காதல் ஒரு பொய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 23, 2025
பார்வையிட்டோர்: 2,458 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நள்ளிரவு! வானத்தில் வெண்ணிலா பவனி வந்துகொண்டிருந்தது. திறந்து கிடந்த சாளரத்தினூடாக நிலாக்கதிர் அறைமுழுவதும் ஒளிபரப்பி நின்றது. அல்பர்ட் புரண்டு படுத்தான். நெடிய பெருமூச்சொன்றை அவனிதயம் வெளியே தள்ளி அமைதிபெற முயற்சித்தது. முற்றத்திற் படர்ந்துநின்ற கொடிமுல்லையின் நறுமணம் சித்திரைத் தென்றற் காற்றிலே மிதந்து வந்து அவனுடலின் ஒவ்வோர் அணுவையும் உராய்ந்து உணர்வூட்டிச் சென்றது. அல்பர்ட் பைத்தியம் பிடித்தவன் போலானான். நிம்மதியாகத் தூங்கலாமென்றாலோ தூக்கம் வந்தபாடில்லை. விழித்தபடியே படுத்திருப்பதுகூட அவனுக்குச் சிரமமாய் இருந்தது. கண்கள் விழித்துக்கொண்டால் எப்பவோ அவை தூங்கத்தானே செய்யும். ஆனால் அவன் உள்ளமல்லவா விழித்துக்கொண்டிருக்கிறது. ஓயாத எண்ண அலைகள். தணியாத தாப நினைவுகள், கலையாத கற்பனைகள் எல்லாம் அந்த உள்ளத்து விழிப்பில் ஒன்றையொன்று மல்லாடிக்கொண்டிருந்தன. அல்பர்ட் என்ன செய்வான்! சுவர்க்கடிகாரத்தின் ‘டிக் டிக்’ என்ற ஓசையைவிட அவனிதயத்து ஒலி அந்த நள்ளிரவிற் கம்பீரமாக அவன் காதுகளில் விழுந்தது. சாய்வான கதிரையைச் சாளரத்தோடு ஒட்டிப் போட்டுக்கொண்டே ஒரு ‘சிகரெட்’டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான், ஆல்பர்ட். சுருள் சுருளாகப் புகை மிதந்து சென்றது. இதயத்து நினைவு வெள்ளத்தில் அல்பர்ட் ‘மிதந்து’ கொண்டிருந்தான்! 

அல்பர்ட்! அழகான வாலிபன். ஒல்லியான தேகம். சுருண்ட நெடிய கேசம். அகன்ற கண்கள் அவற்றின் கவர்ச்சியே அலாதியானது. பொதுநிறம். நகைச்சுவை குமிழிடும் பேச்சு. இயற்கையிலேயே அவன் கவர்ச்சிப் போதைதரும் வாலிபனாகவே இருந்தான்! பட்டினத்து நாகரிகம் எட்டக் கூடாத தொலைவில் எங்கோ உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தான். பெற்றோர் அவனில் காட்டிய அக்கறை, அன்பு அவனைப் பட்டினத்திற்குக் கொண்டுவந்தது; படிக்கவைத்தது. நாலுபேர் மதிக்கக்ககூடிய அளவு கண்ணியமானவனாக அல்பர்ட்டை உருவாக்கியது. அல்பர்ட்; இப்பொழுது ஒரு ஆசிரியன். சமூகத்திலே ‘மதிக்கப்படும்’ இளைஞர்களில் ஒருவன்! ஆனால் அவன் அந்தரங்க வாழ்க்கை-உள்ளக் குமுறல்-இந்த உலகுக்குத் தெரியாதா? இல்லை! தெரிந்துங்கூடத்தான் ஏதோ ‘நடப்பது நடக்கட்டும்’ என்று வாழாவிருக்கிறதா? 

அல்பர்ட்டுக்குத் தன் சிந்தனையின் போக்கே சிரிப்பைத் தந்திருக்கவேண்டும்! அந்த நள்ளிரவில் வாய்விட்டுச் சிரித்தான், அல்பர்ட். எத்தனை எத்தனையோ ‘உயிர்ப்பிரச்சினை’களைப்பற்றி யெல்லாம் மௌனஞ் சாதிக்கும் உலகம் யாரோ ஒரு அல்பர்ட்டை – அவன் வாழ்வைப்பற்றி ஏன் சிந்திக்கப்போகிறது. சிந்தித்துத்தான் அவனுக்கு என்ன வந்துவிடப் போகிறது! பார்க்கப் போனால் வாழ்வே ஒருவித ‘விரக்தி நாடகந்’தான்! ஒவ்வொரு மனிதரும் வீண் வீரம் பேசி இறுதியில் ஏமாந்துதான் போகிறார்கள். சூன்யத்தில் சூன்யமான வெறும் நிலையிலே தான் மனிதன் கடைசிக் கவலையும் விட்டொழிகிறது. அதுவரை…. இந்த உள்ளத்து விழிப்பு – தவிப்பு தடுக்க முடியாதது! ஆம்! தடுக்கமுடியாததுதான். இல்லாவிட்டால் ஏன் என் உள்ளம் சதா அவளை நினைத்துக் கொண்டிருக்கிறது? அல்பர்ட் சிந்தனைத் தீயில் நெளியும் புழுவாகக் கருகிக்கொண்டிருந்தான்! 

காதல் நிலையானது. தெய்வத்தன்மை வாய்ந்தது என்று புகழ்ந்து பேசுகிறார்கள். உண்மைக் காதலில் தவறுக்கு இடமேயில்லை என்கிறார்கள். இதயத்தோடு இதயமும், மூச்சோடு மூச்சும் ஒன்றாகி நிற்பதே காதல் என்கிறார்கள். ஆனால் அந்தக் காதல் அடியோடு பொய்த்துப்போன பிறகு செத்தால் இகழ்கிறார்கள். கோழை என்கிறார்கள்! வாழ்ந்தால் கேலி செய்கிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள்! எல்லாமே பொய்தான். காதலும் ஒரு பொய்! கண்கட்டி வித்தை. அசகாய சூரத்தனமான ஏமாற்று வித்தை! இல்லாவிட்டால் என் திரேசா-என் காதலி திரேசா என்னைக் கைவிட்டிருப்பாளா…? அல்பர்ட்டின் இதயம் விம்மித் தணிந்தது. திரேசாவை நினைக்க அவனிதயமே வெடித்து விடும்போலிருந்தது. ஒரு காலத்தில் திரேசா அவன் இதயத்து ராணியாய்-இன்பக்கேணியாய் அணையாத ஜோதியாய், அன்பப் பெடையாய் இருந்தாள். ஆனால் இன்று…? அல்பர்ட்டின் இதயம் எரிமலையாகிக் கனன்று வேதனைப் பெருமூச்சுக்களை வெளியே தள்ளிக்கொண்டிருந்தது. 

திரேசா! அவளும் ஒரு ஆசிரியைதான். அல்பர்ட் ஆசிரியனாகி எங்கே கடமை செய்ய முதலில் புகுந்தானோ, அந்த இடத்தில் முகிழ்த்த உறவு திரேசாவை அவன் காதலியாக்கியது. திரேசா ஒரு அப்ஸரஸ் அல்ல. சாதாரணப் பெண். அழகின் கடைசிப்படியல்ல. ஏதோ நடுத்தரம். என்னவோ ஒரு இனந்தெரியாத விருப்பம் அவளையும்-அவனையும் ஒன்று சேர்த்தது. அதற்கு அவர்களிட்ட பெயர்தான் ‘காதல்’! என்னவோ காதலின் பிறப்பெல்லாம் இப்படித்தான் ஆரம்பமாகிறது! தொடர்ந்து பல நாள்கள் ஒன்று, இரண்டு என இரண்டு ஆண்டுகள் வரை அவர்கள் காதல் நிலைத்திருந்தது. இந்தக்கால இடைவெளிக்குள் திரேசா-அல்பர்ட் அடைந்த அனுபவங்கள்! அல்பர்ட் இப்பொழுது மனம்புழுங்குவதில் தவறலில்லையல்லவா ? தனிமைதரும் போதையில், வெண்ணிலவு இரவிலே அவர்களிருவரும் விளையாடிய விளையாட்டுக்கள்…! ஒருவருக்கொருவர் பரிமாறிய அன்பு வார்த்தைகள்- ‘இச் இச்’ முத்தங்கள், அணைப்புக்கள், கொம்பரில் படரும் கொடிமுல்லை போல அவனிலே அவள் படர்ந்து நின்ற காட்சிகள்… அவன் உள்ளப்படுதாவில் அழியாத சித்திரங்களாகத் தீட்டப்பட்டுவிட்டன. அஜந்தாவில் எல்லோராவில் சிகிரியாவில் தான் மனித இனத்தில் மகோன்னதமான கலைச்சித்திரங்கள் உண்டென்றால் அவையெல்லாவற்றிலும் மேலானது திரேசா என்ற காதல் தெய்வம் தன் இதயத் திரையில் எழுதிய ஓவியங்கள் என்பது அல்பர்ட்டின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதனால் தான் எந்தத் திரேசா தன் வாழ்வின் ஒளி என்று நம்பினானோ அந்த ஒளி அந்தகாரத்தையே அவனுக்குப் பரிசாக அளித்தபோதும் அல்பர்ட் அவளை மறக்கமுடியாமல் மனமறுகித் தேய்கிறான். அவனுக்கும்-திரேசாவுக்குமிடையே நிலவிய ‘காதல்’ கயிறு அறுந்துபட்டபோது மனிதகுலத்தின் உயர்ந்த பண்புகளைப்பற்றிய பெருத்த சந்தேகத்தையே அல்பர்ட்டில் சிருட்டித்துவிட்டது! காதல்-இலட்சியம்-வாழ்க்கை அத்தனையும் பொய்-ஏமாற்று-சதி என அவன் நம்ப எத்தனித்தான். ஏனென்றால் திரேசாவின் காதல் அவனை அந்த அளவுக்குக் கொண்டுவிட்டிருந்தது. தெய்வீகத் தன்மை வாய்ந்த, தவறுக்கு இடமளியாத காதல் என அவன் நம்பியிருந்த தன் உண்மைச் சொரூபத்தைக் கண்டபோது அவன் பேசுஞ் சக்தியையே இழந்துவிட்டான்! ஏன்…? 

திரேசா! மாற்றான் ஒருவனின் மனைவியாகப் போகிறாள். இதயம் நிறைந்த வெறுப்புடன், பெற்றோரின் பிடிவாதத்திற்காக அல்ல, முழுமனதுடன் தானாகவே அந்தப் புதிய தளையை ஏற்படுத்தியப் பெற்றோரின் ஆதரவுடன் அதனை உறுதிப்படுத்தி விட்டாள்! காரணம்…. ? வரப்போகும் மாப்பிள்ளை ஒரு டாக்டர்…! ஏழை அல்பர்ட் ஒரு ஆசிரியன்-வெறும் தமிழ் ஆசிரியன். ‘உயர்ந்த பண்புகள் பொருந்திய தெய்வீகத் காதல்!’ அது இப்பொழுது எங்கே? பொய்யாய்ப் பழங்கதையாய் கானல் நீராய் ஒழிந்துவிட்டது. ஆனால் திரேசாவும்-அல்பர்ட்டும் காதலராய்க் கணவன்-மனைவியைப் போல இரண்டு வருடங்கள் வாழ்ந்தார்களே அது பொய்யா ? இதயத்தோடு இதயமும் உயிர்ப்போடு உயிர்ப்பும் ஒன்றிக் கிடந்தார்களே அது பொய்யா ? அந்த இரண்டு வருடக்க காதலிலும் ‘ஒழுக்கம்’ தப்பிப் பிழைத்துவிட்டதா? ஒழுக்கம் தவறாத காதலை விரும்பும் பெற்றோர் திரேசா-டாக்டர் திருமணத்தை ஆதரிக்கலாமா? 

அல்பர்ட்டின் இதயத்தின் அடித்தளத்திலிருந்து பீறிட்டுப் பாய்ந்த கேள்விக் கணைகள் எல்லாப் பக்கங்களிலுஞ் சிதறிச் சென்றன. பதில் இல்லை…! அப்படியானால் காதல் எங்கே ?-அது எங்கேயும் இல்லை! அல்பர்ட்டின் உதடுகள் ‘இரககியம்’ பேசின. நீண்ட நேர விழிப்பின் காரணமாகக் கண்கள் எரிய ஆரம்பித்தன. எழுந்துசென்று படுக்கையில் ‘பொத்’தென்று விழுந்தான். சிறிது நேரத்தில் அவன் எழுப்பிய ‘கர், புர்’ரென்ற குறட்டைச் சப்தம் சூழ்நிலையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு தனியாட்சி புரிய ஆரம்பித்தது. பாவம்! ஏழை அல்பர்ட் நித்திராதேவியின் தன்னலமில்லாக் காதல் அணைப்பின் இறுக்கமான தழுவலில் இந்த உலகையே மறந்து துயின்று கொண்டிருந்தான்! 

– சமூகத்தொண்டன், கார்த்திகை 1959. 

– தெய்வ மகன் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).

நாவேந்தன் நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *