காதலி…. வா..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 16, 2020
பார்வையிட்டோர்: 11,657 
 
 

அலுவலகம் விட்டு இறங்கிய சுமதி எதிரில் அமர்ந்திருந்த ராஜூவைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு பாதை மாறி நடந்தாள்.

ராஜு விடவில்லை. ஓட்டமும் நடையுமாக அவளைத் தொடர்ந்தான்.

“சு….மதி.. ! “அருகில் சென்றதும் அழைத்தான்.

அவள் பதில் சொல்லாமல் நடையை எட்டிப் போட்டாள். வேகத்தை அதிகப்படுத்தினாள்.

இவன் அவளை வேகமாக நடந்து முந்தி… வழியை மறித்து…

“சுமதி ! நான் உன்கிட்ட தனியா பேசனும்…”சொன்னான்.

“விருப்பமில்லே. வழியை விடுங்க…”

“இரக்கமில்லாம பேசாதே சுமதி. நான் சொல்றதைக் கேட்டபிறகு அப்புறம் உன் விருப்பப்படி நட. “எதிரே இரு கைகளையும் விரித்தான்.

சாலையில்…..நடக்கும் ஆண்கள், பெண்கள் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

சுமதிக்கு ஒரு மாதிரியாய் தர்மசங்கடமாக இருந்தது.

‘ பணிந்து போய் அவன் சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை.’ – நின்றாள்.

“அப்படி ஒதுக்குப்புறமாய்ப் போய் பேசலாம்…”கை நீட்டி இடத்தைக் காட்டினான்.

மறு பேச்சு பேசாமல் அந்த இடத்தை நோக்கி நடந்தாள்.

மரத்தடியில் உள்ள சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள்.

“உன் முடிவை மாத்திக்கனும் சுமதி ! “சுற்றி வளைக்காமல் நேரடியாகவே அவன் விசயத்திற்கு வந்தான்.

“மன்னிக்கனும்.. ! “மறுத்தாள்.

“மன்னிக்கனும்ன்னு ஒரே வார்த்தையில் ஒதுக்கிவிட்டுப் போறது நல்லதில்லே சுமதி. நீ இப்படி மனசு மாறினதைப் பார்த்தா நீ உண்மையா காதலிக்கலைன்னு தோணுது !”

“அ… அப்படி இல்லே….”வாயைத் திறந்தாள்.

“அப்படித்தான். ! உண்மையா காதலிச்சிருந்தால் அதை மறக்க முடியாது. சுலபமா முறிக்க முடியாது. அம்மா, அப்பா, தற்கொலை செய்துக்கிறேன் என்கிற பயமுறுத்தல், மிரட்டல் எதுவும் செல்லுபடியாகாது. ! “‘

“எதிர்த்து நின்னேன். முடியல..”சுமதி சட்டென்று கலங்கினாள். கமறினாள்.

“பொய் !”

“இல்லே.! நிஜமாவே எதிர்த்து நின்னு போராடினேன். உன் காதலை நாங்க ஏத்துக்க தயார். ஆனா கூடப் பொறந்த மூணு பொண்ணுங்க வாழ்க்கைப் பாத்திச்சுதுன்னா எங்களால தாங்க முடியாது. எல்லோரும் செத்துப் போறதைத் தவிர வேற வழி இல்லேன்னு பெத்தவங்க கெஞ்சுறாங்க. மனசு கல்லு இல்லே ராஜு.”

“மனசு கல்லு இல்லேதான். ஒத்துக்கிறேன்.! அதுக்காக ஒரேயடியா காதலை முறிக்கக் கூடாது. அதுக்கு காதலிச்சிருக்கவே கூடாது.”

“தப்புப்பண்ணிட்டேன் ராஜீ .”

“உன் வருத்தம் உடைஞ்சி போன மனசுக்கு ஒத்தடம் கொடுக்காது சுமதி.”

“அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றீங்க…? “பரிதாபமாகப் பார்த்தாள்.

“சுமதி ! சமூகம் எவ்வளவோ மாறிப்போச்சு. காதல் குற்றமில்லே. கை தட்டி வரவேற்குது. ஆனா.. பெத்தவங்க மறுப்புக் காட்டுறாங்க. ஏன்…?

பொண்ணு தப்பானவனைக் காதலிச்சு வாழ்க்கையில ஏமாந்து சீரழிந்து போய்விடுவாளோ என்கிற பயம்.

காரணம்….? அவுங்களுக்குத் தன் பெண்ணை மட்டுமே தெரியும். அவள் விரும்பும் ஆளைத் தெரியாது.

காதலிக்கிற உனக்குத்தான் இந்த காதலனைப் பத்தித் தெரியும். காதலன் நல்லவனா அமைந்து விட்டால்.. நீ தைரியமா பெத்தவங்க மறுப்பு எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளலாம்.

இன்னைக்கு பெண் காதல் திருமணம் செய்வதால் மத்த பொண்ணுங்க வாழ்க்கைப் பாதிக்கப்படும்ன்னு சொல்றதெல்லாம் தப்பு. அவுங்களுக்கும் வாழ்க்கை கிடைக்கும் என்கிறது நிஜம். இன்னைக்கு எதிர்த்து நிக்கிற பெத்தவங்க நாளைக்கு மனசு மாறி வருவாங்க.

என் நண்பன் சிவா ரொம்ப உத்தமன் சுமதி. நீ வெறுத்தும் அவன் உன்னை வெறுக்காம இருக்கான். காதல் தோல்வியில் தற்கொலை வரைப் போனவனைத் தடுத்து நிறுத்தி வந்திருக்கேன். அவன் வாழ்வும் சாவும் உன் கையில் . இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பல…”நிறுத்தினான்.

“ராஜு ! உங்க நண்பரைத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்க…”உறுதியாகச் சொல்லி எழுந்தாள் சுமதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *