கதையாசிரியர்: ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 3, 2025
பார்வையிட்டோர்: 12,321 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாலிப வனப்பில் ராகவன் அழகின் சிகரமாகத் திகழ்ந்தான். அவனைச் சுற்றி வதந்திகள் மொய்த்துக் கொண்டிருந்தன. ராகவன்…….அவனது அத்தை மகள் பார்வதியைக் காதலிக்கின்றான் என்று தோட்டமே குசுகுசுத்தது. 

மாணிக்கம் இந்த விசயத்தை முளையிலேயே அறிந்தவன். மாணிக்கம் வாழும் இந்தக் காலத்தில் தோட்டங்களில் காதல் என்பது ஒரு பாரதூரமான விசயம்……. ஒரு தீட்டு……! ஒரு கெட்ட விவகாரம் என்றெல்லாம் தடை செய்யப்பட்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலம். இந்தக் கட்டுப்பாட்டை மீறி எந்த இளைஞனும் ‘காதல் கீதல்’ என்று விவகாரம் நடத்தினால் பிறகு காரியம் தொலைந்தது! அந்த முழுத்தோட்டமுமே பஞ்சாயத்து விசாரணைக்கு கட்டுப்பட வேண்டி வரும். 

பஞ்சாயத்துக்காரர்கள் காதல் விவகாரத்தை வேரோடு அழித்துவிடுவதில் இம்மியளவும், பின் நின்றதில்லை. 

இந்தக் கட்டுப்பாட்டையும் கடுமையான தண்டனையையும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளாது மாட்டிக் கொண்டவர்கள் மட்டுமல்ல……. அவர்களைச் சேர்ந்த முழுக் குடும்பங்களுமே பஞ்சாயத்து விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டும். 

இந்தச் சம்பிரதாயப் போக்குக்கு ஓர் உதாரணம்தான் வீரக்குமரன் மகன் ராகவன் பார்வதி காதல் ……. 

ராகவன் இருபத்தொரு வயது நிரம்பிய கட்டிளங்காளை. அவன் காதல் மோகங் கொண்டு வலைவீசியதெல்லாம் அவனது சொந்த அத்தை மகள் மேல்தான்……. இந்தக் காதல் கல்யாணத்தில் முடியும் ஒரு சுபகாரியம் என்று மாணிக்கம் மட்டுமல்ல முழு தோட்ட சனங்களுமே எதிர் பார்த்திருந்தனர். 

ராகவனின் பெற்றோர்களும் முழு நம்பிக்கையோடு இருந்தார்கள். என்றைக்காவது ஒரு நாளு பார்வதி நம்ம வூட்டுக்குத்தான் வருவா……. எங்க பேரப்புள்ளய பெத்துத் தருவா… 

ஆனால் ……. பார்வதியின் ‘அப்பங்காரன்’ சின்னப்பழனியின் யோசனையெல்லாம் மாறாக இருந்தது. ரொம்பவும் ரகசியமாகப் பக்கத்துத் தோட்டத்தில் ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தான். 

பக்கத்துத் தோட்டத்தில் ஒரு இளவட்டம் இரண்டாவது கணக்கப்பிள்ளையாகத் தொழில் செய்கின்றான். அந்த இளைஞனை ஒரு நாள் அந்தி நேரம் சின்னப் பழனி வீட்டுக்கு அழைத்திருந்தான். இந்த நோக்கம் ராகவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் விளங்க வேண்டும். பார்வதிக்குக் கணக்கப்பிள்ளையை ‘பேசுவதாக’ அவர்கள் புரிந்துக் கொண்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சின்னப்பழனி எதிர்பார்த்தான். 


அது ஒரு விதிவசமான மாலை நேரம். மாணிக்கம் ராகவனை சந்திக்க நேர்ந்தது. அவன் சாடையாகக் கதையை விட்டான்……. ‘தம்பீ! ராகவா! இந்தப்பக்கம் ஒரு வெள்ளைக்காள மேயுது…… ஒன் கன்னி பசு கவனம்……..!’ என்றான்……. 

ராகவன் ஒரே யோசனையில் வீட்டுக்கு வந்தான்…… அங்கே அம்மாவும் அப்பாவும் குசுகுசுத்துக் கொண்டிருந்தனர். ‘ராகவா! அந்தப்பயல் வூட்டுக்குள்ள இன்னொரு நாளைக்கு காலடி வைக்க வானாம்! ஜாக்ரத!’ வீரக்குமரன் ராகவனை எச்சரித்தான். அப்படி நீங்க சொல்ல ஏலாது…….! எம்மவன் எங்க அண்ணன் வூட்டுக்கு போவ உரும் இருக்கு!’ ராகவனின் தாய்க்காரி உரிமை பிரச்சினையைக் கிளப்பினாள். 

‘வாய மூடு மனுசி! ஒங்கண்ணன் ஒரு கழுத்தருத்தப் பயல்! என்னைக்கு அவன் அப்பன் வீட்டுல பொண்ணெடுத்தேனோ! அன்னையிலேயிருந்து நானு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன்’ 

‘நீங்க ரெண்டுப் பேரும் சண்டப் போட்டுக்காதீங்க……. நான் அந்தப் பக்கம் போக மாட்டேன்’ என்ற ராகவன் மாணிக்கத்தின் வீட்டுக்குப் போனான். மாணிக்கம் அவனுக்கொரு வழிகாட்டி! 

மறுநாள் விடிந்தது. கிழக்குச் சிரித்துக் கொண்டிருந்தது. ராகவனைக் காணவில்லை…….! தாய்க்காரி ‘குய்யோ’ முறையோ என்று கதறினாள். நெருப்பில் வீழ்ந்தவளாய்த் துடி துடித்தாள். 

‘ஐயோ ராகவா! எஞ்சாமி ராகவா’ அவள் கூக் குரலிட்டாள். 

‘அவன் தொலைஞ்சிப் போனா மயிராச்சி பொம்பளை……!’ என்றான் வீரக்குமரன். 

‘ஐயோ கடவுளே! எம் மவன கெடுத்தவன் தலையில இடி வுழுக…….! அவன் குட்டிச்சுவரா போவ…….! அவன் கொள்ளையில போவ…….!’ 

‘அடிப்பாவி! வாசாப்பு உடாதடி!’ பெண்டாட்டியின் மேல் வீரக்குமரன் பாய்ந்தான். 

இப்பொழுதுதான் பார்வதியும் காணாமல் போன விசயம் சின்னப்பழனி வீட்டுக்கும் எட்டியது. அவர்கள் குழம்பிப் போனார்கள். எல்லோருக்குமே இப்பொழுதுதான் விசயம் விளங்கியது……. பார்வதியும் ராகவனும் ஓடிப் போய்விட்டார்கள்…….!’ என்று. 

மாணிக்கம் இஸ்தோப்பில் ஜாலியாக உட்கார்ந்து பாட்டு பாடிக் கொண்டிருந்தான். 

வாசமுள்ள சந்தனப்பொட்டு பொன்னம்மா?-அடி
வாசமுள்ள சந்தனப்பொட்டு பொன்னம்மா 
அந்த வழிப் பாதையும் 
பொதுப் பாதைதான் பொன்னம்மா! 
நீ போக வேணும் 
பயணமுன்னா பொன்னம்மா! 
போயி ஏற வேணும் ரயிலு வண்டி 
பொன்னம்மா……….! 

அந்த வெற்றிப் பாடலில் ஒரு விசயம் இருப்பதை அவன் பொடி வைத்து மெட்டெடுத்து பாடினான். அந்த பாடல் தோட்டத்து எல்லா இளைஞர்களையும் சொக்கி இழுத்தது……. 

சந்து, பொந்து,மூலை, முடுக்கெல்லாம் ராகவன் பார்வதி பேச்சுத்தான். 

ராகவனும் பார்வதியும் ஓடிப்போனதைப் பற்றி பேசினார்கள். ஓடிப்போனதற்கு என்ன காரணம் என்பதை பற்றியும் பேசினார்கள். 

பார்வதி வீட்டிலும் ராகவன் வீட்டிலும் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. 

சின்னப்பழனி, கையில் பளபளக்கும் கவ்வாத்துக் கத்தியோடு லயத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்தான். அவன் முகத்தில் கொலை வெறி தாண்டவம் ஆடியது. 

மாணிக்கம் இஸ்தோப்புத் திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு திரும்பத் திரும்ப அதே பாடலைப் பாடிக்கொண்டிருந்தான். அந்த வீரப்பாடல் இனிமையாக போய்க் கொண்டிருந்தது. மாணிக்கத்தின் வாசலில் சின்னப்பழனி போய்க்கொணடிருந்தான். 

பாட்டை நிறுத்திய மாணிக்கம் ‘ஓய் கங்காணி மச்சான்…! தூக்கு மேடைக்கு போகாத’ என்றான். 

‘பேசாத ஓய்…….! நான் பைத்தியம் புடிச்சிப்போயிருக்கேன்……’

‘ஆமா ஓய்! நீ கொஞ்ச நாளா பைத்தியம் புடிச்சிபோயிதான் இருக்கே! ஒனக்கு ஒன்னு சொல்லுறேன் கேளு……. பேசாம நேரா பெரிய கங்காணி) நம்ம பெரியாளுக்கிட்டப் போ (பெரியாளு தோட்டத்துல பஞ்சாயம் இருக்குது…… நீ…… நல்லா நெனைச்சுக்கோ……… ஒம்மவ என்னா காரியம் செஞ்சிருக்கானு! நீ நம்ம தோட்டத்துக்கு அவமானத்த கொண்டு வந்திருக்கே! இப்படியெல்லாம் செஞ்சுப்புட்டு இப்போ கத்திய தூக்கிக் கிட்டு கூத்தாடுறே!’ மாணிக்கம் சின்னப்பழனியை பயமுறுத்துவதுபோல் பேசினான். 

சின்னப்பழனி குறுகிப் போனான்….. கவ்வாத்துக் கத்தி கை நழுவியது…..

தலை குனிந்தவனாய்ப் பெரியங்கங்காணியின் வீட்டுக்குப் புறப்பட்டான். 

தலையைக் கவிழ்த்துக் கொண்டே பெரியங்கங்காணியிடம் நடந்த விசயத்தைக் கூறிப் புலம்பினான். 

‘ஒன் மகளையும் கூட்டிக்கிட்டு வா…….!’ என்று பெரியங்கங்காணி கட்டளையிட்டார். 

சின்னபழனி கங்காணியை சந்தித்துவிட்டுப் போன பிறகு……. ராகவனின் தகப்பன் வீரகுமரனும் அவன் பெஞ்சாதியும் கங்காணியிடம் வந்தார்கள். 

‘நீ ரெண்டு பேரும் போயி……. மகளையும் மருமகனையும் கூட்டிக்கிட்டு வா!’ என்றார் கங்காணி. 

அவர்கள் பயத்துடன் வீடு திரும்பினார்கள். 

பனி படர்ந்த இரவு முடிந்து வெது வெதுப்பான சூரிய கதிர் புலர்ந்தது……. 

நல்ல வெய்யில் நல்ல சூடு….. நல்ல பொழுது…… 

அந்தி நேரமும் வந்தது……. 

மாணிக்கத்துக்கும் பொன் மாலைப் பொழுது அனுதினமும் வந்து போகும்…….! 

நாட்டுப் பக்கம் போய் (நாடு – கிராமம்) நன்றாகக் கள்ளு குடித்துவிட்டு வந்தான். வாய் நிறையப் பாடல் வழிந்தது…….! 

போன மச்சான் திரும்பி வந்தான்……. 
பூ மணத்தோட……. அப்படி 
போன மச்சான் திரும்பி வந்தான்
பூ மணத்தோட!……. 

அவன் மிக ஆணவத்தோடு இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டு வந்தான். படிக்கட்டுகளை இரண்டாய் மூன்றாய்த் தாண்டி……. பற்களைக் கொட்டிக் கொள்ளாமல் பெரியாளு வீட்டு வாசலில் போய் நின்றான். 

‘என்னடா மாணிக்கம்?’ கங்காணி நகைப்போடு கேட்டார்.

‘அப்பு அவுஸல கொண்டாந்துட்டேன்! எங்க அப்பூ!’

‘என்னத்தடா கொண்டாந்திருக்கே? 

‘அப்பூ…….! அவுஸ நாட்டுப் பக்கம் செட்டித் தோட்டத்துல இருந்தாஹ……. இன்னைக்கு ராத்திரிக்கு வர்றாஹ அப்பூ……’ 

‘நீ பெரிய பிசாசுன்னு எனக்குத் தெரியுண்டா’ 

‘பஞ்சாயத்த கூட்டுன்னா என்னாங்க அப்பு? 

‘அவசரப்படாதே! மொதலாவது வந்து சேரட்டும்!’ 

மாணிக்கம் பெருமிதத்தோடு வீட்டுக்குத் திரும்பினான். இஸ்தோப்பில் வந்து உட்கார்ந்தான். இனி நடக்கப் போகும் விசயங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

இரவு ஏழு மணி இருக்கும்…….. 

ராகவன் முக்காடு போட்டுக் கொண்டு பதுங்கிப் பதுங்கி படியில் இறங்கி வந்தான். வந்தவன் மாணிக்கத்தின் காலில் விழுந்து வணங்கினான். 

‘வாவா! தம்பீ! இவ்வளவு நாளா…..எனக்கே தெரியாமே எங்க போயி இருந்த…….? எப்படி சௌக்கியம்? பின்னால் திரும்பி,ஏய்…….! யாரு வந்திருக்கானு…… பாரு!’ என்று மனைவியிடம் பெருமைப் பட்டுக் கொண்டான். ‘நெறைய பாலு ஊத்தி’ சீனிபோட்டு தம்பிக்கு ‘திக்கா’ தேத்தண்ணி கொண்டு வா…….!’ என்று அமர்க்களப்பட்டான். 

‘ராகு! நீ ஒக்காந்து தேத்தண்ணிய குடி! ஒன் மாமன்கிட்ட ஒரு வார்த்த சொல்லிப்புட்டு ஒரே ஓட்டத்துல வந்துர்றேன்!’ என்று எழும்பி வாசல் படியைத் தாண்டு முன்னே……. சின்னப்பழனி ஓடிவந்தான். ஓய்…… மச்சி! ‘ஒம் மருமக வந்துட்டா ஓய்!’சின்னப்பழனி மகிழ்ச்சியோடு கூவினான். 

‘வெரி குட்…….! இனி பஞ்சாயத்த கூட்ட வேண்டியதுதான்……. நீ தோட்டத்த கேவலப்படுத்திட்டே! எல்லாரையும் அவமானப்படுத்திட்டே!’ 

‘ஐயோ மச்சான் மாணிக்கம் நடந்தது நடந்திருச்சி’ என் முட்டாள் தனத்துல ரொம்ப கஸ்டப்பட்டுப் போனேன்……!’ 

‘அடிப்போடீ! அதெல்லாம் முடியாது……! இப்போ…..ஒன் மடத்தனத்துக்கு நீ தண்டன வாங்கித்தான் ஆகணும்! அந்த எளிய சொத்து…….ஒம்மவ……. இந்த பாவி ராகவனுக்குத்தான் சொந்தமானது. இவுஹ ரெண்டுப் பேரும் கலியாணங் கட்டிக்க போறாஹன்னு ஊருக்கே தெரியும். அதுக்குள்ளே இவன் ஏன் அவள கூட்டிக்கிட்டு ஓட வேண்டிய நெலம வந்திச்சு…….?’ ‘இப்ப நீ எதையும் மழுப்பாதே! நீ பெரிய பெரிய ஆளுகளோட சகவாசம் கொண்டவரு! ஒம்மக சக்கர கட்டிக்கு இந்த ஏழப் பயல் பொருத்தமில்ல! இல்லீயா?…’ மாணிக்கம் சின்னப்பழனியைச் சொற்களால் நையப்புடைத்துக் கொண்டிருந்தான். 

‘ஐயோ போதும்….. மச்சி……! இப்ப அவுங்களுக்கு கல்யாணத்த கட்டி வைப்போம். அட……. வா ஓய்…….! எந்தங்கச்சிய பாத்திட்டு வருவோம்!’ சின்னப்பழனி மாணிக்கத்திடம் ‘சரண்டராகி’ அவசரப்பட்டான். 

‘ஓ…அப்படியா சங்கதி! வாடீ வழிக்கு…….! இப்ப ஊசிப்போன சோத்துல ஒய்யாரம் காட்டப்போற …….! இனி பஞ்சாயந்தான் தீர்மானிக்கனும்! பஞ்சாயத்துல ஆயிரந்தடவ அவுஹ ரெண்டு பேரு காலுல்ல நீ வுழந்து வுழந்து எழும்பணும்……. நீ இப்ப கருப்பு கோட்டு கொடையோட நிக்குற …… ஒனக்கு கணக்குப்புள்ள மருமகனா கேக்குது…….? நீ சகோதரங்களோடு சேர்ந்து பொறக்கல்லீயா? சொல்லு ஓய்? இப்ப எங்க……. இந்த பயல கூட்டிக் கிட்டு ஓடிப்போன ஒன் சக்கரக்கட்டி…….? 

‘வூட்ல இருக்கா……..!’ 

‘நல்லா இருக்கு மச்சான் ஒன் கத! ரொம்ப நல்லா இருக்கு!’ இப்ப ஒன் மருமகன ஒன் சக்கரக்கட்டிக்கிட்ட கூட்டிக்கிட்டுப்போ! தம்பி ராகவா! வா! வா…….! இனிமே இங்க யாரு வாடையும் என் வூட்ல வீசக்கூடாது……. போ! போ……. ஒம் மாமனோட போ…….! 

‘மறுப்பேச்சு இல்லாம’ சின்னப்பழனி மருமகன் ராகவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான். 


ஒரு வாரத்துக்குப் பின்னர், மாணிக்கம் சின்னப்பழனியோடு பெரியங்கங்காணியிடம் போய் நின்றான். 

‘ஐயாவு! மகளும் மருமகனும் திரும்பி வந்துட்டாங்க…….? வார்த்தை தடுமாறப் பேசினான் சின்னப்பழனி. 

‘ஆமா! பழனி! இப்ப என்ன வேணும்?’ கங்காணி பழனியிடம் ராஜ பார்வையை உதிர்த்தார்.’ 

‘பஞ்சாயம் அப்பு…….?’ மாணிக்கம் குறுக்கிட்டான். 

‘ஐயோ சாமி…….எம்மக ராகவனுக்குத்தான் வாக்கப்பட்டவ. பழனி கூனிக் குறுகிக் கெஞ்சினான். 

‘அப்ப ஏன் தோட்டத்தவுட்டு ரெண்டு பேரும் ஒடிப் போனாங்க……..?’ கங்காணி கேட்டார். 

‘அப்பூ! பழனி மக…….. கணக்கப்புள்ளைய விரும்புலீங்க……. அப்பு…….!’ மீண்டும் மாணிக்கம் குறுக்கிட்டான். 

‘இப்ப…….எம் மகளும்……. மருமகனும் புருஷன் பொண்டாட்டியா ஆகிட்டாங்க…….. ஐயா……’பழனி மீண்டும் வளைந்தான். 

‘அப்ப பொண்ணு கழுத்துல தாலிய காட்டு மச்சான்? மாணிக்கம் திரும்பவும் குறுக்கிட்டான். 

‘மாணிக்கம் கேட்டது சரி!’ கங்காணி தொடர்ந்தார். ‘எவனும் எவளோட ஓடிப்போய் புருசன் பொண்டாட்டியா திரும்பி வரலாம்…… இனிமே இந்த மாதிரி தொந்தரவுக்கெல்லாம் முடிவு கட்டியே ஆகவேணும்’ கங்காணி கடிந்து பேசினார். 

‘நீங்கதான் எங்க தகப்பன…….! எம்மகளுக்கு தாலி செய்ய தர்மம் குடுக்கணும்!’ 

“ஆமாங்க அப்பூ…… சின்னஞ்சிறுசுக மொறையோட இருக்கணும்……..!’ மாணிக்கம் நியாயப்படுத்தினான். 

‘மக…….! பார்வதி ! தம்பி! ரெண்டு பேரும் ஐயா கால்ல வுழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கங்க!’பழனி இருவரையும் கூப்பிட்டான். வேலிக்குப் பின்னால் நின்ற கூட்டத்திலிருந்து இரண்டு உருவங்கள் முக்காடு போட்டுக் கொண்டு வந்து கங்காணி முன்னால் நின்றன. 

‘வாங்க……. வாங்க….. சிட்டுகளா! சக்கர கட்டிகளா…….! வந்து அப்பூ கால்ல வுழுந்து தாலி தர்மம் கேளுங்கள……..!’ மாணிக்கம் முழங்கினான். 

‘என் கால்ல வுழ வேண்டிய அவசியமில்ல! மூட ஜன்மங்களா! ஒங்க ஒங்க லயத்துக்குப் போய்ச் சேருங்க! பஞ்சாயத்த லேசுல வுடமாட்டேன்! இந்த தோட்டத்துல எனக்கு ஒழுங்கு அவசியம்……. நான் சொல்றது புரியுதா பழனி? 

‘ஆமாங்க சாமீ! எங்க தாத்தாவும் ஒங்க அப்பாக்கிட்ட கடனாளாத்தான் (கடன் ஆள்……. Indentured labourer) வந்தாரு……. நல்ல வார்த்த சொல்லி அனுப்புங்க ஐயாவு! எங்க குடும்பம் ஒரு நாளும் பஞ்சாயத்துக்கு வந்தது கெடையாது சாமீ’ 

‘நல்லது சின்னப்பழனி! எப்ப கல்யாணத்த வச்சிருக்க…….?’ 

‘அடுத்த மாசங்க ஐயாவு?’ 

‘இப்ப நீ போகலாம் சின்னப் பழனி!’ 

‘டேய் மாணிக்கம்! அவுங்கள கூட்டிக்கிட்டு போ!’ 

‘அப்பூ!’ 

‘நான் சொல்றேன்…….! அவுங்கள அனுப்பு!’ இடிபோல் கர்ஜித்தார் கங்காணி. 

‘ஆகட்டும் அப்பூ!’ 

கூட்டம் கலைந்தது……. 

நன்றாக இருட்டிவிட்டது. 

மாணிக்கம் ஒரு பெரிய டோர்ச்சும் கையுமாக அந்தக் கூட்டத்துக்கு தலைமை கொடுத்து பெரு மகிழ்ச்சியோடு நடந்தான். அவனுக்கு இந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில் திரும்பவும் பாட்டு வந்தது. பாடிக் கொண்டே சென்றான். 

போன மச்சான் திரும்பி வந்தான் ……. 
பூ மணத்தோட…….! அப்படி 
போன மச்சான் திரும்பி வந்தான்
கோவணத்தோட!

– ஆங்கில தொகுதி: Manikkam fosters love, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.

– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *