? பத்தினி தான் வணங்கும் கோயில்களிலெல்லாம் மகளின் கலியாணத்தைப் பற்றியும் கண்ணீர் வடித்துக்கொண்டே வந்தாள்.
இக்காலத்திலேயே இலங்கை அரசாங்கம் ‘பஸ்’ பிரயாணத்தை தேசிய மயமாக்கியது. யாழ்ப்பாணத்திற் சேவை செய்த சின்னத்தம்பி கொழும்பிலுள்ள தலைமை நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டான். அங்கே அவன் காற்சட்டை அணிய வேண்டிய சந்தர்ப்பமும் உண்டாயிற்று. இந்த விபரங்கள் யாழ்ப்பாணத்திலே பத்தினிக்கும் மகளுக்கும் எட்டிவிட்டன. பார்வதியின் மனதில் ஒரு கேள்விக் குறி தோன்றிவிட்டது. தாய்க்கு மகிழ்ச்சியும் ஏக்கமும் உண்டாயின.
“சின்னத்தம்பியிடம் முகம் கொடுத்து எப்படிக் கேட்கலாம்” என்ற எண்ணம் பத்தினிக்குப் பெருஞ் சுமையாகவே இருந்தது.
வழக்கம் போலவே பிள்ளையார் கோவிலில் வணங்கிப் பிரார்த்திக் கொண்டு நல்ல ஒரு மனிதருக்குத் தபால் அனுப்பிக் கொழும்பிலேயே இக்கலியாணப் பேச்சை ஆரம்பித்தாள் பத்தினி. அங்கிருந்து பதிற்கடிதம் வரும் வரைக்கும் பத்தினியின் மனமானது சுவர் மணிக்கூட்டிலுள்ள ஆடுகுண்டு போல ஊசலாடிக் கொண்டிருந்தது. “சின்னத்தம்பி சம்மதித்து விட்டான்” என்ற பதிலும் வந்துவிட்டது. தாய் பத்தினி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இந்தக் கடிதத்தை மகள் பார்வதியும் பார்த்து ஆனந்தமும் கூச்சமும் அடையலானாள். இதைத் தொடர்ந்து இங்கே சின்னத்தம்பியின் பிதாமாதாவுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஒரு வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணியளவிலே திருமணப் பதிவுக்குரிய முகூர்த்தம் நியமிக்கப்பட்டிருந்தது. பெண் வீட்டிலே சகல ஆயத்தங்களும் நடைபெற்றன. சுற்றத்தவர்கள் சிலர் சூழ்ந்திருக்கின்றனர். விவாகப் பதிவு உத்தியோகத்தரும் வந்து விட்டார்.
மணிக்கூடு ஒன்பது, ஒன்பதே கால், ஒன்பது அரை மணி என்று காட்டிக்கொண்டு போகிறது. மணவாளனோ அல்லது அவர்களின் இனத்தவர்களோ எவரும் அங்கு வரவேயில்லை. கூடியிருந்த சிலர் சந்தேகக் குறியுடன் இரகசியம் பேசவும் தொடங்கிக் கொண்டார்கள். பத்தினியின் கால்கள் நிலை கொள்ளாமல் அங்குமிங்கும் சுற்றியபடி திரிகின்றன. அவளுடைய வாடிய முகமானது படலைப் பக்கம் பார்க்கின்றது. “மாப்பிள்ளை வீட்டார் புறப்பட்டு வந்த வாகனத்தில் ஏதும் தடங்கள் ஏற்பட்டிருக்கலாம்” என்று எண்ணிய பத்தினி சிறிது தேறுதலும் அடைகிறாள்.
மணிக்கூடு பத்தெ கால் மணியை காட்டிற்று. தபாற்காரன் ஒரு பார்சலை விரைவாகக் கொண்டு வந்தான். பார்வதியின் விலாசமே அதிற் குறிக்கப்பட்டிருந்தது. தன்னுடன் படித்த பாடசாலைத் தோழிகள் ஏதும் பரிசுகள் அனுப்பியிருக்கலாம் என்ற ஆசையுடன் பார்சலைப் பிரித்தாள் பார்வதி. என்ன ஆச்சரியம்! அதனுள் ஒரு சோடி புதிய அழகான காற்சட்டை இருந்தது. குண்டூசியால் குத்தப்பட்டிருந்த ஒரு சிறு காகிதத் துண்டில் ‘அன்பளிப்பு’ க. சின்னத்தம்பி என்றும் இருந்தது.
பார்வதி அதை கையில் வைத்தபடி வெகுநேரம் பதுமைபோல நின்றாள்.
அல்வாயூர் மு.செல்லையா
அல்வாயூர் மு. செல்லையா நாடறிந்த கவிஞராவார். நல்ல சிறுகதைகள் பல படைத்துள்ளார். அவற்றில் ஒன்று காதல்காற்சட்டை, வளர்பிறை, வண்டுவிடுதூது என்பன இவரது கவிதை நூல்கள்.
– 26.12.1966
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.